குஜராத் மாடல்: அசலும் போலியும்

செப்டம்பர் 23, 2026
வங்கிக் கடன் மோசடிகளில் தொடங்கி போலி அரசியல் கட்சிகள், போலி நீதிமன்றம், போலி அரசு அலுவலகங்கள், போலி போலீஸ்–அதிகாரிகள், சர்வதேச அழைப்பு மைய மோசடிகள் வரை குஜராத்தில் வெளிவரும் சம்பவங்கள், வளர்ச்சி என்ற பெயரில் முன்னிறுத்தப்படும் “குஜராத் மாடலின்” உண்மை முகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வருகின்றன.

2014-ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு குஜராத் மாநிலத்தின் பெருமையை பேசுபவர்கள் குறைந்துவிட்டார்கள்.  இந்தியாவின் “தேசப்பிதா” என்று போற்றப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, குஜராத்தின் போர்பந்தர் நகரில் பிறந்தார். இந்தியாவின் “இரும்பு மனிதர்” என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல், குஜராத்தின் நதியாத் பகுதியில் பிறந்தார். இந்தியாவின் நான்காவது பிரதமர் மொராஜி தேசாய், குஜராத்தின் வல்சாட் மாவட்டத்தில் பிறந்தார். இந்தியாவின் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் வாட்நகர் பகுதியில் பிறந்தார்.

இவர்களெல்லாம் இந்தியாவிற்கு குஜராத் வழங்கிய கொடைகள். அதிலும் குறிப்பாக நரேந்திர மோடி அவர்கள் 2001 முதல் 2014 வரை மிக நீண்ட காலம் குஜராத்தின் முதலமைச்சராகவும், பின்னர் 2014 முதல் தொடர்ந்து இந்தியாவின் பிரதமராகவும் இருந்து வருகிறார். எனவே அவர் காலத்தில் குஜராத் எவ்வாறு மிளிர்ந்தது, தற்போது எவ்வாறு மிளிர்கின்றது என்பது பற்றிய பார்வையை வாசகர்களுக்கு வழங்கும் ஒரு முயற்சியாகவே இதனை எடுத்துக் கொள்ளலாம். 

குஜராத்தின் வைர வணிகப் பின்னணியைக் கொண்ட “பையர் ஸ்டார் டைமண்ட்” குழுமத்தின் நிறுவனர் நீரவ் மோடியை, பஞ்சாப் நேசனல் வங்கி தொடர்பான மோசடி வழக்கில் “தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி” என அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. அதாவது இந்தியாவில் பெரும் நிதி முறைகேடுகளைச் செய்துவிட்டு, நாட்டின் சட்ட நடவடிக்கைகளுக்கும் விசாரணைக்கும் பயந்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றவர்களில் முக்கியமானவர் இந்த நீரவ் மோடி.

நீரவ் மோடியின் மாமனாரும் கீதாஞ்சலி குரூப்பைச் சேர்ந்த வைர வியாபாரியுமான மெஹுல் சோக்சியும் கூட குஜராத்துடன் வணிகத் தொடர்பு கொண்டவர். இவரும் நீரவ் மோடியுடன் இணைந்து பஞ்சாப் நேசனல் வங்கி மோசடியில் ஈடுபட்டதற்காக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணைகளை எதிர்கொண்டார். அவரும் தற்போது வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுவிட்டதாக  2018-ஆம் ஆண்டு ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் அளித்திருக்கும் பதிலில் உறுதிசெய்திருக்கிறது. 

அதே போன்று “வின்சம் டைமண்ட் அண்டு ஜுவல்லரி” என்ற பெயரில் நிறுவனங்களை நடத்தி வந்த வைர வணிகர் ஜதின் மேத்தாவும், குஜராத்தைச் சேர்ந்தவர், வங்கிக் கடன் மோசடி தொடர்பான வழக்குகளில் இந்திய விசாரணை அமைப்புகளால் தேடப்பட்டவர்களில் ஒருவராவார். அவரும் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுவிட்டதாக 2018-ஆம் ஆண்டு ஒன்றிய அரசு கூறியிருக்கிறது.

குஜராத்துடன் நேரடியாகத் தொடர்புடைய ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தின் இயக்குனர்களான ஆன சேத்தன் சந்தேசாரா, நிதின் சந்தேசாரா, மற்றும் தீப்தி சந்தேசாரா உள்ளிட்டோர் மீது வங்கி மோசடி மற்றும் பணமோசடி தொடர்பான மிகப்பெரிய வழக்கும் விசாரணையில் உள்ளது. அமலாக்கத்துறையின் 2025–26 ஆண்டு அறிக்கையின்படி, இவர்களது நிறுவனங்கள் போலியான உற்பத்தி/முதலீட்டு பதிவுகள் மூலம் ஆண்டு வருவாயை உயர்த்திக் காட்டி வங்கிகளிடமிருந்து கடன் சலுகைகளைப் பெற்றதாகவும், அந்தப் பணம் பினாமிகளின் பெயர்களில் மாற்றப்பட்டதாகவும் அமலாக்கத்துறை கூறுகிறது. தற்போது இந்த வழக்கில் இவர்கள் மொத்தமாக ஏமாற்றிய தொகை சுமார் 14,690.95 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. இந்திய அரசின் 2018 நாடாளுமன்றப் பதிலில் இவர்களும் வெளிநாட்டில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவையெல்லாம் பொருளாதாரக் குற்றப்பின்னணி கொண்ட வழக்குகளுக்கு சில உதாரணங்கள் மட்டுமே. அதேபோல் சமூகக் குற்றப்பின்னணி கொண்ட வழக்குகளில் 2014-க்குப் பிறகு, அதாவது மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு விடுவிக்கப்பட்டவர்களின் பட்டியல் மிக நீளமானது.

2015-ஆம் ஆண்டு குஜராத்தின் பிரந்திஜ் நகருக்கு அருகே தங்கியிருந்த மூன்று பிரிட்டிஷ் முஸ்லிம்களையும், அவர்களது வாகன ஒட்டுநரையும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரை சபர்கந்தா நீதிமன்றம் விடுதலை செய்தது.

ஜூன் 2016-இல், குஜராத்தின் குல்பர்க் சொசைட்டியில் முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எஹ்சான் ஜாஃப்ரி உட்பட 69 முஸ்லிம்களை படுகொலை செய்வதற்கு காரணமான 36 பேரை அகமதாபாத் நீதிமன்றம் விடுதலை செய்தது.

அக்டோபர் 2016-இல், குஜராத்தின் மெஹ்சானாவில் உள்ள சர்தார்புராவில் 33 முஸ்லிம்களின் படுகொலையில் தொடர்புடைய 31 குற்றவாளிகளில் 14 பேரை குஜராத் உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 31 பேரை சிறப்பு நீதிமன்றம் விடுவித்ததற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தது.

கலோல் தாலுகாவின் பாலியாட் கிராமத்தில் கலவரம் செய்ததாகவும், அங்குள்ள முஸ்லிம்களின் சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்ட 28 பேரையும் காந்திநகர் நீதிமன்றம், சாட்சியங்கள் இல்லை என்று கூறி, விடுதலை செய்தது.

அதேபோல் மே 2018-இல், ஆனந்தில் உள்ள ஓட் (Ode) படுகொலையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தண்டிக்கப்பட்ட மூன்று நபர்களை குஜராத் உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. 19 பேரின் தண்டனையை உறுதி செய்த அதே வேளையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 23 பேரை விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்ததையும் அது உறுதி செய்தது.

ஜனவரியில், பஞ்சமஹாலில் உள்ள நீதிமன்றம் படுகொலையின் போது இரண்டு குழந்தைகள் உட்பட 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேரை விடுதலை செய்தது.

ஏப்ரல் 2-ஆம் தேதி, காந்திநகர் அருகே கலோலில் கூட்டுப் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 27 பேரையும், ஆதாரம் இல்லாத காரணத்தால் விடுதலை செய்தது. கூடுதல் அமர்வு நீதிபதி எல்.ஜி.சுடாஸ்மா, “எந்த ஆதாரமும் இல்லாமல் வெறும் சந்தேகத்தின் அடிப்படையில்” தொடரப்பட்ட வழக்கு எனக் குறிப்பிட்டிருந்தார்.

2022-ஆம் ஆண்டு ஆகஸ்டு 15-ஆம் தேதி பில்கிஸ்பானு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் இருந்த குற்றவாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவையெல்லாம் வாசகர்களுக்கு ஒரளவிற்கு தெரிந்த விஷயங்கள் தான் என்றாலும், குஜராத்தையும், அதன் கதாநாயகன் மோடியையும் மையமாகக்கொண்டு நடைபெற்றவை என்பதால் மீண்டும் ஒருமுறை நினைவூட்டுவதற்காக மட்டுமே. இவையன்றி மாநில அமைச்சர் என்ற பதவியிலிருந்து நாட்டின் பிரதம அமைச்சராகப் பதவியேற்ற பிறகும் குஜராத்தின் பெருமையை விட்டுக்கொடுப்பதாக இல்லை.

குஜராத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ள போலிக் கட்சிகளைத் தொடங்கி தேர்தல் நன்கொடைகளை அள்ளிச் சுருட்டுவது முதல் போலி நீதிமன்றம் – போலி நீதிபதி, போலி அரசு அலுவலகம், போலி PMO/CMO அதிகாரிகள், போலி போலீஸ்/விஜிலென்ஸ் அதிகாரிகள், போலி அழைப்பு மையங்கள் (call centre), போலி சுங்கச்சாவடி (toll both) வரை உள்ளூர் தொடங்கி சர்வதேசம் வரைக்கும் மக்களை போலி அல்ல; அசல் என நம்பவைத்து கழுத்தறுக்கும் வேலையைச் செய்துள்ளனர். இதற்குப் பெயர் தான் உண்மையான குஜராத் மாடல் போலும்.

போலி அரசியல் கட்சிகள்:

இந்தியாவில் 2,800-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன. ஆனால் அவற்றில் 73 கட்சிகளுக்கு மட்டுமே இந்தியத் தேர்தல் ஆணையம் தேசிய அல்லது மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் வழங்கியுள்ளது. மீதமுள்ள அனைத்தும் பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகளாகும்.

பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் ஜனநாயக சக்தி, பாரதிய தேசிய ஜனதா தளம், சுதந்திர பேச்சு கட்சி, புதிய இந்தியா ஐக்கிய கட்சி, சத்யவாதி ரக்ஷக், இந்திய மக்கள் மன்றம், சவுராஷ்டிரா ஜனதா கட்சி, ஜன் மேன் கட்சி, மனித உரிமைகள் தேசிய கட்சி, கரிப் கல்யான் கட்சி உள்ளிட்ட 10 கட்சிகள் 2019-2020 முதல் 2023-2024 வரையிலான 5 ஆண்டுகளில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் கட்சிகள் இருப்பது பற்றி யாருக்கும் தெரியாது. குறிப்பாக 2019-2020 முதல் 2023-2024 வரையிலான 5 ஆண்டுகளில் குஜராத் மாநிலம் 2 மக்களவைத் தேர்தலையும், ஒரு சட்டமன்றத் தேர்தலையும் எதிர்கொண்டுள்ளது. இந்த 3 தேர்தல்களில் 10 கட்சிகளைச் சேர்த்து மொத்தம் 43 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட்டுள்ளனர். அவர்கள் பெற்ற மொத்த வாக்குகள் 54,069 மட்டுமே. மேலும் 10 கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்தல் செலவு அறிக்கையில் செலவிடப்பட்ட தொகையாக ரூ.32.02 இலட்சம் மட்டுமே கணக்குக் காட்டியுள்ளன. ஆனால் தணிக்கை அறிக்கையில் ரூ.3500 கோடி செலவிட்டதாக 10 கட்சிகளும் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து ஜூன் மாதத்தில் பிபிசி தமிழ் தனது புலனாய்வைத் தொடங்கியது. அதில் கண்டறியப்பட்ட தகவல்களும் அவற்றைப் பற்றிய நிபுணர்களின் பகுப்பாய்வுகளும், இந்தக் கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.

குஜராத்தின் ஆனந்த் நகரில் பதிவு செய்யப்பட்ட சத்யவாதி ரக்ஷக் கட்சியின் அலுவலகம் பூட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது. பெயர்ப் பலகை அல்லது சுவரொட்டி எதுவும் இல்லாத அந்த இடம், 2023-24ஆம் ஆண்டில் ரூ.330 கோடி நன்கொடைகள் பெற்றதாகக் கூறப்படும் கட்சியின் நிலையை நம்ப முடியாததாக ஆக்கியது. அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி, அந்த ஆண்டில் கட்சி ஒரு வேட்பாளரை மட்டுமே நிறுத்தியதுடன், தேர்தல் பிரசாரத்திற்காக ரூ.8.48 கோடி செலவிட்டுள்ளது. மேலும், “பொது நலனுக்காக” ரூ.316 கோடி செலவிட்டதாக தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர் ஸ்வாதி பென், நன்கொடைகள் தொண்டு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டதாகவும், ஆனால் அதற்கான பதிவுகள் பராமரிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். இந்த வெளிப்படைத்தன்மையற்ற நிலை, 2023-24ஆம் ஆண்டில் அதிக நன்கொடைகள் பெற்ற பல பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகளின் (RUPPs) செயல்பாடுகளிலும் பொதுவாகக் காணப்பட்டதாக பிபிசி ஆய்வு கூறுகிறது.

2023-24 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத ஆறு கட்சிகளின் (RUPPs) மொத்த வருமானம், பாஜகவைத் தவிர மற்ற ஐந்து தேசியக் கட்சிகளின் வருமானத்தைவிட அதிகமாக இருந்தது. ஆனால், அந்த ஆறு கட்சிகள் 2024 பொதுத் தேர்தலில் மொத்தம் 15 வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தின; அதே சமயம், பாஜக அல்லாத ஐந்து தேசியக் கட்சிகள் 893 வேட்பாளர்களை களமிறக்கியிருந்தன.

அவற்றில் சத்யவாதி ரக்ஷக் கட்சி ரூ.330 கோடி நன்கொடைகள் பெற்றிருந்தும், ஒரு வேட்பாளரை மட்டுமே நிறுத்தியது. கட்சித் தலைவர் ஸ்வாதி பென், அந்தப் பணம் தொண்டு பணிகளுக்காக செலவிடப்பட்டதாகவும், ஆனால் அதற்கான பதிவுகள் பராமரிக்கப்படவில்லை என்றும் கூறினார். அதேபோல், அதிக நன்கொடை பெற்ற ஆம் ஜன்மத் கட்சி 2020இல் பாட்னாவில் தொடங்கப்பட்டு, 2022-23இல் ரூ.216 கோடி, 2023-24இல் ரூ.620 கோடி நன்கொடைகள் பெற்றிருந்தாலும், தேர்தலில் ஒரு வேட்பாளரை மட்டுமே நிறுத்தியது.

தற்போது பாஜக மாநில துணைத் தலைவராக உள்ள அனாமிகா பஸ்வான், 2022ஆம் ஆண்டிலேயே ஆம் ஜன்மத் கட்சியில் இருந்து விலகிவிட்டதாகக் கூறினார். அவரது கணவர், அவரது ராஜினாமா கடிதத்தையும், கட்சி அலுவலகம் ஆமதாபாத்துக்கு மாற்றப்பட்டு தற்போது கௌரவ் மிஸ்ரா தலைவராக இருப்பதாகக் கூறும் ஆவணத்தையும் காட்டினார். ஆனால் ஆமதாபாத்தில் அந்தக் கட்சியின் அலுவலகம் மூடப்பட்டிருந்தது; பொறுப்பாளர்கள் பதிலளிக்காத நிலை, மற்றும் நிதி தொடர்பான தெளிவின்மை ஆகியவை, இந்தக் கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து பல கேள்விகளை எழுப்புகின்றன.

இந்தியாவின் வரிச் சட்டங்களே இந்தக் கட்சிகளுக்கு பெரும் அளவில் நன்கொடைகள் வருவதற்கான முக்கிய காரணம் என நிபுணர்கள் விளக்குகின்றனர். அரசியல் கட்சிகளின் வருமானத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்படுவதால், நன்கொடை வழங்கியதற்கான இரசீதுகளை சமர்ப்பித்து தனிநபர்கள் தங்கள் வருமான வரியில் சலுகை பெற முடிகிறது.

ஆமதாபாத்தைச் சேர்ந்த மூத்த பட்டயக் கணக்காளர் மகேஷ் சஜ்ஜெட், நன்கொடை இரசீதுகளை சமர்ப்பித்து வரிச் சலுகை பெறும் நிலையில், கட்சிகள் ஒரு கமிஷனை வைத்துக்கொண்டு மீதிப் பணத்தை ரொக்கமாகத் திருப்பி வழங்குகின்றன. அதேபோல் பல RUPP கட்சிகள் பதிவு செய்யப்பட்ட முகவரிகளில் செயல்படாமலும், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமலும், வெறும் நிதி பரிவர்த்தனைகளுக்கான (போலி நன்கொடைகள், ஹவாலா பரிவர்த்தனைகள் மற்றும் நிதி முறைகேடுகள்) வழிமுறைகளாக பயன்படுத்தப்பட்டதாக கூறுகிறார்.

வருமான வரித்துறை ஆவணங்களின்படி, வரிச் சலுகை பெறுவதற்காக பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத கட்சிகளுக்கு வழங்கியதாகக் கூறப்படும் ரூ.5,591 கோடி மதிப்பிலான போலி நன்கொடைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் ரூ.2,749 கோடி மீட்கப்பட்டதுடன், ரூ.665 கோடி வெளிநாட்டு பரிவர்த்தனைகளும் கண்டறியப்பட்டன.

இந்த நடவடிக்கைகள் வருமான வரிச் சட்டம், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் மற்றும் தேர்தல் ஆணைய விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகக் காட்டுகின்றன. சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறும் செய்தியை, பிபிசி உறுதிப்படுத்த முயன்றபோதும் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் கிடைக்கவில்லை எனக் கூறியுள்ளது.

பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத கட்சிகளின் நிதி முறைகேடுகள் தொடர்பாகவும், குறிப்பாக சில கட்சிகள் குறித்தும், தேர்தல் ஆணையத்திற்கு பிபிசி கேள்விகளை அனுப்பியுள்ளது. ஆனால் இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

கடந்த ஆண்டு, தேர்தல் ஆணையம் 800-க்கும் மேற்பட்ட RUPP கட்சிகளை பட்டியலிலிருந்து நீக்கியது. அதற்கான காரணமாக, கடந்த ஆறு ஆண்டுகளில் அவை எந்தத் தேர்தலிலும் வேட்பாளர்களை நிறுத்தாதது மட்டுமே காரணமாகக் குறிப்பிட்டிருந்தது. இந்த நடவடிக்கைக்கான காரணமாக நிதி முறைகேடுகள் இல்லை என்பதிலிருந்தே இதன் யோக்கியதையைப் புரிந்துகொள்ள முடியும்.

கிராமப்புறத்தில் இயங்கிய போலி அழைப்பு மைய மோசடி:

மார்பி மாவட்டத்தின் மோட்டி பரார் கிராமத்தில், ஒரு போலி அழைப்பு மையம் (fake call centre) செயல்பட்டு வந்தது. அதில் பணியாற்றியவர்கள், ‘eyeBeam’ என்ற மென்பொருளைப் பயன்படுத்தி இங்கிலாந்து குடிமக்களின் தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பினர்.

அந்தச் செய்திகளில், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வரி பாக்கி இருப்பதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் பிரச்சினைகள் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் அச்சமடைந்தவர்கள், குறுஞ்செய்தியில் கொடுக்கப்பட்டிருந்த தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டனர்.

அவர்கள் அழைத்ததும், ஏற்கெனவே தயாரித்து வைத்திருந்த உரையாடல் குறிப்பின் (script) அடிப்படையில் மோசடியில் ஈடுபட்டவர்கள் பேசினர். அதிகாரப்பூர்வ வரித்துறை அதிகாரிகளைப் போல நம்பவைத்து, குறிப்பிட்ட இங்கிலாந்து வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்துமாறு அவர்களிடம் பேசினர்.

பாதிக்கப்பட்டவர்கள் செலுத்திய பணம் பின்னர் இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டது.

இதிலுள்ள முக்கிய அம்சம் என்னவென்றால், இத்தகைய மோசடி நடவடிக்கை நகர்ப்புறங்களில் மட்டுமே நடைபெறும் என்ற எண்ணத்தை மாற்றும் வகையில், கிராமப்புறத்தில் போலி அழைப்பு மையம் அமைத்து சர்வதேச அளவில் மோசடி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், சாங்கோதார்–மொராயியா பகுதியில் உள்ள செபன் வில்லா சொசைட்டியில் செயல்பட்டு வந்த சட்டவிரோத அழைப்பு மையம் ஒன்றின் மூலம், முதலீட்டாளர்களை மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளது.

பங்குத் தரகர்கள் போல தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட இந்தக் கும்பல், பொதுமக்களைத் தொடர்புகொண்டு பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக இலாபம் கிடைக்கும் என்று நம்ப வைத்தது. முதலில் சிறிய அளவில் பணத்தை முதலீடு செய்யுமாறு கூறி, அதற்கான தொகையையும் இலாபத்தையும் முறையாகத் திருப்பிக் கொடுத்துள்ளனர். இதனால் முதலீட்டாளர்களுக்கு மோசடி கும்பல் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

அந்த நம்பிக்கையைப் பயன்படுத்திக் கொண்டு, பின்னர் அதிக அளவில் பணத்தை முதலீடு செய்யுமாறு கூறியுள்ளனர். முதலீட்டாளர்கள் பெரிய தொகைகளைச் செலுத்தியதும், திடீரென அவர்களுடன் வைத்திருந்த தொடர்பைத் துண்டித்துக் கொண்டனர். மேலும் பணம் கைக்கு வந்தவுடன், மோசடி கும்பல் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டது.

அதேபோல், 2021-ஆம் ஆண்டு சூரத்தில் நடந்த கிரெடிட் கார்டு மோசடி, போலி அழைப்பு மையங்கள் எவ்வாறு மக்களை ஏமாற்றுகின்றன என்பதற்கான மற்றொரு உதாரணமாகும்.

மோசடி கும்பல், கிரெடிட் கார்டு நிறுவன ஊழியர்கள் போல தொலைபேசியில் தொடர்புகொண்டு, “உங்களுக்கு பரிசு வவுச்சர்கள் அல்லது ரிவார்ட்ஸ் கிடைத்துள்ளன” என்று கூறி நம்ப வைத்தது. பின்னர் கிரெடிட் கார்டு எண், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களைப் பெற்றதுடன், OTP-யையும் கேட்டு வாங்கியது. அந்த OTP-ஐப் பயன்படுத்தி அவர்களின் மின்சாரக் கட்டணங்களைச் செலுத்தியுள்ளனர். பின்னர் அந்தத் தொகையை அவர்களிடமிருந்து ரொக்கமாக வசூலித்து, மோசடிக் கும்பல் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

2026 ஜூனில் வடோதராவில், அமெரிக்க குடிமக்களை குறிவைத்து மற்றொரு போலி சர்வதேச அழைப்பு மையம் செயல்பட்டு வந்துள்ளது. இதிலுள்ள கும்பல், தங்களை கடன் முகவர்கள் போல அறிமுகப்படுத்திக் கொண்டு, “உங்கள் கடன் ஒப்புதல் பெற்றுவிட்டது” என்று கூறியுள்ளனர்.

மேலும் கடன் வழங்குவதற்கான செயலாக்கக் கட்டணம் (processing fee) என்ற பெயரில், ஒவ்வொருவரிடமும் 150 முதல் 200 அமெரிக்க டாலர் வரை வசூலித்துள்ளனர். மேலும், டெபிட் கார்டு எண், காலாவதி தேதி (expiry date), CVV உள்ளிட்ட முக்கியமான வங்கி அட்டை விவரங்களையும் பெற்றுள்ளனர்.

இவ்வாறு, ஒருபுறம் பரிசு மற்றும் ரிவார்ட்ஸ் என்ற பெயரிலும், மறுபுறம் கடன் ஒப்புதல் என்ற பெயரிலும் மக்களை நம்ப வைத்து, அவர்களின் நிதி மற்றும் தனிப்பட்ட தகவல்களைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளது. இந்த மோசடி, வெளிநாட்டு குடிமக்களை குறிவைத்து செயல்பட்ட புதிய வகை அழைப்பு மைய மோசடியாகும்.

போலி நீதிமன்றம் – போலி நீதிபதி:

குஜராத்தில் தன்னை அரசு நியமித்த மாற்றுத் தகராறு தீர்வுக்கான சர்வதேச மையத்தின் (ICADR) அங்கீகரிக்கப்பட்ட நடுவராகக் கூறிக்கொண்டு, நீதிமன்றம் போல் ஒரு போலி அமைப்பை நடத்தி, உண்மையான நீதிமன்ற உத்தரவுகளைப் போன்ற ஆவணங்களை மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் வழங்கியுள்ளார். காந்திநகரைச் சேர்ந்த கிறிஸ்டியன், தனது ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் உதவியுடன் இந்த அமைப்பை நடத்தி, குறிப்பாக நிலத் தகராறு வழக்குகளில் தீர்ப்பு வழங்கி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

இந்த விவகாரம் 2019-ஆம் ஆண்டு கிறிஸ்டியன் வழங்கிய ஒரு நிலத் தகராறு உத்தரவு, அகமதாபாத் நகர உரிமையியல் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டபோது வெளிச்சத்துக்கு வந்தது. அப்போது ஏற்கெனவே வழங்கப்பட்ட அந்த உத்தரவு குறித்து சந்தேகம் எழுந்தது. இதன் மூலம், ஒரே நிலப் பிரச்சினை ஒருபுறம் உண்மையான நீதிமன்றத்திலும், மறுபுறம் போலி அமைப்பிலும் கையாளப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், அகமதாபாத் மாநகராட்சிக்குச் (AMC) சொந்தமான நிலத்தை தனியாருக்குச் சாதகமாக மாற்றும் வகையில் போலி உத்தரவுகளை வழங்கியுள்ளார். பின்னர் அந்த உத்தரவை உண்மையான நீதிமன்றத்தில் பயன்படுத்தி நிலத்தை மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து நீதிமன்றம் அந்த மனுவை நிராகரித்து, ₹50,000 அபராதம் விதித்ததுடன், கிறிஸ்டியன் மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அரசு மற்றும் மாநகராட்சிக்குச் சொந்தமான 100 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் தொடர்பாகவும் கூடுதல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 2023-ஆம் ஆண்டு குஜராத் உயர் நீதிமன்றப் பதிவுகளின்படி, கிறிஸ்டியனுக்கு நடுவராகச் செயல்பட சட்டபூர்வ அதிகாரம் இல்லை. இருந்தபோதிலும், அந்த அதிகாரம் இல்லாமல் வழக்குகளை நடத்தி உத்தரவுகளை வழங்கியதுடன், கட்டணம் மற்றும் பிற செலவுகள் என்ற பெயரில் பணமும் வசூலித்துள்ளார். மேலும், அவர் மாற்றுத் தகராறு தீர்வுக்கான சர்வதேச மையத்தின் (ICADR) அங்கீகரிக்கப்பட்ட நடுவரும் அல்ல. எனவே, தன்னை நடுவர் என்று கூறிக்கொண்டு இதுபோன்ற நடவடிக்கைகளில் இனிமேல் ஈடுபடக்கூடாது என்று குஜராத் உயர் நீதிமன்றம் கிறிஸ்டியனை எச்சரித்துள்ளது.

இதனால், ஆரம்பத்தில் ஒரு “போலி நீதிபதி” என்ற அளவில் தொடங்கிய இந்த விவகாரம், பின்னர் போலி நீதிமன்றம், நிலத் தகராறுகள், அரசு நிலங்கள் மற்றும் போலி உத்தரவுகள் என விரிவடைந்துள்ளது. கிறிஸ்டியன், உண்மையான நீதிமன்றத்தைப் போலவே செயல்பட்டு, உத்தரவுகளை ”வழங்கி”யிருக்கிறார்.

மேலும், கிறிஸ்டியன் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் 2015-ஆம் ஆண்டிலேயே தொடங்கியிருந்ததாக 2023-ஆம் ஆண்டு குஜராத் உயர் நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த வழக்கில் நீதிமன்றத்தின் இறுதி முடிவு இன்னும் வெளியாகவில்லை.

இந்தச் சம்பவம் தனிப்பட்டதாகத் தோன்றினாலும், 2023 முதல் 2025 வரை குஜராத்தின் பல பகுதிகளில் போலி போலீஸ் நிலையங்கள், போலி அரசு அலுவலகங்கள், போலி சட்ட அமைப்புகள் போன்றவற்றை உருவாக்கி மக்களை ஏமாற்றிய சம்பவங்கள் ஒன்றிரண்டல்ல.

போலி அரசு அலுவலகம்:

சோட்டா உதய்பூர் மாவட்டம் போடேலி பகுதியில், “நீர்ப்பாசனத் திட்டப் பிரிவு” என்ற பெயரில் போலி அரசு அலுவலகம் ஒன்றை அமைத்து சன்தீப் ராஜ்புத் செயல்பட்டு வந்துள்ளார். அவர், தன்னை அரசு துறையின் செயற்பொறியாளர் எனக் கூறிக்கொண்டு, போலி அரசு முத்திரைகள், கையெழுத்துகள் மற்றும் ஆவணங்களைப் பயன்படுத்தியுள்ளார். மேலும், 2021 முதல் 2023 வரை 93 திட்டங்களின் பெயரில் ₹4.15 கோடிக்கும் அதிகமான அரசு நிதியைப் பெற்றுள்ளார். அரசு அலுவலகம் போலியாக உருவாக்கப்பட்டு, அதன் பெயரில் அரசின் பணத்தைப் பெற்றிருப்பது அரசாங்கத்தின் மீதிருக்குக்கும் மக்களின் நம்பிக்கையைக் கேளிக்கூத்தாக்கியுள்ளது.

போலி பிரதமர் அலுவலகம் (PMO) / முதலமைச்சர் அலுவலகம் (CMO) அதிகாரிகள்:

குஜராத்தைச் சேர்ந்த கிரண் ஜகதீஷ் படேல், தன்னை பிரதமர் அலுவலகத்தின் “கூடுதல் இயக்குநர் (Strategy & Campaigns)” என்று கூறி, ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்திடம் பாதுகாப்பு வசதிகளைப் பெற்றதுடன், அங்குள்ள உயர்பாதுகாப்புப் பகுதிகளுக்குச் சென்று அரசு அதிகாரிகளைச் சந்தித்துள்ளார். மேலும், குஜராத்தைச் சேர்ந்த சிலரிடம் வணிக வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியும் செய்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக, 2024 நவம்பரில் அமலாக்கத் துறை (ED), பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் மனுவைத் தாக்கல் செய்துள்ளது. குஜராத்திலும் அவருக்கு எதிராகப் பல முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது.

2024-ஆம் ஆண்டில் மட்டும், பிரதமர் அலுவலக (PMO) அதிகாரிகள் எனத் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பல வழக்குகள் குஜராத்தில் பதிவாகியுள்ளன. இதில், பரத் சாப்ரா தன்னை PMO மற்றும் CBI அதிகாரி எனவும், ரூபேஷ் தோஷி தன்னை PMO-வின் OSD எனவும் தங்களைப் போலியாக அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர். மேலும் பரத் சாப்ராவை அகமதாபாத் குற்றப்பிரிவு, ஹரியானாவின் கர்னாலில் கைது செய்துள்ளது. அதேபோல், ஹரியானாவைச் சேர்ந்த ஆறு பேர் PMO அதிகாரிகள் எனக் கூறி, பாஜக உறுப்பினர்களிடம் ₹12 இலட்சம் மோசடி செய்ததுள்னர். மயங்க் திவாரி என்பவர் PMO அதிகாரி எனக் கூறி மருத்துவர் ஒருவரை மிரட்டியுள்ளார் என CBI குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

குஜராத் முதல்வர் அலுவலகத்தையும் (CMO) விட்டு வைக்கவில்லை, தங்களை அரசு அதிகாரிகள் எனக் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகப் பல வழக்குகள் பதிவாகியுள்ளன. 2023-ஆம் ஆண்டில், ஐந்து மாதங்களுக்குள் மட்டும் இதுபோன்ற மூன்று சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில், விராஜ் படேல் தன்னை குஜராத் CMO அதிகாரி என்றும் GIFT City-யின் தலைவர் என்றும் கூறியுள்ளார், லவ்குஷ் திவேதி தன்னை CMO-வின் மூத்த அதிகாரி எனக் கூறி GST அதிகாரிகளை மிரட்டியுள்ளார். அதேபோல், நிகுஞ்ச் படேல் தன்னை CMO அதிகாரி எனக் கூறி ஜாம்நகர் போலீசு கண்காணிப்பாளரைத் தொடர்புகொண்டு, சைபர் குற்ற வழக்கில் சிக்கிய ஒருவரை விடுவிக்குமாறு கூறியுள்ளார். மேலும், 2025 ஜனவரியில் நிதேஷ் சவுத்ரி என்பவர் தாம் CMO-வில் 20 ஆண்டுகளாகப் பணியாற்றி வருவதாகவும், முதல்வரின் பயணங்களை ஏற்பாடு செய்வதே தனது பணி என்றும் கூறி, ஒரு நிலத் தகராறில் ₹40 லட்சம் சமரசத் தொகையாகப் பேசியுள்ளார்.

இந்தச் சம்பவங்களைத் தனித்தனி மோசடிகளாக மட்டும் பார்க்க முடியாது. அரசின் பெயர், பதவி, அதிகாரம் ஆகியவற்றைச் சொன்னாலே நம்பிக்கை கிடைத்துவிடும் என்ற மனநிலையை இவை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, அரசு அதிகாரிகளையே போலி அடையாளங்களால் ஏமாற்ற முடிகிறது என்பது, “அரசாங்கத்தையே இவ்வளவு எளிதாக நம்ப வைக்க முடிகிறதே; அப்படியானால் சாதாரண மக்களை ஏமாற்றுவது இன்னும் எளிதுதானே?” என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அமைந்துள்ளன.

போலி போலீஸ் மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள்:

குஜராத்தில் போலீஸ் மற்றும் கண்காணிப்புத் துறை (Vigilance) அதிகாரிகள் எனப் போலியாக அடையாளம் காட்டிக்கொண்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன. 2024 ஜனவரியில் பஞ்ச்மஹால் பகுதியில், நான்கு பேர் தங்களை மாநில கண்காணிப்புத் துறை அதிகாரிகள் எனக் கூறி ஒரு குடும்பத்தை மிரட்டியதாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் சாதாரண உடையில் இருந்தபோதும், கைகளில் தடிகளை வைத்திருந்ததாகவும், பின்னர் அவர்கள் உண்மையான கண்காணிப்புத் துறை அதிகாரிகள் அல்ல என்பதும் அம்பலமானது. இதேபோல், 2025 மார்ச்சில் 24 வயதான பெண் ஒருவர் தன்னை அகமதாபாத் குற்றப்பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் (DSP) எனக் கூறிக்கொண்டு, பல சமூக நிகழ்ச்சிகளில் கௌரவிக்கப்பட்டதுடன், தனிமனித முன்னேற்றம் (Personal Development/Self-Improvement) தொடர்பான தலைப்புகளில் உரையாற்றியுள்ளார்.

போலி சுங்கச்சாவடி (Toll Booth):

குஜராத்தில் போலி அரசு அலுவலகங்கள் அமைத்து மோசடி செய்துள்ளதுடன் நிற்கவில்லை, போலி சுங்கச்சாவடி அமைத்து வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்துள்ளனர். மோர்பி–வாங்கானேர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், உண்மையான சுங்கச்சாவடிக்கு அருகிலேயே போலி சுங்கச்சாவடி ஒன்றை அமைத்து, அந்த வழியாகச் சென்ற வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்துள்ளனர். இதுதொடர்பாக 2024 ஜனவரியில் இருவர் கைது செய்யப்பட்டதாகவும், மேலும் சிலர் தலைமறைவாகவும் உள்ளனர்.

இந்திய மக்கள் “அசல் எது, போலி எது?” என்று பிரித்தறிய முடியாத நிலை, அரசு நிர்வாகம் மக்களைப் பாதுகாக்க வேண்டிய தனது அடிப்படைக் கடமையிலிருந்து விலகியிருப்பதன் வெளிப்பாடாகும். இதில் போலிகளை மட்டும் வேட்டையாடுவது போதாது; போலிகள் உருவாகும் நிர்வாகக் கதவுகளையும் சேர்த்தே மூட வேண்டும். அரசு அமைப்புகள் வெளிப்படையாகவும், எளிதில் சரிபார்க்கக் கூடியதாகவும், மக்களுக்குப் பொறுப்புடையதாகவும் மாற வேண்டுமெனில், அவை பெருவாரியான ஏழை-எளிய உழைக்கும் மக்களின் நலனை மையமாகக் கொண்ட ஒரு அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

அதுவரை, அனைத்து அரசு அமைப்புகளும் சமூகத்தின் ஒரு சிறு பிரிவினரின் நலன்களைப் பாதுகாக்கும் கருவிகளாகவே செயல்படும்; அப்படித்தான் அவை செயல்படவும் முடியும். உழைக்கும் பெரும்பான்மை மக்களின் உரிமையும் அதிகாரமும் அரசின் மையமாக மாறும் போதுதான், அரசின் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புணர்வும் உண்மையான பொருளைப் பெறமுடியும். அதுவரை, “போலி” என்பது தனிநபர்களில் மட்டும் தேடப்பட வேண்டிய ஒன்றல்ல; மக்களிடமிருந்து விலகி நிற்கும் அதிகார அமைப்பின் தன்மையிலும் தேடப்பட வேண்டிய ஒன்றாகும்.

  • மகேஷ்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன