எத்தனால் முதலாளிகளுக்கு விலை உத்தரவாதம்;
மக்களுக்கு சர்க்கரை விலை உயர்வு

பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பை முன்கூட்டியே சாதித்ததாக மோடி அரசு பெருமை கொள்கிறது. ஆனால் அந்த இலக்கை எட்டுவதற்காக கரும்பு, அரிசி உள்ளிட்ட உணவு வளங்கள், எரிபொருள் தயாரிப்புக்குத் திருப்பப்படுகின்றன. எத்தனால் ஆலைகளுக்கு விலை உத்தரவாதமும் சலுகைகளும் வழங்கும் அரசு, உணவுப் பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்படும் மக்களுக்கு உத்தரவாதம் அளிக்க மறுக்கிறது.

“2030-இல் எட்ட வேண்டிய இலக்கை 2025-லேயே எட்டிவிட்டோம்!” – இந்தியாவின் எத்தனால் கலப்பு திட்டத்தைப் பற்றி ஒன்றிய அரசு பெருமையுடன் கூறிய வாசகம் இது. பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலக்கும் E20 இலக்கு, முதலில் 2030-ஆம் ஆண்டு என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பின்னர் 2022-இல் அந்த இலக்கு 2025-26 என மாற்றப்பட்டது. நிர்ணயித்தபடி 2025-ஆம் ஆண்டு பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பு இலக்கு எட்டப்பட்டு விட்டதாக மோடி அரசாங்கம் அறிவித்தது.

இலக்கை முன்கூட்டியே அடைய வேண்டிய அவசியம் மோடி அரசாங்கத்திற்கு எங்கிருந்து வந்தது என்பதையும் நயம்பட விளக்குகிறார் மோடி. அதாவது எரிபொருள் இறக்குமதியைக் குறைப்பது, அந்நியச் செலாவணியைச் சேமிப்பது, விவசாயிகளுக்குப் புதிய சந்தையை உருவாக்குவது, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது போன்ற காரணங்களுக்காக எத்தனால் கொள்கை முன்னெடுக்கப்பட்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகக் கூறுகிறார்.

இவை அனைத்தும் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால் ஏழை-எளிய நடுத்தர மக்கள் கேட்கும் கேள்வி வேறாக இருக்கிறது. அதாவது “பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் நாட்டுக்கு என்ன இலாபம் கிடைத்தது என்பது ஒருபுறம் இருக்கட்டும். நாட்டு மக்களாகிய எங்களுக்கு நாங்கள் வாங்கும் அரிசி, சர்க்கரை போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏன் உயர வேண்டும்?” என்பதுதான் விவாதிக்கப்பட வேண்டிய அந்தக் கேள்வி.

எத்தனால் கலப்பு 2013-14 காலகட்டத்தில் 1.5 சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்த நிலையில், 2025-26-இல் 20 சதவிகிதம் அளவை அடைந்துள்ளது. எத்தனால் உற்பத்தித் திறனும் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

இதற்காக மோடி அரசாங்கம் பல்வேறு கொள்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதாவது கரும்பு, சர்க்கரைச்சாறு, B-Heavy Molasses, C-Heavy Molasses மட்டுமல்லாமல், மக்காச்சோளம், உடைந்த அரிசி, FCI-யின் உபரி அரிசி போன்ற தானியங்களிலிருந்தும் எத்தனால் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.

அதேபோல் எத்தனால் உற்பத்தியாளர்களுக்கு விலை உத்தரவாதம், வட்டி மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டன. இதன் விளைவாக எத்தனால் உற்பத்தி என்பது ஒரு மிகப்பெரிய தொழில்துறையாக வளர்ந்துள்ளது.

ஒருபுறம் கார்ப்பரேட் மற்றும் தரகு முதலாளிகளின் ஆலைகள் இலாபம் ஈட்டுவதற்கு வசதியாகச் சலுகைகளையும், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டாலும் அதனைத் தவிர்க்க உத்தரவாதத்தையும் மோடி அரசாங்கம் வழங்குகிறது. மறுபுறம் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த மக்கள் அரிசி, சர்க்கரை போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வினால் கஷ்டப்படும் பொழுது, நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நாடகம் ஆடுகிறது.

முதலாளிகள் தொழில் தொடங்குவதற்கு முன்கூட்டியே உத்தரவாதம் அளிக்கும் அரசாங்கம், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வினால் மக்கள் அவதிப்படுவதைத் தவிர்க்க முன்கூட்டியே எந்த உத்தரவாதத்தையும் அளிப்பதில்லையே ஏன்? இது குறித்து மக்கள் எழுப்பும் எந்தக் கேள்விகளுக்கும் நேரடியாகப் பதிலளிப்பதில்லையே ஏன்?

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக அரிசி, சர்க்கரை போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். இதற்குக் கரும்பு ஆலைகள் எத்தனால் தயாரிப்பதற்கு முன்னுரிமை அளித்து வருவதும், அரிசியில் எத்தனால் தயாரிப்பதும்தான் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்குக் காரணம் என எதிர்க்கட்சிகளும், துறைசார் வல்லுநர்களும் மோடி அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மோடி அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டை மறுத்து, சர்க்கரையிலிருந்து மட்டுமே எத்தனால் தயாரிக்கப்படுவதில்லை. மேலும் 2024-25-இல் மக்காச்சோளம் மட்டும் சுமார் 45 சதவிகிதம் பங்களித்துள்ளதாகவும், கரும்புச் சாறு சுமார் 19.7 சதவிகிதம் என்றும், B-Heavy Molasses சுமார் 14.5 சதவிகிதம் என்றும் கூறியுள்ளன. எனவே சர்க்கரையில் இருந்து எத்தனால் தயாரிப்பது குறைவுதான் என்கிறது.

மோடி அரசாங்கத்தின் கூற்றுப்படி கரும்புச் சாறு சுமார் 19.7 சதவிகிதம் என்றும், B-Heavy Molasses சுமார் 14.5 சதவிகிதம் என்றும் கூறியுள்ளன. இவை இரண்டின் அளவு 34.2 சதவிகிதம், இதனை மக்காச்சோளத்துடன் ஒப்பிடும் பொழுது (45 – 34.2) 10.8 சதவிகிதம் குறைவுதான் என்றபோதிலும் இதற்கான சுமையை மக்கள் தலையில் ஏற்றுவது ஏன்?

அதேபோல் 2025-இல் ஒன்றிய அரசு FCI-யிடம் இருந்த அரிசியை எத்தனால் தயாரிக்கும் ஆலைகளுக்கு விற்பனை செய்வதற்கான முடிவை எடுத்தது. அதனடிப்படையில் எத்தனால் ஆலைகளுக்கு குவிண்டாலுக்கு ₹2,250 என்ற விலையில் 24 இலட்சம் மெட்ரிக் டன் FCI அரிசியை வழங்கியுள்ளது. இந்த அளவு படிப்படியாக அதிகரித்து சுமார் 52 இலட்சம் மெட்ரிக் டன் அரிசியை எத்தனால் உற்பத்திக்காக வழங்கியுள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால், FCI அரிசியை அதன் சராசரி கொள்முதல் செலவை விடக் குறைந்த விலையில் எத்தனால் ஆலைகளுக்கு விற்றதாக நாடாளுமன்ற உறுப்பினரின் கேள்விக்கு மோடி அரசாங்கம் பதிலளித்துள்ளது. உணவுத் தானியத்தை எரிபொருள் தயாரிப்புக்கு மலிவாக வழங்குவது யாருக்கு இலாபம்?

உணவா? எரிபொருளா? என்ற கேள்வி எழும் பொழுது எதற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும்? வேறு வார்த்தைகளில் சொன்னால் முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டியது கோடான கோடி ஏழை-எளிய நடுத்தர மக்களா? விரல்விட்டு எண்ணக்கூடிய ஆலை முதலாளிகளா?

சமூக ஆர்வலரும் ‘டீம் பாரத்’ (Team Bharat) அமைப்பின் நிறுவனருமான தெஹ்சீன் பூனவல்லா, எத்தனால் உற்பத்திக்குக் கரும்பு திருப்பி விடப்பட்டதே இந்த நெருக்கடிக்குக் காரணம் என்று குற்றம் சாட்டியதுடன், இந்தக் கொள்கையால் பயனடைந்தவர்கள் ஆலை முதலாளிகள் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்தியா பெருமளவில் சர்க்கரையை ஏற்றுமதி செய்து வந்தது. ஆனால், கரும்பு எத்தனால் உற்பத்திக்குத் திருப்பி விடப்பட்டதால், ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் தான் சர்க்கரை விலை உயர்ந்தது என்றும், இப்போது சர்க்கரை மீதான இறக்குமதி வரியை நீக்கி 10 இலட்சம் மெட்ரிக் டன் சர்க்கரையை இறக்குமதி செய்ய ஆலைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது என்று பூனவாலா ‘எக்ஸ்’ (X) தளத்தில் வெளியிட்ட காணொலிச் செய்தியில் கூறியுள்ளார்.

அதாவது இந்தியா சர்க்கரை உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருப்பதுடன், உபரி சர்க்கரையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்த நிலையில், ஒன்றிய அரசின் 20 சதவிகிதம் எத்தனால் கொள்கையின் விளைவாகச் சர்க்கரையின் விலை அதிகரித்து ஏழை-எளிய நடுத்தர மக்களைப் பாதித்திருப்பதுடன், கடந்த பத்தாண்டுகளில் முதன்முறையாக வரிச்சலுகையுடன் இறக்குமதி செய்ய வேண்டிய அவலநிலைக்கு மோடி அரசாங்கம் தள்ளியுள்ளது என்று பூனவாலா கூறியுள்ளார்.

அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வுக்கான மேற்கூறிய காரணங்களைப் புறந்தள்ளிவிட்டு, ஹைதர் கால பழைய தந்திரங்களையே திரும்பத் திரும்ப மோடி அரசாங்கம் முன்வைக்கிறது.

அதாவது வானிலை பாதிப்பு, கரும்பு உற்பத்தி குறைவு, பண்டிகைக் கால தேவை அதிகரிப்பு, பதுக்கல், ஊக வணிகம் போன்றவையே சர்க்கரை விலை உயர்வுக்குக் காரணமாகக் கூறி வருகிறது. இது மக்களை ஏமாற்றுவதற்கு காலகாலமாகக் கூறப்பட்டு வரும் பழைய தந்திரமேயன்றி வேறொன்றுமில்லை.

மேலும் மோடியின் இந்தக் கூற்றை சர்க்கரைத் தொழில்துறை அமைப்பான (Indian Sugar Mills Association) ISMA-வின் தலைவர் நீரஜ் ஷிர்கோகர் வழிமொழிந்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்கள் வழிமொழிவதில் வியப்பொன்றுமில்லை.

ஒருவேளை இவர்கள் கூறுவதுபோல் சந்தையில் உண்மையான பற்றாக்குறை இல்லாமல், சிலர் பதுக்கி வைத்துச் செயற்கையாக உருவாக்கி இருந்தால், ஒரு நல்ல மக்கள் நல அரசு என்ன செய்திருக்க வேண்டும்?

பதுக்கல்காரர்களைப் பிடித்துத் தண்டித்திருக்க வேண்டும். மாறாக என்ன செய்தது? சர்க்கரை மொத்தமாகப் பயன்படுத்தும் நிறுவனங்களின் கையிருப்புக்குக் கட்டுப்பாடு விதித்தது. வியாபாரிகளின் கையிருப்பும் கண்காணிக்கப்பட்டது. சர்க்கரை ஆலைகளிடம் விற்பனை விவரங்கள் கேட்கப்பட்டது.

அதாவது இந்திய மக்களின் மாதச் செலவு உயர்ந்த பிறகு, “இனி விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கிறோம்” என்று சொல்வது தும்பை விட்டு வலைப் பிடிப்பது போல் ஆகாதா?

இந்தியாவின் வளர்ச்சியை முதலாளிகளின் மூலதனத்தை மட்டுமே வைத்துக் கொண்டு அளக்க முடியாது. அது ஒவ்வொரு இந்தியக் குடும்பங்களின் சமையலறையிலும் பிரதிபலிக்க வேண்டும். ஒரு இந்தியக் குடும்பத்தின் உணவுச் செலவு அதிகரித்தால், அந்தக் குடும்பத்திற்கு அந்நியச் செலாவணி கையிருப்பு பற்றிய புள்ளிவிவரம் ஆறுதல் தராது. மாறாக அரிசி விலை குறையுமா? சர்க்கரை விலை குறையுமா? எண்ணெய் விலை குறையுமா? குழந்தைகளின் உணவுச் செலவு குறையுமா? என்பதில் இருந்துதான் ஆறுதல் அடைய முடியும். அதுதான் பொருளாதாரத்தின் அடிப்படை என்பதை மோடி அரசாங்கத்திற்குப் புரியவைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

  • மகேஷ்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன