ECI-Net போர்டல் தொடர்பான தகவல்களை
வழங்க மறுக்கும் தேர்தல் ஆணையம்!
காவி பாசிசத்தின் கைப்பாவை என்பதற்கு மற்றுமொரு ஆதாரம்!
‘எஸ்.ஐ.ஆர்.ஐ நடைமுறைப்படுத்தும் முடிவை யார் எடுத்தார்’ என்று ஆர்.டி.ஐ. செயல்பாட்டாளர் அஞ்சலி பரத்வாஜ் தகவலறியும் சட்டத்தில் எழுப்பிய கேள்விக்கு, ‘அம்முடிவே தேர்தல் ஆணையத்தால் எடுக்கப்படவில்லை’ என்று எழுத்துப் பூர்வமாக பதிலளித்தைப் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தோம். தற்போது, வாக்காளர்களைச் சேர்ப்பதற்கும் நீக்குவதற்குமான மையப்படுத்தப்பட்ட மென்பொருளான ECI Net portal தொடர்பான தகவல்களைக் கேட்டதற்கு அவை “வர்த்தக இரகசியம்” (trade secrets) என்று கூறி தரமறுத்துள்ளது.
கர்நாடகாவில் நடந்துமுடிந்த எஸ்.ஐ.ஆர்.இல், கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். வழக்கம்போல இதிலும் மிகப்பெரிய மோசடிகள் நடந்துள்ளன.
குறிப்பாக, வாக்காளரை நீக்குவதற்கான படிவம் – 7 (Form-7) ஐப் பயன்படுத்தி 61,000 பேர் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த 61,000 படிவங்களும் மாவட்ட அளவிலான தேர்தல் பதிவு அதிகாரிகளின் (ERO) பெயரில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன. அதாவது, தேர்தல் ஆணையத்திற்காக வேலை செய்யும் அதிகாரிகளே வாக்காளர்களை நீக்க வேண்டும் என்று விண்ணப்பித்து, பின்னர் அவர்களே அதனைப் பரிசீலனை செய்து வாக்காளர்களை நீக்கியுள்ளது போல நடந்துள்ளது.
ஆனால், உண்மையில் இப்படிவங்கள் ஏதும் ERO-களால் அவர்கள் கைப்பட விண்ணப்பிக்கப்படவில்லை; தேர்தல் ஆணையத்தின் மென்பொருள் (Software) மூலம் தானியிங்கியாக உருவாக்கப்பட்டவை (auto-generated) ஆகும். பொதுவாக, ஒரு வாக்காளர் இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தரமாக வேறொரு இடத்திற்கு குடிபெயர்ந்துவிட்டாலோ படிவம் – 7 மூலமாக அவரது பெயரைப் பட்டியலில் இருந்து நீக்குவார்கள். ஆனால், ERO-களின் பெயரில் தானாக உருவாக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான இப்படிவங்களில், ஒன்றில் கூட என்ன காரணத்திற்காக இந்த வாக்காளர் நீக்கப்பட வேண்டும் என்ற காரணம் குறிப்பிடப்படவில்லை.
மேலும், இத்தகைய விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி நாளாக செப்டம்பர் 23-ஆம் தேதியை அறிவித்திருந்தது, தேர்தல் ஆணையம். ஆனால், பெரும்பாலான விண்ணப்பங்கள் இந்த நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிந்த பின்னர் அனுப்பப்பட்டவையாகும்! 1960-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ‘வாக்காளர் பதிவு விதிகளின்’ அடிப்படையில்தான் வாக்காளர் சேர்க்கையோ, நீக்கமோ நடைபெற முடியும்’; இந்த வாக்காளர் பதிவு விதிகள், ‘குறிப்பிட்ட காலத்திற்குள்ளோ அல்லது குறிப்பிட்ட முறையிலோ சமர்ப்பிக்கப்படாத எந்தவொரு கோரிக்கையும் அல்லது ஆட்சேபனையும் பதிவு அலுவலரால் நிராகரிக்கப்பட வேண்டும்’ என்று கூறுகிறது. அதன்படி, வாக்காளர்களை நீக்கக் கோரிய விண்ணப்பங்களில் சரியான காரணம் கூறப்படாததாலும் அவை உரிய காலத்திற்குள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தாலும் அவை எல்லாம் நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்தச் செல்லாத விண்ணப்பங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவையெல்லாம் தேர்தல் ஆணையம் ‘ECINet’ என்ற மென்பொருளைக் கொண்டு சட்டவிரோதமாக வாக்காளர்களை நீக்கி, பாஜகவிற்கு சாதகமாக செயல்பட்டு வருகிறது என்பதற்கான ஆதாரங்கள் ஆகும்.
இந்நிலையில், இந்த மென்பொருள் எவ்வாறு செயல்படுகிறது என்ற விவரங்களைக் கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் முஜீப் அய்யூப் என்ற RTI செயல்பாட்டாளர் விண்ணப்பித்தார். வாக்காளர் பட்டியலில் இருக்கும் முரண்பாடுகளைக் கண்டுபிடிக்க எந்த மென்பொருள் அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது? அதன் பெயர் மற்றும் விவரங்கள் என்ன? இவ்வாறு இந்த மென்பொருள் கண்டுபிடிக்கும் முரண்பாடுகள் குறித்து முடிவு (அதாவது வாக்காளர்களை சேர்க்கவோ அல்லது நீக்கவோ) எடுக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது? ஆகிய கேள்விகளை கேட்டுள்ளார், முஜீப் அய்யூப். ஆனால், இம்மென்பொருள் சம்பந்தமான எந்த தகவலையும் தர முடியாது என்று தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
அதற்கு தேர்தல் ஆணையம் சொன்ன காரணம்தான் மிகவும் வேடிக்கையானது. ‘இது எங்களுக்கும் அந்த மென்பொருளை தயாரித்த நிறுவனத்திற்கும் இடையில் உள்ள வர்த்தக ரகசியம், அதனை வெளியிட முடியாது’ என்று கூறியுள்ளது. அதாவது, இந்திய மக்களின் வாக்குரிமையை விட ‘கம்பெனி ரகசியம்’ பெரியது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது! ஆனால், மிகப் பெரிய உண்மையை மறைக்க சொல்லப்படும் நொண்டிச்சாக்குதான் இது என்பது நாம் அறிந்ததே!
மேலும், வாக்காளர் பட்டியலில் இந்த மென்பொருள் குறிப்பிடும் முரண்பாடுகள் குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது என்ற கேள்விக்கு, ‘RTI சட்டத்தில் 81G என்ற விதியை பயன்படுத்தி’ பதிலளிக்க முடியாது என்று மறுத்துள்ளது தேர்தல் ஆணையம். அதாவது, ‘இது தொடர்பான விவரங்களை வெளியிட்டால் சம்பந்தப்பட்ட நபர்களின் உயிருக்கு ஆபத்து’ என்று சொல்லி பதிலளிக்க மறுத்துள்ளது தேர்தல் ஆணையம்.
சட்டப்படி, ஒவ்வொரு தொகுதியின் வாக்காளர் பட்டியலும், அந்தந்தப் பகுதியில் சட்டப்பூர்வ அமைப்பாகச் செயல்படும் (statutory authority) ERO-வால் தயாரிக்கப்பட்டு, அவரது கட்டுப்பாட்டில் உள்ள ‘ERO Net’ என்ற தள அளவிலான தரவுதளத்தில்தான் பராமரிக்கப்பட வேண்டும். இந்த ‘ERO Net’-இல் உள்ள வாக்காளர் பட்டியல்தான் ஒன்றிய அளவில் செயல்படும் ‘ECI Net’ என்ற தளத்திற்கு அனுப்பப்படும். அதாவது, வாக்காளரை சேர்ப்பதிலும் நீக்குவதிலும் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் சட்டப்படி மாவட்ட அளவில் உள்ள ERO-வுக்கே உண்டு. ஆனால், மென்பொருள் குறிப்பிடும் முரண்பாடுகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரிகள் பற்றிய விவரங்களை வெளியிட மறுக்கிறது தேர்தல் ஆணையம். அப்படியென்றால் சட்டப்படி அதிகாரம் பெற்ற தேர்தல் பதிவு அதிகாரிகள் வாக்காளர் சேர்க்கை குறித்த முடிவுகளை எடுக்கவில்லை என்று தெரியவருகிறது.
இதை நாம் ஊகமாகச் சொல்லவில்லை. சில மாதங்களுக்கு முன்னர் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்த இரண்டு தேர்தல் ஆணையர்களே இதைக் கூறியுள்ளனர். மாநில அளவிலான தேர்தல் அதிகாரிகளுக்கு ‘ERO Net’ தளத்தைக் கையாள சில சமயங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும், சட்டப்படியாக அதிகாரம் பெற்ற ERO-கள் ‘ERO Net’ தளத்தைக் கையாள அனுமதி மறுக்க தேர்தல் ஆணையத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் இயக்குநர் சீமா கண்ணாவிற்கு அதிகாரம் இல்லை என்றும் தேர்தல் ஆணையர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.
இந்நிலையில் இந்த மென்பொருள் குறித்து ‘சர்ச்சாகிராம்’ (Charchagram) எனும் தொழில்நுட்பத் தளம் மேற்கொண்ட தணிக்கையில், குறிப்பிட்ட அதிகாரிகள் மாநில வாரியாக வாக்காளர் விவரங்களுக்கான அணுகலை (Access) மற்றவர்களுக்கு வழங்கவோ அல்லது முடக்கவோ அனுமதிக்கும் வகையில் இந்த மென்பொருளில் சில அம்சங்கள் இருந்ததாகத் தெரியவந்திருக்கிறது.
இவையெல்லாம் வாக்காளர் பட்டியலை தீர்மானிக்கும் அதிகாரம் இந்த வெளிப்படைத்தன்மையற்ற மென்பொருளிடமும், அதனை இயக்கும் அதிகாரம் பெற்ற சீமா கண்ணா போன்ற சில நபர்களிடமுமே உள்ளது என்பதை நிரூபிக்கின்றன.
தேர்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாகச் செயல்பட்டு, பாஜகவின் தேர்தல் வெற்றிக்குச் சாதகமாக வேலை செய்வது மட்டுமல்ல; பாஜக எதிர்ப்பாளர்களின் வாக்குரிமையைப் பறித்து அவர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக மாற்றும் வேலையையும் செய்து வருகிறது. அம்பலமாகியுள்ள தகவல்களும் சரி, தேர்தல் ஆணையம் தர மறுக்கும் தகவல்களும் சரி இதைத்தான் நிரூபிக்கின்றன.
- கலைச் செல்வன்
