செக்காணூரணி: கொட்டடிக் கொலையை
மூடி மறைக்கும் தவெக அரசு!

நவம்பர் 28, 2026
செக்காணூரணி போலீஸ் ஸ்டேசனில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்தது தற்கொலை அல்ல; போலீசாரின் சித்திரவதையால் நிகழ்ந்த கொட்டடிக் கொலை என்பது நீதிமன்ற விசாரணையில் அம்பலமாகி வருகிறது. உடலில் 20 காயங்கள், முறைகேடாகப் பதிவு செய்யப்பட்ட FIR, மறைக்கப்படும் சிசிடிவி காட்சிகள் என போலீசாரின் குற்றங்களை நிரூபிக்கும் ஆதாரங்கள் அடுத்தடுத்து வெளிவருகின்றன. ஆனாலும், குற்றவாளிகளான போலீசார் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அவர்களைக் காப்பாற்றுவதிலேயே தவெக அரசு முனைப்புக் காட்டுகிறது.

மதுரை மாவட்டம் செக்காணூரணி போலீஸ் ஸ்டேசனில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த சம்பவம் தற்கொலை அல்ல; அது போலீசாரின் கொடூரமான சித்திரவதையால் நிகழ்ந்த கொட்டடிக் கொலை என்பது நீதிமன்ற விசாரணையில் அம்பலமாகி வருகிறது. உடற்கூராய்வு அறிக்கையில் பாலகிருஷ்ணனின் உடலில் சுமார் 20 காயங்கள் இருந்தது உறுதியாகியுள்ளது. விசாரணைக்காக போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒருவர், உடல் முழுவதும் இத்தனை காயங்களுடன் உயிரிழந்திருக்கிறார் என்றால், அது இயற்கையான மரணமோ தற்கொலையோ அல்ல. போலீஸ் காவலில் நிகழ்த்தப்பட்ட கொடூரமான தாக்குதலின் விளைவே அவரது மரணம். இதுகுறித்த ஆதாரங்கள் வெளிவந்த பிறகும், சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அவர்களைக் காப்பாற்றுவதில் தமிழ்நாடு அரசு காட்டும் அக்கறை, இந்தக் கொட்டடிக் கொலையை மூடி மறைக்கும் முயற்சி நடைபெறுவதையே காட்டுகிறது.

இந்த வழக்கின் விசாரணையின்போது மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ள கருத்துகள், போலீசாரின் அத்துமீறல்களை மட்டுமின்றி, அவற்றை மூடி மறைப்பதற்கு போலீஸ் துறையும் அரசும் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளையும் அம்பலப்படுத்தியுள்ளன. சம்பவம் நடந்தபோது செக்காணூரணி போலீஸ் ஸ்டேசனில் பணியில் இருந்த ஆய்வாளர் முதல் கான்ஸ்டபிள் வரை அனைவரும் கைது செய்யப்பட வேண்டியவர்கள் என்று நீதிபதிகள் காட்டமாகத் தெரிவித்துள்ளனர். உடற்கூராய்வு அறிக்கையிலேயே உடலில் பல காயங்கள் இருப்பது உறுதியாகியுள்ள நிலையில், இதுவரை சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தவறு செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால், வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரி மீதே நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.

தேனி மாவட்டத்திலிருந்து ஏலக்காய் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்வதற்காகவே பாலகிருஷ்ணன் செக்காணூரணி போலீஸ் ஸ்டேசனுக்குச் சென்றார். ஆனால், நவம்பர் 14ஆம் தேதி அவர் போலீஸ் ஸ்டேசன் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் அறிவித்தனர். போலீஸ் ஸ்டேசனுக்குள் சென்ற ஒருவர் அங்கேயே உயிரிழந்துவிட்டார் என்ற செய்தியைப் பொதுமக்கள் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் போலீசாரின் எதிர்பார்ப்பு. ஆனால், அவரது உடலில் காணப்பட்ட காயங்களும், பின்னர் நீதிமன்றத்தின் மூலம் வெளிவந்த ஆவணங்களும் போலீசாரின் இந்தக் கதையைத் தவிடுபொடியாக்கியுள்ளன.

பாலகிருஷ்ணனின் மனைவி சுதா தாக்கல் செய்த மனுவில் இடம்பெற்றுள்ள விவரங்கள், போலீசார் எவ்வாறு சட்டவிரோதமாக அவரைக் காவலில் வைத்து, விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்துள்ளனர் என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. சம்பவம் நடந்த உடனேயே முதலில் விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பாலகிருஷ்ணனை, போலீசார் மீண்டும் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் வாலாந்தூர், உசிலம்பட்டி, செக்காணூரணி ஆகிய போலீஸ் ஸ்டேசன்களுக்கு மாற்றி மாற்றி அழைத்துச் சென்று, நள்ளிரவைக் கடந்தும் காவலில் வைத்துள்ளனர். ஆனால், அவரை விசாரணைக்கு அழைத்ததற்கான முறையான சம்மன் எதுவும் வழங்கப்படவில்லை. அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. போலீஸ் ஸ்டேசனின் பொது நாட்குறிப்பில்கூட அவரது வருகை பதிவு செய்யப்படவில்லை.

அதாவது, சட்டப்படி ஒருவரைக் கைது செய்யாமலும், விசாரணைக்கு அழைத்ததற்கான முறையான பதிவுகளை மேற்கொள்ளாமலும், அவரைக் காவலில் வைத்து விசாரிக்கும் அதிகாரத்தைப் போலீசார் தங்களுக்குத் தாங்களே எடுத்துக்கொண்டுள்ளனர்.

பாலகிருஷ்ணனின் மரணத்திற்குப் பிறகு அவரது மனைவி சுதாவைச் சந்தித்த போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் (DSP) ஒருவர், ரூ.3 லட்சம் பணமும் அரசு வேலையும் தருவதாகக் கூறி வழக்கைச் சமரசம் செய்ய முயன்றுள்ளார். இதனை சுதா நீதிமன்றத்தில் குற்றச்சாட்டாக முன்வைத்துள்ளார். ஒருவர் போலீஸ் காவலில் உயிரிழந்திருக்கிறார். அவரது உடலில் சுமார் 20 காயங்கள் காணப்படுகின்றன. இத்தகைய மரணத்திற்கு நீதி கேட்கும் குடும்பத்தினரிடம் பணத்தையும் அரசு வேலையையும் கொடுத்து வாயடைக்கச் செய்யும் முயற்சி நடக்கிறது. இந்த நடவடிக்கையே நடந்தது கொட்டடிக் கொலை என்பதையும், அதனை அரசும் அதிகாரிகளும் மூடி மறைக்க முயற்சிக்கிறார்கள் என்பதையும் தெளிவாகக் காட்டுகிறது.

இந்தச் சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளைப் பாதுகாப்பதும், அவற்றை வெளிப்படுத்துவதும் முக்கியமான ஆதாரங்களாக இருக்கின்றன. செக்காணூரணி, வாலாந்தூர், உசிலம்பட்டி டவுன், உசிலம்பட்டி தாலுகா ஆகிய நான்கு போலீஸ் ஸ்டேசன்களின் சிசிடிவி காட்சிகளையும் வழங்க வேண்டும் என்று சுதா கோரியுள்ளார். ஆனால், வழக்கின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை சிசிடிவி காட்சிகளின் நகலை மனுதாரருக்கு வழங்க முடியாது என்று அரசுத் தரப்பு வாதிட்டுள்ளது.

இதில்தான் போலீஸ் துறையின் இரட்டை வேடம் அம்பலமாகிறது. வழக்கின் விசாரணை முடியவில்லை என்பதால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சிசிடிவி காட்சிகளைக் கொடுக்க முடியாது என்கிறது அரசு. ஆனால், பாலகிருஷ்ணன் போலீஸ் ஸ்டேசனில் இயல்பாக அமர்ந்திருப்பது, கழிவறையை நோக்கி நடந்து செல்வது போன்ற இரண்டு குறிப்பிட்ட காட்சிகள் மட்டும் ஊடகங்களில் வெளியாகின்றன. இந்தக் காட்சிகளை வெளியிட்டது யார்? எதற்காக வெளியிட்டார்கள்? இந்தக் கேள்விகளுக்கான பதில் நீதிமன்ற விசாரணையிலேயே அம்பலமாகியுள்ளது.

சினிமா படத்தின் டீசரைப் போலத் தங்களுக்குச் சாதகமான இரண்டு காட்சிகளை மட்டும் தேர்ந்தெடுத்து ஊடகங்களில் கசியவிட்ட போலீஸ் உயரதிகாரியின் நோக்கம், பாலகிருஷ்ணன் மீது எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை என்ற பிம்பத்தை உருவாக்குவதுதான். விசாரணைக்கு அவசியமான முழுமையான சிசிடிவி பதிவுகளை மறைத்துவிட்டு, தங்களுக்குச் சாதகமான சில காட்சிகளை மட்டும் பொதுவெளியில் பரப்புவது, ஆதாரங்களைத் தங்களது விருப்பத்திற்கேற்ப கையாளும் முயற்சியாகும். போலீஸ் துறையே இந்த வழக்கில் சாட்சியங்களையும் ஆதாரங்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, விசாரணையின் திசையைத் தீர்மானிக்க முயற்சிக்கிறது.

மேலும், நீதிபதி வழக்கு ஆவணங்களையும் சிசிடிவி பதிவுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது, சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ள நேரத்திற்கும் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டதாகக் காட்டப்படும் டிஜிட்டல் நேரத்திற்கும் இடையே பெரும் முரண்பாடு இருப்பது தெரியவந்துள்ளது. லாரி தீப்பிடித்த சம்பவம் தொடர்பாக பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட FIR கூட அவர் உயிரிழந்த பிறகுதான் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு போலீஸ் தரப்பு அளித்துள்ள விளக்கம் இன்னும் அதிர்ச்சியளிக்கிறது. உதவி ஆய்வாளர் கணினியில் FIR பதிவை ‘ஃப்ரீஸ்’ செய்ய மறந்துவிட்டார் என்பதுதான் அந்த விளக்கம்!

ஒருவர் புகார் அளித்து, அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டிய நிலையில், அவர் போலீஸ் ஸ்டேசனில் உயிரிழந்த பிறகுதான் அந்தப் பதிவு முழுமையடைகிறது. அதுவரை அந்தப் புகார் என்ன ஆனது? ஏன் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை? யாருடைய உத்தரவின் பேரில் அது தாமதப்படுத்தப்பட்டது? போலீசார் கூறுவதுபோல இது வெறுமனே ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல. பாலகிருஷ்ணனைச் சட்டவிரோதமாகக் காவலில் வைத்திருந்ததையும், அந்தக் காவலின்போது அவரைச் சித்திரவதை செய்ததையும் மறைப்பதற்காக போலீசார் ஆவணங்களையே தங்களுக்குச் சாதகமாக மாற்றியமைக்கிறார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது.

இதோடு மட்டுமல்லாமல், கழிவறையில் பாலகிருஷ்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறும் போலீசார், விதிமுறைகளின்படி அவரது உடலைக் கீழே இறக்குவதற்கு முன்பு எடுக்கப்பட வேண்டிய புகைப்படங்களையோ, வீடியோ பதிவுகளையோ எடுக்கவில்லை என்று ஒப்புக்கொண்டுள்ளனர். ஒருவர் போலீஸ் ஸ்டேசனுக்குள் உயிரிழந்திருக்கிறார். அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறும் போலீசாரிடம், அந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்துவதற்கான அடிப்படை ஆதாரங்கள்கூட இல்லை.

தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற நூறு நாட்களுக்குள் இதுவரை 8 கொட்டடிக் கொலைகள் நடந்துள்ளன. இவற்றில் பல வழக்குகளில் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் வகையிலேயே அரசு நடந்துகொண்டுள்ளது. செக்காணூரணி வழக்கிலும்கூட, பாலகிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் கூறும் கட்டுக்கதையில் ஆயிரம் ஓட்டைகள் இருந்தாலும், அவர்களைப் பாதுகாப்பதற்கான அடுத்தடுத்த நடவடிக்கைகளை அரசும் அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர். எனவே, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையே இல்லாத நிலை உருவாகியுள்ளது.

காவல் மரணங்கள் நிகழும்போதெல்லாம் விசாரணை நடத்தப்படும், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று அரசு அறிவிப்பது வழக்கமான நாடகமாகிவிட்டது. ஆனால், விசாரணை நடத்த வேண்டிய அமைப்பே குற்றச்சாட்டுக்கு உள்ளான போலீஸ் அமைப்பாக இருக்கும்போது, உண்மைகள் எவ்வாறு வெளிவரும்? சாட்சியங்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே அவற்றைக் கையாளும்போது, குற்றவாளிகள் எவ்வாறு தண்டிக்கப்படுவார்கள்?

இத்தகைய கொட்டடிக் கொலைகளைத் தனிப்பட்ட சில போலீசாரின் அத்துமீறல் என்று மட்டும் சுருக்கிவிட முடியாது. இந்திய ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறைக் கருவியாகச் செயல்படும் போலீஸ் அமைப்பின் உண்மையான வர்க்கத் தன்மையை இச்சம்பவம் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. உழைக்கும் மக்கள் மீது அதிகாரத்தைச் செலுத்துவதற்கும், அவர்களை அச்சுறுத்துவதற்கும், அவர்களின் உரிமைகளை நசுக்குவதற்கும் போலீஸ் அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. சட்டம், நீதி, மனித உரிமைகள் என்றெல்லாம் பேசும் அரசு, நடைமுறையில் இந்த அதிகார வர்க்கத்தின் அத்துமீறல்களுக்குப் பாதுகாப்பு அரணாகவே செயல்படுகிறது. போலீசாரின் கைகளில் சிக்கிக்கொண்ட ஒரு சாதாரண லாரி ஓட்டுநர் குற்றமிழைத்தாரோ இல்லையோ, அவரது உயிருக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை என்பதுதான் செக்காணூரணி சம்பவம் உணர்த்தும் கசப்பான உண்மை.

  • சந்திரன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன