அறிவுலகத்திலும் அரசியல் ஆதாயத்திற்காக லாவணி பாடும் திமுக–தவெக

கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்கான புத்தகக் கொள்முதலில் மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நூலகத்தை உருவாக்கிய பெருமையைத் திமுகவும், திறந்து வைத்த பெருமையைத் தவெகவும் போட்டிபோட்டு உரிமை கோரிய நிலையில், முறைகேடு குறித்த கேள்விகள் எழுந்ததும் இரு கட்சிகளும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டத் தொடங்கியுள்ளன.

கோவை காந்திபுரத்தில் ‘பெரியார் அறிவுலகம்’ என்ற பெயரில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள நூலகத்திற்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக எழுத்தாளர் பெருமாள் முருகன் இணைய இதழ் ஒன்றில் விரிவான கட்டுரை ஒன்றை எழுதிய பிறகுதான், இப்பிரச்சினை தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக அறிவுத்துறையினர் மத்தியில், பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அரசு நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதல் என்பது மாநிலம் முழுவதும் உள்ள நூலகங்களின் தேவைகளைக் கருத்தில்கொண்டே மேற்கொள்ளப்படும். இதற்காகப் பல பதிப்பகங்கள் நூலகப் பயன்பாட்டிற்கெனத் தனிப்பதிப்புகளை அச்சிட்டு விற்பனை செய்கின்றன. இவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விற்பனை செய்யப்படும் பதிப்புகளைவிடச் சற்றுக் கூடுதல் தரத்துடனும் அதிக விலையுடனும் இருக்கும். சில சமயங்களில், ஏற்கெனவே அச்சிடப்பட்டு நூலகங்களுக்கென விற்பனை செய்யப்பட்ட நூல்களையே புதிய தலைப்புகளில் மீண்டும் அச்சிட்டு விற்பனை செய்வதும் உண்டு.

ஆனால், பெரியார் அறிவுலகத்திற்காகக் கொள்முதல் செய்யப்பட்டுள்ள புத்தகங்கள் அளவுக்கு அதிகமான விலை கொண்டவையாகவும், தரம் குறைந்தவையாகவும் இருக்கின்றன. அதுமட்டுமின்றி, அவற்றின் உள்ளடக்கமும் நம்பகத்தன்மையற்றதாகவும் போலியானதாகவும் உள்ளது. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, தப்பும் தவறுமாக உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களைக் கொண்ட புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாகப் பெருமாள் முருகன் தனது கட்டுரையில், தமிழ் நூல்களைப் பொறுத்தவரை 300 பக்கங்கள் கொண்ட ஒரு நூலின் சராசரி விலை 350 ரூபாயாகவே இருக்கும் எனக் குறிப்பிடுகிறார். ஆனால், பெரியார் அறிவுலகத்திற்கான கொள்முதலில் சில நூல்கள் தலா 1,500 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டுகிறார்.

கொள்முதல் செய்யப்பட்ட நூல்களில் தமிழ் இலக்கியம் மற்றும் வரலாறு குறித்த அடிப்படைத் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. நாலடியார் தனி ஆசிரியரால் எழுதப்பட்ட நூலாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதுடன், மதுரைக்காஞ்சியின் ஆசிரியராக மாங்குடி மருதனாருக்குப் பதிலாக வேறொருவர் குறிப்பிடப்பட்டுள்ளார். பாரதியாரின் பெயரில் அவர் எழுதியதாக உறுதிப்படுத்தப்படாத கதைகள் இடம்பெற்றுள்ளன. கீழடி அகழாய்வில் கிடைத்ததாகக் கூறி, அங்கு கண்டெடுக்கப்படாத நந்தி சிலையின் படம் ஒன்றும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ்நாட்டின் வரலாற்றை விவரிக்கும் நூலிலும் வரலாற்று உண்மைகளுக்குப் புறம்பான தகவல்களும் தவறான பெயர்களும் இடம்பெற்றுள்ளன. உதாரணத்திற்கு சென்னை மாகாணத்தின் முதல் பிரதமர் முத்துவேலு சுப்பையா ஐயர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முறைகேட்டுக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள நூல்கள் அகல் விளக்கு, பீனிக்ஸ் ஆகிய இரண்டு பதிப்பகங்களைச் சேர்ந்தவையாகும். குறிப்பாக, அகல் விளக்கு பதிப்பகம் சுமார் 1,800 தலைப்புகளிலும், பீனிக்ஸ் பதிப்பகம் நூற்றுக்கும் மேற்பட்ட தலைப்புகளிலும் நூல்களை வெளியிட்டுள்ளன. இவற்றில் பல நூல்களின் ஆசிரியர் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்படாததுடன், பதிப்பகங்களின் முகவரி, தொடர்பு விவரங்கள், ISBN எண்கள் ஆகியவற்றின் நம்பகத்தன்மையும் கேள்விக்குள்ளாகியுள்ளது.

கொள்முதல் செய்யப்பட்ட நூல்களின் ஆசிரியர்கள் குறித்தும் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அகல் விளக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல்களில் திரிஷா விஜய், சூர்யா பாலு, மோனிகா ரவி, லட்சுமி மோகன், தாமரை பன்னீர், தாமரை முரளி உள்ளிட்ட சில குறிப்பிட்ட பெயர்களில் ஏராளமான நூல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்தப் பெயர்களுக்குப் பின்னால் உண்மையான எழுத்தாளர்கள் இருக்கிறார்களா, அவர்கள் அந்த நூல்களை எழுதியவர்கள்தானா, அல்லது புனைப்பெயர்களைப் பயன்படுத்தி ஒரே குழுவினர் பல நூல்களை உருவாக்கியுள்ளனரா என்ற சந்தேகமும் எழுகிறது.

பிரச்சனைக்குரியதாக கூறப்படும் நூல்கள் பெரும்பாலும் அவசர கதியில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்றே தெரிகிறது.

மொத்தத்தில் போலியான பெயர்களில், போலியான நூல்கள், செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் உருவாக்கப்பட்டு, மிக அதிக விலைக்கு நூலகத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த நூலகத்திற்கான புத்தகக் கொள்முதல் ஒப்பந்தங்கள் திமுக ஆட்சிக்காலத்தில்தான் வெளியிடப்பட்டு உறுதி செய்யப்பட்டன என்று கூறி, தவெக தரப்பினர் ஒருபுறம் திமுகவின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். மறுபுறம், சர்ச்சைக்குரிய நூல்கள் அனைத்தும் 2026 ஜூன் மாதத்தில், அதாவது தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன என்று கூறி திமுக தரப்பினர் தவெகவின் மீது குற்றம்சாட்டி வருகின்றனர். இரு தரப்பினரும் மாறி மாறி மாநில இலஞ்ச ஒழிப்புத் துறையில் புகார்களை அளித்துள்ளனர். தற்போது இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கும் சென்றுள்ளது.

அதேசமயம், இத்தகைய முறைகேடுகள் கோவை நூலகத்துடன் மட்டும் முடிந்துவிடவில்லை; மாநிலத்தின் பிற நூலகங்களிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளது. இதற்கு உதாரணமாக, தென்காசி மாவட்ட மைய நூலகத்திலிருந்து அகல் விளக்கு பதிப்பகம் வெளியிட்ட சுமார் 2,200 நூல்கள் அகற்றப்பட்டுத் தனியாக வைக்கப்பட்டுள்ளதாக ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த முறைகேடு என்பது வெறுமனே பணம் சம்பந்தப்பட்ட ஒன்றல்ல. பொது நூலகங்களுக்கு அதிக விலை கொடுத்து தரமற்ற புத்தகங்களைக் கொள்முதல் செய்திருப்பது அரசுப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய செயலாகும். ஆனால், இந்தப் பிரச்சினை அதையும் தாண்டிய முக்கியத்துவம் கொண்டது. பொது நூலகங்கள் என்பவை வெறுமனே புத்தகங்களைச் சேமித்து வைக்கும் கட்டடங்கள் அல்ல. அவை ஒரு சமூகத்தின் அறிவு, வரலாறு, பண்பாடு, அறிவியல், இலக்கியம் ஆகியவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் நிறுவனங்களாகும்.

அத்தகைய நூலகங்களுக்குள் போலியான எழுத்தாளர்களின் பெயர்களில், ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட நூல்கள் இடம்பெற்றிருந்தால், அது நூலகங்களின் அடிப்படை நோக்கத்தையே சிதைத்துவிடும்.

கோவை பெரியார் அறிவுலகத்தைச் சுற்றியுள்ள அரசியல் போட்டி, இந்த நூலகம் திறக்கப்பட்ட நாளிலிருந்தே தொடங்கிவிட்டது. சுமார் 300 கோடி ரூபாய் செலவில் திமுக ஆட்சிக்காலத்தில் திட்டமிடப்பட்டுக் கட்டப்பட்ட இந்த நூலகத்தை, அக்டோபர் 16 அன்று முதலமைச்சர் விஜய் கோவைக்குச் சென்று திறந்து வைத்தார். இதற்காக அவர் தனி விமானத்தில் கோவை வந்து, விமான நிலையத்திலிருந்து நூலகம் வரை சுமார் 11 கிலோமீட்டர் தூரம் சாலைப் பேரணி மேற்கொண்டார். பெரியார் சிலையையும் நூலகக் கல்வெட்டையும் திறந்து வைத்ததோடு, நூலகத்தின் பல்வேறு பிரிவுகளையும் பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார். பார்வையாளர் பதிவேட்டில், “Learn More, Fear Less” (அதிகம் அறிந்து கொள்; அச்சம் குறையும்) என்றும் எழுதினார். இவ்வாறு நூலகத் திறப்பு விழா முதலமைச்சர் விஜய்க்கான அரசியல் நிகழ்வாகவும், தவெகவினரின் கொண்டாட்டமாகவும் முன்னிறுத்தப்பட்டது.

ஆனால், அதே நாளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “யார் திறந்தால் என்ன? திறந்து வைப்பதா பெருமை? எதையும் திட்டமிட்டு உருவாக்குவதுதானே உண்மையான பெருமை! தமிழ்நாட்டில் அந்தப் பெருமை திமுகவுக்கே உரியது” என்று குறிப்பிட்டார். அதாவது, நூலகத்தை விஜய் திறந்து வைத்திருந்தாலும், அதை உருவாக்கிய பெருமை திமுகவையே சாரும் என்று அவர் உரிமை கோரினார். இதன் தொடர்ச்சியாக, நவம்பர் 4 அன்று திராவிடர் கழகம் சார்பில் கோவை வ.உ.சி. மைதானத்தில் ஸ்டாலினுக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதில் பேசிய ஸ்டாலின், பெரியார் அறிவுலகத்தின் 99 சதவீதப் பணிகள் திமுக ஆட்சியிலேயே நிறைவடைந்துவிட்டதாகவும், தமது ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட மறக்க முடியாத சாதனைகளில் இதுவும் ஒன்று என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இவ்வாறு, நூலகத்தைத் திறந்து வைத்த பெருமையைத் தவெகவும், அதைத் திட்டமிட்டு உருவாக்கிய பெருமையைத் திமுகவும் போட்டிபோட்டு உரிமை கோரின.

ஆனால், இந்தப் பெருமைப் போட்டி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. நூலகத்திற்காகக் கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தவுடன், இதுவரை அந்த நூலகத்தின் பெருமைக்காக உரிமை கோரி வந்த இரு கட்சிகளும், அதன் நிர்வாகப் பொறுப்பிலிருந்து விலகி நிற்கும் வகையில் ஒருவரையொருவர் குற்றம்சாட்டத் தொடங்கிவிட்டன. திமுக ஆட்சிக்காலத்தில்தான் கொள்முதல் ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டன என்று தவெக குற்றம்சாட்டுகிறது; மறுபுறம், சர்ச்சைக்குரிய நூல்கள் தவெக ஆட்சிக்காலத்தில்தான் கொள்முதல் செய்யப்பட்டன என்று திமுக பதிலடி கொடுக்கிறது. நூலகத்தின் பெருமையைப் பகிர்ந்துகொள்ள இரு தரப்பினரும் போட்டிபோட்ட நிலையில், முறைகேடு குறித்த கேள்விகள் எழுந்ததும் பொறுப்பை மட்டும் ஒருவர் மீது ஒருவர் சுமத்திக்கொள்கின்றனர். நூலகத்தை உருவாக்கியதில் தங்களுக்குப் பங்கிருப்பதாகப் பெருமை பேசும் இரு கட்சிகளும், அதற்கான புத்தகக் கொள்முதலில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டிய கடமையிலிருந்து தப்பிக்க முயற்சிக்கின்றன.

மக்களின் பிரச்சனைகளை மறந்து, ஒருவர் மீது ஒருவர் பழிபோடுவதும், தனிநபர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முக்கியத்துவமளிப்பதும் தான் இன்றைக்குத் தவெக திமுக ஆகிய இரண்டு கட்சிகள் தமிழ்நாட்டில் நடத்தி வரும் அரசியலாக இருக்கிறது. இதற்குத்தான் இன்றைக்கு ஊடகங்கள் அனைத்தும் முக்கியத்துவம் கொடுத்துப் பேசி வருகின்றன.

  • சந்திரன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன