E20 பெட்ரோல் : மக்கள் நலனா?
கட்கரி குடும்பத்தின் இலாபமா?

ஜூலை 31, 2026
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எரிபொருள் இறக்குமதி குறைப்பு, விவசாயிகள் நலன் என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் E20 திட்டம், உணவுத் தானியங்களை எரிபொருளாக மாற்றி மக்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்குகிறது. நிதின் கட்கரியின் குடும்ப நிறுவனங்களின் வளர்ச்சி, எத்தனால் கொள்கையைச் சுற்றியுள்ள சந்தேகங்களை மேலும் வலுப்படுத்துகிறது. E20 உண்மையில் மக்கள் நலத் திட்டம் அல்ல, அது கார்ப்பரேட்–அரசியல் இலாபத்தின் புதிய முகம்

இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க வேண்டும்; சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும்; விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த வேண்டும்” – இந்த மூன்று முழக்கங்களோடு ஒன்றிய அரசு E20 பெட்ரோல் திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது. பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலந்து விற்பனை செய்வதே இந்தத் திட்டத்தின் சாரம்.

E20 திட்டத்தின் முக்கிய முகமாகவும், அதன் தீவிர பிரச்சாரகராகவும் செயல்பட்டவர் ஒன்றிய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி. எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த அவர், இந்தியா முழுவதும் E20-ஐ விரைவாக அமல்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார்.

E20 திட்டம் அமுலான பிறகு பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இந்த பெட்ரோலைப் பயன்படுத்துவதால் வாகனங்கள் பழுதடைவதாக மக்கள் கூறுகின்றனர். திட்டத்தின் முகமாக இருந்த நிதின் கட்கரியின் குடும்பத்தினர் எத்தனால் உற்பத்தி தொழிற்சாலைகளை நடத்துவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

முதலில் பார்க்கும்போது இது ஒரு அறிவியல் முன்னேற்றமாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றாகவும் தோன்றலாம். ஆனால், இதன் விளைவுகளை ஆராயத் தொடங்கினால் பல முக்கிய கேள்விகள் எழுகின்றன.

அரசு கூறுவது போல இந்த E20 பெட்ரோல் மூலம் உண்மையில் பயன் அடைவது யார்? மக்களா? விவசாயிகளா? நாட்டின் பொருளாதாரமா? அல்லது அரசியல்வாதிகளா? கார்ப்பரேட் நிறுவனங்களா?. உண்மையில் யார் பயனடைகிறார்கள், எதற்காக இந்த திட்டம் ஒன்றிய அரசால் அதிமுக்கிய திட்டமாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஏன் இந்த அவசரம்?

பெட்ரோலில் எத்தனால் கலப்பது என்பது தற்போது தொடங்கப்பட்ட திட்டம் அல்ல. இது 2003ஆம் ஆண்டு மிகக் குறைந்த அளவில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் E5, E10 எனப் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இதனை அமுல்படுத்துவது வேகமெடுத்தது. 2020-ஆம் ஆண்டில் E10 என்ற இலக்கை இந்தியா அடைந்தது. அதாவது பெட்ரோலில் 10% எத்தானல் கலப்பது என்ற இலக்கை 2020இல் இந்தியா அடைந்தது.

அதன் பிறகு 2030ஆம் ஆண்டுக்குள் E20 அதாவது 20% எத்தனால் கலப்பு என்ற இலக்கை ஒன்றிய அரசு நிர்ணயித்தது. ஆனால் 2030 என்ற இந்த இலக்கை முன்கூட்டியே அடைய வேண்டும் என்று அதிவேகமாகச் செயல்பட்டு, அறிவிக்கப்பட்ட காலத்திற்கும் ஐந்து ஆண்டுகள் முன்பாகவே – 2025ஆம் ஆண்டே அதனை நடைமுறைபடுத்தியது.

இவ்வாறு ஒரு திட்டத்தை முன்கூட்டியே அமுல்படுத்துவது என்பது பிரச்சனையல்ல. அதற்கான தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டதா? மக்களின் சமூகப் பயன்பாட்டிற்கு அது கொண்டுவரப்பட்டதா? என்றால் இவை எதைப்பற்றியும் கவலைப்படாமல் இந்தத் திட்டம் அமுல்படுத்தப்பட்டது.

மக்களின் வாகனங்கள் தயாரா?

இந்தியாவின் சாலைகளில் ஓடும் பெரும்பாலான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் E20-ஐ கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டவை அல்ல. குறிப்பாக 2023-க்கு முன் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் பெரும்பாலும் E10 அல்லது அதற்கும் குறைவான எத்தனால் கலவைக்கே ஏற்றவையாக உள்ளன.

இதன் விளைவாக, மைலேஜ் குறைவு, என்ஜின் அரிப்பு, ரப்பர் மற்றும் எரிபொருள் அமைப்பில் பாதிப்பு, நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் வைத்த வாகனங்களில் ஸ்டார்டிங் பிரச்சினை போன்ற சிக்கல்கள் எழுவதாக மக்கள் கூறுகின்றனர். அரசே மைலேஜ் குறைவு ஏற்படலாம் என்பதை ஒப்புக்கொண்டுள்ளது.

மைலேஜ் குறைபாடு என்பது சிறிய பிரச்சனைதான். E20 வாகனத்தில் ஏற்படும் பழுதுகள் படிப்படியாக வாகனத்தின் திறனையே அழித்துவிடுகின்றன. இது தற்போது பயன்பாட்டில் இருக்கும் கோடிக்கணக்கான வாகனங்களைப் பயன்படுத்துவதைக் கைவிட்டு மக்கள் புதிய வாகனங்களை வாங்கும்படி நிர்பந்திக்கிறது.

இவை எல்லாவற்றையும், கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்து நாட்டின் பொருளாதாரத்திற்கு நன்மை ஏற்பட்டுள்ளதாகக் கூறி ஒன்றிய அரசு சமாளிக்கப்பார்க்கிறது.

இறக்குமதி குறைகிறதாம்; ஆனால் விலை ஏன் குறையவில்லை?

கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்தால் அந்நியச் செலாவணி சேமிக்கப்படும். ஒன்றிய அரசு இதுவரை 1.5 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அந்நியச் செலாவணியைச் சேமித்திருப்பதாக கூறியிருக்கிறது. இது அரசுக்கும் பெருமுதலாளிகளுக்கும் நல்லது. ஆனால் மக்களுக்கு என்ன கிடைக்கிறது?

20% எத்தனால் கலப்பது என்றால் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 200 மி.லி. எத்தனால் கலக்கப்படுகிறது அப்படியென்றால் பெட்ரோலின் விலை குறைந்திருக்க வேண்டுமே இருந்தும் ஏன் பெட்ரோலின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதன் மூலம் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை எண்ணெய் நிறுவனங்கள்தான் கொள்ளை இலாபம் ஈட்டுகின்றன.

அதேசமயம் மைலேஜ் குறைவதால் குறைந்த மைலேஜ் காரணமாக மக்கள் கூடுதலாக பெட்ரோல் வாங்க வேண்டிய நிலையே உருவாகியிருக்கிறது. அதாவது மக்களின் இழப்பு எண்ணெய் நிறுவனங்களின் இலாபமாக மாறியிருக்கிறது. அதிக பெட்ரோல் வாங்குவது என்பது மறுபுறம் இறக்குமதியை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் E20 பெட்ரோல் பயன்படுத்தினால் கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும் என்ற வாதம் பொய் என நிரூபணமாகியிருக்கிறது.

கச்சா எண்ணெய் இறக்குமதி குறையாது, மக்களுக்கும் நன்மை கிடையாது, பின்னர் எதற்காக இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது?

E20 என்பது கொள்கையா அல்லது குடும்ப வணிகமா?

ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி E20-ஐ நாடு முழுவதும் தீவிரமாக முன்னெடுத்த அதே காலகட்டத்தில், அவரது மகன்கள் நடத்தும் எத்தனால் உற்பத்தி நிறுவனங்களின் வருவாய் மற்றும் இலாபம் மிக வேகமாக உயர்ந்துள்ளது.

நிதின் கட்கரியின் மகன் நிகில் கட்கரி ‘சியான் அக்ரோ’ எனும் எத்தனால் உற்பத்தி ஆலையை நடத்திவருகிறார். இந்த நிறுவனம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஈட்டிய இலாபம் 5 கோடி ரூபாய். ஆனால் E20 பெட்ரோல் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அதன் இலாபம் 225 கோடி ரூபாய். அதாவது இலாபம் 4500% அதிகரித்திருக்கிறது. இன்னும் குறிப்பாகப் பார்த்தால், கடந்த காலாண்டில், அதாவது E20 பெட்ரோல் பரவலாகப் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு வந்த காலாண்டில், மட்டும் 510 கோடி. அதாவது அந்த நிறுவனத்தின் இலாபம் தற்போது ஆண்டுக்கு 2000 கோடி ருபாயைத் தாண்டிவிடும் எனத் தெளிவாகத் தெரிகிறது. இதுதான் நிதின் கட்கரியின் இன்னொரு மகனான சாரங்க் கட்கரியின் “மானஸ் அக்ரோ” நிறுவனத்தின் விசயத்திலும் நடந்திருக்கிறது.

பெட்ரோலில் 20% எத்தனால் கலந்ததற்கே நிதின் கட்கரியின் இரண்டு மகன்களும் ஆண்டுக்குப் பல்லாயிரம் கோடி சம்பாதிக்கின்றனர். தற்போது அரசு 100% எத்தனால் திட்டத்தை அறிவித்திருக்கிறது. 100% எத்தனால் என்றால், தற்போது ஆயிரம் கோடிகளில் இருக்கும் இலாபத்தை இலட்சம் கோடிகளாக மாற்றிவிட முடியும், ஆகையால் அதையும் நிதின் கட்கரி கூடிய விரைவில் அமுல்படுத்த முயற்சி எடுத்துவருகிறார்.

உணவை எரிபொருளாக்கும் அரசியல்

இந்தியாவைப் பொருத்தவரை எத்தனால் என்பது கரும்பிலிருந்துதான் பெரும்பாண்மையாகத் தயாரிக்கப்படுகிறது. E20 இலக்கை அடைய இது போதாது என்பதால், அரிசியில் இருந்தும் எத்தனால் தயாரிப்பதை ஊக்குவிக்க, பொது மக்களுக்கு ரேசன் மூலம் விநியோகிக்க தேசிய உணவுப் பாதுகாப்புத் துறையின் கிடங்குகளில் வைத்திருந்த 65 இலட்சம் டன் அரிசியை எத்தனால் தயாரிப்பு நிறுவனங்களுக்குக் கொடுத்திருக்கிறது இந்த அரசு. அதுவும் 40% குறைவான விலைக்கு. இதன் மூலம் அரசுக்கு பத்தாயிரம் கோடி ருபாய் நட்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என மக்களுக்கான அரிசி எத்தனால் உற்பத்தி நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் கோடிக்கணக்கான மக்கள் மலிவான உணவுக்காக பொது விநியோக அமைப்பை நம்பியிருக்கிறார்கள். மறுபுறம் அதே தானியங்களை எரிபொருளாக மாற்ற அரசே ஊக்குவிக்கிறது. உணவுப் பொருட்கள் எரிபொருள் தயாரிப்புக்கு திருப்பிவிடப்பட்டால் என்ன நடக்கும்?

  • உணவுப் பொருட்களின் வழங்கல் குறையும்.
  • சந்தை விலை உயரும்.
  • கால்நடை மற்றும் கோழித்தீவனச் செலவு அதிகரிக்கும்.
  • முட்டை, கோழி, இறைச்சி உள்ளிட்ட புரத உணவுகளின் விலையும் உயரும்.

அதாவது E20யின் தாக்கம் பெட்ரோல் பங்குகளில் மட்டுமல்ல நம் வீட்டுச் சமையல் அறையிலும் எதிரொலிக்கும். மக்களின் உணவுப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவர்களது துணிகளுக்குச் சாயம் போட அவுரி தேவை என்பதால், நெல் பயிரிடக் கூடாது அவுரிதான் பயிரிட வேண்டும் என இந்திய விவசாயிகளை ஆங்கிலேய ஏகாதிபத்தியம் நிர்பந்தித்தது. இதன் காரணமாக அவுரிப் பஞ்சம் ஏற்பட்டு பல இலட்சம் இந்தியர்கள் மாண்டு போனார்கள். தற்போது சாமானிய மக்களின் உணவுப் பாதுகாப்பை எத்தனால் உற்பத்திக்காக கேள்விக்குள்ளாக்கியிருப்பதன் மூலம், இந்த அரசு மக்களைப் பட்டினியை நோக்கித் தள்ளுகிறது.

தண்ணீரை விழுங்கும் எரிபொருள்

கரும்பு இந்தியாவில் மிகவும் அதிக நீர் தேவைப்படும் பயிர்களில் ஒன்று. எத்தனால் உற்பத்தியை பல மடங்கு உயர்த்த வேண்டுமானால் கரும்பு சாகுபடியும் விரிவடைய வேண்டும். அதற்குத் தேவையான தண்ணீர் அளவு மிகப் பெரியதாக இருக்கும். நிலத்தடி நீர் வேகமாகக் குறைந்து வரும் இந்தியாவில், குடிநீர் மற்றும் விவசாயத்திற்குத் தேவைப்படும் வளங்களை எரிபொருள் உற்பத்திக்காக மாற்றுவது நீண்டகால சூழலியல் நெருக்கடியை உருவாக்கும் அபாயம் உள்ளது.

இவ்வளவு பாதிப்புகள் ஏற்படும் என்று திரும்பத் திரும்ப வாதிட்டாலும் அரசு ஏற்றுக் கொள்வதாக இல்லை. பிரேசிலைப் பாருங்கள் அங்கே E30 எத்தனால் இலக்கை அடைந்துவிட்டார்கள், 100% எத்தனாலை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறார்கள் என அரசுத் தரப்பில் எதிர்வாதம் செய்கிறார்கள்.

பிரேசிலை ஏன் ஒப்பிட முடியாது?

பிரேசிலில் பெட்ரோலில் எத்தனால் கலப்பதை 1973ஆம் ஆண்டே தொடங்கிவிட்டார்கள். அப்போதிலிருந்து படிப்படியாக எத்தனாலின் அளவை அதிகரித்ததுடன், அந்நாட்டில் பயன்படுத்தப்படும் வாகனங்களும் அதற்கு ஏற்றார்ப்போல வடிவமைக்கப்பட்டுள்ளன. பிரேசிலில் உள்ள வாகனங்கள் பிலெக்ஸ் பியூயல் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக 100% எத்தனாலில் கூட அந்த வாகனங்களை இயக்க முடியும். இந்தியாவில் 2023க்கு பிறகு உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்கள் மட்டுமே E20 பெட்ரோலுக்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்டன. ஆனால் இன்று இந்தியத் தெருக்களில் ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களில் ஆகப் பெரும்பாண்மை வாகனங்கள், 2023க்கு முன்னர் உற்பத்தி செய்யப்பட்டவை. எனவே பிரேசிலைப் பாருங்கள் எனக் கூறுவது முற்றிலும் பொருந்தாது

****

E20 பெட்ரோலின் மூலம் மக்களின் வாகனங்கள் பாதிக்கப்படுகின்றன; மைலேஜ் குறைகிறது; உணவு வளங்கள் எரிபொருளாக மாற்றப்படுகின்றன; தண்ணீர் மற்றும் விவசாய நிலங்கள் புதிய அழுத்தத்திற்கு உள்ளாகின்றன; ஆனால் இதனால் கிடைக்கும் பொருளாதார நன்மைகள் சாதாரண மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிப்பதில்லை.

சுற்றுச்சூழலைக் காப்பது, எரிபொருள் இறக்குமதியைக் குறைப்பது என்ற பெயரில், கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபத்தையும், அரசியல்வாதிகளின் நலன்களையும் முன்னிறுத்தும் கொள்கையாக E20 மாறியிருக்கிறது.

ஒருகாலத்தில் இந்திய விவசாயியை நீலச் சாயத்திற்காக அவுரி பயிரிடச் செய்த ஏகாதிபத்தியம், இன்று எரிபொருளுக்காக உணவுப் பயிர்களை மாற்றச் செய்கிறது. பெயர்கள் மாறியிருக்கலாம். ஆட்சியாளர்கள் மாறியிருக்கலாம். ஆனால் மக்களின் பசியை விட சந்தையின் இலாபத்தையே முன்னிலைப்படுத்தும் அரசியல் மாறவில்லை. E20 என்பது வெறும் எரிபொருள் கொள்கையல்ல; அது மக்களின் உணவை கார்ப்பரேட் இலாபமாக மாற்றும் அரசியல் சதி.

  • அறிவு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன