மக்களின் வயிற்றில் அடித்து, எத்தனால் முதலாளிகளுக்கு அரிசியை அள்ளிக் கொடுக்கும் மோடி அரசு

ஜூலை 31, 2026
எத்தனால் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான அரிசியை மலிவு விலையில் வழங்கும் ஒன்றிய அரசு, அதே நேரத்தில் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து ஏழை மக்களின் ரேசன் தானிய ஒதுக்கீட்டைக் குறைக்க முனைந்துள்ளது.

இந்திய உணவுக் கழகம் (FCI) கடந்த 2025 ஜூன் முதல் 2026 ஜூன் வரையிலான காலகட்டத்தில், எத்தனால் தயாரிப்பு ஆலைகளுக்கு சுமார் 63.5 லட்சம் டன் அரிசியை, அதன் கொள்முதல் மற்றும் பராமரிப்புச் செலவை விட சுமார் 40% குறைவான விலைக்கு விற்றதாக ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் (மாநிலங்கள் அவையில்) எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

ஒரு குவிண்டால் அரிசியைக் கொள்முதல் செய்யவும், அதனைப் பராமரிக்கவும் அரசுக்குச் சுமார் 3,700 முதல் 3,900 ரூபாய் வரை செலவாகிறது. ஆனால், எத்தனால் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அதனை 2,250 ரூபாய்க்கு இந்திய உணவுக் கழகம் கொடுத்திருக்கிறது.

கடந்த ஓராண்டில் மட்டும் எத்தனால் ஆலைகளுக்கு வழங்கப்பட்ட அரிசியின் மொத்த மதிப்பு சுமார் ரூ.14,597 கோடியாகும். இதன் மூலம் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு சுமார் 9,730 கோடி ரூபாய் ஆகும். கிட்டத்தட்ட பத்தாயிரம் கோடி ரூபாய்களை மோடி அரசு எத்தனால் உற்பத்தி நிறுவனங்களுக்குத் தூக்கிக் கொடுத்திருக்கிறது.

இருப்பினும், அரசு இதனை ஒரு “நிதி இழப்பாகவோ” அல்லது எத்தனால் உற்பத்தி நிறுவனங்களுக்கான “நேரடி மானியமாகவோ” கருதவில்லை. பெட்ரோலில் எத்தனாலைக் கலக்கும் E20 திட்டத்தின் தேசிய இலக்கை எட்ட இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறும் ஒன்றிய அரசு, பொது விநியோகத் திட்டம் மற்றும் இதர நலத்திட்டங்களுக்குப் பிறகு எஞ்சியிருக்கும் உபரி அரிசி இருப்பு (Surplus Stock) மட்டுமே இவ்வாறு திறந்தவெளிச் சந்தை விற்பனைத் திட்டத்தின் (OMSS) கீழ் விற்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் கூறியுள்ளது.

எத்தனால் உற்பத்தி நிறுவனங்கள் 63.5 லட்சம் டன் அரிசியை, அரசிடம் வாங்காமல் வெளிச்சந்தையில் வாங்கியிருந்தால், அவர்கள் கூடுதலாக 13,000 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்க வேண்டும். அரசிடமிருந்து அரிசியை வாங்கியதன் மூலம் இந்தப் பணம் முதலாளிகளின் பையில் இலாபமாக மாறியிருக்கிறது.

இவ்வாறு முதலாளிகளுக்கு அரிசியை அள்ளிக் கொடுத்ததுடன், 13,000 கோடி ரூபாய் இலாபத்தையும் சேர்த்துக் கொடுத்திருக்கும் ஒன்றிய அரசு, ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் அரிசியின் அளவைக் குறைத்து, அவர்களது வயிற்றில் அடிக்கத் துடிக்கிறது. தேசிய உணவுப் பாதுகாப்பு (திருத்த) மசோதா 2026 என்ற பெயரில் ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத் துறை ஒரு சட்ட வரைவைக் கடந்த ஜூன் மாதம் அறிவித்திருக்கிறது. இந்தச் சட்டத்திருத்தத்தின்படி, பொது விநியோகத் திட்டம், அதாவது ரேசன் கடைகளில் ஏழைக் குடும்பங்களுக்கு அரிசி/கோதுமை உள்ளிட்ட தானியங்களின் அளவை, தற்போது மாதந்தோறும் 35 கிலோ கொடுப்பதற்குப் பதிலாக, ஒரு குடும்ப உறுப்பினருக்கு மாதம் 7 கிலோ எனக் குறைத்திருக்கிறது.

தற்போது மக்களிடமிருந்து கருத்துக் கேட்கும் நிலையில் இருக்கும் இந்த மசோதா, கூடிய விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுச் சட்டமாகப் போகிறது.

தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஒரு குடும்பத்தில் நபர்களின் சராசரி எண்ணிக்கை 4 என வைத்துக் கொண்டால், இதுவரை மாதம் 35 கிலோ அளவிற்குத் தானியங்களை ரேசன் கடைகள் மூலம் இலவசமாகப் பெற்று வந்த அந்தக் குடும்பம் இனி 28 கிலோ மட்டுமே பெற முடியும். இதுவே ஒருவர் அல்லது இருவர் மட்டுமே இருக்கும் வீடுகளுக்கும், முதியவர்கள் மட்டும் தனித்து வாழும் வீடுகளுக்கும் இனி மிகக் குறைவான அளவே தானியங்கள் கிடைக்கும். அதே சமயம், உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் குடும்பத்தில் 6, 7 பேர் இருந்தாலும் அவர்களுக்குப் பழைய அதிகபட்ச அளவான 35 கிலோ மட்டுமே கொடுக்கப்படும்.

உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள சராசரி ஊட்டச்சத்தை அடைவதற்கு ஒரு நபருக்குக் குறைந்தது 14 கிலோ தானியங்கள் ஒவ்வொரு மாதமும் தேவைப்படும். போர், பஞ்சம் போன்ற மனிதாபிமான நெருக்கடிகளின் போது, சர்வதேச அளவில் ஸ்பியர் அசோசியேஷன் வழிகாட்டுதல்களின்படி, ஒரு மனிதன் உயிர்வாழ்வதற்குத் தேவையான கலோரிகளைப் பெறுவதற்கு மாதந்தோறும் குறைந்தபட்சம் 12 கிலோ தானியங்கள் தேவைப்படுகின்றன. அந்த வகையில் பார்த்தால், ஏற்கெனவே கொடுக்கப்படும் 35 கிலோ தானியங்கள் என்பதே மிகவும் குறைவு. ஆனால் அதையும் தற்போது ஒன்றிய அரசு குறைத்துள்ளது. இதன் மூலம், மனிதாபிமான நெருக்கடிக் காலகட்டத்தில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தேவைப்படும் தானியங்களைக் கூட நம் நாட்டு மக்களுக்குக் கொடுக்க முடியாது என மக்களைப் பட்டினியில் தள்ள எத்தனிக்கிறது இந்த மோடி அரசு.

தற்போது இருக்கும் முறையில் தானியங்களை விநியோகிப்பதில் சமத்துவமின்மை நிலவுவதாகவும், சிறிய குடும்பங்கள் அவர்களுக்குத் தேவையான அளவை விட அதிகமாகத் தானியங்களைப் பெற்று வருவதாகவும் கூறும் ஒன்றிய அரசு, சமச்சீரான விநியோகக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு இந்தத் திருத்தம் அவசியமானது என வாதிடுகிறது. சமச்சீரான விநியோகம் தான் அரசின் நோக்கம் என்றால், அதிகபட்சமாக ஒரு குடும்பத்திற்கு 35 கிலோ என்ற வரம்பை ஏன் நீக்கவில்லை? 6–7 பேர் இருக்கக் கூடிய குடும்பங்களுக்கு இவர்களது நிர்ணயத்தின்படி 42 முதல் 49 கிலோ தானியம் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் அப்படிக் கொடுக்க மறுக்கின்றனர். எனவே, இவர்களது நோக்கம் சமச்சீரான விநியோகக் கட்டமைப்பை உருவாக்குவது அல்ல.

உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் இந்தத் திட்டத்திற்கு ஒன்றிய அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்குகிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் இதற்காக 2.27 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த பட்ஜெட்டில் இது வெறுமனே 4.4% தான் என்றாலும், இந்தத் தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாகக் கவலை தெரிவித்திருக்கும் அரசு, செலவைக் குறைப்பதற்கு ஸ்மார்ட் ரேசன் திட்டம் கொண்டு வந்து, அதில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தப் போவதாகக் கூறியிருந்தது. ஆனால், அதையெல்லாம் விட ஏழைகளின் வயிற்றில் அடிப்பதன் மூலம் அதிக அளவில் செலவை மிச்சப்படுத்தலாம் எனத் தற்போது தனது கார்ப்பரேட் அறிவைப் பயன்படுத்தியிருக்கிறது.

ஒருபுறம் எத்தனால் தயாரிக்கும் முதலாளிகளுக்கு மலிவு விலையில் பல லட்சம் டன் அரிசியைக் கொடுத்துவிட்டு, ஏழை மக்களைப் பட்டினிக்குத் தள்ளுகிறது மோடி அரசு.

இன்று நாட்டில் உணவு தானிய உற்பத்தியில் பற்றாக்குறை இல்லை; மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அரசின் நோக்கம் தான் பற்றாக்குறையாக இருக்கிறது. உழைக்கும் மக்களின் வரிப்பணத்தில் கொள்முதல் செய்யப்பட்ட அரிசி, ஏழை மக்களின் வயிற்றை நிரப்புவதற்குப் பதிலாக கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபத்தைப் பெருக்கப் பயன்படுத்தப்படுகிறது. மறுபுறம், உணவுப் பாதுகாப்பு என்ற பெயரிலேயே ஏழை மக்களின் உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்படுகின்றன.

இது பொதுச் சொத்துகளையும் பொதுநலத் திட்டங்களையும் கார்ப்பரேட் இலாபத்திற்காக மாற்றியமைக்கும் மோடி அரசின் வர்க்கக் கொள்கையின் வெளிப்பாடாகும். எனவே, உணவுப் பாதுகாப்பையும் பொது விநியோகத் திட்டத்தையும் பாதுகாப்பதற்கான போராட்டம் என்பது வெறும் ரேசன் அரிசிக்கான போராட்டமல்ல; அது மக்களின் வாழ்வுரிமையையும், பொதுச் சொத்துகளையும், கார்ப்பரேட் கொள்ளையிலிருந்து காப்பாற்றுவதற்கான போராட்டமாகும்.

  • சந்திரன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன