இந்தியாவெங்கும் நடந்தேறிய எஸ்.ஐ.ஆர்.
ஈரக்குலையை நடுங்க வைக்கும் சதிகள்
செங்கனல் நவம்பர் – டிசம்பர் – 2026 – சிறப்பிதழில் வெளியான கட்டுரை.
கடந்த ஜூன் 2025-இல் பீகார் தேர்தலுக்கு முன்பு தொடங்கப்பட்ட எஸ்.ஐ.ஆரானது, மூன்று கட்டங்களாக (Phases) (அசாம், லடாக், ஜம்மு & காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசத்தை தவிர) இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் நடைமுறையாகி முடிவடையவுள்ளது.
வாக்காளர் பட்டியலில் நிறைய குளறுபடிகள் உள்ளன; நிறைய போலி வாக்காளர்களும் புலம்பெயர்ந்தோரும், இறந்தவர்களும் இடம் பெற்றுள்ளனர்; அவற்றையெல்லாம் நீக்கி, சரிசெய்து “உண்மையான”, “நேர்மையான” வாக்காளர் பட்டியலை உருவாக்குவதுதான் நோக்கம் – என்று தேர்தல் ஆணையம் கூறியது. “அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் நுழையும் சட்டவிரோத குடியேறிகளின் வாக்குகளை பறிக்க” இந்த எஸ்.ஐ.ஆர். மேற்கொள்ளப்படுவதாக ஆளும் பாஜக அரசு நியாயப்படுத்தியது.
ஆனால், எஸ்.ஐ.ஆர். அமல்படுத்தப்பட்ட மொத்தம் 31 மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பகுதிகளில் (Union Territories) முன்பு இருந்த ஏறத்தாழ 95 கோடி வாக்காளர்களில், 13.39 கோடி பேர் நீக்கப்பட்டிருக்கின்றனர். பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட பின்பு, சிலர் மட்டுமே படிவம்-6 (Form 6) மூலமாக (அதுவும் “புதிய வாக்காளர்களாகவே”) சேர்க்கப்பட்டுள்ளனர். பல கோடிக்கணக்கானோர் நீதிமன்றங்களின் வாசல்களிலும், அதிகாரிகளின் அலுவலக வாசல்களிலும் தங்கள் ஓட்டுரிமையை திரும்ப பெறுவதற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். இதில் 9.5 கோடி பேர் (72%), உயிரோடுள்ள, வாக்களிக்க தகுதியுள்ளவர்களே!
வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட இவர்கள் காவி பாசிஸ்டுகள் கூறுவதுபோல வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நுழைந்த “குஸ்பேட்டியா”க்கள் அல்ல. பெரும்பான்மையானவர்கள் “போலி வாக்காளர்களும்”, “இறந்தவர்களும்” அல்ல என்பது நமக்கு தரவுகள் கூறுகின்றன. (நீக்கப்பட்ட வாக்குகளில் அவை 28% வாக்குகள் மட்டும்தான்) ஒருவரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான காரணங்களில், இறந்தவர்கள், தொடர்பு கொள்ள முடியாதவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், போலியானவர்கள், மற்றவை (Absentees, Shifted, Dead, Duplicate & Others – ASDDO) என்ற காரணங்கள்தான் உள்ளனவே அன்றி, “வெளிநாட்டவர்” என்ற காரணமே குறிப்பிடப்படவில்லை! கர்நாடகா, கேரளா, கோவா, ஜார்கண்ட், மேகாலயா, மிசோரம் ஆகிய 8 மாநிலங்களில் நீக்கப்பட்ட 1.56 கோடி பேரில் வெறும் 1600 பேர்தான் அந்நிய நாட்டவர்கள் என்பதை சமீபத்தில் இந்துஸ்தான் டைம்ஸ் கள ஆய்வில் அம்பலப்படுத்தியுள்ளது. பீகாரில் எஸ்.ஐ.ஆரால் நீக்கப்பட்ட 65 இலட்சம் வாக்காளர்களில் வெறும் 0.012% தான் வெளிநாட்டவர்கள் என்பதை ஏற்கனவே தி வயர் அம்பலப்படுத்தியது.
ஆக, இந்த சிறப்பு வாக்காளர் திருத்தத்தின் நோக்கம்தான் என்ன? யாரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதற்காக இது நடந்தது?
நாட்டிலுள்ள சிறுபான்மையினர், பா.ஜ.க. எதிர்ப்பாளர்களின் வாக்குரிமை, குடியுரிமையைப் பறித்து, இரண்டாம் தர குடிமக்கள் ஆக்குவதற்கான காவி பாசிச கும்பலின் நீண்டநாள் கனவுத் திட்டமான தேசிய குடியுரிமை பதிவேட்டை (National Register of Citizens – NRC) பின்வாசல் வழியாக அமல்படுத்துவதே இதன் உண்மை நோக்கம். இது மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல; நடந்து முடிந்த மூன்று கட்ட எஸ்.ஐ.ஆரையும் அதில் காவிக் கும்பல் கையாண்டுள்ள வழிமுறைகள், செயல்முறைகள், உத்திகளைப் பார்த்தாலே இது தெளிவாகும்.
படிவம்-7.ஐப் பயன்படுத்தி வாக்காளர்களை நீக்குவது
புதிய வாக்காளரைப் பட்டியலில் சேர்க்க படிவம் 6; இருக்கும் பெயரை நீக்க படிவம் 7; முகவரிகள் அல்லது பெயர் மாற்றத்திற்கு படிவம் 8 – ஆகியவற்றைத் தேர்தல் ஆணையம் பயன்படுத்துகிறது. இதில் படிவம் 7-ஐப் பயன்படுத்தி, உயிரோடுள்ள, தகுதியுள்ள பல வாக்காளர்களை குறிவைத்து காவி கும்பல் (குறிப்பாக பாஜக பூத் லெவல் ஏஜெண்டுகள்) நீக்கியுள்ளது நாளுக்கு நாள் அம்பலப்பட்டு வருகிறது.
ஒரு பகுதியில் உள்ள யார் வேண்டுமானாலும் படிவம் 7 ஐப் பயன்படுத்தி யாரை வேண்டுமானாலும் நீக்குமாறு கோர முடியும். அதை அப்பகுதியின் தேர்தல் பதிவு அதிகாரி (ERO) விசாரணைக்கு உட்படுத்தி நீக்குவதா இல்லையா என முடிவு செய்வார். இவ்வழிமுறையைக் கேடாகப் பயன்படுத்தி, நாடெங்கும் மாபெரும் பூத் கட்டமைப்பைக் கொண்ட காவி பாசிசக் கும்பல் ஒவ்வொரு பூத் வாரியாகத் தனக்கு வாக்களிக்காதவர்களைக் (இசுலாமியர்களை மட்டுமல்ல) குறிவைத்து படிவம் 7-ஐ விண்ணப்பித்துள்ளது.
பீகாரில் நடந்த முதற்கட்ட எஸ்.ஐ.ஆரில் இம்முறையிலான படிவம் 7 சதிகள் எதுவும் அம்பலப்படவில்லை. எனினும், வாக்காளர்கள் நீக்கத்தின் வழிமுறை இது நடந்திருப்பதை நிரூபிக்கிறது. கோபால்கஞ் மாவட்டத்தின் “நிரஞ்சனா” வாக்குச்சாவடியில் மட்டும் 641 பேர் குறிவைத்து நீக்கப்பட்டனர். சுமார் 1,925 வாக்குச்சாவடிகளில் தலா 200-க்கும் மேற்பட்டோர் குறிவைத்து நீக்கப்பட்டனர். காவி கும்பல் கீழிருந்து (பூத் லெவல் தரவிலிருந்து) கொடுத்திருக்கும் தரவின் மூலமே இத்தகைய துல்லியமான நீக்கம் நடந்திருக்க முடியும்!
இரண்டாம், மூன்றாம் கட்ட எஸ்.ஐ.ஆர்.களில், படிவம் 7 ஐப் பயன்படுத்தும் இச்சதித்தனம் மேலும் தீவிரமாக நடைமுறையாகியுள்ளன. இரண்டாம் கட்ட எஸ்.ஐ.ஆரில் வாக்காளர் நீக்கக் கோரிக்கைகளுக்கான படிவம் 7 விதிமுறைகள் தளர்த்தப்பட்டதைப் பயன்படுத்தி, குஜராத், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இசுலாமியர்கள் கணிசமாக வாழும் பகுதிகளை இலக்கு வைத்து பெயர்களை நீக்க விண்ணப்பங்கள் பெருமளவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குஜராத்தில் பெறப்பட்ட சுமார் 14 லட்சம் படிவம் 7 விண்ணப்பங்களில் கடுமையான சரிபார்ப்புக்குப் பிறகு வெறும் 1.83 லட்சம் (சுமார் 13%) மட்டுமே செல்லுபடியானது காவிகள் இம்முறையைக் கீழிருந்து செய்வதையே நிரூபிக்கிறது!
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் ஆயிரக்கணக்கான இசுலாமிய வாக்காளர்களின் பெயர்களை நீக்க படிவம் 7 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்ட சம்பவங்களும் வெளிவந்தன. பல இடங்களில் பாஜகவைச் சேர்ந்தவர்களின் பெயர்களே படிவம் 7 விண்ணப்பங்களில் விண்ணப்பதாரர்களாக பயன்படுத்தப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. ஒருசில பாஜக ஊழியர்கள் நேரடியாகவும் இந்த விண்ணப்பங்களை தாக்கல் செய்ததாக செய்திகள் வெளியாகின.
குஜராத்திலும் இதேபோன்ற சம்பவங்கள் வெளிவந்தன. அகமதாபாத்தின் தானிலிம்டா பகுதியில் இரண்டு பாஜகவினர் மட்டும் 634 வாக்காளர்களின் பெயர்களை நீக்க படிவம் 7 விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளனர். அதேபோல சூரத், சலாபத்புரா பகுதிகளில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் வாக்காளர்களை “இறந்தவர்கள்” என்று குறிப்பிட்டு படிவம் 7 மூலம் பெயர் நீக்க முயற்சி செய்ததாக பாஜகவைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதி மீது குற்றச்சாட்டு எழுந்தது.
கேரளாவின் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரம் பகுதியில், பாஜக மாவட்டச் செயலாளர் லோகேஷ் நொண்டா, முகம்மது என்ற வாக்காளரின் பெயரை படிவம் 7 மூலம் நீக்கக்கோரி, அவர் “இந்திய குடிமகன் அல்ல” என்று காரணம் தெரிவித்த சம்பவமும் அம்பலமானது. அதேபோல, அவர் ஆறு முஸ்லிம் பெண்களின் பெயர்களையும் நீக்க படிவம் 7 விண்ணப்பங்கள் தாக்கல் செய்துள்ளார். ஆனால், தேர்தல் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் முகம்மது மீதான குடியுரிமை குற்றச்சாட்டு ஆதாரமற்றது என தெரியவந்ததையடுத்து, பொய்யான தகவல்களை வழங்கியதாக பாஜக நிர்வாகி மீது போலிசுத்துறை நடவடிக்கை எடுக்க உத்திரவிடப்பட்டது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் கோட்டா மாவட்டத்தில் பாஜக பூத் லெவல் ஏஜெண்டுகள் இசுலாமிய வாக்காளர்களின் பெயர்களை நீக்கக்கோரி, படிவம் 7 விண்ணப்பங்களைத் பெருமளவில் (bulk) சமர்ப்பித்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் புலனாய்வுச் செய்தி அம்பலப்படுத்தியது. பெயர் நீக்கத்தில் குறிவைக்கப்பட்டவர்களில் சிலர் பல தலைமுறைகளாக அதே கிராமத்தில் வசிப்பவர்களாகவும், முந்தைய வாக்காளர் பட்டியல்களிலும் இடம்பெற்றவர்களாகவும் இருந்தனர்.
ஒடிசாவின் தாம்நகரில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் (Booth Level Officer) அடையாளங்களை அவர்களின் அனுமதியில்லாமலேயே பயன்படுத்தி நூற்றுக்கணக்கான இசுலாமிய வாக்காளர்களுக்கு எதிராக ஃபார்ம் 7 படிவங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சில அலுவலர்கள் தங்கள் அனுமதியின்றி விண்ணப்பங்கள் பதிவேற்றப்பட்டதாக வெளிப்படையாகவே தெரிவித்தனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இசுலாமியர்கள் என்பதும் அம்பலமானது. அதேபோல, டெல்லியில் ஒரு பாஜக பூத் லெவல் ஏஜெண்டு தினசரி 10 படிவம் 7-களை மட்டும் தான் தாக்கல் செய்ய முடியும் என்ற வரம்பையும் மீறி, ஈ.சி.ஐ. நெட் மென்பொருள் மூலம் 35 விண்ணப்பங்களைத் தாக்கல் செய்ததும் அம்பலமாகியுள்ளது.
இவையனைத்தும் கையளவு எடுத்த சில எடுத்துக்காட்டுகளே! இதேபோல, மஹாராஷ்டிரம், கர்நாடகா, உத்திர பிரதேசம் என்று நாடுமுழுக்க காவி கும்பலால் பாஜகவிற்கு வாக்களிக்காத பல வாக்காளர்கள், குறிப்பாக இசுலாமியர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
நிற்க. படிவம் 7-ஐ யார் வேண்டுமானாலும் கீழிருந்து விண்ணப்பிக்கலாம், ஆனால் உள்ளூர் ERO அதை விசாரித்து கையெழுத்திட்டால்தானே நீக்கமுடியும்? ERO-களில் எல்லாக் கட்சிகளுக்கும் ஆதரவான பலர் இருக்கிறார்களே? இப்படியிருக்கையில் கீழிருந்து பா.ஜ.க. வாக்குச் சாவடி முகவர்கள் விண்ணப்பித்தாலும் எவ்வாறு அவர்களை நீக்க முடியும்? – என்ற கேள்விகள் எழலாம். இதற்காகத்தான் தேர்தல் ஆணையம் ஒரு அருமையான வழியைக் கண்டுபிடித்துள்ளது.
ஈ.சி.ஐ. நெட் (ECI Net), ஈ.ஆர்.ஓ. நெட் போன்ற வாக்காளர் பட்டியலை பராமரிக்கும் மென்பொருள் தளங்களை கட்டுப்படுத்தும் முழுமையான அதிகாரமும், உள்ளூர் தேர்தல் பதிவு அதிகாரிகளின் (ERO) கைகளில் இருந்து பிடுங்கப்பட்டு, டெல்லியில் உள்ள ஒரு தொழில் நுட்பக் குழுவிடம் ஒன்றுகுவிக்கப்பட்டுள்ளது. அதாவது, யாருக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டும், யாருக்கு வழங்கப்படக்கூடாது என்று முடிவு செய்யும் சர்வாதிகாரம் காவி பாசிச கும்பலிடமும், அவர்களின் கைப்பாவை ஞானேஷ் குமாரிடமும் இருக்கிறது.
எந்தவொரு குடிமகனின் அனுமதியில்லாமல் அவரது கையெழுத்தை போடுவது மோசடி (Forgery) என்று உலகநாடுகள் அனைத்தின் சட்டங்களும் கூறுகின்றன. இந்திய சட்டங்களும் இதையே கூறுகின்றன. ஆனால், அரசின் தேர்தல் ஆணையமோ, தேர்தல் ஆணையத்தின் ஈ.சி.ஐ. நெட், ஈ.ஆர்.ஓ. நெட் மென்பொருளை பயன்படுத்தி, தேர்தல் பதிவு அலுவலர்களின் (ERO) கையெழுத்தை கொண்ட தானாக உருவாக்கப்பட்ட படிவங்களை (Auto-Generated Forms) அந்த அலுவலருக்கே தெரியாமல் உருவாக்கி பல வாக்காளர்களை நீக்கியுள்ளது!
இப்படித்தான் கீழிருந்து காவிகள் விண்ணப்பிக்கும் படிவம் 7-ஐ (ERO-வைத் தாண்டி) மேலிருந்து ஒப்புதல் அளிக்கப்பட்டு வாக்குரிமைப் பறிப்பு குறிவைத்து அரங்கேற்றப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் படிவம் 7 தொடர்பாக தி வயர் (The Wire) ஊடகம் ஆய்வு செய்த பதிவுகளில், சுமார் 5.4 இலட்ச நீக்கங்கள் ERO Net மென்பொருளால் தானாக உருவாக்கப்பட்ட படிவங்களால் (Auto-Generated Forms) செய்யப்பட்டுள்ளன. அவற்றில் நீக்கத்திற்கான காரணங்கள் எதுவும் பதிவுசெய்யப்படவில்லை. மேற்கு வங்கத்தைப் போலவே, தேர்தல் ஆணையத்தின் ஈ.ஆர்.ஓ. நெட் மென்பொருள், நீக்கத்திற்கான காரணங்களைக் குறிப்பிடாமல் சுமார் 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படிவம் 7-களைத் தானாக உருவாக்கியதாக அவ்வாய்வு அம்பலப்படுத்தியுள்ளது. அதேபோல, கர்நாடகாவில் 61 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படிவம் 7-கள் அதிகாரிகளின் அனுமதியில்லாமல் தானாகவே ஈ.ஆர்.ஓ. நெட் மென்பொருளால் உருவாக்கப்பட்டிருக்கிறது. டெல்லி, உத்திரகண்ட் போன்ற பிற மாநிலங்களிலும் இது நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. இதை குறித்து எந்தவித நிலையான செயற்பாட்டு நடைமுறைகளையும் தேர்தல் ஆணையம் வழங்கவில்லை என்று மாநில தேர்தல் பதிவு அதிகாரிகளே (ERO) கூறுகின்றனர்.
இவ்வாறுதான், நாடுமுழுவதும் வேர்மட்ட அளவிலான ஆட்களையும் பூத் லெவல் கட்டமைப்பையும் கொண்டுள்ள காவி பாசிசக் கும்பல், படிவம் 7ஐப் பயன்படுத்தி தனக்கு வாக்களிக்காத ஒவ்வொருவரையும் குறிவைத்து நீக்குமாறு விண்ணப்பிக்கிறது. மேலிருந்து தானியங்கி முறையில் போலியான கையெழுத்தை தலைமைத் தேர்தல் ஆணையம் போட்டுக் கொண்டு அதைச் செய்து முடிக்கிறது! என்னே ஒரு சதித்தனம் பாருங்கள்!
“தர்க்கரீதியான முரண்பாடுகள்” (Logical Discrepancies)
முதற்கட்ட எஸ்.ஐ.ஆர்.இல் வாக்காளர்களை நால்வகையாக பிரித்த தேர்தல் ஆணையம், இரண்டாம்கட்டத்தில் “தர்க்கரீதியான முரண்பாடுகள்” (Logical Discrepancies) என்ற புதிய வகையை வரையறுத்தது. குறிப்பாக, மேற்கு வங்கத்தில் இந்த வரையறை மூலம் பல வாக்காளர்களை நீக்கியுள்ளது.
மற்ற வகையறைகளைப் போலல்லாமல், தர்க்கரீதியான முரண்பாடுகளுள்ள வாக்காளர் தரவுகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆராய மாட்டார்கள்; மாறாக தேர்தல் ஆணையம் பயன்படுத்தும் ஈ.ஆர்.ஓ. நெட் (ERO Net) என்கிற மென்பொருள்தான் ஆராய்ந்து முடிவு செய்யும். அத்தரவுகளை ஆராய அந்த மென்பொருள் சில அளவுறுக்கள் மற்றும் அல்காரிதம்களைப் (Parameters and Algorithms) பயன்படுத்துகிறது. ஒரு வாக்காளருக்கு 6 குழந்தைகளுக்கு மேலிருந்தாலோ, பெற்றோரின் வயதுடன் ஒப்பிடுகையில் 15 வயதிற்கு குறைவாக வயது வித்தியாசம் இருந்தாலோ அல்லது தாத்தா பாட்டி – பேரன் பேத்திகளுக்கு இடையிலான வயது வித்தியாசம் 40 ஆண்டுக்குக் கீழே இருந்தாலோ அவர்களை தர்க்கரீதியான முரண்பாடாக தீர்மானிக்கிறது, ஈ.ஆர்.ஓ. நெட் மென்பொருள். இவ்வாறு மென்பொருளை வடிவமைப்பதிலேயே இசுலாமியர்களை நீக்கும் வகையில் செய்யப்பட்டுள்ளது!
மேற்கு வங்கத்தில் “தர்க்கரீதியான முரண்பாடுகள்” என்ற அடிப்படையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சுமார் 98 லட்சம் பேரில் 27,16,393 பேர் இறுதியாக நீக்கப்பட்டனர். இதில் மேலும் 38 லட்ச வாக்காளர்கள் உச்ச நீதிமன்ற உத்திரவின்படி அமைக்கப்பட்ட சிறப்பு மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களில் மேல்முறையீடு செய்தனர். இம்மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்கள் முடிவுசெய்த 82,782 வழக்குகளில் 75,443 பெயர்களை (அதாவது 91.13%) மீண்டும் சேர்க்கவே உத்திரவிட்டன. நீக்கப்பட்ட வாக்காளர்களில் பலர் தகுதியுள்ளவர்களே என்று இது காட்டுகிறது. ஆனால், 37 லட்சத்துக்கும் அதிகமான மேல்முறையீடுகள் இன்னும் நிலுவையில்தான் இருக்கின்றன.
மத்தியப் பிரதேசத்தில் 2.35 கோடி வாக்காளர்கள் (மொத்த வாக்காளர்களில் சுமார் 41 சதவீதம்) தேர்தல் ஆணையத்தின் மென்பொருளால் “தர்க்கரீதியான முரண்பாடுகள்” கொண்டவர்களாகக் குறிக்கப்பட்டனர். பழைய வாக்காளர் பட்டியல்களின் டிஜிட்டல் தரவுகள் முறையாகச் சோதிக்கப்படவில்லை என்றும், குறுகிய காலக்கெடுவுக்குள் அவற்றைச் சரிசெய்வதற்கான தெளிவான எழுத்துப்பூர்வ வழிமுறைகள் அதிகாரிகளுக்கு வழங்கப்படவில்லை என்றும் தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சபர் இன்ஸ்டிட்யூட்டின் ஆய்வின்படி, டெல்லியில் தர்க்கரீதியான முரண்பாடுகளுக்காகக் குறிக்கப்பட்டவர்களில் 20.3% பேர் இசுலாமியர்களாக உள்ளனர். அதேபோல, தெலுங்கானா மாநிலத்தில் 92.87 லட்சம் வாக்காளர்களுக்கு தர்க்கரீதியான முரண்பாடுகளுக்காக நோட்டீஸ் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதேபோல, மூன்றாம்கட்ட எஸ்.ஐ.ஆரில் லட்சக்கணக்கான மக்கள் “தர்க்கரீதியான முரண்பாடுகளாக” வரையறுக்கப்பட்டுள்ளனர்.
இதில் சரியாக கணினிமயமாக்கப்படாத தரவுகளும் ஒரு காரணம் என்று கூறப்பட்டாலும், தேர்தல் ஆணையத்தின் ஈ.ஆர்.ஓ. நெட் மென்பொருள் பயன்படுத்தும் அல்காரிதங்களும் காரணம். அவற்றை பற்றி கேள்வியெழுப்பும்போது தகவல்களை வெளியிட தேர்தல் ஆணையம் மறுக்கிறது.
படிவம் 8-ஐப் பயன்படுத்திப் போலி வாக்காளர் உற்பத்தி
படிவம் 7 ஐப் பயன்படுத்தி தகுதியுள்ள பா.ஜ.க. எதிர்ப்பு வாக்காளர்களை நீக்கியதை மேலே கண்டோம். படிவம் 8-ஐப் பயன்படுத்தி இருக்கும் இசுலாமியர் பெயரை போலியான ‘இந்து’ பெயராக மாற்றி கள்ள ஓட்டுக்களை உற்பத்தி செய்வதைப் பார்ப்போம்.
உத்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்த SIR-இல் கொத்துக்கொத்தாக படிவம்-8 (Form-8) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. படிவம்-8 என்பது வாக்காளர்களின் பெயர், முகவரி, புகைப்படம் போன்ற விவரங்களை மாற்றுவதற்கான விண்ணப்பம். இதனால் வாக்காளர் அடையாள எண் மாறாது. அதாவது முஸ்லீம் ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டையில் அவர் பெயரை இந்துப் பெயராக மாற்றிவிட்டு வேறொரு புகைப்படத்தைப் பதிவேற்றுவர். அப்போது அந்த வாக்காளர் அடையாள அட்டை இந்து வாக்காளருடையது போன்ற தோற்றம் வரும். தேர்தல் அன்று போலி வாக்காளர் ஒருவர் போலி அடையாள அட்டையைக் கொண்டு வாக்களித்து விடுவார். அதனால் அந்த வாக்காளர் எண்ணிற்குரிய நியாயமான வாக்காளரின் உரிமை பறிக்கப்படுகிறது. பிலிபித் என்ற ஒரு தொகுதியில் மட்டும் படிவம்-8 நிரப்பப்பட்டு 10,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் அடையாளங்கள் மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதை உத்திரப் பிரதேச தேர்தல் ஆணையரே ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது வரை அந்த ஒரு தொகுதியில் மட்டும் 2500-க்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் இன்றும் உள்ளனர். அந்த வாக்காளர் எண்களுக்கு அசலான சொந்தக்காரர்கள் இசுலாமியர்கள். அதாவது முஸ்லீம் வாக்காளர்களின் எண்களில் போலி இந்து வாக்காளர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது நாடெங்கும் அரங்கேறியுள்ளது. இவ்வாறு வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தேர்தல் ஆணையத்தின் துணையோடே கள்ள ஓட்டுக்களை உற்பத்தி செய்துள்ளனர்!
ஒரே கல்லில் இரு மாங்காய் என்பதைப் போல, இவ்வாறு படிவம் 8-ஐப் பயன்படுத்தி உண்மையான இசுலாமியர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் அதேசமயம், போலி இந்துப் பெயர்களில் கள்ள ஓட்டுக்களையும் உற்பத்தி செய்கிறது, காவிக் கும்பல். போலி வாக்காளர்கள், கள்ள ஓட்டுக்களை நீக்கி பட்டியலைத் தூய்மைப்படுத்தப் போவதாகப் பீற்றிக் கொள்ளப்பட்ட எஸ்.ஐ.ஆர்.இன் யோக்கியதை இதுதான்!
சிறுபான்மையினர், பாஜக எதிர்ப்பாளர்கள் வாழும் இடங்களில் அதிக வாக்காளர் நீக்கங்கள்
முதற்கட்ட எஸ்.ஐ.ஆர் முதல் இன்றுவரை, கணிசமான அளவில் சிறுபான்மையினர் (குறிப்பாக இசுலாமியர்கள்), பாஜக எதிர்ப்பாளர்கள், பாஜகவின் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கக்கூடிய வாக்காளர்கள் பெருமளவில் நீக்கப்பட்டுள்ளனர்.
முதற்கட்டமாக, பீகாரில் உள்ள மொத்தம் 7.89 கோடி வாக்குகளில் 65 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டன. இந்நீக்கம் பீகார் முழுவதும் ஒரே சீராக நடைபெறாமல், இசுலாமியர்கள், தலித்துகள், ஏழை உழைக்கும் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளிலும், வரலாற்று ரீதியில் ஆர்.ஜே.டி., காங்கிரசு போன்ற எதிர்க்கட்சிகள் வலுவாக உள்ள பகுதிகளிலும் அதிகமாக நடந்தது. 90,712 வாக்குச்சாவடிகளில் வெறும் 20,368 சாவடிகளில் மட்டும் சுமார் 30 இலட்சம் பேர் கொத்தாக நீக்கப்பட்டனர். குறிப்பாக, புர்னியா, கத்திஹார், அராரியா, கிஷான்கஞ்ச் ஆகிய நான்கு மாவட்டங்களைக் கொண்ட சீமாஞ்சல் பகுதியில் மட்டும் 7,69,914 பேரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. இதேபோல், 6 சட்டமன்றத் தொகுதிகளையும் ஒரு நாடாளுமன்றத் தொகுதியையும் கொண்டிருந்த கோபால்கஞ்ச் மாவட்டத்தில் 3 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டனர்; இவர்களில் பெரும்பாலோர் இசுலாமியர்களும் தலித்துகளுமாவர்.
மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத், மால்டா, வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் போன்ற முஸ்லிம்கள் கணிசமாக வாழும் மாவட்டங்களில் SIR மூலம் பெருமளவிலான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அதேபோல, நீக்கப்பட்ட வாக்காளர்களில் 61.8 சதவீதம் பெண்களே என்று சபர் இன்ஸ்ட்டிட்யூட் (Sabar Institute) செய்த ஆய்வுகள் கூறுகிறது.
டெல்லியின் ஒக்லா பகுதியில் உள்ள பட்லா ஹவுஸின் G மற்றும் K பிளாக்குகளில் நடத்தப்பட்ட 7 நாள் கள ஆய்வில், 258 குடும்பங்களில் குறைந்தது 100 வாக்காளர்கள் “காணவில்லை”, “இடம்பெயர்ந்தவர்”, “இறந்தவர்” அல்லது “இரட்டைப் பதிவு” எனத் தவறாக வகைப்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக அதே முகவரியில் வசித்த 74 வயதான ஓய்வுபெற்ற பேராசிரியர் ஃபையாஸ் அகமது “கண்டறிய முடியாதவர்” என்றும், அவரது மனைவி அஞ்சும் ஆரா “நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தனர், அதேபோல் 30 ஆண்டுகளாக அதே முகவரியில் வசித்து, BLO-வால் நேரில் சந்திக்கப்பட்ட நயீமுதீனும் “நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்” என வகைப்படுத்தப்பட்டிருந்தார். இதேபகுதியில் நடத்தப்பட்ட ஆய்வு, நீண்டகாலமாக அங்கு வசித்து வரும் உண்மையான வாக்காளர்கள்கூட வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டிருப்பதை வெளிப்படுத்துகிறது.
இதில் தென்கிழக்கு டெல்லியில் 43.61%, இசுலாமியர்கள் அதிகம் வசிக்கும் ஒக்லா தொகுதியில் 45.16%, துக்ளகாபாத்தில் 47.83% வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. சபர் இன்ஸ்டிட்யூட்டின் ஆய்வின்படி, இசுலாமியர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 13.6% மட்டுமே இருந்தபோதும், தர்க்கரீதியான முரண்பாடுகளுக்காகக் குறிக்கப்பட்டவர்களில் 20.3% பேர் இசுலாமியர்கள்; மேலும், 2026 ஆகஸ்ட் 31 முதல் அக்டோபர் 16 வரை பெறப்பட்ட 13,462 படிவம் 7 விண்ணப்பங்களில் 9,199 மட்டுமே பொதுவெளியில் வெளியிடப்பட்டதாகவும், மீதமுள்ள 4,263 விண்ணப்பங்கள் வெளியிடப்படவில்லை என்றும் தி வயர் அம்பலப்படுத்தியது. இசுலாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பதிவான உயர்ந்த நீக்க விகிதங்களும், முஸ்லிம் வாக்காளர்களிடையே அதிகமாகக் காணப்பட்ட தரவு முரண்பாடுகளும், படிவம் 7 விண்ணப்பங்கள் தொடர்பான வெளிப்படைத்தன்மைக் குறைபாடுகளும் இணைத்துப் பார்க்க வேண்டியவை ஆகும்.
தெலங்கானாவில் 3.38 கோடி வாக்காளர்களில் 73.39 லட்சம் பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை; இது மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் சுமார் 21.7% ஆகும். ஹைதராபாத்தில் வெளியிடப்பட்ட வரைவு பட்டியலில் இடம்பெறாத 19.41 லட்சம் வாக்காளர்களைப் பற்றிய சியாசத் செய்தி நிறுவனத்தின் ஆய்வில், சுமார் 7.77 லட்சம் பெயர்கள் இசுலாமிய பெயர்களாக இருந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஹைதராபாத்தில் வரைவு பட்டியலில் இடம்பெறாதவர்களில் சுமார் 40% பேர் இசுலாமியராவர். சந்திராயன்குட்டா தொகுதியில் நீக்கத்திற்காகக் குறிக்கப்பட்ட 1,48,869 பெயர்களில் சுமார் 1.08 லட்சம் இசுலாமிய பெயர்கள் என அந்த ஆய்வு மதிப்பிட்டுள்ளது.
இவை இம்மாநிலங்களில் மட்டும் நடைப்பெற்றவையல்ல, மகாராஷ்டிரம், குஜராத், உத்திரகண்ட் என இந்தியாவின் பல பகுதிகளில் நடந்துள்ளது. குறிப்பாக இசுலாமியர் அதிகம் வாழும் தெலுங்கானா, டெல்லி, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் அதிகளவில் நடந்துள்ளதால் கண்கூட தெரிகிறது.
தேர்தல்களில் எஸ்.ஐ.ஆரின் தாக்கம்
2025 நவம்பர் மாதம் நடக்கவிருந்த பீகார் சட்டமன்ற தேர்தலுக்கு வெறும் 5 மாதங்களுக்கு முன்பு, ஜூனில் பீகாரில் எஸ்.ஐ.ஆரை நடைமுறைப்படுத்தப் போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இறுதியாக 47 லட்ச வாக்காளர்கள் நீக்கப்பட்ட பின்பு நடந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் தேஜஸ்வி யாதவின் ஆர்.ஜே.டி. தலைமையிலான “மகாகாத்பந்தன்” கூட்டணியை வீழ்த்தி பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றது. ஆர்.ஜே.டி. வழக்கமாக வெற்றி பெரும் தொகுதிகள், மாவட்டங்கள் (போஜ்பூர், சஹாகாபாத் போன்ற மாவட்டங்கள்), பாஜக வழக்கமாக வெற்றி பெறாத பல தொகுதிகள் கூட இம்முறை பாஜக கைவசம் சென்றது.
பீகாரில் நடந்த இம்முதற்கட்ட எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையானது பலருக்கு சந்தேகங்களை எழுப்பியது. எதிர்க்கட்சிகள், ஜனநாயக அமைப்புகள் நீதிமன்றங்களிடம் முறையிட்டு அவர்களது தலையிடுதலை நாடினர். ஆனால், காவிமயமான நீதிமன்றங்களோ எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை சட்டத்திற்கு உட்பட்டது என்றும், அதை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திற்கு உரிமையுண்டு என்று இந்நடவடிக்கையை நியாயப்படுத்தின. மேற்கு வங்கத்தில் பாஜக மாபெரும் வெற்றியை அடைந்ததற்கு எஸ்.ஐ.ஆரும் ஒரு காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. இலட்சக்கணக்கான வாக்காளர்கள், அதில் பெரும்பான்மையான தகுதியுள்ள வாக்காளர்கள் நீக்கப்பட்டபின்பு மே மாதம் தேர்தல் நடந்தது. பிரணாய் ராயின் டீகோடர் (DeKoder) பகுப்பாய்வின்படி, அதிக நீக்கங்கள் நடந்த தொகுதிகளில் திரிணாமுலுக்கு எதிரான தேர்தல் மாற்றம் (Vote Swing) அதிகமாக இருந்தது. பல தகுதியுள்ள வாக்காளர்கள் நீக்கப்பட்டு நடத்தப்பட்ட தேர்தல் எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும்?
தமிழ்நாடு, கேரளம் போன்ற மாநிலங்களில் பாஜக வெற்றிபெறவில்லை என்றாலும், நீக்கப்பட்ட பல தகுதியுள்ள வாக்காளர்களின் வாக்குகள் ஏதோவொரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மையே.
மூன்று கட்ட எஸ்.ஐ.ஆர். உணர்த்துவது என்ன?
இதற்கு முன்பு நடந்த அனைத்து வாக்காளர் திருத்த நடவடிக்கைகளிலும், இறுதி வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும் (இதற்கு காரணம் எதிர்க்கட்சிகளோ, பிற ஜனநாயக சக்திகளோ கூறுவது போல அப்போது “முழு ஜனநாயக உரிமைகள் இருந்தது” என்பதல்ல. மாறாக, அப்போது இருந்த போலி ஜனநாயக பிம்பத்தை கட்டிக்காப்பாற்ற இது போன்ற செயல்பாடுகள் மிகவும் அவசியமாக இருந்தது). ஆனால், முதல்முறையாக ஓர் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு பிறகு, வாக்காளர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
இதுவரை எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13.39 கோடி வாக்காளர்களில், வெறும் 28 சதவீதம் மட்டுமே இறந்த, அல்லது போலி வாக்காளர்கள். மிஞ்சியிருக்கும் 72 சதவீதம், “கண்டறியப்படாத” (Absent) அல்லது “இடம்பெயர்ந்த” (Shifted) வாக்காளர்கள் என வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர். அதாவது 9.5 கோடி வாக்காளர்கள், உயிரோடுள்ள, வாக்களிக்க தகுதியுள்ள மக்களே! இதில் சிறுபான்மையினர், பா.ஜ.க. எதிர்ப்பாளர்கள் மீது திட்டமிடப்பட்டே தாக்குதல்கள் நடந்திருப்பது கண்கூடு!
வாக்காளர் பட்டியலை “சுத்தப்படுத்தவும்”,“சட்டவிரோத குடியேறிகளின் வாக்குரிமையை பறிக்கவும்” எஸ்.ஐ.ஆர். அவசியம் என்ற கூற்றை காவி பாசிச கும்பல் பிரச்சாரம் செய்தாலும், எத்தனை “சட்டவிரோத குடியேறிகள்” நீக்கப்பட்டனர் என்ற கேள்விக்கு தேர்தல் ஆணையத்திடம் பதில் இல்லையென்பதே உண்மையாக இருக்கிறது.
உழைக்கும் மக்களை கொத்துக் கொத்தாக நீக்கும் தேர்தல் ஆணையம், பணக்காரர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள் போன்றோரை “வி.ஐ.பி.” என வகைப்படுத்தி, வீட்டிற்கு சென்று அவர்களது வாக்குரிமையை பாதுகாக்கின்றனர்.
மொத்தத்தில், படிவம் 7 ஐப் பயன்படுத்தி நீக்குவது; படிவம் 8 இன் மூலம் போலி வாக்குகளை உற்பத்தி செய்வது; ஈ.ஆர்.ஓ. நெட் மென்பொருளின் வடிவமைப்பு & அல்காரிதங்கள் மூலம் சிறுபான்மையினரைக் குறிவைப்பது; இசுலாமியர், பா.ஜ.க. எதிர்ப்பாளர்கள் அதிகம் வாழும் இடங்களைக் குறிவைத்து நீக்குவது – என பல வழிகளில் இச்சதித்தனம் அரங்கேறியுள்ளது. முதலாளித்துவ அறிவுஜீவியான பரகலா பிரபாகர் கூறுவதுபோல, இது “இரத்தமின்றி நடக்கும் ஓர் இனப்படுகொலை” அன்றி வேறென்ன! இத்தகைய சதித்தனத்தை சட்டப் போராட்டங்கள் மூலமோ, நீதிமன்றங்களில் முறையிடுவதன் மூலமோ தடுத்துவிட முடியும் என்று கருதுவது மூடத்தனம்!
- திருமாறன்


