இந்தியத் தொழிலாளர்களை விற்று அந்நிய முதலீட்டை ஈர்க்கும் பியூஷ் கோயல்!
ஒரு நாட்டின் பிரதிநிதியாக வெளிநாடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அமைச்சர்கள், தங்கள் நாட்டின் சிறப்பியல்புகளைப் பெருமையாகப் பேசுவதைப் பார்த்திருப்போம். ஆனால், ஒரு அமைச்சர், “எங்கள் நாட்டு மக்கள் சூடு சொரணையற்றவர்கள்; அடிமைகளைப் போல உழைப்பார்கள்; சட்டப்பூர்வமான உரிமைகளைப் பற்றியெல்லாம் கேள்வி கேட்க மாட்டார்கள். அவர்களை எவ்வளவு வேண்டுமானாலும் கசக்கிப் பிழிந்து இலாபம் சம்பாதிக்கலாம்” என்று தன் சொந்த நாட்டு மக்களையே அவமானப்படுத்திப் பேசியதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
இவ்வாறு பேசுவதைச் சரியென்றும், அதுதான் நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் நியாயப்படுத்துபவனை மக்கள் பிரதிநிதி என்பதா? அல்லது முதலாளிகளின் தரகரென்பதா? அத்தகைய பெருமைக்குரியவர் வேறு யாருமல்ல; மோடி அமைச்சரவையின் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல்தான்.
இரு வாரங்களுக்கு முன்பு நெதர்லாந்தில் நடைபெற்ற இந்தியா-நெதர்லாந்து முதலாளிகள் கூட்டத்தில் பேசிய கோயல், “இந்தியர்கள் கடினமாக உழைக்கத் தயாராக இருப்பவர்கள். இந்தியாவில் யாரும் உங்களிடம் மணி ஐந்தாகிவிட்டது என்று சொல்ல மாட்டார்கள். அதேபோல், வார இறுதி நாட்கள் வந்துவிட்டன என்றும் யாரும் உங்களுக்கு நினைவூட்ட மாட்டார்கள். இதைத்தான் நான் உங்களுக்கு வழங்குகிறேன். இந்தியாவில் முதலீடு செய்தால், நீங்கள் கற்பனை செய்துகூடப் பார்த்திராத அளவுக்கு உங்கள் வணிகம் (இலாபம்) பிரம்மாண்டமாக வளரும்” என்று கூறி நெதர்லாந்து முதலாளிகளின் ஆசையைத் தூண்டியிருக்கிறார்.
நீண்ட நேர உழைப்புக்கு மிகக் குறைந்த கூலி, வரிச் சலுகைகள் எனப் பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகளைக் காட்டி, இந்தியாவில் தொழில் தொடங்க முதலீடு செய்யுமாறு ஐரோப்பிய முதலாளிகளிடம் கெஞ்சுவதற்காக, இந்திய உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை அடமானம் வைத்திருக்கிறார் கோயல். சட்டப்படியான தொழிலாளர் உரிமைகளுக்கு எதிரானதாகவே கோயலின் பேச்சு அமைந்திருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் என்ன செய்வது, நாட்டின் வளர்ச்சியாயிற்றே! இதற்காக உச்சநீதிமன்றமே ஜால்ரா போடத்தான் செய்யும்.
இருப்பினும், கோயலின் பேச்சுக்கு எதிர்ப்புகள் கிளம்பாமல் இல்லை. குறிப்பாக, கர்நாடக மாநில ஐ.டி. ஊழியர் சங்கமான KITU தனது அறிக்கையில், “இந்தியத் தொழிலாளர்கள் வார இறுதி நாட்கள் உட்பட எல்லா நேரங்களிலும் முதலாளிகளுக்குக் கிடைப்பார்கள் என்று கூறுவதன் மூலம், அடிமை முறை போன்றதொரு வேலைக் கலாச்சாரத்தை அமைச்சர் ஊக்குவிக்கிறார்” என்று விமர்சித்துள்ளது. அதிசயமாக, காங்கிரஸ் கட்சியும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆனால், இத்தகைய கண்டனங்களையெல்லாம் கோயல் பொருட்படுத்தவே இல்லை. “வேலை-வாழ்க்கை சமநிலை (Work-Life Balance) என்பது அந்நியக் கருத்து. இதை நான் ஏற்றுக்கொள்வதில்லை. அந்நிய மனநிலையைக் கொண்டவர்கள் வேண்டுமானால் அதைப் பின்பற்றட்டும்” என்று கூறி, தன்னை விமர்சிப்பவர்களைத் தேச விரோதிகளாக மறைமுகமாக முத்திரை குத்தியிருக்கிறார் கோயல்.
தேசபக்தியைக் குத்தகைக்கு எடுத்திருக்கும் பாஜக அமைச்சரான கோயலுக்கு, “வேலை-வாழ்க்கை சமநிலை” என்பது அந்நியக் கருத்து என்றால், பேண்ட், சட்டை, ஜட்டி, ஷூ அணிவதும் ஆங்கிலத்தில் பேசுவதும் கூட மேற்கத்தியக் கருத்துகள்தானே! பாரதியப் பண்பாட்டின்படி கோவணமும் வேட்டியும் கட்டிக்கொண்டு, மேல்சட்டை அணியாமல், பூணூலும் குடுமியுமாகச் சமஸ்கிருதத்தில் அல்லவா ஐரோப்பிய முதலாளிகளுடன் பேசியிருக்க வேண்டும்? சாதாரண மக்களை ஏமாற்றுவதற்காகவே தேசபக்தி, அந்நியப் பண்பாடு என்றெல்லாம் பேசி மக்களின் காதில் பூ சுற்றுகிறார் கோயல்.
முதலாளிகளுக்குக் காவடி தூக்கும் மோடி-கோயல் கும்பல்
வேலை நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்பதும், தொழிலாளர்களின் உரிமைகளை வெட்டிச் சுருக்க வேண்டும் என்பதும் அந்நிய முதலீட்டாளர்களின் நீண்டகாலக் கோரிக்கையாகும். 2014-ஆம் ஆண்டு உலகப் பொருளாதார மன்றத்தில் பேசிய மோடி, அந்நிய முதலீட்டாளர்கள் கோருகின்ற அனைத்து சீர்திருத்தங்களையும் இந்தியா செய்து வருவதாகப் பட்டியலிட்டார். அதன் தொடர்ச்சியாகவே, தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளைப் பறிக்கின்ற நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைக் கொண்டு வந்தனர். இந்தக் கோரஸில் இந்தியத் தரகு முதலாளிகளும் இணைந்துகொண்டனர்.
இன்போசிஸ் நிறுவனத்தின் நாராயணமூர்த்தி, சராசரியாக வாரத்திற்கு 70 மணி நேரம் உழைத்தால்தான் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்; எனவே, இளைஞர்கள் அதிக நேரம் உழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். எல்&டி நிறுவனத்தின் தலைவர் சுப்ரமணியனோ, ஞாயிற்றுக்கிழமையையும் சேர்த்து வாரத்திற்கு 90 மணி நேரம் உழைக்க வேண்டும் என்றும், “மனைவியுடன் எவ்வளவு நேரம்தான் செலவிடுவீர்கள்?” என்றும் கேட்டார். தற்போது, “மக்களின் பிரதிநிதி” என்று சொல்லிக்கொள்ளும் அமைச்சரே ஒருபடி மேலே சென்று, “உனக்கு எதற்கு ஓய்வு? மாடுபோல் உழைத்துக்கொண்டே இரு” என்கிறார்.
2047-ஆம் ஆண்டில் இந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் நாம் அதிக நேரம் உழைக்க வேண்டும்; அதேவேளையில், நாட்டின் வளர்ச்சிக்கு அந்நிய முதலீடும் அவசியம் என்று பாஜக உள்ளிட்ட ஆளும் வர்க்கத்தினர் தங்களது சுரண்டலுக்கு ஆதரவான நடவடிக்கைகளைத் தொடர்ந்து நியாயப்படுத்தி வருகின்றனர். ஆனால், நடைமுறையில் இவர்கள் கூறுகின்ற வளர்ச்சிக்கான நடவடிக்கைகளால் பெரும்பான்மை மக்கள் பலனடைந்துள்ளனரா என்றால், இல்லை என்பதே பதிலாக இருக்கும்.
தொழிலாளர்களின் அற்ப ஊதியமும் முதலாளிகளின் கொள்ளை இலாபமும்
இந்தியத் தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள், அமைப்புசாராத் தொழிலாளர்கள், சிறு விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்களாகவே உள்ளனர். இந்தியத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் சராசரி ஊதியம் ரூ.15,000 முதல் ரூ.22,000 வரை மட்டுமே உள்ளது. அரசு அலுவலகங்களின் பல்வேறு நிலைகளில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களின் அதிகபட்ச ஊதியமே ரூ.23,000 தான். அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஒப்பந்த ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களின் ஊதியமோ முறையே ரூ.18,000 மற்றும் ரூ.25,000 மட்டுமே.
சிறு விவசாயிகள், விவசாயக் கூலிகள், சுயதொழில் செய்வோர் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர்களின் சராசரி மாத வருமானம் ரூ.15,000-க்கும் குறைவாகவே உள்ளது. குறிப்பாக, கடந்த பத்தாண்டுகளில் இத்தொழிலாளர்களின் உண்மையான ஊதியமும் (Real Wages) அதிகரிக்காமல் தேக்கநிலையிலேயே இருப்பதாக அரசின் புள்ளிவிவரங்களே கூறுகின்றன.
உதாரணமாக, சென்னையில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், பத்து ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை, மிகக் குறைந்த ஊதியமே கிடைக்கிறது, தினமும் கூடுதல் நேரம் (Overtime) வேலை செய்ய வேண்டியிருக்கிறது, விடுப்பும் கிடைப்பதில்லை, தங்களது சட்டப்பூர்வமான உரிமைகளைப் பெறுவதற்காகத் தொழிற்சங்கம் அமைக்க அனுமதிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துப் போராடினர். ஆனால், சாம்சங் நிர்வாகமும் திமுக அரசாங்கமும் இணைந்து காவல்துறையை ஏவிப் போராட்டத்தை ஒடுக்கின.
உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவிலோ, விலைவாசி உயர்ந்துவிட்ட நிலையில், அடிப்படைத் தேவைகளையாவது பூர்த்தி செய்துகொள்ளும் வகையில் ஊதியத்தை உயர்த்தித் தர வேண்டும் என்று போராடிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் மீது ஆதித்யநாத் அரசாங்கம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இவைதான் தொழிலாளர்களின் சட்டப்பூர்வமான உரிமைகளை ஆட்சியாளர்கள் மதிக்கின்ற இலட்சணம்.
இதற்கு நேர்மாறாக, இந்தியாவின் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபம் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 22.3 சதவீதம் அதிகரித்திருப்பதாக இந்தியப் பொருளாதார ஆய்வறிக்கையே கூறுகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு மருத்துவம், கல்வி, உணவு, மின்னணுவியல் மற்றும் வாகன உற்பத்தி, தொழிற்துறை, மின்சாரம், வங்கித்துறை, தொலைத்தொடர்பு என இந்தியப் பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளிலும் அந்நிய முதலீடுகளும், அந்நிய நிறுவனங்களின் பங்குகளும், இலாபமும், உள்நாட்டு நிறுவனங்கள் மீதான அவற்றின் கட்டுப்பாடும் அதிகரித்துள்ளன. இதைத்தான் வளர்ச்சி என்றும் பிரச்சாரம் செய்கின்றனர்.
தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மிகக் குறைந்த கூலியைக்கூட உயர்த்த விடாமல் பல ஆண்டுகளாகத் தடுத்து வைத்திருக்கும் மோடி-கோயல் கும்பல், அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் இந்திய முதலாளிகளின் இலாபம் பல மடங்கு அதிகரிப்பதற்காகப் பம்பரமாகச் சுழன்று வேலை செய்கிறது. கோயல் உள்ளிட்ட ஆளும் வர்க்கத்தினர் பலரும், “நாட்டின் வளர்ச்சிக்கு அதிக நேரம் உழைக்க வேண்டும்” என்று தொழிலாளி வர்க்கத்திற்கு அறிவுரை கூறுவது உழைக்கும் மக்களின் மேம்பாட்டிற்காக அல்ல; மாறாக, முதலாளிகளின் இலாபத்தைப் பெருக்குவதற்காகவே முன்வைக்கப்படும் தந்திரமாகும். இதைத்தான் கோயல் நெதர்லாந்தில் பேசியிருக்கிறார்.
அந்நிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகவே தொழிலாளர் சட்டத் தொகுப்புகள்!
தொழிலாளர்களின் உபரி உழைப்பை முதலாளிகள் அபகரிப்பதன் மூலமே அவர்களது இலாபம் உறுதிப்படுத்தப்படுகிறது. தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகரிப்பது, உற்பத்தியில் புதிய கருவிகளைப் புகுத்துவது, தொழிலாளர்களின் உழைப்புத் திறனை அதிகரிப்பது ஆகிய உத்திகளின் மூலம் உபரி உழைப்பு அதிகரிக்கப்படுகிறது. இந்த வரம்பற்ற சுரண்டலின் மூலம் முதலாளிகளுக்குக் கிடைக்கும் இலாப விகிதத்தின் வளர்ச்சியையே தொழிற்துறை வளர்ச்சியாகவும் சித்தரிக்கின்றனர்.
தொழிலாளிக்கு உயிர்வாழ்வதற்கும், தனது உழைப்புச் சக்தியை மீண்டும் உற்பத்தி செய்வதற்கும் தேவையான குறைந்தபட்சத் தொகையை மட்டுமே ஊதியமாக நிர்ணயித்துவிட்டு, உற்பத்தியில் உருவாகும் எஞ்சிய மதிப்பு முழுவதையும் முதலாளியே அபகரித்துக்கொள்கிறான். உதாரணமாக, நெதர்லாந்தில் சராசரி வேலை நேரம் வாரத்திற்கு 36 முதல் 40 மணி நேரமாக உள்ளது. இதுவே இந்தியாவில் 46 மணி நேரமாக இருக்கிறது. ஐ.டி., நிதி மற்றும் சந்தைப்படுத்தல் துறைகளில் பணிபுரிபவர்களின் சராசரி வேலை நேரம் வாரத்திற்கு 12 மணி நேரத்திற்கும் அதிகமாக உள்ளது. மேலும், இந்தியாவின் சராசரி ஊதியம் நெதர்லாந்தை விடப் பல மடங்கு குறைவாகும். இத்தகைய குறைந்த கூலியில் நீண்ட நேரம் தொழிலாளர்களை உழைக்க வைப்பதன் மூலம் கொள்ளை இலாபம் ஈட்ட முடியும் என்பதாலேயே பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குகின்றன. இந்தச் சுரண்டலைப் பாதுகாப்பதற்காகத்தான் புதிய சட்டங்களும் உருவாக்கப்படுகின்றன.
இந்தப் பின்னணியிலிருந்துதான், எட்டு மணி நேரமாக இருந்த வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிப்பதோடு, தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கான சட்டரீதியான பாதுகாப்புகளையும் நீக்கி, புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை மோடி அரசு அமல்படுத்தியுள்ளது. இதைத்தான் கோயலும் ஐரோப்பிய முதலாளிகளிடம், இந்தியாவில் தொழில் தொடங்குவதற்குச் சாதகமான சூழல் நிலவுவதாக வெட்கமே இல்லாமல் பெருமை பேசிக்கொண்டிருக்கிறார்.
- மாணிக்கம்
தகவல் உதவி
https://www.ideasforindia.in/topics/poverty-inequality/the-problem-of-india-s-stagnant-real-wages
https://thewire.in/labour/who-is-piyush-goyal-to-say-that-working-indians-dont-need-rest

இந்த மாமா பயலுங்க காட்டியும் கூட்டியும் கொடுப்பார்கள்