தேர்தல் ஆணைய முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டதாம்!
அம்பலமானதை மூடி மறைக்க மற்றுமொரு அண்டப்புளுகு!

செப்டம்பர் 23 ஆம் தேதி அம்பலமான சதிகளை, உண்மைகளை எதுவும் செய்ய முடியாமல் திருடனுக்குத் தேள் கொட்டியதுபோல, காவி பாசிசக் கும்பலும் தேர்தல் ஆணையமும் கள்ள மெளனம் காத்தன. தற்போது, ஒரு மாதம் கழித்து அக்டோபர் 26 ஆம் தேதி அவற்றை மூடி மறைக்க எடுத்த முயற்சிகளும் முற்றாகத் தோல்வியடைந்துள்ளன. உண்மைகளை மறைக்க உருப்படியான பொய்களைக் கூட 35 நாட்களாக அவர்களால் தயாரிக்க முடியவில்லை!

செங்கனல் நவம்பர் – டிசம்பர் – 2026 – சிறப்பிதழில் வெளியான கட்டுரை.

அம்பலமான எஸ்.ஐ.ஆர். – தேர்தல் ஆணைய சதித் திட்டங்கள்

தேர்தல் ஆணையத்தின் கூட்டக் குறிப்புகளை (minutes of meeting) ஆராய்ந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் 23 செப்டம்பர் 2026 அன்று பதிப்பித்த புலனாய்வுக் கட்டுரை, அதனுள் நடந்த பல அரசியலமைப்பு மீறல்கள், சதிகளை வெளிக்கொணர்ந்தது. தேர்தல் ஆணையம் தனது எல்லா முடிவுகளையும் ஒருமனதாகவோ அல்லது பெரும்பான்மை அடிப்படையிலோதான் எடுக்க வேண்டும் என்கிறது, அரசியலமைப்புச் சட்டம். ஆனால், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மற்ற இரு ஆணையர்களின் ஒப்புதலைக் கேட்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்டுள்ளார் என்பதற்குப் பல சான்றுகளை அக்கட்டுரை பட்டியலிட்டது. அவற்றுள் முக்கியமாகத் தேர்தல் ஆணையத்தின் பெயரில் வெளியான உத்திரவுகள், முடிவுகள் பலவும் தங்களுக்குத் தெரியாமலேயே எடுக்கப்பட்டன என்று தேர்தல் ஆணையர்களான சுக்பீர்சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி பதிவு செய்துள்ளனர் என்பது அம்பலமானது. அக்டோபர் 2025 முதல் ஆகஸ்ட் 2026 வரையிலான 10 மாதங்களில் 14 முறை தங்கள் ஆட்சேபனையை தலைமைத் தேர்தல் ஆணையாரான ஞானேஷ் குமாரிடமே வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர் என்ற விவரமும் ஆதாரங்களுடன் அம்பலமானது.

தேர்தல் ஆணையம் இரண்டு ஆணையர்களின் ஆணைக்குக் கீழ்ப்படியாமல் செயல்பட்டிருப்பது பற்றி ஆணையத்திற்குள் சுக்பீர்சிங் சந்து பேசியிருப்பது எழுத்துப் பூர்வமாகவே பதிவாகியுள்ளது. குறிப்பாக, புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கான படிவம்-6இல் புதிதாக ஒரு ஒப்புதல் படிவத்தை (declaration form) (அதாவது புதிய கேள்வி) இணைத்துள்ளது என்று இந்தியன் எக்ஸ்பிரசில் ஜூலை 12 2026 அன்று அம்பலப்படுத்தியது. அப்படிவத்தில் தன் பெயர் அல்லது தனது பெற்றோர் அல்லது மூதாதையர் பெயர் 2003இல் நடைபெற்ற SIR பட்டியலில் உள்ளதா இல்லையா என்று தெரிவிக்க வேண்டும். இணையத்தில் படிவம்-6 ஐ நிரப்பும்போது அப்பகுதியை நிரப்பாமல் அடுத்த கேள்விக்குச் செல்ல முடியாதபடி (அதாவது கட்டாயமாக பதிலளிக்க வேண்டிய கேள்வியாக) அது வடிவமைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 13 2026 அன்று, படிவம்-6இல் உள்ள மாற்றங்கள் குறித்து, அவை “அதிகாரப்பூர்வமற்ற மற்றும் சட்டவிரோத” (unauthorized and illegal) மாற்றங்கள் என்றும் அவை “உடனடியாக நீக்கப்பட வேண்டும்” என்றும் சுக்பீர்சிங் சந்து எழுத்துப் பூர்வமாகவே தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, ஜூலை 29 2026 அன்று ஜோஷி மற்றும் சுக்பீர்சிங் ஆகிய இருவரும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து ஒன்றிய அமைச்சரவை செயலாளருக்குத் தனித்தனியே கடிதங்கள் அனுப்பியுள்ளனர். இது இந்தியத் தேர்தல் ஆணைய வரலாற்றில் முன்னெப்போதும் நடந்திராத (unprecedented) ஒன்றாகும். தேர்தல் ஆணையத்தின் தகவல் தொழில்நுட்பத் (IT) துறையில் நடந்த மாற்றங்கள் தங்களுக்குத் தெரிவிக்கப்படாமல் செய்யப்பட்டவை என்று அக்கடிதங்களில் இருவரும் எழுத்துப்பூர்வமாகக் குறிப்பிட்டுள்ளனர்.  ஜனவரி 2026-இல் தேர்தல் ஆணையம் ECI Net என்ற புதிய இணையதளத்தைத் தொடங்கியது. இணையம் வழியாக ERO-க்கள் மக்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு வழிவகை செய்வதாகச் சொல்லி இத்தளத்தைத் தொடங்கியது. சட்டப்படி ERO-க்களுக்கு மட்டும்தான் வாக்காளர்களை இணைக்கவோ நீக்கவோ அதிகாரம் (statutory authority) உள்ளது. ஆனால், அந்த அதிகாரம் ERO-க்களிடம் இல்லாமல் மத்தியத் தேர்தல் ஆணையத்தில் யாரோ இத்தளத்தை இயக்குகிறார்கள் என்ற சந்தேகம் எழவே, மே 29 2026 அன்று, இந்த அமைப்பு சரியாக வேலை செய்கிறதா என்று சரிபார்க்க வேண்டும் என்று விவேக் ஜோஷி தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 14 2026 அன்று சுக்பீர்சிங் சந்துவும் இக்கருத்தை ஆமோதித்துள்ளார்.

இவை அனைத்தும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வந்து அம்பலமானவை. இவையன்றி வேறுபல சதிகளும் அம்பலமாகியுள்ளன.

  1. மேற்கு வங்கத்தில் நடத்தப்பட்ட SIR-ஆல் 64 லட்சம் பெயர்கள் வீட்டில் இல்லாதோர் /குடிபெயர்ந்தோர்/இறந்தோர்/ஒன்றுக்கு மேற்பட்ட முறை இடம்பெற்றோர் (ASDD – Absent/Shifted/Dead/Duplicated) என்ற காரணத்தால் நீக்கப்பட்டன. மேலும் 60 லட்சம் பெயர்கள் சந்தேகத்திற்கு இடமானவை என்று கருதி சட்ட அலுவலர்கள் மேற்பார்வையில் சரிபார்க்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அந்த 60 லட்சத்தில் 33 லட்சம் பேர் மீண்டும் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டனர். மீதமுள்ள 27 லட்சம் பேர் தர்க்க முரண்பாடு (logical discrepancy) என்ற காரணம் கூறப்பட்டு பட்டியலில் இணைக்கப்படவில்லை. அந்த 33 லட்சம் பெயர்களை இணைப்பதை எதிர்த்து 16.1 லட்சம் கூட்டு எதிர்மனுக்கள் (counter affidavit) தேர்தல் ஆணையத்தின் பெயரில் கொடுக்கப்பட்டன. ஆகஸ்ட் 12 2026 அன்று தேர்தல் ஆணையர் சுக்பீர்சிங் சந்து, இந்த எதிர் மனுக்களை தேர்தல் ஆணையத்தின் சார்பில் யார் தாக்கல் செய்தார் என்று தெரியவில்லை எனத் தேர்தல் ஆணையக் குறிப்புகளில் பதிவிட்டுள்ளார்.
  2.  கோவாவில் நடந்த SIR-ஐ அடுத்து பெயர் நீக்கப்பட்ட 97 வாக்காளர்கள் தங்கள் பெயர்களை மீண்டும் பட்டியலில் இணைக்கக் கோரி, வேண்டிய ஆவணங்களை ERO-விடம் சமர்ப்பித்தனர். உச்சநீதிமன்றம் அவர்களை இணைக்குமாறு உத்திரவிட்டபிறகும், ERO தன்னால் ECI Net இணையதளத்தில் அவர்களின் பெயர்களை இணைக்க இயலவில்லை என்று கூறியதால் கோவாவின் மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையர் சஞ்சய் கோயல், மத்தியத் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ஏழு நாட்களில் எட்டு மின்னஞ்சல்கள் அனுப்பி முறையிட்டுள்ளார். ஆனால், தற்போதுவரை அவர்களின் பெயர்கள் இணைக்கப்படவில்லை. தகுதி இருந்தும் அவர்களின் பெயர்கள் ஏன் இணைக்கப்படவில்லை என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, சஞ்சய் கோயல் “அது மத்தியில் எடுக்கப்பட்ட முடிவு, இதை மாற்ற எங்களுக்கும் சற்று அதிகாரம் தேவை” என்று கூறியுள்ளார். SIR நடைமுறையில் அனைத்து அதிகாரங்களும் ERO-விடமே உள்ளன; அதனால் SIR ஜனநாயகமானது என்று சத்தியம் செய்த இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பொய் இதன் மூலம் அம்பலமானது.
  3. உத்தராகண்ட் மாநிலத்தில் கொத்துக்கொத்தாக படிவம்-7 (Form-7) தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. படிவம்-7 என்பது வாக்காளர்களை நீக்குவதற்கான விண்ணப்பம். கிச்சா என்ற ஊரிலிருந்து 5000-க்கும் மேலான பெயர்கள் படிவம்-7இன் மூலம் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டபின் மீண்டும் நீக்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் ராஜேஷ் திவாரி என்ற பாஜகவின் வாக்குச்சாவடி முகவர் (Booth Level Agent – BLO) ஒருவரால் மட்டுமே நிரப்பப்பட்டவை. அம்மக்கள் யாவரும் இந்தப் பாஜக-காரனை  இதுவரை நேரில் கண்டது கூட இல்லை.
  4. உத்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்த SIR-இல் அதேபோல் கொத்துக்கொத்தாக  படிவம்-8 (Form-8) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. படிவம்-8 என்பது வாக்காளர்களின் பெயர், முகவரி, புகைப்படம் போன்ற விவரங்களை மாற்றுவதற்கான விண்ணப்பம். இதனால் வாக்காளர் அடையாள எண் மாறாது. அதாவது முஸ்லீம் ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டையில் அவர் பெயரை இந்துப் பெயராக மாற்றிவிட்டு வேறொரு புகைப்படத்தைப் பதிவேற்றுவர். அப்போது அந்த வாக்காளர் அடையாள அட்டை இந்து வாக்காளருடையது போன்ற தோற்றம் வரும். தேர்தல் அன்று போலி வாக்காளர் ஒருவர் போலி அடையாள அட்டையைக் கொண்டு வாக்களித்து விடுவார்.  அதனால் அந்த வாக்காளர் எண்ணிற்குறிய நியாயமான வாக்காளரின் உரிமை பறிக்கப்படுகிறது. பிலிபிட் என்ற தொகுதியில் மட்டும் படிவம்-8 நிரப்பப்பட்டு 10000-க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் அடையாளங்கள் மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதை உத்திரப் பிரதேச தேர்தல் ஆணையரே ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது வரை அந்த ஒரு தொகுதியில் மட்டும் 2500-க்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் இன்றும் உள்ளனர். அந்த வாக்காளர் எண்களுக்கு அசலான சொந்தக்காரர்கள் இசுலாமியர்கள். அதாவது முஸ்லீம் வாக்காளர்களின் எண்களில் போலி இந்து வாக்காளர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடெங்கிலும் பல அமைப்புகளும் சமூக செயல்பாட்டாளர்களும் உச்ச நீதிமன்றத்தில் SIR-க்கு எதிராக வழக்குத் தொடுத்தனர். அதன் தாக்கத்தை உணர்ந்த தேர்தல் ஆணையம் இதைச் சமாளிக்கப் பல்வேறு கட்டுக்கதைகளை விளக்கங்களாக அளிக்கத் தொடங்கியது. செப்டம்பர் 23 இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரைக்கு பதில் அளிக்கும் வகையில் செப்டம்பர் 26 அன்று படிவம்-6இல் புதிதாக இணைக்கப்பட்ட ஒப்புதல் படிவம் உச்ச நீதிமன்ற அனுமதி பெற்றே இணைக்கப்பட்டது என்று கூறியது. தேர்தல் ஆணையத்தின் எல்லா அரசியலமைப்பு மீறல்களுக்கும் துணை நின்ற உச்சநீதிமன்றம், மக்களின் எதிர்ப்புகளுக்கு அஞ்சி, “அத்தகைய ஒப்புதல் எதையும் தான் வழங்கவில்லை” என்ற உண்மையை அக்டோபர் 5 அன்று போட்டுடைத்துவிட்டது.

இவையெல்லாம்தான் அம்பலமாகி நாடே நாறிய செய்திகள். தற்போது டெல்லியில் நடந்துவரும் போராட்டங்களுக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையும், அம்பலமான பிற விவரங்களும்தான் முக்கியத் தூண்டுகோலாகவே உள்ளன.

00000000000000000

தேர்தல் ஆணையத்தின் 27 பக்க பிரமாணப் பத்திரமும் (affidavit)
அதில் உள்ள அண்டப் புளுகுகளும்

 

மக்கள், எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள், உச்ச நீதிமன்ற வழக்குகளின் அழுத்தம் தாங்காமல், தன்மீது சுமத்தப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக தேர்தல் ஆணையம் அக்டோபர் 26 2026 அன்று ஒரு 27 பக்க பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தது. அதன் ஒவ்வொரு வரியும் அண்டப்புளுகு ஆகாசப் புளுகாகவே உள்ளன.

அப்பத்திரத்தில் தேர்தல் ஆணையம் கூறியிருப்பவையும் அவற்றின் உண்மைத்தன்மையும்:

1. தேர்தல் ஆணையம் ஒருமித்த கருத்துடனேயே செயல்படுகிறது:

தேர்தல் ஆணையத்தில் ஒரு முடிவு கலந்தாலோசிக்கப்படும்போது முரண்பட்ட கருத்துகள் முன்வைக்கப்படுவது இயல்பே. அவ்வாறு ஜோஷி, சந்து இருவரும் தெரிவித்த கருத்துக்கள், எதிர்ப்புகள், கேள்விகள் எல்லாம் எங்கள் விவாதத்தின் ஒரு பகுதியே (part of the consultation process) தவிர, இறுதி முடிவல்ல. முடிவெடுக்கும்போது ஒருமனதாகவே எடுக்கப்பட்டது என்கிறது தேர்தல் ஆணையம். உண்மை என்ன? நாம் முன்னரே பார்த்தது போல் படிவம்-6இல் புதிய பகுதியான பிரகடனப் படிவம் இணைக்கப்பட்டதோ ஜூலை 12 2026. ஆனால், அதற்கு தேர்தல் ஆணையர்கள் ஆட்சேபம் தெரிவித்ததோ ஆகஸ்ட் 12 2026. அதாவது முடிவெடுக்கப்பட்டு நடைமுறைக்குச் சென்று 30 நாட்கள் கழித்து! இதுதான்  ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவின் இலட்சணமா?!

2. தேர்தல் ஆணையத்தின் பெயரில் வெளியிடப்பட்ட ஆணைகள், முடிவுகள் சரியானவையே:

1996 மற்றும் 1997 அதிகார ஒப்படைப்பு ஆணைகளின் அடிப்படையில் மத்திய தேர்தல் ஆணையம் தன் அலுவலர்களுக்கு சில அதிகாரங்கள் கொடுக்கப்படும். அதன் அடிப்படையிலேயே தேர்தல் ஆணையம் என்ற பெயரில் சில ஆணைகள், செய்திகள், தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கும். அவை அனைத்தும் தேர்தல் ஆணையர்களின் ஒப்புதலோடு செய்யவேண்டிய அவசியம் இல்லை, தெரியாமல் செய்தால் பிழையும் இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. இந்த மழுப்பலும் பொய்தான். இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரைப்படி, மேற்கு வங்கத்தில் வாக்காளர் சேர்க்கைக்கு எதிரான 16 லட்சத்திற்கும் மேற்பட்ட எதிர் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பது சந்து, ஜோஷி ஆகிய இருவருக்குமே தெரியாது. உச்சபட்ச அதிகாரத்தில் இருக்கும் அவர்களே “ஊடகங்களில் பார்த்துதான் தாம் தெரிந்துகொண்டதாக” எழுத்துப் பூர்வமாகப் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு மட்டுமல்ல, “மேற்கு வங்கத் தலைமை தேர்தல் ஆணையரிடம் (CEO) இதுகுறித்து தான் கேட்டபோது, அவருக்கும் இது தெரியாது என்று கூறினார்” என்பதையெல்லாம் ஜோஷி எழுத்துப் பூர்வமாகப் பதிவு செய்துள்ளார்.

மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி, மத்தியத் தேர்தல் ஆணையர்கள் என யாருக்கும் தெரியாமல் இவ்வதிகாரங்கள் யாரால் வழங்கப்பட்டிருக்கின்றன?! இது 1996-97 ஆணைகளின்படி இவர்களுக்குத் தெரியாமல் இத்தகைய முடிவுகளையும் எடுக்கலாமா?! உத்திரவுகளையும் பிறப்பிக்கலாமா?!

இவையெல்லாம் அம்பலமான பிறகு, மேற்கு வங்கத் தேர்தல் ஆணையம் தான் எதிர்மனுக்களை விடுத்தது என்று அக்டோபர் 23 அன்று (அதாவது, இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை வந்து ஒரு மாதம் கழித்து!) பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளது. அதுவும் குறிப்பிட்டு இன்னார் என்று கூறாமல் பொத்தாம்பொதுவாக மேற்கு வங்க தேர்தல் ஆணைய அலுவலர்கள் செய்த வேலை என்று சொல்லியிருக்கிறது. இதன்பொருள் என்ன? ஞானேஷ் குமாரின் தில்லுமுல்லுகள் வெளிப்பட்டுவிடக் கூடாதென்பதற்காக மேற்கு வங்கத் தேர்தல் ஆணையத்தை மிரட்டி இப்பத்திரத்தை வெளியிட வைத்துள்ளனர் என்பதே!

3. தேர்தல் ஆணையத்திற்குள்ளான வேலைப் பிரிவினை தொடர்பான குற்றச்சாட்டுகள்

உள்வேலை ஒதுக்கீடு குழப்பத்தால் தகவல் தொழில்நுட்பத் துறையில் தங்கள் கண்காணிப்புக் குறைவது குறித்து இரு தேர்தல் ஆணையர்களும் தனித்தனியே ஒன்றிய அமைச்சரவை செயலாளருக்குக் கடிதங்கள் எழுதியது உண்மைதான். ஆனால், கடிதம் எழுதிய இரண்டு நாட்களில் இரு ஆணையர்களும் இட்ட உத்திரவால் அக்குழப்பம் தீர்ந்து, பழையபடியான நிலைமைக்கே திரும்பிவிட்டோம் என்று 27 பக்க பிரமாணப் பத்திரம் கூறுகிறது. இது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாகும். பிரச்சனை இவ்வளவு சுலபமாகத் தீருமென்றால் தனித்தனியே கடிதங்கள் எழுதுவானேன்?! அப்படியே குழப்பம் தீர்ந்து பழைய நிலைமைக்கு வந்துவிட்டால் படிவம்-6இல் மாற்றங்கள் நடந்தது எப்படி ஆணையர்களுக்குத் தெரியாமல் போகும்?! தேர்தல் ஆணையர்களின் அங்கலாய்ப்பும் தேர்தல் ஆணையத்தின் பிரமாணப் பத்திரமும் எவ்வளவு முரணாக உள்ளது! ஜூலை 30 அன்று அந்தக் குழப்பம் தீர்ந்ததென்று தேர்தல் ஆணையம் கூறினாலும், ஆகஸ்ட் 14 அன்று (அதாவது 14 நாட்கள் கழித்து!) தேர்தல் கள அலுவலர்களுக்கு ECI Net தளத்தை இயக்கும் அதிகாரம் நீக்கப்பட்டதாக சுக்பீர்சிங் எதற்காகக் தேர்தல் ஆணையக் குறிப்பேட்டில் எழுத வேண்டும்?! தகவல் தொழில்நுட்பத் துறை தலைமை இயக்குநர் சீமா கண்ணாவுக்கு வாக்காளர் பட்டியலை மாற்றவும், ERO-க்கள்  ECI Net தளத்தை பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கும் சட்டப்படி அதிகாரம் இல்லை என்றும் அவர் அடிக்கோடிடுகிறார். அதாவது வாக்காளர் பட்டியலைத் திருத்தும் சட்டப்பூர்வ அதிகாரம் முழுக்க முழுக்க களத்தில் பணியாற்றும் ERO-க்கள் வசம் இருக்க வேண்டும், தில்லியில் உள்ள இயக்குநரிடம் அல்ல. ஆனால், இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையின்படி ஏப்ரல் 16 2026 அன்றே தலைமை ஆணையர்களால் அனுமதிக்கப்படாத புதிய மென்பொருள் கூறுகள் (modules) ECI Net-இல் இணைக்கப்பட்டதை சுக்பீர் சிங் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்கு மீண்டும் ஜூலை 27 2026 அன்று இரு ஆணையர்களும் எதிர்ப்புத் தெரிவித்துக் கடிதங்கள் எழுதி உள்ளனர். ஆகஸ்ட் 14 2026 வரை அதே நிலை தொடர்வதாகவும் கூறியுள்ளனர். இதற்கு ஆதாரமாக கோவாவில் வாக்காளர்களை இணைக்கும்போது ஏற்பட்ட சிக்கலின்போது ERO-க்கள் ECI Net தளத்தை இயக்கத் தடை இருந்ததும், கோவாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் 7 நாட்களில் 8 மின்னஞ்சல்கள் அனுப்பியதையும் நினைவு கூர்வோம். இது “மத்தியில் எடுக்கப்பட்ட முடிவு” என்று கோவா தேர்தல் ஆணையர் பகிரங்கமாகக் கூறியுள்ளார். நிலைமை இப்படி இருக்க தேர்தல் ஆணையம் குழப்பம் ஏதுமில்லை என்று பச்சைப் பொய் சொல்கிறது!

4. படிவம்-6இல் செய்யப்பட்ட மாற்றங்கள்:

இணையதளத்தில் படிவம்-6 உடன் “இணைந்து காணப்படும்” பிரகடனப் படிவம் உண்மையில் ஒரு தனியான ஆவணம். அது படிவம்-6 உடன் சேர்த்து இணையதளத்தில் பதிப்பிக்கப்பட்டதால் அது மாற்றம் செய்யப்பட்டதுபோலத் தெரிகிறது. அதனால் இரண்டையும் தனித்தனியே நிரப்பாமல் ஒன்றாக நிரப்ப கட்டாயப்படுத்தப்படுவது சரியல்ல. படிவம்-6 இல் மாற்றங்கள் செய்யும் அதிகாரம் பாராளுமன்றத்திடமே உள்ளது என்று பிரமாணப் பத்திரம் ஒப்புக்கொண்டு நல்லவன் வேஷம் போடுகிறது. உண்மையில் இதைத் தவறென்று உணர்ந்திருந்தால் அந்த மாற்றங்கள் யாரால் கொண்டுவரப்பட்டது, அவர் மீது எடுத்த நடவடிக்கை என்ன, இதனால் பாதிக்கப்பட்டோர் யார், அவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் இணைக்கும் வழி என்ன என்று தேர்தல் ஆணையம் வெளிப்படைத்தன்மையோடு அறிவித்திருக்க வேண்டும். 

5. வாக்காளர்களை முந்தைய வாக்காளர் பட்டியலில் தேடுதல்:

படிவம்-6க்கு இணைப்பாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் பிரகடனப் படிவம், தேவையான ஆவணங்களை வழங்க இயலாத வாக்காளர்களுக்கு உதவுவதற்காகக் கொண்டுவரப்பட்டது. முந்தைய வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இருக்கும் பட்சத்தில் மேற்கொண்டு எந்த ஆவணமும் கேட்கப்படாது என்ற உறுதியே இந்தப் பிரகடனப் படிவம் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. இதுவரை இந்தப் புதிய படிவத்தை யார் எப்போது இணைத்தார் என்று ஒன்றும் தெரியாத பிள்ளைபோலக் கேட்டுவிட்டு இப்போது அந்தப் படிவத்தின் அவசியம் குறித்து இவ்வளவு வியாக்கியானம் பேசும் தேர்தல் ஆணையத்தின் ரெட்டை வேடத்தை என்னவென்று சொல்ல!

6. ERO-க்களின் கட்டுப்பாட்டில்தான் வாக்காளர் பட்டியல் திருத்தும் உரிமை உள்ளது:

ECI Net இணையதளம் சட்ட விதிகளுக்கு உட்பட்டே இயங்குகிறது என்பதை உறுதிசெய்ய ஐஐடி மும்பை(IIT Bombay) மற்றும் ஐஐஎஸ்சி (IISc) ஆகிய கல்வி நிறுவனங்களில் இருந்து ஒரு நிபுணர் குழு மூத்த துணைத் தேர்தல் ஆணையர் மேற்பார்வையில் இந்த அமைப்பு முழுவதையும் ஆய்வு செய்யும் என்று தேர்தல் ஆணையப் பத்திரம் அறிவிக்கிறது. இந்த நிபுணர் குழு, தனது ஆய்வில் வாக்காளர் பட்டியலைத் திருத்தும் அதிகாரம் ERO-க்களிடம் மட்டுமே உள்ளதா அல்லது மத்தியில் இருந்தும் அதை இயக்குவதற்கான வழிமுறை உள்ளதா என்று கண்டறியுமாம்! அதாவது நோயாளி இறந்தபின் மருந்து வேலை செய்யுமா செய்யாதா என்று சோதிப்பது போன்ற நடவடிக்கை இது.  ஜனவரி 2026 இல் இந்த இணையதளத்தைத் தொடங்குவதற்கு முன்பல்லவா இத்தகு சோதனைகளை அனைவரும் அறியும் விதம் செய்து காட்டியிருக்க வேண்டும்? தேர்தல்கள் முடிந்தபின், பாஜகவின் முக்கிய எதிர்க்கட்சிகளை ஆட்சியிலிருந்து அகற்றியபின் நடக்கும் இந்த வேலைகள் வெறும் கண்துடைப்பு நடவடிக்கை என்றுதான் எண்ண முடியும்.

7. கோவாவில் விடுபட்ட வாக்காளர்கள்:

கோவாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட, வாக்குரிமைக்குத் தகுதி பெற்ற 97 வாக்காளர்களின் வீடு வீடாகச் சென்று படிவங்களைச் சேகரிக்குமாறு வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. 97 இல் 88 பேரின் படிவங்கள் ஏற்கப்பட்டன, 6 பேர் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டனர், 3 பேர் போர்த்துக்கீசியக் கடவுச்சீட்டு (passport) வைத்துள்ளனர் என்று தேர்தல் ஆணையம் கணக்குக் காட்டுகிறது. இவ்வளவு சொன்ன தேர்தல் ஆணையம் அந்த 88 பேர் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டுவிட்டனரா இல்லையா என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லவில்லை!

8. மேற்கு வங்கத்தில் எதிர்மனுக்கள் நீதிமன்ற ஆணைக்கு உட்பட்டதே:

நாம் முன்பே சொன்னதுபோல் மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலில் தகுதியுள்ள வாக்காளர் பெயர்களைச் சேர்ப்பதற்கு எதிரான மனுக்கள் “தேர்தல் ஆணைய அலுவலர்களால்” போடப்பட்டவை என்று தேர்தல் ஆணையம் “விளக்கி” இருக்கிறது. இதற்கு உச்ச நீதிமன்றமே “அலுவலர்கள்” என்ற போர்வைக்குள் தேர்தல் ஆணையம் ஒளிந்துகொள்ள வேண்டாம் என்று சாடியிருக்கிறது. மேலும், உச்ச நீதிமன்றம் “பாதிக்கப்பட்ட அலுவலர்கள்” குறித்து அளித்திருந்த தீர்ப்பைத் தவறாக மேற்கோள் காட்ட வேண்டாம் என்று எச்சரித்து இருக்கிறது. அதாவது தனியொரு அலுவலர் குறிப்பிட்ட தனித்தனி நிகழ்வுகளில், விவரங்கள் சரிபார்த்தபின் தனியொரு வாக்காளரை பட்டியலில் இருந்து நீக்கலாம் என்கிறது தீர்ப்பு. இதை வைத்துக்கொண்டு மென்பொருள் மூலம் ஒரே சொடுக்கில் 16 லட்சம் வாக்காளர்களை நீக்கும் உரிமை தேர்தல் ஆணையத்திற்கு இல்லை என்று உச்ச நீதிமன்றமே சுட்டிக்காட்டியதால் நமக்கு வேலை மிச்சம்.

00000000000000000

இவ்வாறு செப்டம்பர் 23 ஆம் தேதி அம்பலமான சதிகளை, உண்மைகளை எதுவும் செய்ய முடியாமல் திருடனுக்குத் தேள் கொட்டியதுபோல, காவி பாசிசக் கும்பலும் தேர்தல் ஆணையமும் கள்ள மெளனம் காத்தன. தற்போது, ஒரு மாதம் கழித்து அக்டோபர் 26 ஆம் தேதி அவற்றை மூடி மறைக்க எடுத்த முயற்சிகள் முற்றாகத் தோல்வியடைந்துள்ளன. உண்மைகளை மறைக்க உருப்படியான பொய்களைக் கூட 35 நாட்களாக அவர்களால் தயாரிக்க முடியவில்லை பாவம்!

மக்கள், எதிர்க் கட்சிகளின் போராட்டத்தின் அழுத்தத்தாலும், இந்த பத்திரத்தில் உள்ள ஓட்டைகளாலும் உச்ச நீதிமன்றமே இதை மறைமுகமாகக் காறி உமிழ்ந்துள்ளது. அக்டோபர் 28 அன்று, படிவம் – 6,7,8 ஆகிய அனைத்தும் 1960 வாக்காளர் பதிவு விதிமுறைகளின் கீழ் சட்டமாக இயற்றப்பெற்ற (statutory) ஆவணங்கள் ஆதலால், அதைத் திருத்துவதற்கான முழு அதிகாரமும் நாடாளுமன்றத்திடமே உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் படிவம்-6 மாற்றுவதற்கான அனுமதியை யார் அளித்தார், யார் மாற்றினார் என்று விசாரணையில் தெரிவிக்கும்படியும் தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

நீதிபதி ஜயமால்யா பாக்சி, மேற்கு வங்கத்தில் நடந்த SIR பற்றிப் பின்வரும் கடுமையான கேள்விகளை முன்வைத்துள்ளார்:

  1. தேர்தல் அலுவலர் ERO தன் கடமையைச் செய்திருந்தாலும், ஒரு வாக்காளர் தக்க சமயத்திற்குள் பதிலளிக்கவில்லை என்பதால் அவரின் வாக்குரிமையை நிரந்தரமாகப் பறிப்பது எவ்வகையில் நியாயமாகும்?
  2. குடிபெயர்ந்த முன்னாள் வாக்காளர்களை படிவம்-8ஐ நிரப்பச் செய்யாமல் புதிய வாக்காளர் சேர்க்கைக்கான படிவம்-6ஐ நிரப்பச் சொன்னது ஏன்?
  3. வாக்காளர் பட்டியலில் பெயரை இணைக்கும் பொறுப்பைத் (onus) தேர்தல் ஆணையம் எடுத்துக்கொள்ளாமல் மக்கள்மீது பாரமாக இறக்கியது ஏன்?
  4. “தர்க்கரீதியான முரண்பாடு” காரணமாக வாக்காளர்களை மென்பொருள் கொண்டு பட்டியலில் இருந்து நீக்குவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதியை இன்னும் வழங்கவில்லை,

00000000000000000

புதை குழியில் விழுந்தவன் மேலே எழுவதற்காக காலை உந்தித்தித் தள்ளும் ஒவ்வொரு முயற்சியும் அவனை மேன்மேலும் புதைகுழியில் ஆழ்த்தும். அதுபோல, எஸ்.ஐ.ஆர். – தேர்தல் ஆணையத்தின் சதிகள் அம்பலமாகி, காவி பாசிசக் கும்பலின் கைப்பாவையாக அது மாறியிருப்பது நாடே நாறுகிறது. அதை மூடி மறைக்க ஆணையமும் காவி பாசிசக் கும்பலும் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் அவர்களை மேன்மேலும் அம்பலப்படுத்துகிறது!

  • எலினா & சிறுவன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன