சனாதனப் போலித்தனமும்… இந்திய எப்ஸ்டீன்களும்!
பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்குத் தனிமனித ஒழுக்கம் அவசியம் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. ஆனால், ஆட்சியாளர்களோ திரைக்குப் பின்னால் எத்தகைய அயோக்கியத்தனங்களையும், ஊழல் முறைகேடுகளையும் செய்துவந்தாலும், பொதுவெளியில் தங்களைக் குற்றமற்றவர்களாகவும், ஒழுக்கம் தவறாதவர்களாகவும் காட்டிக்கொள்வதில் கவனமாக இருப்பார்கள்.
திரைமறைவில் நடக்கும் செயல்கள் பொதுவெளிக்கு வந்துவிட்டால் வாக்குகளை இழக்க நேரிடும் என்பதால், தங்களது யோக்கியமான பிம்பம் சிதைந்துவிடாமல் காப்பாற்றிக்கொள்ளப் பல உள்ளடி வேலைகளிலும் ஈடுபடுவார்கள். அதிலும் பாலியல் குற்றச்சாட்டுகள் எழும்போது, சம்பந்தப்பட்ட தலைவர் அல்லது பிரமுகர் மீது கட்சித் தலைமையே நடவடிக்கை எடுப்பதுபோல் காட்டிக்கொண்டு, தன்னைத் தூய்மையான கட்சியாகவும், நல்லாட்சி நடத்தும் அமைப்பாகவும் மக்கள் மத்தியில் முன்னிறுத்திக்கொள்ளும்.
ஆனால், இந்த விழுமியங்களுக்கு முற்றிலும் நேர்மாறாக, எத்தகைய ஊழல் முறைகேடுகள் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் அவற்றைக் கண்டுகொள்ளாமல், அதற்குப் பொதுவெளியில் உரிய விளக்கம்கூட அளிக்காமல், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுக்குப் பகிரங்கமாகத் துணைநிற்கும் கட்சி என்று ஒன்று இருக்குமானால், அது பாஜகதான். அதற்கு அண்மைக்காலச் சான்றாக அமைந்திருப்பதுதான் பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விவகாரம்.
சில வாரங்களுக்கு முன்பு, ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் தனது அமைச்சர் பதவியையும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்துவதற்காகவும், கட்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபடுவதற்காகவும் பதவிகளைத் துறந்ததாக அவர் விளக்கமளித்தார். இருப்பினும், திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்களுக்குத் தொல்லை கொடுத்ததாக எழுந்த சர்ச்சையே அவரது திடீர் ராஜினாமாவுக்குக் காரணம் என சமூக ஊடகங்களில் பேசப்பட்டது.
தற்போது, முருகனின் ராஜினாமாவால் காலியான மாநிலங்களவை இடத்திற்குப் பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி போட்டியிடுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. எப்ஸ்டீன் விவகாரத்தில் பூரியின் தொடர்பு குறித்த சர்ச்சையால் ஏற்கெனவே தர்மசங்கடத்திற்கு உள்ளாகியிருந்த பாஜக, அவருக்கு மீண்டும் வாய்ப்பளிக்காது என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அந்த எதிர்பார்ப்புக்கு மாறாக, உத்தரப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராகப் பூரியைத் திடீரென அறிவித்தது பாஜக.
மேலும், பூரியை எதிர்த்துப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்த காங்கிரஸ் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பூரி மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பு உறுதியாகியுள்ளது. இத்தனை சர்ச்சைகளுக்கும் மத்தியில் பூரிக்கு மீண்டும் வாய்ப்பளித்திருப்பதன் மூலம், பொதுவாழ்வில் ஒழுக்கம் குறித்துப் பேசும் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுகிறது.
பாரத மாதா, கங்கைத்தாய், பெண்கள் எனப் பெண்களைத் தெய்வமாகப் போற்றுவதே சனாதனப் பண்பாடு என்று மேடைகளில் முழங்கும் காவிக் கும்பல்தான், பாலியல் தொழிலுக்காகவே தனித்தீவை வைத்திருந்ததுடன், பல குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்ட எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்த பூரியை மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக்கியுள்ளது.
குறிப்பாக, இரு வாரங்களுக்கு முன்பு பூரியும் எப்ஸ்டீனும் ஒன்றாக இருக்கும் புதிய புகைப்படங்கள் வெளியாகி பெரும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், அது குறித்து பூரியிடம் விளக்கம் கேட்கவோ, அவர் மீது நடவடிக்கை எடுக்கவோ முன்வராத பாஜக, மாறாக அவருக்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்கிப் பரிசளித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோ, இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கடந்த மாதம் இந்தியா வந்தார். அவர் வந்திறங்கிய மறுநாளே, எப்ஸ்டீனும் பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியும் நிதானமாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் புகைப்படத்தை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டது.
இந்திய – அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சூழலில், இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கத்திலேயே இந்தப் புகைப்படம் வெளியிடப்பட்டதோ என்ற கேள்வி எழுவது இயல்பானது.
ஆனால், இந்த விவகாரத்தில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம், எப்ஸ்டீனை அலுவலகப் பணி நிமித்தமாக அதிகாரிகள் குழுவுடன் மூன்று முறை மட்டுமே சந்தித்ததாகவும், தனிப்பட்ட முறையில் அவரைச் சந்தித்ததில்லை என்றும் பூரி உறுதியாகக் கூறியிருந்தார். ஆனால், தற்போது இருவரும் தனியாகச் சந்தித்துப் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், அதுகுறித்து விளக்கமளித்துள்ள பூரி, “பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த சந்திப்பு என்பதால் அது எனக்கு நினைவில் இல்லை” என்று கூறியிருக்கிறார்.
கடந்த ஜனவரி மாதம் வெளியான எப்ஸ்டீன் கோப்புகள் (Epstein Files) உலகின் பல நாடுகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.
எப்ஸ்டீன் ஒரு நிதி முதலீட்டாளர். அதே நேரத்தில், பெண்களையும் குழந்தைகளையும் கடத்தி, அவர்களைப் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கும் நிழலுலகச் சாம்ராஜ்ஜியத்தையும் நடத்தி வந்தவன். அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள் மற்றும் ஆட்சியாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவன்.
பெரும் செல்வந்தர்களுக்காக உல்லாசக் கேளிக்கை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது, அந்த நிகழ்ச்சிகளின் மூலம் தொழில்துறை ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது, பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு இடையே சந்திப்புகளையும் பேச்சுவார்த்தைகளையும் ஏற்பாடு செய்து தருவது எனப் பல்வேறு தரகு வேலைகளிலும் ஈடுபட்டு வந்தவன்.
குழந்தைகளைப் பாலியல் ரீதியாகச் சுரண்டிய குற்றங்களுக்காகச் சிறைத் தண்டனை பெற்ற எப்ஸ்டீன், 2019ஆம் ஆண்டு சிறையிலேயே உயிரிழந்தான். அது தற்கொலை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்த செல்வாக்கு மிக்க நபர்கள் யார், யார் என்பதை வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற பல்வேறு தரப்பினரின் தொடர் போராட்டங்களுக்குப் பிறகு, அவர்களுடனான தொடர்புகள் குறித்த ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டது. இந்த ஆவணத் தொகுப்பே ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ (Epstein Files) என்று அழைக்கப்படுகிறது.
அந்த எப்ஸ்டீன் கோப்புகளில், அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப், பில் கேட்ஸ், பில் கிளிண்டன் தொடங்கி, இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ, ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் கெவின் ருட், இந்தியாவின் அனில் அம்பானி, பிரதமர் மோடி, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி எனப் பல முக்கியப் பிரமுகர்களுடன் எப்ஸ்டீன் கொண்டிருந்த தொடர்புகள் குறித்த விவரங்களும், அவர்களுக்கிடையே சந்திப்புகளை ஏற்பாடு செய்தது தொடர்பான தகவல்களும் வெளியாகின.
குறிப்பாக, 2017ஆம் ஆண்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு, மோடியும் ட்ரம்பும் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வது தொடர்பாக அனில் அம்பானி எப்ஸ்டீனுடன் மின்னஞ்சல் வாயிலாகப் பேசியதற்கான ஆதாரங்களும் வெளியாகின.
அதேபோல, 2017ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்திற்கான ஏற்பாடுகளிலும் எப்ஸ்டீன் பங்கு வகித்ததாக மின்னஞ்சல் ஆதாரங்கள் வெளியாகின. இது தொடர்பாக எப்ஸ்டீன் அனுப்பிய மின்னஞ்சலில், “இந்தியப் பிரதமர் மோடி ஆலோசனையைப் பெற்றார். அமெரிக்க அதிபரின் நலனுக்காக மோடி இஸ்ரேலில் நடனமாடியும் பாடியும் இருக்கிறார். அவர்கள் சில வாரங்களுக்கு முன்புதான் சந்தித்திருந்தனர். அந்தச் சந்திப்பு பலனளித்திருக்கிறது!” என்று குறிப்பிட்டிருந்தான்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு, அதே ஆண்டில் இஸ்ரேலிடமிருந்து இந்தியா 8.6 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வாங்கியதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இதுமட்டுமின்றி, லிங்க்டு-இன் நிறுவனத்தின் துணை நிறுவனர் ரீட் ஹாஃப்மேன் இந்தியாவில் முதலீடு செய்வது தொடர்பாக, அவருக்கும் பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளையும் எப்ஸ்டீனே ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறான்.
இந்த ஆதாரங்கள் வெளியானதும், பிரதமர் மோடியும், அமைச்சர் பூரியும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், பாஜக தலைமையோ இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து எந்த விளக்கமும் அளிக்காமல் மௌனம் காத்தது.
இதையடுத்து, சுமார் ஒரு மாதம் கழித்து, பிப்ரவரி மாதம் செய்தியாளர்களைச் சந்தித்த பூரி, எப்ஸ்டீனுடனான தனது தொடர்பு குறித்து விளக்கமளித்தார். 2009ஆம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியத் தூதுக்குழுவில் இணைந்தது முதல், 2017ஆம் ஆண்டு ஒன்றிய அமைச்சராகப் பொறுப்பேற்றது வரையிலான எட்டு ஆண்டுகளில், எப்ஸ்டீனை மூன்று அல்லது அதிகபட்சம் நான்கு முறை மட்டுமே சந்தித்ததாகக் கூறினார்.
அந்தச் சந்திப்புகளும்கூட, தான் பன்னாட்டு அமைதி நிறுவனத்தில் பணியாற்றியபோது, தனது மேலதிகாரியாக இருந்த டெர்ஜே ரோட்-லார்சனுடன் அலுவலகப் பணி நிமித்தமாகவே நடைபெற்றதாகத் தெரிவித்தார். அதாவது, எப்ஸ்டீனுடனான தனது சந்திப்புகள் அனைத்தும் அலுவலகப் பணி சார்ந்தவைதான் என்பதே பூரியின் விளக்கமாக இருந்தது.
எப்ஸ்டீனைத் தனிப்பட்ட முறையில் தனக்குத் தெரியாது என்பதுதான் பூரியின் வாதம். ஆனால், அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகளை ஆய்வு செய்த காங்கிரஸ் கட்சி, பூரிக்கும் எப்ஸ்டீனுக்கும் இடையே 62 முறை மின்னஞ்சல் தொடர்புகள் நடைபெற்றிருப்பதை அம்பலப்படுத்தியது.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள பூரியும் எப்ஸ்டீனும் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படங்கள், ஜனவரி மாதம் பூரி அளித்த விளக்கங்களின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளன. எப்ஸ்டீனுடனான தனது தொடர்பு குறித்துப் பூரி அளித்த விளக்கங்களுக்கும் தற்போது வெளியாகியுள்ள ஆதாரங்களுக்கும் இடையே முரண்பாடு இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
இத்தனை ஆதாரங்களும் வெளியாகிய பிறகும் பாஜக தலைமை இதுவரை வாய்திறக்கவில்லை. மாறாக, பூரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவருக்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்கிப் பரிசளித்துள்ளது. இதுதான் பாஜக பேசும் தனிமனித ஒழுக்கம்!
பாஜக பாலியல் குற்றச்சாட்டுகளை எப்படிக் கையாள்கிறது என்பதற்கு இதற்கு முன்பும் பல உதாரணங்கள் உள்ளன.
காஷ்மீரில் ஆசிஃபா பானு என்ற எட்டு வயது முஸ்லிம் சிறுமியைக் கடத்தி, மயக்க மருந்து கொடுத்து, கோவிலுக்குள் பல நாட்கள் அடைத்து வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், கோவில் நிர்வாகி சஞ்சீவ் ராம் உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், குற்றவாளிகளைக் கண்டிப்பதற்குப் பதிலாக, அவர்களுக்கு ஆதரவாகச் சங்கப் பரிவார் அமைப்புகள் நடத்திய பேரணியில் பாஜக அமைச்சர்கள் இருவர் கலந்துகொண்டு, காவல்துறையின் நடவடிக்கையைக் கண்டித்துப் பேசினர்.
அதேபோல, குஜராத் கலவரத்தின்போது பில்கிஸ் பானுவைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரைக் கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரையும், நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்தது அன்றைய பாஜக அரசு. பின்னர் உச்சநீதிமன்றம் அந்த விடுதலையை இரத்து செய்து, குற்றவாளிகள் மீண்டும் சிறைக்குத் திரும்ப உத்தரவிட்டது.
அதேபோன்று, பாஜக எம்.பி.யாக இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது ஆறு மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியபோதும், பாஜக தலைமை அவர் மீது கட்சித் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேற்கூறிய மூன்று நிகழ்வுகளும் தேசிய அளவில் பெரும் விவாதத்தையும், எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியவை. இவை அனைத்திலும் பாஜகவின் உயர்மட்டத் தலைவர்கள் அல்லது கட்சியுடன் தொடர்புடைய முக்கியப் பிரமுகர்கள் சம்பந்தப்பட்டிருந்தனர். ஆனால், குறைந்தபட்சம் அவர்களைக் கண்டிக்கக்கூட பாஜக தலைமை முன்வரவில்லை. மாறாக, ஒவ்வொரு நிகழ்விலும் வெவ்வேறு வழிகளில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுக்கோ, தண்டிக்கப்பட்டவர்களுக்கோ ஆதரவாகச் செயல்பட்டது.
இப்போது ஹர்தீப் சிங் பூரி விவகாரத்திலும் அதே அணுகுமுறையைத்தான் பாஜக கடைப்பிடிக்கிறது. இதுதான் பெண்களின் பாதுகாப்பு, தனிமனித ஒழுக்கம், சனாதனப் பண்பாடு என்று மேடைகளில் முழங்கும் பாஜகவின் நடைமுறை அரசியல்!
தேசப்பற்று, நாட்டின் வளர்ச்சி, வல்லரசு இந்தியா, விஸ்வகுரு, புண்ணிய பூமி, பாரத மாதா என்று மக்களின் நலனுக்காகத் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்த ஒழுக்கச் சீலர்களைப் போல நாள்தோறும் வாய்ச்சவடால் பேசும் இந்தக் காவிக் கும்பல்தான், உள்நாட்டில் எட்டு வயதுச் சிறுமி ஆசிஃபாவுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது தொடங்கி, அமெரிக்காவின் எப்ஸ்டீன் விவகாரத்தில் எழுந்த சர்ச்சைகள் வரை, பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் சர்ச்சைகளில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடையவர்களுக்குத் துணைநின்று வருகிறது. அவர்களின் செயல்களைக் கண்டிக்க வேண்டிய இடத்தில்கூட நியாயப்படுத்தவும் பாதுகாக்கவும் செய்கிறது.
இத்தகைய செயல்பாடுகளைக் கொண்ட ஒரு கட்சியையும் அதன் தலைமையையும் ஒழுக்கச் சீலர்கள் என்று அழைப்பதா? அல்லது அவர்களின் போலி ஒழுக்க வேடத்தைக் கிழித்தெறிந்து, காவிப் பொறுக்கிகள் என்று அழைப்பதா?
- மாணிக்கம்

