மகாராஷ்டிரா: வறட்சி நிரந்தரமானது ஏன்?
சிகாகோ பல்கலைக்கழகத்தின் ‘கிளைமேட் இம்பாக்ட் லேப்’ (Climate Impact Lab) என்ற அமைப்பு, எல் நினோவின் வெப்ப விளைவால் அடுத்த ஆறு மாதங்களில் (2027 கோடைக்காலம் வரை) உலகம் முழுவதும் 3,73,000 உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்றும், இதில் சுமார் 55,000 உயிரிழப்புகள் இந்தியாவில் நிகழ வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது. இவை வெறும் கணிப்புகள்தான் என்றாலும், ‘சூப்பர் எல் நினோ’ நிகழ்வு ஏழை நாடுகள் அதிகமுள்ள பிராந்தியங்களில் ஏற்படுத்தக்கூடிய பேரழிவின் தீவிரத்தை இவை உணர்த்துகின்றன.
இந்தியாவில் தற்போது ஏற்படும் ஒவ்வொரு வறட்சியும் முந்தைய வறட்சியைவிட அதிகப் பேரழிவை ஏற்படுத்துவதாக மாறி வருகிறது. வறட்சியால் பயிர் விளைச்சல் குறைவதும், உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வதும் மக்களின் வாங்கும் சக்தியை கணிசமாகக் குறைக்கின்றன. இந்த நிலைமை இந்தியாவில் எந்த அளவுக்குத் தீவிரமடைந்திருக்கிறது என்றால், சர்வதேச நாணய நிதியமே இதனைச் சுட்டிக்காட்டும் அளவுக்கு உள்ளது. சூப்பர் எல் நினோவின் தாக்கத்தால் பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் தீவிர வெப்பமயமாதல், இந்தியாவில் பருவமழையின் தீவிரத்தைக் குறைப்பதோடு வெப்பநிலையையும் அதிகரிக்கிறது.
இதனால் ஏற்படப்போகும் பாதிப்புகள் எங்கோ தொலைதூரப் பிரதேசங்களில் அல்லது பல ஆண்டுகளுக்குப் பிறகு நிகழப்போகின்றன என்று இனியும் நாம் கற்பனை செய்துகொண்டிருக்க முடியாது. மகாராஷ்டிர மாநிலத்தின் 358 தாலுகாக்களில் 308 தாலுகாக்களை வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளாகப் பா.ஜ.க. அரசு அறிவித்திருக்கிறது. இனிவரும் மாதங்களில் மாநிலத்தின் 100 சதவீதப் பகுதிகளும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசுத் தரப்பே கூறுகிறது.
இங்கு நிலவும் வறட்சி, பொதுவாக நமது மனதில் தோன்றும் வறட்சியைப் போன்றதல்ல. தூசு படிந்த தரிசு நிலங்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரியும் வறட்சி இது அல்ல. மகாராஷ்டிராவின் உள்பகுதிகளில் இன்னமும் பயிர்கள் வளர்ந்து நிற்பதைப் போன்ற தோற்றமளிக்கும் வயல்வெளிகள் இருக்கின்றன. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அந்த வயல்கள் செழிப்பாக இருப்பதாகக்கூடத் தோன்றலாம். ஆனால், அந்த மேலோட்டமான தோற்றத்துக்குப் பின்னால் மறைந்திருக்கும் உண்மையை உற்றுநோக்கினால், ஒவ்வொரு விவசாயியின் வாழ்க்கையிலும் நிகழ்ந்துகொண்டிருக்கும் துயரம் வெளிப்படையாகத் தெரியும்.
கரஞ்ச்காவ்ன் கிராமத்தைச் சேர்ந்த சச்சின் கலங்கே என்பவர் தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் பருத்தி பயிரிட்டிருக்கிறார். அதில் பருத்திச் செடிகள் வளர்ந்து நிற்கின்றன. பருத்திக் காயைப் பறித்து உடைத்துப் பார்த்தால், பனியைப் போன்ற வெண்மையான பஞ்சு தென்படுகிறது. அவரது வயல் வறண்டுபோகவில்லை. ஆனால், வழக்கமாக இந்த இரண்டு ஏக்கர் நிலத்தில் அவருக்குக் கிடைக்கும் பருத்தி விளைச்சல் 2,500 கிலோ. இந்த ஆண்டு கிடைத்ததோ வெறும் 70 கிலோ மட்டுமே.
சச்சின் கலங்கேவுக்கு வயதான பெற்றோர், மனைவி, மூன்று குழந்தைகள் எனக் குடும்பம் இருக்கிறது. இதுதவிர, கால்நடைகளையும் பராமரித்து வருகிறார். இவர்கள் அனைவரின் வாழ்வாதாரமும் அந்த 2,500 கிலோ பருத்தி விளைச்சலைத்தான் நம்பியிருந்தது. அதன் மூலம் அவருக்கு ரூ.2.5 லட்சம் வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார். அந்தத் தொகையைக் கொண்டுதான் குடும்பம் ஆண்டு முழுவதும் செலவுகளைச் சமாளிக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு அவருக்குக் கிடைக்கப்போவது வெறும் ரூ.7,000 மட்டுமே. ஒரு குடும்பத்தின் பிழைப்புக்குத் தேவையான ரூ.2.5 லட்சத்துக்கும், இப்போது கிடைக்கப்போகும் வெறும் ரூ.7,000-க்கும் இடையிலான இந்தப் பெரும் இடைவெளிதான் அங்கு நிலவும் ‘வறட்சி’யின் உண்மையான பொருள்.
அந்த விவசாயி தன்னிடம் ஒரு நாட்குறிப்பை வைத்திருக்கிறார். அதில் தனது வரவு செலவுக் கணக்குகளைத் தெளிவாக எழுதி வைத்திருக்கிறார். வாங்கிய கடன்களையெல்லாம் சிவப்பு மையால் குறித்திருக்கிறார். “நான் இல்லையென்றால், யாருக்கு எவ்வளவு பணம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பது என் குழந்தைகளுக்குத் தெரிய வேண்டாமா?” என்கிறார் அவர்.
அந்த விவசாயியின் வாழ்க்கையில் துயரத்தைத் தவிர வேறொன்றுமில்லை. அவர் தனது குழந்தையிடம், “யாராவது வீட்டில் வேலைக்காரியாகச் சேர்ந்துவிடு; தரையைப் பெருக்கிச் சுத்தம் செய்தாவது பிழைத்துக்கொள். ஆனால், ஒருபோதும் விவசாயம் மட்டும் செய்யாதே” என்கிறார்.
தற்போதைய பருவமழையில் மகாராஷ்டிராவில் இயல்பைவிட சுமார் 19 சதவீதம் குறைவான மழையே பதிவாகியுள்ளது. மத்திய மகாராஷ்டிராவில் உள்ள எட்டு மாவட்டங்களைக் கொண்ட, வறட்சிக்கு அதிகம் ஆளாகும் மராத்வாடா பிராந்தியத்தில் மழைப்பொழிவு சுமார் 39 சதவீதம் குறைந்துள்ளது. இதனால், மராத்வாடாவில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீருக்காகத் தண்ணீர் லாரிகளையே நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அக்டோபர் மாத நிலவரப்படி, 463 தண்ணீர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இலட்சக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் காய்ந்து கிடக்கின்றன.
மகாராஷ்டிராவில் ஆண்டுதோறும் வறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகளின் எண்ணிக்கையும், பட்டினிக் கொடுமையின் தீவிரமும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றனவே தவிர, குறைந்தபாடில்லை. கடந்த 1972-ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சியின்போதுகூட ராபி பருவத்தில் 47.2 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. ஆனால், நடப்பாண்டின் ராபி பருவத்தில் சாகுபடிப் பரப்பளவு வெறும் 10.72 இலட்சம் ஹெக்டேராகச் சுருங்கியிருக்கிறது.
வறட்சி என்பது விவசாயப் பிரச்சனையைத் தாண்டி, ஒவ்வொரு முறையும் பல்வேறு பொருளாதாரப் பாதிப்புகளையும் ஏற்படுத்திச் செல்கிறது. மகாராஷ்டிராவில் குறைவான பருவமழையால் விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் தங்களது வருமானத்தை இழந்துள்ளனர். விவசாயம் சார்ந்த வேலைவாய்ப்புகளுக்கான தேவையும் கணிசமாகக் குறைந்துள்ளது.
கிராமப்புறக் குடும்பங்கள் தங்களுக்குக் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களைக்கூட வாங்க முடியாமல் திணறுகின்றனர். இதனால், செலவுகளைக் குறைப்பதோடு உணவையும் குறைவாகவே உட்கொள்கின்றனர். கடனில் மூழ்கிய குடும்பங்கள் கால்நடைகளையும் பிற சொத்துகளையும் விற்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் தங்களது மருத்துவச் சிகிச்சைகளைக்கூடத் தள்ளிப்போடுகின்றனர். குறிப்பாக, பெண் குழந்தைகளின் கல்விச் செலவுகளைக் குறைக்கின்றனர். அத்தியாவசியச் செலவுகளைச் சமாளிப்பதற்காக மேலும் கடன் வாங்கும் நிலைக்கும் ஆளாகின்றனர்.
மகாராஷ்டிராவில் பிறக்கும் குழந்தைகளில் 25 சதவீதம் பேர் போதிய எடையின்றிப் பிறக்கின்றனர். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 35 சதவீதம் பேர் வளர்ச்சிக் குன்றிய நிலையில் உள்ளனர். அம்மாநிலத்தின் ஏழு மாவட்டங்களில் மட்டும் 2022 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 14,526 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறையே அறிவித்துள்ளது.
சத்துக்குறைபாட்டால் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டு, தங்கள் கண் முன்னாலேயே துன்பப்படுவதைக் காணச் சகிக்காத விவசாயிகளும் விவசாயக் கூலித் தொழிலாளர்களும் தாங்கள் பிறந்து வளர்ந்த மண்ணிலேயே வாழ வழியின்றி, வேறு மாநிலங்களுக்குப் பிழைப்புத் தேடிச் செல்கின்றனர். இவ்வாறு அம்மாநில மக்கள் தினக்கூலித் தொழிலாளர்களாகப் புலம்பெயர்வது இன்று பரவலாக நடைபெற்று வருகிறது. குடும்பத்தினர் வேலை தேடி வெளியேறுவதால், கிராமங்களில் தங்கியிருக்கும் சிறுமிகளுக்குச் சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இதனால், இளம் வயதிலேயே திருமணம் செய்துவைக்கப்பட்ட பெண்களும் குடும்பத்தோடு புலம்பெயர்ந்து செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர்.
மராத்வாடா பிராந்தியத்தின் பீட் மாவட்டத்தில் உள்ள கட்டக்வாடி என்ற கிராமத்தில் மட்டும் சுமார் 700 வீடுகள் பூட்டிக் கிடக்கின்றன. வறட்சி நிவாரணமாக மாநில அரசு அறிவித்த 5,000 ரூபாயைக்கூடப் பெறுவதற்காகக் காத்திருக்காமல், அக்கிராம மக்கள் கரும்பு வெட்டும் வேலைக்காகத் தீபாவளிக்கு முன்பே அண்டை மாநிலங்களுக்குப் புலம்பெயர்ந்துவிட்டனர்.
தொடர்ந்து விவசாயம் பொய்த்துப்போவதால், கடந்த நான்கு ஆண்டுகளாக அம்மாநிலத்தில் தினமும் சராசரியாக எட்டு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். அங்குள்ள விவசாயக் குடும்பங்களில் 54 சதவீதத்தினர் பெரும் கடன் சுமையில் சிக்கியுள்ளனர். இது தேசிய சராசரியைவிட 35 சதவீதம் அதிகமாகும். கடன் சுமை, விளைச்சல் இன்மை உள்ளிட்ட காரணங்களால் கடந்த 45 நாட்களில் மட்டும் 155 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில் நிலவும் இந்த அவலநிலையோடு, ஆட்சியாளர்களின் புதிய பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்படும் நாசமும் சேர்ந்து அம்மாநிலத்தை மேலும் கடுமையான வறட்சியை நோக்கித் தள்ளியிருக்கிறது.
மகாராஷ்டிராவில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க. முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அம்மாநிலத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றப்போவதாக மாயாஜால வித்தைகளைக் காட்டி வருகிறார். பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்கான களமாக அம்மாநிலத்தை மாற்றுவதில் பா.ஜ.க. அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. பகாசுர கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பாய் விரித்துவிட்டு, தொழிற்புரட்சியையே நிகழ்த்திவிட்டதைப் போலக் கூச்சநாச்சமின்றி முழங்குகிறார் தேவேந்திர பட்னாவிஸ். கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்களுக்காக அம்மாநில மக்கள் நிர்க்கதியாக்கப்பட்டு, பட்டினிச்சாவின் விளிம்புக்குத் தள்ளப்படுவதோடு, தற்கொலைக்குத் தள்ளப்படும் அவலமும் தொடர்கிறது.
அம்மாநிலத்தில் இந்த ஆண்டு பருவமழை இயல்பைவிட 19 சதவீதம் குறைவாகப் பெய்ததால், இலட்சக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் காய்ந்து கிடக்கின்றன. இத்தகைய கடுமையான வறட்சி நிலவுகின்ற நிலையிலும், தரவு மையங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் அதிகரித்துவரும் நீர்த் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அவற்றுக்கு நீர் விநியோகிக்கும் பணியை மேற்கொள்வதற்காகப் புதிய நிறுவனம் ஒன்றை அமைக்குமாறு அம்மாநில முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். இதிலிருந்தே கடுமையான வறட்சியிலும் காவிகள் யாருடைய தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இதன் விளைவாக உருவாகும் நீர்ப்பற்றாக்குறையின் விலையை விவசாயிகள்தான் செலுத்தப்போகிறார்கள் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
ஒன்றிய வேளாண் அமைச்சகம் 2026-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலேயே, நடப்பாண்டில் வறட்சியைச் சந்திக்க வாய்ப்புள்ள 315 மாவட்டங்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. ஆனால், வறட்சி ஏற்படும்போதெல்லாம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழைப்பொழிவு குறைவாக இருந்ததையே காரணமாகக் காட்டி, தங்களது பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்வது ஆட்சியாளர்களின் வாடிக்கையாக இருக்கிறது. மராத்வாடா, பீட் போன்ற கடுமையான வறட்சி நிலவும் பகுதிகளில் இயல்பான மழையளவில் பாதிக்கும் குறைவாகவே மழை பெய்திருக்கிறது என்பது உண்மைதான்.
ஆனால், இதற்கான அடிப்படைக் காரணங்களைப் பற்றி ஆட்சியாளர்கள் வாய் திறப்பதே இல்லை. மரங்களை வெட்டிக் காடுகளை அழிப்பதும், முறையான நீர்ப்பாசன வசதிகள் இல்லாததும் மழைப்பொழிவு குறைவதற்கும், தானிய உற்பத்தி சரிவதற்கும் முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.
காடுகளை அழிக்கும் கயவர்கள்!
மகாராஷ்டிரா மாநில வனத்துறையின் தரவுகளின்படி, 1984 முதல் 2013-ஆம் ஆண்டு வரை 1,610 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. 2016-19 காலகட்டத்தில் 64 சதுர கிலோமீட்டர் காடுகளும், கடந்த மூன்று ஆண்டுகளில் 54 சதுர கிலோமீட்டர் காடுகளும் அழிக்கப்பட்டுள்ளன.
சுரங்கத் தொழில், ரயில் பாதைகள், நெடுஞ்சாலைகள், நீர்ப்பாசனத் திட்டங்கள் எனப் பல்வேறு திட்டங்களுக்காகக் காடுகள் அழிக்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி, மாநிலத்தின் மொத்த வனப்பரப்பான 61,579 சதுர கிலோமீட்டரில் 670 சதுர கிலோமீட்டர் பரப்பளவை ஆக்கிரமிப்பாளர்கள் கையகப்படுத்தியுள்ளனர். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்தப் பரப்பளவு, 603 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மும்பை நகரத்தையும்விடப் பெரியது என்பதிலிருந்தே இதன் தீவிரத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
சிந்துதுர்க் மாவட்டத்தில் மட்டும் நில மாஃபியா கும்பல் சுமார் 6,000 மரங்களை வெட்டியிருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெயந்த் பாட்டீல், இரண்டு மாதங்களுக்கு முன்பு மாநில வருவாய்த் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தார். கட்டமைப்பு வளர்ச்சி என்ற பெயரில் அரசும், வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் தரகு முதலாளிகளும், நிலங்களைக் கையகப்படுத்தும் நோக்கில் நில மாஃபியாக்களும் மராட்டியக் காடுகளை அழித்து வருகின்றனர்.
பாசன வசதி இல்லை; பாழாகும் நிலங்கள்!
இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிகபட்சமாக 3,700 அணைகள் உள்ளன. அப்படியிருந்தும், அம்மாநிலத்தின் மொத்த விவசாய நிலங்களில் வெறும் 17 முதல் 18 சதவீத நிலங்கள் மட்டுமே அணைகள் மற்றும் கால்வாய்கள் மூலம் பாசன வசதி பெறுகின்றன.
மகாராஷ்டிரா பொருளாதார ஆய்வறிக்கை, நீர்வளத் துறை மற்றும் சிஏஜி தரவுகளின்படி, அம்மாநிலத்தில் 120 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவுக்கு நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்தும் திறன் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், சுமார் 65 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவுக்கு மட்டுமே நீர்ப்பாசனத் திறன் உருவாக்கப்பட்டுள்ளது. அணைகள் மூலம் கிடைக்கும் நீர்ப்பாசன வசதி 30 முதல் 35 இலட்சம் ஹெக்டேர் அளவிலேயே தேக்கமடைந்துள்ளது. உண்மையில் எவ்வளவு விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்யப்படுகிறது என்பதை உறுதிப்படுத்துவதற்கான நம்பகமான தரவுகள்கூட இல்லை என விவசாய நிபுணர்கள் கூறுகின்றனர்.
மகாராஷ்டிராவில் பணப்பயிரான கரும்பு வெறும் 4 சதவீத விவசாய நிலங்களில் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால், மாநிலத்தின் மொத்த பாசன நீரில் கிட்டத்தட்ட 70 சதவீதத்தை இந்தப் பயிரே உறிஞ்சிக்கொள்கிறது. இலட்சக்கணக்கான விவசாயிகள் தங்களது பயிர்கள் வாடுவதைக் கையறு நிலையில் பார்த்துக்கொண்டிருக்கும்போது, வெறும் 4 சதவீத நிலங்களில் சாகுபடி செய்யப்படும் ஒரு பணப்பயிர் மாநிலத்தின் பெரும்பகுதி பாசன நீரையும் உறிஞ்சிக்கொண்டிருக்கிறது.
மகாராஷ்டிரா அரசு 1999 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் நீர்ப்பாசனத் திட்டங்களுக்காகப் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயைச் செலவிட்டது. அப்படியிருந்தும், 2012-ஆம் ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கையின்படி, அந்தக் காலகட்டத்தில் நீர்ப்பாசனத் திறன் வெறும் 0.1 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது.
1999 முதல் 2014-ஆம் ஆண்டு வரை மகாராஷ்டிராவில் காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. அப்போது, 2009-ஆம் ஆண்டு வரை அஜித் பவார் அம்மாநிலத்தின் நீர்வளத் துறை அமைச்சராகவும், அதற்குப் பிறகு துணை முதல்வராகவும் பதவி வகித்தார். இதே காலகட்டத்தில் விதர்பா நீர்ப்பாசன மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராகவும் அஜித் பவார் நியமிக்கப்பட்டிருந்தார். அந்தக் கழகம் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கியதில் சுமார் ரூ.70,000 கோடி ஊழல் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அரசியல்வாதிகள், காண்டிராக்டர்கள், அதிகாரிகள் ஆகியோர் கொழுப்பதற்குத்தான் மகாராஷ்டிராவில் அணைகள் கட்டும் திட்டங்கள் பயன்பட்டிருக்கின்றனவே தவிர, விவசாயிகளுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. அணைகள் கட்டுவதற்காகத் தங்களது நிலங்களையும் வீடுகளையும் இழந்து விரட்டியடிக்கப்பட்டதுதான் அம்மாநில மக்களுக்குக் கிடைத்த பலன்.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாக, மழை பெய்யும் காலங்களில்கூட அந்த நீரைப் பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலையில்தான் மகாராஷ்டிரா விவசாயிகள் இருக்கிறார்கள். குளங்கள், ஏரிகள், ஆறுகள் ஆகியவற்றிலிருந்து தங்களது வயல்களுக்கு நீரைக் கொண்டுசெல்வதற்கான பாசனக் கட்டமைப்புகள் இல்லாமல் தவிக்கிறார்கள். நவீன முறையிலான பாசன வசதிகளை ஏற்படுத்தித் தருவதில் மாநில அரசு துளியும் அக்கறை காட்டுவதில்லை.
மராத்வாடா பகுதியில் உள்ள நீர்த்தேக்கங்களில் தற்போது வெறும் 40 சதவீத கொள்ளளவு மட்டுமே நீர் இருப்பு உள்ளது. மேலும், தாராசிவ், ஜால்னா, பீட், லாத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள அணைகள் கிட்டத்தட்ட வறண்டுவிட்டன. 223 தாலுகாக்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. கால்நடைத் தீவனம் 2027 பிப்ரவரி வரை மட்டுமே நீடிக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. நிலங்களில் போதிய ஈரப்பதமும் நீரும் இல்லாததால், அடுத்த ராபி பருவத்தில் பயிர்கள் விதைக்கப்படுமா என்பதே கேள்விக்குறியாகியுள்ளது.
பட்டினிச்சாவின் விளிம்புக்குத் தள்ளப்படும் மக்கள்!
விவசாயிகள் இந்த காரிஃப் பருவப் பயிர்களுக்காக மட்டும் சுமார் ரூ.1.31 இலட்சம் கோடியை முதலீடு செய்துள்ளனர். இதில் 60 சதவீத வயல்களில் பயிர்கள் காய்ந்து கிடக்கின்றன. இந்த இழப்பை ஈடுசெய்ய வேண்டுமானால், அரசு விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.80,000 வழங்க வேண்டும். ஆனால், காவிகளின் அரசோ ஒரு விவசாயிக்கு ரூ.5,000 என்ற அளவில் மொத்தம் ரூ.7,500 கோடியை நிவாரணமாக அறிவித்திருக்கிறது. இதில் முறையான ஆவணங்கள் இல்லாத குத்தகை விவசாயிகள் சேர்க்கப்படவில்லை.
விவசாயிகளும் விவசாயக் கூலித் தொழிலாளர்களும் தற்போது ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தையே நம்பியிருக்கின்றனர். ஆனால், வறட்சி தலைவிரித்தாடும் பீட் மாவட்டத்திலேயே, வி.பி. ராம் ஜி திட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் வேலைக்கு வந்ததாகப் போலியான வருகைப் பதிவேடுகளைத் தயாரித்து ஒரு பெரும் ஊழல் சமீபத்தில் அரங்கேறியுள்ளது. இதற்கிடையில், பீட் மாவட்டப் பெண்கள் தங்களுக்கு ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை வழங்கக் கோரி போராடி வருகின்றனர்.
அம்மாநிலத்தில் நிலவும் வறட்சியைச் சமாளிப்பதற்கு ரூ.1.6 இலட்சம் கோடி தேவைப்படும் எனப் பல பொருளாதார நிபுணர்கள் முதல்வருக்குக் கடிதம் எழுதியிருக்கின்றனர். ஆனால், இந்த நெருக்கடியிலிருந்து மக்களை மீட்பதற்கான நிரந்தரத் தீர்வுகளை உருவாக்குவதற்குப் பதிலாக, தற்காலிக நிவாரணம் என்ற பெயரில் பிச்சை போடுவதையே அரசு தனது நிரந்தரக் கொள்கையாகக் கொண்டிருக்கிறது.
வறட்சியின் கோரப்பிடியில் மகாராஷ்டிராவின் 85 சதவீதப் பகுதிகள் சிக்கித் தவிக்கின்றன. இலட்சக்கணக்கான மக்கள் சிறுகச் சிறுகச் செத்துக்கொண்டிருக்கிறார்கள். அங்குள்ள விவசாயிகளுக்கு வேறு வழியில்லை. ஆனால், அம்மாநில முதல்வரோ 100 பில்லியன் டாலர் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான வளர்ச்சித் திட்டங்களை அறிவித்துக்கொண்டிருக்கிறார்.
இதைத்தான் வளர்ச்சி என்கின்றனர் காவிகள். ஆனால், மகாராஷ்டிரா விவசாயிகளோ வறட்சியும் பட்டினியும் தங்களது வாழ்க்கையில் நிரந்தரமாகிவிடுமோ என்ற அச்சத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
- தாமிரபரணி



