போதை மாஃபியாவும் – தவெக அரசின் கண்துடைப்பு நாடகமும்
என்ன செய்யப் போகிறோம்?

அக்டோபர் 27, 2026
போதைப் பொருள்களை ஒழிப்பேன் என்று உறுதியளித்து ஆட்சிக்கு வந்தவர்களின் ஆட்சியில்தான் போதை மாஃபியாக்கள் செழித்து வளர்கின்றன. பூபாலன் கைது என்பது வெறும் ஒரு வழக்கு மட்டுமல்ல; போதைப் பொருள் கடத்தலின் பின்னணியில் செயல்படும் வலைப்பின்னலின் உண்மையான முகத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

ஒன்றிய வருவாய் புலனாய்வு இயக்குநரக (DRI) அதிகாரிகள், அக்டோபர் 16, 17 ஆகிய தேதிகளில் நாகப்பட்டினம் மாவட்டம் பிரதாபராமபுரத்தில் நடத்திய சோதனையில், சுமார் 137 கிலோ எடையுள்ள உயர்ரக மெத்தம்பெட்டமைன் (Crystal Meth) போதைப்பொருளைப் பறிமுதல் செய்துள்ளனர். சர்வதேசக் கறுப்புச் சந்தையில் இதன் மதிப்பு சுமார் ரூ. 650 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்குப் பெருமளவில் மெத்தம்பெட்டமைன் என்ற இரசாயனப் போதைப்பொருள் தற்போது பிடிபட்டுள்ளது. இந்தக் கடத்தல் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நாகை மாவட்ட நிர்வாகியான பூபாலன், அவரது மனைவி உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தில்லி, குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்களில் தயாரிக்கப்படும் இந்த இரசாயனப் போதைப்பொருள்களைத் தமிழ்நாட்டிற்குள்ளும் வெளிநாடுகளுக்கும் கடத்தும் பணியில் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். இதற்காக நாகப்பட்டினம் கடற்பகுதியையும், நாகை துறைமுகத்தையும் பயன்படுத்தியிருக்கலாம் என ஒன்றிய வருவாய் புலனாய்வு இயக்குநரக (DRI) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பூபாலன், தவெக-வின் நாகை மாவட்டத் தொண்டரணி அமைப்பாளராகவும், கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியின் கட்சிப் பொறுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். அவர் மீது போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டு எழுந்ததும், தவெக தலைமை அவரைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி உத்தரவிட்டது. ஆனால், அதற்குள் தவெக தலைவர் விஜயுடன் பூபாலன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி, இந்த விவகாரம் அரசியல் விவாதத்துக்கு உள்ளானது.

தவெக தலைவர் விஜய், தனது சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின்போது, போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதாக திமுக அரசைக் கடுமையாக விமர்சித்தார். மேலும், தான் ஆட்சிக்கு வந்தால் போதைப் பொருள் விற்பனையை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்தி, போதைப் பொருளில்லாத தமிழ்நாட்டை உருவாக்குவேன் என்றும் உறுதியளித்தார். அதுமட்டுமின்றி, முதலமைச்சராகப் பதவியேற்ற நாளில் விஜய் கையெழுத்திட்ட முதல் மூன்று முக்கிய அரசாணைகளில் ஒன்றாக, தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியாகப் போதைப்பொருள் தடுப்புப் படை அமைப்பதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அதனடிப்படையில், தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களிலும் மொத்தம் 65 பிரத்யேகப் போதைப் பொருள் தடுப்புச் சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் செயல்பாட்டிற்காக ரூ. 264 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இத்தனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும், பூபாலன் செய்து வந்த போதைப்பொருள் கடத்தலை இந்தச் சிறப்புப் படைகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒன்றிய அரசின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியமும், வருவாய் புலனாய்வு இயக்குநரகமும்தான் இந்தக் கடத்தலைக் கண்டுபிடித்தன.

இந்தச் சிறப்புப் படைகள் மட்டுமின்றி, தமிழ்நாடு போலீசின்  பல்வேறு பிரிவுகளும் நாகப்பட்டினம் பகுதியில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தமிழ்நாடு போலீசின் கீழ் செயல்படும் கடலோரப் பாதுகாப்புக் குழுவினர், கடற்கரையிலிருந்து 12 கடல் மைல் தொலைவு வரையிலான கடல் பகுதியில் ரோந்துப் பணிகளை மேற்கொள்கின்றனர். நாகப்பட்டினம் கடலோரப் பகுதியில் உள்ள சிறிய மீன்பிடி இறங்குதளங்கள் மற்றும் ஆள் நடமாட்டம் குறைந்த கடற்கரைப் பகுதிகள் வழியாகப் போதைப்பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுப்பது இவர்களின் முக்கியப் பொறுப்பாகும். இதற்காக, தமிழக அரசு இவர்களுக்கு அதிவேக ரோந்துப் படகுகளையும் வழங்கியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெறும் சட்டவிரோதக் கடத்தல்களைக் கண்காணித்து, அவற்றைத் தடுக்கத் தமிழக அரசு தனியாகக் கடல்சார் போலீஸ் நிலையங்களை அமைத்துள்ளது. இவற்றுடன், கடலோரச் சாலைகள் வழியாகத் தரைமார்க்கமாகப் போதைப்பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக, மாவட்டத்தின் முக்கியக் கடலோரச் சந்திப்புகளில் தமிழ்நாடு போலீசின் 24 மணி நேரச் சோதனைச் சாவடிகளும் செயல்பட்டு வருகின்றன.

நாகப்பட்டினம் துறைமுகம் சிறிய துறைமுகமாக இருப்பதால், இது ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இல்லாமல், தமிழக அரசின் கடல்சார் வாரியத்தின் பொறுப்பில் இயங்கி வருகிறது. இந்தத் துறைமுகம் தவெக-வின் முக்கிய அமைச்சரான ஆதவ் அர்ஜுனாவின் பொறுப்பில் உள்ளது. துறைமுகத்தின் வழியாகக் கொண்டு செல்லப்படும் சரக்குகளைக் கண்காணிப்பது உள்ளிட்ட அனைத்து நிர்வாகப் பொறுப்புகளும் தமிழக அரசின் கீழ் வருகின்றன.

இத்தனை கண்காணிப்பு அமைப்புகள், ரோந்துப் பணிகள், சோதனைச் சாவடிகள், சிறப்புப் படைகள் இருந்தும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க முடியவில்லை, ஒழிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். இவ்வளவு கண்காணிப்புகளையும் தாண்டிப் போதைப்பொருளைக் கடத்திச் சென்றிருக்கிறார்கள் என்றால், கடத்தல் கும்பலுக்கும் போலீசாருக்கும், அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையே இருக்கும் நெருக்கமான பிணைப்பு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை நாம் தான் புரிந்துகொள்ள வேண்டும். இந்த வலைப்பின்னலை ஒழிக்காமல் போதைப் பொருள் கடத்தலையும், போதைக் கலாச்சாரத்தையும் ஒழிக்க முடியாது.

பூபாலன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கத் தவெக அரசு தவறிவிட்டதாக திமுக குற்றம் சாட்டுகிறது. அதே நேரத்தில், திமுக ஆட்சிக்காலத்தில்தான் தமிழகத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் நுழைந்ததாகத் தவெக கூறுகிறது. இப்படி மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்துவதில்தான் இரு கட்சிகளும் கவனம் செலுத்துகின்றனவே தவிர, உண்மையாகவே போதைப்பொருள் ஒழிப்பைக் கையில் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் துளியும் இல்லை.

பூபாலன் கைது ஒரு முக்கியமான உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. போதைப்பொருள் கடத்தல் என்பது ஊருக்கு ஒதுக்குப்புறத்தில், யாருக்கும் தெரியாமல் சில சமூக விரோதிகள் திருட்டுத்தனமாகச் செய்யும் செயல் மட்டுமல்ல என்பதும், இந்தக் கடத்தலில் ஈடுபடும் மாஃபியா கும்பலைச் சேர்ந்தவர்கள் ஆளுங்கட்சியின் முக்கியப் பிரமுகர்களாக நம்மிடையே நடமாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதுமட்டுமன்றி, போதைக் கலாச்சாரத்தை ஒழிக்கப் போவதாக அரசியல்வாதிகள் கூறுவது சுத்தப் பொய் என்பதும், இதற்காகக் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கிச் சிறப்புப் படைகள் அமைப்பதும், மராத்தான் ஓட்டங்கள் நடத்துவதும் வெறும் கண்துடைப்பு நடவடிக்கைகள்தான் என்பதும் கண்கூடாகத் தெரிகிறது.

ஆனால், போதைப்பொருள்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் நாளுக்கு நாள் மிகவும் ஆபத்தான அளவில் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளில் பல்வேறு வடிவங்களில் புழக்கத்தில் இருக்கும் போதைப்பொருள்கள், நமது எதிர்காலச் சந்ததியினரின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி வருகின்றன. போதையின் தாக்கத்தால் அதிகரித்து வரும் வன்முறைகளும் பாலியல் குற்றங்களும், நாம் எத்தகைய சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறோம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. இளம் வயதுப் பிள்ளைகளைக் கொண்ட பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளைப் போதைக் கலாச்சாரத்திலிருந்து பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது, இன்றைக்கு அரசின் பொறுப்பாக இல்லாமல், அவர்களது தனிப்பட்ட பொறுப்பாகவே மாறிவிட்டது.

அரசு நினைத்தால், போதைப்பொருள் நடமாட்டத்தை ஒரே நாளில் ஒழித்துவிட முடியும். ஆனால், அரசு அதைச் செய்யாது. அதேசமயம், போலீசு, அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், போதைப்பொருள் மாஃபியாக்கள் எனப் பலமான இந்த வலைப்பின்னலை உடைக்காமல் போதைக் கலாச்சாரத்தை ஒழிக்க முடியாது.

அப்படியானால், நம்மால் என்ன செய்ய முடியும் என்று ஒதுங்கிப் போய்விட வேண்டுமா? கடவுளின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, நடப்பது நடக்கட்டும் என்று அமைதியாக இருந்துவிட முடியுமா? அல்லது நம் குடும்பத்தையும், நம் பிள்ளைகளையும் ஒழுக்கமாக வளர்த்துக்கொள்வோம் என்று சொல்லித் தப்பித்துக்கொள்ள முடியுமா? முடியாது\!

போதைப்பொருள் கலாச்சாரம் அந்த அளவுக்குச் சமூகச் சீரழிவுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இதனை முற்றிலுமாகத் துடைத்தெறியாத வரை, பாதுகாப்பான எதிர்காலம் என்ற ஒன்றை நிச்சயமாகக் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாது.

போதைப்பொருள் கலாச்சாரத்தைப் போன்றதுதான் குடிப்பழக்கமும். சாராயம் விற்பதால் அதிக லாபம் கிடைக்கிறது என்பதற்காக, அரசே ஊருக்கு ஊர் சாராயக் கடைகளைத் திறந்து வியாபாரம் செய்கிறது. குடித்துக் குடித்து மக்கள் குடிநோயாளிகளாக மாறி உயிரிழக்கிறார்கள் என்பது தெரிந்தும், அரசு உரிய நடவடிக்கை எடுக்க மறுக்கிறது.

ஆனால், 2015-ஆம் ஆண்டில் டாஸ்மாக்கிற்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டம், அரசின் மெத்தனப் போக்கிற்கு ஒரு அடியாக அமைந்தது. டாஸ்மாக் கடைகளை மூட முடியாது என்று கூறிவந்த கட்சிகள்கூட, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று வாக்குறுதி அளிக்கத் தொடங்கின.

நேற்றைக்குக் கட்சி தொடங்கி, ஆட்சிக்கு வந்த விஜய்கூட, தனது தேர்தல் வாக்குறுதியில் டாஸ்மாக் கடைகளைப் படிப்படியாக மூடுவேன் என்று கூறுகிறார். அந்த அளவிற்கு, 2015-ஆம் ஆண்டில் நடைபெற்ற டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்கள் அரசியல் கட்சிகளிடமும் அவர்களின் வாக்குறுதிகளிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்று சொன்னால் அது மிகையாகாது.

போதைக் கலாச்சாரத்திற்கு எதிராக அரசைச் செயல்பட வைக்க வேண்டும் என்றால், குறைந்தபட்ச நடவடிக்கைகளையாவது எடுக்கச் செய்ய வேண்டும் என்றால், 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தைப் போன்ற வீரியமான மக்கள் போராட்டத்தைக் கட்டியமைக்க வேண்டியிருக்கிறது.

குடிக்கு எதிராக மக்கள் ஒன்றுதிரண்டு, டாஸ்மாக் கடைகளை உடைத்து நொறுக்கியதைப் போல, போதைக் கலாச்சாரத்திற்கு எதிராகவும் மக்கள் களத்தில் இறங்கிப் போராடினால் மட்டுமே அதற்கு முடிவுகட்ட முடியும். அதை விட்டுவிட்டு, போதை ஒழிப்பு நாடகம் நடத்தும் அரசை நம்பி அதன் பின்னால் செல்வதில் ஒரு பயனுமில்லை.

  • அறிவு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன