அடியாள் போலீசுக்கு ஆர்.டி.ஐ. விலக்கு!
“நாங்கள் வெளிப்படையான ஆட்சி நடத்துவோம், மக்களிடமிருந்து எதையும் மறைக்க மாட்டோம், மக்கள் எப்போது வேண்டுமானாலும் விஜயைச் சந்த்தித்துப் பேசலாம்” என்று பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்தது தவெக. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அரசில் என்ன நடக்கிறது என்பது குறித்து மக்களுக்கு எதுவுமே தெரிவதில்லை. சமீபத்தில் முதலமைச்சர் விஜய் லண்டன் பயணம் சென்றார். முதலீடுகளை ஈர்ப்பதற்காகச் சென்றார் என்று பொதுவாக கூறினாலும், அவர் எதற்காகச் சென்றார், தொழில்வளர்ச்சித் துறை அமைச்சரை ஏன் அழைத்துச் செல்லவில்லை என்பது போன்ற கேள்விகள் இன்றுவரை சிதம்பர இரகசியமாகவே இருக்கிறது.
இது மட்டுமல்ல இந்த அரசின் எல்லாச் செயல்பாடுகளுமே கிட்டத்தட்ட மூடுமந்திரமாக வெளிப்படைத் தன்மை இன்றியே இருக்கின்றது. இந்நிலையில் இந்த அரசின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள சிறிதேனும் உதவியாக இருக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலும் சில மாற்றங்கள் செய்யப்போவதாகக் கடந்த மாதம் அரசு அறிவித்தது. சட்டம் – ஒழுங்குத் துறையை தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்குவதற்கான அரசாணையை வெளியிட்டு, பின்னர் அதனைத் திரும்பப் பெற்றிருக்கிறது.
செப்டம்பர் 21 அன்று வெளியிடப்பட்ட அரசாணை, தமிழ்நாடு அரசின் பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு) துறையை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 24(4)-ன் கீழ் “உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்பு” என்று வகைப்படுத்தி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்க முயன்றது. இந்தத் துறை கொட்டடிக் கொலைகள், போலிஸ் சித்திரவதைகள், துப்பாக்கிச்சூடுகள், சாதி மற்றும் மத மோதல்கள், அரசியல் போராட்டங்கள், மாணவர், தொழிலாளர் போராட்டங்கள், தடுப்புக் காவல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களைக் கையாளும் துறையாகும்.
21ஆம் தேதியே அரச்சாணை வெளியானாலும் 27ஆம் தேதிதான் அது பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது. அரசாணை வெளியானவுடன் அதை நியாயப்படுத்தும் வகையில் தவெக அமைச்சர்கள் முதலில் விளக்கங்களை அளித்தனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், பேச்சுச் சுதந்திரத்தின் பெயரில் தகவல்கள் ஒரு தரப்புக்கு சாதகமாகத் திரிக்கப்படுவதாகக் கூறினார். சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், முழு சட்டம் – ஒழுங்குத் துறைக்கும் விலக்கு அளிக்கப்படவில்லை என்றும், சாதி மோதல்கள் உள்ளிட்ட சில உணர்வுப்பூர்வமான தகவல்களைப் பாதுகாப்பதே நோக்கம் என்றும் விளக்கமளித்தார்.
ஆனால் இந்த விளக்கங்களை ஏற்றுக் கொள்ள யாரும் தயாராக இல்லை. தவெக கூட்டணியில் உள்ள கட்சிகளும் கூட இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன. தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்தி சட்டம்-ஒழுங்கு, போலீஸ் நடவடிக்கைகள், கொட்டடிக் கொலைகள், போராட்டங்கள் உள்ளிட்ட விவகாரங்களில் பொதுமக்கள் கேள்வி கேட்கும் உரிமையே பாதிக்கப்படும் என்ற விமர்சனங்கள் எழுந்தன.
விசிக தலைவர் தொல். திருமாவளவன்: இந்த அரசிதழ் அறிவிப்பு “மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது” என்றும், இது மனித உரிமைகளை நசுக்குவதற்கும் எதேச்சதிகாரப் போக்கிற்கும் வழிவகுக்கும் என்றும் கூறி, அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
காங்கிரஸ் மாநிலத் தலைவர் மணிக்கம் தாகூர், ஆர்.டி.ஐ. சட்டம் வெளிப்படையான நிர்வாகத்திற்கான முக்கியமான சட்டம் என்றும், சட்டம்-ஒழுங்குத் துறைக்கு அளிக்கப்பட்ட விலக்கை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், இந்த நடவடிக்கை ஒரு “மோசமான முன்னுதாரணம்” என்று விமர்சித்தார். ஆர்.டி.ஐ.-யின் வரம்பை குறைப்பதற்குப் பதிலாக விரிவுபடுத்த வேண்டும் என்றும், தற்போது அளிக்கப்பட்டிருக்கும் விலக்கு மூலம் போலீஸ் சித்திரவதை, காவல் மரணங்கள், போலீஸ் துப்பாக்கிச்சூடு, வகுப்புவாத மோதல்கள் போன்ற விவகாரங்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளாமல் தடுக்கப்படும் என்றும் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. சு.வெங்கடேசன், இந்த நடவடிக்கையை தமிழ்நாட்டை “போலீஸ் மாநிலமாக” மாற்றும் முயற்சி என்று கடுமையாக விமர்சித்தார்.
இவ்வாறு பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து செப்டம்பர் 27 அன்று அரசு தனது அறிவிப்பைத் திரும்பப் பெற்றது. இது போன்ற எதிர்ப்புகள் வரும் என்பது தவெக அரசுக்கு முன்னரே தெரியாதா? பிறகு ஏன் அறிவிக்க வேண்டும், உடனே திரும்பப் பெற வேண்டும்?
இந்தக் கேள்விக்கான விடையைப் புரிந்துகொள்ள தவெக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து சட்டம்-ஒழுங்கு தொடர்பாக எதிர்கொண்டுவரும் தொடர் விமர்சனங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
கொட்டடிக் கொலைகள்: தொடர்ந்து துரத்தும் கேள்விகள்
தவெக அரசு ஆட்சிக்கு வந்த சில வாரங்களிலேயே தொடர்ந்து நடந்த கொட்டடிக் கொலைகள் அரசுக்கு எதிரான கடும் விமர்சனங்களை எழுப்பின. கன்னியாகுமரியில் நீதிமன்றக் காவலில் இருந்த 35 வயது சபரி வர்மன் உயிரிழந்த சம்பவத்தில் அவரது உடலில் 19 காயங்கள் இருப்பதாக உடற்கூராய்வு அறிக்கை தெரிவித்தது. இதையடுத்து சிறை ஊழியர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். குடும்பத்தினர் போலீசாரின் சித்திரவதை காரணமாக மரணம் ஏற்பட்டதாகக் குற்றம்சாட்டினர்.
அதற்குப் பின்னர் தூத்துக்குடியில் 24 வயது அருணாசலம் காவல் சித்திரவதைக்குப் பிறகு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டிய சம்பவம் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இறப்பதற்கு முன்பு அவர் போலீசார் தாக்கியதாகக் கூறியிருக்கிறார். இந்த வழக்கில் அரசு நடவடிக்கை குறித்து பல்வேறு கட்சிகள் கேள்வி எழுப்பின.
இதற்கு முன்னதாக, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆகாஷ் போலீசாரால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியிருந்தனர். சிபி-சிஐடி விசாரணையில் ஆறு போலீஸார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்து. ஆனால் அந்த ஆறு போலீஸாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று குற்றம்சாட்டி, செப்டம்பர் 3 அன்று, ஆகாஷின் பெற்றோரும் உறவினர்களும் முதலமைச்சரின் வாகனத்தை மறித்து நேரடியாக நீதி கேட்டுப் போராடினார்கள்.
மதுரை கூடல்புதூரைச் சேர்ந்த 16 வயது தமிழ்ச்செல்வன் செப்டம்பர் 6 அன்று காணாமல் போய் மறுநாள் நீர்நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். போலீஸ் தரப்பு இதனை நீரில் மூழ்கிய மரணம் என்று கூறியது. அவரது குடும்பத்தினர் இது கொலை என்றும், வேறு சாதியைச் சேர்ந்த பெண்ணுடன் அவர் நெருக்கமாக இருந்ததே கொலைக்குக் காரணம் என்றும் கூறினார்கள்.
வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும், சிபி-சிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரி உறவினர்களும் பல்வேறு அமைப்புகளும் போராடினர். போராட்டக்காரர்கள் மதுரை மாநகர போலீஸ் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றபோது போலீஸ் அவர்களை கைது செய்தது. கொலை வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும் எனப் போராடிய மக்கள் மீதே வழக்குத் தொடுத்தது போலீசு.
தங்களது வாழ்வாதார உரிமைக்காகப் போராடும் மக்களையும் கூட இந்த அரசும் அதன் அடியாளான போலீசும் சும்மா விடுவதில்லை. போராட்டம் நடத்துபவர்களை அடித்து விரட்டுவது, அவர்கள் மீது வழக்கு பதிவது என்று அடக்குமுறைகளை ஏவுகிறது.
நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராடிய போது, தமிழ்நாட்டில் அந்தப் போராட்டங்களைத் தவெக அரசு தடுத்து நிறுத்தியது. சென்னையில் போராடிய மாணவர்கள் பலரும் தவெக அரசின் போலீசாரால் தாக்கப்பட்டனர், கைது செய்து சிறையிலடைக்கப்பட்டனர். தாங்களும் நீட் தேர்வை எதிர்க்கிறோம் என்று பொதுவில் கூறும் தவெக அரசு நீட்டுக்கு எதிராக போராடிய மாணவர்களை ஒடுக்க கல்லூரிக்கு உள்ளேயே போலீசை அனுப்பியது.
இந்தப் போராட்டங்களைத் தொடர்ந்து ஆகஸ்ட் 14 அன்று பள்ளி மற்றும் உயர்கல்வித் துறைகளுக்கு அனுப்பப்பட்ட உத்தரவில், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் CJP நடத்திய போராட்டங்களில் மாணவர்கள் கலந்து கொள்வதைத் தடுக்கும் வகையில் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்டிருந்தது. பள்ளி, கல்லூரிகள் நடவடிக்கை அறிக்கையும் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கடும் எதிர்ப்புக்குப் பிறகு அந்த உத்தரவு ஆகஸ்ட் 19 அன்று திரும்பப் பெறப்பட்டது.
செப்டம்பர் தொடக்கத்தில் சட்டம்-ஒழுங்கு மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக ஆட்சியின் முதல் 116 நாட்களில் 550-க்கும் மேற்பட்ட கடுமையான குற்றங்கள் நடந்ததாகக் குற்றம்சாட்டினார். அதில் 10 ஆணவக் கொலைகள், எட்டு காவல் மரணங்கள், 200 கொலைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான 300 பாலியல் குற்றங்கள் இடம்பெற்றதாக அவர் கூறினார்.
திருவொற்றியூரில் நடந்த கொலை வழக்கிலும், பாதுகாப்பு கோரிய இளைஞரை போலீஸ் அதிகாரி மிரட்டியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதுபோன்ற சம்பவங்கள் “போலீஸ் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?” என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் எழுப்புகின்றன.
மாநிலம் முழுவதும் பரவி வரும் போதைக் கலாச்சாரம், கோவையிலும், சென்னையிலும் போதை விற்பனைக் கும்பலைப் பற்றி புகாரளித்த மாணவர்கள் அடித்துக் கொல்லப்பட்டதும் தவெக அரசின் மீது அடுத்தடுத்து விமர்சனங்கள் எழக் காரணமாக இருந்தன.
2018 தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பலரின் மீதும் நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்திருந்தது.
2026 செப்டம்பரில் இந்த வழக்கில் மூன்று அதிகாரிகளுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கையை கைவிடுவது தொடர்பாக தற்போதைய தவெக அரசின் கருத்தை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேட்டபோது, அந்த நடவடிக்கைகள் கைவிடப்பட்டதாக அரசு அறிவித்தது.
கொட்டடிக் கொலை குறித்து கேள்விகள், போலீஸ் சித்திரவதை குறித்த புகார்கள், கொலை வழக்குகளில் போலீஸ் விசாரணை மீது குடும்பங்கள் எழுப்பும் சந்தேகங்கள், போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்படும் வழக்குகள், மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்பதைத் தடுக்கும் அரசின் முயற்சி, சாதி, மத மோதல்கள், போலீஸ் துப்பாக்கிச்சூடுகள் என தவெக ஆட்சிக்கு வந்த நான்கு மாதங்களில் சட்டம் ஒழுங்குத் துறையில் பல விமர்சனங்கள் இந்த அரசின் மீது வைக்கப்பட்டுள்ளன. இவை எல்லாவற்றையும் குறித்து ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி கேள்விகள் கேட்டால் அதற்கு பதிலளித்துத்தான் ஆக வேண்டும். இதற்கெல்லாம் காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் கடுமையான விமர்சனங்கள் எழும், மக்கள் போராடுவார்கள்.
ஆகையால் இத்தகைய விவகாரங்கள் தொடர்பான தகவல்களை கையாளும் சட்டம் மற்றும் ஒழுங்குத் துறையையே தகவல் அறியும் உரிமைச் சட்த்திலிருந்து விலக்கி விடலாம் என தவெக அரசு முடிவு செய்திருக்கிறது. தனக்கு விசுவாசமான அடியாளாக வேலை செய்து வரும் போலீசைப் பாதுகாக்கவே இந்த அரசாணையைத் தவெக அரசு வெளியிட்டிருக்கிறது. பரவலாக எல்லோரும் இதனை எதிர்க்கவே தற்போது பின்வாங்கியிருக்கிறது.
- சந்திரன்



