கொள்கை எதிரி பா.ஜ.க.வை மகிழ்விக்கவே சென்னை விமான நிலைய தனியார்மயம்

செப்டம்பர் 22, 2026
பாஜகவை கொள்கை எதிரி என அறிவிக்கும் தவெக, பொதுத்துறை மற்றும் மக்கள் சொத்துகளை தனியார் முதலாளிகளிடம் ஒப்படைக்கும் பாஜகவின் தனியார்மயப் பாதையிலேயே தொடர்ந்து பயணிக்கிறது. சென்னை விமான நிலையத்தை தனியார் கைக்கு மாற்ற வேண்டும் என்ற விஜய்யின் கோரிக்கை, அவர்களது சொல்லுக்கும் செயலுக்குமான முரண்பாட்டைத் தெளிவாக அம்பலப்படுத்துகிறது.

கல்வி, மருத்துவம், போக்குவரத்து, மின்சாரத்துறை என எல்லாத் துறைகளிலிருந்தும் தனது பொறுப்பை விலக்கிக் கொண்டு அவற்றைத் தனியார் முதலாளிகள் வசம் ஒப்படைத்துவரும் தவெக அரசு, தற்போது சென்னை விமான நிலையத்தையும் தனியார் முதலாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறது.

இது குறித்து முதலமைச்சர் விஜய், கடந்த ஆகஸ்டு மாதம் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், சென்னை சர்வதேச விமான நிலையத்தை இயக்கும் பொறுப்பை தனியார் வசம் ஒப்படைக்க கோரியிருப்பது சமீபத்தில் ஊடகங்களில் வெளியாகியிருக்கிறது. இந்த தனியார்மய நடவடிக்கையை எதிர்த்து திமுக,  சி.பி.ஐ. சி.பி.எம். என கட்சிகள் அடுத்தடுத்து தங்களது எதிர்ப்புகளைப் பதிவுசெய்து வருகின்றன.

தற்போது சென்னை விமான நிலையம் ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் “இந்திய விமான நிலைய ஆணையத்தின்” (Airports Authority of India) கட்டுப்பாட்டில் இயக்கப்படுகிறது. அதனை தனியார் வசம் ஒப்படைக்க கோரி ஆகஸ்டு மாதத்திலேயே முதலமைச்சர் விஜய் பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதும், அதனை வெளியே தெரியாமல் மறைத்ததும், கடுமையான கண்டனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.

இந்நிலையில் இது குறித்து தவெக அரசின் சார்பில் பேசியிருக்கும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், தாங்கள் விமான நிலையத்தை பராமரிப்பதற்கு மட்டுமே தனியார் பங்களிப்பை கோரியிருப்பதாகவும், விமான நிலையத்தை தனியார்வசம் ஒப்படைக்க கோரவில்லை என்றும் கூறியிருக்கிறார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை தனியார் நிறுவனங்கள் பராமரிப்பது போன்று சென்னை விமான நிலையத்தையும் தனியார் நிறுவனங்கள் பராமரிக்க வேண்டும் எனக் கோரியிருப்பதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.[1]

ஆனால் முதலமைச்சர் விஜய் மோடிக்கு எழுதிய கடிதம் குறித்து செய்தி வெளியிட்டிருக்கும் ஊடகங்கள், அந்தக் கடிதம் விமான நிலையத்தைத் தனியார் வசம் ஒப்படைக்க கோரியிருப்பதாக கூறுகின்றன.

“தனது கடிதத்தில், முதல்வர் விஜய், பயணிகள் எண்ணிக்கை, விமானங்களின் இயக்கம் மற்றும் சரக்குகள் தொடர்பான விமான நிலையத்தின் செயல்பாட்டின் சில அம்சங்கள் குறித்து அதிருப்தி தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டைப் போன்ற வணிகத்திற்கு உகந்த ஒரு மாநிலத்திற்கு, முதலீடு மற்றும் தொழில்துறையை ஆதரிக்க சிறந்த விமான நிலைய மேலாண்மை தேவை என்று அவர் வாதிட்டிருக்கிறார். எனவே, இந்திய விமான நிலைய ஆணையத்தைத் (AAI) தவிர வேறு ஒரு அமைப்பிடம் இந்த விமான நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைக்கும்படி கோரியிருக்கிறார்..” என முதலமைச்சர் விஜய் எழுதிய கடிதம் குறித்துச் செய்தி வெளியிட்டுள்ள தி பிரின்ட் இணையதளம் கூறியிருக்கிறது.[2] 

“இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) தரவுகளை மேற்கோள் காட்டி எழுதப்பட்ட அந்தக் கடிதம், ஏப்ரல் 2026 நிலவரப்படி, பயணிகள் போக்குவரத்தில் சென்னை, கொல்கத்தாவிற்கு கீழே, தேசிய அளவில் ஆறாவது இடத்திற்குச் சரிந்துள்ளதாக குறிப்பிடுகிறது…. அதுமட்டுமன்றி சரக்குப் போக்குவரத்தில் 2026ஆம் ஆண்டு மே மாத கணக்கின் படி சென்னை விமான நிலையம் சராசரியாக 6% அளவிற்கு மட்டுமே வளர்ச்சியடைந்திருப்பதாகவும், இதே காலகட்டத்தில் பெங்களூரு விமான நிலையம் 14.5% வளர்ச்சியடைந்திருப்பதாகவும் கடிதம் சுட்டிக்காட்டுகிறது… இந்த விமான நிலையத்தின் செயல்பாடுகள், நிர்வாகம் மற்றும் எதிர்கால மேம்பாடு ஆகியவற்றை ஒரு புதிய இயக்குநரிடம் ஒப்படைப்பது தொடர்பாக, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவெடுக்குமாறு அந்தக் கடிதம் வலியுறுத்துகிறது.” என நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.[3]

முதலமைச்சர் விஜய் எழுதியிருக்கும் கடிதத்தில், சென்னை விமான நிலையத்தை இயக்கும் பொறுப்பை இந்திய விமான நிலைய ஆணையத்திடமிருந்து பிடுங்கி வேறு ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனத் தெளிவாகக் கூறியிருக்கும் நிலையில். நாங்கள் விமான நிலைய பராமரிப்பைத் தான் தனியார் வசம் ஒப்படைக்க கோரியிருக்கிறோம் என சட்டத்துறை அமைச்சர் கூசாமல் பொய் பேசுகிறார்.

தற்போது விமான நிலைய தனியார்மயத்தை எதிர்த்துக் குரல் கொடுக்கும் திமுக, தான் ஆட்சியில் இருந்த போதும் அதனை எதிர்த்தது என்பது உண்மைதான். ஆனால் தனியார் முதலாளிகளின் இலாப வெறியின் காரணமாக பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக அப்போது திமுக அதனை எதிர்க்கவில்லை. விமான நிலையத்தை தனியாருக்குக் கொடுத்தால் அவர்களது இலாபத்தில் மாநில அரசுக்கும் பங்கு வேண்டும் என்று கேட்டுத்தான் திமுக அதனை எதிர்த்தது.

2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழக சட்டமன்றத்தில் இது குறித்த அதிகாரப்பூர்வ கொள்கை குறிப்பை (Formal Policy Note) திமுக அரசு அன்றைக்கு வெளியிட்டது. விமான நிலையம் கட்டுவதற்கான இடத்தை தமிழ்நாடு மாநில அரசு, இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு இலவசமாக கொடுத்திருக்கிறது, எனவே அதனைத் தனியார் முதலாளிகளுக்குக் கொடுத்தால் அவர்கள் தங்களது இலாபத்தில் ஒரு பகுதியை தமிழ்நாடு அரசுக்கும் கொடுக்க வேண்டும் என அந்தக் கொள்கைக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதாவது விமான நிலையத்தை தனியார் முதலாளிகளுக்குக் கொடுங்கள் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை ஆனால் அவர்கள் அடிக்கும் கொள்ளையில் மாநில அரசுக்கும் பங்கு கொடுங்கள் என திமுக கேட்டிருக்கிறது. ஆனால் இன்றோ பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என வேடம் போடுகிறது.

நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களைத் தனியார் முதலாளிகள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்பது ஒன்றிய பாஜக அரசின் முடிவு. அதன்படி இதுவரை ஆறு முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. அகமதாபாத், லக்னோ, மங்களூரு, ஜெய்ப்பூர், கௌஹாத்தி, திருவனந்தபுரம் என இந்த ஆறு விமான நிலையங்களும் அதானியின் வசம் அடுத்த 50 ஆண்டுகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது தவிர 11 விமான நிலையங்களைத் தனியாருக்கு ஒப்படைப்பதென்பது ஒன்றிய அரசின் உடனடித் திட்டத்திலும், 25 விமான நிலையங்களைத் தனியார்மயமாக்குவது நீண்ட காலத் திட்டத்திலும் இருக்கிறது. இவை அனைத்தும் நிச்சயமாக அதானியின் கையில் கொடுக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

2020ஆம் ஆண்டில் கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானியின் வசம் ஒப்படைக்கும் முடிவை ஒன்றிய அரசு எடுத்த போது, அப்போதைய சிபிஎம் அரசின் முதலமைச்சர் பினராயி விஜயன் அதனைக் கடுமையாக எதிர்த்தார். கேரளாவின் கொச்சி, கண்ணூர் விமான நிலையங்கள் மாநில அரசு நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுவது போல திருவனந்தபுரம் விமான நிலையத்தையும் மாநில அரசிடமே கொடுக்க வேண்டும் என அவர் கடிதம் எழுதினார். இதற்காக கேரள மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தார். ஆனால் அதனை ஒன்றிய அரசு கண்டுகொள்ளவில்லை. அதானியிடம் விமான நிலையங்களைக் கொடுக்க வேண்டும் என்பதில் அது குறியாக இருந்தது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை, சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களைத் தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும் என ஒன்றிய அரசு 10 ஆண்டுகளுக்கும் மேலாக முயற்சித்து வருகின்றது. இதற்கு முன்னதாக ஆட்சியில் இருந்த அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் இந்த தனியார்மய நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில் தற்போது தவெக அரசு தனியார்மயத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது.

விமான நிலையத்தை பராமரித்து இயக்குவதற்காக ஒவ்வொரு பயணியிடமிருந்தும், பயனாளர் மேம்பாட்டுக் கட்டணம் அவர்களது விமானக் கட்டணத்துடன் சேர்த்தே வசூலிக்கப்படுகிறது. சென்னை விமான நிலையத்தின் மூலமாக உள்நாட்டு விமானத்தில் பயணிப்பவர்களுக்கு 465 ரூபாயும், வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்கு 690 ரூபாயும் தற்போது பயனாளர் மேம்பாட்டுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதுவே தனியார் முதலாளிகள் வசம் விமான நிலையம் ஒப்படைக்கப்பட்டால் இந்தக் கட்டணம் பலமடங்கு அதிகரிக்கும். திருவனந்தபுரம் விமான நிலையம் இந்திய விமான நிலைய ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருந்த போது உள்நாட்டுப் பயணத்திற்கு 250 ரூபாய் என்றும் வெளிநாட்டுப் பயணத்திற்கு 400 ரூபாய் என்றும் பயனாளர் மேம்பாட்டுக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதுவே அதானியின் கையில் சென்ற பிறகு 840 ரூபாய் என்றும், 1,680 ரூபாய் எனவும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டது.

இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு, சென்னை விமான நிலையம் 2024-25ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 492.48 கோடி ருபாய் இலாபத்தை ஈட்டித் தந்திருக்கிறது. தனியார் முதலாளிகள் கையில் போனால் இந்த இலாபம் நிச்சயமாகப் பல மடங்கு அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அப்படி அதிகரிக்கும் அந்த இலாபத்தை அப்படியே அதானியின் சட்டைப்பையிற்கு மடைமாற்றிவிட வேண்டும் என ஒன்றிய அரசு விரும்புகிறது. ஒன்றிய அரசின் விருப்பத்தை ஈடு செய்வதற்காகவே இந்த கோரிக்கையை தற்போது விஜய் எழுப்பியிருக்கிறார்.

சென்னை விமான நிலையத்தில் நிர்வாகக் குறைபாடுகள் இருந்தால் அவற்றைச் சரிசெய்வது அரசின் பொறுப்பு. பயணிகளுக்குத் தேவையான வசதிகளை உருவாக்குவதும், விமானப் போக்குவரத்தை விரிவுபடுத்துவதும், சரக்குப் போக்குவரத்துக்கான கட்டமைப்பை மேம்படுத்துவதும் அரசின் முதலீட்டின் மூலமாகவே செய்ய முடியும். அதற்குப் பதிலாக, ஏற்கனவே வருவாய் ஈட்டிக்கொண்டிருக்கும் ஒரு பொதுச் சொத்தினை இயக்குகின்ற பொறுப்பை தனியார் முதலாளிகளிடம் ஒப்படைப்பது நிர்வாகக் குறைபாட்டுக்கான தீர்வு அல்ல; அது பொதுச் சொத்திலிருந்து வரும் வருவாயை தனியார் முதலாளிகளுக்கு மாற்றும் கொள்கையின் ஒரு பகுதியே.

பாஜக எங்கள் கொள்கை எதிரி என்று கூறும் தவெகவும் அதன் தலைவர் விஜய்யும், பாஜகவின் எந்தக் கொள்கைக்கு தாங்கள் எதிரி என்று வெளிப்படையாகக் கூறுவதில்லை. பொதுத்துறை நிறுவனங்களையும் மக்கள் சொத்துக்களையும் தனியார் முதலாளிகளிடம் ஒப்படைப்பது ஒன்றிய பாஜக அரசின் முக்கியமான பொருளாதாரக் கொள்கைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. நாட்டின் முக்கிய விமான நிலையங்களை அதானியிடம் நீண்டகால குத்தகை முறையில் ஒப்படைத்திருப்பதும் இதன் ஒரு பகுதிதான். இந்த நிலையில், பாஜகவை கொள்கை எதிரி என்று கூறிக்கொள்ளும் தவெக அரசு, சென்னை விமான நிலையத்தை தனியாருக்கு மாற்றும்படிக் கோரியிருப்பதன் மூலம் தங்களது கொள்கைக்கும் பாஜகவின் கொள்கைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது.

  • சந்திரன்

 

[1] https://www.newindianexpress.com/states/tamil-nadu/2026/Sep/20/transfer-operations-of-chennai-airport-its-private-participation-not-privatisation-says-ctr-nirmal-kumar

[2] https://theprint.in/politics/dmk-left-take-aim-at-vijay-for-seeking-handover-of-chennai-airport-to-private-operator-in-letter-to-modi/3047318/

[3] https://www.newindianexpress.com/states/tamil-nadu/2026/Sep/20/chennai-airport-privatisation-bid-cm-vijay-cites-falling-airport-standards-to-demand-ouster-of-aai

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன