எத்தனால் திட்டம்: வாக்குறுதி விவசாயிகளுக்கு; இலாபம் முதலாளிகளுக்கு!
மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டம், பட்லோன் கிராமத்தைச் சேர்ந்த தர்மேந்திர ரகுவன்ஷியும், உத்தரப் பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த கபில் கத்தியானும் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசு எடுத்த கொள்கை முடிவின் காரணமாக, இந்திய விவசாயம் நாட்டின் எரிபொருள் தேவையுடன் இணைக்கப்படும் என்று அவர்கள் இருவரும் கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்கள்.
2018-ஆம் ஆண்டு முதல் மோடி அரசாங்கம் முன்னெடுத்த எத்தனால் உற்பத்தியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள், இந்த இரண்டு விவசாயிகளுக்கும் நேரடியாகப் பயனளிக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கின.
பெட்ரோல், டீசல் போன்ற புதைபடிவ எரிபொருட்களுடன் எத்தனால் போன்ற உயிரி எரிபொருட்களைக் கலக்கும் அளவை அதிகரிப்பதன் மூலம், கச்சா எண்ணெய் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்க முடியும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக அரசால் அறிவிக்கப்பட்டது.
இதற்காக, முன்பு பெரும்பாலும் சர்க்கரை உற்பத்தியின் துணைப் பொருளான மொலாசஸ் (Molasses) மூலம் தயாரிக்கப்பட்ட எத்தனாலை, கரும்பு, மக்காச்சோளம் போன்ற உணவுப் பயிர்களிலிருந்தும் தயாரிக்க அனுமதிக்கும் வகையில் விதிகள் மாற்றப்பட்டன. இதன்மூலம் விவசாயிகளுக்குப் புதிய சந்தை உருவாகும் என்றும், அவர்களது விளைபொருட்களுக்கு அதிக விலை கிடைக்கும் என்றும் மோடி அரசாங்கம் உறுதியளித்தது.
ஆனால், அரசின் கொள்கை அறிவிப்புகளுக்கும் விவசாயிகளின் வயல்வெளி எதார்த்தத்திற்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருப்பதையே சிந்த்வாரா, ஷாம்லி ஆகிய மாவட்டங்களில் விவசாயிகளுடன் Scroll.in நடத்திய கள ஆய்வு அம்பலப்படுத்துகிறது.
சிந்த்வாரா மக்காச்சோளம் அதிகம் விளையும் மாவட்டம். அதேபோல், உத்தரப் பிரதேசத்திலேயே அதிக கரும்பு உற்பத்தி செய்யும் மாவட்டங்களில் ஷாம்லியும் ஒன்று. ஆனால், இந்த இரண்டு மாவட்டங்களிலும் உள்ள விவசாயிகள் எத்தனால் திட்டத்தால் தங்களது வாழ்க்கையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கின்றனர்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தர்மேந்திர ரகுவன்ஷி சுமார் 32 ஏக்கரில் கரும்பும் மக்காச்சோளமும் பயிரிட்டு வருகிறார். அவரது பகுதியில் எத்தனால் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டபோது, மக்காச்சோளத்துக்கு நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், கடந்த பத்தாண்டுகளாக மக்காச்சோளத்தின் விலை அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையைக்கூட எட்டவில்லை.

அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2,410. ஆனால், 2016 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் விவசாயிகள் ஒரு குவிண்டால் மக்காச்சோளத்தை ரூ.1,200 முதல் ரூ.1,400 வரையிலான விலைக்கே விற்றுள்ளனர். சில நேரங்களில் இந்த விலை ரூ.1,100 ஆகவும் சரிந்துள்ளது.
இதற்குக் காரணம், எத்தனால் தொழிற்சாலைகள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக மக்காச்சோளத்தைக் கொள்முதல் செய்வதில்லை. மாறாக, இடைத்தரகர்கள் மூலமாகவே வாங்குகின்றன. இதனால், அடுத்த பயிரைச் சாகுபடி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் விவசாயிகள், இடைத்தரகர்கள் நிர்ணயிக்கும் விலைக்குத் தங்களது விளைபொருட்களை விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
அதேபோல், ஷாம்லியைச் சேர்ந்த கரும்பு விவசாயி கபில் கத்தியானின் குடும்பம் சுமார் 17 ஏக்கரில் கரும்பு பயிரிட்டு, சர்க்கரை ஆலைக்கு விற்பனை செய்து வருகிறது.
சர்க்கரை ஆலைகளில் எத்தனால் உற்பத்தியும் தொடங்கப்பட்டால் கரும்புக்கான தேவை அதிகரிக்கும், அதன் மூலம் நல்ல விலை கிடைக்கும் என்று விவசாயிகள் நம்பினர். மேலும், எத்தனால் உற்பத்தியால் சர்க்கரை ஆலைகளின் நிதிநிலை மேம்பட்டு, கரும்பு விவசாயிகளுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையையும் விரைவாக வழங்க முடியும் என்று மோடி அரசாங்கம் கூறியிருந்தது.
ஆனால், இன்றுவரை கரும்புக்கான பணம் கிடைப்பதில் பல மாதங்கள் தாமதம் ஏற்படுவது தொடர்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் கரும்பு அரவை முடிவடைந்தும், கத்தியானின் குடும்பத்துக்குப் பணம் கிடைக்க ஒன்பது மாதங்கள் ஆனது. இந்த ஆண்டும் ஐந்து மாதங்கள் தாமதமாகவே பணம் வழங்கப்பட்டுள்ளது.
எத்தனால் தயாரித்து விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த கூடுதல் வருமானத்தை விவசாயிகளுக்குச் செலுத்த வேண்டிய கரும்புப் பண நிலுவையைத் தீர்க்கப் பயன்படுத்தியதாக Superior Biofuels நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதாவது, எத்தனால் விற்பனையில் கிடைத்த வருமானத்தைக் கொண்டுதான் விவசாயிகளுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கியதாக அவர் கூறுகிறார்.
2021 டிசம்பரில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி, சர்க்கரை ஆலைகள் கரும்பைக் கொள்முதல் செய்த 14 நாட்களுக்குள் விவசாயிகளுக்குப் பணம் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கத் தவறினால், தாமதமாகும் தொகைக்கு ஆண்டுக்கு 15 சதவீத வட்டியையும் சேர்த்துச் செலுத்த வேண்டும்.
ஆனால், நடைமுறையில் ஐந்து மாதங்கள், ஒன்பது மாதங்கள் எனப் பணம் தாமதமாக வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்குச் சேர வேண்டிய பணத்தை உரிய காலத்தில் வழங்குவது அரசும் ஆலைகளும் செய்ய வேண்டிய கடமை. அப்படியிருக்க, அதை விவசாயிகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய சலுகையைப் போல எப்படிக் கூற முடியும்? என்று கத்தியான் கேள்வி எழுப்புகிறார்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாத நிலவரப்படி, உத்தரப் பிரதேசத்தில் 121 சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்குச் செலுத்த வேண்டிய ரூ.3,300 கோடியை நிலுவையில் வைத்திருந்தன. கரும்பு விவசாயிகளுக்கான பணத்தைச் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருக்கும் ஆலைகளின் பட்டியலில் உத்தரப் பிரதேசம் மூன்றாவது இடத்தில் இருந்தது. எத்தனால் உற்பத்தியால் சர்க்கரை ஆலைகளின் நிதிநிலை மேம்பட்டு, விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை விரைவாக வழங்கப்படும் என்ற அரசின் வாக்குறுதிக்கும் இந்த எதார்த்தத்திற்கும் இடையிலான முரண்பாடு ஏன்?
2021-ஆம் ஆண்டு கரும்பிலிருந்து எத்தனால் தயாரிக்கும் ஆலைகளுக்கு வழங்கப்பட்ட சில சலுகைகளை, தானியங்களிலிருந்து எத்தனால் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் மோடி அரசாங்கம் விரிவுபடுத்தியது. இதில் முக்கியமானது, தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனாலுக்கு எண்ணெய் நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து வாங்கியதாகும்.
2026 ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட பதிலின்படி, மக்காச்சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒரு லிட்டர் எத்தனாலுக்கு ரூ.71.86 வழங்கப்பட்டது. ஆனால், கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனாலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.65.61 மட்டுமே வழங்கப்பட்டது.
இதனால், அதிக லாபம் ஈட்டும் நோக்கில் சர்க்கரை ஆலைகள் கரும்பிலிருந்து எத்தனால் தயாரிப்பதற்குப் பதிலாக, தானியங்களிலிருந்து எத்தனால் தயாரிப்பதற்கு மாறின.
Superior Biofuels நிறுவனமும் நாளொன்றுக்கு 150 கிலோலிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட இரட்டை மூலப்பொருள் (Dual Feed) எத்தனால் ஆலையை அமைப்பதற்காகக் கடன் பெற்றது. பின்னர், அந்த ஆலையின் திட்டமிடப்பட்ட உற்பத்தித் திறனை நாளொன்றுக்கு 300 கிலோலிட்டராக உயர்த்தியது.
கரும்புச் சாறு, சர்க்கரைப் பாகு, தானியங்கள் ஆகியவற்றிலிருந்து எத்தனால் தயாரிப்பதற்கு அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், நடைமுறையில் கடந்த ஆண்டு முதல் அந்தத் தொழிற்சாலை எத்தனால் தயாரிப்பதற்கு மக்காச்சோளம் உள்ளிட்ட தானியங்களையே பயன்படுத்தி வருகிறது.
அதாவது, கரும்பு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் கரும்பு சர்க்கரை தயாரிப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எத்தனால் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் பெரும்பாலும் மத்தியப் பிரதேசத்திலிருந்தே வாங்கப்படுகின்றன. இதன்மூலம், கரும்பு மற்றும் மக்காச்சோள விவசாயிகள் எத்தனால் உற்பத்தியால் நேரடியாகப் பயனடைவார்கள் என்று மோடி அரசாங்கம் அளித்த வாக்குறுதி, உண்மையில் ஆலை முதலாளிகளின் நலன்களுக்குச் சாதகமானதாகவும், விவசாயிகளின் நலன்களுக்கு எதிரானதாகவும் இருப்பது அம்பலமாகிறது.
தானியங்களிலிருந்து எத்தனால் தயாரிக்கும் ஆலைகளுக்கு மோடி அரசாங்கம் கூடுதல் ஊக்கத்தொகை வழங்கும் கொள்கையின் விளைவாக, மத்தியப் பிரதேசத்தில் ரகுவன்ஷி போன்ற மக்காச்சோள விவசாயிகளும், உத்தரப் பிரதேசத்தில் கத்தியான் போன்ற கரும்பு விவசாயிகளும் தங்களது விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் தவிக்கின்றனர்.
ஆனால், இந்த இரண்டு பயிர்களையும் பயன்படுத்தும் தொழிற்சாலைகளோ தங்களுக்கு அதிக லாபம் தரும் மூலப்பொருளைத் தேர்ந்தெடுத்து, குறைந்த விலைக்கு நேரடியாகவோ அல்லது இடைத்தரகர்கள் மூலமாகவோ கொள்முதல் செய்து எத்தனால் தயாரிக்கின்றன.
எத்தனால் தயாரிப்புக்காக மக்காச்சோளத்தை அதிக அளவில் கொள்முதல் செய்வதால், அதன் மற்றொரு முக்கியப் பயன்பாடான கோழித் தீவன உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது.
சிந்த்வாராவைச் சேர்ந்த மனோஜ் கட்வே கடந்த எட்டு ஆண்டுகளாகக் கோழிப் பண்ணை நடத்தி வருகிறார். அவரது பண்ணையில் ஒவ்வொரு மாதமும் கோழிகளுக்காகச் சுமார் 150 கிலோ மக்காச்சோளமும், 50 கிலோ பிற தீவனப் பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன.
அவரது குடும்பமே மக்காச்சோளம் பயிரிடுவதால், அவருக்கு மக்காச்சோளம் கிடைப்பதில் பெரிய சிக்கல் இல்லை. ஆனால், சொந்தமாக விவசாய நிலம் இல்லாமல் கோழிப் பண்ணை நடத்துபவர்கள் சந்தையில் அதிக விலை கொடுத்து மக்காச்சோளத்தை வாங்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றனர் என்கிறார்.
இதற்குக் காரணம், இடைத்தரகர்கள் விவசாயிகளுக்கு முன்பணத்தைக் கொடுத்து மக்காச்சோளத்தை முன்கூட்டியே கொள்முதல் செய்து வைத்துக்கொள்கின்றனர். பின்னர், அவற்றை எத்தனால் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்கின்றனர். இதனால், கோழித் தீவனத்துக்காக மக்காச்சோளம் வாங்கும் கோழிப் பண்ணையாளர்களின் செலவு அதிகரிக்கிறது.
மக்காச்சோளத்தின் விலை உயர்வுக்கு ஏற்ப முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையும் உயர்ந்தால் மட்டுமே கோழிப் பண்ணையாளர்களால் லாபம் ஈட்ட முடியும் என்று கட்வே கூறுகிறார்.
2024-ஆம் ஆண்டு தேசிய வேளாண் அறிவியல் அகாடமி (National Academy of Agricultural Sciences) வெளியிட்ட ஆய்வறிக்கையும் இதுகுறித்து எச்சரித்துள்ளது. மக்காச்சோளத்துக்கான மிகப்பெரிய தேவை கோழித் தீவனத் துறையிலிருந்தே உருவாகிறது. எனவே, மக்காச்சோளத்தை எத்தனால் தயாரிப்புக்குப் பயன்படுத்தும்போது, உணவு மற்றும் கால்நடைத் தீவனத்துக்கான தேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
அதாவது, எத்தனால் தயாரிப்புக்காக மக்காச்சோளத்தை அதிக அளவில் பயன்படுத்துவதன் மூலம் எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்க முடியும். ஆனால், அதே நேரத்தில் கோழித் தீவனத்தின் விலையும் அதிகரிக்கும். அதன் தாக்கம் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை உயர்வின் மூலம் பொதுமக்களையும் பாதிக்கும்.
ஒருபுறம், விவசாயிகளிடமிருந்து நேரடிக் கொள்முதலையும், அவர்களது விளைபொருட்களுக்கு உரிய விலையையும் உறுதி செய்யாமல், ஆலைகளுக்கு மட்டும் ஊக்கத்தொகைகளை வாரி வழங்கி எத்தனால் உற்பத்தியைப் பெருக்குவதிலேயே மோடி அரசும் அதன் அமைச்சர்களும் குறியாக இருக்கின்றனர். இதன்மூலம் விவசாயிகளையும் பொதுமக்களையும் அவர்கள் வஞ்சிக்கின்றனர்.
மறுபுறம், எத்தனால் தயாரிப்பின் மூலம் பல மடங்கு லாபம் ஈட்டும் ஆலை முதலாளிகளும் விவசாயிகளைச் சுரண்டுகின்றனர். மக்காச்சோள விவசாயிகளுக்கு அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலைகூடக் கிடைப்பதில்லை. கரும்பு விவசாயிகளுக்குச் சட்டப்படி 14 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டிய பணம், ஐந்து முதல் ஒன்பது மாதங்கள் வரை இழுத்தடிக்கப்படுகிறது.
விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் இந்தத் துரோகங்களை மூடி மறைத்துவிட்டு, எத்தனால் திட்டம் மாபெரும் வெற்றி என்று மோடி அரசாங்கம் மார்தட்டிக்கொள்வது அருவருக்கத்தக்கது.
இந்தக் கள யதார்த்தத்தை மத்தியப் பிரதேச விவசாயி தர்மேந்திர ரகுவன்ஷி மிக எளிமையாக, அதேநேரத்தில் நெத்தியடியாக அம்பலப்படுத்துகிறார். தனது வயலில் மக்காச்சோள அறுவடைக்காகக் காத்திருக்கும் அவர், உறவினர்களிடம் சிரித்துக்கொண்டே இப்படிக் கூறுகிறார்:
“நான் கரும்பும் பயிரிடுகிறேன்; மக்காச்சோளமும் பயிரிடுகிறேன். எத்தனால் திட்டத்தால் உண்மையிலேயே விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கிறது என்றால், இந்நேரம் நான் பெரிய பணக்காரனாக மாறியிருக்க வேண்டுமே!”
எத்தனால் தயாரிப்புக்குத் தேவையான இரண்டு முக்கியப் பயிர்களையும் விளைவிக்கும் விவசாயி அவர்தான். அரசாங்கத்தின் கணக்குப்படி பார்த்தால், இந்தத் திட்டத்தால் அதிகம் பயனடைய வேண்டியவரும் அவர்தான். ஆனால், அவரது வருமானத்தில் ஒரு பைசாகூட அதிகரிக்கவில்லை.
சுருங்கச் சொன்னால், விவசாயிகளின் உழைப்பில் விளையும் பயிர்களிலிருந்து எத்தனால் தயாரித்து ஆலை முதலாளிகள் லாபம் பார்க்கின்றனர்; இடைத்தரகர்கள் கொழிக்கின்றனர்; இறக்குமதிச் செலவு குறைந்துவிட்டதாக அரசு மார்தட்டிக்கொள்கிறது. ஆனால், இரத்தம் சிந்தி உழைத்து பயிரிட்ட விவசாயியோ, தனது உழைப்புக்கான நியாயமான விலையை எதிர்பார்த்து இன்றும் காத்திருக்கிறார்.
- மகேஷ்
செய்தி ஆதாரம்:
https://scroll.in/article/1096679/why-indias-ethanol-push-is-not-benefitting-farmers

