தவறு செய்யும் தவெகவினரைக் கண்டுகொள்ளாத விஜய்;
ஓட்டைப் பலூனை ஊதிப் பெரிதாக்கும் ஊடகங்கள்!
தமிழக மக்கள் நடிகர் விஜயை முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்ததற்கு, ஒருபுறம் முந்தைய திமுக, அதிமுக ஆட்சிகள் மீது மக்களுக்கு இருந்த அதிருப்தி காரணமாக இருந்தது என்றால், மறுபுறம் விஜயை அந்த இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்ததில் ஊடகங்களின் பங்கும் முக்கியமானதாக இருந்தது. விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகும், தவெக ஆட்சியைப் பாதுகாப்பதற்கும், மக்கள் மத்தியில் விஜயின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதற்கும் ஊடகங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
குறிப்பாக, பாலிமர் மற்றும் நியூஸ் 24 ஆகிய இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்களும் தவெகவின் அதிகாரப்பூர்வ செய்தி ஊடகங்கள் போலவே செயல்பட்டு வருகின்றன. சமீபகாலமாக, மாவட்ட ஆட்சியருக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது, மனு அளிக்க வந்தவரைத் தாக்கியது எனத் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது அடுத்தடுத்து கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. ஆனால், இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுந்தும் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மீது தவெக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடும் தவெக எம்.எல்.ஏ.க்கள் குறித்தும், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் முதலமைச்சர் விஜய் குறித்தும் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி உருவாகி வருகிறது. வழக்கம்போல, இந்த அதிருப்தியைத் திசைதிருப்பி, முதலமைச்சர் விஜயின் நற்பெயரைக் காப்பாற்றும் வேலையில் இந்த ஊடகங்கள் இறங்கியிருக்கின்றன.
தீபாவளியன்று, தமிழக சட்டமன்றத் துணை சபாநாயகரும், துறையூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினருமான ரவிசங்கர், குடிநீர் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து மனு அளிக்க வந்த கார்த்திக்குமார் என்பவரைத் தாக்கியுள்ளார். இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் இந்தத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்தக் காணொளி வெளியான சில மணி நேரங்களிலேயே மற்றொரு காணொளியும் வெளியானது. அதில், மனு அளிக்க வந்து தாக்கப்பட்ட கார்த்திக்குமார், ரவிசங்கரின் அருகில் அமர்ந்துகொண்டு, அவர் தன்னைத் தாக்கவில்லை என்றும், கூட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுதான் இதற்குக் காரணம் என்றும் கூறினார். முதல் காணொளியில் தாக்குதல் தெளிவாகப் பதிவாகியிருந்த நிலையில், இரண்டாவது காணொளியில் கார்த்திக்குமார் திடீரெனத் தனது நிலைப்பாட்டை மாற்றி மறுத்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.
இதையடுத்து, கார்த்திக்குமார் மீண்டும் ஒரு காணொளியை வெளியிட்டார். அதில், ரவிசங்கர் தன்னைத் தாக்கியது உண்மைதான் என்றும், தாக்குதலுக்குப் பிறகு மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சை பெறச் சென்றபோது அங்கு வந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருபாநிதி தன்னை மிரட்டியதாகவும் தெரிவித்தார். மேலும், தன்னை ரவிசங்கரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு தாக்குதல் நடைபெறவே இல்லை என்று கூறுமாறு வற்புறுத்தியதாகவும் குற்றம்சாட்டினார். தனது குடும்பத்தினருக்கும் ஆபத்து ஏற்படும் என்று மிரட்டியதால், அவர்கள் சொல்லிக் கொடுத்தபடி பேச வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதோடு போலீசார் நிற்கவில்லை. கார்த்திக்குமார் டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கும் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு, அவரைக் குடிகாரராகச் சித்தரித்தனர். குடித்துவிட்டு வந்து துணை சபாநாயகரிடம் தகராறு செய்ததாகக் கூறி, நடந்த தாக்குதல் சம்பவத்தையே திசைதிருப்பி, பாதிக்கப்பட்டவர் மீதே குற்றத்தைச் சுமத்தவும் முயன்றனர்.
மனு அளிக்க வந்த ஒருவரைத் தாக்கியதோடு மட்டுமல்லாமல், அவரை மிரட்டி அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்று கூறவைத்திருக்கின்றனர். அதற்கும் மேலாக, அவரைக் குடிகாரராகச் சித்தரித்து, தாக்குதலுக்கான பழியைப் பாதிக்கப்பட்டவர் மீதே சுமத்த முயற்சிக்கின்றனர். தமிழக சட்டமன்றத்தின் துணை சபாநாயகரே இத்தகைய அடாவடியில் ஈடுபடுகிறார் என்றால், கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ.வோ இன்னும் ஒருபடி மேலே சென்று மாவட்ட ஆட்சியருக்கே பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஜே.இ. பத்மஜாவுக்குத் தொகுதியின் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் பாலியல் ரீதியான தொல்லை அளித்ததாகச் செய்திகள் வெளியாகின. இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தவெக எம்.எல்.ஏ., மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், அவரது அதிகாரப்பூர்வ இல்லத்திற்குச் சென்று மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாகவும், ஏற்கெனவே அவரிடம் முறையற்ற வகையில் நடந்துகொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாகத் தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் முறையிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்தப் புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, ஒன்றிய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் செயலாளரிடம் அவர் புகார் அளித்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்திற்குத் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியும் இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ளார்.

ஆனால், அதேசமயம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் மாணிக்கம் தாகூர், அருள் விக்னேஷ் பாவம் என்றும், அவர் மீது இதுவரை எந்தக் குற்றமும் நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் அடிப்படையில் ஊடகங்களும் அரசியல் தலைவர்களும் அவரைத் தாக்குவது தவறு என்றும் வாதிட்டுள்ளார்.
மறுபுறம், தங்கள் கட்சி எம்.எல்.ஏ.வைப் பாதுகாப்பதற்காகத் தவெக அமைச்சர்களான ராஜ்மோகனும், சி.டி.ஆர். நிர்மல்குமாரும் வரிந்துகட்டிக்கொண்டு களத்தில் இறங்கினர். இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இதுவரை புகார் அளிக்கவில்லை என்று கூறிய அமைச்சர் ராஜ்மோகன், அவர் புகார் அளித்தால் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும் என்றும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் பொதுவெளியில் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை என்பதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள அமைச்சர் ராஜ்மோகன் முயற்சிக்கிறார் என்றால், சி.டி.ஆர். நிர்மல்குமாரோ அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று மறுத்துவிட்டார். சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு திமுக தங்கள் எம்.எல்.ஏ. மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதாகக் கூறிய அவர், திமுகவினர் தங்கள் கட்சி மீது பழிசுமத்துவதற்காகவே இதுபோன்ற பிரச்சினைகளைக் கிளப்பிவிடுவதாக ஒரு தோற்றத்தை உருவாக்க முயன்றார். இதையே தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷும், தன் மீதும் தவெக ஆட்சியின் மீதும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் திமுகவினர் திட்டமிட்டு வதந்திகளைப் பரப்புவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆனால், தற்போது இந்த விவகாரம் தேசிய மகளிர் ஆணையத்தின் கவனத்திற்குச் சென்றுள்ளது. இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் விஜயா ரஹத்கர், தமிழ்நாடு டிஜிபி மகேஷ் குமார் அகர்வாலுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர் மூத்த அதிகாரிகளிடம் அளித்ததாகக் கூறப்படும் புகார்கள் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், விசாரணையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை ஏழு நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் டிஜிபியிடம் கோரியுள்ளார்.
இந்த இரண்டு சம்பவங்கள் மட்டுமன்றி, த.வெ.க. நிர்வாகிகள் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் வெளியாகி வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்லூரி மாணவிக்கு உதவி செய்வதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக த.வெ.க. மத்திய மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கோவை மாவட்டம் காரமடையில் பெண் த.வெ.க. நிர்வாகி ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக ஒன்றியச் செயலாளர் கருப்புசாமி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியிலும், மாவட்ட நிர்வாகி சத்யராஜ் மீது பாலியல் ரீதியாக முறையற்றுப் பேசியதாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் குற்றம்சாட்டி பெண் த.வெ.க. நிர்வாகிகள் கட்சி அலுவலகத்தைப் பூட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை புகார்கள் தொடர்ந்து எழுந்துவரும் நிலையில், அவற்றின் மீது த.வெ.க. தலைமை இதுவரை உரிய நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை.
கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் நிர்வாகிகள் மீதும் இத்தகைய தீவிரமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவற்றுக்குப் பதிலளித்து முறையான விசாரணையை உறுதிப்படுத்த வேண்டிய விஜய், அனைத்தையும் கண்டும் காணாமல் கடந்து செல்கிறார். இதற்குப் பின்னால் ஓர் அரசியல் கணக்கு இருக்கிறது. த.வெ.க. ஆட்சியே அறுதிப் பெரும்பான்மை இல்லாமல், வெறும் 107 எம்.எல்.ஏ.க்களை வைத்துக் கொண்டு ஆட்சி நடத்தி வருகிறார் விஜய். இந்நிலையில், கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுத்தால் ஆட்சி நடத்துவதற்குத் தேவையான பெரும்பான்மையின்றி நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அவர்கள் கட்சிக்கு எதிராகத் திரும்பக்கூடும் என்ற அரசியல் கணக்கில்தான் விஜய் மௌனம் காத்து வருகிறார்.
பொது மேடைகளில் பெண்களின் பாதுகாப்புதான் முக்கியம் என்று முழங்கும் விஜய், நடைமுறையில் பெண்களின் பாதுகாப்பையும் அரசியல் ஒழுக்கத்தையும் கட்சியின் நற்பெயரையும் விட ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்கே முன்னுரிமை அளிக்கிறார். கட்சியினரின் இத்தகைய நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் உருவாகிவரும் அதிருப்தியைப் போக்குவதற்குப் பதிலாக, அந்த அதிருப்தியை மடைமாற்றும் வேலையில் த.வெ.க. ஆதரவு ஊடகங்கள் இறங்கியுள்ளன. குறிப்பாக, பாலிமர் மற்றும் நியூஸ் 24 ஆகிய இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்களும் இதில் முன்னணியில் செயல்பட்டு வருகின்றன.
தீபாவளிக்குப் பிறகு மாமல்லபுரத்தில் த.வெ.க. எம்.எல்.ஏ.க்களை விஜய் சந்தித்தார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, மேற்கண்ட இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்களும் மாற்றி மாற்றி அதுகுறித்த பல்வேறு கதைகளை அவிழ்த்துவிடத் தொடங்கின. எம்.எல்.ஏ.க்களைக் கடுமையாகக் கடிந்துகொண்ட விஜய், சாட்டையைச் சுழற்றிய முதலமைச்சராக அவர்களிடம் கோபத்தை வெளிப்படுத்தினார்; கண்கள் சிவக்க ஆவேசமாகப் பேசினார்; அருள் விக்னேஷையும் துணை சபாநாயகரையும் தனியாக அழைத்து, அவர்கள் கதறி அழும் அளவுக்குத் திட்டித் தீர்த்தார் என்றெல்லாம் செய்திகள் வெளியிட்டன.
ஆனால் உண்மையில் நடந்ததோ வேறு, ஆறு மாத ஆட்சிக்குப் பிறகு தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் வேறு கட்சிக்குத் தாவிவிடாமல் தடுக்க அவர்களை அழைத்துப் பேசி, தீபாவளி பரிசு கொடுத்தனுப்பியிருக்கிறார் விஜய். ஆனால் ஊடகங்களோ அதற்குள் பல கதைகளைக் கிளப்பிவிட்டன.
முன்பெல்லாம் இதுபோன்ற கட்டுக்கதைகளைத் தவெகவின் இணையக் கைக்கூலிகள்தான் சமூக ஊடகங்களில் கிசுகிசுக்களாகப் பரப்பி வந்தனர். இப்போது, அவற்றையே தொலைக்காட்சி நிறுவனங்கள் உண்மைச் செய்திகளைப் போல மக்களிடம் கொண்டுசேர்க்கின்றன. த.வெ.க. எம்.எல்.ஏ.க்களின் நடவடிக்கைகளால் அதிருப்தியில் இருக்கும் மக்களுக்கு, அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் முதலமைச்சர் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற உண்மை தெரியவந்தால், அந்த அதிருப்தி விஜய்க்கு எதிரான கோபமாக மாறிவிடும் என்பது த.வெ.க. தலைமைக்கும் நன்றாகத் தெரியும். எனவேதான், தனது ஆதரவு தொலைக்காட்சிகளின் துணையுடன் நடக்காத ஒன்றை நடந்ததாகச் சித்தரித்து, எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்ததைப் போன்ற ஒரு போலியான பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.
ஆனால், தொலைக்காட்சிகளில் எத்தனை கதைகளைப் புனைந்தாலும், பாதிக்கப்பட்டவர்கள் எழுப்பும் குற்றச்சாட்டுகளையும், அவற்றின் மீது அரசு எடுக்கத் தவறும் நடவடிக்கைகளையும் மறைத்துவிட முடியாது என்பதை இவர்கள் உணர மறுக்கின்றனர். தெளிவான அரசியல் பார்வையும் சுயமான ஆளுமையும் இல்லாத ஓட்டைப் பலூனான விஜயை, இந்த ஊடகங்கள் என்னதான் ஊதி ஊதிப் பெரிதாகக் காட்டினாலும், அவர் மக்கள் மத்தியில் விரைவிலேயே அம்பலப்பட்டுப் போவது நிச்சயம்.
- அறிவு

