அதானியின் இலாப வேட்டைக்காகப் பலியாகும்
மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகள்!

மழைப்பொழிவு, நிலத்தடி நீர், ஆறுகள், விவசாயம், வனவிலங்குகளின் வாழிடம் என இயற்கையின் ஒவ்வொரு கூறும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இவற்றைத் துண்டித்துவிட்டு ஒரு மின்சாரத் திட்டத்தின் உற்பத்தித் திறனை மட்டும் வளர்ச்சி என்று கொண்டாட முடியாது. மின்சாரத் தேவை என்ற பெயரில் இயற்கையை அழித்துவிட்டு, அந்த அழிவுக்கான இழப்பீட்டைக்கூடக் குறைக்கத் துடிக்கும் நிறுவனங்களின் இலாப வேட்டையை வளர்ச்சி என்று ஏற்க முடியாது.

மகாராஷ்டிராவின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் 1,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் நீரேற்று மின்சாரத் திட்டத்தை அதானி குழுமம் செயல்படுத்தி வருகிறது. இயற்கை வளங்களையும் வனவிலங்குகளின் வாழிடங்களையும் அழிக்கும் இந்தத் திட்டத்தால் ஏற்படும் சூழலியல் பாதிப்புகளுக்கு ஈடாக வனவிலங்கு பாதுகாப்புக்காகச் செலுத்த வேண்டிய தொகையைக்கூட ஏமாற்றிக் குறைக்க அதானி குழுமம் முயன்றிருப்பது அம்பலமாகியுள்ளது. திட்டத்தின் உண்மையான மதிப்பீடான ரூ.5,675 கோடியை வெறும் ரூ.56.75 கோடியாகக் குறைத்துக் காட்டி, அதற்கேற்ப வனவிலங்கு பாதுகாப்புக்குச் செலுத்த வேண்டிய ரூ.227 கோடியை ரூ.2.27 கோடியாகச் சுருக்க முயன்றிருக்கிறது. அதாவது, இயற்கையை அழித்து இலாபம் ஈட்டுவதோடு, அந்த அழிவுக்கான இழப்பீட்டைக்கூடச் செலுத்தாமல் தப்பிக்கப் பார்க்கிறது அதானி குழுமம்.

மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டம், படான் தாலுகாவில் உள்ள தாரளி அணைப் பகுதியில் 1,500 மெகாவாட் திறன்கொண்ட இந்த நீரேற்று மின்சாரத் திட்டம் அமைக்கப்படுகிறது. நிவாடே, தொண்டோஷி, கலாம்பே, ஜாலு ஆகிய நான்கு கிராமங்களைச் சேர்ந்த 150.74 ஹெக்டேர் நிலம் இதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலங்கள் வன நிலங்களாக வகைப்படுத்தப்படவில்லை என்றாலும், கோய்னா வனவிலங்கு சரணாலயத்தின் 10 கி.மீ. சுற்றளவிலான சூழலியல் உணர்திறன் மண்டலத்துக்குள் (Eco-Sensitive Zone) இத்திட்டம் அமைந்துள்ளது. கோய்னா சரணாலயம் சஹயாத்ரி புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியாகும். எனவே, இத்திட்டத்தால் அங்குள்ள வனவிலங்குகளுக்கும் இயற்கைச் சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டே அனுமதிகளும் பாதுகாப்பு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

ஆனால், இயற்கை வளங்களைச் சுரண்டி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான மின்சாரத் திட்டத்தைச் செயல்படுத்தும் அதானி குழுமம், அந்த இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காகச் செலுத்த வேண்டிய தொகையைக் குறைப்பதிலேயே குறியாக இருந்திருக்கிறது. 2025 பிப்ரவரியில் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஆவணங்களில் இத்திட்டத்தின் மதிப்பீடு ரூ.5,675 கோடியாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இத்திட்டத்துக்கு மாநில வனவிலங்கு வாரியம் விதித்த 15 நிபந்தனைகளில், திட்ட மதிப்பீட்டில் 4 சதவீதத்தை வனவிலங்கு பாதுகாப்புக்காகச் செலுத்த வேண்டும் என்பதும் ஒன்றாகும். அதன்படி, அதானி நிறுவனம் ரூ.227 கோடியைச் சஹயாத்ரி புலிகள் காப்பகத்தின் கணக்கில் செலுத்த வேண்டும் என்று மகாராஷ்டிராவின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் 2026 மார்ச் மாதம் நிறுவனத்துக்கு அறிவுறுத்தியிருந்தார்.

ஆனால், இந்தத் தொகையைச் செலுத்துவதற்குப் பதிலாக, திட்டத்தின் மதிப்பீட்டையே மாற்றிக் காட்டும் மோசடியில் அதானி குழுமம் இறங்கியிருக்கிறது. 2026 செப்டம்பர் 8 அன்று அந்நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி நரேஷ் தெல்கு கையெழுத்திட்ட பிரமாணப் பத்திரத்தில் திட்டத்தின் மதிப்பீடு ரூ.56.75 கோடி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஏற்கெனவே ரூ.5,675 கோடியாக மதிப்பிடப்பட்ட ஒரு திட்டத்தின் செலவை வெறும் ரூ.56.75 கோடியாகக் குறைத்துக் காட்டியிருக்கிறது நிறுவனம். அதாவது திட்டமதிப்பீட்டில் 99 சதவீதத்தை குறைத்திருக்கிறது!

திட்டத்தின் மின்சார உற்பத்தித் திறன் 1,500 மெகாவாட்டாகவே நீடிக்கும் நிலையில், அதன் மதிப்பீட்டை மட்டும் நூறில் ஒரு பங்காகக் குறைத்துக் காட்டுவதற்கு எந்த நியாயமான அடிப்படையும் இல்லை. திட்டத்தின் கட்டமைப்பில் செய்யப்பட்ட மாற்றங்கள், செலவைக் குறைப்பதற்கான தொழில்நுட்பக் காரணங்கள் என எதற்கும் நிறுவனம் உரிய விளக்கம் அளிக்கவில்லை. திட்டத்தின் உண்மையான மதிப்பை மறைத்து, அதற்குச் செலுத்த வேண்டிய சுற்றுச்சூழல் பொறுப்பிலிருந்து தப்பிப்பதே இந்த மதிப்பீட்டுக் குறைப்பின் நோக்கம் என்பது தெளிவாகிறது.

இந்தப் புதிய மதிப்பீட்டை ஏற்றுக்கொண்டால், வனவிலங்கு பாதுகாப்புக்காகச் செலுத்த வேண்டிய தொகையும் ரூ.227 கோடியிலிருந்து ரூ.2.27 கோடியாகக் குறைந்துவிடும். அதாவது, சஹயாத்ரி புலிகள் காப்பகத்தின் பாதுகாப்புக்காகச் செலுத்த வேண்டிய ரூ.225 கோடியைத் தவிர்க்கும் வாய்ப்பை இந்த மதிப்பீட்டுக் குறைப்பு உருவாக்கியிருக்கிறது. இயற்கை வளங்களைப் பயன்படுத்தி இலாபம் ஈட்டுவதில் மட்டும் ஆர்வம் காட்டும் அதானி குழுமம், அந்த இயற்கையைப் பாதுகாப்பதற்கான செலவு என்று வரும்போது மட்டும் திட்டத்தின் மதிப்பையே மாற்றிக் காட்டுகிறது.

இதற்கெல்லாம் துணைபோகும் வகையில் மகாராஷ்டிர வனத்துறையும் திருத்தப்பட்ட மதிப்பீட்டை ஏற்றுக்கொண்டிருக்கிறது. 2026 அக்டோபர் 12 அன்று முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அனுப்பிய கடிதத்தில் திருத்தப்பட்ட மதிப்பீடு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி, ஒரு சதவீதத் தொகையை உடனடியாகச் செலுத்தவும், மீதமுள்ள மூன்று சதவீதத்தை தேசிய வனவிலங்கு வாரியத்தின் அனுமதிக்குப் பிறகு செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. இதன்படி அதானி நிறுவனம் ரூ.56.75 இலட்சத்தைச் செலுத்தியது. ரூ.227 கோடி செலுத்த வேண்டிய நிறுவனம் வெறும் ரூ.56.75 இலட்சத்தைச் செலுத்தி அதானி நிறுவனம் தனது சுற்றுச்சூழல் பொறுப்பிலிருந்து தப்பிக்க வனத்துறையே வழிவகுத்துக் கொடுத்திருக்கிறது.

இந்த முறைகேடு அம்பலமான பிறகு அதானி நிறுவனம் தனது நிலைப்பாட்டை மாற்றிப் பேசத் தொடங்கியிருக்கிறது. ரூ.56.75 கோடி என்பது திட்டத்தின் மொத்த மதிப்பீடு அல்ல; தள ஆய்வு மற்றும் புலனாய்வுப் பணிகளுக்கான செலவு மட்டுமே என்றும், திட்டத்தின் உண்மையான மதிப்பீடு ரூ.5,675 கோடியாகவே நீடிக்கிறது என்றும் இப்போது விளக்கம் அளிக்கிறது. அப்படியானால், திட்டத்தின் மொத்த மதிப்பீடாக ரூ.56.75 கோடியைக் குறிப்பிட்டு பிரமாணப் பத்திரம் சமர்ப்பித்தது ஏன்? அந்தத் தொகையின் அடிப்படையில் வனவிலங்கு பாதுகாப்புக்கான நிதியைக் கணக்கிட வனத்துறை அனுமதித்தது ஏன்? ஒரு சதவீதமாக ரூ.56.75 இலட்சத்தை நிறுவனம் செலுத்தியது ஏன்? திட்டத்தின் மதிப்பைக் குறைத்துக் காட்டி, அதற்கேற்ப செலுத்த வேண்டிய தொகையையும் குறைக்கும் முயற்சியின் தொடர்ச்சியாகவே இவை அமைந்துள்ளன. முறைகேடு அம்பலமான பிறகு ஆய்வுச் செலவு என்று புதிய விளக்கத்தைக் கொடுத்து தப்பிக்கப் பார்க்கிறது அதானி குழுமம்.

இன்னும் கொடுமை என்னவென்றால், முதலில் திருத்தப்பட்ட மதிப்பீட்டை ஏற்றுக்கொண்ட வனத்துறை அதிகாரியே பின்னர் அதை ஏற்கவில்லை என்று கூறியிருக்கிறார். அக்டோபர் 12 அன்று அனுப்பிய அதிகாரப்பூர்வக் கடிதத்துக்கும் பின்னர் அவர் அளித்த விளக்கத்துக்கும் இடையே வெளிப்படையான முரண்பாடு இருக்கிறது. அதானி நிறுவனத்தின் மதிப்பீட்டைக் குறைப்பதற்கு யார் ஒப்புதல் அளித்தார்கள், எந்த ஆவணங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது, ரூ.227 கோடி செலுத்த வேண்டிய நிறுவனம் ரூ.56.75 இலட்சம் மட்டும் செலுத்தியதை அதிகாரிகள் எவ்வாறு அனுமதித்தார்கள் என்பனவற்றுக்கு வனத்துறையும் மகாராஷ்டிர அரசும் பதிலளிக்கவில்லை. தனியார் நிறுவனத்தின் இலாபத்துக்காக அரசு அதிகாரிகள் இயற்கை வளங்களின் பாதுகாப்புக்கான நிதியையே விட்டுக்கொடுத்திருக்கிறார்கள்.

இதற்கிடையில், திட்டத்துக்கான தேசிய வனவிலங்கு வாரியத்தின் முன் அனுமதி கிடைப்பதற்கு முன்பே கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டிருப்பதையும் வனத்துறை கண்டறிந்துள்ளது. திட்டம் சூழலியல் உணர்திறன் மண்டலத்தில் அமைந்துள்ளதால் முன் அனுமதி அவசியம். ஆனால், அதானி நிறுவனம் அந்த அனுமதியைப் பெறுவதற்கு முன்பே கட்டுமானப் பணிகளைத் தொடங்கியிருக்கிறது. இதையடுத்து திட்ட மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய வனத்துறை, நவம்பர் 13 அன்று கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டது. கட்டுமானப் பணிகள் பல மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், இவ்வளவு காலமும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்திருக்கிறார்கள். அனுமதியின்றிப் பணிகள் நடைபெறுவதைத் தடுக்க வேண்டிய வனத்துறை, ஊடகங்களில் விவகாரம் அம்பலமான பிறகுதான் நடவடிக்கை எடுத்திருக்கிறது. இது அதிகாரிகளின் அலட்சியத்தை மட்டுமல்ல, தனியார் நிறுவனங்கள் சட்டங்களையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளையும் தங்களது விருப்பத்துக்கு வளைக்கும் ஆளும் வர்க்க ஊழல் கூட்டணியையும் அம்பலப்படுத்துகிறது.

இது தனியொரு திட்டத்தில் நடந்த முறைகேடு மட்டுமல்ல. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தனியார் நிறுவனங்களின் மின்சாரத் திட்டங்களுக்காகக் காடுகளும் இயற்கை வளங்களும் எவ்வாறு பலியிடப்படுகின்றன என்பதற்கான எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது. மகாராஷ்டிராவின் கர்ஜத் பகுதியில் டோரண்ட் பவர் நிறுவனம் மேற்கொள்ளும் மற்றொரு நீரேற்று மின்சாரத் திட்டத்துக்காக 32,490 மரங்களை வெட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. 233 ஹெக்டேர் வன நிலம் இதற்காக அழிக்கப்படுகிறது. ஏற்கெனவே சுமார் 1,100 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அங்கு வாழும் சுமார் 150 காத்கரி பழங்குடியினக் குடும்பங்கள் தலைமுறைகளாகத் தங்கள் வாழ்வாதாரத்துக்காகச் சார்ந்திருந்த காடுகளையும் வனப் பொருட்களையும் இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்தத் திட்டமும் அதானி நிறுவனத்தின் திட்டமும் வெவ்வேறானவை என்றாலும், மேற்குத் தொடர்ச்சி மலைகளைத் தனியார் நிறுவனங்களின் இலாபத்துக்காகச் சுரண்டுவதில் இரண்டும் ஒன்றே. இயற்கை வளங்கள் பொதுமக்களின் வாழ்வாதாரமாகவும் சமூகத்தின் பொது உடைமையாகவும் கருதப்பட வேண்டியவை. ஆனால், அவை பெருநிறுவனங்களின் இலாபத்துக்கான மூலப்பொருட்களாக மாற்றப்படுகின்றன.

மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்பு மகாராஷ்டிராவுடன் முடிந்துவிடுவதில்லை. 2018-ஆம் ஆண்டு ஐஐடி பம்பாய் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கவுன்சிலைச் சேர்ந்த ஆய்வாளர்கள் வெளியிட்ட ஆய்வின்படி, மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளிலிருந்து உருவாகும் ஈரப்பதம் தமிழகத்தின் தென்மேற்குப் பருவமழையில் 25 முதல் 40 சதவீதம் வரை பங்களிக்கிறது. வறட்சியான காலங்களில் இந்தப் பங்களிப்பு 50 சதவீதத்தை எட்டக்கூடும். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் காவிரி ஆற்றுப் படுகைக்கும் இந்தக் காடுகள் முக்கியமான ஈரப்பதத்தை வழங்குகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைத் தாவரங்கள் முற்றிலும் அகற்றப்படும் சூழலில் தமிழகத்தின் சராசரி மழைப்பொழிவில் சுமார் 25 சதவீதம் வரை குறைவு ஏற்படக்கூடும் என்றும் அந்த ஆய்வு கணித்துள்ளது. இது மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளின் அழிவு ஒட்டுமொத்த நீர்ச் சுழற்சியையும் எவ்வளவு தீவிரமாகப் பாதிக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது.

மழைப்பொழிவு, நிலத்தடி நீர், ஆறுகள், விவசாயம், வனவிலங்குகளின் வாழிடம் என இயற்கையின் ஒவ்வொரு கூறும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இவற்றைத் துண்டித்துவிட்டு ஒரு மின்சாரத் திட்டத்தின் உற்பத்தித் திறனை மட்டும் வளர்ச்சி என்று கொண்டாட முடியாது. மின்சாரத் தேவை என்ற பெயரில் இயற்கையை அழித்துவிட்டு, அந்த அழிவுக்கான இழப்பீட்டைக்கூடக் குறைக்கத் துடிக்கும் நிறுவனங்களின் இலாப வேட்டையை வளர்ச்சி என்று ஏற்க முடியாது. முதலாளித்துவ உற்பத்தி முறையில் இயற்கையும் மனித உழைப்பும் பெருநிறுவனங்களின் இலாபத்துக்கான வளங்களாக மட்டுமே பார்க்கப்படுகின்றன. இதன் விளைவாக, சமூகத்தின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் இயற்கை அழிவு தனியார் நிறுவனங்களின் வணிகப் பொருளாகச் சுருக்கப்படுகிறது.

அதானி குழுமம் தனது திட்டத்தின் உண்மையான மதிப்பீட்டைக் குறைத்துக் காட்டியதன் மூலம் வனவிலங்கு பாதுகாப்புக்கான நிதியையும் குறைக்க முயன்றிருக்கிறது. இந்த முயற்சி அம்பலமான பிறகு ஆய்வுச் செலவு என்று புதிய விளக்கத்தைக் கொடுத்து தப்பிக்கப் பார்க்கிறது. ஆனால், பிரமாணப் பத்திரம், வனத்துறையின் அதிகாரப்பூர்வக் கடிதம், நிறுவனம் செலுத்திய தொகை என அனைத்தும் ஆவணங்களில் பதிவாகியிருக்கின்றன. இவற்றை வெறும் விளக்கங்களால் மறைத்துவிட முடியாது. ஒருபுறம் இயற்கை வளங்களைச் சுரண்டி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இலாபம் ஈட்டுவதற்கான திட்டத்தைச் செயல்படுத்திவிட்டு, மறுபுறம் அந்த இயற்கையைப் பாதுகாப்பதற்கான செலவைத் தவிர்க்க மதிப்பீட்டையே மாற்றிக் காட்டுவது அதானி போன்ற தரகு முதலாளிகளின் கொள்ளை இலாப நோக்கத்தையே காட்டுகிறது. இந்த கொள்ளைக்கு அரசு நிர்வாகமும் துணை நிற்கிறது.

  • அறிவு

 

தகவல் உதவி 

https://thewire.in/environment/adani-slashes-maharashtra-project-cost-by-99-in-affidavit-conservation-dues-shrink-by-rs-225-crore

https://indianexpress.com/article/express-exclusive/explained-adani-green-satara-project-cost-cut-rs-227-crore-10961357/

https://indianexpress.com/article/cities/pune/adani-hydropower-project-maharashtra-forest-department-work-halted-10965184/

https://www.msn.com/en-in/news/other/why-felling-a-forest-near-mumbai-could-change-the-rain-in-tamil-nadu/ar-AA2gyqVY

https://indianexpress.com/article/india/karjat-pumped-storage-project-torrent-power-forest-felling-western-ghats-tribals-10946476/

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன