E20 பெட்ரோல் : மக்களின் பாக்கெட்டில் பிளேடு போடும்
மோடி அரசின் திட்டம்!

ஆகஸ்ட் 18, 2026
பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் E20 திட்டத்தால் மைலேஜ் குறைந்து, கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய வாகன ஓட்டிகள் சுமார் ₹88,234 கோடி கூடுதலாகச் செலவிட்டுள்ளதாக தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் கணக்கிட்டுள்ளது. எத்தனால் கலப்பால் மைலேஜ் குறையும் என்பதை அரசின் நிதி ஆயோக் அறிக்கைகளே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், மக்கள் எழுப்பும் புகார்களை ஒன்றிய அமைச்சர்கள் “bullshit” என்று நிராகரிக்கின்றனர். இறக்குமதிச் செலவை மிச்சப்படுத்துவதாகக் கூறப்படும் E20 திட்டத்தின் விலை மக்கள் பாக்கெட்டிலிருந்து எடுக்கப்படுகிறது.

எத்தனால் கலந்த பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கான எரிபொருள் செலவு அதிகரிப்பதாக எழுந்த புகார்களை, அமைச்சர்கள் கட்கரி மற்றும் பூரி ஆகியோர் “அற்பமானவை” என்றும் “அர்த்தமற்றவை” (bullshit) என்றும் கூறியுள்ளனர். கடந்த மூன்றாண்டுகளில் இந்தச் சோதனைக்காக மக்கள் தங்களின் வாகன எரிபொருள் செலவுக்கு மிக அதிக அளவிலான தொகையைச் செலுத்தியுள்ளதாக ‘தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்’ (The Reporters’ Collective) அமைப்பு கண்டறிந்துள்ளது. அதனைச் சுருக்கப்பட்ட வடிவில் வாசகர்களுக்குத் தருகிறோம்.

பெட்ரோலில் எத்தனால் கலக்கும் இத்திட்டம் 2003-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு E5, E10 எனப் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இத்திட்டத்தை அமல்படுத்தும் வேகம் அதிகரித்தது. அதாவது, பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலக்கும் இலக்கை 2020-இல் அடைந்தது. அதன் பிறகு 2030-ஆம் ஆண்டிற்குள் E20 அதாவது 20 சதவீதம் எத்தனால் கலக்கும் இலக்கை ஒன்றிய அரசு நிர்ணயித்தது. இருந்தாலும், 2025-ஆம் ஆண்டிலேயே இந்த இலக்கை அடைந்துவிட்டது.

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பு என்ற இந்த மைல்கல்லை இந்திய அரசு முன்கூட்டியே எட்டியதைக் கொண்டாடிய இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தில்லியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் உரையாற்றினார்.

அதில் பேசிய பூரி, எத்தனால் கலந்த பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு அதிக எரிபொருள் செலவாகிறது என்றும் எஞ்சின் பாதிப்படைகிறது என்றும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை வெறும் “அர்த்தமற்ற குப்பை” (bullshit) என்று கூறியுள்ளார். மேலும், “ஒரு காரின் எரிபொருள் சிக்கனம் (efficiency) ஒன்று அல்லது இரண்டு சதவீதம் குறைவதற்கு 21 காரணங்களை என்னால் கூற முடியும்,” என்றும் திமிராகக் கூறியுள்ளார்.

அமைச்சர் பூரியின் இந்தப் பேச்சை, ஒன்றிய அரசின் தரவுகளைக் கொண்டு ‘தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்’ அமைப்பு சரிபார்த்துள்ளது. அதில் மக்களின் வாகன எரிபொருள் (பெட்ரோல்) நுகர்வு, வாகனப் போக்குவரத்து வளர்ச்சி ஆகியவை குறித்த பகுப்பாய்வில், E20 நடைமுறை தீவிரமடைந்ததிலிருந்து, எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருளின் மைலேஜ் (எரிபொருள் சிக்கனம்) குறைவால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட, கடந்த மூன்று ஆண்டுகளில் (1 ஏப்ரல் 2023 முதல் 31 மார்ச் 2026 வரை) மக்கள் சுமார் ரூ. 88,234 கோடியைக் கூடுதலாகச் செலவிட்டுள்ளனர் என்றும், எதிர்காலத்திலும் இந்தச் செலவு தொடரும் என்றும் கூறியுள்ளது. மேலும், அரசின் திட்டப்படி பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனாலின் சதவீதத்தை E25, E30, …, E100 என அதிகரித்தால், மக்களின் மீதான இந்த நிதிச் சுமை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே போகும் என எச்சரித்துள்ளது.

மைலேஜ் குறைவதற்கான காரணத்தை ஒரு எளிய அறிவியல் உண்மையிலிருந்தே பெறமுடியும். அதாவது, எரியும்போது பெட்ரோல் தரும் அதே அளவிலான ஆற்றலை எத்தனால் தருவதில்லை. இது சுமார் 33 சதவீதம் குறைவான செயல்திறன் கொண்டது. இந்தக் கூற்றை அரசு தனது அறிக்கைகளில் ஒப்புக்கொண்டாலும், அமைச்சர்களின் ”bullshit” பேச்சுக்களால் இந்த உண்மையை மறைக்க முயல்கின்றனர்.

பெட்ரோலில் எத்தனால் கலப்பதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவில் ஒரு லட்சம் கோடி சேமித்திருப்பதாக சமீபத்தில் ஒன்றிய அரசு அறிக்கை வெளியிட்டு, இலக்கை அடைந்துவிட்டதாகப் பெருமை பொங்கப் பேசியுள்ளது. உண்மையில், இந்த சேமிப்பிற்காக மக்கள் தங்கள் பாக்கெட்டிலிருந்து சுமார் 88,234 கோடியைக் கூடுதலாகச் செலவு செய்துள்ளனர் என்பதையே இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஒருவேளை எத்தனால் கலக்கப்படாத எரிபொருளுக்கு மாறினாலும் கூட மக்களால் இந்த கூடுதல் செலவிலிருந்து தப்பிக்க முடியாது. ஏனெனில், எத்தனால் கலந்த பெட்ரோலின் விலையை விட லிட்டருக்கு ரூ.66-68 அதிகமாக (தில்லியின் தற்போதைய விலையின்படி) அரசு விலை நிர்ணயித்துள்ளது. அதாவது, தில்லியில், எத்தனால் கலந்த பெட்ரோலின் விலை சுமார் ரூ.102 ஆக இருக்கும் நிலையில், தூய பெட்ரோலின் விலை ரூ.167-170 வரை உள்ளது. எனவே, திருடர்கள் பேருந்தின் இரு படிக்கட்டுகளிலும் ஏறி பயணிகள் ஒருவர் விடாமல் பிக்பாக்கெட் அடிப்பது போல் ஒன்றிய அரசின் செயல்பாடு உள்ளது என்பது தெளிவு.

மகத்தான எத்தனால் சோதனை முயற்சி

கரும்பு மற்றும் உணவு தானியங்கள் போன்ற மூலப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனால் எனும் ஆல்கஹால், வாகனப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படும் பெட்ரோலுக்கு மாற்றான ஒரு உயிரி எரிபொருளாக இந்தியாவில் ஏறக்குறைய 23 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

ஜனவரி 2003-இல் தொடங்கப்பட்ட அரசின் ‘எத்தனால் கலப்புத் திட்டம்’ (Ethanol Blending Programme), ஆரம்பத்தில் ஒன்பது மாநிலங்கள் மற்றும் நான்கு யூனியன் பிரதேசங்களில் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அங்கு பெட்ரோலில் ஐந்து சதவீதம் எத்தனால் கலப்பது என்ற அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது. இருப்பினும், 2013-14 ஆம் ஆண்டு வரை, நடைமுறையில் கலக்கப்பட்ட எத்தனாலின் அளவு மிகக் குறைவாகவே (0.1 சதவீதம் முதல் 1.5 சதவீதம் வரை) இருந்தது. இது அரசு ஆரம்பத்தில் நிர்ணயித்த இலக்கை விட மிகக் குறைவான அளவாகும்.

இப்படி ஆமை வேகத்தில் செயல்பட்டு வந்த எத்தனால் கலப்பை பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு முயல் வேகத்தில் செயல்படுத்தத் தொடங்கியது. அதாவது, ஏப்ரல் 2019-இல், சில விதிவிலக்குகளுடன் நாடு முழுவதும் எத்தனால் கலந்த பெட்ரோல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவே கடந்த மூன்றாண்டுகளில் கலப்பு விகிதங்கள் கணிசமாக அதிகரித்து, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 20 சதவீதத்தை எட்டின.

கடந்த ஓராண்டில், ஒரு குறிப்பிட்ட தூரத்தைக் கடக்க முன்னர் தேவைப்பட்ட எரிபொருளின் அளவை விட தற்போது அதிகமாகத் தேவைப்படுகிறது என மக்கள் தங்கள் எரிபொருள் செலவு கணிசமாக அதிகரித்ததாகப் புகார் அளிக்கத் தொடங்கினர்.

‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ (LocalCircles) என்ற சமூகத் தளம் 44,000-க்கும் மேற்பட்ட நகர்ப்புற பெட்ரோல் வாகன உரிமையாளர்களிடம் நடத்திய ஆய்வில், 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே E20 எரிபொருளைப் பயன்படுத்தும்போது வாகனங்களின் மைலேஜ் (எரிபொருள் சிக்கனம்) 15 முதல் 20 சதவீதம் வரை குறைந்துள்ளதாகப் பெரும்பாலோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்து, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ”தனிப்பட்ட வாகன ஓட்டிகளால் இத்தகைய குறைவைச் சரியாகக் கணிக்க முடியாது” என்று தொடர்ந்து கூறி வருகிறார். இருப்பினும், அதிக அளவு எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருளால் எரிபொருள் செயல்திறன் குறைவதாக ஆய்வில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல், ஒவ்வொரு மாதமும் இந்தக் கருத்து தொடர்ந்து வலுப்பெற்றுக் கொண்டே வருகிறது.

இந்தியா தற்போது தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 88 சதவீதத்தை வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்து வருகிறது. எனவே, எத்தனால் கலப்பு மூலம் அரசின் எரிபொருள் இறக்குமதிச் செலவு குறையும் என்பது அரசின் முக்கிய எதிர்பார்ப்பாக இருந்தது.

2003-இல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 2014 வரை, எத்தனால் கலப்பு மிகக் குறைந்த அளவிலேயே இருந்தது. ஜூன் 2018-இல், அரசு தனது ‘உயிரி எரிபொருள் மீதான தேசியக் கொள்கையை’ (National Policy on Biofuels) அறிவித்ததுடன், 2030-ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20 சதவீத எத்தனாலைக் கலக்கும் இலக்கையும் நிர்ணயித்தது. இலக்கு நிர்ணயித்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிடப்பட்ட நிதி ஆயோக் (Niti Aayog) அறிக்கையில், E20 கலப்பு இலக்கு எட்டப்பட்டால் இந்தியா தனது எண்ணெய் இறக்குமதிச் செலவில் சுமார் ரூ. 30,000 கோடியைச் சேமிக்க முடியும் என்று குறிப்பிட்டிருந்தது.

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்கு ஐந்தாண்டுகளுக்கு முன்னதாகவே, அதாவது ஜூலை 2025-இல் இந்தியா 20 சதவீத எத்தனால் கலப்பு இலக்கை அடைந்துவிட்டது. 2025-2026 நிதியாண்டில், பெட்ரோலிய அமைச்சகத்தின் ‘பெட்ரோலியத் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு’ (PPAC) வெளியிட்ட மாதாந்திர எத்தனால் கலப்பு சதவீதங்கள் பற்றிய தகவலின் அடிப்படையில் பெட்ரோலில் சராசரியாக 19.9 சதவீத எத்தனால் கலக்கப்பட்டுள்ளதாகக் கணக்கிட்டுள்ளனர்.

2000-களின் தொடக்கத்திலிருந்தே எத்தனால் கலப்பை கட்கரி தீவிரமாக ஆதரித்து வருகிறார். எனவே, எத்தனால் கலப்பு முறையைச் செயல்படுத்தும் வகையில் அவரது அமைச்சகம் வாகனத் தரநிலைகளை மாற்றியமைப்பதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்தது. அதேபோல், பூரி தலைமையிலான பெட்ரோலிய அமைச்சகம், ஒன்றிய அமைச்சரவையின் ஒப்புதலுடன் எரிபொருள் கலப்பு விகிதத்தை 20 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுத்தது. இந்த நடவடிக்கையின் மூலம் இவர்கள் இருவரும் எத்தனால் கலப்பு கொள்கையின் தீவிரத்தைக் கட்டி வருவது வெள்ளிடைமலை. பேருந்தில் இரு வாசல்கள் உள்ளதல்லவா.

2021-ஆம் ஆண்டுக்கான அறிக்கையைத் தயாரிப்பதற்காக, ‘நிதி ஆயோக்’ (Niti Aayog) அமைப்பு பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் தொழில் சங்கங்களுடன் கலந்தாலோசித்தது. அதில் E20 எரிபொருளைப் பயன்படுத்தி வாகனங்களை ஓட்டும்போது எரிபொருள் சிக்கனத் திறன் (மைலேஜ்) குறையும் என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். அதாவது, ஒரு குறிப்பிட்ட தூரத்தைக் கடக்க முன்பை விட மக்கள் அதிக எரிபொருளைப் பயன்படுத்த வேண்டியிருப்பது தெளிவாகியுள்ளது.

மேலும், “E20 எரிபொருளைப் பயன்படுத்தும்போது, E0-க்காக வடிவமைக்கப்பட்டு E10-க்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்ட நான்கு சக்கர வாகனங்களில் எரிபொருள் சிக்கனத் திறனில் சுமார் 6-7% இழப்பும், E0-க்காக வடிவமைக்கப்பட்டு E10-க்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்ட இரு சக்கர வாகனங்களில் 3-4% இழப்பும், அதேபோல் E10-க்காக வடிவமைக்கப்பட்டு E20-க்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்ட நான்கு சக்கர வாகனங்களில் 1-2% இழப்பும் ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

E20 எரிபொருளைப் பயன்படுத்தும்போது வாகனங்களின் மைலேஜ் 6-7% வரை குறையும் என்பதை ஒப்புக்கொண்ட அதே வேளையில், இந்த எரிபொருள் பயன்பாடு இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவில் 30,000 கோடி ரூபாயை மிச்சப்படுத்தும் என்று 2021-ஆம் ஆண்டின் நிதி ஆயோக் அறிக்கை தெரிவித்தது.

இந்த எச்சரிக்கை குறித்து மோடி அரசு கிஞ்சித்தும் கவலைப்படாமல் தனது நடவடிக்கையைத் தொடர்ந்தது. குறைந்த மைலேஜால் மக்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவை ஈடுசெய்ய, வாகனங்களுக்கான E20 எரிபொருளின் விலையை அரசு குறைக்காமல் இருப்பதிலிருந்தே அரசின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

வெறும் மூன்றாண்டுகளுக்குள் எத்தனால் கலப்பு விகிதத்தை 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக அரசு விரைவாக உயர்த்தியதைத் தொடர்ந்து மக்களிடமிருந்து புகார்கள் எழுந்தன. அப்போது, மைலேஜ் குறைவு என்பது ஒரு சிறிய விஷயமே என்று கூறி ஒன்றிய அமைச்சர் கட்கரி அதை உடனடியாக நிராகரித்தார்.

மேலும், ஜூலை 2026-இல் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இதழுக்கு அளித்த பேட்டியில், பெட்ரோலை விட எத்தனாலின் கலோரி மதிப்பு (ஆற்றல் அடர்த்தி) குறைவு என்பதால் E20 பெட்ரோலால் ஏற்படும் மைலேஜ் இழப்பு மிகக் குறைவாகவே இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். “தில்லி அல்லது மும்பை போன்ற நகரங்களின் போக்குவரத்து நெரிசலில் பெரிய மாற்றத்தை நீங்கள் காணமாட்டீர்கள். தில்லி-மும்பை விரைவுச் சாலையில் அதிவேகத்தில் வாகனம் ஓட்டும்போது வேண்டுமானால் சிறிது மைலேஜ் இழப்பு ஏற்படலாம்,” என்று கட்கரி கூறினார்.

அதே மாதத்தில், அதாவது ஜூலை 20 அன்று, மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் எழுப்பிய கேள்விக்கு, “விரிவான ஆய்வகச் சோதனைகள் மற்றும் களச் சோதனைகள்” மூலம், E20 எரிபொருளால் வாகனங்களின் செயல்திறனில் குறிப்பிடத்தக்க மாற்றமோ அல்லது வழக்கத்திற்கு மாறான தேய்மானமோ ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் பூரி பதிலளித்துள்ளார்.

இருப்பினும், கூறப்பட்ட அந்த ஆய்வுகள் மற்றும் சோதனைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கைகளை ஒன்றிய பெட்ரோலியத் துறை பொதுவெளியில் வெளியிடவில்லை.

அதேபோல், தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் அனுப்பிய கேள்விகளின் தொகுப்பில் இந்தச் சோதனைகள் தொடர்பான அறிக்கைகளைப் பகிருமாறு அமைச்சகத்தைக் கேட்டுக்கொண்டுள்ளனர்; ஆனால் அதற்குப் பதிலளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

E20 எரிபொருளால் மக்களுக்கு ஏற்படும் செலவு

ஒரு லிட்டர் பெட்ரோலை எரிப்பதன் மூலம் கிடைக்கும் ஆற்றலை விட, ஒரு லிட்டர் எத்தனாலை எரிப்பதன் மூலம் 33 சதவீதம் குறைவான ஆற்றலே கிடைக்கிறது. எனவே, பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனாலைக் கலக்கும்போது, தூய பெட்ரோலை விட 6.7 சதவீதம் குறைவான ஆற்றலே கிடைக்கும் என்று தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் கணக்கிட்டது. மேலும், எத்தனால் கலப்புத் துறையில் பணியாற்றிய வாகனத் துறை நிபுணர் ஒருவரும் இந்தக் கணக்கீட்டு முறையைச் சரியென்று உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன் அடிப்படையில், எத்தனால் கலப்பு விகிதம் E10-லிருந்து E20-க்கு அதிகரிக்கத் தொடங்கிய ஏப்ரல் 2023 முதல், அனைத்து நிதியாண்டுகளிலும் பயன்படுத்தப்பட்ட பெட்ரோலின் அளவு கணக்கிடப்பட்டது.

2025-26 நிதியாண்டில், சுமார் 20 சதவீத எத்தனால் கலந்த 42.6 மில்லியன் மெட்ரிக் டன் (MMT) பெட்ரோல் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டது. எத்தனால் கலக்கப்படாத தூய பெட்ரோல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தால், 39.76 மில்லியன் மெட்ரிக் டன் பெட்ரோல் போதுமானதாக இருந்திருக்கும். இதனால், 2025-26 நிதியாண்டில் எத்தனால் கலப்பின் காரணமாக இந்தியாவின் பெட்ரோல் பயன்பாடு கூடுதலாக 2.83 மில்லியன் மெட்ரிக் டன் அதிகரித்துள்ளது.

இந்தியா பெட்ரோலில் எத்தனால் கலப்பு விகிதத்தை 11.8 சதவீதத்திலிருந்து படிப்படியாக 20 சதவீதமாக உயர்த்தியது. எத்தனால், தூய பெட்ரோலைக் காட்டிலும் சுமார் 33 சதவீதம் குறைவான ஆற்றலை வழங்குவதால், இந்த அதிகரித்த கலப்பு விகிதத்தின் விளைவாக, தூய பெட்ரோல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தால் தேவைப்பட்ட அளவைவிட மக்கள் கூடுதலாக 6.57 மில்லியன் மெட்ரிக் டன் எரிபொருளைப் பயன்படுத்தியுள்ளனர். கடந்த மூன்று நிதியாண்டுகளில் இந்த கூடுதல் எரிபொருளின் மதிப்பு சுமார் ரூ.88,234 கோடியாகும்.

இது தொடர்பாக தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் பெட்ரோலியத் துறை மற்றும் போக்குவரத்துத் துறைக்குக் கேள்விகள் அனுப்பப்பட்டன. ஆனால், அந்த அமைச்சகங்களிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

கடந்த மூன்று ஆண்டுகளாக எத்தனால் கலந்த பெட்ரோலில் வாகனங்களை இயக்க நுகர்வோர் வாங்கிய கூடுதல் எரிபொருளுக்கான செலவு

கூடுதலாகப் பயன்படுத்தப்பட்ட எரிபொருளுக்கான செலவைக் கணக்கிடும்போது, அதிக விலை கொண்ட எத்தனால் கலக்கப்படாத தூய பெட்ரோலை வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல், எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை செய்யப்பட்ட அதே விலையில்—அந்தந்த காலகட்டத்தில் தில்லியில் நிலவிய பெட்ரோல் விலையின் அடிப்படையில்—தூய பெட்ரோலையும் வாங்க முடிந்திருந்தால் எவ்வளவு செலவாகியிருக்கும் என்பதே கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. தூய பெட்ரோலின் தற்போதைய விலையை அடிப்படையாகக் கொண்டால், வாகன ஓட்டிகளுக்கு ஏற்பட்டிருக்கும் கூடுதல் செலவு இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருந்திருக்கும். இருப்பினும், குறைவான மதிப்பீட்டை வழங்கும் வகையிலான கணக்கீட்டு முறையே இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில், எத்தனால் கலக்கப்பட்ட பிறகும் பெட்ரோலின் விலை மாறாமல் அப்படியே உள்ளது. ஆனால், உலகின் மிகப்பெரிய எத்தனால் உற்பத்தியாளரான அமெரிக்காவில், கலப்பு செய்யப்படாத பெட்ரோலுடன் ஒப்பிடுகையில் எத்தனால் கலந்த எரிபொருளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் கணக்கிடும்போது, கூடுதலாகப் பயன்படுத்தப்பட்ட எரிபொருளுக்காக இந்தியர்கள் 2025-26 நிதியாண்டில் மட்டும் ரூ. 37,843 கோடியையும், மூன்று நிதியாண்டுகளில் மொத்தம் ரூ. 88,234 கோடியையும் கூடுதல் செலவாகச் செலுத்த வேண்டியிருந்தது.

வாகன உரிமையாளர் விவரங்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் மக்கள் தொகை கணிப்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, 2023-ல் சாலைகளில் இயங்கும் வாகனங்களின் மொத்த எண்ணிக்கையை CEEW மதிப்பிட்டுள்ளது. அந்த ஆய்வின் அடிப்படையில், பல்வேறு நிதியாண்டுகளில் வாகனங்களின் நிகர எண்ணிக்கையில் ஏற்பட்ட வளர்ச்சியைக் கணித்து, அதை மோட்டார் எரிபொருள் அல்லது கலப்பு பெட்ரோல் நுகர்வு வளர்ச்சியுடன் ஒப்பிட்டுள்ளனர்.

இந்தக் கணிப்பின்படி, சாலைகளில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்த விகிதத்தைவிட மோட்டார் எரிபொருள் நுகர்வு அதிகமாக இருந்தது. இதன் பொருள், ஒவ்வொரு ஆண்டும் கார்கள் அதிகளவு எரிபொருளை நுகர்ந்துள்ளன. எத்தனால் கலப்பால் ஏற்படும் இந்த கூடுதல் எரிபொருள் நுகர்வே ‘மைலேஜ் இழப்பு’ (mileage penalty) குறைபாட்டைச் சுட்டிக்காட்டுகிறது.

எனவே இந்த ஆய்வின் மூலம் தெளிவாகத் தெரிவது என்னவென்றால், கடந்த ஆறு ஆண்டுகளில் பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு சராசரியாக 5 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேவேளையில், வாகனங்களின் எண்ணிக்கையை விட எரிபொருள் நுகர்வு அதிகளவில் உயர்ந்துள்ளது.

இதனுடன் ஒப்பிடுகையில், மக்களுக்கு எத்தனால் கலக்கப்படாத தூய பெட்ரோல் கிடைத்திருந்தால், எரிபொருள் நுகர்வின் அதிகரிப்பு கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால், அதற்குப் பதிலாக, கடந்த மூன்று ஆண்டுகளில் எரிபொருளுக்காக அவர்கள் கூடுதலாக சுமார் ரூ.88,234 கோடி செலவிட நேர்ந்துள்ளது.

அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி மற்றும் நிதின் கட்கரி ‘அற்பமானது’ எனக் கருதும் மைலேஜ் இழப்புக்கான விலையே இது. அரசின் எத்தனால் கலப்பு திட்டத்தின் கீழ் சாலைகளில் பயணிக்க, மக்கள் தங்கள் சொந்தப் பணத்தில் கூடுதலாக ஆயிரக்கணக்கான கோடிகளைச் செலவிட்டுள்ளனர்.

பூரி சுட்டிக்காட்டும் மற்றொரு காரணம், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், குறிப்பாக நகரங்களில், போக்குவரத்து வேகம் குறைந்து மைலேஜ் பாதிக்கப்படுவதாகும். இது ஓரளவு உண்மை என்றாலும், அதனால் ஏற்படும் மைலேஜ் இழப்பு, E20 எரிபொருளால் ஏற்படும் இழப்புடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாகவே இருக்கும். மேலும் இதற்கான துல்லியமான தரவுகளையும் அரசு வெளியிடுவதில்லை.

சமீபத்திய தகவலின்படி, எத்தனால் கலப்பு தொடர்பாக “அவதூறான” அல்லது தவறான தகவல்களைப் பரப்பும் நபர்கள், அமைப்புகள் அல்லது சமூக ஊடகப் பக்கங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, கூகுள் (Google), மெட்டா (Meta) உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்கள் மீது வழக்குத் தொடரும் உரிமையை ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பெற்றுள்ளார். குறிப்பாக, E20 எனப்படும் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டம் குறித்து தவறான தகவல்கள் அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்ட (deepfake) உள்ளடக்கங்கள் பரப்பப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எரிபொருள் இறக்குமதி குறைப்பு, விவசாயிகள் நலன் என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் E20 திட்டம், உண்மையிலேயே மக்கள் நலத் திட்டம் என்றால், மைலேஜ் குறைந்துள்ளது, முன்பை விட அதிகளவில் பெட்ரோலைப் பயன்படுத்துகிறோம் என்று கேள்வி கேட்டும் மக்களைப் பார்த்து ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் பூரி, ஏன் “அற்பமானவை” என்றும் “அர்த்தமற்றவை” (bullshit) என்றும் கூறிப் பதட்டம் அடைகிறார். சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஏன் சமூக ஊடகப் பக்கங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, கூகுள் (Google), மெட்டா (Meta) உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்கள் மீது வழக்குத் தொடரும் உரிமையைப் பெற்றுள்ளார். மக்கள் பாக்கெட்டில் பிளேடு போடும் திருடர்களுக்கு பயம் இருக்கும் தானே!

  • மகேஷ்

செய்தி ஆதாரம்:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன