சந்தி சிரிக்கும் தவெகவின் ஊழல் ஒழிப்பு நாடகம்

ஜூலை 20, 2026
திடீர் ஆய்வுகள், இலஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை, ஊழலுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கைகள் என தவெக அரசு தூய நிர்வாகத்தின் பிம்பத்தை உருவாக்க முயல்கிறது. ஆனால் ஆட்சியின் முதல் இரண்டு மாதங்களிலேயே அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு நியமனங்களைச் சுற்றி எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் அந்தப் பிம்பத்தை கேள்விக்குள்ளாக்குகின்றன. தவெகவின் ஊழல் ஒழிப்பு முழக்கமும் ஆட்சியின் யதார்த்தமும் ஒன்றுக்கொன்று முரணாக நிற்கின்றன.

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிராக தவெக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வுகள், இலஞ்சம் வாங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகளை இடைநீக்கம் செய்தல், பொதுமக்களிடம் இலஞ்சம் கேட்டால் நேரடியாக புகார் அளிக்குமாறு அறிவுறுத்தல் போன்ற நடவடிக்கைகள் தொடர்ச்சியாக ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாகி வருகின்றன. சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற திடீர் ஆய்வுகளின் தொடர்ச்சியாக பல அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டதோடு, முறைகேடுகள் தொடர்பாக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

அதேபோல், விவசாயி ஒருவரிடம் ரூ.50 இலஞ்சம் பெற்றதாகக் கூறப்பட்ட அரசு ஊழியர் மீது வேளாண்மைத் துறை அமைச்சர் நேரடியாக நடவடிக்கை எடுத்த சம்பவமும் தொலைக்காட்சி ஊடகங்களில் பரபரப்பு செய்தியாக காட்டப்பட்டது. அதாவது “இலஞ்சம் என்பது மிகச்  சிறிய தொகையாக இருந்தாலும்,  அதனை இந்த அரசு பொறுத்துக் கொள்ளாது” என்று  கூறுவதற்காக இது போன்ற நடவடிக்கைகள் அரசால் முன்னிறுத்தப்படுகின்றன. ஊழலற்ற நிர்வாகத்தை உருவாக்குவதில் தவெக அரசு தீவிரமாக செயல்படுகிறது என்ற பிம்பம் உருவாக்கப்படுகிறது.

ஆனால், ஒரு அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு முகமூடியை மதிப்பிட வேண்டியது அதன் அதிரடி சோதனைகள் அல்லது ஊடகங்களில் வெளியாகும் அறிவிப்புகளின் அடிப்படையில் அல்ல. ஆட்சியின் இரண்டு மாத காலத்தில் அதன் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், அரசு நியமனங்கள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் என்ன சொல்கின்றன என்பதன் அடிப்படையில்தான் மதிப்பிட வேண்டும். அந்த வகையில் பார்க்கும் போது, தவெகவும் அதன் தலைவர் விஜய்யும் உண்மையிலேயே “தூய சக்திகளா?” என்ற கேள்வி எழுவதைத் தவிற்க முடியாது.

தேர்தல் அரசியலில் ஒரு தனிநபரோ, கட்சியோ தம்மைத்தாமே யோக்கியன்/உத்தமன் என்று பேசுவதும், விளம்பரம் செய்வதும் ”தூய சக்தி” ஆகாது. மாறாக, தேர்ந்தெடுத்த மக்கள் தூய சக்தி என்று அங்கீகரிக்கும் வகையில் தங்களது செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் தவெக-வும், அதன் தலைவர் விஜய்யும் ஊழலை ஒழித்துவிட்ட தூய சக்திகளா? என்றால், இல்லை என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிட முடியும். அதற்கான தரவுகள் செங்கனல் உள்ளிட்ட இணையதளங்களிலும், பிற பத்திரிகைகளிலும் கொட்டிக்கிடக்கின்றன. எனினும், ஊழல் ஒழிப்பில் தவெக-வின் இரண்டு மாத கால ஆட்சி, ஏற்கனவே ஆட்சி அதிகாரத்தில் இருந்த கட்சிகளின் (திமுக – அதிமுக) செயல்பாடுகளை ஒத்ததாக இருக்கிறதா? அல்லது தூய சக்தி என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு நேர்மையாக நடக்கிறதா? என்பதைப் பற்றி பரிசீலித்து முடிவு செய்யலாம்.

கடந்த வாரம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், தவெக தலைவரும், முதல்வருமான விஜய், ஊழலில் ஈடுபடும் அமைச்சர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்ததாகவும், அரசு அலுவலகங்களில் இலஞ்சம் தவிர்ப்பது, பள்ளிகள் மற்றும் கல்லூரி வேலை நேரங்களில் தவெக வினர் ரீல்ஸ் (Reels) எடுப்பதைத் தடுத்து கல்வி நிலையங்களின் மாண்பைக் காப்பது குறித்தும் அமைச்சர்களுக்கு கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார் என்று பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் செய்திகள் வெளியிட்டுள்ளன.

கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதற்கு என்ன காரணம்? தவெக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வருகின்றன, கல்வி நிலையங்கள், மருத்துவமனைகளின் மாண்பைக் கெடுக்கும் வகையில் நடந்து கொள்கிறார்கள் என்பதேயன்றி வேறு என்னவாக இருக்க முடியும். சுருங்கக் கூறின் ”மல்லாக்கப் படுத்துக்கொண்டு எச்சில் துப்புவது”. அந்த அளவிற்கு தவெக-வின் செயல்பாடுகள் கடந்த இரண்டு மாதங்களில் சந்தி சிரித்துள்ளது என்று சொன்னால் மிகையாகாது.

ஆனால் தமிழ்நாட்டுப் பத்திரிகைகளும், செய்தி தொலைக்காட்சிகளும், விஜய் தேர்தலுக்கு முன்பாக மதுரை மாநாட்டில் பேசியதற்கு கிஞ்சித்தும் குறையாமல் நேர்மையாகவும், நியாயமாகவும் ஆட்சி நடந்துவது போலவும், அதனால் தான் ஊழலிலும், மாண்பைக் கெடுக்கும் வகையிலும் தவெக அமைச்சர்கள் நடந்துகொள்ளக் கூடாது என கண்டிப்புடன் உத்தரவிடுகிறார் என்றும் முதல்வர் விஜய்க்கு ஒளிவட்டம் இடுகின்றனர்.

விஜய், மோகன்ராஜ் 24.05.2026 தேதியிட்ட ஜூ.வி இதழில், `ஆவின் தலைவர் பதவி ரூ.50 லட்சம்… அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சம்… வசூல் சர்ச்சையில் த.வெ.க மாவட்டச் செயலாளர்’ என்ற தலைப்பில் விரிவான கட்டுரை வெளிவந்தது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை, வழக்கமாக அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் செய்யக்கூடிய ஒன்று தான் என்ற போதிலும், தேர்தலுக்கு முன்பு ஊழலுக்கு எதிராக தவெக தலைவர் விஜய்யின் பேச்சுகளோடு ஒப்பிட்டால் இச்செய்தியை எளிதில் கடந்து செல்ல முடியவில்லை. ஏனென்றால் அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக 10.05.2026 அன்று தான் பதவி ஏற்கிறார். அதிலிருந்து இரண்டு வாரங்களில் [24.05.2026 அன்று] தவெக செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் மீதும், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் “குஷி” மோகன் மீதும் ஊழல் குற்றச்சாட்டு எழுகிறது என்றால், தவெக-வின் ஊழல் ஒழிப்பு யோக்கியதையை என்னவென்று சொல்வது.

‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ எனும் புத்தகத்தை தவெக (TVK) தலைவர் விஜய்யை வைத்து 06.12.2024 அன்று விகடன் தான் வெளியிட்டனர். அக்கூட்டத்தில் பேசிய விஜய், ஊழல், மன்னராட்சி, கூட்டணிக் கணக்குகள் ஆகியவற்றின் மூலம் ஆட்சி நடத்திவரும் திமுக-வை ”சுயநலத்திற்காக நீங்கள் போடும் கூட்டணிக் கணக்குகள் 2026-இல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்” என்றார். இப்படி புத்தக வெளியீட்டில் திமுக-விற்கு எதிராக அரசியல் பேசுவதற்கு அனுமதித்த விகடன் குழுமம் தான், தற்போது தங்களுடைய ஜூ.வி இதழில் தவெக-வின் ஊழலை அம்பலப்படுத்தியிருக்கிறது.

இது ஒரு நகைமுரண் என்ற போதிலும், இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததே தவெக கட்சியைச் சேர்ந்த விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி நிர்வாகி ஞானசௌந்தரி என்பது குறிப்பிடத்தக்கது. தவெக கட்சி ஆரம்பித்த சமயத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் 11 வழக்கறிஞர்கள் தேவை என்று கூறியுள்ளனர். அதற்கு ஞானசௌந்தரி உட்பட 4 பேர் மட்டுமே விஜய் ரசிகர்கள் என்ற முறையில் பெயர் கொடுத்துள்ளனர். மாவட்டச் செயலாளர் ”குஷி” மோகன் மீது போடப்பட்ட இரண்டு வழக்குகளுக்கு ஞானசௌந்தரி உள்ளிட்ட அதே நாலு பேர்தான் ஆஜராகியுள்ளனர். ஆட்சிக்கு வந்த பிறகு தங்களை விட்டுவிட்டு, ஒரு நியமனத்துக்கு ரூ.5 இலட்சம் முதல் ரூ.30 இலட்சம் வரை இலஞ்சம் வாங்கிக் கொண்டு வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ஆறு பேரை அரசு வழக்கறிஞராக நியமித்திருப்பதாக `குஷி’ மோகன் மீது குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்தக் குற்றச்சாட்டில் தொடர்புடைய ”குஷி” மோகன், ஞானசௌந்தரி ஒரு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண் என்பதாலும், கஷ்டப்படும் குடும்பம் என்பதாலும் அவர் என்னை மிகவும் கேவலமாக நடத்தினார் என்று கூறியுள்ளார். தவெக-வின் சாதி ஒழிப்பும், சமூக நீதியும் சந்தி சிரிப்பது இந்த இடத்தில் தான். இவர்கள் வெற்றி பெற்றவுடன் சாதி ஒழிந்தது, மதம் ஒழிந்தது, பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் அரசியல் முடிந்தது என்று தமக்குத்தாமே மார்தட்டியதெல்லாம் சொந்தக் கட்சி நிர்வாகியின் குற்றச்சாட்டின் மூலம் ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டு மாதங்களில் தவிடுபொடியாகிவிட்டது.

தவெக-வின் ஊழல் புராணம் இத்துடன் நின்றுவிடவில்லை. செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலாளரும், மாம்பாக்கம் பஞ்சாயத்து தலைவருமான என்.வி. வீரா (எ) வீராசாமி சாலை அமைக்கும் பணிக்கான நிலுவைத் தொகையை விடுவிப்பதற்காக, ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 இலட்சம் வாங்கும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பிளாஸ்ட் ஆனது. கையும் களவுமாக பிடிபட்ட பின்னர் நிலைமையைச் சமாளிக்க பஞ்சாயத்து தலைவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான மடம் மற்றும் வாகன நிறுத்துமிடம் போலி ஆவணங்கள் மூலம் விற்கப்பட்ட வழக்கில், நெல்லையைச் சேர்ந்த தவெக பிரமுகர் சண்முகசுந்தரம் என்பவரிடம் சிபிசிஐடி (CB-CID) போலீசார் விசாரணை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகிவருகின்றன. இந்த விவகாரத்தில் திமுக – அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆளும் தவெக-வை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவறு நடந்திருப்பதை தவெக அமைச்சர் இரமேஷ் ஒப்புக்கொண்டிருப்பதால், இது மிகப்பெரிய ஊழல்! என்றும், இவ்வளவு பெரிய பத்திரப் பதிவு நடக்கிறது என்றால், அதை ஏதோ ஒரு பவர் சென்டர் தான் முன்னின்று வழிநடத்தியிருக்க வேண்டும். தனது ஆட்சியில் தான் மட்டுமே பவர்சென்டர் என்று சொன்ன முதலமைச்சர் அவர்களே, இந்த ஊழலின் பின்னால் யார் அந்த பவர்சென்டர்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். திமுக-வில் பல்வேறு பவர்சென்டர்கள் இருப்பதாகவும், தவெக-வில் தான் மட்டுமே பவர்சென்டர் என்று விஜய் திமுக-வின் மீது சொருகிய கத்தியை எடுத்து எடப்பாடி, விஜய்க்கு சொருகியிருக்கிறார்.

அதேபோல் திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன், பழனி கோவில் நில மோசடி தொடர்பாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் இரமேஷ், ”அறியாமைக் காரணமாக அதிகாரிகள் பத்திரப்பதிவு செய்துவிட்டனர்” என்கிறார். விசாரணைத் தொடங்குவதற்கு முன்பு ஒரு அமைச்சர் இவ்வாறு கூறுவது, குற்றவாளியைக் காப்பாற்றுவதற்கு அவர் துணை போவதைத் தெளிவாகக் காட்டுகிறது என்று விமர்சித்துள்ளார்.

இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் பொழுது எதிர்கட்சிகள் ஆளும் கட்சிக்கு எதிராக கொம்பு சுற்றுவது வழமையான ஒன்றுதான் என்றாலும், தவெக தலைவர் விஜய் வழமையான முதலமைச்சர் இல்லை. அவர் ஊழலை ஒழிப்பதற்காக பேண்டிற்கு மேல் ஜட்டி அணியும் சூப்பர்மேன் என்பதால், மக்கள் அவரிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்று தெரியாத ரசிக மனநிலையில் உள்ள மக்களுக்கு இதுபோன்ற சம்பவங்களின் மூலம் பட்டுத் தெரிவது ஒன்றும் புதிதல்ல.

அந்தவகையில் “பயணம்“ திரைப்படத்தில், பப்லூ பிருத்விராஜ் நடித்த சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்திடம், சாம்ஸ் என்ற ரசிகர் நிஜ விமானக் கடத்தலின் போது சண்டையிடக் கோருவார். அதற்கு பப்லூ பிருத்விராஜ், அது சினிமா மட்டுமே என்றும், நிஜத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடுவார்கள் என்றும் பயத்துடன் பதிலளிப்பார். சினிமாவுக்கும் நிஜ வாழ்க்கைக்குமான வித்தியாசத்தை நகைச்சுவையாகக் காட்டும் இந்தக் காட்சி, ஊழல் ஒழிப்பு என்று வசனம் பேசும் விஜய்க்கும் பொருந்தக்கூடியதுதான்.

தமிழ்நாட்டின் முதல்வர் என்ற முறையில் விஜய் அவர்கள் இதற்கெல்லாம் ஏதாவது பதில் சொல்லியிருக்காரா என்றால், இன்றுவரை வாய்திறக்கவில்லை என்பதே பதில். தவெக அமைச்சர்களோ, இது திமுக-வின் சதி, கோவில் விவகாரத்தில் திமுக – அதிமுக – பாஜக கூட்டுச்சேர்ந்து கொண்டு எங்கள் மீது வீண் பழி சுமத்துகிறார்கள் என்று அழுகுணி ஆட்டம் ஆடிவருகிறார்கள். அப்படியென்றால் தவெக ஊழலை ஒழிக்காதா? என்று பாமரத்தனமாக கேள்வி எழுப்புபவர்களுக்கு நாம் முன்வைக்கும் பதில், ”அரியும் சிவனும் ஒன்னு; அறியாதவன் வாயில் மண்ணு” என்பதுதான்.

தவெக மட்டுமல்ல அதிமுக – திமுக – பாஜக – காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே, ஊழலை ஒழிக்கப்போகிறோம் என்று மக்களை ஏமாற்றுவதற்காக சிற்சில கைது நாடகங்களை அரங்கேற்றுவார்கள். இவையெல்லாம் ஊழல் என்ற பெருங்கடலில் கரைக்கப்பட்ட பெருங்காயம் என்று தான் பார்க்க வேண்டும். அவ்வாறின்றி ஆட்சியாளர்களின் விளம்பரங்களுக்கும், ரீல்ஸ்களுக்கும் மயங்கி நல்லது நடக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தால் இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் மக்களின் ஊழலும் ஒழியப்போவதில்லை, மக்களின் துன்பமும் நீங்கப்போவதில்லை. ஊழலின் ஊற்றுக் கண்ணே தனியார்மயம் தான். ஓட்டுக் கட்சிகள் அனைத்துமே தனியார்மயத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டு அமல்படுத்துபவர்கள்தான். அப்படியென்றால் தவெக-விற்கும், திமுக – அதிமுக-விற்கும் வேறுபாடு இல்லையா? என்று கேட்டால் அனைத்துக் கட்சிகளும் ”ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்” தான்.

உண்மையிலேயே ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களுக்கு இருந்திருந்தால், ஆயிரம் ரூபாய்க்கு பதில் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய், கர்ப்பிணிப் பெண்களுக்கு 18,000 ரூபாய்க்கு பதில் தாய்மாமன் தங்கமோதிரம், தாலிக்கு தங்கத்திற்கு பதில், தாய்மாமன் சீர், ஆறு காஸ் உருளைகள் என்று போட்டி போட்டுக்கொண்டு இலவசங்களை அறிவிக்க மாட்டார்கள். அதற்குப் பதிலாக சிறப்பான வாழ்நிலையை மக்களுக்கு கொடுப்பதற்காக கல்வி, பொதுசுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, விவசாயம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் தனியார்மயத்தைப் புறந்தள்ளிவிட்டு அரசின் முதலீட்டை அதிகரித்திருப்பர்.

சமீபத்தில் தவெக-வின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் 1000 சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு தடையில்லாச் சான்றிதழ் (NOC) இலஞ்சமின்றி வழங்கப்பட்டுள்ளதாக பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்தார். ஆனால் இதன்மூலம் பயனடைந்த தனியார் பள்ளிகள் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை குறைக்கவில்லை. மேலும் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை பள்ளியின் அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை கோரியபோது, அதனை ஏற்க மறுத்து உயர்நீதிமன்றம் சென்றவர்கள் தனியார் பள்ளிகள் தான். மறுபுறம் அரசுப் பள்ளிகளை மூடுவதும், அமைச்சர்கள் அரசுப் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்பதும், பதில் சொல்லத் தெரியாத பொழுது மாணவர்களை கிண்டல் செய்து காயப்படுத்துவதும் நடைபெற்றது என்றால், இதன் உண்மையான பொருள் தனியார்மயத்தை ஆதரிப்பதேயன்றி வேறொன்றுமில்லை.

எனவே அனைத்து அதிகாரிகள் உள்ளிட்ட ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கவும், திருப்பியழைக்கவும், தவறு செய்தால் தண்டிக்கவும் கூடிய அதிகாரத்தை மக்களுக்கு அளிப்பதன் மூலமே, ஊழலைக் கட்டுப்படுத்தவும் ஊழல்வாதிகளைத் தண்டிக்கவும் முடியும். அவ்வாறின்றி காங்கிரஸ் – திமுக – அதிமுக – தவெக – ? என வாக்களிப்பதனால் கொசுவைக் கூட ஒழிக்க முடியாது.

  • மகேஷ்

செய்தி ஆதாரம்:

https://www.hindutamil.in/news/tamilnadu/cm-vijay-warns-ministers-face-direct-dismissal-if-indulging-in-corruption

https://www.hindutamil.in/news/tamilnadu/cm-vijay-warns-ministers-face-direct-dismissal-if-indulging-in-corruption

https://www.vikatan.com/government-and-politics/tvk-district-secretary-money-collection-for-government-posting

https://www.vikatan.com/government-and-politics/bribe-for-public-prosecutor-appointment-female-lawyer-raised-allegation-expelled-from-tvk

https://www.vikatan.com/government-and-politics/governance/madras-high-court-issue-regarding-appointment-of-government-counsels?pfrom=also-read

https://www.vikatan.com/government-and-politics/tvk-woman-cadre-case-against-party-in-court?pfrom=also-read

https://www.youtube.com/watch?v=DgwFfHn4Am4

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன