வாக்குரிமை திருட்டு: தில்லி, தெலுங்கானா, கர்நாடகாவில் எஸ்.ஐ.ஆர். முறைகேடுகள்

அக்டோபர் 22, 2026
தில்லி, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். நடைமுறையின் போது இஸ்லாமிய வாக்காளர்களைக் குறிவைத்து ஆயிரக்கணக்கான பெயர்கள் சட்டவிரோதமாக நீக்கப்பட்டிருப்பது கள ஆய்வுகள் மூலம் அம்பலமாகியுள்ளது. "தர்க்கரீதியான முரண்பாடுகள்", ஏ.எஸ்.டி.டி. வகைப்பாடு, படிவம் 7 ஆகியவற்றின் பெயரில் நடைபெற்ற இந்த முறைகேடுகள் தேர்தல் ஆணையம் காவி பாசிச சக்திகளின் கைப்பாவையாக மாறியிருப்பதை அம்பலப்படுத்துகின்றன.

காவி பாசிச சக்தியான பாஜகவின் தேர்தல் வெற்றியை உறுதி செய்வதற்காக, இந்தியத் தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்திய எஸ்.ஐ.ஆர்.இல் நடைபெற்ற முறைகேடுகள் அம்பலமாகி தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், எஸ்.ஐ.ஆர்.க்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்கள் செல்லாது என அறிவித்து பழைய வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் எனக் கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தச் சூழலில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் (எஸ்.ஐ.ஆர்.) இறுதிக் கட்டம் தில்லி, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் பீகார் தொடங்கி தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் என பல்வேறு மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். நடைமுறைப்படுத்தப்பட்டபோது வாக்காளர் பட்டியலில் பல்வேறு மோசடிகள் நடைபெற்றது அம்பலமானது. தற்போதும் அதே போல மோசடி வேலைகள் நடந்திருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

தில்லி: அரை நூற்றாண்டாக வசிப்பவர்களுக்கு வாக்காளர் பட்டியலில் இடமில்லை!

தில்லியில் எஸ்.ஐ.ஆர். முடிந்து புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, “தர்க்கரீதியான முரண்பாடுகள்” உள்ளதாகக் கூறி தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் குறித்து, தி இந்து நாளிதழ் ஒரு ஆய்வை வெளியிட்டிருக்கிறது. அதன் படி இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களைக் குறிவைத்து நீக்குவதற்காக இந்த வகைப்படுத்தல் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

ஒரு குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலோ, அல்லது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருந்தாலோ அவர்கள் “தர்க்கரீதியான முரண்பாடுகள்” என்ற பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இது போல குடும்ப உறவுகள் சம்பந்தப்பட்ட 5 கேள்விகள் எஸ்.ஐ.ஆர்.-இல் சேர்க்கப்பட்டு அதனடிப்படையில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டிருக்கிறது.

இதற்கு முந்தைய எஸ்.ஐ.ஆர்.இல் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களும் கூட தற்போது நீக்கப்பட்டிருக்கின்றனர். வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று தேர்தல்களின் போது வாக்களிக்க ஒருவருக்கு 18 வயது நிரம்பியிருந்தால் போதும் என்பதுதான் சட்டம். ஆனால் அவருடன் எத்தனை பேர் பிறந்தார்கள், அவர்களுக்கும் பெற்றோருக்கும் வயது வித்தியாசம் என்ன என்பது போன்ற கேள்விகள் எல்லாம் எதற்காக கேட்கப்படுகின்றன? குழந்தைகள் அதிகம் கொண்ட இஸ்லாமியக் குடும்பங்களைக் குறிவைத்தே இவ்வாறு நீக்கும் நடைமுறை இணைக்கப்பட்டுள்ளது.

தில்லியின் வரைவு வாக்காளர் பட்டியலில் இஸ்லாமியர்கள் 13.6% பேர் உள்ளனர். இது 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு இணையாக உள்ளது. ஆனால் அடுத்த 15 ஆண்டுகளில் வாக்களிக்கும் வயதை அடைந்தவர்களுக்கு நிகரான எண்ணிக்கையில் இஸ்லாமியர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். அதாவது வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, “தர்க்கரீதியான முரண்பாடுகள்” என்ற பிரிவில் சேர்க்கப்பட்டவர்களில் 20.3% பேர் இஸ்லாமியர்கள். குடும்ப அளவு தொடர்பான ஐந்து காரணங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 30% வரை உயர்கிறது.

அது மட்டுமன்றி ஒரே இடத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தவர்களது பெயர்களும் கூட காணாவில்லை எனக் கூறி பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஜன் சரோகர், வோட்டர் அதிகார் மன்ச், மஸ்தூர் கிசான் சக்தி சங்கதன் (MKSS) மற்றும் தேசிய இந்திய மகளிர் கூட்டமைப்பு (NFIW) ஆகிய அமைப்புகளின் கூட்டமைப்பு நடத்திய கள ஆய்வில் இவை வெளிவந்துள்ளன.

தில்லியின் ஒக்லா பகுதியில் உள்ள பட்லா ஹவுஸின் ஜி மற்றும் கே பிளாக்குகளில் அமைந்துள்ள இரண்டு வாக்குச்சாவடிகளில், உழைக்கும் வர்க்கத்தினர் வசிக்கும் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்தப்பட்டது. ஏழு நாட்களாக 258 குடும்பங்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறைந்தது 100 வாக்காளர்கள் தவறாக வகைப்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் காணாமல் போனவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் அல்லது இரட்டைப் பதிவுகளைக் கொண்டவர்கள் என வகைப்படுத்தப்பட்டிருந்தனர்.

ஜாமியா மில்லியா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் இயந்திரவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற 74 வயதான ஃபையாஸ் அகமது, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே முகவரியில் வசித்து வருபவர். அவரது மகன், பெற்றோர் இருவருக்குமான கணக்கெடுப்புப் படிவங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறியபோதிலும், ஃபையாஸ் அகமது “கண்டறிய முடியாதவர் அல்லது முகவரியில் இல்லாதவர்” என்று வகைப்படுத்தப்பட்டிருந்தார். அவரது மனைவி அஞ்சும் ஆரா, “நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்” என்று குறிக்கப்பட்டிருக்கிறார்.

மற்றொரு வாக்காளரான நயீமுதீன், 48, முப்பது ஆண்டுகளாக ஒரே முகவரியில் வசித்து வருவதாகவும், வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) தன்னைச் சந்தித்து புகைப்படம் எடுத்து கையொப்பம் பெற்றிருந்ததாகவும் கூறுகிறார். இருந்தபோதிலும், அவர் நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர் என்று வகைப்படுத்தப்பட்டிருக்கிறார்.

இரண்டு வாக்குச் சாவடிகளில் 258 குடும்பங்களில் நடைபெற்ற ஆய்வில் 100 பேர் நீக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இதுவே மாநிலம் முழுவதும் உள்ள நிலைமைக்கு ஒரு சோற்றுப் பதம்.

வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்களை தில்லியில் உள்ள வாக்குச் சாவடிகளில் தேர்தல் ஆணையம் நடத்தியது. ஆனால் இந்த முகாம்களில் விண்ணப்பிக்க வந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் மனுக்களை வாங்குவதற்குக் கூட அதிகாரிகள் வரவில்லை என அப்பகுதியில் இருக்கும் மக்கள் கூறுகிறார்கள். இதுதான் விடுபட்டவர்களை மீண்டும் பட்டியலில் சேர்ப்பதற்காக இந்தியத் தேர்தல் ஆணையம் வேலை செய்த இலட்சணம்.

தில்லியின் நிலைமை இதுவென்றால் தெலுங்கானாவிலோ எஸ்.ஐ.ஆர். நடைமுறையின் போது தங்களது வீட்டில் இல்லாதவர்கள் அனைவரும் காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

தெலுங்கானா: 73.39 லட்சம் வாக்காளர்களைக் காணவில்லை

தெலுங்கானாவில் வெளியாகியிருக்கும் வரைவு வாக்காளர் பட்டியலில் 73.39 இலட்சம் வாக்காளர்கள் ஏ.எஸ்.டி.டி. (ASDD) என்ற பிரிவின் படி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர். ஏ.எஸ்.டி.டி. என்பது Absent, Shifted, Dead, Duplicate – அதாவது இல்லாதவர், இடம்பெயர்ந்தவர், இறந்தவர், இரட்டைப் பதிவு கொண்டவர் என்பதைக் குறிக்கிறது.

அவர்களில் 9,22,229 பேர் இறந்தவர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். தெலுங்கானாவின் 119 சட்டமன்றத் தொகுதிகளில் 104 தொகுதிகளுக்கான தேர்தல் ஆணையத் தரவுகளை ஆய்வு செய்த சபார் இன்ஸ்டிடியூட் மற்றும் அரசியலமைப்புப் பாதுகாவலர்கள் மன்றம் ஆகிய அமைப்புகள், ஏ.எஸ்.டி.டி. பட்டியலில் 53.97 லட்சம் பெயர்கள் இருப்பதாகக் கண்டறிந்துள்ளது. ஹைதராபாத் மாவட்டத்தில் மட்டும் இந்த வகைப்பாட்டில் 19,41,444 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

இவ்வளவு பேர் இந்தக் காரணத்தைக் கூறி நீக்கப்பட்டிருப்பதற்கு ஒரு அடிப்படை இருக்கிறது. அது வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்க வேண்டிய அதிகாரிகள் யாரும் வீடுகளுக்குச் செல்லவில்லை. மாறாக மக்கள் தங்களுக்கான படிவங்களைப் பெறுவதற்காகச் சமூகக் கூடங்கள், குடியிருப்போர் நலச் சங்கக் கட்டடங்கள் அல்லது சிறப்பு முகாம்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது. அவ்வாறு போக முடியாதவர்களது பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது.

தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருந்த சில அலுவலர்களின் தொடர்பு விவரங்கள் பயனற்றவையாக இருந்ததாகவும், இணையதளத்தில் குறிப்பிடப்பட்ட அலுவலருக்கும் முகாமில் இருந்த அலுவலருக்கும் இடையே முரண்பாடுகள் இருந்ததாகவும் மக்கள் கூறுகிறார்கள். சிலரால் தங்களுடைய படிவங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய அலுவலர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

அவ்வாறு தங்களது படிவங்களைத் தாங்களே கொண்டு சென்று பதிவு செய்தபோதும் பலரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதற்குத் தொழில்நுட்பக் கோளாறு காரணம் என தேர்தல் ஆணையத்தின் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இந்த தொழில்நுட்பக் கோளாறு என்பது ஏன் பெரும்பாலும் இஸ்லாமிய வாக்காளர்களின் பெயர்களில் ஏற்படுகின்றது என்பதற்கு தேர்தல் ஆணையத்திடம் பதில் இல்லை.

இஸ்லாமியர்களின் பெயர்களில் வாக்காளர் பட்டியலில் எழுத்துப் பிழை இருந்தாலோ அல்லது அது ஆதார் அட்டையிலுள்ள பெயருடன் ஒத்துப் போகவில்லை என்றாலோ அவர்களது பெயர் நீக்கப்பட்டுள்ளது. தரவுகளை ஸ்கேன் செய்யும் போது ஏற்பட்ட பிழை, ஒரே மாதிரியான பெயர்களைக் கொண்ட பதிவுகளை இணைத்தல், பழைய மற்றும் புதிய அடையாள எண்களுக்கிடையிலான முரண்பாடு போன்றவை சிறிய தவறுகள் அல்ல; அவை ஒரு வாக்காளரின் வாக்களிக்கும் உரிமையைப் பறிக்கிறது. ஆனால் அவற்றை தொழில்நுட்பக் கோளாறுகள் எனக் கூறி தேர்தல் ஆணையம் கடந்து செல்ல விரும்புகிறது.

தில்லியில் இஸ்லாமியர்களைக் குறிவைத்து “தர்க்கரீதியான முரண்பாடுகள்” பட்டியலில் சேர்த்தது போலவே தெலுங்கானாவிலும் நடைபெற்றுள்ளது. ஹைதராபாத் மாவட்டத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களில் 47.8 விழுக்காட்டினர் பெண்கள். மேலும், பெயர்களின் அடிப்படையில் முஸ்லிம்களாக வகைப்படுத்தப்பட்ட வாக்காளர்களில் 19.8 விழுக்காட்டினர் “கண்டறிய முடியாதவர்/இல்லாதவர்” என்று குறிக்கப்பட்டிருக்கிறது.

கர்வான் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 103-இல், தர்க்கரீதியான முரண்பாடுகள் தொடர்பாக வழங்கப்பட்ட 678 அறிவிப்புகளில் 601 அறிவிப்புகள் முஸ்லிம் பெயர்களைக் கொண்ட வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன; சார்மினார் தொகுதியின் வாக்குச்சாவடி எண் 33-இல் இந்தப் பங்கு 98.3 விழுக்காடாக இருக்கிறது. அதாவது இந்த வாக்குச் சாவடிகளில் இந்தப் பிரிவின் கீழ் நீக்கப்பட்ட எல்லோரும் இஸ்லாமியர்களாக இருக்கின்றனர்.

கர்நாடகா: வாக்காளர்கள் பெயரை நீக்க கோரும் 28,832 படிவங்கள் எங்கே?

கர்நாடக மாநிலத்தில் ஜூன் 16 முதல் அக்டோபர் 8 வரை, வாக்காளர்களின் பெயர்களை நீக்கக் கோரும் படிவம் 7-ன் கீழ் 1,10,654 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகக் கம்மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் தெரிவித்திருந்தது.

ஆனால், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் அதே காலப்பகுதிக்கான 81,822 விண்ணப்பங்களின் விவரங்களே வெளியிடப்பட்டுள்ளன. எஞ்சிய 28,832 விண்ணப்பங்களின் விவரங்கள் பொதுமக்களுக்குக் கிடைக்கவில்லை. இது அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையில் சுமார் 26 விழுக்காடாகும். இந்த விண்ணப்பங்கள் எந்தத் தொகுதிகளைச் சேர்ந்தவை, யார் அவற்றைச் சமர்ப்பித்தனர், யாருடைய பெயர்களை நீக்கக் கோரினர் என்பது வெளிப்படையாகக் கூறப்படவில்லை.

இம்மாநிலத்தில் உள்ள பல்லாரி நகரச் சட்டமன்றத் தொகுதியில் படிவம் 7-ன் கீழ் வாக்காளர்களை நீக்க கோரி 7,561 விண்ணப்பங்கள் ஒரே நபரால் தாக்கல் செய்யப்பட்டன. ஸ்ரீனிவாஸ் மோத்கூர் என்ற பல்லாரி மாநகராட்சியின் பாஜக வாக்குச்சாவடி முகவரால் இவை தாக்கல் செய்யப்பட்டன. இவை அனைத்தும் அந்தத் தொகுதியில் இருக்கும் இஸ்லாமிய வாக்காளர்களை நீக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட படிவங்கள்.

இந்நிலையில் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படிவம் 7 குறித்த தகவல்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படாதது, அவை அனைத்தும் இதே போன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்துகின்றன.

இதே போன்று தெலுங்கானாவிலும் சிறுபான்மை வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்க கோரி படிவம் 7 தாக்கல் செய்யப்படுவதும் நடந்திருக்கிறது. குறிப்பாக முஷீராபாத், பஹதூர்புரா மற்றும் கோஷாமஹால் ஆகிய தொகுதிகளில் முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்களை நீக்கக் கோரும் முன்கூட்டியே விவரங்கள் அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

ஹைதராபாத்தின் முஷீராபாத் சட்டமன்றத் தொகுதியில், பாஜக வாக்குச்சாவடி முகவர் பாலச்சந்தர், 30 வாக்காளர்களின் பெயர்களை நீக்கக் கோரி முன்கூட்டியே அச்சிடப்பட்ட படிவம் 7 விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தார். இந்த 30 பேரும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி முகவர் ஷஃபியுத்தீனும் அவரது குடும்பத்தினரும் இடம்பெற்றிருந்தனர்.

முஷீராபாத் சம்பவத்தைத் தொடர்ந்து, ஹைதராபாத்தின் பஹதூர்புரா தொகுதியிலும் முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்களை நீக்கக் கோரும் முன்கூட்டியே அச்சிடப்பட்ட படிவம் 7 விண்ணப்பங்கள் கண்டறியப்பட்டதாகத் தெலுங்கானா காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

கோஷாமஹால் தொகுதியின் வாக்குச்சாவடி எண் 173-இல் பாஜக வாக்குச்சாவடி முகவர் ஒருவர் முன்கூட்டியே அச்சிடப்பட்ட படிவம் 7 விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முயன்றிருக்கிறார். அந்த விண்ணப்பங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஏற்க மறுத்துள்ளார்.

******

தில்லியிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் குறித்துப் பேசும் போது காவி பாசிச ஆதரவாளர்கள், எஸ்.ஐ.ஆர்.-ன் காரணமாக தங்களது வாக்குரிமையை இழந்தவர்களைக் காட்டுங்கள் எனக் கேட்கிறார்கள். மேலே கூறப்பட்டுள்ள சம்பவங்களில் பல ஆயிரம் பேரது வாக்குரிமையானது சட்டவிரோதமாகப் பறிக்கப்பட்டிருப்பது அம்பலமாகியிருக்கிறது. இது குறித்து பல பத்திரிக்கைகளும், வாக்குரிமை அமைப்புகளும், ஜனநாயக சக்திகளும் கள ஆய்வு நடத்தி வாக்குரிமை பறிக்கப்பட்டவர்கள் குறித்து வீடு வீடாகச் சென்று பதிவு செய்து நிரூபித்திருக்கிறார்கள். ஆனால் இதனை இவர்கள் ஏற்கப் போவது இல்லை. காவி பாசிஸ்டுகள் மட்டுமல்ல, நீதிமன்றங்களும் கூட இவற்றைக் கண்டுகொள்ளப் போவதும் இல்லை.

எஸ்.ஐ.ஆர்.-ஆல் வாக்குரிமையை இழந்த ஒருவரைக் கொண்டு வந்து நிறுத்துங்கள்; அதனை உடனடியாகத் தடை செய்கிறேன் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி முன்னர் பீகார் மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர். தடைசெய்ய கோரிய போது கூறினார். ஆனால் ஏ.டி.ஆர். அமைப்பின் யோகேந்திர யாதவ் அம்மாநிலத்தில் இது போல பல ஆயிரம் பேரது வாக்குரிமை பறிக்கப்பட்டதை அம்பலப்படுத்தி ஆதாரங்களைச் சமர்ப்பித்த போது அதனை ஏற்க மறுத்துவிட்டார்.

இந்த விவரங்கள் மூலமாகத்தான் எவ்வாறு தேர்தல் ஆணையம் முற்றிலுமாக காவி பாசிசக் கும்பலின் கைப்பாவையாக மாறியிருக்கிறது என்பதையும், இது போன்ற முறைகேடுகளை நடத்திக் காட்டுவதற்காகத்தான் ஞானேஷ் குமார் அந்தப் பதவிக்குக் கொண்டுவரப்பட்டார் என்பதையும், இந்த காரணத்திற்காகத்தான் அவருக்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றும் மோடி அரசு ஞானேஷ் குமாரைப் பாதுகாக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

  • அறிவு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன