சூரத் ஜவுளித் தொழிலாளர்கள் போராட்டம்
ஓய்வைக்கூட மறுக்கும் குஜராத் மாடல்!

சூரத் தொழிலாளர்கள் கேட்பது ஆடம்பரமாக வாழ்வதற்கான சலுகைகள் அல்ல; வாரத்தில் ஒரு நாள் விடுமுறை, நியாயமான சம்பளம், எட்டு மணி நேர வேலை, மனிதர்களுக்கான அடிப்படை உரிமைகள் மட்டுமே!

இந்தியாவின் முக்கியமான ஜவுளி உற்பத்தி மையங்களில் ஒன்றாக குஜராத் மாநிலத்தின் சூரத் நகரம் விளங்குகிறது. நாட்டின் செயற்கை இழைத் துணி (Synthetic Textiles) உற்பத்தியில் சுமார் 65 சதவீதம் சூரத்தில் தான் நடைபெறுகிறது. பல இலட்சம் தொழிலாளர்களின் உழைப்புச் சக்தியால் இந்தத் தொழில் வளர்ந்துள்ளது. குறிப்பாக உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வேலை தேடி வரும் புலம்பெயர் தொழிலாளர்களே இந்தத் தொழிலின் முதுகெலும்பாக இருக்கின்றனர்.

ஆனால், சூரத்தின் ஜவுளித் தொழில் பெரிய அளவில் வளர்ச்சியடைந்திருந்தாலும், அந்த வளர்ச்சிக்காக உழைக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பணிச்சூழலும் சவால்கள் நிறைந்ததாகவே உள்ளன. நீண்ட நேர வேலை, குறைந்த ஊதியம், போதிய விடுமுறையின்மை, கூடுதல் நேர உழைப்புக்கான உரிய ஊதியம் வழங்கப்படாமை எனப் பல்வேறு சிரமங்களைத் தொழிலாளர்கள் எதிர்கொள்கின்றனர்.

மேலும், அடையாள அட்டை, சம்பளச் சீட்டு, காப்பீடு, பணிக்கொடை உள்ளிட்ட அடிப்படைத் தொழிலாளர் உரிமைகளும் பலருக்கு முறையாகக் கிடைப்பதில்லை. இத்தகைய உரிமை மறுப்புகளுக்கும் பணிச்சுரண்டலுக்கும் எதிராகத் தொழிலாளர்கள் போராடும்போது, வேலை நீக்கம், நிர்வாகத்தின் மிரட்டல், போலீசு நடவடிக்கை உள்ளிட்ட நெருக்கடிகளையும் சந்திக்க வேண்டிய நிலையுள்ளது.

இவ்வாறு, சூரத்தின் ஜவுளித் தொழிலின் வளர்ச்சிக்குப் பின்னால் புலம்பெயர் தொழிலாளர்களின் உழைப்பும், அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களும் மறைந்துள்ளன.

வார விடுமுறை கேட்டுப் போராடினால் வேலையிழப்பு!

இந்தச் சூழலில்தான், சூரத்தின் எம்பிராய்டரி தொழிற்சாலைகளில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களுடைய அடிப்படை உரிமைகளைக் கோரி ஆகஸ்ட் 16 முதல் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். அம்ரோலி பகுதியில் உள்ள வேதாந்தா தொழிற்பேட்டையில் தொடங்கிய இந்தப் போராட்டம், பின்னர் அஞ்சனி இண்டஸ்ட்ரீஸ், கடோடரா, சச்சின் உள்ளிட்ட பல்வேறு தொழிற்பேட்டைகளுக்கும் பரவியது. இதில் தொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கைகள் மிகவும் அடிப்படையானவை. அதாவது

  • வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும்.
  • தினமும் எட்டு மணி நேரம் மட்டுமே வேலை வாங்க வேண்டும்.
  • கூடுதல் நேரம் வேலை செய்தால் அதற்கான இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும்.
  • 12 மணி நேரம் வேலை வாங்கப்படும் சூழலில், அதற்கேற்ற கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும்.
  • ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்திற்குள் சம்பளம் வழங்க வேண்டும்.

ஆனால், தொழிலாளர்களின் இந்த நியாயமான கோரிக்கைகளுக்குக்கூட தொழிற்சாலை நிர்வாகங்கள் உரிய பதிலளிக்கவில்லை.

உதாரணமாக, 25 வயதான விஷால் பாகி என்ற தொழிலாளரின் அனுபவத்தைக் குறிப்பிடலாம். நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக எம்பிராய்டரி தொழிற்சாலையில் தினமும் 12 மணி நேரம் வேலை செய்து வந்த அவர், வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும், வேலை நேரம் முறைப்படுத்தப்பட வேண்டும் என்று சக தொழிலாளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக மீண்டும் மீண்டும் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதேபோல், பல ஆண்டுகளாகச் சூரத்தில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களும் தங்களுடைய அடிப்படை உரிமைகளைக் கேட்டதற்காக வேலை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தொழிலாளர்கள் தங்களுடைய உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதும், ஒன்றிணைந்து போராடுவதும் அவர்களுடைய ஜனநாயக உரிமையாகும். அத்தகைய உரிமைகளை அங்கீகரிப்பதற்குப் பதிலாக வேலை நீக்கம், மிரட்டல் உள்ளிட்ட தண்டனை நடவடிக்கைகளை சூரத் முதலாளிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

12 மணி நேர வேலை; ஓய்வில்லாத வாழ்க்கை!

சூரத்தில் சுமார் ஒன்றரை இலட்சம் எம்பிராய்டரி இயந்திரங்கள் இயங்குவதாகத் தொழில் அமைப்புகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொழிற்சாலைகள் 24 மணி நேரமும் இயங்கும் வகையில், தொழிலாளர்கள் இரண்டு ஷிப்டுகளாகப் பிரிக்கப்பட்டு பணியமர்த்தப்படுகின்றனர். ஒவ்வொரு ஷிப்டிலும் தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது.

இயந்திரங்கள் தானியங்கி முறையில் இயங்கினாலும், அவற்றைக் கண்காணித்து இயக்குவதற்குத் தொழிலாளர்களின் திறமையும் உழைப்பும் அவசியமாக இருக்கிறது. இயந்திரத்தின் மென்பொருளைப் பயன்படுத்துவது, நூல் மற்றும் மணிகளைச் சேர்ப்பது, டிசைன்களைச் சரிசெய்வது எனப் பல்வேறு பணிகளைத் தொழிலாளர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இரவு நேரங்களில்கூட அதிக வெப்பம், இயந்திரங்களின் இரைச்சல் ஆகியவற்றுக்கு இடையே அவர்கள் தொடர்ந்து வேலை செய்கின்றனர். உணவு சாப்பிடுவதற்குக்கூட அனைவரும் ஒரே நேரத்தில் செல்ல முடியாத அளவிற்கு வேலைநிலைமை உள்ளது. ஒருவர் உணவு சாப்பிடச் சென்றால், மற்றொரு தொழிலாளர் அவருடைய இயந்திரத்தையும் சேர்த்துக் கவனிக்க வேண்டிய நிலை உள்ளது.

15 ஆண்டுகளுக்கும் மேலாகச் சூரத்தில் வேலை செய்து வரும் ரோஹித் என்ற தொழிலாளர், நீண்ட நேர வேலையின் காரணமாக வீட்டுக்குத் திரும்பிய பிறகுகூட தனது சின்னஞ்சிறு குழந்தையுடனும், குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாத நிலை இருப்பதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

விஷால் பாகியும் தனது சொந்த ஊரில் வசிக்கும் குடும்பத்தினருடன் பேசுவதற்குக்கூட போதிய நேரம் கிடைப்பதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இத்தகைய சூழலில், தொழிலாளர்கள் வாரத்தில் ஒருநாள் ஓய்வு வேண்டும் என்று கோருவது அவர்களுடைய நியாயமான உரிமை என்பதை மறுக்க முடியுமா? ஒரு இயந்திரம் 24 மணி நேரமும் இயங்க வேண்டும் என்பதற்காக, அதை இயக்கும் மனிதர்களின் ஓய்வு, உடல்நலம், குடும்ப வாழ்க்கை என அனைத்தையும் தொடர்ந்து புறக்கணிப்பதை எப்படிச் சகித்துக்கொள்ள முடியும்?

சட்டம் வழங்கியுள்ள உரிமைகள்கூட நடைமுறையில் மறுக்கப்படுகின்றன!

தொழிலாளர்களின் ஓய்வு, உடல்நலம், குடும்ப வாழ்க்கை போன்ற சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள உரிமைகளைக்கூட தொழிலாளர்கள் நடைமுறையில் பெற முடியாத நிலைதான் சூரத்தில் தொடர்கிறது.

தொழிலாளர்களின் வேலை நேரம், சம்பளம், விடுமுறை, கூடுதல் நேர ஊதியம் உள்ளிட்டவற்றை முறைப்படுத்துவதற்காக ஒன்றிய அரசு தொழிலாளர் சட்டங்களை நான்கு தொகுப்புகளாக மாற்றியுள்ளதாகக் கூறி வருகிறது. அவை ஊதியச் சட்டத் தொகுப்பு, வேலைவாய்ப்புப் பாதுகாப்பு மற்றும் பணிச்சூழல் சட்டத் தொகுப்பு, சமூகப் பாதுகாப்புச் சட்டத் தொகுப்பு, தொழில்துறை உறவுகள் சட்டத் தொகுப்பு ஆகியவையாகும்.

இந்தச் சட்டத் தொகுப்புகளில் வாராந்திர ஓய்வு, கூடுதல் நேர வேலைக்கான இரட்டிப்பு ஊதியம் உள்ளிட்ட தொழிலாளர்களின் உரிமைகளும் இடம்பெற்றுள்ளன. ஆனால், இத்தகைய சட்டப்பூர்வ உரிமைகள் கூட சூரத்தின் ஜவுளித் தொழிலாளர்களுக்குக் கிடைப்பதில்லை.

இதுதொடர்பாக, தொழிலாளர் துறை அதிகாரிகள் செப்டம்பர் 29 அன்று தொழிற்சாலை முதலாளிகளின் அமைப்புகளுக்குக் கடிதம் அனுப்பி, தொழிலாளர் சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும், தொழிற்சாலை முதலாளிகள் தங்களுடைய வேலை முறையை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை என்பதால், முதலாளிகளின் தொழிலாளர் விரோதப் போக்கை தொழிற்சங்கத் தலைவர்கள் கண்டித்துள்ளனர்.

இதற்கிடையில், TEJAS (Textile Embroidery Jobwork Association of Surat) என்ற தொழிற்சாலை முதலாளிகளின் அமைப்பு அக்டோபர் 10, 11 ஆகிய தேதிகளில் புதிய வேலை மற்றும் சம்பள முறையை அறிவித்தது.

அதன்படி, எட்டு மணி நேர வேலைக்கு தினமும் ரூ.550 சம்பளம் வழங்கப்படும் என்றும், அல்லது ஏற்கெனவே நடைமுறையில் உள்ள மாதம் ரூ.25,000 முதல் ரூ.30,000 வரையிலான சம்பள முறையைத் தொழிலாளர்கள் தேர்ந்தெடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், எட்டு மணி நேர வேலை முறையைத் தேர்ந்தெடுக்கும் தொழிலாளர்களுக்கு வாராந்திர விடுமுறை நாளுக்கான ஊதியம் வழங்கப்படாவிட்டால், மாதம் ரூ.14,300 மட்டுமே கிடைக்கும்.

அதேபோல், கூடுதல் நேரம் வேலை செய்தால் அதற்கான இரட்டிப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பது தொழிலாளர்களின் உரிமை. ஆனால், கூடுதல் நேரப் பணிக்கான இரட்டிப்பு ஊதியம் வழங்கப்படும் என்று TEJAS அமைப்பு எந்த உறுதியையும் கொடுக்கவில்லை.

இதுகுறித்து ரோஹித் முன்வைக்கும் கோரிக்கை மிகவும் தெளிவானது. எட்டு மணி நேர வேலைக்கு ரூ.550 சம்பளம் வழங்குவதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், அதற்கு மேலாக நான்கு மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், அந்தக் கூடுதல் நேரத்திற்கான இரட்டிப்பு ஊதியத்தையும் வழங்க வேண்டும்.

அவரது கணக்கின்படி, தினமும் ரூ.1,100 ஊதியம் கிடைத்தால் மாதத்திற்கு ரூ.28,600 சம்பளமாகப் பெற முடியும். ஆனால், உண்மையில் கூடுதல் நேரம் வேலை செய்தாலும் அதற்கான உரிய ஊதியம் தொழிலாளர்களுக்கு முறையாக வழங்கப்படுவதில்லை.

தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக, தங்களுக்குச் சாதகமான சில நிபந்தனைகளுடன் கூடிய வேலை முறைகளை மட்டும் முதலாளிகள் முன்வைக்கின்றனர். இது தொழிலாளர்களின் சட்டப்பூர்வ உரிமைகளுக்குத் துளியும் மதிப்பளிப்பதில்லை என்பதையே காட்டுகிறது. எட்டு மணி நேர வேலை, வாராந்திர விடுமுறை, கூடுதல் நேரத்திற்கான இரட்டிப்பு ஊதியம், உரிய காலத்தில் சம்பளம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளையே தொழிலாளர்களுக்குப் பெற்றுத் தர முடியாத சட்டங்களால் எந்தப் பயனுமில்லை.

உரிமை கேட்டால் வேலை நீக்கம்; வேறு இடத்திலும் வேலை கிடைக்காத நிலை!

தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, அவர்களுடைய புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பெயர்கள் உள்ளிட்ட விவரங்கள் கைப்பேசிகளில் பதிவு செய்யப்பட்டு, தொழிற்சாலை முதலாளிகளின் குழுக்களில் பகிரப்படுகின்றன. இதன் காரணமாக, போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்களுக்கு வேறு தொழிற்சாலைகளில்கூட வேலை கிடைப்பதில்லை.

கமல்நாத் குஷ்வாஹா என்ற தொழிலாளி, ஒரு தொழிற்சாலையில் வேலை இழந்த பிறகு, மற்றொரு தொழிற்சாலையில் வேலை கிடைப்பது உறுதியான நிலையில், கடைசி நேரத்தில் அவரை வேலைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்ததாகக் கூறுகிறார்.

விஷால் பாகிக்கும் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது. ஒரு தொழிற்சாலையில் வேலையிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, மற்றொரு தொழிற்சாலையில் அவருக்கு வேலை கிடைத்துள்ளது. ஆனால், வேலைக்குச் சேர்ந்த முதல் நாளிலேயே மீண்டும் அவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு, உரிமைகளுக்காகப் போராடும் தொழிலாளர்களுக்கு வேறு தொழிற்சாலைகளிலும் வேலை கிடைக்காத வகையில் அவர்களைக் கருப்புப் பட்டியலில் (Blacklisting) சேர்க்கும் முதலாளிகளின் நடவடிக்கை, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குள்ளாக்கி உள்ளது.

சொந்த ஊருக்குத் திரும்பினாலும், தனக்கு வேறு வேலை தெரியாததால் குறைந்த சம்பளத்தில் கட்டுமானத் தொழிலுக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்று விஷால் கூறுகிறார். இதனால், வேலை இழந்த நிலையிலும் சூரத்திலேயே தங்கி வேறு வேலை தேட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

இத்தகைய சூழலில், தொழிலாளர்கள் தங்களுடைய அடிப்படை உரிமைகளுக்காகப் போராடுவதையே தடுக்கும் வகையில் வேலைவாய்ப்பைப் பறிப்பதையும், பிற தொழிற்சாலைகளில் வேலை கிடைக்காமல் செய்வதையும் எப்படி அனுமதிக்க முடியும்?

தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்கக் களமிறக்கப்படும் காவல்துறை!

ஆகஸ்ட் மாதம் தொடங்கிய தொழிலாளர்களின் போராட்டத்திற்குப் பிறகும் அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால், அக்டோபர் 15 அன்று தொழிலாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் மக்கள் உரிமை ஆர்வலர்கள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி அமைதிப் பேரணி நடத்த முடிவு செய்தனர்.

இதற்காகக் போலீசிடம் அனுமதி கோரியும் அனுமதி கொடுக்கவில்லை. மேலும், போராட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே தொழிற்சங்கத் தலைவர்கள் ஷான் கான், விஷால் பாகி, மால்கான் சிங் வர்மா உள்ளிட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்களைச் சுற்றி நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து, தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இதில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

சுமார் 90 தொழிலாளர்கள் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டதாகக் கோவிந்த் என்ற தொழிலாளர் தெரிவித்துள்ளார். போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக அவரும் வேலையை இழந்துள்ளார்.

தொழிலாளர்கள் தங்களுடைய அடிப்படை உரிமைகளுக்காக அமைதியான முறையில் போராடும்போது அவர்களைத் தடுத்து வைப்பதிலும், கைது செய்வதிலும் போலீசு காட்டும் வேகத்தையும் தீவிரத்தையும், அவர்களுடைய உரிமைகளைப் பெற்றுத் தருவதில் ஏன் காட்டுவதில்லை?

தொழிலாளர்கள் தங்களுடைய கோரிக்கைகள் தொடர்பாகத் தொழிற்சாலை முதலாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றபோது உரிய பதில் கிடைக்கவில்லை. ஆனால், அவர்கள் போராட்டத்தில் இறங்கியவுடன் காவல்துறை உடனடியாகத் தலையிடுகிறது. தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பதில் காட்டப்படாத அவசரம், அவர்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் காட்டப்படுகிறது.

தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, அவர்களின் போராட்டங்களை ஒடுக்குவதில் காட்டப்படும் இந்த அணுகுமுறை, அரசு மற்றும் அதிகாரிகளின் தொழிலாளர் விரோதப் போக்கையே வெளிப்படுத்துகிறது.

பாதுகாப்பற்ற வேலைச் சூழல்; அடிப்படை வசதிகள்கூட இல்லை!

சூரத்தின் எம்பிராய்டரி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள்கூட வழங்கப்படுவதில்லை என்று தொழிற்சங்கத் தலைவர் வர்மா குற்றம் சாட்டுகிறார்.

கையுறைகள், தலைக்கவசங்கள், கண்களைப் பாதுகாக்கும் கண்ணாடிகள் போன்ற அடிப்படைப் பாதுகாப்புப் பொருட்களைக்கூட தொழிற்சாலை நிர்வாகங்கள் வழங்குவதில்லை. அதேபோல் சில தொழிற்சாலைகளில் குளியலறைக்கு வெளியிலேயே உணவு சமைக்கும் இடம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்.

மேலும், தொழிலாளர்கள் அதிக வெப்பம், இயந்திரங்களின் இரைச்சல் ஆகியவற்றுக்கு இடையே நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் அவர்களுடைய உடல்நலமும் பாதுகாப்பும் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது.

ஒருபுறம் நவீன இயந்திரங்களைக் கொண்டு தொழிற்சாலைகள் உற்பத்தியைப் பெருக்கி வருகின்றன. மறுபுறம், அந்த இயந்திரங்களை இயக்கும் தொழிலாளர்களுக்குத் தேவையான அடிப்படைப் பாதுகாப்பு உபகரணங்களையும் வசதிகளையும் வழங்க மறுக்கின்றன. தொழிலாளர்களின் உடல்நலத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தாமல், அவர்களின் உழைப்பை மட்டுமே உரிஞ்சி முன்னெடுக்கப்படும் இத்தகைய தொழில் வளர்ச்சியால் உண்மையில் யாருக்குப் இலாபம் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.

முதலாளிகளின் இலாபத்திற்காகத் தொழிலாளர்களின் வாழ்க்கையா?

சூரத்தின் ஜவுளித் தொழிலில் பெரும்பாலும் புலம்பெயர் தொழிலாளர்களே அதிக அளவில் வேலை செய்கின்றனர். இவர்கள் குறைந்த சம்பளத்திற்கு நீண்ட நேரம் உழைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

தொழிலாளர்களை நேரடியாக வேலைக்கு அமர்த்தினால், அவர்களுக்குச் சம்பளம், பணிப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை நிறுவனங்கள் ஏற்க வேண்டியிருக்கும் என்பதால், ஒப்பந்த முறையில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகிறது. இதன் மூலம், இந்தப் பொறுப்புகளில் இருந்து நிறுவனங்கள் விலகிக்கொள்கின்றன.

இதன் விளைவாக, தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகிறது. அடையாள அட்டை, சம்பளச் சீட்டு, பணிக்கொடை, போனஸ், காப்பீடு உள்ளிட்ட உரிமைகள்கூட தொழிலாளர்களுக்குக் கிடைப்பதில்லை என்று தொழிற்சங்கத் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஒரு தொழிலாளி எட்டு மணி நேரம் வேலை செய்தால், அதற்கான சம்பளத்தை மட்டும் வழங்கிவிட்டால் போதாது. அவருக்கு வாராந்திர விடுமுறை, கூடுதல் நேர வேலைக்கான உரிய ஊதியம், பாதுகாப்பான பணிச்சூழல், சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து அடிப்படை உரிமைகளும் உறுதி செய்யப்பட வேண்டும்.

ஆனால், தொழிலாளர்களின் உழைப்பைப் உறிஞ்சி இலாபம் ஈட்டும் நிறுவனங்கள், அவர்களுடைய நலன்களையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதில்லை. தொழிலாளர்களின் உழைப்பால் நிறுவனங்களின் இலாபம் தொடர்ந்து பெருகினாலும், அவர்களுடைய வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படுவதில்லை. இவ்வாறு, முதலாளிகளின் இலாபத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, தொழிலாளர்களின் வாழ்க்கையும் அடிப்படை உரிமைகளும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன.

வளர்ச்சி யாருக்கானது?

குஜராத் மாநிலம் தொழில் வளர்ச்சிக்கும் முதலீட்டுக்கும் ஏற்ற மாநிலமாகத் தன்னை முன்னிறுத்துகிறது. பெரிய தொழிற்சாலைகள், நவீன இயந்திரங்கள், அதிக உற்பத்தி, கோடிக்கணக்கான வர்த்தகம் எனப் பொருளாதார வளர்ச்சியின் புள்ளிவிவரங்கள் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன.

ஆனால், இந்த வளர்ச்சிக்குப் பின்னால் உழைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையில் அதற்கேற்ற முன்னேற்றம் ஏற்படவில்லை.

தொழிற்சாலைகள் 24 மணி நேரமும் இயங்குகின்றன. உற்பத்தி அதிகரிக்கிறது. முதலாளிகளின் வருமானம் உயர்கிறது. ஆனால், தொழிலாளர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையான உரிமையைக்கூடப் பெறுவதற்குப் போராட வேண்டிய நிலை உள்ளது.

இதுவே முதலாளித்துவ வளர்ச்சியின் உண்மையான முரண்பாடாகும்.

தொழிலாளர்கள் இல்லாமல் தொழிற்சாலைகள் இயங்க முடியாது. அவர்களுடைய உழைப்பு இல்லாமல் உற்பத்தி நடைபெறாது. அப்படியிருக்க, அந்தத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைக் கொடுப்பதற்குக் கூட முதலாளிகள் முன்வருதில்லை.

ஒரு தொழிலாளி தனது குழந்தைகளின் கல்விக்காகவும், குடும்பத்தின் உணவுக்காகவும், வாழ்க்கையை நடத்துவதற்காகவும் வேலை செய்கிறார். ஆனால், தனது குடும்பத்திற்காக உழைக்கும் ஒரு தொழிலாளி, தனது முழு வாழ்க்கையையும் தொழிற்சாலைக்கே அர்ப்பணிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். இது தொழிலாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பப் பொறுப்புகள் மற்றும் அடிப்படை மனித உரிமைகளைப் புறக்கணிப்பதாகும்.

தொழிலாளி வர்க்கம் ஒன்றிணைய வேண்டிய நேரம்!

சூரத் தொழிலாளர்களின் போராட்டம் தனிப்பட்ட ஒரு தொழிற்சாலையின் பிரச்சினை மட்டுமல்ல. இந்தியா முழுவதும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், ஜவுளி, வைரம் மற்றும் பல்வேறு தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் இதேபோன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறைந்த சம்பளம், நீண்ட வேலை நேரம், விடுமுறை மறுப்பு, தாமதமான ஊதியம், வேலை நீக்கம், பாதுகாப்பற்ற வேலைச் சூழல் எனத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றன.

இந்தச் சூழலில் தொழிலாளர்கள் தனித்தனியாகப் போராடுவதால் மட்டும் தங்களுடைய உரிமைகளை முழுமையாகப் பாதுகாத்துக்கொள்ள முடியாது. தொழிற்சங்கங்களின் மூலம் ஒன்றிணைந்து, சட்டப்பூர்வமான உரிமைகளைப் பாதுகாக்க வலிமையான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

தொழிலாளர்கள் கேட்டுக்கொண்டிருப்பது முதலாளிகளின் சொத்துக்களில் பங்கு அல்ல; தொழிற்சாலையின் உரிமையும் அல்ல. தங்களுடைய உழைப்புக்கு நியாயமான ஊதியம், வாரத்தில் ஒரு நாள் ஓய்வு, பாதுகாப்பான வேலைச் சூழல், மனிதர்களுக்குரிய மரியாதை ஆகியவற்றைத்தான் கேட்கிறார்கள்.

இயந்திரங்கள் ஓய்வில்லாமல் இயங்கலாம்; ஆனால் மனிதர்கள் ஓய்வில்லாமல் உழைக்க முடியாது.

சூரத் தொழிலாளர்களின் போராட்டம் நமக்கு உணர்த்துவது ஒன்றுதான்: தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகள் தானாகக் கிடைத்தவை அல்ல. அவை ஒன்றுபட்ட போராட்டங்களின் விளைவாகக் கிடைத்தவையாகும். அந்த உரிமைகளைப் பாதுகாப்பதும், மேலும் பல உரிமைகளைப் பெறுவதும் தொழிலாளி வர்க்கத்தின் ஒன்றுபட்ட போராட்டத்தில்தான் இருக்கிறது.

  • உழைப்பவர்களின் உரிமைகளைப் பாதுகாப்போம்!
  • தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையைக் கட்டியமைப்போம்!
  • சுரண்டலுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம்!

 

  • மகேஷ்

செய்தி ஆதாரம்:

https://frontline.thehindu.com/the-nation/surat-embroidery-workers-labour-rights/article71644077.ece

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன