அன்று கிழக்கிந்தியக் கம்பெனி… இன்று வேதாந்தா, அதானி!
ஒடிசாவில் அரங்கேறும் மறுகாலனியாக்கக் கொள்ளை!
ஒடிசா மாநிலத்தில் வேதாந்தா நிறுவனத்தின் புதிய பாக்சைட் சுரங்கத் திட்டத்திற்கு எதிராக, ராயகடா மற்றும் கலஹண்டி மாவட்டங்களைச் சேர்ந்த பழங்குடியினர் 2023-ஆம் ஆண்டு முதலே போராடி வருகின்றனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக வேதாந்தாவின் பாக்சைட் சுரங்கத் திட்டத்தை எதிர்த்துப் போராடி வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியினர் மீது போலீசார் பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டதற்காக, சுமார் 170 பேர் மீது கலவரம் ஏற்படுத்துதல், கொலை முயற்சி மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெண்கள் உட்படப் பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்தின் முக்கியத் தலைவர்களான லடா சிகாகா, லிங்கராஜ் ஆசாத் உள்ளிட்டோரையும் போலீசார் அடாவடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
போராடும் பழங்குடியினர் மீது மாநில அரசு கொடூரமான ஒடுக்குமுறையை ஏவி வருகிறது. இத்தகைய அடக்குமுறைகளையும் மீறி, “வேதாந்தாவின் பாக்சைட் சுரங்கத் திட்டத்தைத் தொடங்க விடமாட்டோம்! இந்த அநீதிக்கு எதிரான எங்களது போராட்டம் ஓயாது!” என்று அப்பகுதி பழங்குடியினர் உறுதியுடன் போராடி வருகின்றனர்.
வறட்சியும் பஞ்சமும் சூழ்ந்து, வறுமையாலும் பட்டினியாலும் பரிதவிக்கும் பின்தங்கிய ஒடிசா மாநிலப் பழங்குடியினர், தங்களது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்தத் திட்டத்தை எதிர்த்துப் போராடுவதற்கான காரணம் என்ன?
ஒடிசா என்றாலே சூறாவளி, வெள்ளம், பட்டினிச் சாவுகள், வறுமை, பின்தங்கிய நிலை, கிறிஸ்தவ மதமாற்றத்தைக் காரணமாகக் கொண்ட படுகொலைகள் என எதிர்மறையான செய்திகளே நம் மனதில் பதிய வைக்கப்படுகின்றன.
ஆனால், வங்கக் கடலை ஒட்டியுள்ள ஒடிசா மாநிலம் தாது மற்றும் கனிம வளங்கள் நிறைந்த மாநிலமாகும். சிஜிமாலி, பாபிலிமாலி போன்ற பல மலைப்பகுதிகளிலும் குன்றுகளிலும் அலுமினிய உலோகத்தின் மூலப்பொருளான பாக்சைட் கனிமம் பல இலட்சம் டன் அளவுக்குக் குவிந்து கிடக்கிறது.
இயற்கை வளங்கள் நிறைந்த இம்மாநிலத்தில் மட்டும் நாட்டின் மொத்த பாக்சைட் இருப்பில் 60 சதவீதமும், குரோமைட் இருப்பில் 98.4 சதவீதமும், நிலக்கரி உள்ளிட்ட பிற கனிம வளங்களில் 24.8 சதவீதமும் குவிந்துள்ளன. கடின உழைப்பாளிகளைக் கொண்ட இம்மாநிலத்தின் வரலாறு உண்மையில் வேறுவிதமாக அமைந்திருக்க வேண்டும்.
ஆனால், பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக் காலத்தில் தொடங்கி, மோடி அரசு மூர்க்கமாகச் செயல்படுத்தி வரும் மறுகாலனியாதிக்கம் வரை, ஒடிசாவின் இயற்கை வளங்களும், பழங்குடியினர் மற்றும் தலித் மக்களின் வாழ்வாதாரங்களும் தொடர்ந்து சூறையாடப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் தாராளமயக் கொள்கை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே, ஹிராகுட்டில் இண்டால் (1959), காசிப்பூர் பகுதியில் நால்கோ (1981) போன்ற அரசுத்துறை நிறுவனங்கள் பாக்சைட் சுரங்கத் தொழில் மற்றும் அலுமினிய உருக்காலைகளை அமைப்பதற்காகத் தொடங்கப்பட்டன.
ஒடிசாவில் சுரங்கங்களுக்கான உள்கட்டமைப்பை வலுப்படுத்தினால் மாநிலத்தில் வளர்ச்சி ஏற்படும் என்று கூறப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் அலுமினாவைக் கடற்கரைக்குக் கொண்டு செல்வதற்காக, 1980-களில் கோராபுட் – தமன்ஜோடி – ராயகடா இரயில் பாதை அமைக்கப்பட்டது. இதற்காக சவூதி மேம்பாட்டு நிதியம் 80 மில்லியன் டாலர் கடன் வழங்கியது.
இவையனைத்தும் மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களாகச் சித்திரிக்கப்பட்டன. ஆனால், இந்த வளர்ச்சியின் பலன்கள் ஒடிசா மக்களைச் சென்றடையவில்லை. மாறாக, கொடிய வறுமையின் காரணமாகக் குழந்தைகளையே விற்கும் அவலநிலை 1980-களில் தொடங்கி இன்றுவரை நீடிக்கிறது. கடந்த ஆண்டுகூட, வறுமையை ஒழிப்பதாகக் கூறி ஒடிசா மாநில அரசு உலக வங்கியிடமிருந்து 100 மில்லியன் டாலர் கடன் பெற்றது.
தாராளமயக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மாநில வளர்ச்சி என்ற பெயரில் 1995-ஆம் ஆண்டு முதல் பாக்சைட் கனிம வளங்களைச் சூறையாடுவதற்குப் பல தனியார் மற்றும் அந்நிய முதலாளிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. டாடா, பிர்லா போன்ற தரகுப் பெருமுதலாளிகள் மட்டுமின்றி, நார்வே நாட்டின் ஹைட்ரோ அலுமினியம், கனடாவின் அல்கான் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பாக்சைட் கனிமம் நிறைந்த மலைகள் தாரை வார்க்கப்பட்டன.
ராயகடா மாவட்டத்தில் 1,750 ஹெக்டேர் நிலப்பரப்பில் பிர்லா குழுமத்தின் உத்கல் அலுமினியா ஆலை அமைந்துள்ளது. இதே குழுமத்தின் ஹிண்டால்கோ அலுமினிய உற்பத்தி ஆலை, கலஹண்டி மாவட்டத்தில் வேதாந்தாவின் லஞ்சிகர் அலுமினிய சுத்திகரிப்பு ஆலை, ஜார்சுகுடாவில் வேதாந்தாவின் அலுமினிய உருக்காலை, கோராபுட் மாவட்டத்தில் அரசுத்துறை நிறுவனமான நால்கோவின் பாக்சைட் சுரங்கம் மற்றும் அலுமினிய சுத்திகரிப்பு ஆலை, அங்குல் மாவட்டத்தில் நால்கோவின் அலுமினிய உருக்காலை எனப் பல ஆலைகள் அங்கு செயல்பட்டு வருகின்றன.
ஒடிசாவின் இயற்கை வளங்களைச் சூறையாடுவதற்கு இத்தனை ஆலைகள் போதாது என்பதுபோல, தற்போது வேதாந்தா நிறுவனமும் அதானி நிறுவனமும் அங்குள்ள பாக்சைட் கனிம வளங்களைக் கைப்பற்றப் போட்டி போட்டு வருகின்றன.
ஒடிசாவில் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றிய மூன்றே மாதங்களில், இலண்டனிலிருந்து வந்த வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால், பா.ஜ.க. மாநில முதல்வர் மோகன் சரண் மாஜியை 2025 அக்டோபரில் சந்தித்தார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு பேசிய அனில் அகர்வால், உலகிலேயே மிகப்பெரிய அலுமினிய உருக்காலையை ஒடிசாவில் அமைப்பதற்காக அம்மாநிலத்தில் ஒரு இலட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, கியோன்ஜார் பகுதியில் ஒரு உலோகக் கலவை ஆலையையும், இரண்டு புதிய அலுமினிய உருக்காலைகளையும் அமைக்கப்போவதாக வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது.
இதோடு மட்டுமல்லாமல், 2026 செப்டம்பரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஒப்பந்தத்தின்படி, அபுதாபியின் இன்டர்நேஷனல் ஹோல்டிங் கம்பெனி (IHC) மற்றும் இந்தியாவின் அதானி நிறுவனம் இணைந்து தொடங்கவுள்ள ஒரு இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அலுமினிய வளாகத் திட்டத்திற்கான ஒப்பந்தம், ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி தலைமையில் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஒடிசாவின் குத்ருமாலி மலையடிவாரத்தில் அமைந்துள்ள சுமார் 7,000 ஏக்கர் நிலம் அதானி நிறுவனத்திற்கும் இன்டர்நேஷனல் ஹோல்டிங் கம்பெனிக்கும் தாரை வார்க்கப்பட்டுள்ளது.
இந்தியா – அமெரிக்கா இடையே கடந்த ஆண்டு மே மாதம் முக்கியக் கனிமங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, ஒடிசா முதல்வர் மாஜி, அதானி – ஹோல்டிங் கம்பெனி அலுமினியத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதானி – ஹோல்டிங் கம்பெனி ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம், ஒடிசாவின் பாக்சைட் சுரங்கத் திட்டங்கள் மூலம் அலுமினியத்தைப் பிரித்தெடுப்பதாகும். இதுமட்டுமின்றி, அரிய வகைக் கனிமமான மோனோசைட்டைச் சுரங்கங்களிலிருந்து பிரித்தெடுத்தல், எஃகு உற்பத்தி, பெட்ரோலிய வேதிப்பொருட்கள், தரவு மையங்கள் மற்றும் துறைமுக மேம்பாடு எனப் பல்வேறு திட்டங்களையும் இந்த ஒப்பந்தம் உள்ளடக்கியுள்ளது.
இவ்வாறு, ‘வளர்ச்சி’ என்ற வாக்குறுதியின் பெயரால், ஒடிசாவின் இயற்கை வளங்களையும் கனிமச் செல்வங்களையும் கொண்ட சுரங்கத் திட்டங்கள் பெரும் தரகுப் பெருமுதலாளிகளுக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கும் தாரை வார்க்கப்படுகின்றன.
கடந்த ஏப்ரல் 2026-இல் மத்தியப் பிரதேசத்தில் உள்ள இரண்டு ஆயுதத் தொழிற்சாலைகளைப் பார்வையிட்ட வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால், தனது எக்ஸ் தளத்தில் ஒரு கருத்தைப் பதிவிட்டிருந்தார். அதில், இந்தியாவின் 41 ஆயுதத் தொழிற்சாலைகளையும் தனியார்மயமாக்கினால், அவற்றின் உற்பத்தியைப் பத்து மடங்காக அதிகரிக்க முடியும் என்றும், தற்போது மேற்காசியாவில் நடைபெற்று வரும் போரிலிருந்து இலாபத்தைப் பெருக்குவதற்காக இந்தியாவின் ஆயுத உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஒடிசாவின் இயற்கை வளங்களை அழித்து, அவற்றிலிருந்து பெறப்படும் அலுமினியத்தைக் கொண்டு சந்தையில் இலாபம் ஈட்டுவதற்கான வேட்கை வேதாந்தாவின் அனில் அகர்வாலிடமிருந்து தொடங்கவில்லை. இதற்கான திட்டம் காலனிய ஆட்சிக் காலத்திலேயே போடப்பட்டது.
பிரிட்டனைச் சேர்ந்த புவியியல் அறிஞர் சிரில் பாக்ஸ் என்பவர், ஒடிசாவின் பாக்சைட் கனிமத்திலிருந்து அலுமினியத்தைப் பிரித்தெடுக்கும் திட்டத்தை 1920-களிலேயே முன்மொழிந்தார். தனது ‘பாக்சைட்’ எனும் நூலில், ஒடிசாவின் மலைகளிலிருந்து பாக்சைட் கனிமத்தை வெட்டி எடுப்பது, அதைச் சுத்திகரித்து அலுமினியப் பொருட்களாக மாற்றுவது, அவற்றைக் கொண்டு செல்வது எனப் பல்வேறு திட்டங்களை முன்வைத்தார். இதற்காகச் சுரங்கங்கள், ஆலைகள், அலுமினியத்தைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்திற்குத் தேவையான அதிகளவு நீரை வழங்க அணை, நீர்மின் உற்பத்தி நிலையம், ராயகடாவில் ரயில் நிலையம், விசாகப்பட்டினத்தில் துறைமுகம் எனப் பரந்த அளவிலான திட்டத்தை முன்மொழிந்தார்.
சிரில் பாக்ஸுக்கு முன்பு பணியாற்றிய வாக்கர் என்ற பிரிட்டிஷ் புவியியல் அறிஞர், ஒடிசாவின் பாக்சைட் தாது வளம் நிறைந்த மலைகளுக்குக் ‘கோண்ட்லாமைட்’ எனப் பெயரிட்டார்.
அலுமினியத்தைப் பிரித்தெடுப்பதற்கு அதிகளவு நீரும் நீர்மின்சாரமும் தேவைப்படும் என்பதைக் கணக்கில் கொண்டே, காலனிய ஆட்சிக் காலத்தில் ஹிராகுட் அணைத் திட்டம் தீட்டப்பட்டது. ஒடிசா மாநிலத்தில் பாயும் மகாநதி ஆற்றின் குறுக்கே ஹிராகுட் அணையைக் கட்டுவதற்காக நிலங்களைக் கையகப்படுத்தும் அறிவிப்புகள் 1946-ஆம் ஆண்டிலேயே வெளியிடப்பட்டன. இதனால் சுமார் ஒரு இலட்சம் மக்கள் தங்கள் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஹிராகுட் அணைத் திட்டத்திற்கு எதிராக எழுந்த மக்களின் போராட்டங்கள் வன்முறை மூலம் மூர்க்கமாக ஒடுக்கப்பட்டன. கனடாவின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட இண்டால் நிறுவனத்தின் அலுமினிய உருக்காலைக்குத் தேவையான நீரை வழங்குவதற்கே ஹிராகுட் அணை பெரிதும் பயன்படுத்தப்பட்டது.
1947 ஆகஸ்ட் 14-ஆம் தேதி நள்ளிரவில், நேரு நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, ஹிராகுட் அணைத் திட்டத்திற்கு எதிராகப் போராடிய நூற்றுக்கணக்கானோர் சம்பல்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்தியாவில் அதிகார மாற்றம் நிகழ்ந்த பிறகு, 1948 ஏப்ரல் 12-ஆம் தேதி ஹிராகுட் அணைக்கான அடிக்கல்லை நாட்டிய நேரு, அங்குள்ள கிராம மக்களிடம், “நீங்கள் துன்பப்பட வேண்டியிருந்தால், நாட்டின் நலனுக்காகத் துன்பப்பட வேண்டும்” என்று கூறினார்.
ஆனால், அன்று தொடங்கி இன்று வரை ஒடிசா மக்களின் துயரங்கள் தீர்ந்தபாடில்லை. ஒடிசாவின் இயற்கை வளங்களையும் தங்களது வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதற்காக, அம்மாநில மக்கள் நீண்ட நெடுங்காலமாகவே பல்வேறு போராட்ட இயக்கங்களை நடத்தி வருகின்றனர்.
சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு ஹிராகுட் அணைக்கு எதிராகத் தொடங்கிய ஒடிசா மக்களின் போராட்டம், இன்றும் பாக்சைட் கனிம வளம் நிறைந்த மலைகளைப் பாதுகாப்பதற்காகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கந்தமர்தன் மலைகளில் பாரத் அலுமினியம் நிறுவனத்திற்கு (BALCO) எதிராகவும், நியம்கிரி மலைகளில் வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராகவும், பாலையாபாலில் தேசிய ஏவுகணை சோதனைத் தளத்தை அமைப்பதற்கு எதிராகவும் போராடி ஒடிசா பழங்குடியினர் வெற்றி பெற்றனர்.
ஆனால், சுரங்கத் திட்டங்களுக்கு எதிரான பிற போராட்டங்களான கலிங்க நகர் போராட்டம், ராயகடா போராட்டம் மற்றும் POSCO நிறுவனத்திற்கு எதிரான போராட்டம் ஆகியவற்றை அரசு மூர்க்கமாக ஒடுக்கியது. இப்போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். போராட்டக்காரர்கள் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மக்கள் இயக்கங்களை ‘மாவோயிஸ்டுகள்’ என்று முத்திரை குத்தும் தந்திரத்தையும் அரசு கையாண்டது.
போருக்கான ஆயுத உற்பத்தியில் அலுமினியம் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், ஒடிசாவின் பாக்சைட் மலைகளைக் கைப்பற்றி, அவற்றிலிருந்து அலுமினியத்தை உற்பத்தி செய்வதில் வேதாந்தா நிறுவனம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. ஆயுதத் தொழிற்சாலைகளைத் தனியார்மயமாக்க வேண்டும் என்ற அனில் அகர்வாலின் முன்மொழிவிலிருந்தே இதைப் புரிந்துகொள்ள முடியும்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பே போருக்கான ஆயுத உற்பத்தியில் அலுமினியத்தின் முக்கியத்துவம் நன்கு அறியப்பட்டிருந்தது. முதலாம் உலகப் போரின்போதே ஆயுத உற்பத்தியில் அலுமினியம் முக்கியத்துவம் பெற்றது. இரண்டாம் உலகப் போரின்போது ஆயுதத் தயாரிப்பில் அது மிக முக்கியமான மூலப்பொருளாக மாறியது.
இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்காவில் அலுமினியத் தொழிலைத் தீவிரப்படுத்திய அமெரிக்க அதிகாரியான டூயி ஆண்டர்சன் என்பவர், 1951-ஆம் ஆண்டு, “அதிக அளவிலான அலுமினியத்தைப் பயன்படுத்தாமல் எந்தப் போரையும் வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவர முடியாது” என்று கூறினார்.
அலுமினியத்தை மூலப்பொருளாகக் கொண்டு 1901-ஆம் ஆண்டில் தெர்மைட் குண்டுகளும், 1908-ஆம் ஆண்டில் டியூராலுமின் எனும் அலுமினியக் கலவையைக் கொண்டு இராணுவ விமானங்களும் உருவாக்கப்பட்டன. இதனால் அலுமினியத்திற்கான சந்தை விரிவடைந்தது. முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள் அலுமினிய விற்பனையைப் பெருமளவில் அதிகரித்தன. அதன்பிறகு நடைபெற்ற ஒவ்வொரு போரிலும் அலுமினியத்தின் விற்பனை வேகமாக அதிகரித்து வந்துள்ளது.
சுருங்கக் கூறினால், இராணுவத் தொழில்துறை கூட்டமைப்பின் இதயத்திலேயே அலுமினியம் இடம்பெற்றுள்ளது.
அலுமினியத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் தெர்மைட் குண்டுகள், அலுமினியத்தின் வெப்பத்தை உருவாக்கும் தன்மையைப் பயன்படுத்தி வெடிக்கச் செய்யப்படுகின்றன. அலுமினியத்தின் மூலம் உருவாகும் அதிகப்படியான வெப்பத்தைப் பயன்படுத்தி, குண்டுகள் வெடிக்கும்போது வெளிப்படும் ஆற்றலின் அளவை அதிகரிக்க முடியும்.
முதலாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட 70,000 கையெறி குண்டுகளின் தயாரிப்புக்கு அலுமினியத்தின் இந்தப் பண்பே அடிப்படையாக அமைந்தது. இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் மற்றும் ஜெர்மன் நகரங்கள் மீது வீசப்பட்ட எம் 74/76 குண்டுகளும், கூப் குண்டுகளும் அலுமினியத்தைப் பயன்படுத்தியே தயாரிக்கப்பட்டன. பிரிட்டன் அரசு, ஜெர்மனியின் டிரெஸ்டன் நகரத்தின் மீது வீசிய நாபாம் குண்டுகளால் 25,000 பேர் கொல்லப்பட்டனர்.
1920-களில் முதலாம் உலகப் போரின் விமானங்களில் பயன்படுத்தப்பட்ட டியூராலுமினியம், இன்றும் ஜம்போ ஜெட் மற்றும் இராணுவ விமானங்களின் தயாரிப்பில் சுமார் 80 சதவீதம் பயன்படுத்தப்படுகிறது.
அலுமினியத்தை உற்பத்தி செய்வதற்கு அதிகளவு நீர்மின்சாரம் தேவைப்பட்டதால், உலகப் போர் காலகட்டத்தில் ஐஸ்லாந்தில் பல அணைகள் கட்டப்பட்டன. 1940-களில் அன்றைய அமெரிக்க அதிபர் 50,000 போர் விமானங்களை உருவாக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்தார்.
ஏகாதிபத்திய அரசுகள் நடத்தும் நவீனப் போர்களில் அலுமினியம் மிக முக்கியமான மூலப்பொருளாக மாறியுள்ளது. பெருமளவிலான அலுமினியத்தைப் பயன்படுத்தாமலும், அழிக்காமலும் இன்று எந்தவொரு போரும் சாத்தியமில்லை. அணு ஆயுதங்களின் உற்பத்திக்கும் அவற்றின் பயன்பாட்டிற்கும் அலுமினியம் தேவைப்படுகிறது. இதுமட்டுமின்றி, ஏவுகணை வெடிப்புத் தொழில்நுட்பத்திலும் அவற்றின் எரிபொருள் தயாரிப்பிலும் அலுமினியம் பயன்படுத்தப்படுகிறது.
ஆயுத உற்பத்தியில் அலுமினியத்தின் பயன்பாடு, இரண்டாம் உலகப் போர் முடிந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் தீவிரமடைந்துள்ளது. தற்போது இந்தியா ஒரு முக்கிய ஆயுத உற்பத்தியாளராக மாறி வருகிறது. இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு ட்ரோன்கள் மற்றும் பிற ஆயுத உபகரணங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அலுமினியச் சந்தையில் போட்டியிடுவதற்காக மேற்கொள்ளப்படும் பாக்சைட் சுரங்கத் திட்டங்கள், ஒடிசா பழங்குடி மக்களின் வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான திட்டங்களாக முன்னிறுத்தப்படுகின்றன.
பாக்சைட் கனிம வளம் நிறைந்த பகுதிகள், பழங்குடி மக்கள் அதிகம் வாழும் ராயகடா, கோராபுட், கலஹண்டி மாவட்டங்களில் அமைந்துள்ளன. பழங்குடியினர் தங்களது நிலங்களுக்கு முறையான சட்டப்பூர்வ ஆவணங்களை வைத்திருப்பதில்லை. தங்களது கிராமப் பெரியவர்கள் முன்னிலையில் வாய்மொழி ஒப்பந்தத்தின் மூலம் நிலங்களுக்கான உரிமையை உறுதிப்படுத்திக் கொள்வதே அவர்களது வழக்கமாக இருந்து வருகிறது.
பாக்சைட் சுரங்கத் திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தானதும், ஒடிசா மாநில அரசு இந்த நிலங்களை அந்நிய மற்றும் தரகுப் பெருமுதலாளிகளுக்கு வாரி வழங்குகிறது. பழங்குடியினரின் நிலங்கள் கைமாறிவிட்டதாகக் கூறி, அரசு அதிகாரிகள் அவர்களை ஊரைக் காலி செய்துவிட்டு வெளியேறுமாறு விரட்டுகின்றனர்.
பழங்குடியினரின் நிலங்கள் முறையாகப் பத்திரப்பதிவு செய்யப்படாததைச் சாதகமாக்கிக் கொண்டு, அந்நிலங்களை அந்நிய மற்றும் தரகுப் பெருமுதலாளிகள் தங்களுக்குச் சொந்தமானவை என்று உரிமை கொண்டாடுகின்றனர். மாநில அரசு, உள்ளூர் நிர்வாகம், சட்டத்துறை, போலீசு மற்றும் அனைத்து ஓட்டுக் கட்சிகளும் இந்த அட்டூழியத்தில் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.
மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, ஐந்தாவது அட்டவணையின் கீழ் வாழும் பழங்குடியின மக்களின் உரிமைகளும், அவர்களது கிராம சபைகளுக்கான அதிகாரங்களும் புறக்கணிக்கப்படுகின்றன. மோடி அரசு கொண்டுவரும் புதிய சட்டங்கள், மலைகளையும் காடுகளையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பதைத் தடுக்கும் அதிகாரம் கிராம சபைத் தீர்மானங்களுக்கு இல்லை என்ற நிலையை உருவாக்குகின்றன.
பழங்குடி மக்களின் நிலங்கள் பறிக்கப்படுவதோடு, அவர்கள் பிறந்து வளர்ந்த மண்ணைவிட்டும் வெளியேற்றப்படுகின்றனர். அதுமட்டுமின்றி, அவர்கள் மறுவாழ்வுக்கான எவ்வித நிவாரண உதவிகளும் இன்றி விரட்டியடிக்கப்படுகின்றனர்.
மேலும், சுரங்கத் திட்டங்கள் அமைந்துள்ள பகுதிகள் மட்டுமின்றி, அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அலுமினியக் கழிவுகளால் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. விவசாயம் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீரும் நஞ்சாகிறது. வேதாந்தாவின் லஞ்சிகர் ஆலைக் கழிவுகளால் அப்பகுதி மக்களின் குடிநீரே சிவப்பு நிறமாக மாறியுள்ளது.
பாக்சைட் சுரங்கத் திட்டத்திற்கு எதிரான போராட்ட இயக்கத்தின் தலைவரான லாடா சிகோகாவைப் போலீசார் அராஜகமாகக் கைது செய்துள்ளனர். இதுமட்டுமின்றி, அங்குள்ள பழங்குடியின மக்களுக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் ராண்டால் செக்குவேரா மீதும் போராட்டத்தைத் தூண்டியதாகப் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நமது நாட்டின் கனிம வளங்களை அந்நிய மற்றும் தரகுப் பெருமுதலாளிகள் சூறையாடுவதற்கு, மோடி அரசும் ஒடிசா மாநில பா.ஜ.க. அரசும் வெளிப்படையாகவே அடியாள்படையாகச் செயல்படுகின்றன. மக்களின் வாழ்வுரிமையைப் பறிப்பதோடு, தங்களது உரிமைகளுக்காகப் போராடும் மக்களின் ஜனநாயக உரிமைகளையும் நசுக்குகின்றன.
ஒடிசாவின் பாக்சைட் கனிம வளம் மட்டுமின்றி, நீர்வளமும் நிலவளமும் பன்னாட்டு மற்றும் தரகுப் பெருமுதலாளிகளுக்குத் தாரை வார்க்கப்படுகின்றன. எனவே, ஒடிசா பழங்குடி மக்களின் போராட்டம் வெறுமனே மறுவாழ்வு உரிமைக்கான போராட்டம் மட்டுமல்ல; நாட்டை மீண்டும் காலனியாக்கத் துடிக்கும் காவிப் பாசிசக் கும்பலுக்கும், அந்நிய மற்றும் தரகுப் பெருமுதலாளிகளுக்கும் எதிரான போராட்டமுமாகும்.
நம் நாட்டின் பூர்வகுடிகளான பழங்குடியினரை விரட்டிவிட்டு, அன்று கிழக்கிந்தியக் கம்பெனி நமது நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்தது என்றால், இன்று வேதாந்தாவும் அதானியும் ஒடிசாவின் இயற்கை வளங்களை ஆயுதத் தயாரிப்புக்காகக் கொள்ளையடிக்கத் துடிக்கின்றனர். நம் நாட்டின் வளங்களைத் தரிசாக்கி, பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதோடு, ஆயுதங்களை ஏற்றுமதி செய்து போர்களின் மூலம் மூன்றாம் உலக நாடுகளின் மக்களையும் அழிவுக்குத் தள்ளுகின்றனர். இவ்வாறு, இரட்டை இனப்படுகொலைக்கு வழிகோலுகின்றனர் காவிப் பாசிஸ்டுகள்.
நாட்டுப்பற்றும் தன்மான உணர்வும் கொண்ட பழங்குடியினர் நடத்தும் இந்தச் சுதந்திரப் போராட்டத்தில் நாம் நம்மை இணைத்துக்கொள்ளப் போகிறோமா? அல்லது ‘வளர்ச்சி’ என்ற பெயரில் நமது இயற்கை வளங்களைப் புதிய கிழக்கிந்தியக் கம்பெனிகள் கொள்ளையடிக்க அனுமதிக்கப் போகிறோமா?
- தாமிரபரணி





