திருப்பரங்குன்றம்: காவி பாசிசத்தின் முன் தவெக – கூட்டணிக் கட்சிகளின் சரணாகதி அரசியல்!
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவு, ஒரு குறிப்பிட்ட இடத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கமான நீதிமன்றப் பிரச்சினை அல்ல. தமிழகத்தில் மதரீதியான பிளவுகளை உருவாக்கி, அதன் மூலம் தனது காவி பாசிச அரசியலை வலுப்படுத்தத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பலின் அரசியல் திட்டத்தின் ஒரு பகுதியே இது. இந்தத் திட்டத்தை முறியடிப்பதற்கான அரசியல் உறுதியும், மக்கள் திரட்டும் போராட்ட அணுகுமுறையும் இல்லாமல், நீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் சட்ட நடைமுறைகளுக்கும் பின்னால் ஒளிந்துகொள்வது காவி பாசிசத்திற்கு மறைமுகமாக வழிவிடுவதுதான்.
இந்தப் பிரச்சினையில் தவெகவின் நிலைப்பாடு என்ன? உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து விஜய் அரசு எந்த அரசியல் முடிவை எடுக்கப் போகிறது? தர்காவுக்கு அருகில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுக்குமா? இன்றைக்குப் பலரும் கேட்கவிரும்பும் இந்தக் கேள்விகளுக்கு நிச்சயமாக தவெக பதிலளிக்காது.
கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் தவெக இந்தக் கேள்விகளுக்கு வெளிப்படையான பதிலை அளிக்கவில்லை. இப்போது உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு வெளியாகியுள்ள நிலையிலும், கட்சியின் அதிகாரப்பூர்வ அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தவில்லை.
மௌனத்தின் பின்னால் ஒளியும் தவெக!
தவெகவின் இந்த மௌனம் தற்செயலானதல்ல. கடந்த ஆண்டு இதே பிரச்சினை எழுந்தபோதும் தவெக வெளிப்படையாகத் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. இப்போது ஆட்சிக்கு வந்த பிறகும் அதே அணுகுமுறையைத்தான் கடைப்பிடிக்கிறது. அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், ஏற்கெனவே பின்பற்றப்பட்ட நடைமுறையே தொடரும் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால், இது வெறுமனே நிர்வாக நடைமுறை சார்ந்த பதில் மட்டுமே. இது இந்துமதவெறி சக்திகள் திட்டமிட்டு உருவாக்கியிருக்கும் அரசியல் நெருக்கடி. அதில் அரசாங்கம் யாருடைய பக்கம் நிற்கிறது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
உச்சநீதிமன்றம் நவம்பர் 20 அன்று பிறப்பித்த இடைக்கால உத்தரவு, நவம்பர் 24 அன்று மட்டும் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் தீபம் ஏற்ற அனுமதித்துள்ளது. பொதுமக்கள் மலைக்குச் செல்லக் கூடாது; கோவில் நிர்வாகத்தினரும் அரசு அதிகாரிகளும் மட்டுமே செல்ல வேண்டும்; தேவைப்பட்டால் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் உதவியைப் பயன்படுத்தலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு நவம்பர் 22 அன்று சீராய்வு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறது. ஆனால், அந்த மனு நவம்பர் 23 அன்று விசாரணைக்கு வரவில்லை. மறுபுறம், உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்குத் தடை எதுவும் கிடைக்காத நிலையில், அதை நிறைவேற்ற வேண்டிய நிர்வாக நெருக்கடி அரசுக்கு இருக்கிறது. இதற்கிடையில் விஜய், தலைமை வழக்கறிஞர் மற்றும் டிஜிபியுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். ஆனால், இந்தப் பிரச்சினையில் அரசின் அரசியல் நிலைப்பாடு என்ன என்பதை மக்களிடம் விளக்கவில்லை.
இங்கேதான் தவெகவின் அரசியல் சந்தர்ப்பவாதம் அம்பலமாகிறது. ஒருபுறம் மதச்சார்பற்ற சமூகநீதி அரசு என்று தன்னை முன்னிறுத்திக்கொள்கிறது. மறுபுறம், மதவெறி சக்திகள் உருவாக்கியிருக்கும் நெருக்கடியை எதிர்கொள்ள அரசியல் உறுதியின்றி சட்ட ஆலோசனைகளுக்குள் முடங்கிக் கிடக்கிறது. அரசு எடுக்க வேண்டிய முடிவைத் தானே அறிவிக்காமல், சட்டத்தின் பெயரால் தனது அரசியல் பொறுப்பிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறது.
கூட்டணிக் கட்சிகளின் முரண்பாடுகளும் சரணாகதியும்!
தவெகவின் கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாடுகளும் இந்தப் பிரச்சினையில் அம்பலமாகியுள்ளன. அவற்றில் முதன்மையானது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் அணுகுமுறை.
நவம்பர் 21 அன்று வெளியிட்ட அறிக்கையில் திருமாவளவன், உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாட்டில் விசிகவுக்கு “துளியும் உடன்பாடு இல்லை” என்றும், “இதனை நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதே எமது நிலைப்பாடு” என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஆனால், அதே அறிக்கையில் மாவட்ட ஆட்சியர் அல்லது உயர் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை மீற முடியாத நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருப்பதால், அதை நடைமுறைப்படுத்த முயன்றால் அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இதற்குப் பிறகு, அந்த அறிக்கை தீபம் ஏற்றலாம் என்ற பொருள்படும்படி அமைந்ததற்கு வருந்துவதாகவும், “மதவெறிக்கும்பலின் வெற்றிக் களியாட்ட வன்முறைக்கு இடமளித்துவிடக்கூடாது” என்ற கவலையில்தான் அவ்வாறு கூறியதாகவும் விளக்கம் அளித்தார்.
திருமாவளவனின் இந்த விளக்கத்தில் உள்ள அரசியல் முரண்பாடு தெளிவானது. ஒருபுறம் உத்தரவை நடைமுறைப்படுத்தக் கூடாது என்கிறார். மறுபுறம், நடைமுறைப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள் என்கிறார். நீதிமன்ற உத்தரவை எதிர்ப்பது என்றால், அதை நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதற்கான அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அதற்குப் பதிலாக, அதிகாரிகள் உத்தரவை நிறைவேற்றும் சூழலை ஏற்றுக்கொண்டு, அதனால் ஏற்படக்கூடிய வன்முறையை மட்டும் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்வது எதிர்ப்பாகாது.
காவி பாசிஸ்டுகள் நடத்தும் அரசியல் தாக்குதலுக்கு எதிராகத் தெளிவான அரசியல் போராட்டத்தை முன்னெடுப்பதற்குப் பதிலாக, அவர்கள் உருவாக்கும் நெருக்கடியை எப்படிச் சமாளிப்பது என்ற நிர்வாகப் பார்வைக்குள் விசிக சுருங்கிவிட்டது. மதவெறிக் கும்பலின் வெற்றிக் களியாட்டத்தைத் தடுக்க வேண்டுமானால், அந்தக் கும்பலின் அரசியல் திட்டத்தையே முறியடிக்க வேண்டும். அதைச் செய்யாமல், வெற்றிக் களியாட்டம் நடக்கும்போது வன்முறை மட்டும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று கவலைப்படுகிறது. இவை திருமாவளவனின் அரசியல் சந்தர்ப்பவாதத்தைத் தெளிவாகக் காட்டிக் கொடுக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூரின் அறிக்கை இன்னும் ஒருபடி மேலே செல்கிறது. அவர், “முதலமைச்சர் விஜய் தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி அரசு திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நல்ல முடிவு எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அரசின் முடிவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முழு ஆதரவு அளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இதன் பொருள் என்ன? அரசு எந்த முடிவை எடுத்தாலும் காங்கிரஸ் ஆதரிக்கும் என்பதுதான். நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரசு உறுதியான முடிவெடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தவில்லை. தர்காவுக்கு அருகில் தீபம் ஏற்றுவதால் ஏற்படப்போகும் அரசியல் விளைவுகள் குறித்து எச்சரிக்கையும் விடுக்கவில்லை. மாறாக, அரசின் முடிவுக்கு முழு ஆதரவு என்ற பெயரில் தனது அரசியல் பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறது. மதச்சார்பற்ற கூட்டணி என்று பெயர் சூட்டிக்கொள்வதால் மட்டும் இந்துமதவெறி அரசியலை எதிர்க்கும் கடமையிலிருந்து விடுபட்டுவிட முடியாது.
இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடுகளிலும் இதே வரம்பு வெளிப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நியாயமற்றது என்றும், தமிழக அரசு உடனடியாக சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மதவெறி சக்திகளை எதிர்கொண்டு சமூக அமைதி, மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை வரவேற்று, சிறந்த வழக்கறிஞர்களைக் கொண்டு வாதாடி பாரம்பரிய தீபம் ஏற்றும் நடைமுறையைப் பாதுகாக்க வேண்டும் என்றும், வகுப்புவாத சக்திகளின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இரு கட்சிகளும் உத்தரவை எதிர்த்து நிற்கின்றன. ஆனால், அவற்றின் அரசியல் செயல்திட்டம் எங்கே? மக்களைத் திரட்டி இந்த மதவெறி அரசியலை எதிர்கொள்வதற்கான போராட்ட அறிவிப்பு எங்கே? நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வதும், சிறந்த வழக்கறிஞர்களைக் கொண்டு வாதாடுவதும் மட்டுமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாகிவிடாது. வகுப்புவாத சக்திகளை எதிர்கொள்வது தொடர்பான பொதுவான அறிக்கைகளைக் கடந்து, நடைமுறையில் மக்கள் இயக்கத்தை உருவாக்குவதற்கான முன்முயற்சிகள் அவசியம். திருப்பரங்குன்றம் பகுதியில் செல்வாக்குடன் இருக்கும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஓராண்டில் எத்தனை முறை மக்களைச் சந்தித்திருக்கிறது, காவி பாசிசக் கும்பலின் மதவெறி அரசியலை அம்பலப்படுத்தி அவர்களைத் தனிமைப்படுத்த என்ன முயற்சிகலை அந்தப் பகுதியில் மேற்கொண்டிருக்கிறது. ஒன்றுமில்லை.
திமுகவின் அறிக்கை அரசியலும் சட்டவாதத்தின் வரம்புகளும்!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அணுகுமுறையும் இதே வரம்புக்குள் நிற்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவு வெளியான பிறகு, “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசு கடுமையாகப் போராடி, தமிழ்நாட்டின் அமைதியையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டியது. தவெக அரசு அடுத்தகட்டமாக என்ன சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது என்பதை முதலமைச்சர் அவர்கள் விளக்க வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.
திமுக ஆட்சியில் இருந்தபோது இந்தப் பிரச்சினையில் அரசு எடுத்த நிலைப்பாட்டைத் தனது சாதனையாக முன்னிறுத்துவது ஒருபுறம் இருக்கட்டும். இப்போது தமிழகத்தில் ஆட்சியில் இல்லாத திமுக, தவெக அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான அரசியல் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறதா? மக்களைத் திரட்டி மதவெறி சக்திகளுக்கு எதிராகப் போராடியிருக்கிறதா? இல்லை. அறிக்கைகளையும் சட்ட நடவடிக்கைகளுக்கான கோரிக்கைகளையும் வெளியிடுவதோடு நின்றுவிட்டது. தாங்கள் அதிகாரத்தில் இருந்த போதே இதனைச் செய்யாதவர்கள் இப்போது செய்வார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும். திமுகவைப் பொருத்தவரை தவெக தவறு செய்யும் வரைக் காத்துக் கொண்டிருக்கிறது. தவெகவின் தவறின் காரணமாக காவி பாசிச சக்திகள் செல்வாக்கு உயர்ந்தாலும் பரவாயில்லை, அந்தத் தவறைத் தனது அரசியல் நலனுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறது.
இவ்வாறு கூட்டணிக் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் ஒவ்வொன்றும் தங்களுக்குரிய அறிக்கைகளை வெளியிட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்கின்றன. ஆனால், இந்தப் பிரச்சினையின் மையமான அரசியல் நோக்கத்தை எதிர்கொள்ள யாரும் தயாராக இல்லை. தர்காவுக்கு அருகில் தீபம் ஏற்றுவதை ஒரு மத உரிமைப் பிரச்சினையாக மாற்றி, அதன் மூலம் இந்து – முஸ்லிம் மக்களிடையே மோதலை உருவாக்குவதுதான் காவி பாசிஸ்டுகளின் திட்டம். அந்தத் திட்டத்தை முறியடிப்பதற்கான போராட்டத்தை முன்னெடுக்காமல், நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவுக்காகக் காத்திருப்பது அவர்களுக்குச் சாதகமான அரசியல் சூழலையே உருவாக்கும்.
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அடிபணிவதுதான் அரசியலா?
இங்கே ஒரு அடிப்படையான அரசியல் உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கிவிட்டால், அது எந்த அரசியல் விளைவுகளை ஏற்படுத்தினாலும் அதனை அப்படியே ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அணுகுமுறை ஜனநாயகப் போராட்டங்களுக்கு எதிரானது. நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல. அவற்றை எதிர்த்து சட்டப் போராட்டங்களை நடத்துவதற்கும், மக்கள் மத்தியில் அதன் அரசியல் விளைவுகளை அம்பலப்படுத்துவதற்கும், ஜனநாயக வழியில் எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் உரிமை உள்ளது. தங்களை முற்போக்கு ஜனநாயக சக்தி எனக் கூறிக்கொள்ளும் எந்த அரசியல் கட்சியும் இதனை முன்னெடுப்பதில்லை.

ஆனால் காவி பாசிஸ்டுகள் தங்களது மதவெறி அரசியலுக்காக உச்சநீதிமன்ற உத்தரவுகளை காலில் போடு மிதிப்பதைப் பலமுறை செய்திருக்கிறார்கள். இதற்கு முக்கியமான உதாரணம் சபரிமலைப் பிரச்சினை. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் 2018-இல் தீர்ப்பளித்தபோது, பாஜகவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளும் அந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா, உச்சநீதிமன்றத் தீர்ப்பை வெளிப்படையாக எதிர்த்தார். கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் பெரும் போராட்டங்களையும் வன்முறைச் சம்பவங்களையும் முன்னெடுத்தன. அன்றைய கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு, உச்சநீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முயற்சிக்கக் கூட இல்லை. அந்த அளவிற்கு அரசியல்ரீதியாகவும், சமூக ரீதியாகவும் காவி பாசிஸ்டுகள் நெருக்கடியை உருவாக்கினார்கள்.
காவி பாசிஸ்டுகள் தங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும்போது நீதிமன்றத்தின் அதிகாரத்தை முன்னிறுத்துகிறார்கள்; தங்களுக்குப் பாதகமான தீர்ப்பு வரும்போது அதையே எதிர்க்கிறார்கள். நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது அவர்களுக்கு ஒரு அரசியல் ஆயுதம் மட்டுமே. ஆனால், இங்குள்ள மதச்சார்பற்ற கட்சிகளோ நீதிமன்றத் தீர்ப்பு வந்துவிட்டால் அதற்கு எதிராக அரசியல் ரீதியாக நிற்பதற்கே தயங்குகின்றன.
சபரிமலைப் பிரச்சினையில் தீர்ப்பை எதிர்த்து இந்துத்துவ சக்திகள் களத்தில் இறங்கிப் போராடியதைப் பார்த்த பிறகும், திருப்பரங்குன்றத்தில் அதேபோன்ற மதவெறி அரசியலை எதிர்கொள்ள மக்கள் இயக்கத்தை உருவாக்குவதற்கு இந்தக் கட்சிகள் தயங்குகின்றன. நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதோடு தங்களுடைய கடமை முடிந்துவிட்டதாக நினைக்கின்றன.
காவி பாசிசத்தை வீழ்த்த வேண்டுமானால் களத்தில் இறங்க வேண்டும்!
திருப்பரங்குன்றம் பிரச்சினை தனித்த ஒரு கோவிலின் வழிபாட்டு உரிமை தொடர்பான பிரச்சினை அல்ல. தமிழகத்தில் இந்து – முஸ்லிம் மக்களிடையே மதரீதியான பிளவுகளை உருவாக்கி, அதனைத் தனது தேர்தல் அரசியலுக்கும் பாசிசத் திட்டத்திற்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பலின் நோக்கம். இத்தகைய அரசியல் திட்டத்தை நீதிமன்றத்தில் மட்டும் நின்று முறியடித்துவிட முடியாது.
இன்று உச்சநீதிமன்றம் ஒருநாள் மட்டும் தீபம் ஏற்ற அனுமதித்துள்ளது. நாளை இதையே முன்னுதாரணமாகக் காட்டி புதிய கோரிக்கைகளை முன்வைத்து, அடுத்தடுத்த மத மோதல்களை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடைபெறும். ஒருமுறை மட்டும் அனுமதி என்றும், இது நிரந்தர உரிமைக்கான அங்கீகாரம் அல்ல என்றும் நீதிமன்றம் கூறியிருப்பது மட்டும் இந்த அரசியல் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிடாது. நீதிமன்றத்தின் வரம்புகளைத் தாண்டி அரசியல் களத்தில் இந்துத்துவ சக்திகள் செயல்படுகின்றன என்பதுதான் உண்மை.
இந்நிலையில், நவம்பர் 24 அன்று தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளையொட்டி திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5,618 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் மலைக்குச் செல்லவும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதவெறி சக்திகள் உருவாக்கிய பிரச்சினையை எதிர்கொள்வதற்காக இவ்வளவு பெரிய போலீஸ் படையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், அந்தப் பிரச்சினையை உருவாக்கிய அரசியல் சக்திகளின் நோக்கத்தை மக்களிடம் அம்பலப்படுத்தி, மதநல்லிணக்கத்தையும் மக்கள் ஒற்றுமையையும் பாதுகாப்பதற்கான மக்கள் இயக்கத்தை உருவாக்குவதில் அரசியல் கட்சிகள் எங்கே நிற்கின்றன?
மதவெறி சக்திகளுக்கு எதிரான போராட்டம் என்பது வெறுமனே அறிக்கைகளை வெளியிடுவதோ, நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்வதோ அல்ல. தொழிலாளர்கள், விவசாயிகள், ஜனநாயக சக்திகள், மதச்சார்பற்ற அமைப்புகள், சிறுபான்மை மக்கள் என அனைத்து உழைக்கும் மக்களையும் ஒன்றுதிரட்டி, காவி பாசிசத்தின் பிளவுவாத அரசியலுக்கு எதிராகத் திட்டமிட்ட மக்கள் இயக்கத்தைக் கட்டியமைக்க வேண்டும். மதவெறிக் கும்பலின் மிரட்டல்களுக்கும் வன்முறை முயற்சிகளுக்கும் அஞ்சாமல், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் வீதிகளிலும் மக்கள் மத்தியிலும் உறுதியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
தவெக அரசு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்திருப்பது மட்டும் போதாது. சர்ச்சைக்குரிய இடத்தில் தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது என்ற தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அதேபோல், விசிக, காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் தவெக அரசுக்கு அழுத்தம் கொடுத்து, மக்கள் ஒற்றுமையைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இதனை இவர்கள் நிச்சயம் செய்ய மாட்டார்கள்.
காவி பாசிஸ்டுகள் ஒவ்வொரு பிரச்சினையையும் தங்களது அரசியல் ஆதாயத்திற்கான போர்க்களமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களை எதிர்க்க வேண்டிய கட்சிகளோ ஒவ்வொரு பிரச்சினையையும் சட்டப் பிரச்சினையாகச் சுருக்கி, நீதிமன்றங்களின் முடிவுக்காகக் காத்திருக்கின்றன. இந்த அரசியல் அணுகுமுறை காவி பாசிசத்தைத் தோற்கடிக்காது; மாறாக, அதன் வளர்ச்சிக்கே வழிவகுக்கும்.
காவி பாசிசத்தை எதிர்ப்பது என்பது அதன் ஒவ்வொரு அரசியல் சதியையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, மக்களை அணிதிரட்டி, களத்தில் நின்று போராடுவதன் மூலமே சாத்தியமாகும். சட்டப் போராட்டம் என்பது மக்கள் போராட்டத்திற்கு மாற்றாகிவிட முடியாது. இந்த அடிப்படை உண்மையை உணராமல், நீதிமன்றங்களின் பின்னால் ஒளிந்துகொள்ளும் கட்சிகளால் காவி பாசிசத்தை முறியடிக்க முடியாது!
- அழகு

