மோகன் யாதவின் நிலப் பேரம் : கிழிகிறது பா.ஜ.க.வின்
ஊழல் எதிர்ப்பு முகமூடி

ஜூலை 13, 2026
இரண்டு ஆண்டுகளில் 168 ஏக்கர் நிலத்தைச் சுருட்டிய மத்தியப் பிரதேச பா.ஜ.க முதல்வர் மோகன் யாதவின் குடும்பம்! பா.ஜ.க.வின் ஊழல் எதிர்ப்பு என்பதெல்லாம் ஈயத்தைப் பார்த்துப் பித்தளை இளித்த கதை போன்றதுதானே தவிர, அக்கட்சிக்கோ, மோடிக்கோ ஊழலை எதிர்த்துப் பேசுவதற்குக் கடுகளவும் தகுதி கிடையாது.

மோடி அரசு தான் பதவியேற்ற 2014 ஆம் ஆண்டிலிருந்து எதிர்க்கட்சியினர் மீது ஊழல் குற்றம் சுமத்தி அவர்களைக் கைது செய்வதன் மூலம், மோடியும் பா.ஜ.கவும் ஊழலுக்கு எதிரானவர்களாகவும், அதனைச் சகித்துக் கொள்ளாதவர்களாகவும் காட்டி வருகிறார்கள்.

2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே ஊழல் எதிர்ப்பு என்ற முகமூடியை பா.ஜ.க மாட்டிக் கொண்டுவிட்டது. இவ்வேடத்திற்கு 2ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரிச் சுரங்க ஊழல் போன்ற காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடந்தவற்றை கார்ப்பரேட் ஊடகங்களின் ஒத்துழைப்போடு பயன்படுத்திக் கொண்டது.

அதேவேளையில், மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, சவப்பெட்டி ஊழல் தொடங்கி மத்தியப் பிரதேசத்தில் நடந்த வியாபம் ஊழல், கர்நாடகாவில் நடந்த நிலப் பேர ஊழல், பெல்லாரி ரெட்டி சகோதரர்களின் சுரங்க ஊழல் என்று பா.ஜ.க.வின் ஊழல் பட்டியலும் நீண்டது. காங்கிரஸ் ஆட்சி ஊழலை மையப்படுத்தி மத்தியில் ஆட்சியைப் பிடித்த உடன், “நானும் ஊழல் செய்ய மாட்டேன், மற்றவர்களையும் ஊழல் செய்ய விட மாட்டேன்” என்று மோடி சவடால் அடித்தார். ஆனால் இந்தியா இதுநாள் வரை கண்டிராத பல ஊழல்களை [ரபேல் ஊழல், பங்குச் சந்தை ஊழல், பா.ஜ.க வாசிங்மிசின்] கடந்த பன்னிரண்டு வருடங்களாகப் பார்த்து வருகிறோம்.

அந்த வரிசையில் தற்போது மத்தியப் பிரதேச மாநிலத்தின் பா.ஜ.க முதலமைச்சரான மோகன் யாதவ், ரியல் எஸ்டேட் மோசடியில் ஒரு புதிய இலக்கணத்தையே படைத்திருக்கிறார்.

மோகன் யாதவ் ம.பி.யின் முதலமைச்சராகப் பதவியேற்பதற்குச் சில மாதங்களுக்கு முன்பு, அப்போதைய பா.ஜ.க முதல்வரான சிவராஜ் சவுகானால் உஜ்ஜைனியின் உள்கட்டமைப்பு வளர்ச்சி என்ற பெயரில் “உஜ்ஜைனி 2035 பெருந்திட்டம்” மே மாதம் 2023 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

மோகன் யாதவ் ம.பி.யின் முதலமைச்சராக கடந்த டிசம்பர் 2023 ஆம் ஆண்டில் பதவி ஏற்றார். இதற்கு முன்பு பல ஆண்டுகளாகவே உஜ்ஜைனியின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளில் மோகன் ஈடுபட்டு வந்துள்ளார். 2004-2010 ஆம் ஆண்டு வரை உஜ்ஜைனி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராகவும், 2011-13 ஆம் ஆண்டு வரை ம.பி. சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் (MPTDC) தலைவராகவும், 2013 முதல் உஜ்ஜைனி (தெற்கு) தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், 2021-23 ஆண்டுகளில் கல்வி அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.

முதலமைச்சரான தொடக்கத்திலிருந்தே உஜ்ஜைனி நகரத்தை மையப்படுத்தி பல்வேறு சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்கள், குடியிருப்புப் பகுதிகள் கட்டுவது, வணிக வளாகங்கள் கட்டுவது போன்ற திட்டங்களை வேகமாக அறிவித்து வருகிறார். இதனால் உஜ்ஜைனி நகரம் ரியல் எஸ்டேட் சந்தையின் முக்கிய தளமாக மாறியிருக்கிறது. இதனால் தற்போது உஜ்ஜைனி நகரத்தைச் சுற்றியிருக்கும் நிலத்தின் மதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது.

உஜ்ஜைனியைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் நிலத்தை வாங்கிக் குவிப்பது ஏதோ ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனமல்ல. ம.பி. முதல்வர் மோகன் யாதவ் குடும்பத்தினர் நடத்தும் ரியல் எஸ்டேட் நிறுவனம் தான் அப்பகுதியில் அமைந்திருக்கும் விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கிக் குவித்து வருகின்றன.

இந்தியாவில், நாடாளுமன்றத் தொகுதிக் கட்சித் தலைவர்கள் தங்களது பினாமிகளின் பேரில் சுயநிதிக் கல்லூரிகள் நடத்துகிறார்கள்; ரியல் எஸ்டேட் தொழிலில் கோடி கோடியாகச் சொத்து சேர்க்கிறார்கள்; மணல் திருட்டு நடத்திக் கொள்ளையடிக்கிறார்கள்; கார்ப்பரேட் மருத்துவமனைகளில் பங்குதாரர்களாக உள்ளனர்; கனிம வளச் சுரங்கத் தொழில் நடத்தி இயற்கையை அழிக்கிறார்கள்.

ஆனால் ம.பி. முதல்வரான மோகன் யாதவோ இதை விட ஒரு படி மேலே சென்று, அவரும் அவரது மனைவியான சீமாவும் சித்தி விநாயகர் டெவ்கான் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை 2008 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகின்றனர். இந்நிறுவனத்தில் 73% பங்குகளை வைத்துள்ளனர்.

மோகன் யாதவ் ம.பி.யின் முதலமைச்சராகப் பதவியேற்ற இரண்டே ஆண்டுகளில், அவரும் அவரது குடும்பத்தினரும், அவர்களுக்குச் சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் ரூ.45 கோடி மதிப்பிலான, 168 ஏக்கர் பரப்பளவிலான 137 நிலப்பகுதிகளை (பிளாட்) வாங்கியுள்ளனர்.

 

மோகன் யாதவ் குடும்பத்தினர் வாங்கிய 168 ஏக்கரில், சுமார் 111 ஏக்கர் நிலங்கள் உஜ்ஜைனியைச் சுற்றி அறிவிக்கப்பட்ட முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் சாலை விரிவாக்கத் திட்டங்களுக்கு அருகிலேயே இருக்கின்றன.

அதிலும் உஜ்ஜைனியில் நிரந்தர கும்பமேளா திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராடிய 2025 ஆம் ஆண்டில் தான் மோகன் யாதவ் குடும்பம் 92 ஏக்கர் நிலத்தை வாங்கிக் குவித்திருக்கின்றன என்பதை ஆதாரங்களோடு இந்தியன் எக்ஸ்பிரஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

மோகன் யாதவின் மைத்துனர்களான கோவிந்த் யாதவ் மற்றும் நீலேஷ் யாதவ் ஆகிய இருவருமே இந்த நிலக் குவிப்பு மற்றும் விற்பனையில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். கோவிந்த் யாதவ் கங்கேடி பகுதியில் வாங்கிய 41 ஏக்கர் நிலத்தை, இந்தூரைச் சேர்ந்த ‘சாந்தி மஹாலோக் பில்டர்ஸ்’ நிறுவனத்திடம் கூட்டு ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைத்துள்ளார்.

நீலேஷ் யாதவ், அவரது மனைவி சுனிதா ஆகியோர் ‘ஸ்ரீ அன்னா பூர்ணா கன்ஸ்ட்ரக்ஷன்’ மற்றும் ‘ஸ்ரீ அன்னாபூர்ணா எண்டர்பிரைசஸ்’ மூலம் 2024 முதல் 78 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளனர். இவர்கள் மத்தியப் பிரதேச ரேராவில் (RERA) நான்கு புதிய வீட்டுவசதித் திட்டங்களைப் பதிவு செய்துள்ளனர்.

இதில், உஜ்ஜைனியில் உள்கட்டமைப்பு வளர்ச்சி என்ற பெயரில் ஒரு திட்டத்தைத் தொடங்குவது, அப்பகுதியின் விவசாய நிலங்களை தமது குடும்பத்தினர் நடத்தும் ரியல் எஸ்டேட் நிறுவனம் மூலம் அடிமாட்டு விலைக்கு வாங்குவது, பின்பு வணிக ரீதியில் பலமடங்கு இலாபத்திற்கு விற்றுக் கோடி கோடியாகச் சொத்து சேர்ப்பது போன்ற முறைகேடுகள் அடங்கியிருப்பது யாவருக்கும் புரியும்.

இது தான் மத்தியப் பிரதேசத்தின் பா.ஜ.க அரசின் இலட்சணம். ம.பி. முதல்வர் மோகன் யாதவின் யோக்கிதையை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் அம்பலப்படுத்தி இரண்டு வாரங்கள் உருண்டோடிவிட்டன. மோகன் யாதவ் இந்த ரியல் எஸ்டேட் முறைகேடு பற்றியும், அரசுத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே தமது குடும்பத்திற்கு எப்படி 168 ஏக்கர் உடைமையாக வந்தது என்பது பற்றியும் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

ஊழலுக்கு எதிராகப் பொங்கி எழும் மோடியும், பா.ஜ.கவும், அதன் ஏவல் படையான அமலாக்கத்துறையும் தற்போது வரை மோகன் யாதவின் ரியல் எஸ்டேட் ஊழல் விவகாரத்தில் அமைதி காக்கிறார்கள்.

உண்மையில் ஊழலுக்கு எதிராக பா.ஜ.க. முன்னெடுக்கும் நடவடிக்கைகள் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற தார்மீக நோக்கத்தின் அடிப்படையில் எடுக்கப்படுவதில்லை. மாறாக, மாநிலக் கட்சிகளின் தலைவர்களை நேரடி அரசியல் எதிரிகளாகப் பழி தீர்த்துக் கொள்வதற்கும், எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கும், அவர்களை பா.ஜ.க பக்கம் இழுத்துக் கொள்வதற்கும் அல்லது தேர்தல் வெற்றிக்குப் பயன்படுத்திக் கொள்வதற்கும் என்ற சுயநல நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

தனக்கு ஆதாயம் என்றால் மற்ற கட்சிகளைச் சேர்ந்த ஊழல்வாதிகளையும், கிரிமினல் பேர்வழிகளையும் இரட்சித்துக் காக்கும் பா.ஜ.க, தன் சொந்த கட்சி முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுக்குமா என்ன?

வடகிழக்கு மாநிலங்களில் முன்பு நடைபெற்ற “சாரதா சிட்பண்ட்ஸ்” மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அஸ்ஸாமின் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஹிமந்தா பிஸ்வாஸ் பா.ஜ.க விற்குத் தாவினார். மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸின் முன்னாள் தலைவரான சுவேந்து அதிகாரி, சி.பி.ஐ நடத்திய சாரதா ஆப்ரேஷனில் ஆதாரத்தோடு குற்றஞ்சாட்டப்பட்டவர். இவரும் பா.ஜ.க விற்குத் தாவினார். இதற்குப் பரிசாக, அவர்களின் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் நீக்கப்பட்டு அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கத்தின் முதல்வர்களாக்கியுள்ளது பா.ஜ.க தலைமை.

பா.ஜ.க ஆட்சியில்லாத ஒரு மாநிலத்தின் முதல்வர் இதே போன்று ரியல் எஸ்டேட் மோசடியில் ஈடுபட்டிருப்பதாகச் செய்தி கசிந்திருந்தாலே இந்நேரம் மோடி அரசின் அமலாக்கத்துறை படையெடுத்து வந்திருக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அம்முதல்வர் இராஜினாமா செய்ய வேண்டும் எனும் பா.ஜ.கவினரின் கூச்சல்கள் இந்திய மக்களின் காதைப் பிளந்திருக்கும்.

மோகன் யாதவின் ரியல் எஸ்டேட் மோசடி செய்திகள் வெளிவந்து இரண்டு வாரங்கள் கடந்தும் செய்தி ஊடகங்கள் மௌனமாக இருக்கின்றன.

கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான பிற கட்சிகளைச் சேர்ந்த 25 தலைவர்கள் பா.ஜ.க வில் இணைந்துள்ளனர். இவர்களில் காங்கிரஸ் கட்சியிலிருந்து 10 பேரும்; தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனாவிலிருந்து தலா நான்கு பேரும்; திரிணாமூல் காங்கிரஸிலிருந்து மூன்று பேரும்; தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து இரண்டு பேரும்; மற்றும் சமாஜ்வாடி கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர்.சி.பி-யிலிருந்து தலா ஒருவரும் பா.ஜ.கவில் இணைந்துள்ளனர். இதில் ஏக்நாத் ஷிண்டே, பிஸ்வாஸ், சுவேந்து அதிகாரி, அஜித் பவார், பிரபுல் படேல், பிரதாப் சர்நாயக், ஹாசன் முஷ்ரிப் என்று இப்பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. ஊழல் குற்றச்சுமத்தப்பட்ட இவர்கள் அனைவரும் பா.ஜ.க வில் சேர்ந்த உடன் புனிதர்களாக அறிவிக்கப்பட்டதோடு மட்டுமில்லாது, அக்கட்சியை உடைத்து மக்கள் பிரதிநிதிகளை விலைக்கு வாங்கி பா.ஜ.க ஆட்சியையும் அமைத்து வருகிறது மோடி-அமித் ஷா கும்பல்.

 

இந்நிலையில், பா.ஜ.க.வின் ஊழல் எதிர்ப்பு என்பதெல்லாம் ஈயத்தைப் பார்த்துப் பித்தளை இளித்த கதை போன்றதுதானே தவிர, பா.ஜ.க விற்கோ அல்லது மோடிக்கோ ஊழலை எதிர்த்துப் பேசுவதற்குக் கடுகளவும் தகுதி கிடையாது.

  • தாமிரபரணி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன