வந்தே மாதரம்: தேசப்பற்றா? இந்துத்துவ திணிப்பா?

சாவர்க்கரும், ஹெட்கேவாரும் இந்துத்துவா கருத்தியலுக்கு உயிர் கொடுப்பதற்கு முன்பே முஸ்லீம் வெறுப்பு இந்துக்களின் மேலாதிக்கம் என்று இந்து தேசியத்திற்கு அடித்தளமிட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இதன் காரணமாகவே  பக்கிம் சந்திரரையும், அவர் எழுதிய வந்தே மாதரம் பாடலையும் காவிக் கும்பல் தூக்கிப் பிடிக்கிறது.

தவெக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது பெரும் விமர்சனத்திற்குள்ளானதை நாம் அறிவோம். இதற்கு தவெக தரப்போ, இது ஒன்றிய அரசின் வழிகாட்டுதல், பின்பற்றியாக வேண்டும் என்று ஆளுநர் மாளிகை தெரிவித்ததால் தவிர்க்க இயலவில்லை என்று காரணம் கூறியது. அதே சமயத்தில், மேற்குவங்க முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக-வின் சுவேந்து அதிகாரியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடப்படவில்லை. இத்தனைக்கும் இந்நிகழ்ச்சியில் அம்மாநில ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் மோடி, அமித்ஷா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும், தமிழக ஆளுநர் மாளிகை தெரிவித்தது போல, அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலைப் பாட வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் கூறியிருந்தாலும் ஜனகனமன பாடுவதைப் போன்று வந்தே மாதரத்தையும் கட்டாயம் பாடியாக வேண்டும் என்ற சட்டம் எதுவும் கிடையாது. எனவே, தவெகவினரால் இதைத் தவிர்த்திருக்க முடியும். ஒருவேளைப் பதவியேற்பு கிலுகிலுப்பில் இருந்ததினால் தவேக-வினர் இதனையெல்லாம் கண்டுகொள்ளவில்லையா? அல்லது இப்பாடலைப் பற்றிய வரலாறே தெரியாதா? அல்லது திட்டமிட்டே அனுமதித்தனரா? இவை எதற்கும் பதில் இல்லை. இச்சர்ச்சை குறித்த தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்ட வலதுசாரியினர், பிரிட்டீஸாருக்கு எதிராக மக்களிடம் விடுதலை வேட்க்கையைத் தூண்டிய வந்தே மாதரம் பாடலை எப்படி பாடக்கூடாது என்கிறீர்கள் என்று கேள்வியெழுப்புகிறார்கள். உண்மையிலேயே வந்தே மாதரம் பாடல் பிரிட்டீஸ் ஆட்சியாளர்களை எதிர்த்து எழுதப்பட்ட பாடலா என்றால்? இல்லை, அவர்களை ஆதரித்து பக்கீம் சந்திரரால் எழுதப்பட்ட ஆனந்தமடம் நாவலின் ஒரு அங்கம் தான் அப்பாடல்.   

கிழக்கிந்தியக் கம்பெனி இந்திய நிலப்பரப்பை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு வரைமுறையின்றி சுரண்டி வந்த காலகட்டத்தில், மக்கள் கடுமையான வறுமையிலும் துன்பத்திலும் ஆட்பட்டிருந்த சூழலில், பிரிட்டீஸார் நமது எதிரியல்ல, முஸ்லீம்களே நமது எதிரிகள், முஸ்லீம்களின் கஜானாவைக் கொள்ளையடி, அவர்களை கொலைசெய் என்று மதத் துவேச  நோக்கத்தில் எழுதப்பட்ட நாவலில் (1882) வரும் பாடலை நாம் யாரேனும் ஆதரிக்கமுடியமா? 

ஆதரித்தால் தான் உண்மையான தேசபக்தன், இல்லையென்றால் தேசவிரோதி என்கிறது ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல்.

“இந்தியாவில் வசிக்க வேண்டுமென்றால், வந்தே மாதரம் பாடலைப் பாடவேண்டும்” என்கிறார் ஹரியானா மாநில பாஜக அமைச்சர் அனில்விஜ். அப்பாடலை இந்தியாவின் தேசிய கீதமாக்க வேண்டும் என்கிறது ஆர்எஸ்எஸ். இப்பாடலை பாட மறுத்தாலோ அல்லது அவதூறு செய்தாலோ சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என மிரட்டுகிறது மோடி அரசாங்கம்.

மேற்குவங்கத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த மறுநாள் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், தேசியகீதம் மற்றும் தேசியக்கொடியை அவமதித்தால் என்ன தண்டனையோ[3 வருடம் சிறை மற்றும் அபராதம்] அதுபோல, வந்தே மாதரம் பாடலை அவமதிக்கச் செய்தாலும் முன் சொன்னதற்கினையான தண்டனை வழங்குவதற்காக, தேசிய மரியாதையை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டத்தில் (1971) திருத்தத்தினைக் கொண்டுவர மோடி அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது. இச்சட்டம் நிறைவேறினால், பிற மதத்தினரோ அல்லது மற்றவர்களோ வந்தே மாதரம் பாடலை பாடமறுப்பதென்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

வந்தே மாதரம் பாடலை இந்தியாவின் தேசிய கீதமாக்க வேண்டும் என்ற காவிகளின் நீண்டநாள் கோரிக்கையை சாத்தியமாக்குவதற்கான வாய்ப்பாக மேற்குவங்க சட்டசபைத் தேர்தலைப் பாஜக கண்டது. அம்மாநிலத் தேர்தல் பிரச்சாரங்களில், மம்தா அரசாங்கத்தின் ஊழல், பெண்கள் பாதுகாப்பு, நிர்வாகச் சீர்கேடுகள் ஆகியவற்றை மையமாக வைத்து பிரச்சாரம் செய்ததோடு, பங்களாதேஷ் முஸ்லீம்கள் ஊடுருவல் மற்றும் வந்தே மாதரம் பாடலை மையப்படுத்திய விவாதம் ஆகியவற்றின் வழியாக தனது இந்துத்துவ அரசியலையும் பிரச்சாரமாக மக்களிடையே எடுத்துச் சென்றது பாஜக.  

இத்தேர்தலைக் கணக்கில் கொண்டு, வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டையொட்டி நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதத்தை ஏற்பாடு செய்தது பாஜக. அதில் பேசிய மோடி.  “வந்தே மாதரம் என்ற மந்திரத்தை காங்கிரஸ் சிறுமைப்படுத்தி விட்டது. முழுப்பாடலையும் கூறுகளாக்கி முதல் இரண்டு பத்திகளை மட்டும் ஏற்றுக் கொண்டது. இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு இதுவும் ஒரு காரணமானது” என்று பொய்மூட்டைகளை அவிழ்த்து விட்டார். இதன் மூலம் வந்தே மாதரம் – பக்கீம் சந்திரர் ஆகிய இரண்டையும் மையப்படுத்திய பிரச்சாரத்தை மேற்குவங்கத்தில் பாஜக தொடங்கி வைத்தது. கூடவே சுமித் சட்டோபத்யாய என்ற பக்கீம் சந்திரரின் வம்சாவளியை அவரின் சொந்த ஊரான நைஹதி தொகுதியில் வேட்பாளராகவும் பாஜக அறிவித்தது.

அதனையடுத்து ஜனவரியில், மாநில அரசுகள் மற்றும் அமைச்சகங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு சுற்றரிக்கையை அனுப்பியது. அதில், குடியரசுத் தலைவர், ஆளுநர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், ஒன்றிய அரசின் நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் முழுப்பாடலையும் பாட வேண்டும் என்று கூறியிருந்தது. அதனடிப்படையில் யுஜிசியும் அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் வந்தே மாதரம் முழுப்பாடலையும் பாட வேண்டும் என்று கூறியிருந்தது. இதுவரை அப்பாடலின் முதல் இரண்டு பத்திகளை மட்டுமே பாடப்பட்டு வந்த நிலையில் முழுப்பாடலையும் (ஆறு பத்தி) பாடவேண்டும் என்பதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன.

காரணம், இப்பாடலின் முதல் இரண்டு பத்திகள் இந்தியாவை அன்னையாக வர்ணிப்பதாக உள்ளதால் அதை மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்றும், மீதமுள்ள நான்கு பத்திகளில் ஆயுதமேந்திய துர்க்கை, சரஸ்வதி உள்ளிட்ட இந்துக் கடவுகளைப் போற்றி வருவதினால் அதனைப் பாடவேண்டாம் என்றும்  1937-இல் காங்கிரஸ் தலைமை முடிவு செய்து நடைமுறைப்படுத்தியது. இதனடிப்படையிலேயே 1950-இல் அரசியல் நிர்ணய சபையும் வந்தே மாதரம் பாடலின் அக்குறிப்பிட்ட இரண்டு பத்திகளை தேசியப்பாடலாகவும் தாகூரின் ஜனகனமன பாடலை தேசியகீதமாகவும் ஏற்றுக்கொண்டது. தொடக்கத்திலிருந்தே முழுப்பாடலையும் தேசிய கீதமாக்க வேண்டும் என்பதே காவிகளின் விருப்பம் என்பதால் தற்போதைய சூழலைப் பயன்படுத்திக் கொண்டு முழுப்பாடலையும் திணிக்கின்ற வேலையை மோடி கும்பல் செய்யத் தொடங்கியிருக்கிறது.

உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலை இரத்து செய்யக் கோரித் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தன்னுடைய பதிலில், இப்பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் நிர்பந்திக்கவில்லை, பாடவில்லையென்றால் அது தண்டனைக்குரியக் குற்றம் என்றும் சொல்லவில்லை, பாடவில்லை என்றால் தண்டிக்கப்படுவோம் என்பது மனுதாரரின் அனுமானம், அவ்வாறு தண்டனை வழங்கப்பெற்றால் எங்களிடம் வாருங்கள்” என்று சொல்லி வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டார்.  எனவே சட்டப்படியே இப்பாடலைப் பாட வேண்டிய கட்டாயம் இல்லை. அதனை சட்டமாக்குவதின் மூலம் அனைவரையும் பாடவைக்க வேண்டும் என்ற உள் நோக்கத்திலிருந்தே சட்டத்திருத்தம் கொண்டுவருவதற்காக பாஜக அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.

காவிக் கும்பலின் இந்துராஷ்டிராக் கனவோடு வந்தே மாதரம் பாடலின் நோக்கமும்  ஒத்துப்போவதினால் காவிகள் இப்பாடலை எப்படியாவது நடைமுறைப்படுத்தி விட வேண்டுமென்று காய்நகர்த்தி வருகின்றனர். இந்தப் பாடல் 1875-இல் பக்கீம் சந்திரரால் எழுதப்பட்டு 1882-இல் அவர் எழுதிய ஆனந்தமடம் நாவலில் சேர்க்கப்பட்டது. இந்நாவலின் கதைக்களமோ, 18-ஆம் நூற்றாண்டின் இறுதி வாக்கில் வங்காளத்தை ஆட்சி செய்து வந்த முஸ்லீம் ஆட்சியாளர்கள் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு கப்பம் கட்டி வந்த சூழலில், அங்கிருந்த கடுமையான பஞ்சத்திற்கு எதிராக இந்து சன்னியாசிகளைத் திரட்டி போரிட்டு பணக்காரர்களின் சொத்துக்களையும், தானியங்களையும் சூறையாடி ஏழைகளுக்கு கொடுப்பதோடு, முஸ்லீம் ஆட்சியாளர்களையும் முஸ்லீம் மக்களையும் ஒழித்த பிறகு, பிரிட்டீஸ் ஆட்சியாளர்களின் துணையோடு இந்துகளின் ஆட்சியை அமைப்பதாக எழுதப்பட்டதாகும்.

ஏ.ஜி. நூரானி “ஆர்எஸ்எஸ்-இந்தியாவிற்கு ஓர் அபாயம்” என்ற தன்னுடைய புத்தகத்தில், வந்தே மாதரம் பாடலின் பின்புலத்தை அம்பலப்படுத்த ஆனந்தமடம் நாவலின் சிறு பகுதியைத் தந்திருப்பார். அதை அப்படியே கீழே தருகிறோம்.

“சத்யானந்தா என்கிற சன்னியாசி கூட்டத்தலைவன் பிரிட்டிஷ் அதிகாரிகளின் தலைமையில் போரிட்ட முஸ்லீம் ராணுவ வீரர்களை வென்ற தருணத்தில் பாடுவதாக பக்கிம் சந்திரனின் புதினத்தில் இந்த பாடல் வருகிறது. கடவுளின் குரலில் அவனுடன் பேசும் ஓர் உருவம் போரை நிறுத்த சொல்வதாக காட்சி அமைக்கப்பட்டு இருக்கிறது.

சத்யானந்தா: வாருங்கள் என் பிரபுவே! என் மனதில் தோன்றும் இந்த ஐயத்தை நீங்கள் நீக்க வேண்டும். நான் ஒவ்வொரு முறை நம்முடைய அழிவில்லா மதத்திற்கு எதிரான தடைகளை நீக்கும் போதும், ஏன் போரை நிறுத்தச் சொல்லி ஆணையிடுகிறீர்கள்?

அவர்(கடவுள்): உன்னுடைய கடமை முடிந்து விட்டது. முஸ்லீம்களின் அதிகாரம் தகர்க்கப்பட்டு விட்டது. நீ இனி வேறு எதுவும் செய்வதற்கில்லை. தேவையில்லாத படுகொலையினால் பலன் ஏதும் உண்டாகப்போவதில்லை.

சத்யானந்தா: முஸ்லீம்களின் அதிகாரம் தகர்க்கப்பட்டது உண்மைதான். அதனால் இந்துக்களின் மேலாண்மை இன்னமும் நிறுவப்படவில்லை. கல்கத்தா பிரிட்டிஷாரின் பிடியில் தான் இருக்கிறது.

அவர்: இந்துக்களின் மேலாண்மையை இப்போது நிறுவ முடியாது. நீ தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தால், நம் வீரர்கள் வீணாக கொல்லப்படுவர். எனவே, நீ திரும்பி வா!

சத்யானந்தா: பிரபுவே! இந்துக்களின் மேலாண்மை ஏற்படவில்லை எனில், யார் ஆளப் போகிறார்கள்? முஸ்லீம் மன்னர்கள் மீண்டும் வந்து விடுவார்களா?

அவர்: இல்லை. ஆங்கிலேயர் தான் ஆள்வார்கள். உன்னுடைய சபதம் நிறைவேறிவிட்டது. உன்னுடைய தாய்க்கு நீ செல்வத்தை கொண்டு வந்திருக்கிறாய். நீ ஒரு பிரிட்டிஷ் அரசை ஏற்படுத்தியிருக்கிறாய். உன் போரை நிறுத்து. மக்கள் மீண்டும் ஏர் பிடித்து செல்லட்டும். விளைச்சலினால் இந்த பூமி செலிக்கட்டும். மக்களின் வாழ்வில் செல்வம் பெருகட்டும்.

சத்யானந்தா: (சூடான கண்ணீரை சிந்திய படி) என் தாயின் எதிரிகளின் ரத்தத்தை வைத்து விளைச்சலைப் பெருக்கி அவளை செழிப்பு செய்வேன்.

அவர்: யார் எதிரி? இப்போது எதிரிகள் என்று யாரும் இல்லை. ஆங்கிலேயர்கள் ஆட்சியாளர்கள் மட்டுமின்றி நம்முடைய நண்பர்களும் கூட! அவர்களை போரில் யாரும் தோற்கடிக்க முடியாது.”

பக்கிம் சந்திர சட்டோபத்தியாயா, இந்துமாகா சபா மற்றும் ராஷ்டிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் முன்னோடி. சாவர்க்கரும், ஹெட்கேவாரும் இந்துத்துவா கருத்தியலுக்கு உயிர் கொடுப்பதற்கு முன்பே முஸ்லீம் வெறுப்பு, இந்துக்களின் மேலாதிக்கம் என்று இந்து தேசியத்திற்கு அடித்தளமிட்டவர்களில் குறிப்பிடதக்கவர்கள். இதன் காரணமாகவே  காவிக் கும்பல் பக்கிம் சந்திரரையும் வந்தே மாதரம் பாடலையும் தூக்கிப் பிடிக்கிறது.

மொழி, உணவு, உடை, பழக்க வழக்கங்கள், சினிமா, பாடல், வரலாறு, கடவுள் நம்பிக்கை போன்ற மக்களின் உணர்வுகளோடு கலந்த விடயங்களில் இந்துத்துவா அரசியலைப் புகுத்தி “பாரதீய கலாச்சாரம்” என்ற போர்வையில் மக்களிடையே பிரச்சாரம் செய்கிறது பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல். அதற்காக தேர்தல் பிரச்சாரங்களையும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறது. அது சட்டத்திற்கு உட்பட்டதா இல்லையா என்பதைப் பற்றி எல்லாம் பாஜக கவலைப்படுவதில்லை.  

வாக்காளர் பட்டியல் திருத்தம், தொகுதி மறுவரை, வந்தே மாதரம் பாடலைக் கட்டாயமாக்குவது போன்றவையெல்லாம் சட்டத்திற்குட்பட்டே செய்யப்படுகின்றன. இந்துராஷ்டிராவை உருவாக்குவதற்கான காவி பாசிச அரசியலிலிருந்தே இவற்றையெல்லாம் பாஜக முன்னெடுக்கிறது. அவற்றை பிரச்சாரம் செய்வதற்கு தேர்தல் அரசியலை ஒரு வழிமுறையாகவும் கொண்டு ஆட்சியதிகாரத்தையும் கைப்பற்றுகிறது.

எனவே காவிக் கும்பலை வீழ்த்த வேண்டுமென்றால், சட்டம் என்ன சொல்கிறது என்று ஆராய்ந்து கொண்டிருப்பதோ, தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்தால் தடுத்து நிறுத்தி விடலாம் என்றோ மல்லாந்து கனவு காண்பது வேலைக்காகாது. பாஜக-ஆர்.எஸ்.எஸ் கும்பலின் அயோக்கியத் தனங்களையும் அவர்களின் காவி பாசிச அரசியலின் அபாயத்தையும் மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும்.

  • மாணிக்கம்

https://thediplomat.com/2025/11/as-bengal-elections-near-a-battle-over-bengali-patriotic-songs-grows-shriller/

https://www.thehindu.com/news/national/haryana/want-to-live-in-india-sing-vande-mataram-says-haryana-minister-anil-vij/article70955876.ece

https://thewire.in/law/sc-dismisses-petition-against-mha-circular-on-singing-all-stanzas-of-vande-mataram

https://thewire.in/government/sing-six-vande-mataram-stanzas-before-national-anthem-mhas-new-rules-say-reports

https://www.freepressjournal.in/india/insult-vande-mataram-face-up-to-3-years-in-jail-centre-moves-to-elevate-it-to-national-anthem-status-after-wb-poll-win

https://www.freepressjournal.in/education/ugc-directs-hei-to-comply-with-vande-mataram-order-schools-asked-to-include-group-singing-in-morning-assemblies

https://senkanal.com/index.php/2025/10/28/why-are-saffron-fascists-promoting-the-song-vande-mataram/

https://www.instagram.com/reel/DXrWikekiha/

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன