நாசிக் டி.சி.எஸ். : பாலியல் குற்றத்தை “கார்ப்பரேட் ஜிகாத்” என மடை மாற்றும் காவி பாசிஸ்டுகள்

நாசிக் டி.சி.எஸ். அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் தொழிலாளர்கள் மீது பாலியல் ரீதியிலான தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் அந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இஸ்லாமியர்கள் என்பதாலேயே இதனை இஸ்லாமிய தீவிரவாதத்துடனும் மதமாற்றத்துடனும் முடிச்சுப் போட்டு தனது மதவெறி அரசியலைக் காவி பாசிஸ்டுகள் முன்னெடுக்கின்றனர்.

நாசிக் டி.சி.எஸ். அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் தொழிலாளர்கள் மீது பாலியல் ரீதியிலான தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் அந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இஸ்லாமியர்கள் என்பதாலேயே இதனை இஸ்லாமிய தீவிரவாதத்துடனும் மதமாற்றத்துடனும் முடிச்சுப் போட்டு தனது மதவெறி அரசியலைக் காவி பாசிஸ்டுகள் முன்னெடுக்கின்றனர்.

காவி பாசிஸ்டுகள் மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்துவதற்கு பல்வேறு யுக்திகளையும் பொய்ப் பிரச்சாரங்களையும் பயன்படுத்துகிறார்கள். இதில் பசுவைக் கொன்றுவிட்டார்கள், இந்துக் கோயில்களை அசுத்தம் செய்துவிட்டார்கள் போன்ற பொய்ப் பிரச்சாரங்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக காவி பாசிஸ்டுகளின் கைகளில் வலுவான ஆயுதங்களாகச் சேவையாற்றி வருகின்றன. ஆனால் புதிய தலைமுறையினர் மத்தியில் தனது மதவெறிக் கருத்துக்களைக் கொண்டு செல்வதற்கு அவர்களுக்கு இவை மட்டுமே போதுமானதாக இல்லை.

இதன் காரணமாகத்தான், புதிய சதிக் கோட்பாடுகளை, காவி பாசிஸ்டுகள் உருவாக்குகிறார்கள். அவற்றை இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் பிரிவினையைத் தூண்டுவதற்குப் பயன்படுத்துகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் லவ் ஜிகாத் என்று கூறி ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தார்கள். இந்துப் பெண்களை இஸ்லாமிய இளைஞர்கள் காதலித்து மதம் மாற்றித் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று கூறி முசாபர்நகர் கலவரம் போன்று பல இடங்களில் கலவரங்களை நடத்தினார்கள்.

குஜராத், உத்திரபிரதேசம், மத்தியப்பிரதேசம், ஹரியானா, ஹிமாச்சல், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர் என பாஜக ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் கொண்டுவரப்பட்ட மதம் மாற்றத் தடைச் சட்டங்களில் இந்துப் பெண்கள் இஸ்லாமியர்களைத் திருமணம் செய்வதைத் தடுக்கும் “லவ் ஜிகாத்” பிரிவுகள் இணைக்கப்பட்டுள்ளன. இதிலிருந்தே காவி பாசிஸ்டுகள் இதனை எவ்வளவு தீவிரமாக முன்னெடுத்திருக்கிறார்கள் என்பதை உணர முடியும். அந்தவகையில் தற்போது “கார்ப்பரேட் ஜிகாத்” என்ற பெயரில் அடுத்த சுற்று பொய்ப் பிரச்சாரங்களை ஆரம்பித்திருக்கிறார்கள்.

மராட்டிய மாநிலம் நாசிக் நகரில் இயங்கி வருகின்ற டி.சி.எஸ். நிறுவனத்தின் அலுவலகத்தில் திட்டமிட்ட மதமாற்றம் நடைபெறுவதாகவும், பெண் ஊழியர்கள் மீதான பாலியல் ரீதியிலான தாக்குதல் மூலம் அவர்களைப் பணியவைத்து, மதம் மாற்றுவதாகவும் கூறி மிகப்பெரிய அளவில் அம்மாநிலத்தில் போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறது காவிக் கும்பல்.

கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதியன்று நாசிக்கின் தெலோலி போலீஸ் நிலையத்தில் இது சம்பந்தமாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்குகள் அனைத்தும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை மற்றும் இந்து மதக் கடவுள்கள் குறித்து இழிவுபடுத்தும் கருத்துக்களைக் கூறிய குற்றச்சாட்டுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. மராட்டிய மாநிலத்தில் சமீபத்தில்தான் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த 9 வழக்குகளில் ஒன்றில் கூட மதமாற்றம் குறித்த பிரிவுகள் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் “கார்ப்பரேட் ஜிகாத்” மூலமாக மதமாற்றும் சதி நடைபெறுவதாக காவிக் கும்பல் பிரச்சாரம் செய்கிறது.

அதாவது, டி.சி.எஸ். போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில், வெளிநாட்டுத் தொடர்புகள் மற்றும் வலைப்பின்னல்கள் கொண்ட இஸ்லாமிய குழுக்கள் தங்களுக்குக் கீழ் பணிபுரியும் இளம் இந்துப் பெண்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் மீது பாலியல் ரீதியிலான தாக்குதல்களைத் தொடுப்பதாகவும், அவர்களை இஸ்லாமிய மதத்திற்கு மாறச் சொல்லிக் கட்டாயப்படுத்துவதாகவும் காவிக் கும்பல் குற்றஞ்சாட்டுகிறது. டி.சி.எஸ். நிறுவனத்தின் மூத்த மனிதவளத்துறை அதிகாரியான நீடா கான் என்பவர் இந்தக் கும்பலின் அங்கமாக இருந்து கொண்டு, இந்துப் பெண்கள் தன்னிடம் முறையிடும் போது அவற்றைக் கண்டுகொள்ளாமல் புறந்தள்ளியதோடு, அப்பெண்களை இஸ்லாமிய மதத்திற்கு மதம் மாற வற்புறுத்தியதாகவும் கூறுகிறது. இன்னும் ஒரு படி மேலே போய் இந்த நீடா கான் மும்பையின் நிழல் உலக தாதாவாக இருந்த தாவுத் இப்ராஹிமுடன் தொடர்பிலிருப்பதாகவும், அந்தக் கும்பலின் திட்டத்தின் படிச் செயல்படுவதாகவும் சமூக ஊடகங்களில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நீடா கானை மிகப்பெரிய தீவிரவாதியாக சித்தரித்து தலைமறைவாக இருக்கும் அவரைப் போலீசார் தேடி வருவதாக ஊடகங்கள் பிரச்சாரம் செய்து வந்தன. ஆனால் கர்ப்பமாக இருக்கும் நீடா கான் தனது கணவருடன் இருக்க வேண்டும் என்பதற்காக, ஆறு மாதங்களுக்கு முன்னரே பூனேவிற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுவிட்டார். தற்போது நீடா கானும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மதமாற்றக் குற்றச்சாட்டில் முக்கிய குற்றவாளியாக முன் நிறுத்தப்படும் நீடா கான் ஒரு மூத்த மனிதவளத்துறை அதிகாரி என ஊடகங்களும், காவி பாசிஸ்டுகளின் சமூக வலைத்தளப் பதிவுகளும் பிரச்சாரம் செய்தன.

ஆனால் உண்மையில் நீடா கான் என்பவர் டி.சி.எஸ். நிறுவனத்தின் மூத்த மனிதவளத்துறை அதிகாரி அல்ல. அவர் கடைநிலையில் பணிபுரியும் சாதாரண ஊழியராவார். பாலியல் தொந்தரவுக்கு ஆளான பெண்களது குற்றச்சாட்டுகளை மறைக்கும் அளவிற்கு அவருக்கு டி.சி.எஸ். நிறுவனத்தில் அதிகாரம் கிடையாது. இதனை டாடா குழுமத்தின் தலைவர் ராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியிருக்கிறார். போலீசால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளில் நீடா கான் மீது இந்து மதக் கடவுள்களை இழிவுபடுத்திப் பேசியதாக மட்டுமே குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கடைநிலை ஊழியர் ஒருவர் இஸ்லாமியர் என்பதாலேயே அவரைச் சர்வதேச மாபியா கும்பலைச் சேர்ந்தவர் எனக் கூறி இதனை வெளிநாட்டில் இருந்து இயக்கப்படும் மதமாற்றச் சதி என காவிக் கும்பல் சித்தரிக்கிறது.

நாசிக் டி.சி.எஸ். அலுவலகத்தில் உண்மையில் என்னதான் நடந்தது என்று பார்த்தால், அந்த அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் டானிஷ் சேக் என்பவர் தன்னுடன் கல்லூரியில் உடன் படித்த தோழி ஒருவருக்கு அந்த அலுவலகத்திலேயே வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறார். ஏற்கெனவே திருமணமான அவர் அதனை மறைத்துவிட்டு அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி பாலியல் உறவு கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் டானிஷ்க்கு ஏற்கெனவே திருமணமானது அப்பெண்ணிற்குத் தெரியவரவே அவர் டானிஷுடனான தொடர்பைத் துண்டித்துக் கொண்டிருக்கிறார். இதனையடுத்து டானிஷும் அவரது நண்பரான தௌசிக் அத்தரும் அந்தப் பெண்ணை பாலியல் ரீதியில் துன்புறுத்தியிருக்கிறார்கள். இவர்களது இந்தத் துன்புறுத்தல்களைத் தாங்க முடியாமல் அந்தப் பெண் போலீசில் புகாரளித்திருக்கிறார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் மாறுவேடத்தில் டி.சி.எஸ். அலுவலகத்திற்குள் சாதாரண பணியாளர்களைப் போலச் சென்ற போலீசார், அந்த அலுவலகத்தில் பணிபுரியும் மற்ற பெண்களிடம் இது போன்ற பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டனரா என விசாரித்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் தான் இந்த வழக்குகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

டி.சி.எஸ். போன்ற மென்பொருள் நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. அவை அந்த அலுவலகங்களுக்கு உள்ளேயே மூடி மறைக்கப்பட்டுவிடுகின்றன. அதிகபட்சமாக குற்றவாளிகள் பணிநீக்கம் செய்யப்படுவது மட்டுமே நடக்கிறது.

நாசிக் டி.சி.எஸ். அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் தொழிலாளர்கள் மீது பாலியல் ரீதியிலான தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் அந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இஸ்லாமியர்கள் என்பதாலேயே இதனை இஸ்லாமிய தீவிரவாதத்துடனும் மதமாற்றத்துடனும் முடிச்சுப் போட்டு தனது மதவெறி அரசியலைக் காவி பாசிஸ்டுகள் முன்னெடுக்கின்றனர்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையைத் தடுக்க வேண்டும் என்பதில் காவி பாசிஸ்டுகளுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதையே இந்தச் சம்பவம் காட்டுகிறது. பெண்களின் பாதுகாப்பு, பணியிடங்களில் நிலவும் பாலியல் சுரண்டல், கார்ப்பரேட் நிறுவனங்களின் பொறுப்பின்மை போன்ற உண்மையான பிரச்சினைகளைப் பற்றி பேசாமல், அதை மதவெறி அரசியலுக்கான கருவியாக மாற்றுவதில்தான் அவர்களின் முழு கவனமும் இருக்கிறது.

ஒரு தனிநபர் செய்த குற்றத்தை முழு சமூகத்தின் மீது சுமத்தி, இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டுவது என்பது நீதிக்கான போராட்டமல்ல; அது திட்டமிட்ட அரசியல். இதன் மூலம் பெண்களுக்கு நீதி கிடைப்பதுமில்லை; மாறாக உண்மையான குற்றவாளிகள் பின்னணிக்குத் தள்ளப்பட்டு, சமூகத்தில் மத அடிப்படையிலான பிளவுகள் மேலும் ஆழப்படுத்தப்படுகின்றன.

எனவே, நாசிக் டி.சி.எஸ். சம்பவத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதோடு, அதனை “கார்ப்பரேட் ஜிகாத்” போன்ற பொய்யான சதிக் கோட்பாடுகளுடன் இணைத்து மதவெறி அரசியல் நடத்தும் காவி பாசிஸ்டுகளின் பிரச்சாரங்களும் அம்பலப்படுத்தப்பட வேண்டும். பெண்களின் பாதுகாப்பையும் சமூக ஒற்றுமையையும் காக்க வேண்டுமெனில், பாலியல் வன்முறைக்கும் மதவெறி அரசியலுக்கும் எதிராக ஒருசேர போராட வேண்டியது அவசியம்.

  • சந்திரன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன