உலக வங்கியின் வறுமைக் குறைப்பு அறிக்கையும் நவீன பீர்பால்களும்!
அக்பர் ஒருமுறை பீர்பாலிடம் தரையில் வரையப்பட்டிருந்த பெரிய கோட்டை அழிக்காமல் சிறியதாக்கும்படி சவால் விடுத்தார். பீர்பால் அந்தக் கோட்டை அழிக்கவுமில்லை; தொடவுமில்லை. மாறாக, அதன் அருகில் அதைவிடப் பெரிய கோடு ஒன்றை வரைந்தார். உடனே ஏற்கெனவே இருந்த கோடு சிறியதாகிவிட்டது.
இது பீர்பாலின் புத்திசாலித்தனத்தைக் காட்டும் கதை. ஆனால், இன்றைய பாஜகவினரோ இதே தந்திரத்தை வறுமை ஒழிப்பு அரசியலில் கையாண்டு வருகின்றனர். மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குப் பதிலாக, வறுமையை அளவிடும் அளவுகோல்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, வறுமை ஒழிக்கப்பட்டுவிட்டதாகப் பிரச்சாரம் செய்கின்றனர்.
மோடி ஆட்சியின் பதினொன்றாண்டுகள் நிறைவடைந்தபோது, இந்தியா இதுவரை கண்டிராத வளர்ச்சியைத் தங்களது ஆட்சியில்தான் சாதித்திருப்பதாக பாஜகவும் அதன் ஆதரவு ஊடகங்களும் பெரும் பிரச்சாரத்தை முன்னெடுத்தன. அதன் ஒரு பகுதியாக, கோடிக்கணக்கான மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டிருப்பதாகவும் பெருமை பேசின.
2025 ஜூன் மாதம் உலக வங்கி வெளியிட்ட அறிக்கையைச் சுட்டிக்காட்டி, இந்தியாவின் வறுமை விகிதம் 2011–12இல் 27.1 சதவீதமாக இருந்தது என்றும், 2022–23இல் 5.3 சதவீதமாகக் குறைந்துவிட்டது என்றும் ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் தெரிவித்தனர். இதன் மூலம் 26.9 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டதாகக் கூறினர்.
2026 அக்டோபர் 9 அன்று உலக வங்கி வெளியிட்ட India Poverty and Equity Brief அறிக்கையைத் தொடர்ந்து இந்தப் பிரச்சாரம் மேலும் தீவிரமடைந்தது. 2011 முதல் 2023 வரையிலான காலத்தில் 49.6 கோடி பேர் வறுமைக் கோட்டுக்கு மேலே வந்திருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
2026 நவம்பர் 21 அன்று ஐஐடி காரக்பூரின் பவள விழாவில் பேசிய பிரதமர் மோடியும், கடந்த 12–13 ஆண்டுகளில் 50 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டிருப்பதாகக் கூறி, இதனைத் தனது அரசின் சாதனையாக முன்வைத்தார். அதே உரையில் செமிகண்டக்டர் உற்பத்தி, சிப் ஏற்றுமதி ஆகியவற்றையும் பெருமையாகக் குறிப்பிட்டார்.
வறுமைக் குறைப்பு, செமிகண்டக்டர் உற்பத்தி, தொழில்நுட்ப வளர்ச்சி என அனைத்தையும் ஒன்றாக இணைத்து, இந்தியா அனைத்துத் துறைகளிலும் முன்னேறிவிட்டதாக ஒரு பிம்பத்தை உருவாக்குகிறார். ஆனால், இந்தப் புள்ளிவிவரங்களுக்குப் பின்னால் இருக்கும் பொருளாதார எதார்த்தத்தை ஆராய்ந்தால் வேறு பல உண்மைகள் வெளிப்படுகின்றன.
உலக வங்கியின் அறிக்கை கூறுவது என்ன?
உலக வங்கி 2025 ஜூன் மாதத்தில் சர்வதேச வறுமைக் கோடுகளைத் திருத்தியது. 2017ஆம் ஆண்டின் வாங்கும் திறன் சமநிலை (Purchasing Power Parity – PPP) அடிப்படையில் இருந்த தீவிர வறுமைக் கோட்டை ஒரு நாளைக்கு 2.15 டாலரிலிருந்து 2021ஆம் ஆண்டின் PPP அடிப்படையில் 3 டாலராக உயர்த்தியது. கீழ் நடுத்தர வருமான நாடுகளுக்கான வறுமைக் கோட்டையும் 3.65 டாலரிலிருந்து 4.20 டாலராக மாற்றியது.
இந்த அளவீட்டின்படி இந்தியாவின் வறுமை விகிதம்:
2026 அக்டோபர் அறிக்கையின் புதிய மதிப்பீட்டின்படி:
இதன்படி, 4.20 டாலர் வறுமைக் கோட்டுக்கு மேலே சுமார் 49.6 கோடி பேர் வந்திருப்பதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
ஆனால், இங்கு இரண்டு முக்கியமான வேறுபாடுகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.
முதலாவது, உலக வங்கியின் சர்வதேச வறுமைக் கோடு என்பது இந்தியாவின் அதிகாரபூர்வ தேசிய வறுமைக் கோடு அல்ல.
இரண்டாவது, 49.6 கோடி பேர் என்பது 4.20 டாலர் என்ற கீழ் நடுத்தர வருமான நாடுகளுக்கான வறுமைக் கோட்டிலிருந்து மேலே வந்தவர்களின் எண்ணிக்கை. இது 3 டாலர் என்ற தீவிர வறுமைக் கோட்டிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை அல்ல.
இந்த வேறுபாட்டை மறைத்து வறுமைக் குறைப்பு குறித்த இரண்டு அளவீடுகளையும் ஒன்றாகக் கலந்து பேசுவதன் மூலம் தவறான புரிதலை உருவாக்குகின்றனர்.
மேலும், 2023ஆம் ஆண்டிலும் சுமார் 34 கோடி பேர் 4.20 டாலர் வறுமைக் கோட்டுக்குக் கீழும், 7.5 கோடி பேர் தீவிர வறுமையிலும் வாழ்வதாக உலக வங்கி மதிப்பிடுகிறது. இப்படியிருக்க, 49.6 கோடி பேர் வறுமையிலிருந்து முழுமையாக மீண்டுவிட்டார்கள் என்று கூறுவது மக்களை ஏமாற்றும் அரசியல் விளம்பரமே.
வறுமைக் கோட்டின் மாயாஜாலம்
உலக வங்கி குறிப்பிடும் 3 டாலர், 4.20 டாலர் என்பவை அன்றைய டாலர்–ரூபாய் சந்தை மாற்று விகிதத்தைக் குறிப்பவை அல்ல. அவை வாங்கும் திறன் சமநிலை (PPP) அடிப்படையில் கணக்கிடப்பட்ட மதிப்புகள்.
ஒரு நாட்டில் குறிப்பிட்ட தொகையைக் கொண்டு எவ்வளவு பொருட்களையும் சேவைகளையும் வாங்க முடியும் என்பதை மற்றொரு நாட்டுடன் ஒப்பிடுவதற்கான முறையே வாங்கும் திறன் சமநிலை.
எனவே, 3 டாலர் என்பதை அன்றைய சந்தை மாற்று விகிதத்தில் நேரடியாக ரூபாயாக மாற்றிப் புரிந்துகொள்ள முடியாது. அதேபோல், 2021ஆம் ஆண்டின் PPP மதிப்பை 2026ஆம் ஆண்டின் வாழ்க்கைச் செலவுக்கு நேரடியாகப் பொருத்தவும் முடியாது.
முக்கியமாக, இந்த அளவீடுகள் இந்திய மக்களின் உண்மையான வாழ்க்கைத் தரத்தை எந்த அளவுக்குப் பிரதிபலிக்கின்றன என்பதையும் ஆராய வேண்டும்.
உணவு, உடை, வீடு, மருத்துவம், கல்வி, போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு ஒரு குடும்பத்துக்கு எவ்வளவு செலவாகிறது? அதற்குத் தேவையான குறைந்தபட்ச வருமானம் என்ன? கிராமப்புறங்களுக்கும் பெருநகரங்களுக்கும் இடையிலான வாழ்க்கைச் செலவு வேறுபாடு என்ன? இவற்றைக் கணக்கில் கொண்டே வறுமையை மதிப்பிட வேண்டும்.
சர்வதேச வறுமைக் கோட்டுக்கு மேலே வந்துவிட்டார் என்பதற்காகவே ஒருவர் வறுமையிலிருந்து முழுமையாக மீண்டுவிட்டார் என்று கூறிவிட முடியாது.
பீர்பால் பெரிய கோட்டை அழிக்காமல் சிறியதாக்க அதன் அருகில் அதைவிடப் பெரிய கோடு வரைந்தார். அதேபோல், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தாமல் அளவுகோல்களை மாற்றி வறுமை குறைந்துவிட்டதாகக் காட்டும் நவீனப் பீர்பால்களின் தந்திரத்தையும் புரிந்துகொள்ள வேண்டும்.
49.6 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டது மோடி ஆட்சியின் சாதனையா?
நிர்மலா சீதாராமன் குறிப்பிடும் 49.6 கோடி என்ற எண்ணிக்கை 2011 முதல் 2023 வரையிலான காலத்தைச் சேர்ந்தது. இதில் 2011 முதல் 2014 வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலிருந்தது. 2014 முதல் 2023 வரைதான் மோடி ஆட்சிக்காலம்.
அப்படியிருக்க, இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளின் ஒட்டுமொத்த வறுமைக் குறைப்பையும் மோடி அரசின் சாதனையாகக் கூறுவது எப்படி நியாயமாகும்?
வறுமை குறைவதற்கு குடும்பங்களின் நுகர்வுச் செலவு அதிகரிப்பு, உணவு மானியம், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், வேலைவாய்ப்பில் ஏற்பட்ட மாற்றங்கள், பெண்களின் வேலைவாய்ப்பு அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களை உலக வங்கி குறிப்பிடுகிறது.
இவற்றில் பொது விநியோகத் திட்டம், ஊரக வேலை உறுதித் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் போன்றவை முந்தைய அரசுகளின் காலத்திலேயே தொடங்கப்பட்டவை.
மோடி ஆட்சியின் சாதனைகளை மதிப்பிட வேண்டுமானால், 2014க்கு முந்தைய நிலையையும் அதற்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்களையும் தனித்தனியாக ஒப்பிட வேண்டும். வேலைவாய்ப்பு, உண்மையான ஊதியம், குடும்ப வருமானம், விலைவாசி, மருத்துவம், கல்விச் செலவு ஆகியவற்றின் அடிப்படையில் அந்த மதிப்பீடு அமைய வேண்டும்.
வேலைவாய்ப்பு அதிகரிப்பு; ஊதியம் உயர்ந்திருக்கிறதா?
உலக வங்கியின் 2026 அறிக்கையின்படி, 2017 முதல் 2023 வரையிலான காலத்தில் இந்தியாவில் வேலைவாய்ப்பில் சுமார் 13.4 கோடி பேர் அதிகரித்துள்ளனர். இதில் கிராமப்புறப் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருந்துள்ளது.
ஆனால், இந்த அதிகரிப்பில் பெரும்பகுதி நிரந்தர ஊதியமும் பணிப் பாதுகாப்பும் கொண்ட வேலைகளால் ஏற்பட்டதல்ல. குறைந்த வருமானம் தரும் சுயதொழில், குடும்ப விவசாயம், அமைப்புசாராத் தொழில்கள் போன்றவற்றில்தான் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.
வேலைவாய்ப்புகள் அதிகரித்திருந்தாலும் உண்மையான ஊதிய வருமானம் அதற்கேற்ப உயரவில்லை என்றும், புதிய வேலைகள் பெரும்பாலும் குறைந்த உற்பத்தித்திறன் கொண்ட துறைகளில் உருவாகியுள்ளன என்றும் உலக வங்கி சுட்டிக்காட்டுகிறது.
குறிப்பாக, பெண்களின் வேலைவாய்ப்பு அதிகரித்திருப்பதை அரசு சாதனையாகக் கூறுகிறது. ஆனால், அந்தப் பெண்களுக்குப் போதுமான ஊதியம் கிடைக்கிறதா, பணிப் பாதுகாப்பும் சமூகப் பாதுகாப்பும் இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். குடும்ப விவசாயத்திலும் சுயதொழிலிலும் ஈடுபடுவதை மட்டும் பொருளாதார முன்னேற்றமாகக் கருத முடியாது.
ஒரு குடும்பத்தில் வேலைக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், குடும்பத்தின் மொத்த வருமானம் உயர்ந்திருக்க வேண்டும். அவ்வாறு உயர்ந்த வருமானமும் பணவீக்கத்தைக் கழித்த பிறகு உண்மையான வாங்கும் திறனை அதிகரித்திருக்க வேண்டும்.
எனவே, வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையை மட்டும் காட்டி மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிட்டதாகக் கூறுவது புள்ளிவிவரங்களை வைத்து நடத்தப்படும் பிரச்சாரமே.
வறுமை குறைந்தாலும் ஏற்றத்தாழ்வு அதிகரிக்கிறது
வறுமை குறைந்திருப்பதாகக் கூறும் அதே உலக வங்கி அறிக்கை, இந்தியாவில் வருமான ஏற்றத்தாழ்வு அதிகமாக இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
2023ஆம் ஆண்டில் அதிக வருமானம் பெறும் முதல் 10 சதவீதத் தொழிலாளர்களின் சராசரி வருவாய், கடைசி 10 சதவீதத் தொழிலாளர்களின் வருவாயைவிட சுமார் 13 மடங்கு அதிகமாக இருந்துள்ளது.
இந்தியாவின் ஏழைகளில் சுமார் 57 சதவீதத்தினர் உத்தரப் பிரதேசம் முதல் மேற்கு வங்கம் வரையிலான மாநிலங்களில் குவிந்துள்ளனர். 2023ஆம் ஆண்டில் கிராமப்புறங்களில் 19.3 சதவீத மக்களும், நகர்ப்புறங்களில் 8.6 சதவீத மக்களும் 4.20 டாலர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்ந்துள்ளனர்.
மேலும், செல்வந்தர்களின் நுகர்வுச் செலவுகள் கணக்கெடுப்பில் முழுமையாகப் பதிவாகாமல் போகலாம் என்றும், இதனால் ஏற்றத்தாழ்வின் உண்மையான அளவு குறைவாக மதிப்பிடப்பட்டிருக்கலாம் என்றும் உலக வங்கி எச்சரிக்கிறது.
உலக ஏற்றத்தாழ்வு ஆய்வகத்தின் (World Inequality Lab) 2024ஆம் ஆண்டு ஆய்வும் இதையே உறுதிப்படுத்துகிறது.
2022–23ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த தேசிய வருமானத்தில் முதல் 10 சதவீதத்தினரின் பங்கு 57.7 சதவீதமாக இருந்தது. ஆனால், கீழ்நிலையில் உள்ள 50 சதவீத மக்களின் பங்கு வெறும் 15 சதவீதமாக மட்டுமே இருந்தது.
நாட்டின் மொத்தச் சொத்தில் முதல் 10 சதவீதத்தினரிடம் சுமார் 65 சதவீதம் குவிந்திருந்தது. கீழ்நிலையில் உள்ள 50 சதவீத மக்களிடம் வெறும் 6.4 சதவீதச் சொத்துகளே இருந்தன.
இதுதான் இந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான நிலை. நாட்டின் செல்வம் ஒரு சிறிய கூட்டத்தினரிடம் குவிந்துகொண்டிருக்கிறது. மறுபுறம், பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் குறைந்த ஊதியம், நிலையற்ற வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு, மருத்துவச் செலவு, கடன் சுமை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெருமுதலாளிகளின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சியா?
மோடி ஆட்சியின் பதினொன்றாண்டுகளில் அதானி, அம்பானி உள்ளிட்ட பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஒருபுறம் பெரும் செல்வம் ஒரு சிறிய கூட்டத்தினரிடம் குவிகிறது. மறுபுறம் கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றப் போராடுகின்றனர்.
ஒரு மனிதன் பசியின்றி வாழ்வது மட்டுமே பொருளாதார முன்னேற்றம் அல்ல. அவனுக்குத் தரமான கல்வி, மருத்துவம், பாதுகாப்பான வீடு, போதுமான ஊதியம், நிரந்தர வேலைவாய்ப்பு, முதுமைக்காலப் பாதுகாப்பு ஆகியவையும் கிடைக்க வேண்டும்.
இவை உறுதிப்படுத்தப்படாமல், சில கோடிப் பேர் வறுமைக் கோட்டுக்கு மேலே வந்துவிட்டார்கள் என்பதையே ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சியாகக் காட்டுவது எவ்வாறு நியாயமாகும்?
செமிகண்டக்டர் வளர்ச்சியும் வறுமைக் குறைப்பும்: ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு முன்னேற்ற முலாம்!
2026 நவம்பர் 21 அன்று ஐஐடி காரக்பூரில் பேசிய பிரதமர் மோடி, செமிகண்டக்டர் உற்பத்தியில் இந்தியா அடைந்துள்ளதாகக் கூறப்படும் முன்னேற்றத்தைத் தனது அரசின் மாபெரும் சாதனையாகப் பறைசாற்றினார். நான்கே ஆண்டுகளில் பல செமிகண்டக்டர் உற்பத்தி மையங்கள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், இந்தியா சிப்களை ஏற்றுமதி செய்யத் தொடங்கியிருப்பதாகவும் பெருமை பேசினார். இதன் மூலம் இந்தியா உலகின் முன்னணி தொழில்நுட்ப நாடுகளின் வரிசையில் இணைந்துவிட்டதைப் போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கிறார்.
ஆனால், இந்தப் பளபளப்பான விளம்பரத்திற்குப் பின்னால் இருப்பது என்ன? இந்தியாவின் சொந்த அறிவியல் ஆராய்ச்சியாலும், தொழில்நுட்பத் தற்சார்பை நோக்கிய உள்நாட்டு வளர்ச்சியாலும் செமிகண்டக்டர் உற்பத்தி உருவாகவில்லை. மாறாக, உலகச் செமிகண்டக்டர் சந்தையில் தங்களது உற்பத்திச் சங்கிலியை விரிவுபடுத்தவும், சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், உற்பத்திச் செலவுகளைக் குறைக்கவும் ஏகாதிபத்திய நாடுகளும் பன்னாட்டு நிறுவனங்களும் மேற்கொள்ளும் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாகவே இந்தியாவுக்குள் இந்தத் தொழில் கொண்டுவரப்படுகிறது. ஏகாதிபத்தியங்களின் இந்தத் தேவையை நிறைவேற்றுவதற்காக இந்தியாவை ஒரு உற்பத்திக் களமாக மாற்றுவதையே மோடி அரசு தொழில்நுட்பப் புரட்சியாகச் சித்தரிக்கிறது.
செமிகண்டக்டர் தொழில்நுட்பம் என்பது ஒரு நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திறனை வெளிப்படுத்தும் முக்கியமான துறையாகும். ஆனால், அதன் உற்பத்திச் சங்கிலியில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டைப் பெறுவதோ, அவற்றின் தொழிற்சாலைகளை அமைப்பதோ மட்டும் தொழில்நுட்பத் தற்சார்பைக் குறிக்காது. சிப் வடிவமைப்பு, அடிப்படை ஆராய்ச்சி, உற்பத்திக்கான இயந்திரங்கள், மூலப்பொருட்கள், வேஃபர் தயாரிப்பு, உற்பத்தித் தொழில்நுட்பம் என ஒட்டுமொத்தச் சங்கிலியின் மீதும் யாருக்கு ஆதிக்கம் இருக்கிறது என்பதுதான் முக்கியம். இவற்றின் மீதான கட்டுப்பாடு ஏகாதிபத்திய நிறுவனங்களிடமே நீடிக்கும்போது, இந்தியாவில் சில உற்பத்தி மையங்கள் அமைக்கப்படுவதால் மட்டும் இந்தியா தொழில்நுட்பத் தன்னிறைவு அடைந்துவிட்டதாகக் கூற முடியாது.
உண்மையில், இந்தத் திட்டங்களின் மூலம் இந்தியாவுக்குக் கிடைப்பது என்ன? பன்னாட்டு நிறுவனங்களின் சிப் உற்பத்தித் தேவைகளுக்காக இந்தியத் தொழிலாளர்களின் உழைப்பை மலிவான விலையில் பயன்படுத்திக் கொள்வதற்கான ஏற்பாடுகளே இவை. உலகச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் ஏகாதிபத்திய நிறுவனங்களின் உற்பத்திச் சங்கிலியில் இந்தியத் தொழிலாளர்களை ஒரு கீழ்நிலை உழைப்புப் படையாக இணைப்பதையே மோடி அரசு வேலைவாய்ப்பு, முதலீடு, தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயர்களில் நியாயப்படுத்துகிறது. உற்பத்தியின் மீதான கட்டுப்பாடும், தொழில்நுட்ப அறிவுசார் உரிமைகளும், பெரும் லாபமும் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில் இருக்கும்போது, இந்தியாவுக்குக் கிடைக்கும் குறைந்தபட்ச உற்பத்திப் பங்களிப்பை நாட்டின் மாபெரும் தொழில்நுட்ப முன்னேற்றமாக எப்படிக் கூற முடியும்?
மேலும், இந்தத் தொழிற்சாலைகளை அமைப்பதற்காகப் பல்லாயிரம் கோடி ரூபாய் மானியங்களும் வரிச் சலுகைகளும் பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து வாரி வழங்கப்படுகின்றன. ஏகாதிபத்திய நிறுவனங்களின் முதலீட்டுக்கு உத்தரவாதம் அளிப்பதும், அவற்றுக்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்கிக் கொடுப்பதும், அவற்றின் உற்பத்தித் தேவைகளுக்கு ஏற்றவாறு தொழிலாளர்களைத் தயார்ப்படுத்துவதும்தான் மோடி அரசின் முன்னுரிமையாக இருக்கிறது. ஆனால், இந்த முதலீடுகளால் உருவாகும் வேலைவாய்ப்புகள் எத்தனை? அவற்றின் ஊதியமும் பணிச்சூழலும் என்ன? இந்த உற்பத்தியால் கிடைக்கும் மதிப்பில் எவ்வளவு இந்தியப் பொருளாதாரத்திற்குச் செல்கிறது? இக்கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் முதலீட்டுத் தொகைகளையும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கையையும் காட்டி முன்னேற்றம் என்று கூச்சலிடுவது வெறும் ஏமாற்று வேலையே!
மோடியின் 11 ஆண்டுகள்: வாக்குறுதிகளும் எதார்த்தமும்
மோடி ஆட்சியின் பதினொன்றாண்டு காலத்தை மதிப்பிடுவதற்கு, அவர் அளித்த வாக்குறுதிகளையும் நடைமுறையில் ஏற்பட்ட மாற்றங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
– வேலைவாய்ப்பு: ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், நிரந்தர வேலைகள், ஊதிய உயர்வு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, தொழிலாளர் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இதை மதிப்பிட வேண்டும்.
– விவசாய வருமானம்: 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த இலக்கு எட்டப்பட்டதற்கான தெளிவான கணக்கை அரசு முன்வைக்கவில்லை. விவசாயிகள் இன்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை, கடன் நிவாரணம், உற்பத்திச் செலவைக் குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
– பணமதிப்பிழப்பு: கருப்புப் பணத்தையும் கள்ள நோட்டுகளையும் ஒழிப்பதாகக் கூறி கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு, சிறு தொழில்கள், வேலைவாய்ப்புகள், அமைப்புசாராத் தொழிலாளர்கள் மீது ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்த கேள்விகளுக்கு இன்னும் முழுமையான பதில் இல்லை.
இவ்வாறு ஒவ்வொரு துறையிலும் வாக்குறுதிகளுக்கும் நடைமுறை நிலைக்கும் இடையிலான வேறுபாட்டை ஆராய வேண்டும். முந்தைய அரசுகள் உருவாக்கிய திட்டங்களின் பலன்களையும், பல பத்தாண்டுகளாக உருவாக்கப்பட்ட வளர்ச்சிக் கட்டமைப்புகளையும் தனது சாதனையாகச் சொந்தம் கொண்டாடுவதால் மட்டும் ஒரு ஆட்சியின் வெற்றியைத் தீர்மானித்துவிட முடியாது.
வறுமைக் கோட்டுக்குப் பின்னால் இருக்கும் வர்க்க அரசியல்
1990களில் உலகமயம், தனியார்மயம், தாராளமயம் ஆகிய பொருளாதாரக் கொள்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட பிறகு, வறுமையைக் குறைத்துவிட்டோம் என்பது ஒவ்வொரு ஆட்சியாளரும் தங்களது சாதனையாக முன்னிறுத்தும் ஒன்றாக மாறியது. ஆனால், வறுமையை உருவாக்கும் அடிப்படைக் காரணங்களைத் தீர்ப்பதற்குப் பதிலாக, அதை அளவிடும் அளவுகோல்களை மாற்றி வறுமை குறைந்துவிட்டதாக அறிவிக்கும் போக்கும் தொடர்ந்து வருகிறது.
1993–94 காலகட்டத்தில் கலோரி நுகர்வு அடிப்படையில் வறுமை கணக்கிடப்பட்டது. பின்னர் தெண்டுல்கர் குழு, ரங்கராஜன் குழு ஆகியவை புதிய அளவீடுகளைப் பரிந்துரைத்தன.
2009ஆம் ஆண்டு தெண்டுல்கர் குழு வெளியிட்ட பரிந்துரையின்படி, 2011–12 விலைகளில் நகர்ப்புறத்தில் ஒருவருக்கு நாளொன்றுக்கு ரூ.33க்கும், கிராமப்புறத்தில் ரூ.27க்கும் குறைவான நுகர்வுச் செலவு இருந்தால் அவர் வறியவராகக் கணக்கிடப்பட்டார்.
இந்த அளவீடு கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. பின்னர் ரங்கராஜன் குழு நகர்ப்புறத்தில் ரூ.47, கிராமப்புறத்தில் ரூ.32 என வறுமைக் கோட்டை உயர்த்திப் பரிந்துரைத்தது. ஆனால், அந்தப் பரிந்துரைகள் அதிகாரபூர்வமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
மோடி ஆட்சிக்கு வந்த பிறகும் புதிய அதிகாரபூர்வ தேசிய வறுமைக் கோட்டை நிர்ணயிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. இத்தகைய சூழலில், இந்தியாவின் உண்மையான வாழ்க்கை நிலையை அளவிடுவதற்குப் பதிலாக உலக வங்கியின் சர்வதேச வறுமைக் கோட்டை முன்னிறுத்தி வறுமை குறைந்துவிட்டதாகப் பிரச்சாரம் செய்வது அரசுக்கு வசதியான அரசியல் உத்தியாக இருக்கிறது.
வறுமைக் கோடு என்பது வெறும் புள்ளிவிவரக் கணக்கீடு மட்டுமல்ல. உணவு மானியம், சமூகப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து, வீட்டு வசதி, கல்வி, மருத்துவம் போன்ற மக்கள் நலத்திட்டங்களுக்கான பயனாளிகளை அடையாளம் காண்பதிலும் நிதி ஒதுக்கீட்டைத் தீர்மானிப்பதிலும் அது முக்கியப் பங்கு வகிக்கிறது.
வறுமை குறைந்துவிட்டதாகக் கணக்கிடப்படும்போது, ஏழைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்ற பெயரில் நலத்திட்டங்களுக்கான நிதியைக் குறைக்கவும், சிலரைத் திட்டங்களிலிருந்து விலக்கவும் வாய்ப்பு ஏற்படுகிறது.
எனவே, வறுமைக் கோட்டை நிர்ணயிப்பது பொருளாதாரக் கணக்கீடு மட்டுமல்ல; அரசின் நலத்திட்டங்கள் யாருக்குச் சென்றடைய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அரசியல் நடவடிக்கையுமாகும். வறுமையின் அளவைக் குறைத்துக் காட்டுவதால் வறுமை ஒழிந்துவிடாது. ஆனால், அதைக் காரணமாகக் காட்டி மக்கள் நலனுக்கான அரசின் பொறுப்பைக் குறைக்க முடியும். இதுவே வறுமைக் கோட்டுக்குப் பின்னால் இருக்கும் வர்க்க அரசியல்.
நவீன பீர்பால்களிடம் ஏமாற வேண்டாம்!
உலக வங்கி அறிக்கை வறுமை குறைந்திருப்பதாகக் கூறினாலும், அந்த முன்னேற்றத்தை மோடி அரசின் சாதனையாக மட்டும் சித்தரிப்பதும், வறுமைப் பிரச்சினையே தீர்ந்துவிட்டதாகப் பிரச்சாரம் செய்வதும் அரசியல் மோசடியாகும்.
49.6 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுவிட்டார்கள் என்று தம்பட்டம் அடிப்பதன் மூலம், வேலைவாய்ப்பின்மை, குறைந்த ஊதியம், வருமான ஏற்றத்தாழ்வு, நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் ஆகியவற்றை மறைக்கிறார்கள். முந்தைய அரசுகள் உருவாக்கிய திட்டங்களின் பலன்களையும் தங்கள் கணக்கில் எழுதிக்கொள்கிறார்கள். இதற்குத் துணையாக ஆதரவு ஊடகங்களும் ஒரே பொய்ப் பிரச்சாரத்தைத் திரும்பத் திரும்பச் செய்கின்றன.
உண்மையான வறுமை ஒழிப்பு என்பது வறுமைக் கணக்கில் சில கோடுகளைக் குறைப்பதல்ல. மக்களுக்கு நிரந்தர வேலை, போதுமான ஊதியம், தரமான கல்வி, மருத்துவம், வீடு, சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துவதே. நாட்டின் செல்வம் ஒரு சில பெருமுதலாளிகளிடம் குவிவதைத் தடுத்து, உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே உண்மையான வளர்ச்சி.
அதானி, அம்பானிகளின் சொத்துகள் பல மடங்கு பெருகுவதையே இந்தியாவின் வளர்ச்சியாகச் சித்தரித்துக்கொண்டு, வறுமைக் கோட்டுக்கு மேலே சில கோடிப் பேர் வந்துவிட்டதை வறுமை ஒழிப்பின் சாதனையாகக் கொண்டாடுகிறார்கள். ஆனால், செல்வம் ஒரு சில பெருமுதலாளிகளிடம் குவிவதும், உழைக்கும் மக்கள் வறுமையிலும் சுரண்டலிலும் சிக்கித் தவிப்பதும் தொடரும்போது, வறுமை ஒழிந்துவிட்டதாகக் கூறுவது வளர்ச்சியின் பெயரிலான வெற்றுப் பிரச்சாரமே.
பீர்பால் பெரிய கோட்டை அழிக்காமல் சிறியதாக்கினார். இன்றைய நவீனப் பீர்பால்களோ வறுமையை ஒழிக்காமல், வறுமைக் கணக்கை மாற்றி அதையே ஆட்சியின் சாதனையாகக் கொண்டாடுகிறார்கள்.
கோட்டை மாற்றுவதால் வறுமை ஒழியாது; கோயபல்ஸ் பாணியில் கூவுவதால் மக்களின் வாழ்க்கை உயர்ந்துவிடாது.
- மகேஷ்
ஆதாரங்கள்
- உலக வங்கி – India Poverty and Equity Brief, October 2026.
- உலக வங்கி – India: Trends in Poverty from 2011–12 to 2022–23: Methodology Note, 2025.
- உலக வங்கி – June 2025 Update to Global Poverty Lines.
- World Inequality Lab – Income and Wealth Inequality in India, 1922–2023, 2024.
- UNU-WIDER – இந்திய வறுமைக் கணக்கீட்டு முறைகள் மற்றும் மாற்று மதிப்பீடுகள் குறித்த ஆய்வுகள்.
- இந்தியப் பிரதமர் அலுவலகம் – ஐஐடி காரக்பூர் பவள விழா உரை, 21 நவம்பர் 2026.
- Business Standard – FM cites World Bank poverty gains, says govt committed to inclusive growth, 30 அக்டோபர் 2026.
- The Indian Express – Break the limit: PM Modi interacts with IIT Kharagpur students on Viksit Bharat, 21 நவம்பர் 2026.
- Scroll.in – India’s extreme poverty falls to 2.6%, but top 10% workers earn 13 times of bottom 10%: World Bank, 30 அக்டோபர் 2026.

