எஸ்.ஐ.ஆர் – தேர்தல் ஆணைய சதிகள் :
பொய்களும் உண்மைகளும்

எஸ்.ஐ.ஆர். என்பது வெறும் வாக்காளர் பட்டியல் திருத்தம்தானா? அந்நிய நாட்டவர்களைக் கண்டறிவதுதான் நோக்கமா? தேர்தல் ஆணையம் உண்மையிலேயே சுதந்திரமாகவும் நடுநிலையாகவும் செயல்படுகிறதா? எஸ்.ஐ.ஆர். குறித்த காவி பாசிஸ்டுகளின் பொய்ப் பிரச்சாரங்களையும், அதன் பின்னால் ஒளிந்திருக்கும் வாக்குரிமைப் பறிப்புச் சதிகளையும் கேள்வி–பதில் வடிவில் அம்பலப்படுத்துவோம்.

எஸ்.ஐ.ஆர். – தேர்தல் ஆணைய மோசடிகள், சதிகள், தில்லுமுல்லுகளுக்கெதிராக எதிர்க் கட்சிகளும் மாணவர்களும் போராடிவருகின்றனர். இந்நிலையில், ஒருபுறம் இப்போராட்டமே அந்நியசதி, அராஜகவாதம் என்று அவதூறு செய்யும் வேளையில், மறுபுறம் இவை குறித்த பல்வேறு பொய்களையும் அரை உண்மைகளையும் கலந்துகட்டி கோயபெல்ஸ் பாணியிலான பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது, காவி பாசிசக் கும்பல். தற்போது “ஜனநாயகம் காப்போம், அராஜகவாதத்தை அகற்றுவோம்” என்ற தலைப்பில் ஒரு பொய்ப் பிரச்சார இயக்கத்தையே நாடுமுழுவதும் நடத்திவருகிறது. ஆகவே, இக்கும்பல் பரப்பும் பல்வேறு பொய்களைச் சுக்குநூறாக உடைத்தெறிய வாசகத் தோழர்களுக்கு இக்கேள்வி பதில் வடிவிலான தொகுப்பு உதவும் என நம்புகிறோம்.

கேள்வி : எஸ்.ஐ.ஆர். என்பது இறந்தவர்கள், குடிபெயர்ந்தவர்கள், கள்ள ஓட்டுக்களை நீக்கி வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்தும் ஒரு சாதாரண நடவடிக்கைதான்; இதற்குமுன் நாட்டில் 8 முறை எஸ்.ஐ.ஆர். நடந்துள்ளது; காங்கிரஸ் ஆட்சியின் போதெல்லாம் எதிர்க்காமல், இப்போது மட்டும் எதிர்ப்பது ஏன்?

இதற்கு முன்னதாக, 1952 தொடங்கி 2003 வரையில் 8 முறை தீவிரத் திருத்தம் (intensive revision) நடத்தப்பட்டது உண்மைதான். ஆனால், சிறப்புத் தீவிரத் திருத்தம் (special intensive revision) எப்போதும் நடத்தப்பட்டதே கிடையாது. முன்னர் நடந்தவற்றுக்கும் 2025 எஸ்.ஐ.ஆர்.க்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன. உதாரணமாக, 2003 தீவிரத் திருத்தத்தின்போது, தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு விலக்கு கொடுக்கப்பட்டன; குறிப்பிட்ட கால வரம்பு நிர்ணயிக்காமல் நடத்தப்பட்டன; 2003 வழிகாட்டு நெறிமுறையின் பாரா 12.8.இன்படி, “வீடுவீடாகச் சென்று வாக்காளரைச் சரிபார்த்து பட்டியலில் இணைக்க வேண்டிய பொறுப்பு (onus) தேர்தல் பதிவு அதிகாரி (ERO) உடையது” ஆகும்; பாரா 32 இன்படி, “ஒருவரது குடியுரிமையைச் சோதிப்பது தேர்தல் பதிவு அதிகாரியின் வேலை அல்ல” என்று தெளிவாகக் கூறுகிறது, எனவே மக்களின் குடியுரிமை சோதிக்கப்படவோ, அதற்கான ஆவணங்கள் எதுவும் கேட்கப்படவோ இல்லை.

இதற்கு நேர்மாறாக, 2025 எஸ்.ஐ.ஆரானது, தேர்தல் நடக்கும் மாநிலங்களைக் குறிவைத்து அவசரகதியில் சில மாதங்கள் காலக்கெடு வைத்து நடத்தப்பட்டுள்ளது; தான் ஒரு வாக்காளன்தான் என்பதை நிரூபிக்கும் பொறுப்பு (onus) மக்கள் தலைமீது சுமத்தப்பட்டுள்ளது; எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருவர் வாக்குரிமை பெறுவதற்கு அவரது குடியுரிமையை  நிரூபிப்பதைக் கட்டாயமாக்கியுள்ளது. எனவே, இப்போது நடப்பது வாக்காளர் திருத்தமே அல்ல, குடியுரிமைப் பரிசோதனை, பறிப்பு என்று சொல்கிறோம்.

கேள்வி : பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மர், நேபாளம் போன்ற அந்நிய நாடுகளில் இருந்து இங்கு வந்து தங்கி, வாக்குரிமையும் பெற்று அவர்கள் இந்நாட்டின் அரசியலைத் தீர்மானிக்கும் நிலைமைக்கு வருகிறார்கள்; அதைத் தடுக்க குடியுரிமைப் பரிசோதனை அவசியம்தானே? இதில் என்ன தவறு?

முதலாவதாக, சட்டப்படி ஒருவரின் குடியுரிமையைப் பரிசோதிக்கும் அதிகாரம் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கும், நாடாளுமன்றத்திற்குமே உள்ளது. தேர்தல் ஆணையம் அதைச் செய்வது முற்றிலும் சட்ட விரோதம். இதுதான் நோக்கமென்றால், உள்துறை அமைச்சகத்தின் மூலம் வெளிப்படையாக அறிவித்துவிட்டுச் செய்திருக்கலாமே! ஏன் திருட்டுத்தனமாக, தேர்தல் ஆணையத்தின் மூலம் சட்டவிரோதமாகச் செய்ய வேண்டும்? ஏனென்றால், 2020-இல் மோடி அரசால் கொண்டுவரப்பட்டு எதிர்ப்புகளால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர்.ஐ வெளிப்படையாக அமல்படுத்தினால் எதிர்ப்புகள் கிளம்பும் என்பதற்கே இச்சதித்தனம்.

இரண்டாவதாக, மேற்கண்ட நாடுகளில் இருந்து கோடிக்கணக்கானோர் இங்கு வந்து தங்கியுள்ளனர், அவர்கள் வாக்குரிமை பெற்றுள்ளனர் என்பதற்கு எவ்வித ஆதாரத்தையும் உள்துறை அமைச்சகமோ, ஒன்றிய அரசோ எப்போதும் வழங்கியதே இல்லை. நாடாளுமன்றத்திலும் தகவலறியும் சட்டத்திலும் இதுகுறித்து பலமுறை கேள்விகள் எழுப்பியபோதிலும், அத்தகைய தரவுகள் தம்மிடம் இல்லை என்றே அரசு பதிலளித்துள்ளது. இன்று நாடுமுழுவதும் எஸ்.ஐ.ஆர். நடத்தப்பட்டு சுமார் 13 கோடி பேரின் வாக்குரிமை பறிபோயுள்ளது! இவர்களில் எத்தனைபேர் வந்தேறிகள் என்ற விவரத்தையும் தேர்தல் ஆணையம் வழங்கவே இல்லை.

“அந்நிய நாட்டவர்களைக் கண்றிந்து நீக்குவது” என்பதை 2025 எஸ்.ஐ.ஆர்.இன் நோக்கமாக அறிவித்துள்ளது, தேர்தல் ஆணையம். ஆனால், அதற்குரிய எந்தத் தரவையும் சேகரிக்க மாநிலத் தேர்தல் ஆணையங்களுக்கு அது உத்திரவிடவே இல்லை! ஒருவரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான காரணங்களில், இறந்தவர்கள், தொடர்பு கொள்ள முடியாதவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், போலியானவர்கள், மற்றவை (Absentees, Shifted, Dead, Duplicate & Others – ASDDO) என்ற காரணங்கள்தான் உள்ளனவே அன்றி, “வெளிநாட்டவர்” என்ற காரணமே குறிப்பிடப்படவில்லை! கர்நாடகா, கேரளா, கோவா, ஜார்கண்ட், மேகாலயா, மிசோரம் ஆகிய 8 மாநிலங்களில் நீக்கப்பட்ட 1.56 கோடி பேரில் வெறும் 1600 பேர்தான் அந்நிய நாட்டவர்கள் என்பதை சமீபத்தில் இந்துஸ்தான் டைம்ஸ் கள ஆய்வில் அம்பலப்படுத்தியுள்ளது. பீகாரில் எஸ்.ஐ.ஆரால் நீக்கப்பட்ட 65 இலட்சம் வாக்காளர்களில் 0.012% தான் வெளிநாட்டவர்கள் என்பதை ஏற்கனவே தி வயர் அம்பலப்படுத்தியது.

எனவே, எல்லைதாண்டி வருகிறார்கள், படையெடுத்து வருகிறார்கள், கடல்வழியாக வருகிறார்கள், இங்கே சாதாரண மக்கள் போல பதுங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதெல்லாம் ஆதாரங்களோ, விவரங்களோ அற்ற கோயபெல்ஸ் பாணி பொய்ப் பிரச்சாரங்களன்றி வேறில்லை. எனவே, தேர்தல் ஆணையத்தின் உண்மையான நோக்கம் அந்நிய நாட்டவர்களின் குடியுரிமையைப் பறிப்பதல்ல, மாறாக, சொந்த நாட்டில் இசுலாமியர்கள், கிறுத்துவர்கள் உட்பட பா.ஜ.க. எதிர்ப்பாளர்கள் அனைவரது குடியுரிமையையும் வாக்குரிமையையும் பறிப்பதே ஆகும்.

மூன்றாவதாக, பிற நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து இந்தியாவுக்கு வருபவர்களும் போர், இயற்கைச் சீற்றங்கள், வறுமை, விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்ற பல காரணங்களால் உயிர்பிழைக்க ஓடி வரும் அப்பாவி மக்களே. குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் இந்தியர்களில் பலர் ஆபத்தான டாங்கி பயணம் மேற்கொண்டு மெக்சிகோ எல்லையைக் கடந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைகின்றனர். ஆபத்தான கடல் பயணம் மேற்கொண்டு ஐரோப்பாவில் நுழைகின்றனர். இவர்களெல்லாம் ரா ஏஜெண்டுகளா?! அந்த நாட்டைச் சதிசெய்து அழிக்கப் போனவர்களா?! ஏகாதிபத்திய முதலாளித்துவம் உருவாக்கியுள்ள நெருக்கடியின் விளைவாகவே உலகெங்கும் புலம்பெயர்தல் நடக்கிறது. எனவே, இத்தகைய அப்பாவி மக்களை நமது எதிரிகள் போலவும் பயங்கரவாதிகள் போலவும் சித்தரிப்பது சதித்தனமானதாகும்.

கேள்வி : திமுக, காங்கிரசு என ஒவ்வொரு கட்சிக்கும் வாக்குச் சாவடி முகவர்கள் உள்ளனர்; பல மாநிலங்களில் எதிர்க் கட்சிகள்தான் ஆட்சியில் உள்ளனர்; அதிகாரிகள் அரசு ஊழியர்கள் மத்தியிலும் எதிர்க் கட்சிகளுக்குச் சார்பானவர்கள் உள்ளனர்; இப்படியிருக்கையில் பா.ஜ.க. தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி தனக்கெதிரான வாக்காளர்களை நீக்குகிறது என்ற குற்றச்சாட்டு மிகையானதாக உள்ளதே?

இவை அரை உண்மைகளே. முன்பு வாக்காளர்களை சேர்ப்பது, நீக்குவதற்கான சட்டப்பூர்வ அதிகாரம் (statutory authority) ஒவ்வொரு பகுதியின் உள்ளூர் தேர்தல் பதிவு அதிகாரியின் (ERO) கையில் இருந்தது. எனவே, அவர் நினைத்தால் ஒருவரைச் சேர்க்கவும் நீக்கவும் முடியும். இவ்வாறு நாடெங்கும் உள்ள ஆயிரக் கணக்கான ERO-களில் பல கட்சிகளுக்கும் சார்பானவர்கள் உள்ளனர் என்பது உண்மையே. ஆனால், தற்போது அவர்களின் இவ்வதிகாரம் பிடுங்கப்பட்டு மத்தியில் ECI Net portal என்ற மென்பொருளை இயக்கும் தகவல் தொழில்நுட்ப அணியிடம் ஒன்றுகுவிக்கப்பட்டுள்ளது. இந்த போர்டல்களை ERO-கள் அனுகவே (access) இயலாது. தவறுதலாக, ஒருவரது பெயர் விடுபட்டிருப்பதாக ERO கருதினாலும், டெல்லிக்குத்தான் அவர் மனுப்போட வேண்டும். டெல்லியிலிருக்கும் அக்குழுதான் அவரைச் சேர்ப்பதா இல்லையா என்பதை முடிவு செய்யும். சமீபத்தில் கோவாவில் தவறுதலாக நீக்கப்பட்ட 97 பேரை மீண்டும் பட்டியலில் சேர்க்குமாறு உச்சநீதிமன்றமே உத்திரவிட்டபோதிலும், அதை அம்மாவட்ட உள்ளூர் ERO-வால் செய்ய முடியாமல், டெல்லிக்குத்தான் மனுப்போட வேண்டியிருந்தது.

 

கேள்வி : டெல்லியில் இருக்கும் குழுவுக்கு உள்ளூரில் உள்ள பா.ஜ.க. எதிர்ப்பாளர்களை எப்படித் தெரியும்?

தேர்தல் ஆணையத்தின் IT குழுவினருக்கு வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர், வயது, முகவரி, EPIC எண், குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், பழைய வாக்காளர் பட்டியலுடனான ஒப்பீடு மற்றும் மிக முக்கியமாக அந்த அந்த தொகுதியின் ஓட்டிங் பேட்டர்ன் (voting pattern) போன்ற தகவல்கள் ECI NET, ERO NET போன்ற மையப்படுத்தப்பட்ட தரவுதளங்களின் மூலம் கிடைக்கின்றன. இத்தரவுதளங்களிலுள்ள மென்பொருள் மற்றும் அதன் அல்காரிதம் இஸ்லாமியர்களைக் குறிவைத்து நீக்குவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன.

டெல்லி வாக்காளர் பட்டியலில் மட்டும் 19 லட்சம் வாக்காளர்களை தர்க்கரீதியான முரண்பாடுகள் (logical discrepancies) உள்ளது என கூறி நீக்கியுள்ளது, இக்கும்பல். அதாவது, ஒரு குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 6-க்கும் அதிகமாக இருந்தாலோ, அல்லது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் 15 ஆண்டுகள் வயது வித்தியாசம் அதிகமாக இருந்தாலோ அவர்கள் “தர்க்கரீதியான முரண்பாடுகள்” என்று வகைப்படுத்துமாறு அம்மென்பொருளின் அல்காரிதம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, தாத்தா பாட்டி – பேரன் பேத்திகளுக்கு இடையிலான வயது வித்தியாசம் 40 ஆண்டுக்குக் கீழே இருந்தால் இம்மென்பொருள் அதை தர்க்கரீதியான முரண்பாடாக எடுத்துக் கொள்கிறது. இவ்வாறான அல்காரிதம் இஸ்லாமியக் குடும்பங்களைக் குறிவைத்தே வடிவமைக்கப்பட்டுள்ளது.

படிவம் 7-இன் மூலம் யார் வேண்டுமானாலும் ஒரு வாக்காளரை நீக்குவதற்கு விண்ணப்பிக்க முடியும். அதை ERO ஒப்புக் கொண்டு கையெழுத்திட வேண்டும். இந்நடைமுறையைக் கேடாகப் பயன்படுத்தி, நாடெங்கும் பூத் லெவலில் உள்ள காவி பாசிசக் கும்பல் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் தனக்கு எதிரான வாக்காளர்களைக் குறிவைத்து நீக்குமாறு விண்ணப்பித்துள்ளது. (நாடெங்கும் உள்ள மிகப்பிரம்மாண்டமான பூத் கமிட்டிக் கட்டமைப்பைக் கொண்டுள்ள காவி பாசிசக் கும்பல் தனக்கு ஆதரவானோர் / எதிர்ப்பானோரின் விவரங்களைத் தன்னிடம் கொண்டுள்ளது) கீழிருந்து பாசிசக் கும்பல் விண்ணப்பிக்கும் இவற்றை, அப்பகுதியின் ERO-வுக்கே தெரியாமல் அவர்களின் கையெழுத்தைப் போட்டு டெல்லியில் உள்ள குழு நீக்குகிறது.

உதாரணமாக, கர்நாடகாவில் உயிருடன் உள்ள 8 இஸ்லாமியப் பெண்கள் இறந்துவிட்டதாக போலி இறப்பு சான்றிதழ்களுடன் அவர்களை நீக்கக் கோரி படிவம் – 7ஐ கர்நாடக மாநிலம் விஜயபுரா சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பசனகவுடா பாட்டீல் யத்னால் என்பவர் தாக்கல் செய்துள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட 8 இஸ்லாமிய பெண்களும் பேட்டி அளித்தனர். மேலும், உ.பி.யில் 87,127 பேரை நீக்குமாறு படிவம்-7இன் மூலம், ERO பெயரில், நீக்குவதற்கான காரணங்கள் எதுவும் குறிப்பிடாமல் தானாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் பத்ராக் தொகுதியில், பா.ஜ.க முகவர்கள் முஸ்லீம் வாக்காளர்களை குறிவைத்து நீக்குவதற்காக விண்ணப்ப படிவம் 7-ஐ ஆயிரக்கணக்கில் தாக்கல் செய்துள்ளனர்.

மென்பொருளின் அல்காரிதம், பெயர், ஓட்டிங் பேட்டர்ன், படிவம் 7 இன் மூலம் கீழிருந்து பாசிசக் கும்பல் திரட்டித் தரும் தரவுகள் – ஆகியவற்றின் மூலம் தான் மேலிருந்து டெல்லியில் உள்ள குழுவால் பா.ஜ.க. எதிர்ப்பு வாக்காளரை நீக்க முடிகிறது. இதற்காகத்தான் வாக்காளரைச் சேர்க்கும் / நீக்கும் சட்டப் பூர்வ அதிகாரம் (statutory authority) ERO கையில் இருந்து பிடுங்கப்பட்டு டெல்லியில் ஒன்றுகுவிக்கப்பட்டுள்ளது!

கேள்வி : தவறாக நீக்கப்பட்டவர்களை எளிதில் மீண்டும் சேர்த்துக் கொள்ள முடியும், மேல் முறையீடு செய்யலாம் தானே?

SIR பட்டியலில் பெயர் இல்லாதவர்களுக்கு அரசின் எந்த சலுகையும் கிடையாது, ரேஷன் கடைகளில் பொருட்கள் தரப்பட மாட்டாது என்று மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி பகிரங்கமாகவே அறிவித்துள்ளார். ERO நோட்டிசின் மீதான மேல்முறையீடுகள் எவ்வளவு வேகமாக தீர்க்கப்படுகின்றன என்பதனை பற்றி மேற்கு வங்கத்தில் இருந்து வெளிவரும் அதிர்ச்சி தரவுகள் அம்பலப்படுத்துகின்றன. கடந்த மார்ச் மாதம் அமைக்கப்பட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களில் 22,17,619 பேர் தங்களின் பெயர் நீக்கத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளனர்; அதில் வெறும் 43,622 பேரின் மனுக்கள் மட்டுமே இதுவரை விசாரிக்கப்பட்டுள்ளது; வெறும் 30,828 பேர் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்; 6,444 பேரின் மனுக்கள் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளன: 6,350 பேரின் மனுக்களின் நிலவரம் என்னவென்றே தெரியவில்லை. அதாவது, 2% மனுக்கள் மட்டுமே இதுவரை விசாரிக்கப்பட்டுள்ளன; மீதி 98% மனுக்கள் இன்னும் உச்சநீதிமன்றம் அமைத்த எஸ்.ஐ.ஆர் மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களில்தான் தூங்கிக்கொண்டிருக்கின்றன. இதுதான் உண்மைநிலை!

கேள்வி : தேர்தல் ஆணையம் சுயேச்சையானது, நடுநிலையானது அப்படியெல்லாம் தில்லுமுல்லுகள் செய்துவிட முடியாது என்கிறார்களே?

தேர்தல் ஆணையம் பாசிசத்தின் கைப்பாவையாக என்றோ மாறிவிட்டது. 2023-க்கு முன்னதாக சட்ட அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில், நாட்டின் பிரதமராக இருப்பவர், தலைமை தேர்தல் ஆணையரையும், பிற இரண்டு ஆணையர்களையும் ஜனாதிபதிக்கு பரிந்துரைப்பார். ஜனாதிபதி இவர்களை நியமிப்பார். 2023-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட “தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனச் சட்டத்தின்”படி, பிரதமர், ஒரு மத்திய அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் சேர்ந்து தலைமை தேர்தல் ஆணையரை நியமிப்பர். மேலும், இச்சட்டத்தின்படி, தனது பதவிக்காலத்தில் தான் நடைமுறைப்படுத்தும் எதற்கும் தலைமை தேர்தல் அதிகாரி மீது எந்த கிரிமினல் வழக்கு நடவடிக்கையும் எடுக்க முடியாது. இந்த சட்டப்பாதுக்காப்பு பிரதமருக்கோ, குடியரசு தலைவருக்கோ கூட கிடையாது. இத்தகைய அளவற்ற அதிகாரங்களுடனும், யார் நினைத்தாலும் தன்னை தண்டிக்கவோ, வழக்குப் பதியவோ கூட முடியாத அளவிற்குப் பலமான பாதுகாப்புடன், காவி பாசிஸ்டுகளின் உற்ற தோழனாக இந்திய தேர்தல் ஆணையம் மாற்றப்பட்டிருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.

கேள்வி : எதிர்க் கட்சிகள் தோற்றுவிட்டால் ஓட்டுத் திருட்டு, எஸ்.ஐ.ஆர். மோசடி ஆகியவை நடந்துள்ளன; அவர்கள் வென்றுவிட்டால் எல்லாம் சரியாக நடந்துள்ளதா? இந்த இரட்டை நிலைப்பாடு (hypocrisy) எப்படிச் சரியானது?

ஓட்டுத் திருட்டு நடப்பதும், அதன்மூலம் பா.ஜ.க. வெல்வதும் உண்மைதான். அதேசமயம், அது எல்லா இடங்களிலும் எல்லா மாநிலங்களிலும் சரிசமமாக நடக்கவில்லை / நடக்கவும் முடியாது. அம்பலமாகாமல் இத்திருட்டுத்தனத்தைச் செய்ய வேண்டியிருப்பதால், அவ்வாறு செய்வது அவ்வளவு சுலபமானதும் அல்ல. தமக்குச் சாதகமான, தான் வெற்றி பெற்றால் சந்தேகம் வராத மாநிலங்கள், தொகுதிகளைக் குறிவைத்தே அக்கும்பல் செய்கிறது / செய்ய முடிகிறது.  

உதாரணமாக, எஸ்.ஐ.ஆர்.க்கு முன்னர் கடந்த 2019, 2024 தேர்தல்களில் பா.ஜ.க. இசுலாமியர்களை ஓட்டுப் போட விடாமல் தடுத்தது; ஓட்டு மெஷின்களைத் திருடிக் கொண்டு போனது போன்ற மோசடிகள் மூலம் தேர்தல் முடிவுகளைத் திருட முயன்றது. குறிப்பாக, 2024 தேர்தல், அதன்பிறகான பல மாநில சட்டமன்றத் தேர்தல்களின் போதும், இலட்சக் கணக்கில் போலியான வாக்காளர்களைச் சேர்ப்பது, மாலை 5-7 மணியளவில் போலி வாக்குகளைச் செலுத்துவது போன்றவற்றின் மூலம் தேர்தல் முடிவுகளைத் திருட முயன்றது. குறிப்பாக, இந்தியத் தேர்தல் வரலாற்றிலேயே மாலை 5 – 7 மணியளவில் நடக்கும் வாக்குப் பதிவுகள் 1% ஐத் தாண்டியதில்லை. ஆனால், கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் 79 தொகுதிகளில் 10 – 20% வரையில் பதிவாயிருந்தன. இவையெல்லாம் மோசடிகள் நடந்திருப்பதற்கான சான்றுகளே. இவற்றின் மூலம், தேர்தல் முடிவுகளைத் திருடி, 2024-இல் 400க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என காவி பாசிசக் கும்பல் துடித்தது. எனினும், 240 தொகுதிகளை அதனால் தாண்ட முடியவில்லை. அதாவது, அப்போதும் அதனால் 79 தொகுதிகளில்தான் அவ்வாறு முழுமூச்சில் செய்ய முடிந்தது.

எனவேதான், ஓட்டுத் திருட்டைப் புதிய பரிமாணத்தில் நடத்த 2025-இல் எஸ்.ஐ.ஆரைக் கொண்டுவந்துள்ளது. இப்போது சில மாநிலங்களில் சில கட்சிகள் வெற்றி பெறுவதை வைத்தோ, பா.ஜ.க. தோல்வியடைவதை வைத்தோ ஓட்டுத் திருட்டு நடந்துள்ளது / நடக்கவில்லை என்று முடிவுக்கு வருவது ஒருதலைப்பட்சமான பார்வையாகும்.

ஆனால், எதிர்க் கட்சிகள் இப்பிரச்சனையை இன்னும் குழப்பி துரோகமிழைக்கின்றனர். பா.ஜ.க.வின் இந்த வாதத்திற்கு வலுச் சேர்க்கின்றனர். ஓட்டுத் திருட்டு, எஸ்.ஐ.ஆர். மோசடிகள் நடந்துள்ளது உண்மை, அப்போது எல்லா மாநில சட்டமன்றங்களையும் நாடாளுமன்றத்தையும் கலைக்குமாறு கோரிக்கை வைத்துப் போராடுவதே சரியானது. மக்களைக் குழப்பும் பா.ஜ.க.வின் முயற்சியை முறியடிக்க வல்லது. ஆனால், இவர்கள் தங்கள் குறுகிய ஆட்சியதிகார நலன், சுயநலன் காரணமாக கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் ஒரு நிலைப்பாடு பிற பகுதிகளில் ஒரு நிலைப்பாடு என்று பேசித் திரிகின்றனர். இத்தகைய இரட்டைநிலைப்பாடு மக்களைக் குழப்பி பா.ஜ.க.விற்குத்தான் சாதகமாகப் போய் முடியும்.

  • கார்த்திக்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன