சிறுபான்மையினர் மீதான வெறுப்பைத் தீவிரப்படுத்தவே மக்கள்தொகையியல் உயர்நிலைக் குழு!
சட்டவிரோத ஊடுருவல் மற்றும் இயல்புக்கு மாறான காரணங்களினால் இந்தியா மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் [Demographic Changes] குறித்து ஆராய்வதற்கும் சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காகவும் உயர்மட்ட குழு [High Level Committee on Demographic Changes-HLCDC] ஒன்றை மோடி அரசாங்கம் மே மாதம் அமைத்தது. இக்குழு சமீபத்தில் 35 கேள்விகள் அடங்கிய தொகுப்பை மாநிலங்களுக்கு அனுப்பிப் பதிலளிக்குமாறு கேட்டுள்ளது. இக்கேள்விகள் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் கேட்கப்படும் விவரங்கள் போலிருந்தாலும், இதுவரையில் இல்லாத வகையில் மக்களின் விவரங்களை மத அடிப்படையில் வகைப்படுத்திச் சேகரிக்கின்ற நோக்கத்தில் கேள்விகளைக் கேட்டுள்ளது.
கடந்த 15 வருடங்களில் நடந்த, மத அடிப்படையிலான, குழந்தை பிறப்பு விவரங்கள், வாகனங்கள் பதிவு விவரங்கள், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விவரங்கள், சொத்துக்கள் பதியப்பட்ட விவரங்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள வெவ்வேறு மதத்தினுடைய வழிபாட்டுத் தலங்களின் விவரங்கள், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை பதிவுகள் எண்ணிக்கை இயல்புக்கு மாறாக அதிகரித்திருப்பது, மாவட்ட அளவில் மற்றும் மலைப்பாழ் பகுதிகளில் நடந்த மதமாற்றங்கள் குறித்த தரவுகளையும் கேட்டிருக்கிறது. பொதுவாக மத அடிப்படையில் மக்களின் விவரங்களை அரசாங்கங்கள் சேகரிப்பதில்லை என்பதால் உயர்மட்டக்குழுவின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் பெரும்பாலான மாநில அரசுகளின் அதிகாரிகள் திகைத்துப் போயிருப்பதாக தி இந்து பத்திரிக்கைச் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒன்றிய அரசு கேட்கும் தரவுகளைத் தமிழக அரசு கொடுக்கக் கூடாது என்று போலி கம்யூனிஸ்டுகள் முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைத்திருக்கின்றனர். அமித்ஷா, மோடி என்று சட்டசபையில் அமைச்சர் வன்னியரசு பேசியதற்கு பதறிப் போன தா.வெ.க. கும்பல், எஜமானின் கட்டளையை மறுத்து மூச்சு விடுவார்களா என்ன?
பொதுவாக மக்கள் தொகையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்ய மக்களின் கல்வித் தகுதி, துறைச் சார்ந்த வேலை விவரங்கள், வேலையில் இருப்பவர்கள் மற்றும் வேலைத்தேடுபவர்களின் விவரங்கள், வயதானவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களின் விவரங்கள், மாநிலங்களுக்குள்ளே மற்றும் மாநிலங்களுக்கு வெளியே நடக்கும் புலம்பெயர்பவர்களின் விவரங்கள், மொத்த கருவுறுதல் விகிதம் மற்றும் பிறப்பு விகிதம் ஆகிய தரவுகள் சேகரிக்கப்படும். இதனடிப்படையில் உற்பத்தியில் ஈடுபடுபவர்களின் சராசரி வயது கணக்கிடப்படும். அதைக்கொண்டு பொருளாதார-சமூகநலத் திட்டங்கள் வகுப்பது, வரி உள்ளிட்ட இதர நிதிப்பகிர்வுகள் நிர்ணயிக்கப்படும்.
உதாரணமாக, ஜப்பான் மக்களின் சராசரி வயது 50.5. ஆனால் இந்திய மக்களின் சராசரி வயதோ 29 வயதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதன் பொருள் இந்தியாவில் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை விட இளைஞர்களின் எண்ணிக்கை மிக அதிகம். இங்கே மிகையான சேமப் பட்டாளம் இருப்பதால் புதிய தொழிற்சாலைத் தொடங்குவதற்கும், அதனோடு தொடர்புடைய பிற வேலைகளுக்கும் தொழிலாளர்கள் கிடைப்பதும் எளிது. ஆனால் ஜப்பானிலோ இளைஞர்களை விட வயதானவர்களின் எண்ணிக்கையே அதிகம். உற்பத்தி மற்றும் அன்றாட நடவடிக்கைகளுக்குக் கூட உள்நாட்டுத் தொழிலாளர்களைக் கொண்டு நிரப்புவது கடினம்.
இந்தியாவிற்குள்ளே கூட பெருமளவு தென்னிந்திய மாநிலங்களில்தான் உற்பத்தி மற்றும் சேவைத்துறை சார்ந்த பொருளாதார நடவடிக்கைகள் குவிந்துள்ளன. அதேவேளையில் அம்மாநிலங்களில் தான் மொத்த கருவுறுதல் விகிதம் இந்திய சராசரியை விட மிகக் குறைவாக உள்ளதாக இந்திய அரசே கவலைக் கொள்கிறது.
முதலாளித்துவ உற்பத்தி முறையில் மேற்சொன்ன மக்கள்தொகை மாற்றங்கள் குறித்த கணக்கீடு உற்பத்தியோடு நெருங்கிய தொடர்பில் இருப்பதால் மொத்த மக்கள் தொகையில் இளைஞர்களின் அளவை அதிகப்படுத்துவது, அவர்களுக்கான கல்வி அளிப்பது, தொழிற்திறனைப் பயிற்றுவிப்பதற்கான திட்டங்களை வகுப்பதற்கு மேற்சொன்ன விவரங்கள் மிக அவசியம். இதனடிப்படையிலேயே பல வளர்ந்த நாடுகள் பிறப்பு விகிதத்தையும் கருவுறுதல் விகிதத்தையும் அதிகப்படுத்துவதற்காகவும் குழந்தைகளின் கல்விக்காகவும் ஏராளமான சலுகைகளை வழங்குகின்றன. இந்தியாவில் கூட ஆந்திரா மாநிலத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்பவர்களுக்கு சலுகைகளைக் கொடுப்பதாக அம்மாநில அரசாங்கம் அறிவித்திருக்கிறது.
இவ்வாறு முதலாளித்துவப் பொருளாதார வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு நடவடிக்கையை, மோடி-அமித்ஷா கும்பலோ, தங்களுடைய காவி பாசிசத் திட்டத்திற்கு கேடாக பயன்படுத்தும் நோக்கில் மத அடிப்படையில் மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த தரவுகளைச் சேகரிக்கின்றனர்.
அதற்கு இக்கும்பல் சொல்லும் காரணம், இந்தியாவின் சராசரி கருவுறுதல் விகிதம் எதிர்பார்த்ததை விட குறைவாக [2.1 என்று இலக்கை விடக் குறைந்து 2 ஆக இருப்பதாக சமீபத்திய தேசிய குடும்ப சுகாதார கணக்கீடு கூறுகிறது] இருந்தபோதிலும் அஸ்ஸாம், மேற்கு வங்க மாநிலங்களில் இஸ்லாமியர்களின் மக்கள்தொகை முப்பது சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாகவும், குறிப்பாக பங்களாதேஷிலிருந்து எல்லைப்புற மாநிலங்களில் சட்டவிரோதமாக இஸ்லாமியர்கள் குடியேறுவதே இந்த உயர்வுக்குக் காரணம் என்றும், அது தேசப்பாதுகாப்பிற்கும் உள்நாட்டு சட்டம்-ஒழுங்கிற்கும் அச்சுறுத்தலாக இருப்பதினால் மத அடிப்படையிலான மக்கள் தொகை மாற்றம் குறித்து தகவல்களைச் சேகரிப்பது இன்றியமையாதது என்றும் பாஜக வாதிடுகிறது.
உண்மையிலேயே பஞ்சம் பிழைப்பதற்காக எல்லையோர மாநிலங்களில் தஞ்சம் புகும் வெகுசில ஏழை பங்களாதேஷ் மக்கள்தான் நமக்கெல்லாம் அச்சுறுத்தலாக இருக்கிறார்களா? அல்லது முதலாளிகளுக்காக மக்களை ஓட்டாண்டிகளாக்கியும், தினந்தோறும் மதக்கலவரங்களைத் தோற்றுவித்தும், ஆட்சியமைப்பதற்காக அனைத்து முறைகேடுகளையும் செய்துவரும் ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பல் இந்திய உழைக்கும் வர்க்கத்திற்கு பிரதான அச்சுறுத்தலா?
சட்டவிரோதக் குடியேற்றங்களைத் தடுப்பதுதான் மோடி-அமித்ஷா கும்பலின் நோக்கமென்றால் அதற்கு எல்லையோர மாநிலங்களின் தகவல்களை மட்டுமல்ல கேட்டிருக்க வேண்டும். அதைவிடுத்து இப்பிரச்சனைக்கு சிறிதும் தொடர்பில்லாத தமிழ்நாடு உட்பட பிற மாநிலங்களும் மத ரீதியிலான தரவுகளைக் கொடுக்க வேண்டும் என்று ஏன் நிர்பந்திக்க வேண்டும். குறிப்பாக மாவட்ட அளவிலான மதமாற்றம் பற்றிய விவரங்கள், இஸ்லாமியக் கோயில்களின் விவரங்கள், மாலைவாழ் மக்கள் பின்பற்றும் மதங்களைப் பற்றிய விவரங்களையெல்லாம் கேட்கவேண்டிய அவசியமென்ன?
இந்நடவடிக்கையை, சிறுபான்மையினர் வெறுப்பு, குறிப்பாக இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரத்தின் மூலமாக இந்துமதவெறியைத் தொடர்ச்சியாகவே பிரச்சாரம் செய்துவரும் காவி கும்பலின் பாசிச அரசியல் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே பாஜகவின் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் உயர்மட்டக் கூட்டங்களில் சட்டவிரோத குடியேற்றப் பிரச்சனைக்குத் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. சமீபத்தில் நடந்த அஸ்ஸாம், மேற்கு வங்கம், ஜார்கண்ட், பீகார் மாநிலச் சட்டசபைத் தேர்தல் பிரச்சாரங்களில் இதை வெளிப்படையாகப் பார்க்க முடிந்தது. மோடி தனது 2025 ஆகஸ்ட் 15 உரையில், மக்கள் தொகை மாற்றங்கள் குறித்து ஆராய்வதற்காக உயர்மட்டக்குழு அமைக்கப்படுவதாக தெரிவித்திருந்தார். அதனடிப்படையிலேயே பாஜக ஆதரவாளரும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியான நௌலேகர் தலைமையில் இதற்கான கமிட்டியை மே மாதம் உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.
மத அடிப்படையிலான தரவுகள் சேகரிப்பதற்கு பலத்தரப்பினரிடமிருந்து கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. ஆனால் பாஜகவோ, ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்களது தரவுகளை மட்டும் நாங்கள் கேட்கவில்லை. அனைத்து மதத்தினருடைய தரவுகளையும் தான் கேட்டிருக்கிறோம் என்று பதிலளிக்கிறது. இதன் மூலம் தங்களது நடவடிக்கை நடுநிலையானது என்று பாஜக வாதிடுகிறது.
பொதுசிவில் சட்டம் அனைவருக்குமானதாகத்தான் சொல்லப்பட்டது. ஆனால் நடைமுறையில் அச்சட்டம் இஸ்லாமியர்களை மட்டும் குறிவைக்கவில்லையா? CAA-NRC யும் மொத்த இந்தியாவுக்குமாகவே சொல்லப்பட்டது. ஆனால் அதைவைத்து இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரத்தையும் கலவரத்தையும் ஆர்.எஸ்.எஸ்.-பாஜக செய்யவில்லையா? தற்போதைய எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகள் கூட போலி வாக்காளர்களை நீக்குவதற்காகத்தான் என்று மோடி கும்பல் வாதிட்டது. ஆனால் நீக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் இஸ்லாமியர்கள் என்பதை அரசாங்கத் தரவுகளே காட்டிக்கொடுக்கவில்லையா?
அந்தத் தொடர்ச்சியில் தற்போது, சட்டவிரோதக் குடியேற்றம்-தேசப்பாதுகாப்பு-அதற்காக மக்கள் தொகை மாற்றங்களை ஆய்வு செய்வது என்ற நடவடிக்கைகளின் வாயிலாக முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரத்தையும் அதன் மூலம் கட்டியெழுப்பப்படும் இந்து தேசிய வெறியையும் பாஜக அணையவிடாமல் பார்த்துக் கொள்வதற்கே இதனைச் செய்துள்ளது.
- மாணிக்கம்
- https://www.newindianexpress.com/india/2026/Sep/29/committee-seeks-details-from-states-uts-on-visible-changes-in-religious-demography-in-last-15-years
- https://thewire.in/government/demographic-change-committee-minus-a-demographer-why-sole-focus-on-illegal-immigration-is-a-problem
- Conundrum over demography panel’s questionnaire seeking extensive data | Explained – The Hindu

