தேர்தல் முறைகேடுகளை செய்துவிட்டு
மூடிமறைக்கும் தேர்தல் ஆணையம்!
2024ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும், பல்வேறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களிளும் பதிவான வாக்குகளுக்கும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே மிகப்பெரிய முரண்பாடுகள் இருப்பதையும், வாக்குப்பதிவின் கடைசி ஒரு மணி நேரத்தில் எத்தனை பேர் வாக்களித்தார்கள் என்ற விவரங்கள்கூடப் பல தொகுதிகளில் பதிவு செய்யப்படவில்லை என்பதையும் தேர்தல் ஆணையத்தின் சொந்த ஆவணங்களே அம்பலப்படுத்தியுள்ளன. இத்தகைய முறைகேடுகளைக் கண்டறிந்து தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையமே, அவற்றைக் கண்காணிப்பதற்குத் தேவையான அடிப்படைப் பதிவுகளைப் பராமரிக்கத் தவறியிருக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த ஆவணங்களைப் பொதுமக்கள் அணுக முடியாத வகையில் தேர்தல் விதிகளிலும் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக ‘தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்’ இதழ் வெளியிட்டுள்ள இரண்டு புலனாய்வுக் கட்டுரைகள், மகாராஷ்டிரா, ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் 2024 தேர்தலின்போது தேர்தல் ஆணையம் பராமரித்த ஆவணங்களை ஆய்வு செய்து இந்த உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளன. 467 சட்டமன்றத் தொகுதிகள், 63 மக்களவைத் தொகுதிகள் என மொத்தம் 530 தொகுதிகளின் தேர்தல் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதற்காக 4,212 ஆவணங்கள் டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்றப்பட்டு மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆய்வில் முதலில் தெரியவந்த அதிர்ச்சியூட்டும் உண்மை, 51 தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கைக்கும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) எண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கைக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதுதான்.
இந்த 51 தொகுதிகளில் 19 தொகுதிகளில் உண்மையில் எத்தனை பேர் வாக்களித்தார்கள் என்ற எண்ணிக்கையே பதிவு செய்யப்படவில்லை. அதற்குப் பதிலாக, பதிவு செய்ய வேண்டிய இடத்தில் ‘0’ அல்லது ‘nil’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த பத்து தொகுதிகள் அடங்கும். அந்தப் பத்து தொகுதிகளில் ஏழு தொகுதிகளில் பாஜகவும் அதன் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு தொகுதியில் எத்தனை பேர் வாக்களித்தார்கள் என்ற அடிப்படைக் கணக்கைக்கூடப் பராமரிக்காத தேர்தல் ஆணையம், அந்தத் தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை மட்டும் அறிவித்திருக்கிறது.
மீதமுள்ள 32 தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கைக்கும், ஈ.வி.எம்.-களில் எண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கைக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளன. இவற்றில் 12 தொகுதிகளில் பதிவான வாக்குகளைவிட ஈ.வி.எம்.-களில் எண்ணப்பட்ட வாக்குகள் குறைவாக உள்ளன. மற்ற 20 தொகுதிகளில் பதிவான வாக்குகளைவிட ஈ.வி.எம்.-களில் எண்ணப்பட்ட வாக்குகள் அதிகமாக உள்ளன. இவை இரண்டுமே தேர்தல் முறைகேடுகள் நடந்திருக்கக்கூடும் என்பதற்கான முக்கியமான அறிகுறிகள். வாக்களிக்க வந்தவர்களின் எண்ணிக்கையைவிட எண்ணப்பட்ட வாக்குகள் குறைவாக இருந்தால், வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படாமல் தடுக்கப்பட்டிருக்கலாம். அதேசமயம், வாக்காளர்களின் எண்ணிக்கையைவிட எண்ணப்பட்ட வாக்குகள் அதிகமாக இருந்தால், போலி வாக்குகள் பதிவாகியிருக்கலாம். இத்தகைய முரண்பாடுகள் கண்டறியப்படும்போது, அவற்றைத் தேர்தல் முறைகேடுகளாகக் கருதி விசாரிக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் சட்டப்பூர்வமான கடமை.
ஹரியானாவின் பத்கல் சட்டமன்றத் தொகுதியில் இந்த முரண்பாடு மிகப்பெரிய அளவில் உள்ளது. தேர்தல் ஆணையத்தின் சொந்த ஆவணங்களின்படி, அத்தொகுதியில் 3.32 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். ஆனால், ஈ.வி.எம்.-களில் எண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை வெறும் 1.60 லட்சம் மட்டுமே. அதாவது, வாக்களித்ததாகப் பதிவானவர்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவான வாக்குகளே எண்ணப்பட்டுள்ளன. இத்தொகுதியில் பாஜகவின் தனேஷ் அத்லாகாவிடம் 6,181 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளர் விஜய் பிரதாப் சிங், வாக்குத் திருட்டு நடந்ததாகக் குற்றம்சாட்டி பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தேர்தல் ஆவணங்களையும் வாக்குப்பதிவு நாளின் சிசிடிவி காட்சிகளையும் வழங்குமாறு கோரியிருக்கிறார்.
மகாராஷ்டிராவின் மும்பை வடக்கு மக்களவைத் தொகுதியிலும் இதேபோன்ற மிகப்பெரிய முரண்பாடு காணப்படுகிறது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வெற்றி பெற்ற இந்தத் தொகுதியில், தேர்தல் ஆணையத்தின் சொந்த ஆவணங்களின்படி 18.11 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால், தேர்தல் முடிவில் ஈ.வி.எம்.-களில் எண்ணப்பட்ட வாக்குகள் 10.33 லட்சம் மட்டுமே. அதாவது, பதிவானதாகக் குறிப்பிடப்பட்ட மொத்த வாக்குகளில் 42.8 சதவீதமான 7.78 லட்சம் வாக்குகள் எண்ணிக்கையில் இடம்பெறவில்லை.
இதிலும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், மும்பை வடக்கு மற்றும் பத்கல் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையையே பதிவான வாக்குகளின் எண்ணிக்கையாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதன்படி, அந்தத் தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் அனைவருமே வாக்களித்திருக்க வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு சதவீதம் மும்பை வடக்கில் 57 சதவீதமாகவும், பத்கலில் 48 சதவீதமாகவும் மட்டுமே உள்ளது. இதேபோன்று மேலும் நான்கு தொகுதிகளிலும் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையே பதிவான வாக்குகளின் எண்ணிக்கையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹரியானாவின் கைதால் தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களின்படி வெறும் 215 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். ஆனால், அதே தொகுதியில் ஈ.வி.எம்.-களில் 1,67,285 வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் 6,66,046 பேர் வாக்களித்ததாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஈ.வி.எம்.-களில் 6,72,942 வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. அதாவது, பதிவான வாக்குகளைவிட 6,896 வாக்குகள் கூடுதலாக எண்ணப்பட்டுள்ளன.
இத்தகைய முரண்பாடுகளை வெறும் எழுத்துப்பிழைகள் அல்லது கணக்குப் பிழைகள் என்று கூறிக் கடந்து செல்ல முடியாது. வாக்குப்பதிவைக் கண்காணிக்கவும், போலி வாக்குகள் அல்லது வாக்காளர் ஒடுக்குமுறையைக் கண்டறியவும் உருவாக்கப்பட்ட ஆவணங்களிலேயே இத்தகைய முரண்பாடுகள் இருந்தால், தேர்தல் முறைகேடுகளை எப்படிக் கண்டறிய முடியும்? தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பு அமைப்பே நம்பகத்தன்மையற்றதாக இருக்கிறது என்பதைத்தான் இந்த ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன.
இந்தக் குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, ஹரியானாவில் 20 தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரியது. இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணையம், தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் முறையாகவும், காங்கிரஸ் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்களின் கண்காணிப்பிலும்தான் நடைபெற்றன என்று கூறி 1,600 பக்க விளக்கத்தை அளித்தது. அதேபோல், மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் வாக்காளர்கள் வாக்களிக்க விடாமல் தடுக்கப்பட்டதுடன், கள்ள ஓட்டுகளும் போடப்பட்டதாகக் கூறி தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவார்) வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்து மறுவாக்குப்பதிவு கோரியது. ஆனால், அந்தக் கோரிக்கையையும் தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தனர். இவ்வளவு பெரிய முரண்பாடுகள் இருந்தபோதிலும், 51 தொகுதிகளிலும் மறுவாக்குப்பதிவு நடத்தப்படவில்லை.
வாக்குப்பதிவின் கடைசி ஒரு மணி நேரம்: கணக்கே இல்லாத தேர்தல் ஆணையம்!
2024 தேர்தல்களில் ஆய்வு செய்யப்பட்ட 530 தொகுதிகளில் 200 தொகுதிகளில் மாலை 5 மணிக்குப் பிறகு எத்தனை பேர் வாக்களித்தார்கள் என்ற விவரமே தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களில் இல்லை என்பதும் அம்பலமாகியுள்ளது. 2024 தேர்தல்களில் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, கடைசி ஒரு மணி நேரத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவைக் கண்காணிப்பது மிகவும் அவசியமானது. ஏனெனில், அந்த நேரத்தில் பல கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் வெளியேறியிருப்பார்கள். இத்தகைய சூழலில் கள்ள ஓட்டுகள் போடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஆனால், மாலை 5 மணிக்குப் பிறகு வாக்களித்தவர்களின் எண்ணிக்கையைப் பதிவு செய்யாத 200 தொகுதிகளில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 114 சட்டமன்றத் தொகுதிகளும், ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த 44 தொகுதிகளும், ஹரியானாவைச் சேர்ந்த 22 தொகுதிகளும் அடங்கும். மக்களவைத் தேர்தலிலும் மகாராஷ்டிராவின் 48 தொகுதிகளில் 18 தொகுதிகள், ஹரியானாவின் 10 தொகுதிகளில் ஒரு தொகுதி, ஜம்மு-காஷ்மீரின் ஐந்து தொகுதிகளில் ஒரு தொகுதி எனப் பல தொகுதிகளில் இந்தப் பதிவுகள் இல்லை.
இதுமட்டுமின்றி, வாக்குப்பதிவு முடிவடையும் மாலை 6 மணிக்கு வாக்குச்சாவடிகளுக்கு வெளியே வரிசையில் காத்திருப்பவர்களுக்கு வழங்கப்படும் வரிசைச் சீட்டுகளின் எண்ணிக்கையும் 23 தொகுதிகளில் பதிவு செய்யப்படவில்லை. வாக்குப்பதிவு நேரம் முடிந்த பிறகும் வாக்களிக்க அனுமதிக்கப்படுபவர்கள், மாலை 6 மணிக்கு முன்பே வரிசையில் நின்றவர்கள் மட்டுமே. இதற்காக அவர்களுக்கு வரிசைச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன. வரிசையில் கடைசியாக நிற்பவருக்கு முதலாவது சீட்டு வழங்கப்பட்டு, அங்கிருந்து வரிசையின் முன்புறம் நோக்கி அடுத்தடுத்த எண்கள் வழங்கப்படும். இவ்வாறு வழங்கப்பட்ட மொத்தச் சீட்டுகளின் எண்ணிக்கையைப் பதிவு செய்வதும் தேர்தல் அதிகாரிகளின் கடமையாகும். இந்த எண்ணிக்கை இல்லையென்றால், வாக்குப்பதிவு நேரம் முடிந்த பிறகு சட்டவிரோதமாக யாரேனும் வரிசையில் சேர்க்கப்பட்டார்களா என்பதைச் சரிபார்க்க முடியாது.
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் மாலை 5 மணிக்கு 58.22 சதவீதமாக இருந்த வாக்குப்பதிவு, மறுநாள் 66.05 சதவீதமாக உயர்ந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த மாற்றம் சுமார் 76 லட்சம் கூடுதல் வாக்குகள் பதிவானதாகக் காட்டியது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு இவ்வளவு பெரிய அளவில் வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. ஆனால், தேர்தல் ஆணையத்தின் சொந்த ஆவணங்களில் மாலை 5 மணிக்குப் பிறகான வாக்குப்பதிவு விவரங்கள் கிடைத்த 174 தொகுதிகளில் பதிவான வாக்குகள் 50.87 லட்சம் மட்டுமே. தேர்தல் ஆணையம் அறிவித்த 76 லட்சம் கூடுதல் வாக்குகளுக்கும், இந்த 50.87 லட்சம் வாக்குகளுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிர தலைமைத் தேர்தல் அதிகாரி சொக்கலிங்கம், மாலை நேரத்தில் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டு வந்ததால் வாக்குப்பதிவு சதவீதம் உயர்ந்ததாக விளக்கமளித்தார். ஆனால், மகாராஷ்டிராவின் 288 சட்டமன்றத் தொகுதிகளில் 114 தொகுதிகளில் மாலை 5 மணிக்குப் பிறகான வாக்குப்பதிவு விவரங்களே இல்லை. அப்படியிருக்க, அந்தத் தொகுதிகளில் மாலை நேரத்தில் வாக்காளர்கள் திரண்டு வந்ததாக அவர் எந்த அடிப்படையில் கூறினார்?
இதற்கு இன்னொரு உதாரணம் கோப்ரி-பச்பகாடி சட்டமன்றத் தொகுதி. இங்கு அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே வெற்றி பெற்றார். தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களின்படி, மாலை 5 மணி வரை 1.13 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால், நாள் முடிவில் மொத்த வாக்குகள் 2.03 லட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது, கடைசி ஒரு மணி நேரத்தில் மட்டும் 366 வாக்குச்சாவடிகளில் 89,878 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதன்படி, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஒவ்வொரு நிமிடத்துக்கும் சராசரியாக நான்கு பேர் வாக்களித்திருக்க வேண்டும். ஒரு வாக்காளரின் அடையாளத்தைச் சரிபார்த்து, பதிவேட்டில் கையெழுத்து பெற்று, விரலில் மை வைத்து, ஈ.வி.எம்.-இல் வாக்களித்து வெளியேறுவதற்கான நடைமுறைகள் அனைத்தும் வெறும் 15 நொடிகளில் முடிந்திருக்க வேண்டும். இந்தக் கணக்கு எந்த அளவுக்கு நம்பமுடியாததாக போலியானதாக இருக்கிறது என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ள முடியும்.
கணக்குகளை மறைக்கும் நடைமுறையும் விதித் திருத்தமும்!
வாக்குப்பதிவின்போது முறைகேடுகள் நடைபெறாமல் தடுப்பதற்காகவே தேர்தல் விதிகளில் பல்வேறு கண்காணிப்பு நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்காளரும் வாக்குச்சாவடிக்குள் நுழைந்ததும் அவருடைய விவரங்கள் படிவம் 17A எனப்படும் வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும். அதே நேரத்தில், ஈ.வி.எம்.-இல் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கையும் தனியாகக் கண்காணிக்கப்பட வேண்டும். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை ஈ.வி.எம்.-இன் கட்டுப்பாட்டுக் கருவியில் உள்ள ‘டோட்டல்’ பொத்தானை அழுத்தி, அதுவரை பதிவான வாக்குகளின் எண்ணிக்கையைப் பெற்று, வாக்காளர் பதிவேட்டில் உள்ள எண்ணிக்கையுடன் ஒப்பிட வேண்டும். இந்த விவரங்களை வாக்குச்சாவடி தலைமை அதிகாரி தனது குறிப்பேட்டில் (Presiding Officer’s Diary) பதிவு செய்ய வேண்டும்.
வாக்குப்பதிவு முடிந்ததும், படிவம் 17A-வில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையும், ஈ.வி.எம்.-இல் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையும் ஒப்பிடப்பட்டு, படிவம் 17C-யின் முதல் பகுதியில் பதிவு செய்யப்பட வேண்டும். வாக்காளர் வாக்குச்சாவடிக்குள் வந்தும் வாக்களிக்க மறுப்பது அல்லது வாக்கின் ரகசியத்தைக் காப்பாற்றும் விதியை மீறியதால் தலைமை அதிகாரியால் வாக்களிக்கத் தடுக்கப்படுவது போன்ற அரிதான விதிவிலக்குகளைத் தவிர, இந்த இரண்டு எண்ணிக்கைகளும் ஒன்றாக இருக்க வேண்டும். மறுநாள் தேர்தல் அதிகாரி இந்த ஆவணங்களை ஆய்வு செய்து, முரண்பாடுகள் இருந்தால் மறுவாக்குப்பதிவுக்குப் பரிந்துரைக்க வேண்டும். தேர்தல் முறைகேடுகளைக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்ட கண்காணிப்பு முறை இதுதான்.
ஆனால், இந்தக் கண்காணிப்பு முறையே பல தொகுதிகளில் செயலிழந்திருக்கிறது. வாக்குப்பதிவின் கடைசி ஒரு மணி நேரத்துக்கான கணக்குகள் இல்லை; வாக்காளர் எண்ணிக்கைக்கும் ஈ.வி.எம். வாக்குகளின் எண்ணிக்கைக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளன; சில தொகுதிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கையே பூஜ்ஜியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய ஆவணங்களைச் சரிபார்த்து முறைகேடுகளைக் கண்டறிய வேண்டிய தேர்தல் ஆணையம், அவற்றைப் பொதுமக்களிடம் வெளிப்படையாக வெளியிடுவதற்குப் பதிலாக மறைத்து வருகிறது.
2024 மக்களவைத் தேர்தலின்போது ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR), அனைத்து வாக்குச்சாவடிகளின் படிவம் 17C ஆவணங்களையும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கோரியது. ஆனால், தேர்தல் ஆணையம் அந்தக் கோரிக்கையை எதிர்த்து, வேட்பாளர் அல்லது அவருடைய முகவரைத் தவிர வேறு யாருக்கும் படிவம் 17C-ஐ வழங்குவதற்குச் சட்டப்பூர்வக் கடமை இல்லை என்று வாதிட்டது. மேலும், இத்தகைய ஆவணங்களைப் பொதுவெளியில் பகிர்ந்தால் தேர்தல் நடைமுறைகளில் குழப்பம் ஏற்படும் என்றும் கூறியது.
இதற்கிடையில், பத்கல் தொகுதியில் தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளர் விஜய் பிரதாப் சிங் உள்ளிட்டோர் தேர்தல் ஆவணங்களையும் சிசிடிவி காட்சிகளையும் கோரி வழக்குத் தொடர்ந்தனர். 2024 டிசம்பர் 10 அன்று பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றம் தேர்தல் ஆவணங்களையும் சிசிடிவி காட்சிகளையும் வழங்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. ஆனால், பத்து நாட்களுக்குப் பிறகு, டிசம்பர் 20 அன்று இரவு ஒன்றிய பாஜக அரசு தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் செய்து, மின்னணு ஆவணங்கள், சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பதிவுகளைப் பொதுமக்கள் அணுகுவதைத் தடுத்துவிட்டது.
தேர்தல் முறைகேடுகள் குறித்த புகார்கள் எழுந்து, நீதிமன்றம் தேர்தல் ஆவணங்களை வழங்குமாறு உத்தரவிட்ட உடனேயே, பொதுமக்கள் அந்த ஆவணங்களைப் பெற முடியாத வகையில் விதிகள் மாற்றப்பட்டுள்ளன. தேர்தல் முறைகேடுகளை வெளிக்கொணரக்கூடிய ஆவணங்களை மறைக்கும் இந்த நடவடிக்கை, தேர்தல் ஆணையமும் ஒன்றிய பாஜக அரசும் கைகோர்த்துக் கொண்டு தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடுவதையும், ஒருவரை ஒருவர் பாதுகாத்துக் கொள்வதையும் தெளிவாகக் காட்டுகிறது.
2019 மக்களவைத் தேர்தல் வரை வாக்குச்சாவடி அளவிலான வாக்குப்பதிவுத் தரவுகளைத் தேர்தல் ஆணையம் பொதுவெளியில் வெளியிட்டு வந்தது. அதன்பிறகு, இந்த முக்கியமான தரவுகளை வெளியிடுவதை நிறுத்திவிட்டது. இப்போது 2024 தேர்தல்களில் 51 தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதும், 200 தொகுதிகளில் மாலை 5 மணிக்குப் பிறகான வாக்குப்பதிவுக் கணக்குகள் இல்லாததும் வெளிவந்துள்ளன. இந்தத் தரவுகள் பொதுமக்களுக்குக் கிடைத்திருந்தால், அரசியல் கட்சிகளும் வாக்காளர்களும் தேர்தல் முறைகேடுகளை உடனடியாகக் கண்டறிந்து கேள்வி எழுப்பியிருக்க முடியும்.
மக்களின் வாக்குரிமையைப் பாதுகாத்து, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதற்காகவே தேர்தல் ஆணையம் உருவாக்கப்ப்பட்டிருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால் இங்கே தேர்தல் ஆணையம் என்பது ஆளும் கட்சியின் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கான அமைப்பாகச் செயல்பட்டிருக்கிறது. 2024 தேர்தல் ஆவணங்கள் இதனை உறுதிபடுத்துகின்றன. வாக்குப்பதிவைக் கண்காணிக்க வேண்டிய அமைப்பு கணக்குகளைப் பராமரிக்கத் தவறுகிறது; முரண்பாடுகளைக் கண்டறிய வேண்டிய அமைப்பு அவற்றுக்கு விளக்கமளிக்க மறுக்கிறது; மக்களின் பார்வைக்கு வர வேண்டிய ஆவணங்களைப் பொதுமக்களிடமிருந்து மறைக்கிறது. இதற்கெல்லாம் மேலாக, ஆவணங்களை அணுகுவதற்கான உரிமையையே பறிக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு விதிகளைத் திருத்துகிறது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தையும் செயல்பாடுகளையும் ஆளும் பாஜக-ஆர்.எஸ்.எஸ். காவிப் பாசிசக் கும்பலின் தேர்தல் நலன்களுக்குச் சாதகமாக மாற்றியமைக்கும் அரசியல் போக்கின் ஒரு பகுதியாகவே இவற்றைப் பார்க்க வேண்டும்.
- அழகு
தகவல் ஆதாரங்கள்



