எஸ்.ஐ.ஆர் எதிர்ப்பு போராட்டம்: எது தேச விரோதம்?

அக்டோபர் 20, 2026
எஸ்.ஐ.ஆர் மூலம் ஒரே அடியில் 13 கோடி வாக்காளர்களை நீக்கிய காவிக் கும்பலினால் நாட்டிற்கு ஆபத்து வந்திருக்கிறது! உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள், சிறுபான்மையினர் மீது பாசிச கொடுங்கோன்மையை ஏவும் காவிக் கும்பலினால் தற்போது இந்த நாட்டிற்கு ஆபத்து வந்திருக்கிறது!

காவிப் பாசிஸ்டுகளின் எடுபிடியான தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர் மூலம் நாடு முழுவதும் 13 கோடி வாக்காளர்களை நீக்கியதை எதிர்த்து எதிர்க்கட்சிகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தில்லியில் போராடி வருகின்றனர்.

ஓட்டுத் திருடனான தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரியும், தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்யக் கோரியும் தில்லியில் எஸ்.ஐ.ஆர் எதிர்ப்பு போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

தில்லியில் தொடங்கிய எஸ்.ஐ.ஆர் எதிர்ப்பு போராட்டம் நாடு முழுவதும் பரவினால் தமது அதிகாரத்திற்கு ஆபத்து வந்துவிடும் என அஞ்சிய காவிக் கும்பல், தனது அதிகாரத்தை காத்துக் கொள்ள எந்த எல்லைக்கும் போகும் என்பதை அதன் அடக்குமுறையே காட்டி விட்டது.

காவிப் பாசிஸ்டுகள் தமது நாடாளுமன்ற பதவிகளை காத்துக் கொள்ள சுமார் 40,000 துணை இராணுவத் துருப்புக்களை தில்லியில் குவித்தனர். தில்லி மெட்ரோ இரயில் நிலையத்தை மூடினர். அக்டோபர் 10ம் தேதியன்று தில்லிக்கு வரும் அனைத்து இரயில்களும் இரத்து செய்யப்பட்டன. ஜே.என்.யு. பல்கலைக் கழகத்திற்கு வெளியே ஒரு பெரும் போலீஸ் படையே குவிக்கப்பட்டது. மாணவர்கள் விடுதிகள் கண்காணிக்கப்பட்டன. தில்லிக்கு இரயிலில் வந்த மாணவர்கள் பாதி வழியிலேயே இறக்கி விடப்பட்டனர்.

தில்லியில் மக்கள் கூடும் இடங்களின் அனைத்துச் சாலைகளும் போலீசாரால் முடக்கப்பட்டன. ஜந்தர் மந்தர் பகுதியை சுற்றிலும் இணைய வசதி துண்டிக்கப்பட்டது. தடை உத்தரவு விதிக்கப்படாத பகுதிகளில் சென்ற மக்களை விரட்டி விரட்டி தில்லி போலீசார் கைது செய்தனர். கடை வீதிக்கு வந்தவர்கள், மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளைப் பார்க்க வந்தவர்களை கூட போலீசார் விட்டு வைக்கவில்லை.

போராடியவர்களை கைது செய்து தாக்குவது, மிரட்டுவது, பெண் போராட்டக்காரர்களின் ஆடைகளைக் கிழிப்பது போன்ற இழி செயல்கள் அரங்கேற்றப்பட்டன. இளைஞர்கள், மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. போலீசு சீருடை அணிந்த காவிக் குண்டர்கள் போராட்டக் களத்திற்குள் புகுந்து மத அடையாளங்களை விசாரித்து, போராடியவர்களை தாக்கியிருக்கின்றனர். இதை தில்லி போலீசாரும் கைக்கட்டி வேடிக்கைப் பார்த்தனர்.

போராட்டக்காரர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், நாடாளுமன்ற எம்பிக்கள் போன்றவர்கள் தில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் போலீசு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டு அடையாளம் தெரியாத இடத்தில் இறக்கிவிடப்பட்டனர்.

இவ்வாறு எஸ்.ஐ.ஆர் மூலம் இந்திய மக்களின் வாக்குரிமை பறிபோகிறது என்று ஜனநாயக உரிமைக்காக வீதியில் இறங்கிய மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் எதிர்க்கட்சியினரை காவிப் பாசிஸ்டுகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியதோடு மட்டும் நின்று விடவில்லை.

எஸ்.ஐ.ஆர்.-க்கு எதிரான போராட்டங்களை மூர்க்கமாக ஒடுக்கும் பொருட்டும், இதை இனியும் நீடிக்க விடக்கூடாது என்பதற்காகவும் இந்தப் போராட்டத்தை தேசவிரோதம், அந்நிய சதி, வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது, போராட்ட முன்னணியாளர்களை அந்நியக் கைக்கூலிகள் என்று பா.ஜ.க சித்தரித்து வருகிறது.

காவிக் கும்பல் பரப்பும் ஒரு தலைப்பட்சமான செய்திகள் தான் இன்று நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யப்படுகின்றன. இச்செய்திகள் மூலம் காவிக் கும்பல் ஏதோ நியாயத்துக்குப் போராடும் ஜனநாயகவாதியாகவும், அவர்களின் பாசிசத் திட்டத்திற்கு எதிராகப் போராடும் மக்களை நாட்டிற்கே எதிரிகளாகவும் சித்தரிக்கின்றனர். உண்மைகளை இருட்டடிப்பு செய்துவிட்டு, பாசிசத் திட்டத்திற்கு எதிராகப் போராடும் மக்களின் மீது கருத்து ரீதியாக யுத்தத்தை தொடுக்கின்றனர்.

ஆளும் வர்க்கத்திற்கு எதிராக நாட்டு மக்கள் நடத்தும் பல்வேறு போராட்டங்களை “அந்நிய சதி”, “பாகிஸ்தான் – சீன ஆபத்து”, “தேசியப் பாதுகாப்பு”, “இராணுவப் பிரச்சினை” என்று சொன்னால் போதும், அதிலே கேள்விக்கோ, விமர்சனத்திற்கோ, உண்மைகளைத் தெரிந்து கொள்வதற்கோ கூட இடமில்லை என இந்திய மக்கள் நம்பி விடுவார்கள் என எஸ்.ஐ.ஆர். எதிர்ப்பு போராட்டத்திற்கு எதிரான பிரச்சாரத்தை காவிப் பாசிஸ்டுகள் தற்போது கட்டவிழ்த்துவிட்டு வருகிறார்கள். நாட்டின் மீது காவிகளுக்கு மட்டுமே அளவுக்கு மீறிய தேசபக்தி இருப்பதாக பா.ஜ.க.வினர் கதையளந்து வருகின்றனர்.

நாட்டின் 13 கோடி பேரின் வாக்குரிமைகளை ஒரே அடியில் பறித்த இக்காவிப் பாசிஸ்டுகள் தான் முதன்மையான தேச விரோதிகள். ஆனால் எஸ்.ஐ.ஆர் எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப் படுத்தும் விதமாக கோயபல்ஸ் பாணி புளுகுணி பிரச்சாரத்தை தற்போது பா.ஜ.கவின் அமைச்சர்கள், தலைவர்கள் முன்னெடுத்து வருகிறார்கள்.

ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சரான இராஜ்நாத் சிங், எதிர்க்கட்சி கூட்டணிகள் வங்கதேசத்தின் வழியில் ஆட்சி மாற்றத்தை முன்னெடுக்கிறார்கள்; ஜனநாயக நிறுவனங்களை அழித்து, நாட்டில் அமைதியின்மையை உருவாக்குவதே எஸ்.ஐ.ஆருக்கு எதிராகப் போராடுபவர்களின் ஒரே நோக்கம் என்கிறார்.

பா.ஜ.க தலைவரான நிதின் நபினோ, “ஆட்சி மாற்றத்திற்கு அழைப்பு விடுத்திருப்பது” என்பது “எதிர்க்கட்சிகளின் உண்மையான நோக்கத்தை அம்பலப்படுத்தியுள்ளது; இது “வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டு சேர்ந்து இந்தியாவை சீர்குலைக்கும் ஒரு தீய முயற்சி”. “இது “நக்சலைட்டுகளின்” நோக்கம் என்கிறார்.

பா.ஜ.க.வோ, இந்தியாவின் நலன்களுக்கு எதிராக ஹங்கேரிய-அமெரிக்க அரசியல் ஏஜென்ட்டான ஜார்ஜ் சோரோஸ்சும் அவரது அமைப்பான “ஓபன் சொசைட்டி ஃபவுண்டேஷன்”-னும் (OSF) செயல்படுகிறது என்று கூறுகிறது.

ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சரான கிரண் ரிஜ்ஜூ “வங்க தேசம் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் நடந்த வன்முறைச் சம்பவம், கலவரங்கள், தீவைப்புகள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களைப் போன்ற ஒரு சதித்திட்டம் இந்தியாவிற்குள் தீட்டப்பட்டுள்ளது. இந்திய எதிர்ப்பு கும்பல்களும் சில அரசியல்வாதிகளும் இளைஞர்களைத் தூண்டிவிட்டு, நமது தெருக்களில் வன்முறையைப் பரப்புவதற்காக கூட்டுச் சதி செய்கின்றனர்,”

…….”இந்த அபாயகரமான சதித்திட்டத்தை வகுத்தவர்கள் இந்தியா என்பது வங்க தேசமும் அல்ல, பிரான்சும் அல்ல என்பதை மறந்துவிட்டனர்,” இந்தியாவில் ஆட்சி மாற்றம் நிச்சயமாக சாத்தியம், ஆனால் அது தேர்தல்கள் மூலமாக மட்டுமே சாத்தியப்படும்” என்கிறார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெறும் 36% மக்களின் (23 கோடி பேர்) ஓட்டுக்கள் மூலம் தற்போது ஆட்சி நிர்வாகத்தில் அமர்ந்திருக்கும் பா.ஜ.க. உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள், சிறுபான்மையினர் மீது பாசிச பயங்கரவாதத்தை மூர்க்கமாக ஏவி வருகிறது. இதை எதிர்த்து நாட்டு மக்கள் கேள்வி கேட்டால், பா.ஜ.க.வை ஆட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று போராடினால், அது இந்தியாவை சீர்குலைக்கும் ஒரு தீய முயற்சி என்கிறார் பா.ஜ.க. தலைவரான நிதின் நபின்.

இன்றைக்கு எஸ்.ஐ.ஆர்.க்கு எதிராகப் போராடுபவர்கள் யாரும் நாட்டில் புரட்சியை ஏற்படுத்தி ஆளும் அரசமைப்பையே மாற்றிட வேண்டும் என்று போராடவில்லை. எஸ்.ஐ.ஆர்.க்குப் பிறகு நடைபெற்ற மாநில தேர்தல்களை மீண்டும் நடத்த வேண்டும் என்பதே போராடுபவர்களின் அதிகபட்ச கோரிக்கை. 

இவர்கள் பா.ஜ.கவை ஆட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று கூறுவது இந்தியாவை எந்த கட்சி ஆள வேண்டும் என்று போராடுவதையே குறிக்கிறது. ஆனால் பா.ஜ.க.வோ, தற்காலிகமாக நாட்டை நிர்வகிக்கும் ஒரு அரசு என்பதை தாண்டி, ஒட்டுமொத்தமாக நாட்டிற்கும் உரிமை கோருகிறது. ஆட்சி மாற்றத்திற்காக போராடினால் அது தேச விரோதம் என்கிறது.

ஆட்சி மாற்றம் என்ற சொல் இந்தியாவை சீர்குலைக்கும் ஒரு தீய முயற்சி என்று கூறும் காவிகள், பா.ஜ.க எனும் கட்சியையும், பா.ஜ.க தலைமையிலான அரசையும், நாட்டையும் ஒன்றாகவே பாவித்து புளுகுணி பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுகின்றனர்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றதன் மூலம் அடுத்த தேர்தல் வரும் வரையில், அதை ஆட்சியிலிருந்து யாரும் அகற்ற முயலக் கூடாது. பா.ஜ.கவை ஆட்சியிலிருந்து அகற்றும் நோக்கில் எதிர்க்கட்சிகள் மக்களை அணிதிரட்டக் கூடாது என்கிறார் கிரண் ரிஜ்ஜூ.

இந்திய மக்கள் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் முடிவை ஏற்றுக் கொண்டதால் மட்டுமே ஐந்து ஆண்டுகள் அமைதி காக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. தேர்தல் முடிந்த மறுநாளில் இருந்தே பரந்து பட்ட உழைக்கும் மக்களின் மீது பாசிச கொடுங்கோன்மைகளை ஏவிவரும் பா.ஜ.க அரசிற்கு அடிபணிந்து கைகட்டி வாய் பொத்தி பணிந்து போக வேண்டும் என்றும் அர்த்தமல்ல. தேர்தலுக்கு இடையிலும் மோடி அரசை ஆட்சியிலிருந்து அகற்ற மக்கள் போராடுவதும் ஜனநாயக வழிமுறையே ஆகும்.

தேர்தல்கள், மக்கள் இயக்கங்கள், போராட்டங்கள் மற்றும் நாடாளுமன்ற நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் போன்ற ஜனநாயக வழிமுறைகள் மூலம் எதிர்க்கட்சிகள் ஆட்சி மாற்றத்திற்கு அழைப்பு விடுப்பது அரசியலமைப்புக்கு அப்பாற்பட்ட ஒரு சதிப்புரட்சி அல்ல.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே மோடி பதவியை விட்டு விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் மக்களும் போராடுவதும் ஜனநாயகத்தின் செயல் வடிவமாகும். இது எப்படி சதிப் புரட்சியாகும்? எப்படி அந்நிய கைக் கூலித்தனமாகும்?

பா.ஜ.கவும் அதன் முன்னோடியான ஜனசங்கமும் எதிர்க்கட்சியாக இருந்த போது, காங்கிரசை ஆட்சியில் இருந்து அகற்றக் கோரி பலமுறை அழைப்பு விடுத்திருக்கின்றனர். காங்கிரசு ஆட்சிக்கு எதிரானப் போராட்டத்தின் மூலமே தமது கட்சியின் பலத்தை கட்டமைத்தனர்.

மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்த போது சென்றிருந்த ஒரு வெளிநாட்டுப் பயணத்தில் பேசும் போது, மன்மோகன் சிங் பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டும்; அவரது தலைமையிலான ஒன்றிய அரசை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்றார்.

டிசம்பர் 20, 2013 அன்று வாரணாசியில் நடந்த பா.ஜ.க பேரணியில், மோடி பேசும் போது “நாட்டு மக்கள் தில்லியில் உள்ள அரசை வேரோடு பிடுங்க விரும்புகிறார்கள்” என்று கூறினார். ஜூன் 2013-ல் கோவாவில் நடைபெற்ற பா.ஜ.க கூட்டத்தில் பேசிய மோடி, காங்கிரசு இல்லாத இந்தியாவிற்கு அழைப்பு விடுத்தார்.

பா.ஜ.கவின் அத்வானியோ, மன்மோகன் சிங் அரசு சட்டவிரோதமானது என்று கூறியதுடன் அவர் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டுமென பிரச்சாரம் செய்தார். மன்மோகன் சிங் தலைமையிலான திறமையற்ற, ஊழல் நிறைந்த அரசை அகற்றுவது ஒவ்வொரு குடிமகனின் அரசியல் கட்சியின் தேசபக்தி கடமை என நாடாளுமன்றத்தை அன்றைய பா.ஜ.கவினர் முடக்கினர்.

பா.ஜ.க எதிர்க்கட்சியாக இருந்த போது, காங்கிரசு அரசின் பதவிக்காலம் முடிவடைவதற்குள் இராஜினாமா கோரிக்கைகள், காங்கிரசு அரசிற்கு எதிரான போராட்டங்களை நாடாளுமன்றத்திற்கு வெளியே தொடர்ந்து நடத்தி வந்தது.

நாடாளுமன்றத்திற்கு வெளியே காங்கிரசு கட்சியின் ஆட்சிக்கு எதிராக பா.ஜ.க மக்களைத் திரட்டினால் அது சட்டப்பூர்வமான போராட்டம். அதுவே பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் போது எதிர்க்கட்சிகள் மக்களை திரட்டி போராடினால் அது தேசத்திற்கு எதிரான நாசவேலையா? காங்கிரசின் ஆட்சியில் இருந்த மக்கள் போராடுவதற்கான அரசியலமைப்பு உரிமைகள் அனைத்தும் காவிகளின் ஆட்சியில் தேச விரோதமாக மாறிவிடுகிறதா?

இந்திராவின் எமர்ஜென்சியை எதிர்த்து ஜெயப்பிரகாஷ் நாராயண் போராடியதை காவிகள் நினைவு கூறும் போது, அதிகாரத்தில் இருப்பவர்கள் சர்வாதிகாரிகளாக மாறும்போது, “அவர்களை வீழ்த்துவதற்கான சக்தி மக்களுக்கு உண்டு” என்று ஜனசங்கத்தை கொண்டாடினர். ஆனால் தற்போது பா.ஜ.கவின் அரியணையை காலி செய்ய கூறி எதிர்க்கட்சிகள் போராடும் போது, அதை அந்நிய சதி, தேசவிரோதம் என காவிகள் கூக்குரலிடுகின்றனர்.

காவிகளின் தேச விரோதம், அந்நியக் கைக்கூலி போன்ற கோயபல்ஸ் புளுகுணிப் பிரச்சாரத் தாக்குதலுக்கு எஸ்.ஐ.ஆர் போராட்டம் மட்டும் தான் இலக்கு என்றில்லை. காவிகளின் ஒடுக்குமுறை சுரண்டலுக்கு எதிராகவும், ஜனநாயக உரிமைகளுக்காகவும் யாரெல்லாம் போராடுகிறார்களோ, அவர்கள் மீதும் தேச விரோதம், அந்நியக் கைக்கூலிகள், அந்நிய சதி என்ற பழி சுமத்தப்பட்டு வருகிறது. போராடும் அமைப்புகளை தேச விரோதிகளாகவும், அந்நியக் கைக்கூலிகளாகவும் சித்தரிக்கின்றனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்காக காவிப் பாசிஸ்டுகள் கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லியில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 700க்கும் அதிகமான விவசாயிகள் உயிர் நீத்தனர். அதில் போராடிய விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என காவிகள் குற்றஞ்சாட்டினர்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு ஆதரவாக 700 விவசாயிகளை மடிந்த பின்னர் ஏதோ நியாயமானவன் போல அச்சட்டத்தை திரும்ப பெற்றது தேச விரோதம் இல்லையா? அந்நியக் கைக்கூலித்தனம் இல்லையா?

அற்பக் கூலிக்காக நொய்டாவில் தொழிலாளர்கள் போராடிய போது, அதை கிரிமினல் குற்றமாக கருதி தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் உ.பி போலீசார் அடைத்தனர். பல தொழிலாளர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

கூலி உயர்வுக்கு போராடியதற்காக தேசியப் பாதுகாப்பு சட்டமா என உச்சநீதிமன்றமே காவிகளை கண்டித்தது. முதலாளிகளுக்காகவும், மேக் இன் இந்தியா திட்டத்தின் அந்நிய முதலீட்டு வரவுக்காகவும் தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒடுக்குமுறை தேச விரோதம் இல்லையா? ஒரு வேளை உணவுக்காக போராடிய தொழிலாளர்களை, அந்நிய மூலதனத்திற்காக மிருகத்தனமாக தாக்கியது அந்நியக் கைக் கூலித்தனம் இல்லையா?

சி.ஏ.ஏ போராட்டத்தின் போது, தில்லி மற்றும் உ.பி. கலவரத்திலும் சொந்த நாட்டு சிறுபான்மையினரான சுமார் 65 முஸ்லீம்கள், காவிக் குண்டர்களால் தேடி தேடிக் கொல்லப்பட்டனர். காவிகள் ஆட்சியில் நாட்டில் சிறுபான்மையினரின் ஒவ்வொரு உரிமையையும் பறித்து எடுக்கும் செயல் தேச விரோதம் இல்லையா?

கருப்பு பணத்தை ஒழிக்க போகிறேன் என மோடி அரசு கொண்டு வந்த பண மதிப்பு நடவடிக்கையினால் எந்த கருப்பு பணமும் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் இல்லை. இந்த தீடீர் நடவடிக்கையின் போது, பணத்தை எடுப்பதற்காக ஏ.டி.எம் வாசலில் மக்கள் மன்றாடினர். உழைக்கும் மக்கள் மீதான இத் தாக்குதல் நடவடிக்கையில் சுமார் 30 பேர் மடிந்தனர். இது கிரிமினல் குற்றமில்லையா? தேசவிரோதமில்லையா?

எஸ்.ஐ.ஆர் மூலம் ஒரே அடியில் 13 கோடி வாக்காளர்களை நீக்கிய காவிக் கும்பலினால் நாட்டிற்கு ஆபத்து வந்திருக்கிறது! உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள், சிறுபான்மையினர் மீது பாசிச கொடுங்கோன்மையை ஏவும் காவிக் கும்பலினால் தற்போது இந்த தேசத்திற்கு ஆபத்து வந்திருக்கிறது. நாட்டின் ஜனநாயக உரிமைகளும், வளங்களும் பறிபோவதற்கு முன்பு, நாட்டு மக்கள் ஓட்டாண்டிகளாக்கி விடுவதற்கு முன்பு, சிறுபான்மையினரை ஒட்டுமொத்தமாக ஒடுக்குவதற்கு முன்பு நாம் விழித்துக் கொள்ள வேண்டும்! காவி கும்பலால் இந்த தேசத்திற்கு ஆபத்து வந்திருக்கிறது!

காவிக் கும்பலின் ஒடுக்குமுறை, சுரண்டல் போன்ற பாசிசத் திட்டத்திற்கு எதிராக உழைக்கும் மக்கள், தங்கள் விடுதலைக்காக போராடும் போது காவிப் பாசிஸ்டுகள் அதை கிரிமினல் குற்றமாக, அந்நிய சதியாக கருதிக் கொள்ளட்டும்! உழைக்கும் மக்களாகிய நாம் அதை தேசப் பற்றாக உயர்த்திப் பிடிப்போம்!

  • தாமிரபரணி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன