தவெக: அதிகாரத் திமிர் கொண்ட அடாவடிக் கும்பல்!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட தவெக எம்.எல்.ஏ.வைக் காப்பாற்றுவதற்காக, புகாரையே மூடி மறைக்க முயன்றிருக்கிறது அரசு நிர்வாகம். புகார் அளித்த பெண் அதிகாரிக்குப் பாதுகாப்பு வழங்குவதற்குப் பதிலாக, குற்றஞ்சாட்டப்பட்ட எம்.எல்.ஏ.வுக்குப் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள் தவெக அமைச்சர்கள். இதுவொரு தனிநபரின் அத்துமீறல் மட்டுமல்ல; அதிகாரம் கிடைத்தவுடன் அரசு நிர்வாகத்தையே தங்களது சொந்தச் சொத்தாகக் கருதும் தவெகவின் அரசியல் பண்பாட்டின் வெளிப்பாடு. விஜய்யின் ஒளிவட்டத்துக்குப் பின்னால் அதிகாரத் திமிருடன் அடாவடியில் இறங்கியிருக்கும் தவெக கும்பலின் உண்மை முகம் இதுதான்!

ஒரு பெண் மாவட்ட ஆட்சியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வைக் காப்பாற்றுவதற்காக, ஒரு மாநில அரசு எந்த அளவுக்குச் செல்ல முடியும் என்பதற்குக் கள்ளக்குறிச்சி சம்பவம் முக்கியமான எடுத்துக்காட்டாக மாறியிருக்கிறது. தற்போது இந்தப் பிரச்சினை ஓர் எம்.எல்.ஏ. மீதான பாலியல் தொல்லைக் குற்றச்சாட்டுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அந்தக் குற்றச்சாட்டு எழுந்தபோது ஆளும் கட்சியும் அரசாங்கமும் அதை எவ்வாறு மூடி மறைக்க முயன்றன என்பதுதான் இப்போது முக்கியமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. புகாரளித்த பெண்ணுக்குப் பாதுகாப்பும் நீதியும் வழங்குவதற்குப் பதிலாக, குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வின் அரசியல் செல்வாக்கைப் பாதுகாப்பதற்கே அரசு நிர்வாகம் முன்னுரிமை அளித்திருக்கிறது என்பதை இச்சம்பவம் அம்பலப்படுத்துகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு, அந்தத் தொகுதியின் தவெக எம்.எல்.ஏ. அருள்விக்னேஷ் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகார் கடந்த ஒரு மாதமாகவே பொதுவெளியில் பேசப்பட்டு வந்தது. அரசு நிகழ்ச்சிகளில் அவரது உடை குறித்து ஆட்சேபகரமான கருத்துகளைத் தெரிவித்தது, மது போதையில் ஆட்சியரின் வீட்டிற்கே சென்று தகராறு செய்தது, அவருக்கு முறையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பியது எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து வெளிவந்தன. இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த எம்.எல்.ஏ., அவை அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் வதந்திகள் என்றும், எதிர்க்கட்சிகள் தன்னைப் பழிவாங்க முயற்சிப்பதாகவும் கூறினார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டால் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும் என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார். எம்.எல்.ஏ. அருள்விக்னேஷும், “அரசு அதிகாரிகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது; கட்சியின் பெயரைக் கெடுப்பதற்காகத் தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன” என்று தெரிவித்தார். இதற்கிடையில், சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இந்த விவகாரத்தை எழுப்பியதையே தவறு என்று விமர்சித்ததோடு, “இதுபோன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை” என்றும் கூறினார்.

இந்தப் பேட்டிகளின் நோக்கம் வெளிப்படையானது. குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை விசாரிப்பதற்கு முன்பே, அதை வதந்தி என்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் சித்தரித்து, குற்றஞ்சாட்டப்பட்ட எம்.எல்.ஏ.வுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டது. குறிப்பாக, சட்டத்துறை உள்ளிட்ட ஒன்பது துறைகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் நிர்மல் குமார், குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டிய பொறுப்பிலிருந்து விலகி, அதனை வெளிக்கொண்டு வந்தவர்கள் மீதே குற்றம்சாட்டினார். ஒரு பெண் அரசு அதிகாரியின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையை அரசியல் பழிவாங்கல் என்று திசைதிருப்புவதிலேயே அமைச்சரின் கவனம் இருந்தது.

ஆனால், இந்தப் பிரச்சினை சமூக ஊடகங்களில் பரவும் வெறும் வதந்தி அல்ல என்பது விரைவிலேயே தெளிவானது. மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தை ஏற்கெனவே மேலதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுசென்றதாக அப்போதே தகவல்கள் வெளியாகின. முதலமைச்சர் அலுவலகத்திற்கும் இது தொடர்பாகத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், எம்.எல்.ஏ.வின் நடத்தைக்காக முதலமைச்சர் அலுவலகம் அவரை எச்சரித்ததாகவும் போலீசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். அதாவது, புகார் தொடர்பான தகவல் அரசின் உயர்மட்டம் வரை சென்றிருந்தது. எனவே, எம்.எல்.ஏ.வின் நடத்தை குறித்து அரசுக்கு எதுவுமே தெரியாது என்று கூறுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.

இந்தச் சூழலில்தான், நவம்பர் 23ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கறிஞர் தாக்கல் செய்த பொதுநல மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்ட ஆட்சியரிடமிருந்து ஏதேனும் புகார் வந்திருக்கிறதா என்று நீதிபதி வி. லட்சுமிநாராயணன் அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் கேட்டார். போலீசுக்கும் தலைமைச் செயலாளருக்கும் எந்தப் புகாரும் வரவில்லை என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாகப் பேசி விவரங்களைப் பெற்றுவருமாறு நீதிபதி உத்தரவிட்டார். மறுநாள் விசாரணையின்போது தலைமைச் செயலாளரிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் விசாரித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

இதுவரை பாலியல் தொல்லை தொடர்பாக எந்தப் புகாரும் வரவில்லை என்று கூறிவந்த அரசு, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதும் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. நீதிமன்றத்தின் தலையீட்டால் துணிவுபெற்ற மாவட்ட ஆட்சியர், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாகப் போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் தற்போது முதல் தகவல் அறிக்கையும் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது.

மறுநாளான நவம்பர் 24ஆம் தேதி, அரசுத் தரப்பின் பதில் அடங்கிய உறை நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைப் படித்த நீதிபதி, இது பாலியல் குற்றம் தொடர்பான வழக்கு என்பதால் சம்பவம் குறித்த விவரங்களைப் பொதுவெளியில் விவாதிக்கக் கூடாது என்று கூறினார். அதேநேரத்தில், ஜூலை 31ஆம் தேதியே தலைமைச் செயலாளருக்குப் புகார் வந்திருந்தும், அரசுத் தரப்பில் ஏன் 147 நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

இதுவரை இந்த வழக்கில் புகாரே வரவில்லை என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது மிகப்பெரிய பொய் என்பது இதன்மூலம் அம்பலமாகியிருக்கிறது. கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. தவறு செய்தாரா, இல்லையா என்பது இன்னும் விசாரித்து முடிவுசெய்ய வேண்டிய விஷயம். ஆனால், இத்தகைய பாலியல் புகார் வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு, அதனை மூடி மறைத்திருப்பது குற்றஞ்சாட்டப்பட்டவரைக் காப்பாற்றும் முயற்சியே ஆகும். இந்த விவகாரத்தில் அரசே தற்போது முதன்மைக் குற்றவாளியாக மாறியிருக்கிறது.

புகாரை மறைத்துவைத்தது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியரைச் சமாதானப்படுத்தும் முயற்சியிலும் அரசு ஈடுபட்டிருக்கிறது. மூன்று மாதங்களுக்கு முன்பே பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியரை வேறு மாவட்டத்திற்கு மாற்றலாகிச் சென்றுவிடுமாறு அரசுத் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக மற்றொரு ஐ.ஏ.எஸ். அதிகாரியான கவிதா ராமு சமூக வலைத்தளங்களில் எழுதியிருக்கிறார்.

இந்நிலையில், தவெக அமைச்சர்களான நிர்மல் குமாரும் ராஜ்மோகனும் தங்கள் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக இதுவரை எவ்வளவு திமிராகப் பேசி வந்திருக்கிறார்கள்! சமூக ஊடகங்களில் பரவும் புரளி என்றும், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்றும் கூறிவந்தவர்கள், பாதிக்கப்பட்ட ஆட்சியர் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்தனர். ஆனால், மாவட்ட ஆட்சியர் ஏற்கெனவே புகார் அளித்திருந்த உண்மையை மறைத்துக்கொண்டுதான் இவ்வாறு திமிராகப் பேசியிருக்கிறார்கள். சட்டத்துறை உள்ளிட்ட ஒன்பது துறைகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் நிர்மல் குமாருக்கு இந்தப் புகார் குறித்துத் தெரியாது என்று கூறிவிட முடியாது. புகார் குறித்து நிச்சயமாகத் தெரிந்திருந்தும், மாவட்ட ஆட்சியரை மிரட்டிவிட்டோம், அவர் இதனை வெளியில் சொல்ல மாட்டார் என்ற நம்பிக்கையில்தான் இவ்வளவு திமிராகப் பேசியிருக்கிறார்கள்.

அமைச்சர்களின் நிலை இதுவென்றால், பெண்கள் பாதுகாப்புதான் தனது ஆட்சியின் முக்கிய இலட்சியம் என்றும், பெண்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் சாட்டையை எடுத்துச் சுழற்றுவேன் என்றும் பேசிய தவெக தலைவர் விஜய் இந்த விவகாரத்தில் வாய்மூடி மௌனியாக இருக்கிறார். அவருக்குப் புகார் அளிக்கப்பட்ட விஷயம் தெரியாது என்று சப்பைக்கட்டு கட்டவும் முடியாது. பொதுவெளியில் இவ்வளவு பெரிய பிரச்சினையாக வெடித்த பிறகும் அந்தப் பொய்யைத் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்க முடியாது. இந்தக் குற்றச்சாட்டு குறித்துத் தெரிந்த பிறகுதான், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.வை அழைத்துத் தீபாவளிப் பரிசு கொடுத்திருக்கிறார் விஜய். தனது கட்சி எம்.எல்.ஏ. பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பது தெரிந்தும், அந்த விவகாரத்தை மூடி மறைத்துக் குற்றஞ்சாட்டப்பட்டவரைப் பாதுகாக்கும் தலைவரையும், தனது பதவிக்காகக் கண்ணை மூடிக்கொண்டிருக்கும் தலைவரையும் என்னவென்று இடித்துரைப்பது?

இந்த விவகாரத்தைத் தவெகவின் ஓர் எம்.எல்.ஏ. செய்த தவறு என்று மட்டும் ஒதுக்கிவிடவும் முடியாது. ஏனெனில், தவெக எம்.எல்.ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் எனப் பலர் மீதும் இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக எழுந்துள்ளன.

ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சரவணனுக்கு எதிராக அக்கட்சியின் பெண் உறுப்பினரே முன்வைத்த கூட்டுப் பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டு; ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் மீது பெண் ஒருவர் முன்வைத்த பாலியல் தொல்லை மற்றும் ஆபாசப் படங்களைக் காட்டி மிரட்டிய குற்றச்சாட்டு; ராணிப்பேட்டை ஒன்றியச் செயலாளர் சசிக்குமார் மீது வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பாலியல் தொல்லை அளித்து, பணம் பறித்ததாக எழுந்த புகார்; காரமடை ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி மீது பெண் நிர்வாகி அளித்த பாலியல் துன்புறுத்தல் மற்றும் கொலை மிரட்டல் புகார்; திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் சத்யா மீது மகளிரணி உறுப்பினர்களுக்கே ஆபாசக் குறுஞ்செய்திகளை அனுப்பி, பாலியல் உறவுக்கு வற்புறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு என, தவெக எம்.எல்.ஏ.க்கள் முதல் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் வரை பலர் மீதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து எழுந்துள்ளன. இவற்றில் பல புகார்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. சில புகார்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படவில்லை; விசாரணையிலும் எந்த முன்னேற்றமும் இல்லை.

இங்கு நாம் தவெகவினர் என்ன வகையான அரசியலை முன்னெடுத்து வருகிறார்கள் என்பதைத்தான் முக்கியமாகக் கவனிக்க வேண்டியிருக்கிறது. தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தவுடன், தங்களுக்குக் கிடைத்த அதிகாரத்தைத் தங்களது தனிப்பட்ட செல்வாக்காகவும், கட்சிக்குள் தங்களுக்குக் கிடைத்த மேலாதிக்கமாகவும் அவர்கள் கருதத் தொடங்கியிருக்கிறார்கள். ஆளுங்கட்சியின் எம்.எல்.ஏ. என்பதால் அரசு நிர்வாகம் தனக்கு அடிபணிய வேண்டும்; கட்சியின் பெயருக்குக் களங்கம் ஏற்படக்கூடாது என்பதால் புகார்கள் வெளியில் வரக்கூடாது; குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களையே அரசியல் உள்நோக்கம் கொண்டவர்கள் என்று முத்திரை குத்திவிடலாம் என்ற மனப்பான்மை இதிலிருந்துதான் உருவாகிறது. இதுவே அதிகாரத் திமிரின் அரசியல் வடிவம்.

இந்தப் போக்கை வெறுமனே சில தனிநபர்களின் ஒழுக்கக்கேடாக மட்டும் புரிந்துகொள்ள முடியாது. அதிகாரம் கிடைத்தவுடன் நிர்வாக அமைப்பு தங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும், போலீசு தங்களுக்குச் சாதகமாகச் செயல்பட வேண்டும், அந்த அதிகார அமைப்புகளைப் பயன்படுத்தித் தங்களது அரசியல் இருப்பைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று கருதும் அதிகாரத் திமிர் கொண்ட அடாவடிக் கும்பலின் அணுகுமுறையாகவே இதைப் பார்க்க வேண்டும். இத்தகைய அரசியல் பண்பாடு வளரும்போது, கட்சிக்குள் நிலவும் அதிகாரப் படிநிலைகள் மக்களின் உரிமைகளைக் காட்டிலும் மேலானவையாக மாற்றப்படுகின்றன.

தவெக தலைவர் விஜய்யின் தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் கட்டி, அவரைத் தன்னிகரற்ற தலைவராகப் புகழும் ஒவ்வொரு தவெக நிர்வாகியும், எம்.எல்.ஏ.வும், அமைச்சரும் தங்களையும் அந்த ஒளிவட்டத்தின் பிரதிபலிப்பாகவே பார்க்கிறார்கள். இன்னும் இருபது ஆண்டுகள் ஆனாலும் தங்களை யாராலும் அசைக்க முடியாது என்ற கர்வத்துடன் திமிராக நடந்துகொள்கிறார்கள். தாங்கள் என்ன செய்தாலும் யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று செயல்படுகிறார்கள். மொத்தத்தில், இன்றைக்கு தவெக என்பது அதிகாரத் திமிர் கொண்ட அடாவடிக் கும்பலாக வளர்ந்து நிற்கிறது.

  • அறிவு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன