7.8% ஜிடிபி : புள்ளிவிவரங்களில் மட்டும் ஜொலிக்கும் வளர்ச்சி

இந்தியாவின் ஜிடிபி 7.8 சதவிகிதம் வளர்ந்துவிட்டதாக மோடி அரசு பெருமிதம் கொள்கிறது. ஆனால் இந்த வளர்ச்சி மக்களின் வருமானத்திலும், வேலைவாய்ப்பிலும், நுகர்விலும், சேமிப்பிலும் தெரியவில்லை

இரண்டு வாரங்களுக்கு முன்னர், “இந்தியா 7.8 சதவிகித பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கிறது” என சமூக ஊடகங்களில் தனது கணொளியின் மூலம் அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இதுவே இந்தியாவின் பொருளாதார வலிமைக்கான மிகப்பெரிய சான்று என முழங்கினார். அதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசின் ஆதரவாளர்கள், மோடியின் புகழ்பாடும் கோடி ஊடகங்கள் (Godi Media) என அனைவரும் கொண்டாட்டத்தில் இறங்கினர். இந்தியப் பொருளாதாரம் எதிர்பார்ப்புகளைத் தாண்டி வளர்ந்திருப்பதாகவும், இது அரசின் கொள்கைகளுக்கும் தலைமைத்துவத்திற்கும் கிடைத்த வெற்றி என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது. காவிக் கும்பலின் ஆதரவாளர்களுக்கு இது மற்றொரு “வளர்ச்சி சாதனை”யாக மாறியது.

ஆனால், ஒரு நாட்டின் பொருளாதாரம் 7.8 சதவிகிதம் வளர்ந்திருக்கிறது என்று அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் கூறும்போது, அந்த வளர்ச்சி மக்களின் வாழ்க்கையில் எந்த வடிவத்தில் வெளிப்பட்டிருக்கிறது என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் அவைதான் பொருளாதார வளர்ச்சியின் உண்மையான அளவுகோல். பொருளாதாரம் வளர்ந்திருந்தால் குடும்பங்களின் நுகர்வு அதிகரிக்க வேண்டும்; மக்களின் வருமானம் உயர வேண்டும்; வேலைவாய்ப்புகள் பெருக வேண்டும்; கிராமப்புறச் செலவுகள் அதிகரிக்க வேண்டும்; தொழிற்துறை உற்பத்தி விரிவடைய வேண்டும்; விவசாயிகளின் வருமானம் மேம்பட வேண்டும். இவை எதுவும் பொருளாதார வளர்ச்சியிலிருந்து தனித்துப் பார்க்க முடியாதவை.

ஆனால் அதிகாரப்பூர்வ ஜிடிபி வளர்ச்சிக்கும் பொருளாதாரத்தின் பல்வேறு தரவுகளுக்கும் இடையே பெரும் இடைவெளி இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் பலரும் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர். இதனால்தான் தற்போதைய ஜிடிபி வளர்ச்சி எண்ணிக்கை 7.8 சதவிகிதம் என்று மோடி அரசு கூறுவதை பலரும் ஏற்க மறுக்கின்றனர்.

ஒரு நாட்டின் ஜிடிபியைக் கணக்கிடும்போது எந்தத் தரவுகள் பயன்படுத்தப்படுகின்றன, எந்த அடிப்படையில் கணக்கிடப்படுகிறது, பழைய ஆண்டுகளின் அடிப்படை மதிப்புகள் எவ்வாறு மாற்றப்படுகின்றன, நாட்டின் பொருளாதாரத்தின் எந்தப் பகுதிகள் நேரடியாக அளவிடப்படுகின்றன, எந்தப் பகுதிகள் அனுமானத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றன என்பதே முக்கியமான பிரச்சினையாகிறது. இந்த இடத்தில்தான் மோடி அரசின் புள்ளிவிவரங்களின் நம்பகத்தன்மை குறித்து பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

அடிப்படை ஆண்டை மாற்றினால் வளர்ச்சி திடீரென அதிகரிக்குமா?

தற்போதைய சர்ச்சையில் முன்னாள் நிதித்துறைச் செயலாளர் சி.எஸ். கார்க் முன்வைத்த முக்கியமான குற்றச்சாட்டு, ஜிடிபி கணக்கீட்டில் பயன்படுத்தப்படும் முந்தைய ஆண்டின் அடிப்படை மதிப்பு தொடர்பானது. ஒரு ஆண்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட காலாண்டு ஜிடிபி மதிப்பு பின்னர் வெளியிடப்படும் புதிய கணக்கில் திருத்தப்பட்டு குறைக்கப்பட்டால், அடுத்த ஆண்டின் வளர்ச்சி விகிதம் இயல்பாகவே அதிகமாகத் தோன்றும். பொதுமக்கள் முன்பு அறிந்திருந்த பழைய எண்ணுடன் ஒப்பிடும்போது வளர்ச்சி குறைவாக இருந்தாலும், திருத்தப்பட்ட குறைந்த அடிப்படை மதிப்புடன் ஒப்பிடும்போது அது மிகப்பெரிய வளர்ச்சியாகக் காட்சியளிக்கும்.

இதனை ஒரு பள்ளி மாணவனின் மதிப்பெண் உதாரணத்தில் புரிந்துகொள்ளலாம். ஒரு மாணவன் கடந்த ஆண்டு 80 மதிப்பெண் பெற்றதாக பெற்றோரிடம் கூறுகிறான். இந்த ஆண்டு 83 மதிப்பெண் பெற்றால் வளர்ச்சி வெறும் மூன்று மதிப்பெண்கள்தான். ஆனால் பின்னர் கடந்த ஆண்டின் மதிப்பெண் 75 என்று திருத்தப்பட்டுவிட்டால், இந்த ஆண்டு 83 என்பது 75-இலிருந்து கணக்கிடப்படும்போது மிகப்பெரிய முன்னேற்றமாகத் தோன்றும். மாணவனின் தற்போதைய மதிப்பெண் மாறவில்லை; மாறியது ஒப்பிடுவதற்கான அடிப்படை மட்டுமே. ஜிடிபி கணக்கீட்டில் அடிப்படை மதிப்பின் திருத்தம் எவ்வாறு வளர்ச்சி விகிதத்தின் தோற்றத்தையே மாற்றிவிட முடியும் என்பதற்கு இதுவே எளிய விளக்கம்.

இவ்வாறு திருத்தப்பட்ட தரவுகளின் தரம் என்ன, அந்தத் திருத்தத்துக்கான வெளிப்படையான விளக்கம் என்ன, புதிய கணக்கீட்டு முறையால் உருவாகும் எண்ணிக்கை மற்ற பொருளாதாரக் குறியீடுகளுடன் பொருந்துகிறதா என்பது போன்ற கேள்விகள் எழுப்பப்படும்போது “இது அதிகாரப்பூர்வ எண்ணிக்கை என்பதால் கேள்வி கேட்கக்கூடாது” என்ற வாதம் அரசால் முன்வைக்கப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய பொருளாதார அளவீட்டை அனுமானத்தின் அடிப்படையில் கணக்கிட முடியுமா?

இந்தியப் பொருளாதாரத்தின் ஒரு முக்கியமான சிக்கல் அதன் மிகப்பெரிய அளவிலான அமைப்புசாரா துறையாகும். தெருவோர வியாபாரிகள், சிறிய கடைகள், சிறு தொழிற்சாலைகள், குடும்ப அடிப்படையிலான தொழில்கள், சிறிய பட்டறைகள் போன்றவை நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்கைக் கொண்டுள்ளன. இவர்களின் உண்மையான வருமானம், உற்பத்தி, செலவு, கடன் நிலை, வேலைவாய்ப்பு போன்றவற்றை ஒவ்வொரு காலாண்டிலும் நேரடியாக அளவிடுவது கடினம். இந்தச் சிக்கலுக்கான தீர்வாக சில கணக்கீடுகளில் பட்டியலிடப்பட்ட பெரிய நிறுவனங்களின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு அமைப்புசாரா துறையின் வளர்ச்சியையும் மதிப்பிடும் நடைமுறை பயன்படுத்தப்படுகிறது.

இதில் உள்ள பிரச்சினை மிகத் தெளிவானது. பெரிய பங்குச்சந்தை நிறுவனங்கள் வளர்ந்திருக்கின்றன என்பதைக் கொண்டு அதே காலகட்டத்தில் ஒரு சிறிய காய்கறி வியாபாரியும் அதே அளவுக்கு வளர்ந்திருக்கிறார் என்று கருத முடியாது. பெரிய நிறுவனங்களுக்கு வங்கிக் கடன், தொழில்நுட்பம், சந்தை, முதலீடு, ஏற்றுமதி வாய்ப்பு போன்றவை இருக்கலாம். சிறு வியாபாரியின் நிலை முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். குறிப்பாக பணவீக்கம், வாடகை, மூலப்பொருள் விலை, கடன் வட்டி, குறைந்த நுகர்வு போன்றவை சிறு தொழில்களை கடுமையாகப் பாதித்திருக்கலாம். பெரிய முதலாளிகளுக்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பல சலுகைகளை வாரிக் கொடுக்கின்றன. சிறு தொழிலகளோ அதிகரித்து வரும் மின்சாரக் கட்டணத்தைக் கூட கட்ட முடியாமல் தவித்து வருகின்றன. எனவே பெரிய நிறுவனங்களின் தரவுகளை வைத்து அமைப்புசாரா துறையின் வளர்ச்சியை அனுமானிப்பது, பொருளாதாரத்தின் உண்மையான நிலையை மறைப்பதற்கே உதவுகிறது.

இந்தப் பிரச்சினை என்பது பொருளாதார அளவீடுகள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன என்ற பிரச்சினை மட்டுமல்ல. இந்தியாவில் வாழும் பெரும்பாலான மக்களின் வாழ்க்கையுடன் நேரடியாகத் தொடர்புடைய பிரச்சினை. ஒரு சிறு கடைக்காரரின் விற்பனை குறைந்திருக்கலாம்; ஒரு சிறு தொழிற்சாலை தொழிலாளர்களைக் குறைத்திருக்கலாம்; ஒரு குடும்பத்தின் உணவு மற்றும் கல்விச் செலவுகள் அதிகரித்திருக்கலாம். ஆனால் பெரிய நிறுவனங்களின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு அந்தத் துறையும் வளர்ந்திருக்கிறது என்று கணக்கிட்டால், காகிதத்தில் பொருளாதாரம் வளர்ந்துகொண்டிருக்கும்; மக்களது வாழ்நிலையோ தொடர்ந்து சுருங்கிக்கொண்டிருக்கும்.

இரட்டை பணவாட்டம் (Double Deflation) என்ன பாதிப்பை உருவாக்குகிறது?

ஜிடிபி கணக்கீட்டில் மற்றொரு முக்கியமான விவாதம் “double deflation” முறையைச் சுற்றி உள்ளது. உண்மையான ஜிடிபி வளர்ச்சியை கணக்கிடும்போது பணவீக்கத்தின் தாக்கத்தை நீக்க வேண்டும். ஒரு தொழிற்சாலை உற்பத்தி செய்யும் பொருளின் விலை உயர்ந்திருப்பது மட்டும் அந்தத் தொழிற்சாலையின் உண்மையான உற்பத்தி அதிகரித்துவிட்டது என்று பொருள் கொள்ள முடியாது. அதே நேரத்தில் அந்தப் பொருளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலையும் அதிகரித்திருக்கலாம். இறுதி உற்பத்தியின் விலையை மட்டும் பணவீக்கத்திலிருந்து சரிசெய்து, உள்ளீட்டுப் பொருட்களின் விலை உயர்வைத் தனியாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளாவிட்டால், தொழிற்சாலையின் உண்மையான மதிப்பு கூடுதலாகத் தோன்றும் அபாயம் உள்ளது.

உதாரணமாக, ஒரு தொழிற்சாலை ரூ.100 மதிப்புள்ள மூலப்பொருளைப் பயன்படுத்தி ரூ.150 மதிப்புள்ள பொருளைத் தயாரிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். பின்னர் மூலப்பொருளின் விலை ரூ.130 ஆக உயர்ந்துவிட்டது. இறுதிப் பொருளின் விலையும் உயர்ந்துவிட்டது. ஆனால் கணக்கீட்டில் இறுதி விற்பனை விலையின் பணவீக்கத்தை மட்டும் சரிசெய்து, மூலப்பொருளின் விலை உயர்வை உரிய முறையில் கணக்கில் கொள்ளவில்லை என்றால், தொழிற்சாலை முன்பைவிட அதிக மதிப்பை உருவாக்குகிறது என்ற தோற்றம் உருவாகலாம். இதுபோன்ற கணக்கீட்டு விளைவுகள் ஆயிரக்கணக்கான நிறுவனங்களின் தரவுகளில் சேரும்போது, காகிதத்தில் உருவாகும் பொருளாதார வளர்ச்சி தரையில் உருவாகும் உண்மையான உற்பத்தியைவிட அதிகமாகத் தோன்றும்.

மக்கள் செலவு செய்யவில்லை என்றால் பொருளாதாரம் யாருக்காக வளர்கிறது?

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குடும்ப நுகர்வு மிகப்பெரிய பங்கைக் கொண்டிருக்கிறது. எனவே பொருளாதாரம் உண்மையிலேயே வேகமாக வளர்ந்தால், மக்களின் நுகர்வு திறனும் அதற்கேற்ப அதிகரிக்க வேண்டும். குடும்பங்கள் அதிகமாகப் பொருட்களை வாங்க வேண்டும்; சேவைகளுக்கான செலவு அதிகரிக்க வேண்டும்; கிராமப்புறங்களில் நுகர்வு மேம்பட வேண்டும். ஆனால் குடும்ப நுகர்வு வளர்ச்சி மிகக் குறைந்த அளவில் இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டும் நிலையில், மொத்த பொருளாதாரம் மட்டும் ஏறக்குறைய 8 சதவிகித வளர்ச்சியை எட்டியிருப்பதாக அறிவிக்கப்படுவது முக்கியமான முரண்பாட்டை அம்பலப்படுத்துகிறது.

ஒரு குடும்பத்தின் வருமானம் அதிகரிக்காமல், அதன் சேமிப்பு குறைந்து, கடன் அதிகரித்து, உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துகொண்டிருக்கும்போது, அந்தக் குடும்பம் பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு அனுபவிக்கும்? பங்குச்சந்தையில் சில பெரிய நிறுவனங்களின் மதிப்பு அதிகரிப்பது ஒரு குடும்பத்தின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிட்டதற்கான சான்றாகாது. கார்ப்பரேட் வருவாய் உயர்வதும், கோடிக்கணக்கான குடும்பங்களின் உண்மையான வாங்கும் திறன் உயர்வதும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள். ஆனால் அரசு உருவாக்கும் “வளர்ச்சி” என்ற பொதுவான பிம்பத்தில் இந்த வேறுபாடு திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. இவர்கள் வெளியிடும் புள்ளிவிவரங்கள் மக்களின் வாழ்க்கையை விளக்குவதற்குப் பதிலாக ஆட்சியின் பிரச்சாரக் கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றன.

இதனால்தான் டீசல் நுகர்வு, டிராக்டர் விற்பனை, நிறுவனங்களின் வருவாய், ஊதிய வளர்ச்சி, கிராமப்புறச் செலவுகள் போன்ற பல்வேறு பொருளாதாரக் குறியீடுகளையும் ஜிடிபியுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. பொருளாதாரம் 7.8 சதவிகிதம் வளர்ந்திருக்கிறது என்றால், அந்த வளர்ச்சியின் தடயங்கள் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளிலும் தென்பட வேண்டும். எல்லாக் குறியீடுகளும் ஒரே விகிதத்தில் உயர வேண்டிய அவசியமில்லை; ஆனால் மொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களின் வருமானம், நுகர்வு, வேலைவாய்ப்பு, கிராமப்புறச் செலவு போன்றவற்றுக்கும் இடையே தொடர்ந்து பெரும் முரண்பாடு இருக்கிறது.

இது ஜிடிபியில் மட்டும் நடக்கவில்லை

மோடி அரசு ஜிடிபி குறித்த புள்ளிவிவரங்களில் திருத்தங்களைச் செய்வதோடு மட்டும் நின்றுவிடவில்லை. கடந்த காலங்களில், தன் மீது விமர்சனம் எழும்போதெல்லாம், இதுபோல பல முறை புள்ளிவிவரங்களில் மாற்றங்களைச் செய்துள்ளது. தேசிய குடும்ப சுகாதார ஆய்வான NFHS-5 2022-ஆம் ஆண்டு வெளியானது. அதில் ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்தும், பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் இறப்பு விகிதம் தொடர்பான தரவுகள் வெளியானது. அவற்றில் மிகவும் அதிர்ச்சிகரமான பின்னடைவுகள் இருந்தது தெரியவந்தது. ஆனால் அதற்கு அடுத்து தற்போது 2026-ஆம் ஆண்டில் வெளியாகியிருக்கும் NFHS-6 தொடர்பான ஆரம்பத் தகவல்களில் இவை உட்பட பல முக்கியமான குறியீடுகள் நீக்கப்பட்டுள்ளன. ரத்தசோகை, குழந்தை இறப்பு, பாலின விகிதம், வீட்டு சுகாதார வசதிகள், தூய்மையான சமையல் எரிபொருள் போன்ற சமூகக் குறியீடுகள் ஆகியவை கடந்த ஆய்வில் மிகவும் பிந்தங்கியிருப்பதாகத் தெரியவந்ததால் இந்த ஆய்வில் அவை மோடி அரசால் திட்டமிட்டு நீக்கப்பட்டுவிட்டன.

ஒரு பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை என்றால், அந்தப் பிரச்சினையை அளக்கும் அளவுகோலை மாற்றிவிடுவது என்கிற எளிதான அரசியல் உத்தியை மோடி அரசு பின்பற்றி வருகிறது. மக்களின் வாழ்நிலை குறித்த தரவுகள் அவை மோசமாக இருப்பதாகக் காட்டினால் அந்த நிலையை மாற்றுவதுதான் அரசின் கடமை. அதற்குப் பதிலாக பிரச்சினையை அளக்கும் குறியீடுகளையே குறைத்துவிட்டால், அரசின் செயல்திறன் காகிதத்தில் மேம்பட்டதாகத் தோன்றலாம். ஆனால் அந்த வெற்றி காகிதத்தில் மட்டுமே இருக்கும், மக்களின் வாழ்க்கையை மாற்ற அது உதவாது.

வறுமை குறித்த அதிகாரப்பூர்வப் பிரச்சாரத்திலும் இதே போன்ற திருத்தல் வேலையைச் செய்திருக்கிறார்கள். ஒரு குடும்பத்தின் உண்மையான வருமானம், உணவு நுகர்வு, வாழ்க்கைச் செலவு போன்றவற்றைப் பார்ப்பதற்குப் பதிலாக, வங்கிக் கணக்கு இருக்கிறதா, கழிப்பறை கட்டப்பட்டிருக்கிறதா, எல்பிஜி இணைப்பு கிடைத்திருக்கிறதா போன்ற பல பரிமாணக் குறியீடுகளின் அடிப்படையில் வறுமையை அளக்கும் முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய வசதி இருப்பது மட்டும் அந்தக் குடும்பம் வறுமையிலிருந்து வெளியேறிவிட்டது என்று அர்த்தமல்ல. வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் இருக்கலாம்; எல்பிஜி சிலிண்டர் இருந்தாலும் அதை நிரப்பும் பணம் இல்லாமல் இருக்கலாம்; கழிப்பறை கட்டப்பட்டிருந்தாலும் அதற்குத் தேவையான தண்ணீர் வசதி இல்லாமல் இருக்கலாம்.

கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என்பதைக் கணக்கில் சேர்ப்பது எளிது. ஆனால் அவை பயன்படுத்தப்படுகின்றனவா, தண்ணீர் வசதி உள்ளதா, கழிவுநீர் மேலாண்மை இருக்கிறதா, அந்தக் கழிப்பறைகள் சில மாதங்களுக்குப் பிறகும் பயன்பாட்டில் உள்ளனவா என்பதுதான் உண்மையான கேள்வி. சில இடங்களில் கழிப்பறைகள் வேறு பயன்பாட்டுக்குச் சென்றுவிடும் நிலையும், கட்டப்பட்ட கட்டமைப்பை மட்டும் வெற்றியாகக் காட்டுவதும் அரசின் புள்ளிவிவரங்களுக்கும் உண்மையில் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் இடையிலான இடைவெளியை வெளிப்படுத்துகின்றன.

மரங்கள் அதிகரித்ததா, காடுகள் அதிகரித்ததா?

இந்தியாவின் “பசுமை வளர்ச்சி” (Green Cover) பற்றிய அதிகாரப்பூர்வப் பிரச்சாரத்திலும் அளவுகோலை மாற்றுவதன் தாக்கம் குறித்த விமர்சனங்கள் சமீபத்தில் சிஏஜி அறிக்கையின் மூலம் விவாதப் பொருளாகியிருக்கின்றன. காடுகளின் பரப்பளவை அளக்கும்போது ஒரு காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட சட்டரீதியான அல்லது இயற்கை வன அடையாளங்களுக்குப் பதிலாக, குறிப்பிட்ட பரப்பளவில் குறிப்பிட்ட அளவு மரம் வளர்க்கப்பட்டு இருந்தால் அது “forest cover” என கணக்கிடப்படும் அணுகுமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இயற்கைக் காடுகள் மட்டுமல்லாமல், வணிகத் தோட்டங்கள் மற்றும் பிற இடங்களில் உள்ள மரங்களும் பசுமைப் பரப்பாகக் கணக்கிடப்படுள்ளன.

இதில் உள்ள மிகப்பெரிய அரசியல் அபாயம் என்னவென்றால், ஒரு பழமையான இயற்கைக் காடு அழிக்கப்பட்டு அதற்குப் பதிலாக ஒரே வகை மரங்கள் கொண்ட (யூகலிப்டஸ், தேக்கு, டீ) வணிகத் தோட்டம் உருவாக்கப்பட்டாலும், செயற்கைக்கோள் அடிப்படையிலான ஒரு குறிப்பிட்ட அளவீட்டில் “பசுமை” அதிகரித்ததாகக் காட்டப்படுகின்றன. ஆனால் இயற்கைக் காடு என்பது வெறும் மரங்களின் எண்ணிக்கை அல்ல. அதில் உயிரினப் பன்மைத்துவம் உள்ளது; நீர்ச் சுழற்சி உள்ளது; பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் உள்ளது; பல நூற்றாண்டுகளாக உருவான சூழலியல் அமைப்பு உள்ளது. ஒரு வணிக மரத்தோட்டத்தை இயற்கைக் காட்டுக்கு இணையாகக் கருதிவிட்டு, நாட்டின் வனப்பரப்பு அதிகரித்துவிட்டதாக அறிவிப்பது சூழலியல் உண்மையை எண்ணிக்கையாக மாற்றிவிடும் செயல்.

கொரோனா மரணங்களும் புள்ளிவிவரங்களின் அரசியலும்

புள்ளிவிவரங்களின் நம்பகத்தன்மை குறித்த விவாதம் மனித உயிர்களைத் தொடும்போது அதன் தீவிரம் இன்னும் அதிகரிக்கிறது. கொரோனா இரண்டாவது அலையின் போது நாடு முழுவதும் மருத்துவமனைகளின் நெருக்கடி, ஆக்சிஜன் பற்றாக்குறை, இடைவிடாமல் எரிந்த சுடுகாடுகள், கங்கை நதியில் மிதந்த உடல்கள் போன்ற காட்சிகளை மக்கள் நேரடியாகப் பார்த்தனர். ஆனால் அரசின் அதிகாரப்பூர்வ மரண எண்ணிக்கைக்கும் பல்வேறு சுயாதீன மதிப்பீடுகளுக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு இருந்தது. உலக சுகாதார அமைப்பு இந்தியாவில் கொரோனா மரணங்கள் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையைவிட பல மடங்கு அதிகமாக இருந்திருக்கலாம் என்று மதிப்பிட்டது; அந்த மதிப்பீட்டின் முறையை இந்திய அரசு ஏற்கவில்லை.

இந்திய அரசு கொரோனா பெருந்தொற்றால் 4 இலட்சம் பேர் பலியாகியிருப்பதாக அறிவித்தது. ஆனால் உலக சுகாதார அமைப்பு இதைவிட பத்து மடங்கு அதிகமாக 40 இலட்சம் பேர் இறந்திருக்கலாம் எனக் கூறியது. சுயாதீன ஆய்வாளர்கள் பலர் இந்திய மாநிலங்களின் வழமையான இறப்பு விகிதங்களைக் கொண்டு அளவிட்டு அரசு வெளியிட்ட மரணங்களின் எண்ணிக்கை உண்மையான மரணங்களை விடப் பல மடங்கு குறைத்துக் காட்டப்பட்டதை அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.

ஒரு நோயை எதிர்கொள்ள அதன் தாக்கம் எவ்வளவு என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். மரணங்களை குறைத்து எண்ணினால், மருத்துவ வசதிகளை எவ்வளவு அதிகரிக்க வேண்டும் என்பதையும் சரியாகத் திட்டமிட முடியாது. வறுமையை குறைத்து மதிப்பிட்டால், எத்தனை குடும்பங்களுக்கு நலத்திட்டங்கள் தேவை என்பதை அரசு தவறாக மதிப்பிடும். வேலைவாய்ப்பின்மையை மறைத்தால், வேலைவாய்ப்பை உருவாக்கும் கொள்கைகள் தேவையில்லை என்ற தோற்றம் உருவாகும். அதேபோல், பொருளாதார வளர்ச்சியை அளவுக்கு அதிகமாகக் காட்டினால், மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பொருளாதார நெருக்கடியை மறைத்துவிட முடியும் என அரசு நினைக்கிறது.

உண்மையாகவே மக்கள் மீது அக்கறை கொண்ட அரசாக இருந்தால் இவற்றையெல்லாம் அப்படியே எடுத்துக்கொண்டு பரிசீலித்து மக்களின் வாழ்நிலையில் முன்னேற்றத்தைக் கொண்டு வர முயற்சிக்கும். ஆனால் மோடி அரசு தனது வெற்றியைப் பிரம்மாண்டமாகப் பிரச்சாரம் செய்வதற்காகவே புள்ளிவிவரங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

வளர்ச்சி என்றால் புள்ளிவிவரமா, மக்களின் வாழ்க்கையா?

இன்று இந்தியாவில் “உலகின் மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதாரம்” என்ற பெருமை தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்படுகிறது. இந்தப் பெருமை மக்களிடம் நம்பிக்கையை உருவாக்குவதற்கும், சர்வதேச முதலீட்டாளர்களிடம் இந்தியாவை ஒரு மிகப்பெரிய சந்தையாகக் காட்டுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் இறுதி நோக்கம் பங்குச்சந்தை மதிப்பை உயர்த்துவதோ அல்லது சர்வதேச தரவரிசையில் மேலே செல்வதோ அல்ல. அது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும். தொழிலாளியின் ஊதியம் உயர வேண்டும்; விவசாயியின் வருமானம் பாதுகாக்கப்பட வேண்டும்; இளைஞர்களுக்கு நிலையான வேலை கிடைக்க வேண்டும்; குடும்பங்களின் சேமிப்பு அதிகரிக்க வேண்டும்; குழந்தைகளுக்கு தரமான கல்வியும் சுகாதாரமும் கிடைக்க வேண்டும்.

ஆனால் மக்கள் வாடகை, உணவு, கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசியச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கும்போது, அவர்களின் சேமிப்பு குறையும்போது, வேலைவாய்ப்பு பாதுகாப்பு இல்லாமல் போகும்போது, அதிக வட்டி விகிதங்கள் வீட்டுக் கடன் தவணைகளைக் கூட சுமையாக மாற்றும்போது, “ஜிடிபி 7.8 சதவிகிதம் வளர்ந்துவிட்டது” என்ற எண்ணிக்கை மட்டும் அவர்களின் வாழ்க்கையை மாற்றப்போவதில்லை. பொருளாதார வளர்ச்சி மக்களின் கைகளில் பணமாகவும், பாதுகாப்பான வேலைவாய்ப்பாகவும், அதிகமான வாங்கும் திறனாகவும், மேம்பட்ட பொது சேவைகளாகவும் வெளிப்படாவிட்டால், அந்த வளர்ச்சி யாருடைய வளர்ச்சி?

மோடி அரசு வெளியிட்டிருக்கும் தரவுகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை வெளிப்படையாக விளக்குமா? அடிப்படை ஆண்டு மாற்றம் ஏன் செய்யப்பட்டது, பழைய தரவுகள் ஏன் திருத்தப்பட்டன, அமைப்புசாரா துறையின் வளர்ச்சி எவ்வாறு மதிப்பிடப்பட்டது, பணவீக்கம் எவ்வாறு கணக்கில் எடுக்கப்பட்டது, குடும்ப நுகர்வு மற்றும் வேலைவாய்ப்பு போன்ற தரவுகளுடன் ஜிடிபி வளர்ச்சி ஏன் பொருந்தவில்லை என அடுத்தடுத்து முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு மோடி அரசு பதிலளிக்குமா? நிச்சயமாக அது நடக்காது.

அதற்கு பதிலாக புள்ளிவிவரங்களைப் பற்றி சந்தேகம் எழுப்புவது நாட்டுக்கு எதிரான குற்றச்செயலாக அறிவிக்கப்படும், அதனை முன்வைப்பவர்கள் திமாங்கி நக்சல்கள் என முத்திரை குத்தப்படுவார்கள். இன்று அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவின் பொருளாதாரம் உண்மையாக வளர்ந்தால் அதை மக்களிடம் சொல்ல புள்ளிவிவரங்களை அழகுபடுத்த வேண்டிய அவசியமே இருக்காது. தொழிலாளியின் வாழ்க்கையில் அது தெரியும்; விவசாயியின் வருமானத்தில் தெரியும்; சிறு வியாபாரியின் விற்பனையில் தெரியும்; கிராமப்புற நுகர்வில் தெரியும்; இளைஞர்களின் வேலைவாய்ப்பில் தெரியும்; குடும்பங்களின் சேமிப்பில் தெரியும். அந்த மாற்றங்கள் இல்லாமல், அரசின் கணக்குப் புத்தகத்தில் மட்டும் வளர்ச்சி தொடர்ந்து உயர்ந்துகொண்டிருந்தால், அது வளர்ச்சியின் வெற்றிக் கதை அல்ல; வளர்ச்சியைப் பற்றிய ஒரு பிரச்சாரக் கதை மட்டுமே.

உலகின் முன் இந்தியாவைப் பெரிய பொருளாதார சக்தியாகக் காட்டும் புள்ளிவிவரங்களால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. எண்ணிக்கையை மாற்றுவதன் மூலம் மோடி அரசால் தனது சாதனையை மாற்றிக் காட்டலாம்; ஆனால் அந்த எண்ணிக்கையால் மக்களின் வாழ்க்கையை மாற்ற முடியாது.

எறியும் நெருப்பைக் காகிதத்தைக் கொண்டு பொட்டலம் கட்டுவது போல புள்ளிவிவரங்களைத் திருத்துவதன் மூலம் மக்களின் கோபத்தை மறைத்துவிடலாம் என நினைக்கிறது மோடி அரசு.

  • அழகு

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன