தேர்தல் ஆணையம் பாசிசத்தின் கைப்பாவையான வரலாறு
(2014 முதல் எஸ்.ஐ.ஆர். வரை..)
செங்கனல் நவம்பர் – டிசம்பர் – 2026 – சிறப்பிதழில் வெளியான கட்டுரை.
காவிகளின் விதிமீறல்களுக்கு உடந்தையாக தேர்தல் ஆணையம்
சமீபகாலமாக தேர்தல் ஆணையம் காவி பாசிச சக்திகளின் ஒரு கைப்பாவையாக மாறியிருப்பது அம்பலமாகியிருக்கிறது. இந்த மாற்றம் திடீரென நிகழ்ந்த ஒன்றல்ல; இதற்குப் பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது. 2014-இல் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, இம்மாற்றம் படிப்படியாக அரங்கேறியுள்ளது.
காங்கிரசின் ஊழல் முறைகேடுகளுக்கு எதிராக அன்னா ஹசாரே, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் முன்னெடுத்த போராட்டங்களின் பின்னணியில் நடைபெற்ற 2014 நாடாளுமன்றத் தேர்தலில், பொருளாதார முன்னேற்றம், ஊழல் ஒழிப்பு ஆகிய முழக்கங்களை முன்வைத்து பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால், ஒன்றிய ஆட்சிப் பொறுப்பை ஏற்ற சில ஆண்டுகளிலேயே, காவி இருளுக்குள் மறைந்திருப்பது மூலதனத்தின் சர்வாதிகாரம்தான் என்பது அம்பலமானது. தேர்தல் பிரச்சாரத்தின்போது அது அளித்த பொருளாதார முன்னேற்றத்திற்கான வாக்குறுதி மக்களுக்கானது அல்ல என்பதும்; அம்பானி, அதானி போன்ற தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஆதரவான முன்னேற்றத்தை நோக்கியே பாஜக அரசு செயல்பட்டு வருகிறது என்பதும் வெட்டவெளிச்சமானது.
சிறு வணிகர்களைச் சீரழித்து, பல இலட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்படுவதற்குப் பாஜக அரசு கொண்டுவந்த ஜி.எஸ்.டி. காரணமானது. மக்களின் பொருளாதார வாழ்வைச் சீர்குலைத்து, ஒன்றரைக் கோடி தொழிலாளர்களின் வேலையைப் பறித்ததோடு, தாம் உழைத்துச் சம்பாதித்த பணத்தைத் திரும்பப் பெறுவதற்காக வங்கிகளின் வாசலில் தினமும் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலையைப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏற்படுத்தியது. புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் கல்வியைத் தனியார்மயமாக்கும் திட்டத்தை பாஜக அரசு கொண்டுவரத் துடித்தது கடும் எதிர்ப்புகள் கிளம்பின. தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களை முதலாளிகளின் கட்டற்ற சுரண்டலுக்குள் தள்ளும் தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தியது. பன்னாட்டு நிறுவனங்களின் நலன்களுக்காக இந்திய விவசாயத்தை அழித்து, விவசாயிகளை நடுத்தெருவில் நிறுத்தும் நோக்கில் மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்தது.
இவ்வாறு, பாஜக அரசு அடுத்தடுத்து கொண்டுவந்த சட்டங்களும் திட்டங்களும் மக்கள் மத்தியில் அதற்கெதிரான மனநிலையை உருவாக்கின. இதனால், முந்தைய தேர்தல்களில் செய்ததைப் போலவே பொருளாதார முன்னேற்றம், வேலைவாய்ப்பு போன்ற வாக்குறுதிகளை மட்டுமே முன்வைத்து இனியும் தேர்தல்களில் வெற்றிபெற முடியாதென்பதை பாஜக தெளிவாக உணர்ந்தது.
2015-இல் தில்லி மற்றும் பீகார்; 2018-இல் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர்; 2019-இல் ஜார்க்கண்ட் – ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக பெரும் தோல்விகளைச் சந்தித்தது. 2017 குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வென்றாலும், அவ்வெற்றி முந்தைய வெற்றிகளைப் போல இருக்கவில்லை. காங்கிரசிடம் ஆட்சியைப் பறிகொடுக்கும் நிலையிலிருந்து நூலிழையில் தப்பித்தே குஜராத்தில் பாஜக குஜராத்தைத் தக்கவைத்துக் கொண்டது.
எனவே, வளர்ச்சி, வேலைவாய்ப்பு என்பதை மட்டுமே நம்பி இனித் தேர்தல்களை எதிர்கொள்ள முடியாதென்றுணர்ந்த இக்கும்பல், மீண்டும் பழைய பாணியிலான மதவெறி அரசியலை வெளிப்படையாக முன்னெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனால், மதவெறி அரசியலை மட்டும் நம்பித் தேர்தல்களில் வெற்றி பெற முடியாது என்பதை பாஜக நன்கு உணர்ந்திருந்தது. இதனால், தேர்தல்களில் பல்வேறு தில்லுமுல்லுகளைச் செய்வதன் மூலம் தனது வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள அது முயன்றது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தேர்தல் ஆணையத்தையும் பயன்படுத்திக் கொண்டது.
அடுத்தடுத்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெறுவதற்கு ஏதுவாகத் தேர்தல் ஆணையம் பல்வேறு வகைகளில் செயல்பட்டது. சிறுபான்மையினருக்கு எதிராக வன்மத்தைக் கக்கும் பாஜக தலைவர்களின் மதவெறியைத் தூண்டும் வெறுப்புப் பேச்சுகளைக் கண்டும் காணாமல் இருந்தது. பாஜகவின் அரசியல் வசதிக்கு ஏற்ப மாநில சட்டமன்றத் தேர்தல்களைத் தள்ளிப்போட்டது அல்லது பல கட்டங்களாகப் பிரித்து நடத்துவதன் மூலம் தேர்தல் நடைமுறைகளையே அதற்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் இஸ்லாமியர்களை வாக்களிக்க விடாமல் மிரட்டித் தடுப்பதையும் வேடிக்கை பார்த்தது.

குறிப்பாக, 2017-ஆம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, மோடி தேர்தல் வாக்குறுதிகளையும் சலுகைகளையும் அறிவிப்பதற்கு வசதியாக, அவரது பொதுக்கூட்டம் முடியும் வரை தேர்தல் தேதியை அறிவிக்காமல் தேர்தல் ஆணையம் காலம் தாழ்த்தியது. அதே ஆண்டு, ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டபோது, அது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை அறிவிப்பதிலும் காலம் தாழ்த்தியது.
தமிழ்நாட்டில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது, அக்கட்சியின் உட்கட்சிப் பூசல் காரணமாகக் காலியாக இருந்த 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தாமல் தேர்தல் ஆணையம் இழுத்தடித்தது.
2022 குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின்போதும் தேர்தல் ஆணையத்தின் இதே அணுகுமுறை தொடர்ந்தது. இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகளை அறிவித்த பின்னரும், குஜராத் தேர்தல் தேதியை மட்டும் அறிவிக்காமல் தள்ளிப்போட்டது. மோர்பி ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் பாஜகவுக்கு எதிரான மனநிலை உருவாகியிருந்த நிலையில், அந்த அதிருப்தி தணியும் வரை தேர்தல் தேதியை அறிவிக்காமல் காலம் தாழ்த்தியது.
அதேபோல, தேர்தல் காலங்களில் பல்வேறு இடங்களில் பாஜக தலைவர்கள் பேசும் அப்பட்டமான வெறுப்புப் பேச்சுகள் குறித்த புகார்களையும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் புறந்தள்ளியது. 2023 ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தல்கள் இதற்குச் சிறந்த உதாரணம். 2018-இல் இம்மூன்று மாநிலங்களிலும் படுதோல்வியைச் சந்தித்த பாஜக, 2023 தேர்தலின்போது மதவெறியைத் தூண்டும் பேச்சுகளைக் கையில் எடுத்து வெற்றிபெற முயன்றது.
சத்தீஸ்கர் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய அசாம் முதலமைச்சர் ஹேமந்த் பிஸ்வா சர்மா, அப்போது அம்மாநில அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஒரே இஸ்லாமிய அமைச்சரான முகமது அக்பரைச் சுட்டிக்காட்டி, “இப்போது ஒரு அக்பரை விட்டுவிட்டோம் என்றால், அவர் நூறு அக்பர்களைக் கொண்டுவந்து நாட்டின் புனிதத்தைக் கெடுத்துவிடுவார்” என்று அப்பட்டமாகப் பேசினார். இதேபோன்று, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்திலும் பாஜக தலைவர்கள் கடுமையான வெறுப்புப் பேச்சுகளைப் பேசினர். இப்பேச்சுகள் குறித்து எதிர்க்கட்சிகள் பலமுறை தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
2018-இல் இம்மூன்று மாநிலங்களிலும் படுதோல்வியைச் சந்தித்த பாஜக, 2023-இல் தேர்தல்களில் அதே மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
உத்திரப் பிரதேசத்தில் 2017, 2022 சட்டமன்றத் தேர்தல்களின்போதும், 2019, 2024 நாடாளுமன்றத் தேர்தல்களின்போதும், அதற்குப் பிந்தைய இடைத்தேர்தல்களின்போதும் இஸ்லாமிய வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுக்கும் சம்பவங்கள் பல இடங்களில் நடைபெற்றன. குறிப்பாக, முசாபர்நகர், ராம்பூர், கோசி ஆகிய மாவட்டங்களில் இத்தகைய சம்பவங்கள் பல அரங்கேறின. இவை தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்ட போதிலும், உரிய நடவடிக்கை எடுக்காமல், இச்சம்பவங்கள் தொடர அனுமதித்தது.
இவையனைத்தும், தேர்தல் காலங்களில் பாஜகவும் காவி பாசிசக் கும்பலும் மேற்கொண்ட தேர்தல் விதிமீறல்களை தேர்தல் ஆணையம் கண்டும் காணாமல் இருந்ததற்கான சான்றுகள் மட்டுமே.
தானே களத்தில் இறங்கி ஓட்டுத் திருட்டைச் செய்தது
ஆனால், 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போதும், ஹரியானா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல்களின்போதும், பாஜகவின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் தேர்தல் ஆணையமே நேரடியாகக் களத்தில் இறங்கிச் செயல்பட்டது. 2024 நவம்பரில் மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தலில், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால், இதே கூட்டணி சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சந்தித்த பின்னடைவுடன் ஒப்பிடும்போது, சட்டமன்றத் தேர்தலின் இவ்வெற்றி முற்றிலும் மாறுபட்டதாக அமைந்திருந்தது. வாக்குப்பதிவின்போது நடைபெற்ற தில்லுமுல்லுகளே இம்முரண்பட்ட தேர்தல் முடிவுகளுக்குக் காரணம் என்று எதிர்க்கட்சிகளும், ஏ.டி.ஆர். போன்ற அமைப்புகளும், பரகலா பிரபாகர் போன்ற தேர்தல் ஆய்வாளர்களும் குற்றம்சாட்டினர்.

மகாராஷ்டிராவில் 2024 மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலைவிட, அதே ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் 40.8 இலட்சம் வாக்காளர்கள் அதிகமாக இடம்பெற்றிருந்தனர். வெறும் ஐந்து மாதங்களில் இத்தனை இலட்சம் வாக்காளர்கள் எவ்வாறு புதிதாகச் சேர்க்கப்பட்டனர் என்ற கேள்விக்குத் தேர்தல் ஆணையம் பதிலளிக்கவில்லை.
இந்தியத் தேர்தல் வரலாற்றிலேயே மாலை 6 – 7 மணி வரையில் பதிவாகும் வாக்குகள் 1% க்கும் குறைவாகவே இருந்துள்ளன. ஆனால், மராட்டியத் தேர்தலில், 7% வித்தியாசம் இருந்தது! அதாவது, ஒரே ஒரு மணி நேரத்தில் 76 இலட்சம் வாக்காளர்கள் வாக்களித்ததாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அந்த ஒரு மணி நேரத்தில் எந்தெந்த வாக்குச்சாவடிகளில் எத்தனை இலட்சம் வாக்காளர்கள் வாக்களித்தனர் என்ற விவரத்தை வெளியிடத் தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.
அதேபோல, மாலை 6 மணிக்குள் வாக்களிக்க வந்தவர்கள் வரிசையில் நிற்க வைக்கப்பட்டு, இரவு 7 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர் என்ற தேர்தல் ஆணையத்தின் சப்பைக்கட்டுக்கு ஆதாரமாக, வாக்காளர்கள் வரிசையில் நிற்கும் வீடியோ பதிவுகளை வெளியிடுமாறு சமூகச் செயல்பாட்டாளர்கள் கோரினர். ஆனால், அவற்றையும் வெளியிடத் தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.
அதே காலகட்டத்தில் நடைபெற்ற ஹரியானா, ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல்களின்போதும், அதற்குப் பிறகு நடைபெற்ற சத்தீஸ்கர் மாநிலத் தேர்தலின்போதும் இதேபோன்ற நிலை நீடித்தது. வாக்குப்பதிவு சதவீதத்தை அறிவிப்பது ஐந்து நாட்கள் வரை தாமதப்படுத்தப்பட்டது அல்லது முன்னுக்குப் பின் முரணான வாக்குப்பதிவு சதவீதங்களைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்மூலம், பாஜகவின் வெற்றியை உறுதிசெய்வதற்காகக் கள்ள வாக்குகள் போடப்படுவதைத் தேர்தல் ஆணையம் அனுமதித்திருப்பது அம்பலமாகிறது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில், இதுவரை மேற்கொண்ட அனைத்து தில்லுமுல்லு நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து, தேர்தலில் வெற்றிபெற்றுவிட வேண்டும் என்ற நோக்கில் பாஜக முழுவீச்சில் களமிறங்கியது. இம்முறை பிரதமர் நரேந்திர மோடியே நேரடியாக வெறுப்புப் பேச்சைத் தொடங்கி வைத்தார். ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், இஸ்லாமியர்களை ‘வந்தேறிகள்’ என இழிவுபடுத்தியதுடன், இந்துப் பெண்களின் தாலியைப் பிடுங்கி இந்த வந்தேறிகளின் கைகளில் ஒப்படைக்க காங்கிரஸ் கட்சி விரும்புவதாகக் கூறி வன்மத்தைக் கக்கினார்.
மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையைத் தேர்தல் ஆணையம் காதில் போட்டுக்கொள்ளவில்லை. மாறாக, மோடியின் பேச்சுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது. மோடியைத் தொடர்ந்து, பாஜகவின் அடுத்த கட்டத் தலைவர்களும் வெறுப்புப் பேச்சில் இறங்கினர். அந்தத் தேர்தல் காலத்தில் மட்டும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் 76 விழுக்காடு அதிகரித்ததாக இந்தியா ஹேட் லேப் என்ற அமைப்பு கூறுகிறது. ஆனால், இத்தகைய குற்றச்சாட்டுகள் எதன் மீதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதே தேர்தலின்போது, 140-க்கும் மேற்பட்ட நாடாளுமன்றத் தொகுதிகளில், தேர்தல் நாளன்று அதிகாரப்பூர்வமாகப் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கையைவிட, எண்ணப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்குகளின் மொத்த எண்ணிக்கை அதிகமாக இருந்ததாக இந்தியா கூட்டணிக் கட்சிகளும் அரசியல் விமர்சகர்களும் சுட்டிக்காட்டினர்.
வாக்குப்பதிவில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டுகளைத் தெளிவுபடுத்தவும், முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை, வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகிதத் தணிக்கைத் தட (VVPAT) சீட்டுகளுடன் 100 விழுக்காடு ஒப்பிட்டுச் சரிபார்க்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், அனைத்து VVPAT சீட்டுகளையும் ஒப்பிட்டுச் சரிபார்க்க முடியாது என்று தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இறுதியில், தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகள் மீது நம்பிக்கை இருப்பதாகக் கூறி உச்சநீதிமன்றம் அந்த மனுக்களை நிராகரித்தது.
தேர்தல் ஆணையத்தின் முழு ஆதரவுடன் இதுபோன்ற பல்வேறு தில்லுமுல்லுகளைச் செய்தபோதிலும், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவால் பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை. 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெறப் போவதாக அறிவித்துப் பிரச்சாரம் செய்தபோதிலும், பாஜகவால் 240 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. பரகலா பிரபாகர் போன்ற தேர்தல் ஆய்வாளர்கள், 2024ஆம் ஆண்டு தேர்தலில் சுமார் 79 இடங்களில் பாஜகவின் வெற்றி தேர்தல் தில்லுமுல்லுகள் மூலம் பெறப்பட்டதாகக் கூறுகின்றனர். (இந்த 79 இடங்களிலும் மாலை 6-7 மணிவரையிலான வாக்கு சதவீதம் 10 – 20% இருந்தன! இவை தேர்தல் மோசடிகள் நடந்துள்ளன என்பதற்கான அப்பட்டமான ஆதாரங்கள்) அப்படிப் பார்த்தால், பாஜக உண்மையில் 170-க்கும் குறைவான இடங்களில்தான் வெற்றி பெற்றிருக்கிறது என்பது தெளிவாகிறது.
பழைய உத்திகள் மட்டும் போதவில்லை, எனவேதான் எஸ்.ஐ.ஆர்.!
2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்குப் பேரதிர்ச்சியைக் கொடுத்தன. தனது வாக்கு சதவீதம் சரிவைச் சந்தித்திருப்பதையும் அக்கட்சி உணர்ந்துகொண்டது. வெறுப்புப் பேச்சுகள், இசுலாமிய வாக்காளர்களை மிரட்டித் தடுப்பது, கடைசி நேரத்தில் கள்ள வாக்குகளைப் போடுவது போன்ற நடவடிக்கைகள் சில தொகுதிகளில் வெற்றியைப் பெற்றுத் தரலாம். ஆனால், அவற்றை மட்டுமே நிரந்தரமாக நம்பியிருக்க முடியாது. நாடு முழுவதும், எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இத்தகைய உத்திகளைச் செயல்படுத்துவதும் கடினம். எனவே, தனது தேர்தல் வெற்றியை உறுதிசெய்வதற்குப் பாஜகவுக்குப் புதிய உத்திகள் தேவைப்பட்டன. அதற்காக உருவாக்கப்பட்டதுதான் எஸ்.ஐ.ஆர்.

தேர்தல் நாளன்று தங்களுக்கு எதிராக வாக்களிக்கக்கூடிய இஸ்லாமிய வாக்காளர்களை மிரட்டித் தடுத்து நிறுத்துவதைவிட, அவர்களது வாக்களிக்கும் உரிமையையே பறித்துவிடுவதுதான் சரியான உத்தியாக இருக்கும் என்று காவி பாசிஸ்டுகள் முடிவுசெய்தனர். வாக்காளர் பட்டியலைத் திருத்துகிறோம் என்ற பெயரில், நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும், ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள இஸ்லாமிய, பா.ஜ.க. எதிப்பு வாக்காளர்களைக் கண்டறிந்து, அவர்களில் பெரும்பாலானோரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கிவிடத் தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இஸ்லாமிய வாக்காளர்கள் இவ்வாறு குறிவைத்து நீக்கப்பட்டது, அந்த மாநிலங்களில் பாஜகவின் வெற்றிக்கு வழிவகுத்திருக்கிறது. குறிப்பாக, மம்தா பானர்ஜியின் கோட்டை என்று கருதப்பட்ட மேற்கு வங்கத்தில், இன்று அவரது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே இல்லாத நிலை ஏற்பட்டிருப்பதற்கு, தேர்தல் ஆணையத்தின் காவி பாசிச ஆதரவு ஒரு முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையின்போது, ஆரம்பத்தில் 60 இலட்சம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டன. பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்பட்டது தொடர்பாக விசாரித்த உச்சநீதிமன்றம், இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என உத்தரவிட்டது. அதன்படி, மேல்முறையீடுகளை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டன.
இந்தத் தீர்ப்பாயங்களில் 38 இலட்சம் மேல்முறையீடுகள் செய்யப்பட்டன. அவற்றில் 22.21 இலட்சம் மேல்முறையீடுகள், பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை மீட்டெடுக்கக் கோரி தாக்கல் செய்தவை. எஞ்சிய 16.10 இலட்சம் மேல்முறையீடுகள், நீதித்துறை அதிகாரிகளால் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் பெயர்களை நீக்கக் கோரி தேர்தல் ஆணையத்தால் தாக்கல் செய்யப்பட்டவை. அதாவது, தீர்ப்பாயங்களின் மூலம் வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை உறுதிசெய்த பிறகும்கூட, அதனைப் பறிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையமே மேல்முறையீடு செய்திருக்கிறது!
இம்மாநிலங்களில் இஸ்லாமிய வாக்காளர்களின் பெயர்களை பட்டியலிலிருந்து நீக்குவதற்குப் படிவம் 7-ஐ பாஜக பெரிய அளவில் பயன்படுத்தியிருக்கிறது. 2002ஆம் ஆண்டு எஸ்.ஐ.ஆர். நடைபெற்றபோது, ஒரே தொகுதியிலிருந்து ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் சமர்ப்பிக்கப்படும் படிவம் 7 விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று அப்போதைய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால், அந்த வழிகாட்டுதல் தற்போது குப்பையில் வீசப்பட்டிருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் ஜூன் 16 முதல் அக்டோபர் 8 வரை, வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்களை நீக்கக் கோரும் படிவம் 7-ன் கீழ் 1,10,654 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக அம்மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் தெரிவித்திருந்தது.
ஆனால், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் அதே காலகட்டத்திற்கான 81,822 விண்ணப்பங்களின் விவரங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. எஞ்சிய 28,832 விண்ணப்பங்களின் விவரங்கள் பொதுமக்களுக்குக் கிடைக்கவில்லை. இது அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்ட மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் சுமார் 26 விழுக்காடாகும். இந்த விண்ணப்பங்கள் எந்தெந்தத் தொகுதிகளைச் சேர்ந்தவை, யார் அவற்றைச் சமர்ப்பித்தனர், யாருடைய பெயர்களை நீக்கக் கோரினர் என்பன போன்ற விவரங்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படவில்லை.
இம்மாநிலத்தின் பல்லாரி நகரச் சட்டமன்றத் தொகுதியில், படிவம் 7-ன் கீழ் வாக்காளர்களின் பெயர்களை நீக்கக் கோரி 7,561 விண்ணப்பங்கள் ஒரே நபரால் தாக்கல் செய்யப்பட்டன. பல்லாரி மாநகராட்சியின் பாஜக வாக்குச்சாவடி முகவரான ஸ்ரீனிவாஸ் மோத்கூர் என்பவர்தான் இந்த விண்ணப்பங்களைத் தாக்கல் செய்தார். இவை அனைத்தும் அந்தத் தொகுதியில் உள்ள இஸ்லாமிய வாக்காளர்களின் பெயர்களை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களாகும்.
இந்நிலையில், 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படிவம் 7 விண்ணப்பங்கள் குறித்த விவரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படாதது, அவையும் இதேபோன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்துகிறது.
இதேபோன்று தெலங்கானாவிலும் சிறுபான்மை வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கக் கோரி படிவம் 7 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, முஷீராபாத், பஹதூர்புரா, கோஷாமஹால் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்களை நீக்கக் கோரும் வகையில், அவர்களின் விவரங்கள் முன்கூட்டியே அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இவையெல்லாம் சமீபத்திய உதாரணங்கள் மட்டுமே. இதேபோன்று பீகார், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் படிவம் 7-ஐப் பயன்படுத்தி பல இலட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றன.
இந்த எஸ்.ஐ.ஆர். நடைமுறையை முறையாகச் செயல்படுத்த வேண்டுமென்றால் பல மாதங்கள் தேவைப்படும். இதற்கு முன்பு, 2002ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை முழுமையாக முடிக்க இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டன. ஆனால், இப்போது தேர்தல் ஆணையம் ஒரு தந்திரத்தைக் கையாள்கிறது. விரைவில் சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள்ளவிருக்கும் மாநிலங்களைத் தேர்ந்தெடுத்து, அங்கு ஓரிரு மாதங்களுக்குள் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை நடத்தி முடிப்பது என்பதே அந்த உத்தி.
இரண்டு ஆண்டுகள் வரை போதிய அவகாசம் அளித்தால், தேர்தல் ஆணையம் கோரும் ஆவணங்கள் அனைத்தையும் வாக்காளர்கள் சமர்ப்பித்துவிடுவார்கள். ஆனால், அதே நடைமுறையை ஒரே மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று நிர்பந்தித்தால், பலரால் அந்த ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியாது. இதனால், பல வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து விடுபட்டுப் போகும். இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்தி, படிவம் 7 வாயிலாகத் தங்களது தொகுதிகளில் உள்ள இஸ்லாமிய வாக்காளர்களின் பெயர்களைக் காவிக் கும்பல் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கிவிட முடியும்.
இதுதவிர, வாக்காளர்களைக் காணவில்லை, அவர்களது ஆவணங்களில் பிழைகள் உள்ளன, “தர்க்கரீதியான முரண்பாடுகள்” உள்ளன என்று கூறி, பல இலட்சம் இஸ்லாமியர்களின் வாக்குரிமையைத் தேர்தல் ஆணையம் பறித்திருக்கிறது. இதுபோன்ற நடைமுறைகளின் மூலம் காவி பாசிஸ்டுகளின் தேர்தல் வெற்றியை உறுதிசெய்வதற்காக, தேர்தல் ஆணையம் அவர்களுடன் கைகோர்த்துச் செயல்படுகிறது.
இவ்வாறு, தேர்தல் காலங்களில் பாஜகவின் வெறுப்புப் பேச்சுகளையும் தேர்தல் விதிமீறல்களையும் கண்டுகொள்ளாமல் இருந்த தேர்தல் ஆணையம், பின்னர் தேர்தல் நடைமுறைகளையே பாஜகவுக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கியது. தற்போது எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையின் மூலம், பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கக்கூடிய மக்களின் வாக்குரிமையையே பறிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறது.
- அழகு
