திருப்பரங்குன்றம்: மதவெறித் தீயை மூட்டும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு!
தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தையும், மக்களின் ஒற்றுமையையும் சீர்குலைத்து, மதவெறி அரசியலைக் காலூன்றச் செய்வதற்காகவே திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் பிரச்சினையை காவி பாசிசக் கும்பல் திட்டமிட்டு முன்னெடுத்து வருகிறது. காவி பாசிசக் கும்பலின் பிரதிநிதியான இராம ரவிக்குமார் என்ற தனிநபரின் மத உரிமை என்ற போர்வையில் தொடங்கப்பட்ட இந்த வழக்கு, இன்று தமிழ்நாட்டின் சமூக அமைதிக்கும் மத நல்லிணக்கத்திற்கும் எதிரான, மோதலை உருவாக்குவதற்கான ஆயுதமாக மாற்றப்பட்டுள்ளது. நவம்பர் 20 அன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவு, காவி பாசிசக் கும்பலின் கலவர அரசியலுக்கு நீதிமன்றத்தின் மூலமாகவே வழியமைத்துக் கொடுத்திருக்கிறது.
நவம்பர் 24 அன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சர்ச்சைக்குரிய கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு ஒருமுறை மட்டும் அனுமதி வழங்கியுள்ள உச்சநீதிமன்றம், அதே நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள முடிவுகளுக்கும் உத்தரவுகளுக்கும் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அதாவது, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்திவைத்துவிட்டு, அந்தத் தீர்ப்பின் மூலம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை மட்டும் நிறைவேற்றுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இது என்ன வகையான நீதி? ஒரு குறிப்பிட்ட இடத்தில் தீபம் ஏற்றுவதற்கான மரபு இருக்கிறதா, அந்தக் கல் தூண் உண்மையிலேயே தீபத்தூண்தானா, அங்கு தீபம் ஏற்றுவதற்கு யாருக்கு உரிமை இருக்கிறது, கோவில் நிர்வாகத்தின் முடிவுக்கு என்ன மதிப்பு என்பன போன்ற அடிப்படையான கேள்விகளுக்குத் தீர்வு காணாமல், அந்த இடத்தில் தீபம் ஏற்றுவதற்கு மட்டும் அனுமதி வழங்குவதன் நோக்கம் என்ன?
இந்த வழக்கின் பின்னணியையும், உச்சநீதிமன்றத்தின் அணுகுமுறையையும் ஆராய்ந்தால், இது வெறுமனே தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு அல்ல என்பதும், மதவெறி அரசியலைத் திட்டமிட்டு வளர்ப்பதற்கான நடவடிக்கை என்பதும் தெளிவாகப் புரியும்.
ஒரு நூற்றாண்டு காலமாகத் தொடரும் வழக்குகளின் பின்னணி!
திருப்பரங்குன்றம் மலை என்பது இந்துக்களின் வழிபாட்டுத் தலமாக மட்டுமல்லாமல், சமணர்களின் வரலாற்றுச் சின்னங்களையும், முஸ்லிம்களின் வழிபாட்டிடமான சிக்கந்தர் பாதுஷா தர்காவையும் கொண்டுள்ள பகுதியாகும். பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களின் வழிபாட்டு உரிமைகளும், வரலாற்று அடையாளங்களும் ஒன்றிணைந்துள்ள இந்த மலையில், நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைகளை மாற்றுவதற்கான முயற்சிகளே தற்போதைய சர்ச்சைக்குக் காரணமாக அமைந்துள்ளன.
1920ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம், மலையின் உரிமை தொடர்பாக வழக்குத் தொடர்ந்தது. 1923ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில், மலையின் பெரும்பகுதி கோவிலுக்குச் சொந்தமானது என்றும், மலை உச்சிப் பகுதி, தர்கா அமைந்துள்ள பகுதி, நெல்லித்தோப்பு மற்றும் தர்காவுக்குச் செல்லும் படிக்கட்டுகள் ஆகியவை முஸ்லிம்களின் உரிமைக்கு உட்பட்டவை என்றும் வரையறுக்கப்பட்டது. பின்னர், 1931ஆம் ஆண்டு பிரிவி கவுன்சிலும் இந்த உரிமை தொடர்பான தீர்ப்பை உறுதிப்படுத்தியது.
இந்த வரலாற்றுப் பின்னணியில், மலையில் எந்த இடத்தில் தீபம் ஏற்றுவது என்பது ஏற்கெனவே பலமுறை சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. 19ஆம் நூற்றாண்டிலும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, அத்தகைய வழக்கம் இல்லை என்பதையும், இதனால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பதையும் சுட்டிக்காட்டி அதிகாரிகள் அந்த முயற்சிகளைத் தடுத்துள்ளனர்.
1994ஆம் ஆண்டிலும் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கான முயற்சி நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. 1996ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, மலை உச்சியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் அல்லாமல், உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு அருகிலுள்ள தீப மண்டபத்தில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்ற நடைமுறை நிலைநாட்டப்பட்டது.
அதன்பிறகு பல ஆண்டுகளாகக் கார்த்திகை தீபம் அங்குதான் ஏற்றப்பட்டு வருகிறது. அதாவது, இந்துக்களின் வழிபாட்டு நடைமுறையில் எந்தக் குறையும் இல்லை. அவர்களுடைய வழிபாட்டு உரிமையும் மறுக்கப்படவில்லை. கோவிலின் மரபுப்படியான வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த நடைமுறையை மாற்றி, தர்காவுக்கு அருகிலுள்ள கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துத்தான் தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இராம ரவிக்குமார் ஒட்டுமொத்த இந்துக்களின் பிரதிநிதியா?
2025ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில், இராம ரவிக்குமார் உள்ளிட்டோர் மலை உச்சிக்கு அருகில், தர்காவிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினர்.
இராம ரவிக்குமாரின் கோரிக்கையை கோவில் நிர்வாகம் நிராகரித்தது. ஏனெனில், அந்த இடத்தில் தீபம் ஏற்றுவது கோவிலின் வழக்கமான நடைமுறை அல்ல. கோவிலின் ஆகம விதிகளின்படியும், நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையின்படியும் உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு அருகிலுள்ள தீப மண்டபத்தில்தான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.
ஆனால், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் 2025 டிசம்பர் 1 அன்று வழங்கிய தீர்ப்பில், தீபத்தூண் என்று அவர் அடையாளப்படுத்திய அந்தக் கல் தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என்று கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, டிசம்பர் 3 அன்று கோவில் நிர்வாகம் அந்த உத்தரவைச் செயல்படுத்தாத நிலையில், இராம ரவிக்குமார் உள்ளிட்ட பத்து பேரை மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று தீபம் ஏற்றுவதற்கும் அனுமதி வழங்கினார். ஆனால், மாவட்ட நிர்வாகத்தின் தடை உத்தரவால் அந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வும், 2026 ஜனவரி 6 அன்று தனி நீதிபதியின் உத்தரவை உறுதிப்படுத்தியது. அதேநேரத்தில், பொதுமக்கள் அனைவரும் அங்கு செல்ல அனுமதிக்காமல், கோவில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிட்ட குழுவினர் மட்டுமே தீபம் ஏற்ற வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர், போலீஸ் மற்றும் தொல்லியல் துறையின் மேற்பார்வையில் இந்த நடவடிக்கை நடைபெற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழநாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இராம ரவிக்குமார் தரப்பிலும் ஒரு பொதுநல வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசு, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தர்கா நிர்வாகம் ஆகியவை தங்களது தரப்பு வாதங்களை முன்வைத்தன.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, சர்ச்சைக்குரிய தூணில் தீபம் ஏற்றுவதற்கு எந்தவிதமான நிறுவப்பட்ட மரபும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். கோவில் அர்ச்சகர்களே ஆகம விதிகளின்படி உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு அருகிலுள்ள இடத்தில்தான் தீபம் ஏற்றப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர். அப்படியிருக்கும்போது, இல்லாத ஒரு மரபை நீதிமன்றம் புதிதாக உருவாக்க முடியாது என்பதே அரசின் வாதமாக இருந்தது.
மேலும், இந்தக் கல் தூண் தீபம் ஏற்றுவதற்காக அமைக்கப்பட்ட தூண் என்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை என்றும், அது ஒரு நில அளவைக் குறிக்கும் தூணாக இருக்கக்கூடும் என்றும் மாவட்ட நிர்வாகம் வாதிட்டது. இதேபோன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நில அளவைத் தூண்களுக்கெல்லாம் மத அடையாளம் கொடுக்கும் ஆபத்தை இந்தத் தீர்ப்பு உருவாக்கும் என்றும் அரசு எச்சரித்தது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே, நூறு ஆண்டுகளாக ஒரு நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வரும்போது அதை ஏன் மாற்ற வேண்டும் என்ற கேள்வியை எழுப்பினார். தர்கா அமைந்துள்ள மலை உச்சிப் பகுதியையே பொதுவான தீபம் ஏற்றும் இடமாகக் கருதுவது தவறு என்றும் அவர் வாதிட்டார்.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைச் சட்டத்தின் 28(1) பிரிவின்படி, கோவிலின் அறங்காவலர் அதன் நிறுவப்பட்ட வழக்கங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு ஏற்பவே கோவிலை நிர்வகிக்க வேண்டும். பிரிவு 63(இ)-ன்படி, வழிபாட்டு நடைமுறைகள் தொடர்பான சர்ச்சைகளை உரிய ஆதாரங்களின் அடிப்படையில் இணை ஆணையர் விசாரித்து முடிவு செய்ய முடியும். இத்தகைய சட்டப்பூர்வமான நடைமுறைகளையும் அரசு தனது வாதத்தில் சுட்டிக்காட்டியது.
ஆனால், இந்த வாதங்கள் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, சர்ச்சைக்குரிய இடத்தில் ஒருமுறை தீபம் ஏற்றவும் அனுமதி வழங்கியுள்ளது. அதேநேரத்தில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் இடைக்காலத்தில் நிறுத்திவைத்துள்ளது.
தீர்ப்பில் உள்ள முரண்பாடு: ஒரே நேரத்தில் தடையும் அனுமதியும்!
நவம்பர் 20 அன்று நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு வழங்கிய உத்தரவுதான் இந்த விவகாரத்தில் மிக முக்கியமானது.
உயர்நீதிமன்றத்தின் ஜனவரி 6ஆம் தேதி தீர்ப்பில் இடம்பெற்றுள்ள முடிவுகளையும் உத்தரவுகளையும் அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை நிறுத்திவைப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது. வழக்கின் அடிப்படையான கோரிக்கைகளான மத வழிபாட்டு உரிமை, வழக்கமான மரபு, கோவில் நிர்வாகத்தின் அதிகாரம், முந்தைய நீதிமன்றத் தீர்ப்புகளின் தாக்கம் ஆகியவற்றை இந்த இடைக்கால நிலையில் விசாரித்து முடிவு செய்யத் தேவையில்லை என்றும் கூறியது. ஆனால், இதற்கு அடுத்ததாகவே, நவம்பர் 24 அன்று அந்தக் கல் தூணில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த அனுமதி ஒரு தற்காலிக ஏற்பாடு மட்டுமே என்றும், இதன் மூலம் அங்கு தீபம் ஏற்றுவதற்கான மரபு, மத உரிமை அல்லது சொத்துரிமை எதுவும் அங்கீகரிக்கப்படவில்லை என்றும் உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. இந்த அனுமதியை எதிர்காலத்தில் உரிமை கோருவதற்கான முன்னுதாரணமாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் கூறியுள்ளது.
அப்படியானால், அடிப்படை உரிமையே இன்னும் நிரூபிக்கப்படாத நிலையில், வழக்கின் இறுதித் தீர்ப்பும் வழங்கப்படாத நிலையில், ஒரு தனிநபரின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு மட்டும் நீதிமன்றம் ஏன் இத்தனை அவசரம் காட்ட வேண்டும்?
தீபம் ஏற்றுவதற்கான மரபு இருக்கிறதா, இல்லையா என்பதைத் தீர்மானிக்க நீதிமன்றத்திற்கு அவகாசம் தேவைப்படுகிறது. ஆனால், அந்த மரபு தொடர்பான உரிமைக் கோரிக்கையை முன்வைத்தவர்களுக்கு இந்த ஆண்டே தீபம் ஏற்றுவதற்கான வாய்ப்பை வழங்குவதில் மட்டும் அவசரம் காட்டப்படுகிறது. இந்த அணுகுமுறை எந்த வகையில் நியாயமானது?
ஒருமுறை தீபம் ஏற்றுவதால் எந்த உரிமையும் உருவாகாது என்று நீதிமன்றம் கூறுவது சட்டரீதியான விளக்கமாக இருக்கலாம். ஆனால், அதன் அரசியல் மற்றும் சமூக விளைவுகளை இவ்வாறு தனித்துப் பிரித்துப் பார்க்க முடியாது.
நாளை அந்த இடத்தில் தீபம் ஏற்றப்பட்டுவிட்டால், அதைக் காவி பாசிச அமைப்புகள் தங்களது வெற்றியாகக் கொண்டாடும். இதுவரை அந்த இடத்தில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி இல்லை என்ற நடைமுறையை உடைத்துவிட்டோம் என்று பிரச்சாரம் செய்யும். நீதிமன்றமே அனுமதி அளித்துவிட்டது என்று கூறி, தங்களது மதவெறி அரசியலுக்குத் தீனிபோடும். நீதிமன்றத்தின் விளக்கத்தைவிட, அங்கு தீபம் ஏற்றப்பட்ட காட்சியே அவர்களது அரசியலுக்கான முக்கியமான பிரச்சாரப் பொருளாக மாறும்.
இதனை உச்சநீதிமன்றத்தால் புரிந்துகொள்ள முடியாதா? நீதிமன்றத்தின் ஓர் உத்தரவு எத்தகைய சமூக, அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர முடியாதா?
கலவரம் ஏற்பட்டாலும் தீபம் ஏற்றுவதுதான் முக்கியமா?
உச்சநீதிமன்றத்தின் உத்தரவில் இடம்பெற்றுள்ள மற்றொரு அம்சம் இதைவிடவும் ஆபத்தானது. தீபம் ஏற்றுவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைக்க வேண்டும் என்றும், மதுரை மாநகர போலீஸ் ஆணையர் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், மாநில அரசின் கோரிக்கையின் பேரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையையும் (CRPF) பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதாவது, இந்த இடத்தில் தீபம் ஏற்றுவதால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படக்கூடும் என்ற அச்சம் இருந்தாலும், அதனைச் சமாளிக்கப் பாதுகாப்புப் படைகளைப் பயன்படுத்தியாவது தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் அணுகுமுறையாக இருக்கிறது.
மேலும், பொதுமக்கள் யாரும் அந்த இடத்திற்குச் செல்லக் கூடாது, ஊர்வலம் நடத்தக் கூடாது, பொதுக்கூட்டம் நடத்தக் கூடாது, முழக்கங்கள் எழுப்பக் கூடாது என்று பல்வேறு கட்டுப்பாடுகளையும் நீதிமன்றம் விதித்துள்ளது. தர்காவின் வழக்கமான வழிபாடுகளுக்கும், அங்கு செல்வதற்கான உரிமைக்கும் எந்தவித இடையூறும் ஏற்படக் கூடாது என்றும் கூறியுள்ளது.
இங்கே எழும் கேள்வி மிக எளிமையானது. ஒரு இடத்தில் வழக்கமாகத் தீபம் ஏற்றப்படுவதில்லை; அங்கு தீபம் ஏற்றுவதற்கு உரிமை இருக்கிறதா என்பதே நீதிமன்றத்தில் இன்னும் விசாரணையில் உள்ளது; அந்த இடத்தில் தீபம் ஏற்றுவது மத நல்லிணக்கத்தையும் சட்டம் ஒழுங்கையும் பாதிக்கும் அபாயம் இருக்கிறது. இத்தனை அம்சங்களும் இருக்கும்போது, இந்த ஆண்டு மட்டும் அந்த இடத்தில் தீபம் ஏற்றியே தீர வேண்டும் என்ற அவசியம் என்ன?
உச்சிப்பிள்ளையார் கோவில் அருகிலுள்ள வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றுவதன் மூலம் இந்துக்களின் வழிபாட்டு உரிமை முழுமையாகப் பாதுகாக்கப்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் தர்காவிற்கு அருகில் தீபம் ஏற்றாமல் இருந்துவிட்டால் யாருடைய வழிபாட்டு உரிமையும் பறிபோய்விடாது. ஆனால், நீதிமன்றத்தின் அனுமதியைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் இந்தப் புதிய மோதல், பல ஆண்டுகளாக நிலவிவரும் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும்.
எனவே, இங்கு பிரச்சினை தீபம் ஏற்றுவதற்கான உரிமை அல்ல. தீபம் ஏற்றுவதற்கு எந்தத் தடையும் இல்லாத நிலையில், ஏற்கெனவே வழக்கத்தில் இல்லாத ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து, அதனைச் சட்டப் போராட்டமாகவும் மத உரிமைப் போராட்டமாகவும் மாற்றுவதன் பின்னணியில் இருக்கும் காவி பாசிஸ்டுகளின் அரசியல்தான் உண்மையான பிரச்சினை.
அயோத்தியில் தொடங்கிய அதே அரசியல் தந்திரம்!
இந்த நடவடிக்கையின் ஆபத்தைப் புரிந்துகொள்ள, அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வரலாற்றை நினைவுபடுத்திக் கொள்வது அவசியம்.
அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் இருந்ததாகக் கூறி, நீண்டகாலமாக மதவெறி அரசியலைக் காவி பாசிசக் கும்பல் முன்னெடுத்து வந்துள்ளது. முதலில் மசூதிக்குள் ராமர் சிலைகள் சட்டவிரோதமாக வைக்கப்பட்டன. பின்னர், அங்கு வழிபாடு நடத்துவதற்கான அனுமதி கோரப்பட்டது. நீதிமன்றத்தின் வழியாகப் பல்வேறு சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதற்கிடையில், நாடு முழுவதும் மதவெறிப் பிரச்சாரமும் வெறுப்புப் பேச்சும் தீவிரப்படுத்தப்பட்டன.
இறுதியில், 1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி காவி பாசிசக் கும்பலால் பட்டப்பகலில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. அதற்குப் பின்னர், மசூதி இடிக்கப்பட்ட குற்றத்தையும், அதற்காக முன்னெடுக்கப்பட்ட மதவெறி அரசியலையும் மறைத்துவிட்டு, அதே இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெறுவதில் அவர்கள் வெற்றி பெற்றனர்.
2020ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பாபர் மசூதி இடிப்பு சட்டத்தின் ஆட்சியை மீறிய செயல் என்று குறிப்பிட்டபோதிலும், சர்ச்சைக்குரிய நிலத்தை ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வழிவகுத்தது. இவ்வாறு, முதலில் மதவெறி அரசியலின் மூலம் உருவாக்கப்பட்ட நிலைமையைப் பின்னர் சட்டப்பூர்வமான முடிவாக மாற்றிக்கொள்வதே அயோத்தியில் நடந்தது.
இப்போது திருப்பரங்குன்றத்திலும் அதே அரசியல் தந்திரத்தின் மற்றொரு வடிவம் அரங்கேறுகிறது.
முதலில், வழக்கத்தில் இல்லாத ஒரு புதிய வழிபாட்டு உரிமை முன்வைக்கப்படுகிறது. அதனைச் சட்டப் போராட்டமாக மாற்றுகிறார்கள். நீதிமன்றத்தின் வழியாக அந்தக் கோரிக்கைக்கு அனுமதி பெறுகிறார்கள். பின்னர், அந்த அனுமதியை ஒட்டுமொத்த இந்துக்களின் உரிமைக்கான வெற்றி என்று பிரச்சாரம் செய்கிறார்கள். அடுத்தகட்டமாக, அந்த இடத்தில் தொடர்ந்து வழிபாடு நடத்துவதற்கான உரிமையைக் கோருவார்கள். அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களை இந்து மதத்திற்கு எதிரானவர்களாகச் சித்தரிப்பார்கள்.
இதுதான் அயோத்தியில் பயன்படுத்தப்பட்ட அரசியல் தந்திரம். இன்று திருப்பரங்குன்றத்தில் அதனைச் செயல்படுத்துவதற்கான அடித்தளம் அமைக்கப்படுகிறது.
காவி பாசிஸ்டுகள் இந்தக் கல் தூணைத் தேர்ந்தெடுத்திருப்பதிலும் ஒரு முக்கியமான அரசியல் நோக்கம் இருக்கிறது. அந்தக் கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றால், தர்காவின் படிக்கட்டுகள் வழியாக ஏறிச் செல்ல வேண்டியிருக்கிறது. இதையே ஒரு காரணமாகக் காட்டி, கல் தூணை வழிபடுகிறோம் என்ற பெயரில் தர்கா வழியாகச் சென்று, ஆண்டு முழுவதும் தொடர்ந்து பிரச்சினைகளை உருவாக்குவதற்கான வாய்ப்பை அவர்கள் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
1990களின் பிற்பகுதியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்துகிறோம் என்ற பெயரில் சென்னையிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மசூதிகள் வழியாக ஊர்வலங்களை நடத்திய காவிக் கும்பல், பின்னர் மசூதிகளைத் தாக்கியது. இதனால் ஏற்பட்ட மோதல்களில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு பலரும் பலியாகினர். இத்தகைய வரலாற்றையும் இங்கே முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதேபோன்றதொரு பதற்றமான சூழலை நிரந்தரமாக உருவாக்க வேண்டும் என்பதே காவிக் கும்பலின் திட்டம். இதைத்தான் எச். ராஜா, திருப்பரங்குன்றத்தைத் தமிழ்நாட்டின் அயோத்தியாக மாற்றுவோம் என்று வெளிப்படையாகக் கூறினார்.
உச்சநீதிமன்றம் இந்த அனுமதி எதிர்கால உரிமைக்கான முன்னுதாரணமாகாது என்று கூறியிருப்பது மட்டுமே இந்த ஆபத்தைத் தடுத்துவிடாது. சட்டத்தின் மொழியில் இது ஒரு தற்காலிக அனுமதி என்று குறிப்பிடப்பட்டாலும், காவி பாசிசக் கும்பல் இதனைத் தனது அரசியல் வெற்றியாகவே பயன்படுத்தும். நீதிமன்றம் அனுமதித்த இடத்தில் தீபம் ஏற்றினோம் என்பதுதான் அவர்களது பிரச்சாரமாக இருக்கும்.
அயோத்தியில் நடந்ததைப் போலவே, முதலில் ஓர் அடையாள வெற்றியை உருவாக்கி, பின்னர் அதனை நிரந்தர உரிமைக்கான கோரிக்கையாக மாற்றும் அரசியலைத் தடுக்காமல், அதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுப்பதுதான் இந்த உத்தரவின் மிகப்பெரிய ஆபத்து.
இராம ரவிக்குமாருக்காக உச்சநீதிமன்றம் கவலைப்படுவது ஏன்?
இங்கே இன்னொரு கேள்வி எழுகிறது. இராம ரவிக்குமார் யார்? அவர் ஒட்டுமொத்த இந்துக்களின் பிரதிநிதியா? தமிழ்நாட்டில் வாழும் கோடிக்கணக்கான இந்துக்களின் சார்பாகப் பேசுவதற்கு அவருக்கு யார் அதிகாரம் வழங்கியது? அவர் முன்வைக்கும் கோரிக்கை ஒட்டுமொத்த இந்துக்களின் கோரிக்கையாகிவிடுமா?
கோவில் நிர்வாகம், அந்தக் கோவிலின் அர்ச்சகர்கள், பல ஆண்டுகளாக அந்த வழிபாட்டு முறையைப் பின்பற்றி வரும் பக்தர்கள் ஆகியோரின் நடைமுறைகளையும் கருத்துகளையும் புறந்தள்ளிவிட்டு, ஒரு தனிநபரின் கோரிக்கையை மட்டும் இந்துக்களின் மத உரிமையாக ஏன் முன்னிறுத்த வேண்டும்?
ஏனெனில், இராம ரவிக்குமார் என்பவர் வெறுமனே ஒரு தனிநபர் அல்ல. அவர் காவி பாசிசக் கும்பலின் பிரதிநிதியாகச் செயல்படுகிறார். அதனால்தான் இந்து முன்னணி உள்ளிட்ட காவி அமைப்புகள் இந்தப் பிரச்சினையைத் தொடர்ந்து பெரிதாக்கி வருகின்றன. ஒவ்வொரு கட்டத்திலும் இதனை இந்துக்களின் உரிமைப் பிரச்சினையாக மாற்றுகின்றன. அவரது கோரிக்கைக்கு எதிராகப் பல ஆயிரம் பக்கங்களுக்கு ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டபோதிலும், அவற்றைப் பொருட்படுத்தாமல் உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் தொடர்ந்து இந்த ஒரு நபரின் கோரிக்கைக்குச் சாதகமான உத்தரவுகளைப் பிறப்பித்து வருகின்றன.
தமிழ்நாட்டில் மதவெறி அரசியலுக்கு இடமில்லாத சூழலை மாற்றியமைக்க வேண்டும் என்பதே காவி பாசிசக் கும்பலின் நோக்கம். மத நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழ்நாட்டின் அரசியல் சூழலைச் சீர்குலைத்து, இந்து – முஸ்லிம் மோதலை உருவாக்க வேண்டும் என்பதே அதன் அரசியல் திட்டம்.
இந்த நோக்கத்திற்காகவே கோவில் நிர்வாகத்தின் முடிவுகள், பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்ட வழிபாட்டு மரபுகள், தர்காவின் வழிபாட்டு உரிமைகள் என அனைத்தையும் மோதலுக்கான கருவிகளாக மாற்றி வருகின்றனர். இத்தகைய அரசியலை முன்னெடுப்பவர்களின் கோரிக்கைக்காக ஒட்டுமொத்த மக்களின் அமைதியையும் பணயம் வைக்கும் வகையில் நீதிமன்றம் துணைபோயிருப்பது மிகுந்த ஆபத்தானது.
இந்த வழக்கில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி நவம்பர் 21 அன்று மனுத் தாக்கல் செய்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், வழக்கின் இறுதி விசாரணை நடைபெறுவதற்கு முன்பே மனுதாரர்கள் கோரிய முழுமையான நிவாரணம் வழங்கப்பட்டுவிட்டதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டால், பின்னர் நீதிமன்றம் அந்த அனுமதியை ரத்து செய்தாலும் ஏற்கெனவே நடைபெற்ற நிகழ்வைத் திரும்பப் பெற முடியாது என்றும் அரசு தெரிவித்துள்ளது. வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றுவதற்கு எந்தத் தடையும் இல்லாத நிலையில், தர்காவுக்கு அருகிலுள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதிப்பது மத நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என்றும் தனது மறுஆய்வு மனுவில் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், இந்த மறுஆய்வு மனுவின் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
மதவெறி அரசியலுக்கு எதிராகத் தமிழ்நாடு ஒன்றிணைய வேண்டும்!
ஒரு இடத்தில் பல ஆண்டுகளாக நிலவிவரும் வழிபாட்டு நடைமுறையை மாற்ற முயற்சிப்பது, அதனை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வது, நீதிமன்ற உத்தரவைப் பயன்படுத்தி மதவெறிப் பிரச்சாரத்தை முன்னெடுப்பது என ஒவ்வொரு கட்டத்திலும் காவி பாசிஸ்டுகளின் திட்டமிட்ட அரசியல் நகர்வு செயல்பட்டு வருகிறது.
அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தவர்கள், இன்று ராமர் கோவில் கட்டப்பட்டதைத் தங்களது இந்துத்துவ அரசியலின் வெற்றியாகக் கொண்டாடுகிறார்கள். அதேபோன்று திருப்பரங்குன்றத்திலும் தீபம் ஏற்றுவதற்கான அனுமதியைத் தங்களது வெற்றியாகக் கொண்டாடி, அடுத்தடுத்த மதவெறி நடவடிக்கைகளுக்கு அதனை அடித்தளமாக்க முயற்சிக்கிறார்கள்.
இத்தகைய ஆபத்தைப் புரிந்துகொள்ளாமல், நீதிமன்றத்தின் உத்தரவு என்பதால் அதனை விமர்சனமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுவது, மதவெறி அரசியலுக்கு மறைமுகமாகத் துணைபோவதற்குச் சமமானதாகும்.
திருப்பரங்குன்றம் மக்களின் வழிபாட்டிற்கான இடமாகவும், பல்வேறு மதங்களின் வரலாற்று அடையாளங்கள் இணைந்துள்ள பகுதியாகவும் தொடர்ந்து இருக்க வேண்டும். காவி பாசிச அமைப்புகளின் அரசியல் ஆதாயத்திற்காக அந்த அமைதியைச் சீர்குலைக்க அனுமதிக்க முடியாது. நீதிமன்றத் தீர்ப்பு மதவெறி அரசியலைச் சட்டப்பூர்வமாக்குவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்த விடக்கூடாது. காவி பாசிசக் கும்பலின் மதவெறி அரசியலை முறியடிப்பதற்குப் பதிலாக, அதனை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பை இந்த உத்தரவு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. காவி பாசிஸ்டுகளின் இந்தக் கலவரத் திட்டம் நிறைவேறாமல் தடுக்கப்பட வேண்டும்.
தீபம் ஏற்றுவது என்ற பெயரில் மதவெறித் தீயை மூட்டத் துடிக்கும் காவி பாசிசக் கும்பலின் சதித்திட்டத்தை முறியடிப்போம்!
தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் பாதுகாப்போம்!
- அழகு



