காற்று மாசை மறைத்து மதவெறியைத் தூண்டும் பாஜக!
பட்டாசு வெடித்தால் காற்று சுத்தமாகுமா என்று ஒரு வேதியியல் மாணவனிடம் கேட்டால், காற்று சுத்தமாகும் என்று எந்த முட்டாள் சொன்னது எனத் திருப்பிக் கேட்பான். ஆனால், காவிக் கும்பலோ தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் தூய்மையடையும் என்பது முன்னோர்களின் வாக்கு; அதுவே நமது பண்பாடு. ஆகவே, அனைவரும் பட்டாசு வெடியுங்கள் என்று அறிவுரை வழங்குகிறது.
தலைநகர் டெல்லியில் தீபாவளி இரவன்று, உலகின் பல நகரங்களுடன் ஒப்பிட முடியாத அளவுக்குக் காற்று மாசடைந்திருந்தது. அதுமட்டுமின்றி, காற்று மாசின் அளவைக் கண்காணிப்பதற்காகப் பொருத்தப்பட்டிருந்த கருவிகளில் பெரும்பாலானவை, குறிப்பிட்ட நச்சு வாயுக்கள் மற்றும் துகள்கள் தொடர்பான தரவுகளைச் சேகரிக்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது திட்டமிட்டுச் செய்யப்பட்டதா அல்லது தொழில்நுட்பக் கோளாறால் நிகழ்ந்ததா என்ற கேள்விக்கு டெல்லி பாஜக அரசு இதுவரை எந்தப் பதிலையும் அளிக்கவில்லை. உண்மையில், தீபாவளிக்கு முன்பே தலைநகரில் காற்று மாசு குறித்த விவாதங்கள் தொடங்கிவிட்டன. ஆனால், மக்களின் சுகாதாரம் குறித்து அக்கறை காட்டாமல், வழக்கம்போலத் தனது காவி அரசியலையே முன்னிறுத்தியது பாஜக.
பட்டாசு வெடித்தால் நோய்கள் குணமாகும் என்று கூறினார் பாஜக அமைச்சர். பட்டாசு வெடிப்பதை எதிர்ப்பவர்கள் இந்து விரோதிகள் என்று முத்திரை குத்தினார் பாஜகவின் மேற்கு வங்கத் தலைவர். சுற்றுச்சூழல் மாசடைந்தால் அது தானாகவே சரியாகிவிடும்; கவலைப்படாமல் பட்டாசு வெடிக்கலாம் என்று அறிவுறுத்தினார் உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத். நெய்யில் விளக்கேற்றினால் அதிலிருந்து வெளிப்படும் ஒளி, அதைச் சுற்றியுள்ள காற்றைத் தூய்மைப்படுத்தும் என்று கூறினார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்.
பாஜக தலைமையோ இதற்கும் ஒருபடி மேலே சென்று, இஸ்லாமியப் பண்டிகைகளின்போது ஆடு, மாடு வெட்டப்படுவதால் தண்ணீர் மாசடைகிறதே, அப்போதெல்லாம் சுற்றுச்சூழல் மாசு குறித்துப் பேசாதவர்கள் தீபாவளியின்போது மட்டும் ஏன் பேசுகிறார்கள் என்று வெளிப்படையாகவே மதவெறியைத் தூண்டியது. இவ்வாறு தங்களது அரசியல் நோக்கங்களுக்காக அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளையும் முஸ்லிம் வெறுப்பையும் திட்டமிட்டுப் பரப்பி வருகிறது காவிக் கும்பல்.
ஆனால், அறிவியல் என்ன சொல்கிறது? பட்டாசு வெடிப்பதால் சல்பர் டை ஆக்சைடு, கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு உள்ளிட்ட நச்சு வாயுக்களும், மக்னீசியம், ஈயம், காட்மியம், தாமிரம் போன்ற கனிமத் துகள்களும் காற்றில் கலக்கின்றன. இவற்றுடன் நுண்ணிய திண்மத் துகள்களும் வெளியாகின்றன. அவைதான் PM2.5 (2.5 மைக்ரோமீட்டருக்கும் குறைவான விட்டமுடைய துகள்கள்), PM10 (10 மைக்ரோமீட்டருக்கும் குறைவான விட்டமுடைய துகள்கள்) என வகைப்படுத்தப்படுகின்றன. இவை காற்றில் கலந்து நுரையீரல் மற்றும் இதயத்திற்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
ஏற்கெனவே சுவாசிப்பதற்குத் தகுதியற்ற அளவுக்குக் காற்றின் தரம் மோசமடைந்துள்ள டெல்லியில், பட்டாசு வெடிப்பதால் நிலைமை மேலும் மோசமடையும் என்பதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், பட்டாசு வெடிப்பதற்குக் கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. இத்தகைய அறிவியல் உண்மைகளையெல்லாம் மறுக்க முடியாத பாஜக, பட்டாசு வெடிப்பதைப் பண்பாடு என்ற பெயரில் நியாயப்படுத்தி மக்களின் காதில் பூ சுற்றுகிறது.
மேலும், பட்டாசு வெடித்துத் தீபாவளி கொண்டாடுவது ஆதிகாலம் தொட்டுப் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையும் அல்ல. உண்மையில், இந்தியாவில் பட்டாசு என்பது தொடக்கத்தில் இருந்த ஒன்றல்ல. பதின்மூன்றாம் நூற்றாண்டில்தான் பட்டாசுகள் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்தன. முகலாயர் ஆட்சிக் காலத்தில் அரசவை நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், அரச குடும்பத் திருமணங்கள் போன்றவற்றில் வாணவேடிக்கைகள் நடத்தப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். 19, 20ஆம் நூற்றாண்டுகளில்தான் இந்தியாவில் பட்டாசுத் தொழில் தொடங்கப்பட்டது. கடந்த நாற்பதாண்டுகளாகத்தான் பொதுமக்கள் மத்தியில் பட்டாசு வெடித்துத் தீபாவளி கொண்டாடும் வழக்கம் பரவலடைந்துள்ளது.
குறிப்பாக, பெருநிறுவனங்களின் வணிக நலன்களுக்காகப் பெரும்பான்மையான மக்களை நுகர்வுக் கலாச்சாரத்திற்குள் இழுப்பதற்கான கருவிகளாகப் பண்டிகைகளை ஆட்சியாளர்களும் வணிக நிறுவனங்களும் அணுகி வருகின்றன. அந்த வகையில், தீபாவளி போன்ற பண்டிகைகள் நுகர்வுக் கலாச்சாரத்தின் மூலம் மக்களிடையே மேலும் பிரபலப்படுத்தப்பட்டன என்றால் அது மிகையல்ல. இந்த வரலாற்று உண்மைகளையெல்லாம் மறைத்துவிட்டு, பட்டாசு வெடிப்பதுதான் பாரதப் பண்பாடு என்று பாஜக கட்டுக்கதைகளைப் பரப்புகிறது.
பண்பாடு என்ற போர்வையில் பட்டாசு வெடிப்பதற்கு இவ்வளவு முட்டுக்கொடுக்கும் காவிக் கும்பல், தீபாவளியை ஒட்டி டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்களில் காற்றின் தரம் கடுமையாகச் சரிந்திருப்பது குறித்து மட்டும் வாய் திறக்கவில்லை.
தீபாவளிக்குப் பிறகு, தலைநகர் டெல்லியில் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்குக் காற்றின் தரக் குறியீடு 375ஐக் கடந்துள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு மையங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, ஒரு நாளைக்கு 11 முதல் 17 சிகரெட்டுகள் புகைப்பதால் உடலுக்குள் செல்லும் நச்சுப் பொருட்களுக்கு இணையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய காற்றைத்தான் டெல்லி மக்கள் தீபாவளியன்றும் அதற்கு அடுத்த நாளும் சுவாசித்துள்ளனர். குறிப்பாக, காற்றில் கலந்திருந்த நுண்துகள்களின் அளவு 1,000 µg/m³ முதல் சுமார் 5,000 µg/m³ வரை உயர்ந்திருந்தது.
உலக சுகாதார அமைப்போ, நாம் சுவாசிக்கும் காற்றில் PM2.5 துகள்களின் 24 மணி நேரச் சராசரி அளவு 15 µg/m³-ஐத் தாண்டக்கூடாது என்று பரிந்துரைக்கிறது. ஆனால், டெல்லியில் இதைவிடப் பல மடங்கு அதிகமான அளவில் நச்சுத் துகள்கள் காற்றில் கலந்திருந்தன. இது மக்களின் உடல்நலத்தில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை.
உதாரணமாக, காற்று மாசுபாட்டின் காரணமாக 2023ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் சுமார் 20 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக ஃபிக்கி (FICCI) அறிக்கை குறிப்பிடுகிறது. குறிப்பாக, PM2.5 துகள்கள்தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஆனால், இத்தகைய ஆபத்தான நிலைமையைக் குறித்து டெல்லி பாஜக அரசு எந்த அக்கறையும் காட்டவில்லை. மாறாக, டெல்லியில் காற்று மாசு ஏற்படுவதற்காகவே திட்டமிட்டு தீபாவளிக்கு முன்பு பஞ்சாபில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்பட்டதாகப் பாஜக அமைச்சர் கபில் மிஸ்ரா பேசியுள்ளார். இத்தகைய பேச்சிலிருந்தே, காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதில் டெல்லி பாஜக அரசு எந்த அளவுக்கு அக்கறை கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
இதற்கிடையில், காற்றில் உள்ள மாசுக் காரணிகளைக் கண்டறிவதற்காக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் பெரும்பாலான கண்காணிப்பு மையங்களில், திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரையிலான பல மணி நேரத்திற்கான PM2.5 துகள்களின் அளவீடுகள் விடுபட்டுள்ளன. அதேபோல், 253 மணி நேரத்திற்கான சல்பர் டை ஆக்சைடு (SO2) அளவீடுகளும், 221 மணி நேரத்திற்கான அம்மோனியா (NH3) அளவீடுகளும் பதிவாகவில்லை. ஒட்டுமொத்தமாக, டெல்லியில் செயல்படும் 59 கண்காணிப்பு நிலையங்களில் 45 நிலையங்களில் ஏதேனும் ஒரு மாசுக் காரணி தொடர்பான ஒரு மணி நேர அளவீடுகள் விடுபட்டிருந்தன.
இதையடுத்து, டெல்லி ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சௌரப் பரத்வாஜ், டெல்லி பாஜக அரசு ‘தரவுத் திருட்டில்’ ஈடுபட்டிருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். காற்று மாசின் அளவுகளைப் பொதுமக்கள் அறிந்துகொள்ள முடியாத வகையில், அவற்றை மறைப்பதற்காகவே இரவோடு இரவாகக் கண்காணிப்பு நிலையங்கள் மூடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்துக்களின் பண்டிகை என்ற போர்வையில் அறிவியலை மறுத்தும், வரலாற்றைத் திரித்தும் மக்களிடையே மதவெறியைத் தூண்டும் காவிக் கும்பல், மறுபுறத்தில் காற்று மாசுபாடு மிக மோசமான நிலையை எட்டியிருப்பதற்கான புள்ளிவிவரங்களையும் மறைத்து மக்களை ஏமாற்றியுள்ளது. மக்களின் உயிருக்கும் உடல்நலத்திற்கும் நேரடியாக அச்சுறுத்தலாக மாறியுள்ள காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பிலிருக்கும் அரசு, அதற்குப் பதிலாக அறிவியலையும் உண்மைகளையும் மறைத்து மதவெறி அரசியலை முன்னெடுப்பதிலேயே குறியாக இருக்கிறது.
- மாணிக்கம்
தகவல் ஆதாரம்
- https://smartcitiesmission.com/delhis-diwali-aqi-data-went-blank-at-the-worst-hour/
- https://www.hindustantimes.com/india-news/delhi-pollution-monitors-went-dark-as-aqi-surged-on-diwali-101794268023082.html
- https://indianexpress.com/article/political-pulse/bjp-rss-diwali-tradition-pollution-10961604/
