ஊதிய உயர்வு கேட்டுப் போராடினால் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்கும் மோடி அரசு

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற குற்றச்சாட்டை முஸ்லீம்களின் மீது மட்டும் மோடி அரசு ஏவுவதில்லை. தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டுப் போராடினாலும் அவர்கள் மீதும் மோடி அரசு அதனை ஏவ தயாராக இருக்கிறது என்பதை நொய்டா தொழிலாளர் போராட்டம் நமக்கு உணர்த்தியுள்ளது.

உத்திரப்பிரதேச பா.ஜ.க அரசு, நொய்டாவில் நடந்த தொழிலாளர்கள் போராட்டத்தின் போது வன்முறையை தூண்டியதாக, எட்டு சமூக செயற்பாட்டாளர்களை நான்கு மாதங்களுக்கு மேலாக நீதிமன்றக் காவலில் அடைத்து வைத்திருக்கிறது.

இதில் மூத்த பத்திரிகையாளர் சத்யம் வர்மா, தில்லி பல்கலைக்கழக மாணவி அக்ரிதி சௌத்ரி ஆகியோர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை (NSA) யோகி அரசின் போலீஸ் ஏவியிருக்கிறது. இதில் அக்ரிதி செளத்ரி மீதான வழக்கை சமீபத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் இரத்து செய்திருக்கிறது.

அக்ரிதி செளத்ரி மீது இந்த சட்டத்தை ஏவிய கெளதம் புத்தா நகர் மாவட்ட ஆட்சியருக்கு ஐந்து இலட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அலகாபாத் நீதிமன்றத்தின் இந்த அபராதத்தை எதிர்த்து யோகி அரசு, தற்போது உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறது.

இதுமட்டுமில்லாமல் நொய்டா போராட்டத்தின் போது கலவரத்தை தூண்டினர் என்று ஆதித்யா ஆனந்த், ரூபேஷ் ராய், ஹிமான்ஷு தாக்கூர், சிருஷ்டி குப்தா, மனிஷா சௌஹான் மற்றும் தில்லி பல்கலைக்கழகத்தின் மற்றொரு மாணவரான யோகேஷ் மீனா ஆகிய ஆறு சமூக செயற்பாட்டாளர்கள் மீதும் பிணையில் வரமுடியாதவாறு பத்துக்கும் மேற்பட்ட முதல் வழக்குகளை யோகி அரசு பதிவு செய்திருக்கிறது

தொழிலாளர் இயக்கத்தில் பங்கெடுத்தவர்கள் மீது தேசியப் பாதுகாப்பு சட்டத்தை ஏவுவதை காலனி ஆட்சிக் காலத்தில் நாம் கண்டிருக்கிறோம். ஆனால் இன்றோ அதை மோடியின் ஆட்சியில் காண்கிறோம்.

சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு உத்திரப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் உள்ள பல தொழிற்சாலைகளில் எட்டு மணி நேர வேலை, குறைந்த பட்ச ஊதிய உயர்வு, கூடுதல் நேரப் பணிக்கு இரட்டிப்பு ஊதியம், ஊதியத்துடன் கூடிய விடுப்பு, மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு வசதிகள், ஒரு குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்குதல், பணிச்சூழல் பாதுகாப்பு, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் போன்ற அடிப்படை உரிமைகளுக்காக அங்குள்ள ஒப்பந்த தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக போராடியது அனைவருக்கும் நினைவிருக்கலாம். இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்த பிறகு 1200 தொழிலாளர்கள் மீது பல வழக்குகள் பதியப்பட்டன.

தொழிலாளர்கள் போராட்டம் தொடங்கிய உடனே, உ.பி. முதல்வர் யோகி, மாநிலத்தின் வளர்ச்சியையும் செழிப்பையும் விரும்பாத சக்திகளால், நக்சல் அச்சுறுத்தலை மீண்டும் உயிர்ப்பிக்க ஒரு பெரிய சதித்திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது என்றார். உத்தரப் பிரதேச மாநில தொழிற்துறை அமைச்சரோ, போராட்டங்களுக்குப் பின்னால் உள்ள பாகிஸ்தான் தொடர்பு குறித்து விசாரித்து வருவதாக கூறினார்.

தொழிலாளர் போராட்டங்கள் பல இடங்களில் அமைதியான முறையிலேயே பரவத் தொடங்கின. ஆனாலும் உ.பி அரசின் போலீஸ், அதிரடிப் படை, சி.ஆர்பி.எப் உள்ளிட்ட துணை இராணுவப்படை போன்ற அரசுப் படைகள் போராட்டம் நடந்தப் பகுதிகளில் கவச வாகனங்களில் ரோந்து சென்றனர். உபியின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீஸார் வரவழைக்கப்பட்டனர். தொழிலாளர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. தடியடி நடத்தப்பட்டன.

தொழிலாளர்கள் மட்டுமன்றி தள்ளு வண்டி கடைக்காரர்கள், தேநீர் விற்பவர்கள், காய்கறி வாங்க சந்தைக்கு சென்ற பெண்கள் என சாலையில் நடந்து சென்றவர்கள் கூட போலீசிடமிருந்து தப்ப முடியாமல் சிறைக்கு அனுப்பப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் வாரக்கணக்கில் போலீஸ் நிலையங்களின் வாயிலில் காத்துக் கிடந்தனர்.

ஆனால் நீதிமன்றத்தில் நடந்த விசாரணைக்குப் பிறகு யோகி அரசின் போலீசாரால் கைது செய்யப்பட்ட நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் வன்முறை தூண்டினார்கள் என்பதற்கு எந்த சாட்சியமுல்லை என விடுவிக்கப்பட்டனர். ஆனாலும் மேற்கூறிய எட்டு சமூக செயற்பாட்டாளர்களை பிணையில் வர முடியாதவாறு சிறை வைத்திருக்கிறது யோகி அரசு.

பிரிட்டிஷ் காலனி ஆட்சிக் காலத்தின் போது இந்திய பாதுகாப்புச் சட்டம் மற்றும் ரெளலட் சட்டம் போன்ற கொடுமையான சட்டங்களைப் பயன்படுத்தி மக்கள் மீது கடும் ஒடுக்குமுறையை ஏவியது ஆங்கிலேயெ ஏகாதிபத்தியம். அந்த சட்டங்களின் நீட்சியாகவே தேசியப் பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் படி எவ்வித ஆதாரமும் இல்லாமல்,  விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் ஒருவரை 12 மாதங்கள் வரை சிறையில் அடைக்க முடியும்.

பிரிட்டிஷாரின் ரெளலட் சட்டத்தை எதிர்த்து ஜாலியான் வாலாபாக்கில் நம் முன்னோர்கள் தம் இன்னுயிரை ஈந்தனர். ஆனால் அதே சட்டத்தின் நீட்சியாக இருக்கின்ற தேசியப் பாதுகாப்பு சட்டத்தை நாம் ஏதோ இரண்டு சமூக செயற்பாட்டாளர்களின் மீதான வழக்கு என கடந்து செல்ல முடியாது.

உத்தரப்பிரதேசம், ஹரியானா மாநிலங்களில் உள்ள தொழிற்பேட்டைகளில் வேலை செய்யும்  தொழிலாளர்கள் எவ்விதமான தொழிலாளர் உரிமைகள் இன்றி அற்ப கூலிக்கு பத்து மணிநேரத்திற்கும் மேல் வேலை செய்ய  நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு கூடுதல் நேர ஊதியம், இஎஸ்ஐ-பிஎஃப் மற்றும் பிற சமூகப் பாதுகாப்பு போன்றவை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கின்றன. தங்களது குழந்தைகளுக்கு மருத்துவ வசதி, கல்வி, இரண்டு வேளை உணவு அளிக்க முடியாமல் வாழ வழியின்றி தவிக்கின்றனர். இந்த சுரண்டலை எதிர்த்தே நொய்டாவில் ஒப்பந்த தொழிலாளர்களின் தன்னெழுச்சியான போராட்டம் வெடித்தது.

நொய்டாவில் மட்டுமல்ல நாடு முழுவதும் இதே போன்று கோடிக்கணக்கான தொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள்.

இந்தியாவில் முதலாளித்துவ சுரண்டலை எதிர்த்து தொழிலாளர்கள் தங்களது உரிமைகளுக்காக குரல் எழுப்புவதும், சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் தொழிலார் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதும் குற்றம் என்றும் அது தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் மோடி அரசு கூறுகிறது.

இந்திய நீதிமன்றங்கள் ஏறக்குறைய 79% தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கை இரத்து செய்திருக்கிறது. நீதிமன்ற தீர்ப்பு இவ்வாறிருக்க நொய்டா போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்பதற்காகவே இந்த எட்டு சமூக செயற்பாட்டளர்களையும், பல தொழிலாளர்களையும் சிறையில் வைப்பதற்கு பா.ஜ.க அரசு ஏன் தீவிரம் காட்டுகிறது.

மேக் இன் இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி ஆரம்பித்து பன்னிரெண்டு ஆண்டுகள் ஆகியும் இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி வீழ்ந்து கொண்டிருக்கிறது. உலகின் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவோம் என பிரதமர் மோடி தொடர்ந்து அறை கூவல் விடுத்து வருகிறார். இதற்காக பல்லாயிரக்கணக்கான கோடிகளை முதலாளிகளுக்கு வாரி வாரி இறைத்தாலும் அந்நிய முதலீடுகள் எதிர்பார்த்த படி வருவதில்லை. இது போன்ற சூழலில் நொய்டா தொழிலாளர்கள் போராட்டம் இந்திய ஆளும் வர்க்கத்திற்கு இழுக்காக அமைந்து விட்டது.

தொழிலாளர் போராட்டங்கள் நடைபெறுவதற்கு முன்பு சத்யம் வர்மாவும், அக்ரிதி செளத்ரியும் ஆவேசமாக பேசினார்கள் என்பதையே தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கெளதம் புத்தா நகர் போலீஸ் ஆணையர் மற்றும் யோகி அரசின் அதிகார வர்க்கத் தரப்பு விளக்கம் கொடுத்திருக்கிறது. என்.எஸ்.ஏ. குற்றஞ்சாட்டிற்கான குற்றமாக அரசால் கூறப்படுவது போராட்டத்தின் போது நடந்த வன்முறை, தீவைப்பு மற்றும் குழப்பத்தை விளைவித்தல் போன்றவற்றில் சத்யம் வர்மாவிற்கும், அக்ரிதி செளத்ரியும் பங்கு வகித்தனர் என்பதல்ல.

தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்காக  நொய்டாவில் தொழிலாளிகள் நடத்திய போராட்டம் மோடியின் மேக் இன் இந்தியாவுக்கும், அந்நிய முதலீட்டாளர்களுக்கும் எதிராக இருப்பதால், அது தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல். இந்தியாவில் முதலாளிகள் தங்கு தடையின்றி தொழில் தொடங்க யார் தடையாக இருந்தாலும் அவர்களுக்கு பிணையில் வெளியில் வரமுடியாத தண்டனை என்பதை நாட்டிற்கு உணர்த்தவே மோடி அரசு தனது கொடிய அடக்குமுறையை ஏவியுள்ளது.

நொய்டா தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்கள் மீது எந்த காரணத்திற்காக என்.எஸ்.ஏ. குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறதோ, இது போன்று பல்வேறு காரணத்திற்காக இதே குற்றச்சாட்டு பலர் மீதும் ஏவப்பட்டு வருகிறது.

உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் சம்பல் மாவட்டத்தில் ஒரு இந்து கோவிலை இடித்தே முகலாய ஆட்சியாளர் பாபர் 1526-ல் ஷாஹி ஜாமா மசூதியைக் கட்டினார் என்று கூறி தொடரப்பட்ட வழக்கில்,அம்மசூதியை ஆய்வு செய்ய  நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த ஆய்வுக்கு முஸ்லிம்கள் குழு ஒன்று எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, 2024ஆம் ஆண்டு நவம்பர் 24 இல் சம்பல் மாவட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் நான்கு பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த வன்முறைக்கு முல்லா அஃப்ரோஸ் என்பவரே காரணம் என அவர் மீது என்.எஸ்.ஏ. குற்றம் சுமத்தப்பட்டது. சமீபத்தில் இந்த குற்றத்தை இரத்து செய்த உத்தரப்பிரதேச நீதிமன்ற யோகி அரசுக்கு பத்து இலட்சம் ரூபாயை அபராதமாக விதித்திருக்கிறது.

லடாக்கை ஆறாவது அட்டவணையின் கீழ் சேர்க்க வேண்டும் என்று போராடியதற்காக சோனம் வாங்சுக் மீது லடாக் மக்களிடையே கலவரத்தை தூண்டினார் என்றும், உ.பியில் அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகத்தில் நடைப்பெற்ற கருத்தரங்கில், தேசிய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பேசினார் என்பதற்காக டாக்டர் கலீப்கான் மீதும் தேசத் துரோக குற்றஞ்சாட்டு சுமத்தப்பட்டிருக்கிறது.

நொய்டாவில் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டதற்காகவும், லடாக்கிலும், உ.பியிலும் ”அரசியல் சாசன உரிமைகளை கொடு” என்று பேசியதற்காகவும், சம்பல் மாவட்டத்தில் ”காவிப் பாசிசத்தை எதிர்த்ததற்காகவும்” தேசத் துரோக வழக்கு பாய்ந்திருக்கிறது.

நொய்டாவைப் போலவே மற்ற இடங்களிலும் போலீஸின் தடியடி உண்டு, தீ வைப்பு உண்டு, இறுதியில் மக்கள் அனைவரும் வளர்ச்சி திட்டங்களை எதிர்ப்பவர்கள், நக்சல்கள், பாகிஸ்தான் கைக்கூலிகள் என்பதே அரசு அளிக்கும் விளக்கம்.

சத்யம் வர்மாவிலிருந்து சோனம் வாங்சுக், முல்லா அப்ரோஸ் வரை அரசை எதிர்ப்பவர் யாராக இருந்தாலும், நீர், நிலம், தொழிலாளர்கள், அரசியல் உரிமைகளுக்காக யார் போராடினாலும் சிறையும், கைதும், வழக்குகளும் அவர்களுக்கு நேரும் கதி என்ற செய்தியை மக்களுக்கு உணர்த்துவதற்கே இது போன்ற கொடிய சட்டங்கள் அரசால் ஏவப்படுகின்றன.

மோடி அரசை யார் எதிர்த்து போராடினாலும், அரசிற்கு எதிரான மாறுபட்ட கருத்துக்களை பேசினாலும் அவர்கள் மீது மத வர்க்க பேதமின்றி கொடிய சட்டங்கள் பாயும்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற குற்றச்சாட்டை முஸ்லீம்களின் மீது மட்டும் மோடி அரசு ஏவுவதில்லை. தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டுப் போராடினாலும் அவர்கள் மீதும் மோடி அரசு அதனை ஏவ தயாராக இருக்கிறது என்பதை நொய்டா தொழிலாளர் போராட்டம் நமக்கு உணர்த்தியுள்ளது.

  • தாமிரபரணி

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன