ஒற்றுமை என்ற பெயரில் இந்துத்துவத்தைக் கடைவிரிக்கும் ஆர்.எஸ்.எஸ்.

அக்டோபர் 7, 2026
“ஒற்றுமை” என்ற பெயரில் அனைவரையும் இந்துத்துவ அடையாளத்திற்குள் கொண்டுவரும் ஆர்எஸ்எஸ்-இன் அரசியலை, மோகன் பகவத்தின் பேச்சுகளே அம்பலப்படுத்துகின்றன.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாக்களின் ஒரு பகுதியாக, அதன் தலைவர் மோகன் பகவத் அமெரிக்கா, கனடா மற்றும் இலண்டன் ஆகிய மூன்று நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின் போது, பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்களை ஒருங்கிணைக்கும் வகையில், நியூயார்க்கில் ‘யுனிவர்சல் ஒற்றுமை கொண்டாட்டம்’ (Universal Oneness Celebrations) என்ற நிகழ்வை American Hindus for Engagement and Dialogue (AHEAD) அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் மோகன் பகவத் ஆற்றிய உரை, நிகழ்வுக்கு முன்னதாகவும், உரைக்குப் பின்னரும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

இந்த நிகழ்வு தொடர்பாக நியூயார்க் நகர மேயர் ஸோஹ்ரான் மம்தானி கூறுகையில், தாம் வளர்ந்த காலத்தில் இந்தியா பன்மைத்துவமும் மதச்சார்பின்மையும் கொண்ட குடியரசாகவும், அனைவருக்கும் சமமான இடமும் உரிமையும் வழங்கும் சமூகமாகவும் தமக்குக் கற்பிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இந்தப் பின்னணியில், எந்தவொரு நாட்டையோ சமூகத்தையோ விலக்கி வைக்கும் பார்வையை அடிப்படையாகக் கொண்ட ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வளர்ச்சி தமக்கு மிகுந்த கவலையளிப்பதாக அவர் கூறினார்.

இதனிடையே, அமெரிக்காவின் மதச் சுதந்திரம் தொடர்பான அமைப்பான United States Commission on International Religious Freedom (USCIRF), மார்ச் மாத அறிக்கையில் தெரிவித்த கருத்துகளைத் தொடர்ந்து, இந்தியாவில் மதச் சுதந்திரம் மோசமடைந்து வருவதாக மீண்டும் தெரிவித்தது. மேலும், ஆர்எஸ்எஸ் மீது தடைகள் விதிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலிக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கூறியது.

நியூயார்க் நகர மேயரின் கருத்தும், USCIRF-இன் கருத்தும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் எதிரானது என்று நம்புபவர்களுக்கு உவப்பாக இருக்கலாம். ஆனால், இந்தக் கட்டுரையின் நோக்கம், பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் எவ்வாறு எதிரானது என்பதைத் தெளிவுபடுத்துவதாகும். அதற்காக, மேற்குறிப்பிட்ட நாடுகளில் மோகன் பகவத் ஆற்றிய உரைகளிலிருந்தே இதைத் தொடங்குவோம்.

ஆர்எஸ்எஸ்-இன் செய்தி தொடர்பாளர் பிரமுக் சுனில் அம்பேகர், நியூயார்க்கில் நடைபெறவுள்ள ‘யுனிவர்சல் ஒற்றுமை கொண்டாட்டம்’ பல்வேறு மதங்கள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்களை ஒன்றிணைக்கும் நிகழ்வாக இருக்கும் என்றார். திறந்த உரையாடலையும் பரஸ்பர மரியாதையையும் அடிப்படையாகக் கொண்ட இந்த நிகழ்வு, அனைவரையும் அரவணைக்கும் பாரதிய பண்பாட்டைப் பிரதிபலிப்பதுடன், பல்வேறு சமூகங்களிடையே புரிதலையும் ஒற்றுமையையும் வளர்க்கும் நோக்கத்தைக் கொண்டது என்றும் இந்நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன்பாக ஆர்எஸ்எஸ்-இன் ஆர்க்கனைசர் இதழின் வலைதளத்தில் அவர் தெரிவித்தார்.

இதன் பொருள் என்ன? அனைவரையும் அரவணைக்கும் பாரதிய பண்பாட்டைப் பற்றி பல்வேறு மதங்கள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்களுக்கு இந்த நிகழ்ச்சியின் மூலம் புரிதலை ஏற்படுத்துகிறோம் என்பதேயன்றி இதற்கு வேறொரு பொருள் இருக்க முடியாது. சுருங்கக் கூறின், ஆர்எஸ்எஸ்-இன் அகண்ட பாரத கனவிற்கு ஆள் சேர்க்கும் வேலைக்காக மோகன் பகவத் வெளிநாடு சென்றிருக்கிறார் என்பது தெளிவு.

நியூயார்க்கின் மேடிசன் ஸ்கொயர் கார்டனில் மோகன் பகவத் ஆற்றிய உரை குறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகியுள்ளன. சிலர், வேற்றுமையில் ஒற்றுமை (Unity in Diversity) என்ற அவரது கருத்தை, இந்து மேலாதிக்கக் கொள்கையிலிருந்து விலகியதாகப் பார்க்கின்றனர். மற்றவர்கள், இந்தியாவில் அவர் பயன்படுத்தாத சொற்களை அமெரிக்காவில் பயன்படுத்தி, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தாராளவாதத் தோற்றத்தை வழங்கியுள்ளதாகக் கருதுகின்றனர். ஆனால், இந்த இரண்டு கருத்துகளுமே தவறானதும், குறைமதிப்பீடு செய்வதுமாகும்.

இந்தியாவில் கடந்த நூறாண்டுகளாக ஆர்எஸ்எஸ் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்தாலே, அதன் யோக்கியதையை எவராலும் புரிந்துகொள்ள முடியும். காந்தி படுகொலைக்குப் பிறகு ஆர்எஸ்எஸ் ஏன் தடைசெய்யப்பட்டது? பின்னர் அந்தத் தடை ஏன் நீக்கப்பட்டது? நாதுராம் கோட்சே ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவரில்லை என்றால், அவரது நினைவு நாளை இன்றளவும் ஆர்எஸ்எஸ் ஏன் கொண்டாடுகிறது? மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு, அக்கட்சியைச் சேர்ந்த பிரக்யா சிங் தாக்கூர், கோட்சேவை ஒரு “தேசபக்தர்”என்று குறிப்பிட்டது ஏன்?

இப்படி நூற்றுக்கணக்கான ‘ஏன்?’களுக்கு, இந்துராஷ்டிரம் என்ற அகண்ட பாரதக் கனவுதான் காரணம் என்ற தெளிவான பதில் இருந்தும், அதற்கு “ஒற்றுமை“ என்ற முலாம் பூசுவதும், நடைமுறையில் வேற்றுமையாகச் செயல்படுவதும், ஆர்எஸ்எஸ்-இன் பிளவுபட்ட நாக்கிற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.

பகவத், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆற்றிய உரை உட்பட, இந்தியாவில் பலமுறை இதேபோன்ற கருத்துகளைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, 2018-இல் நாக்பூரில் ஆற்றிய உரையை நினைவுகூர்ந்த அவர், அமெரிக்காவிலும் அதே கருத்துகளை முன்வைத்துள்ளார். இந்தியாவிலும் அமெரிக்காவிலும் அவர் பயன்படுத்தும் சொற்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருந்தாலும், இந்திய உரைகளில் அவற்றை அவர் மேலும் விரிவாக விளக்கியிருக்கிறார்.

இரு உரைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அதில் இந்து மேலாதிக்கவாதத்தின் தர்க்கம் தெளிவாகப் புரியும்.

அந்தவகையில் ‘சர்வ ஒருமைப்பாடு’என்று அவர் கூறுவது, அனைத்து உயிரினங்களும், பொருட்களும், ஆன்மீக மரபுகளும் ஒரே அடிப்படைத் தத்துவத்தின் சமமானவை என்பதாகும்.

அதன்படி, இந்து மரபுகளும் பல்வேறு வெளிப்பாடுகளில் ஒன்றாகவே கருதப்பட வேண்டும். ஆனால், மோகன் பகவத் தனது நியூயார்க் உரையில் அப்படிக் கூறவில்லை. மாறாக, இந்து மரபு என்பது ‘ஒருமைப்பாடு’ என்ற தத்துவத்தின் மற்றொரு பெயர் என்று அவர் குறிப்பிடுகிறார். மேலும், இந்துக்கள் இந்தத் தத்துவத்தை “அந்நியப் படையெடுப்பாளர்களிடமிருந்து” பாதுகாத்ததுடன், உலகின் பிற பகுதிகளுடனும் பகிர்ந்து கொண்டதாக அவர் கூறினார்.

2018-இல் அவர் ஆற்றிய உரையில், பாரதத்தில் தோன்றிய அனைத்து மரபுகளையும் குறிக்க ‘இந்து’ என்ற பெயரை ஆர்எஸ்எஸ் பயன்படுத்துவதாக விளக்கினார். அவரது கூற்றுப்படி, “பாரதத்தில் பிறந்த அனைத்து மரபுகளின் பெயர் ஹிந்துத்துவம்.” மேலும், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், சனாதனிகள் மற்றும் ஆரிய சமாஜிகள் ஆகியோரை ஆர்எஸ்எஸ் இந்துக்களாகக் கருதுகிறது என்றும், ஆனால் அந்தச் சமூகங்கள் விரும்பினால் தங்களை ‘பாரதியர்கள்’ என்று அழைத்துக்கொள்ளும் சுதந்திரம் அவர்களுக்கு உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.

அதேபோல், இந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற ‘ஆர்எஸ்எஸ்-இன் நூற்றாண்டுப் பயணம்’ நிகழ்வில் பேசிய மோகன் பகவத், “இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரும் இந்துக்களே” என்றும், காலப்போக்கில் அனைவரும் இந்துத்துவாவை தங்களது தேசிய அல்லது நாகரிக அடையாளமாக ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் கூறினார். மேலும், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள் மற்றும் பார்சிகள் ஆகியோர் தங்கள் மதங்களைப் பின்பற்றிக்கொண்டே “இந்துத்துவாவை ஏற்றுக்கொள்ளலாம்” என்றும், “இந்துத்துவா உங்கள் பாதுகாப்பிற்கான உத்தரவாதம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அப்படியானால், இந்துத்துவாவை ஏற்றுக்கொள்ளாதவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என்பதுதான் அவரது கருத்தாகும்.

எனவே ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பது, வெவ்வேறு அடையாளங்களையும் தனித்துவங்களையும் கொண்ட மக்கள் அல்லது சமூகங்கள், தங்களது தனித்தன்மையை விட்டுக்கொடுக்காமல், தாங்களாகவே விருப்பத்துடன் ஒன்றிணைந்து வாழ்வதாகும். ஆனால், மோகன் பகவத் முன்வைக்கும் ‘ஒருமைப்பாடு’ என்ற கருத்து, பிறர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவர்கள்மீது ஒரே அடையாளத்தைத் திணிப்பதாகும்.

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் பேசிய பகவத், ‘இந்து–முஸ்லிம் ஒற்றுமை’என்ற சொற்றொடர் தேவையற்றவை என்றும், இந்துக்களும் முஸ்லிம்களும் “ஏற்கனவே ஒன்றுதான்” என்றும் கூறினார். அதாவது, முஸ்லிம்களைத் தனித்த சமூகமாக அல்லது அடையாளமாகக் குறிப்பிடுவது பிளவுபடுத்துவதாகவும், நாட்டின் ‘ஒற்றுமையை’ பாதிப்பதாகவும் அமையும் என்கிறார்.

இந்த ஆண்டு செப்டம்பரில், இந்தியாவைத் தனியாக ‘இந்து தேசம்’ என்று அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அது ஏற்கெனவே வெளிப்படையாகத் தெரிகிறது என்றும் பகவத் கூறினார். ஒரு காலத்தில் பாபர் மசூதி இருந்த இடத்தில் அயோத்தியில் இராமர் கோயில் கம்பீரமாக நிற்பதையும், பிரதமர் மோடியின் தலைமையில் இந்து தேசம் மீண்டும் எழுச்சி பெற்றிருப்பதற்கான சான்றாக அவர் குறிப்பிட்டார்.

ஆர்எஸ்எஸ்-இன் நூற்றாண்டு விழாவில் பேசிய மோகன் பகவத், முன்பு 2018-இல் கூறியதுபோல, இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்களே என்றும், அவர்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம் என்றும் கூறினார். தாங்கள் இந்துக்கள் என்பதை அறிந்து, அதில் பெருமை கொள்பவர்கள் முதல் வகையினர். இத்தகையவர்களை முதலில் அணிதிரட்டுவது எளிதானது என்றும், இறுதியில் அனைவரையும் ஒன்றிணைப்பதே ஆர்எஸ்எஸ்-இன் நோக்கம் என்றும் அவர் கூறினார்.

இரண்டாவது வகையினர், தாங்கள் இந்துக்கள் என்பதை அறிந்திருந்தாலும், அதில் பெருமை கொள்ளாதவர்கள். மூன்றாவது வகையினர், தாங்கள் இந்துக்கள் என்பதை அறிந்தும், பொருளாதாரக் காரணங்களுக்காகவோ அரசியல் காரணங்களுக்காகவோ அதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளாதவர்கள். நான்காவது வகையினர், தாங்கள் இந்துக்கள் என்பதை மறந்தவர்கள் அல்லது மறக்கச் செய்யப்பட்டவர்கள் என்று அவர் குறிப்பிடுகிறார். இந்தப் பிரிவில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் அடங்குவர் என்றும், அவர்கள் இந்து மூதாதையர்களின் வழிவந்தவர்கள்; ஆனால் அதை மறந்துவிட்டார்கள் அல்லது மறக்கச் செய்யப்பட்டார்கள் என்றும் பகவத் கூறினார்.

மேலும், “நாட்டின் மையக் கலாச்சாரம் இந்து மதம் சார்ந்தது”என்றும், அதனால்தான் “பாரதம் ஒரு இந்து இராஷ்டிரமாக இருக்கிறது”என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் பெருமிதம் கொண்ட இந்துக்களை முதலில் ஒருங்கிணைத்து, பின்னர் மற்ற இந்துக்களையும் அணுகுவதன் மூலம், இறுதியில் “ஒவ்வொரு இந்துவும் தான் ஒரு இந்து என்பதை உணர வேண்டும்”என்பதே அதன் நோக்கம் என்று பகவத் கூறுகிறார்.

இங்கே ‘பெருமை’என்ற சொல் முக்கியமானது. ‘ஒருமைப்பாடு’ என்பது, எந்தவொரு ஆன்மீக மரபுக்கும் ஞானத்தின் மீது தனியுரிமை இல்லை என்பதை ஏற்றுக்கொள்வதாகும். ஆனால், பகவத் கூறும் விளக்கத்தில், ஆர்எஸ்எஸ் பெருமிதம் கொண்ட இந்துக்களை ஒருங்கிணைத்து, இந்துக்கள் அல்லாதவர்களும் அதே இந்துப் பெருமிதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அவர்களை வழிநடத்துகிறது.

இந்தப் பின்னணியில், நியூயார்க்கில் பகவத் கூறிய “முஸ்லிம்களை விரும்பாதவர்கள் உண்மையான இந்துக்கள் அல்ல”என்று கூறிய கருத்தையும் பார்க்கவேண்டும். அதன்படி, முஸ்லிம்களைத் தனித்த அடையாளம் கொண்டவர்களாக ஏற்றுக்கொள்வதைவிட, அவர்களும் இந்துப் பெருமிதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாகவே பார்க்கப்படுகின்றனர்.

2018-இல் பேசிய மோகன் பகவத், அனைத்துப் பிரச்சினைகளையும், கருத்து வேறுபாடுகளையும் பேச்சுவார்த்தை மூலம் அமைதியாகத் தீர்க்க முடியும் என்று கூறினார். ஆனால், அதற்கு ஒரு நிபந்தனையையும் விதித்தார். அதாவது, சம்பந்தப்பட்ட அனைவரும் “பாரதத்தின் நலனைக் கருத்தில் கொண்டவர்களாகவும், தங்களது முன்னோர்களைப் பற்றி பெருமிதம் கொண்டவர்களாகவும், இந்தியப் பண்பாட்டின் மீது பற்றுக் கொண்டவர்களாகவும்”இருக்க வேண்டும் என்றார்.

அப்படியென்றால், முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தங்களது இந்து வம்சாவளியைப் பெருமையாகக் கருதவில்லை என்றாலோ, இந்துப் பண்பாட்டின் மீது பற்றுக் கொள்ளவில்லை என்றாலோ, அவர்கள் தேசிய நலனுக்கு எதிரானவர்களாகச் சித்தரிக்கப்படுவார்கள். எனவே, அவர்களுடனான கருத்து வேறுபாடுகளையும் பிரச்சினைகளையும் அமைதியான பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியாது என்பதுதான் பகவத்தின் உண்மையாக கருத்தாகும்.

அந்தவகையில், அமெரிக்கா மற்றும் கனடாவில் பேசிய மோகன் பகவத், ‘வசுதைவ குடும்பம்’என்ற தத்துவத்தால் உத்வேகம் பெற்ற பாரதம், துன்புறுத்தப்பட்டவர்களுக்கு எப்போதும் புகலிடமாக இருந்து வந்ததாகக் கூறினார். ஆனால், முஸ்லிம் அகதிகள் குறித்த அவரது நிலைப்பாடு இதற்கு நேர்மாறானதாகும். ரோஹிங்கியாக்கள் “பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள்”என்பதால் மியான்மரில் இருந்து விரட்டப்பட்டதாகவும், அவர்கள் இந்தியாவுக்குள் “ஊடுருவியுள்ளனர்” என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேபோல், ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில், வங்கதேசத்திலிருந்து வந்ததாகக் கூறப்படும் “ஊடுருவல்காரர்களை” அவர்களின் மொழி மூலம் அடையாளம் காண வேண்டும் என்றும், அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கூடாது என்றும் பகவத் அழைப்பு விடுத்தார். துன்புறுத்தலுக்கு உள்ளானவர்களைப் புகலிடமளித்து பாதுகாக்க வேண்டும் என்ற ‘வசுதைவ குடும்பம்’என்ற கொள்கையைப் பேசிக்கொண்டே, முஸ்லிம்களை அகதிகள் மற்றும் ‘ஊடுருவல்காரர்கள்’என்ற அடையாளங்களில் வகைப்படுத்தி, அவர்களுக்கு எதிரான பாகுபாட்டையும் வாழ்வாதார மறுப்பையும் தொடர்ந்து பகவத் எடுத்து வந்துள்ளார்.

வெளிநாட்டு முஸ்லிம் பயங்கரவாதிகள் இந்திய சமூகத்திலும் வாக்காளர் பட்டியலிலும் ‘ஊடுருவியுள்ளனர்’என்ற பகவத்தின் கருத்தின் மூலம் இந்திய முஸ்லிம்களின் குடியுரிமையையே சந்தேகத்திற்குள்ளாக்கி இருக்கிறது. மேலும், இந்துக்கள் தங்கள் முஸ்லிம் அண்டை வீட்டாரை எதிர்த்துப் பேசவும், முஸ்லிம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பில் பாகுபாடு காட்டவும் இந்துக்களை அவர் தூண்டுகிறார். இதன் மூலம் முஸ்லிம்களை சந்தேகத்திற்குரியவர்களாகக் காட்டி, அவர்களுக்கு எதிரான பாகுபாட்டை வளர்க்கும் இந்த அணுகுமுறை, “ஒற்றுமை“ என்ற கருத்துக்கு நேர்மாறானதாகும்.

இதற்கு இணையாக, இந்துக்களின் புனித நெறி ‘இந்து தர்மசாஸ்திரம்’அல்ல, முழு மனித குலத்திற்குமான ஒழுக்க நெறியான ‘மானவ தர்மசாஸ்திரம்’என்று பகவத் கூறுகிறார். ஆனால், ‘மானவ தர்மசாஸ்திரம்’என்பது மனுஸ்மிருதியின் மற்றொரு பெயராகும். மனுஸ்மிருதி சாதி மற்றும் பாலின அடிப்படையில் கடுமையான ஏற்றத்தாழ்வுகளை கொண்டிருப்பதுடன், சில சாதிகளை உயர்ந்தவையாகவும் மற்றவற்றைத் தாழ்ந்தவையாகவும் வரையறுக்கிறது. சாதி அடிப்படையிலான இந்த ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்தும் நெறியை, சமமாகக் கருதும் “ஒற்றுமை“ என்ற கருத்துக்கு முற்றிலும் முரணானதாகும்.

பகவத் முன்வைக்கும் ‘ஒற்றுமை’என்ற கருத்து, ஆர்எஸ்எஸ் நிறுவனர் குரு கோல்வால்கரின் சிந்தனைகளிலிருந்து உருவானதாகும். சிந்தனைக் கொத்து (Bunch of thoughts – 1966) நூலில், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள் உள்ளிட்டோர் இந்துத்துவாவை ஏற்காததால் பிளவுபடுத்தும் சக்திகளாக கோல்வால்கர் குறிப்பிட்டார். அதேபோல், தீண்டாமை ஒழிப்பு, சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு, பெண்கள் சமத்துவம், இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு போன்ற கோரிக்கைகளும் சமூகத்தில் நிலவும் பாகுபாடுகளையும் ஒடுக்குமுறைகளையும் சுட்டிக்காட்டியதால், அவை வெறுப்பையும் பகையையும் வளர்ப்பதாக அவர் கருதினார்.

இதன் அடிப்படையில், இந்துக்கள் மற்றும் இந்துக்கள் அல்லாதவர்கள் எனப் பல்வேறு சமூகங்களைச் சமமான குடிமக்களாகக் கருதுவதையே இந்தியாவைப் பிளவுபடுத்துவதாக ஆர்எஸ்எஸ் கருதுகிறது. ‘ஒற்றுமை’என்ற பெயரில், அனைத்து குடிமக்களும் ஒரே இந்து அடையாளத்தையும் ஒரே இந்துத்துவச் சித்தாந்தத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அதன் நோக்கமாகும். ஒரே இந்து தேசம், ஒரே இந்து கலாச்சாரம், ஒரே இந்து குடியுரிமை என்பதே ஆர்எஸ்எஸ்-இன் நூறாண்டுகளாக மாறாத் தத்துவமாகும். எனவே, மானஸ் இன்னும் திருந்தவில்லை.

  • மகேஷ்

செய்தி ஆதாரம்:

https://www-thenewsminute-com.translate.goog/voices/opinion-mohan-bhagwats-speech-on-oneness-barely-hides-his-hindutva-sophistry?_x_tr_sl=en&_x_tr_tl=ta&_x_tr_hl=ta&_x_tr_pto=sge

https://scroll-in.translate.goog/latest/852440/rohingya-muslims-driven-out-of-myanmar-because-they-have-links-with-terror-groups-mohan-bhagwat?_x_tr_sl=en&_x_tr_tl=ta&_x_tr_hl=ta&_x_tr_pto=sge

https://organiser.org/2026/08/26/377148/bharat/rss-sarsanghchalak-dr-mohan-bhagwat-to-participate-in-universal-oneness-celebration-during-us-visit/

https://www-bbc-com.translate.goog/news/world-asia-india-50583728?_x_tr_sl=en&_x_tr_tl=ta&_x_tr_hl=ta&_x_tr_pto=sge&_x_tr_hist=true

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன