SIR – தேர்தல் ஆணைய சதிகள்:
அம்பலமானது பாசிசக் கும்பல்
அடித்து வீழ்த்து!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே!
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சொல்லிக் கொள்ளப்பட்ட நேர்மையும் நடுநிலையும் சந்தி சிரித்து, நாடே நாறுகிறது. ஓட்டுத் திருட்டிலும், பா.ஜ.க. எதிர்ப்பாளர்களின் வாக்குரிமைப் பறிப்பிலும் அது ஈடுபடுவதாக ஜனநாயக சக்திகள், எதிர்க் கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டினர். இப்போது, தேர்தல் ஆணையத்திற்குள்ளிருந்தே அதற்கான ஆதாரங்கள் வெளிவந்து அம்பலமாகியுள்ளது.
‘தேர்தல் ஆணையம் தனது முடிவுகளை ஒருமனதாகவோ அல்லது பெரும்பான்மை அடிப்படையிலோதான் எடுக்க வேண்டும்’ என்கிறது, அரசமைப்புச் சட்டம். ஆனால், எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை உட்பட அனைத்து முடிவுகளையும் தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார் தன்னிச்சையாகவே எடுத்துள்ளார். மற்ற இரு தேர்தல் ஆணையர்கள், 10 மாதங்களில் 14 முறை தமது எதிர்ப்புகளைத் தெரிவித்தபோதும் இவ்வாறு நடந்துள்ளது! ‘எஸ்.ஐ.ஆரை நடைமுறைப்படுத்தும் முடிவை யார் எடுத்தது’ என தகவலறியும் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘அம்முடிவே தேர்தல் ஆணையத்தால் எடுக்கப்படவில்லை’ என எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளது. இந்நிறுவனம் பாசிசத்தின் கைப்பாவையாகிவிட்டதற்கு இதைவிட வேறென்ன சான்று தேவை!
வாக்காளரின் பெற்றோர் அல்லது மூதாதையர் 2003-ஆம் ஆண்டின் எஸ்.ஐ.ஆர். பட்டியலில் இருந்தார்களா? என்ற கேள்வியைப் புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கான படிவம் 6-இல் (form 6) தேர்தல் ஆணையம் புதிதாக இணைத்துள்ளது. பா.ஜ.க. எதிர்ப்பாளர்களின் குடியுரிமையைப் பறிக்க, 2020-இல் மோடி அரசு கொண்டுவந்து, எதிர்ப்புகளால் நிறுத்திவைத்துள்ள சி.ஏ.ஏ. என்.ஆர்.சி.யை கொல்லைப்புற வழியில் அமல்படுத்துவதே இதன் உள்நோக்கம். இதிலும் அப்பட்டமான அரசமைப்புச்சட்ட மீறல் நடந்துள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலுடன் மாற்ற வேண்டிய படிவம் 6-ஐ அப்பட்டமாக, தன்னிச்சையாக மாற்றியுள்ளது.
இவ்விசயம் அம்பலமானவுடனே, இத்திருத்தம் உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலோடுதான் செய்யப்பட்டதாக பச்சைப் பொய்யை பத்திரிக்கைச் செய்தியாகவே வெளியிட்டது. தேர்தல் ஆணையத்தின் எல்லா அரசியலமைப்பு மீறல்களுக்கும் உடந்தையாக இருந்த உச்ச நீதிமன்றமோ, தற்போது மக்களின் எதிர்ப்புக்கு அஞ்சி “அவ்வாறான ஒப்புதல் எதையும் தான் வழங்கவில்லை” என்ற உண்மையைப் போட்டுடைத்துவிட்டது!
வாக்காளரைச் சேர்ப்பது அல்லது நீக்குவதற்கான அதிகாரத்தை உள்ளூர் தேர்தல் பதிவு அதிகாரியின் (ERO) கையில் இருந்து பிடுங்கி தில்லியில் ஒன்றுகுவித்துள்ளது. இதன்மூலம், எஸ்.ஐ.ஆர். பட்டியலில் இப்போது ஒருவர் பெயர் வந்துவிட்டாலும், எதிர்காலத்தில் அவர் பாசிசக் கும்பலை எதிர்த்தால் அவரது வாக்குரிமையையும் குடியுரிமையையும் தில்லியில் இருக்கும் குழு பறித்துவிட முடியும்! கோவாவில் தவறுதலாக நீக்கப்பட்ட 97 பேரை மீண்டும் பட்டியலில் இணைக்க உச்சநீதிமன்றமே உத்திரவிட்டபோதும், அதை அப்பகுதியின் ERO-வால் செய்ய இயலவில்லை. தில்லிக்குத்தான் மனுப்போட வேண்டியிருந்தது. ஆக, உச்சநீதிமன்றமே உத்திரவிட்டாலும் தில்லியிலிருக்கும் குழுதான் இனி யாருக்கு வாக்குரிமை, குடியுரிமை என முடிவு செய்யும்!!
இவையனைத்துமே பாசிசக் கும்பலின் உத்திரவுக்கிணங்க ஞானேஷ் குமாரால் தன்னிச்சையாக, சட்டவிரோதமாகச் செய்யப்பட்டவை.
2025 பிப்ரவரியில் தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் பொறுப்பேற்ற பிறகு தொடங்கப்பட்ட எஸ்.ஐ.ஆர். மூலம் நாடெங்கும் இதுவரை 13 கோடி பேரின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிக்காகவே சிறுபான்மையினர், பா.ஜ.க. எதிர்ப்பாளர்களைக் குறிவைத்து இவ்வாக்குரிமைப் பறிப்பு அரங்கேறியுள்ளது. உச்சபட்சமாக உத்திரப் பிரதேசத்தில் மட்டும் 2.89 கோடி பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதில் தர்ப்கஞ்ச், பிலிபித் தொகுதிகளில் மட்டும் நீக்கப்பட்டவர்களில் 90% இசுலாமியர்களாவர்! தில்லியின் சாந்தினிசெளக் என்ற ஒரு வாக்குச் சாவடியில் மட்டும் உள்ள 909 பேரில் 908 பேர் நீக்கப்பட்டுள்ளனர்! இதுதான் பிற மாநிலங்களின் நிலையும்!
இத்தகைய சதிகளை அரங்கேற்றவே, தலைமைத் தேர்தல் ஆனையரை நியமிப்பதில் உச்சநீதிமன்ற நீதிபதியின் பாத்திரத்தை நீக்கி, 2023-இல் சிறப்புச் சட்டத்தையே மோடி கும்பல் கொண்டுவந்தது. மேலும், தலைமைத் தேர்தல் ஆணையர் தனது பதவிக் காலத்தில் மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கைக்கும், அவரை வாழ்நாள் முழுவதும் கிரிமினல் நடவடிக்கைக்கு உட்படுத்த முடியாது என்ற மாபெரும் பாதுகாப்பையும் சட்டப் பூர்வமாகவே வழங்கியுள்ளது. இப்பாதுகாப்பு பிரதமருக்கோ, குடியரசுத் தலைவருக்கோ கூடக் கிடையாது!
இவ்வுண்மைகளெல்லாம் அம்பலமான பிறகு, திருடனுக்குத் தேள்கொட்டியது போல மோடி அரசும் தேர்தல் ஆணையமும் மெளனம் காக்கின்றன. மாணவர்கள், எதிர்க்கட்சிகளின் போராட்டத்தில் போலிசு, காவி குண்டர்களை இறக்கி பாலியல் வன்கொடுமைகளையும் கொடிய பாசிசத் தாக்குதல்களையும் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். போராட்டமே அந்நியசதி, அராஜகவாதம் என அவதூறு செய்கின்றனர். இன்னொருபுறம், தமிழ்நாட்டில், ‘பா.ஜ.க.வைக் கொள்கை எதிரி’ எனப் பீற்றிக் கொள்ளும் தவெகவும், ‘பாசிசத்தை உறுதியாக எதிர்ப்பதாக’ சவடால் அடித்த திமுகவும் பற்றியெறியும் இப்பிரச்சனை குறித்து கள்ள மெளனம் காத்து துரோகமிழைக்கின்றன.
இவற்றைத் தொடர அனுமதித்தால், இன்று வட மாநிலங்களிலும் மேற்கு வங்கத்திலும் நடப்பது நாடெங்கும் அரங்கேறும். பா.ஜ.க.வை எதிர்க்கும் அனைவரது வாக்குரிமையும் குடியுரிமையும் பறிக்கப்பட்டு சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகளாக்கப்படுவோம்! வதைமுகாமில் அடைக்கப்படுவோம்!
எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள், நாடாளுமன்றக் கூச்சல்கள், நீதிமன்ற வழக்குகள் இவை எதற்கும் பாசிசக் கும்பல் ஒருபோதும் அஞ்சாது. அவர்களை அஞ்சிப் பணியவைக்கவல்ல ஒரே பாதை, தெருப் போராட்டங்களே! நீட் முறைகேடுகளுக்கெதிரன வீரஞ்செறிந்த மாணவர் போராட்டம் நிரூபித்ததும் இதைத்தான்! தேர்தல் ஆணையம், மோடி-ஷா பாசிசக் கும்பலுக்கெதிராக வீரஞ்செறிந்த மாபெரும் போரைத் தொடுப்பதொன்றுதான் நம்மைக் காத்துக்கொள்ள நம்முன் இருக்கும் ஒரேவழி! போராட்டத் தீ பற்றிப் பரவட்டும்! பாசிசக் கும்பலைச் சுட்டுப் பொசுக்கட்டும்!!
- சட்டவிரோத, சதித்தனமான SIR-ஐ இரத்து செய்ய அணிதிரள்வோம்!
- காவி பாசிசத்தின் கைப்பாவையான தேர்தல் ஆணையத்தைக் கலைத்திடக் களமிறங்குவோம்!
- ஓட்டுத் திருடன் ஞானேஷ் குமாரைக் கைதுசெய் என முழங்குவோம்!
- மோடி-ஷா பாசிசக் கும்பலைத் தூக்கியெறிவோம்!
புரட்சிகர மக்கள் அதிகாரம் (RPP)
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (NDLF)
தமிழ்நாடு
