கண்டறி, நீக்கு, நாடுகடத்து: மோடியின் ஹிட்லர் திட்டம்!
செங்கனல் நவம்பர் – டிசம்பர் – 2026 – சிறப்பிதழில் வெளியான கட்டுரை.
காவி பாசிசக் கும்பலானது, நாடுமுழுக்க மிகத்தீவிரமாக வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தத்தை (Special Intensive Revision) மேற்கொண்டு வருகிறது. பாஜகவிற்கு வாக்களிக்காதோரை (குறிப்பாக இசுலாமியர்கள்) நீக்கி தேர்தல்களில் வெல்வது இதன் ஒரு முக்கிய நோக்கமென்றாலும், நாணயத்தின் மறுபக்கமாக கொல்லைப்புறத்தில் தேசிய குடியுரிமை பதிவேட்டை (National Register of Citizens – NRC) அமல்படுத்துவது எஸ்.ஐ.ஆரின் பிரதான நோக்கமாகும். சொல்லப்போனால், இது காலங்காலமாக சாவர்க்கர், கோல்வால்கர் போன்ற காவி பாசிஸ்டுகளின் கனவுத்திட்டமான “துரோகிகளற்ற” அகண்ட பாரதத்தை உருவாக்குவதற்கான ஒரு முன்னெடுப்பாகும்.
இசுலாமியர்கள் மட்டுமின்றி பா.ஜ.க.வையும் காவி-கார்ப்பரேட் பாசிசத்தையும் எதிர்க்கும் பெருவாரியான உழைக்கும் மக்களும்தான் அவர்கள் மொழியில் துரோகிகள்! அவர்களை நாடு கடத்தவும், ஹிட்லரின் வதைமுகாமுக்கு இணையான தடுப்பு முகாம்களில் அடைத்து, இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தவுமே இது அமலாகிறது. இவ்வாறு நாம் கூறியபோதெல்லாம் மிகையான கூற்றாகவே பார்க்கப்பட்டது. பா.ஜ.க.வை எதிர்ப்பதற்காக இல்லாத ஒன்றை இட்டுக்கட்டிச் சொல்வதுபோல பலரும் கருதினர். ஆனால், இன்று மேற்கு வங்கத்தில் அமலாகிவருபவை இதன் அபாயத்தைக் கண்ணெதிரே காட்டுகின்றன.
வங்கதேசத்திலிருந்து வந்த “சட்டவிரோதக் குடியேறிகள்” மேற்கு வங்கத்தில் “ஊடுருவி”யுள்ளனர் எனவும், தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களை நாடு கடத்துவோம் என்று இன்றைய மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரியும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தேர்தலுக்கு முன்பு வெளிப்படையாகப் பிரச்சாரம் செய்துவந்தனர்.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற எஸ்.ஐ.ஆர். வாக்காளர் திருத்தத்தின் மூலம் இலட்சக்கணக்கான இசுலாமியர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்ட நிலையில், தற்போது “கண்டறி, நீக்கு, நாடு கடத்து” (Detect, Delete, Deport) என்ற பாசிசக் கொள்கையின் கீழ் தடுப்பு முகாம்கள் அமைக்கும் நடவடிக்கைகளை பா.ஜ.க அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
மேற்கு வங்கத்தின் உள்துறை மற்றும் மலைப்பகுதி விவகாரங்கள் துறை அமைச்சகம், மாநிலத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தங்கள் பகுதிகளில் வசிக்கும் சட்டவிரோத வங்கதேசத்தவர்கள் மற்றும் ரோஹிங்கியாக்களை கண்டறிந்து, அவர்களுக்கான “தடுப்பு முகாம்களை” ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி அமைக்குமாறு மே 23ஆம் தேதி உத்திரவிட்டுள்ளது.
மேற்கு வங்க அரசு இந்த உத்திரவைப் பிறப்பித்த 48 மணி நேரங்களுக்குள், வங்கதேச எல்லையில் உள்ள முர்ஷிதாபாத்தில் மூன்று மாடிக் கட்டிடம் ஒன்று தடுப்பு முகாமாக மாற்றப்பட்டுள்ளது! அக்கட்டிடத்தில் முன்பு திருமண மண்டபம், வங்கி மற்றும் மீனவர்களுக்கான அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வந்தன. தற்போது அதை தடுப்பு முகாமாக மாற்றியதோடு மட்டுமல்லாமல், அதில் உடனடியாக மூன்று பேரை பா.ஜ.க. அரசு அடைத்துள்ளது! மால்டாவிலும் இன்னொரு தடுப்பு முகாம் அமைக்கப்படவுள்ளது. இவையிரண்டும் இசுலாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளாகும். இதேபோல மேற்கு வங்கம் முழுக்க தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கடந்த மே மாதம் மட்டுமே 400-க்கும் மேற்பட்ட இசுலாமியர்களை வங்கதேசத்திலிருந்து தஞ்சம் புகுந்த சட்டவிரோதக் குடியேறிகள் என்று தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களனைவரும் சொந்த நாட்டைச் சேர்ந்த ஏழை அப்பாவி உழைக்கும் மக்களே! 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகளை தனது ஆட்சி நாடுகடத்தியுள்ளதாக சுவேந்து அதிகாரி பாசிச கர்வத்துடன் கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பல இசுலாமிய மக்கள், இந்தியக் குடியுரிமைக்கான சான்றுகள் இருந்தும், நாடுகடத்தப்பட்டுள்ளனர். இதில் சிலர் நாடுகடத்தப்பட அடிப்படையாக இருந்தது வாக்காளர் பட்டியல்தான் என்கிற செய்தி நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது.
மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பரகாணாஸ் மாவட்டத்தை சேர்ந்த சாஹிதா பக்கீர் என்கிற ஏழை இசுலாமிய வீட்டுப் பணிப்பெண் எஸ்.ஐ.ஆரின்போது வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டார். மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களின் முடிவுக்காக காத்திருந்த 60 லட்ச வாக்காளர்களில் சாஹிதாவும் ஒருவர். மும்பையில் வசித்த இவர், தனது இரவு வேளை உணவை வாங்கச் செல்லும்போது மும்பை போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். எந்தவித நீதிமன்ற விசாரணைக்கும் அவரை உட்படுத்தாமல், மும்பை போலீசார் அவரை சேம்பூர் தடுப்பு முகாமில் நான்கு நாட்களுக்கு அடைத்துவைத்து, பின்பு நேரடியாக வங்கதேசத்திற்கு நாடுகடத்தியது.
மும்பை போலீசு தன்னை நான்கு நாட்களுக்கு சேம்பூர் தடுப்பு முகாமில் அடைத்துவைத்ததாகவும், தன்னிடமிருந்த தொலைபேசியையும், பணத்தையும் பறித்துவைத்துக் கொண்டு, நீண்டநேரமாக கெஞ்சிய பிறகே குடும்பத்தை தொடர்புகொள்ள போலீசார் அனுமதித்தனர் என்று சாஹிதா பானு நாடுகடத்தப்பட்ட பின்பு வங்கதேசத்திலிருந்து ஆல்ட் நியூஸ் (Alt News) செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகின்றார். தான் இந்திய குடிமகள்தான் என்று அதிகாரிகளிடம் நிரூபிக்க தனது கணவரை அனைத்து சான்றிதழ்களை கொண்டுவரச் சொன்னதாகவும், அவர் கொண்டுவந்த பின்பு போலீசார் அவற்றை பார்க்கக்கூட இல்லை என்றும் கூறுகிறார், அவர்.
வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ் என அனைத்தும் சரிவர இருந்தும், வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இடம்பெறாத ஒரே காரணத்தினால், இந்திய குடிமகளாக இருந்தும், இன்று நாடுகடத்தப்பட்டுள்ளார் சாஹிதா. தி கார்டியன் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த வங்கதேசத்தை சேர்ந்தவொரு எல்லை பாதுகாப்பு வீரர் ஒருவர், சாஹிதாவின் சான்றிதழ்களை சரிபார்த்தபின் அவர் நிச்சயமாக இந்தியர்தான் என்று கூறியுள்ளார். இருந்தும், தனது சொந்த நாடான இந்தியாவில், எவ்வித தர்க்கமுமின்றி அதிகாரிகளால் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
“என்னை விடுவிக்கக்கோரி மும்பை போலீசாரிடம் நான் கெஞ்சியபோது, நாடுகடத்தும் விமானத்தின் இருக்கைகளை நாங்கள் நிரப்ப வேண்டியிருக்கிறது என்று அவர்கள் என்னைப் பார்த்து நக்கலாக சிரித்து பதிலளித்தார்கள்” என்று கூறுகிறார். இதற்கு பெயர் பாசிசம் இல்லையெனில் வேறென்ன?!
இது சாஹிதாவிற்கு நடந்தது மட்டுமல்ல, மேற்கு வங்கத்தில் இன்னும் சில இசுலாமியர்கள் இதே பிரச்சினையை சந்தித்து வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம், மேற்கு வங்கத்தின் பன்கூரா மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட ஒரு பெண்ணை நாடுகடத்த அம்மாநில போலீசார் முயன்றனர். அப்பெண்மணியை சட்டவிரோத குடியேறியென போலீசார் அடையாளப்படுத்தியதாகவும், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்களை கைது செய்யக்கூறி “மேலிட உத்தரவு” பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறியதாக அப்பெண்ணின் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இதேபோல, சமீபத்தில் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு நகரத்தின் பாலகேரே பகுதியில் நூற்றுக்கணக்கான இசுலாமிய ஏழை உழைக்கும் மக்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் “வங்கதேசத்தை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகள்” என்ற முகாந்திரத்தில் கைதுசெய்த போலீசார், இதில் சிலரை வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் இருப்பதை நிரூபிக்கச் சொல்லியிருக்கிறார்கள்.
ஆகமொத்தம், எஸ்.ஐ.ஆர். மூலமாக தயாரிக்கப்படும் வாக்காளர் பட்டியலானது, அரசினால் ஒரு குடியுரிமை பதிவேட்டு ஆவணமாக பார்க்கப்படுகிறது என்பது கண்கூடாகத் தெரிகிறது. அதேபோல, அடிப்படை சலுகைகளும் இனி வாக்குரிமையை அடிப்படையாகக் கொண்டு வழங்க முன்னெடுப்புகளும் நடந்துவருகின்றன.
பீகாரில் சாம்ராட் செளதரி தலைமையிலான பாஜக அரசு, எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் பட்டியலை அடிப்படையாக வைத்து, அவர்களில் சிலரின் ஆதார் மற்றும் குடும்ப அட்டைகளை இரத்து செய்யும் திட்டத்தை அமல்படுத்த முனைப்பு காட்டிவருகின்றனர். இதன் முதற்கட்டமாக, பீகாரில் எஸ்.ஐ.ஆருக்கு பிறகு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை வைத்து பிகாரின் 3 சதவீதத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளை இரத்து செய்துள்ளனர்.
அதேபோல, சமீபத்தில் பேசிய தற்போதைய ஒன்றிய பஞ்சாயத்து ராஜ் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன், அரசு அடுத்து செயல்படுத்தவிருக்கும் பஞ்சாயத் ராஜ் திட்டங்களை பெற்றுக்கொள்ள ஆதார் அட்டைக்கு பதிலாக வாக்காளர் அட்டையும், அதிலிருக்கும் எபிக் (EPIC) எண்ணும் பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
அனைத்து மாநிலங்களிலும் எந்தவித வெளிப்படைத்தன்மையுமின்றி, பல கோல்மால்களை அரங்கேற்றி பாஜக எதிர்ப்பாளர்கள், குறிப்பாக இசுலாமியர்களின் வாக்குகளை நீக்க நடந்துமுடிந்த இந்த எஸ்.ஐ.ஆரை அடிப்படையாக வைத்துதான் காவி கும்பல் இந்துராஷ்டிரத்தில் இனி மக்களுக்கு உரிமைகள் / சலுகைகள் வழங்கப்படவிருக்கின்றன!
வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்களை எப்படி ஹிட்லர் வதைமுகாம்களில் அடைத்தானோ, அதேபாணியில் அடைக்க, மோடியின் காவி பாசிச கும்பல் இந்தியா முழுக்க தடுப்பு (வதை) முகாம்களை அமைத்து வருகின்றனர்!
இத்தகைய முகாம்களை அமைக்கக்கோரி காவி பாசிச கும்பலானது 2014ல் ஒன்றியத்தில் தான் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அனைத்து மாநில அரசுகளுக்கு தடுப்பு முகாம்களை அமைக்கும் வழிமுறைகளை ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் மூலம் அனுப்பினர். இதற்காக 2014, 2018 ஆம் ஆண்டுகளில் மாநில அரசுகளுக்கு இருமுறை உத்தரவிட்டனர்.
காவி பாசிச கும்பல் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இந்தியாவில் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டது வந்தாலும், இக்கும்பல் ஆட்சிக்கு வந்த பிறகு மிகத்தீவிரமாக பணிகள் நடந்துவருகிறது. அசாம் மாநிலத்தின் கோல்பாரா மாவட்டத்தில் 46 கோடி செலவில், 3,000 பேரை வைக்குமளவு 2,88,000 சதுரடியில் ஒரு தடுப்புமுகாம் கட்டப்பட்டுள்ளது. அசாம் முழுக்க 10-க்கும் மேற்பட்ட தடுப்பு முகாம்கள் கட்டப்பட்டு வருகின்றன – அதேபோல ஆயிரக்கணக்கானோர் ஏற்கனவே அடைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல டெல்லியில் 3 இடங்களிலும். கோவாவில் மாஸ்புரா பகுதியிலும், பஞ்சாபின் டாண்டான் மாவட்டத்திலும், கர்நாடகாவில் பெங்களூருவிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும், ராஜஸ்தானின் ஆல்வாரிலும், மேற்கு வங்கத்திலும் தடுப்பு முகாம்கள் கட்டப்பட்டு வருகின்றன; சிலது கட்டியும் முடிக்கப்பட்டுள்ளன.
இதன் நீட்சியாகவே, இன்று மேற்கு வங்கத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். “இவர்களையெல்லாம் தடுப்பு முகாம்களில் அடைத்து இவர்களுக்கு உணவு, பராமரிப்பு வழங்கினால் அது நாட்டின் வரிப்பணத்தை விரையம் செய்வதாகும்” என்று மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி இசுலாமியர்களை நேரடியாக, எவ்வித சரியான விசாரணை வழிமுறைகளின்றி நாடுகடத்துவதை நியாயப்படுத்தியுள்ளார்.
இது காவி கும்பலின் நிகழ்ச்சி நிரலை நமக்கு அம்பலப்படுத்துகிறது – இசுலாமியர்களை கொத்துக்கொத்தாக கைது செய்து அவர்களை தடுப்பு முகாம்களில் அடைப்பது; பின்பு “நாட்டின் வரிப்பணத்தை விரையம் செய்யக்கூடாது” என்ற முகாந்திரத்தில் அவர்களை பராமரிக்காமல் சாகக்கிடக்க விடுவதோ அல்லது நாடுகடத்துவதோ தான் இவர்களின் நோக்கம் என்று நமக்கு அம்பலப்படுத்துகிறது! ஏற்கனவே அசாமின் தடுப்பு முகாம்களில் 28 பேர் இறந்துள்ளதாக அசாமின் உள்துறை அமைச்சகமே கூறுகின்றது.
இன்று மேற்கு வங்க முசுலீம்களுக்கு என்ன நடக்கிறதோ, அதுதான் நாளை பா.ஜ.க.வை எதிர்க்கும் இந்துக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நடக்கவிருக்கிறது!
இதெல்லாம் நடக்குமா? இத்தனை பேருடைய குடியுரிமையை மோடி அரசால் நீக்கமுடியுமா? தடுப்பு முகாமில் அடைக்க முடியுமா? இதெல்லாம் சர்வதேச நாடுகள் வேடிக்கை பார்க்குமா? நீங்கள் கூறுவது மிகையாக உள்ளதே? – என்று நினைக்க வேண்டாம்! காசாவில் பிறந்த குழந்தைகள் உட்பட ஒரு இலட்சம் அப்பாவி மக்களை இசுரேல் கொத்தாகக் கொன்று குவித்தபோது, எந்த சர்வதேச நாடு அதைத் தடுத்து நிறுத்தியது? சம்பிரதாயத்துக்கு சில கண்டனங்கள், தீர்மானங்கள் என அனைத்து நாடுகளும், ஐ.நா.வும் கடந்து செல்லவில்லையா?! அதுபோல, மோடி அரசு இலட்சக் கணக்கான மக்களை நாளை தடுப்பு முகாம்களில் அடைத்தாலும் என்ன நடந்துவிடப் போகிறது!
எனவே, இப்போது எஸ்.ஐ.ஆரில் உங்கள் பெயர் வந்துவிட்டாலும், நீங்கள் வாக்குரிமை பெற்றுவிட்டாலும், எதிர்காலத்தில் மோடி அரசையோ தனியார்மயக் கொள்கையையோ எதிர்த்து நீங்கள் பேசினால், போராடினால், ஏன் மூச்சுவிட்டால் கூட நீங்களும் “வந்தேறிகள்” “சந்தேகிக்கத்தக்கவர்கள்” என்று அறிவிக்கப்படுவீர்கள்! ஏன் உங்களின் அடிப்படைத் தேவைகள், கோரிக்கைகளுக்குப் போராடினால் கூட அவ்வாறு அறிவிக்கப்படுவீர்கள்!
இவ்வாறு குடிமக்கள் இல்லையென அறிவிக்கப்படும் இசலாமியர்கள், முற்போக்காளர்கள், கம்யூனிஸ்டுகள், ஜனநாயக சக்திகள் ஆகியோரை அடத்து வைக்கத்தான் ஹிட்லரின் வதைமுகாம்களின் மாதிரியிலான தடுப்புமுகாம்கள் நாடு முழுவதும் உருவாக்கப்பட்டு வருகின்றன! வெள்ளம் வரும் முன்னே அணைபோடுவதுதான் விவேகம்! அத்தகைய நாள் வரும் முன்னே, பாசிசக் கும்பலைத் தூக்கியெறிவதுதான் அறிவுடைமை!!
- திருமாறன்

