தேர்தல் நன்கொடை: டாடா, பாஜகவிற்கு 
கொடுத்துள்ள லஞ்சம்!

2024-25 ஆண்டில் மட்டுமே, டாடா குழுமமானது 757 கோடியை பாஜகவிற்கு நன்கொடையாகக்  கொடுத்துள்ளது. டாடாவின் குறைக்கடத்தி சிப் தயாரிக்கும் திட்டத்திற்கு மக்களின் வரிப்பணம் 44,000 கோடியை மானியமாக மோடி கும்பல் அறிவித்த உடனே இந்த லஞ்சத் தொகையை பாஜாகவிற்கு, டாடா குழுமம் கொடுத்துள்ளது.

முதலாளித்துவ ஜனநாயகத்தில், தேர்தல் கட்சிகள் என்பவை ஆளும்வர்க்கத்தின் நலனுக்காக உள்ளவை. அவை, சுரண்டும் முதலாளித்துவ கொடூரர்களுக்கும் சுரண்டப்படும் பெரும்பான்மை மக்களுக்கும் பொதுவானவர்கள், சமூகத்தில் அனைவருக்கும் பொதுவானவர்கள் என்று முகமூடி அணிந்து கொண்டு, மக்களின் உழைப்பை – சேமிப்பை அபகரித்து முதலாளிகளுக்குக்  கொடுப்பதும், நியாயம், உரிமை என்று போராடும் மக்களை ஒடுக்குவதையும் தனது முழுநேர வேலையாக வைத்திருப்பவை.

சத்துணவு போட்டேன், சைக்கிள்/டீவி கொடுத்தேன், பஸ்-பாஸ் கொடுத்தேன் என்று வீதிக்கு வீதி விளம்பரப்படுத்தும் ஓட்டுக்கட்சிகள் முதலாளிகளுக்கு வாரிக்கொடுக்கும் சலுகைகள் குறித்து கனவில் கூட மூச்சு விடுவதில்லை. ஆளும்வர்க்கங்கள் அவற்றை ரகசியமாகவே வைத்திருக்கின்றனர். ஒரு சில சந்தர்ப்பங்களில் அவை கசியவிடப்படுகின்றன. அப்படிதான் கடந்தவாரம் டாடா குழுமத்திற்கும் பாஜகவிற்கும் இடையே நடந்த பணப்பரிமாற்றம் குறித்து ஸ்க்ரோல் இணையப் பத்திரிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

2024-25 ஆம் ஆண்டில், பல்வேறு தேர்தல் அறக்கட்டளைகளிடம் இருந்து (Electoral Trust) 959 கோடியைப் நன்கொடையாக பாஜக பெற்றுள்ளதாகவும், அதில் ஏறத்தாழ 83% நிதியை, அதாவது 757 கோடியை, டாடா குழுமத்தின் முற்போக்கு தேர்தல் அறக்கட்டளை (Progressive Electoral Trust-PET) மட்டுமே கொடுத்துள்ளதாகவும் ஸ்க்ரோல் கூறியுள்ளது.

குறிப்பாக இந்த நிதி, பாஜக ஆளும் மாநிலங்களான அசாம் மற்றும்  குஜராத்தில் குறைக்கடத்தி சிப்-களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளைத் தொடங்க 44,000 கோடியை மானியத்தை டாடா குழுமத்திற்கு வழங்க மோடி அரசாங்கம் அறிவித்த சில வாரங்களுக்குப் பிறகு (ஏப்ரல் 2024 இல்) நன்கொடையாகக்  கொடுக்கப்பட்டுள்ளது. மக்களின் வரிப்பணம் பல்லாயிரம் கோடியை இனாமாக வாரிக்கொடுத்ததிற்கு பாஜகவுக்கு டாடா கொடுத்திருக்கும் கையூட்டுதான்  இந்த  757 கோடி ரூபாய். இதைத்  தேர்தல் நன்கொடை என்பதைவிட லஞ்சம் என்று சொல்வதே சரியாக இருக்கும். 

இந்த லஞ்சம் தேர்தல் அறக்கட்டளை என்ற சட்டப்பூர்வ வழியிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறக்கட்டளை என்பது நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகளை வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு வடிவமாகும். இந்தத் திட்டம் 2013 இல்  UPA அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. மோடி கும்பல்  கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் முறையை உச்சநீதி மன்றம் (பிப்ரவரி 2024 இல்) ரத்து செய்ததால், தேர்தல் அறக்கட்டளைகள் மூலமாகத்  தேர்தல் கட்சிகள் நன்கொடையைப் பெற்றுவருகின்றன.

பாஜக-டாடாவிற்கு இடையேயான இந்த ஊழலுக்கும் மோடி அறிவித்துள்ள ஆத்மநிர்பாரத் (சுயசார்பு இந்தியா) என்ற வாய்சவடாலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கொரோனா பரவலைக் காரணம் காட்டி, சீனாவுக்கு எதிராக அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் கொண்டுவந்த பொருளாதாரத் தடைகள் மற்றும் சீனாவை விட்டு வெளியேறுதல் போன்ற அறிவிப்புகளால் மகிழ்ச்சியடைந்த இந்திய தரகுமுதலாளி வர்க்கம், அமெரிக்க முகாமோடு சேர்ந்து கொண்டு, சீனாலிருந்து வெளியேறும் பன்னாட்டு தொழிற்நிறுவனங்கள் இந்தியாவில் தொழிற்சாலைகள் அமைக்க விரும்புவதாகப்  பிரச்சாரம் செய்தது. அதனை மையப்படுத்திப்  பல லட்சம் கோடி சலுகைகளை உள்ளடக்கிய திட்டங்களை மோடி கும்பல் அறிவித்தது. 2021 இல் (76,000 கோடி நிதி ஒதுக்கீட்டில்) அறிவிக்கப்பட்ட குறைக்கடத்தி சிப்கள் தயாரிப்பதற்கான திட்டத்தை உதாரணமாகச்  சொல்லலாம்.

ஆனால் குறைக்கடத்தி சிப்-கள் தயாரிப்பில் முன்னனுபவமும் அறிவியல் தொழில்நுட்பங்களும் தேவையான கருவிகளும் இந்திய தரகுமுதலாளி வர்க்கத்தினரிடம் கிடையாது. எனவே வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டாக தொழில் தொடங்க அனுமதிக்கப்பட்டன.

குஜராத்தில் தொடங்க உள்ள குறைக்கடத்தி சிப் தொழிற்சாலை, தைவானின் பவர்சிப் நிறுவனத்தின் உதவியுடன் தொடங்கப்பட உள்ளது. மூலதனம் திரட்டுவது, அரசாங்கத்தின் உதவிகளைப்  பெறுவது, கட்டுமானம் ஆகியவற்றை டாடா எலக்ட்ரானிக்ஸ் பார்த்துக்கொள்ளும். சிப்கள் தயாரிப்பதற்கான தொழிட்நுட்பம் வழங்குவது, சிப் வடிவமைப்பு, தொழிலாளர்களுக்குப் பயிற்சி கொடுப்பது ஆகியவை பவர்சிப்-இன் பொறுப்பு.

டாடா குழுமத்தின் டாடா எலக்ட்ரானிக்ஸ் 2020-இல் தொடங்கப்பட்டது. இது, ஆப்பிள், சாம்சங் நிறுவனங்களுக்காக திறன்பேசிகளை அசம்பிள் செய்து கொடுக்கும் வேலை செய்து வருகிறது. குறைக்கடத்தி அடிப்படையிலான எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் உற்பத்தியில் இந்நிறுவனத்திற்கு எந்தவித முன்னனுபவும் கிடையாது. ஆனால் எலக்ட்ரிகல்/எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் உற்பத்தியில் மிகவும் பிரபலமான  பாரத் ஹெவி எலக்ட்ரிகல் நிறுவனத்தையோ( BHEL) அல்லது உள்நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு மைக்ரோபுராஸ்ஸசரை தயாரித்துள்ள  DRDO வையோ குறைக்கடத்தி சிப்கள் தயாரிப்பில் மோடி கும்பல் கிட்டவே சேர்க்கவில்லை. ஆனால் சிறிதும் முன்னனுபவம் இல்லாத தனியார் நிறுவனமான டாடா எலக்ட்ரானிக்ஸ்-க்கு பல்லாயிரம் கோடி அள்ளிக்கொடுத்ததோடு மட்டுமில்லாது பவர்சிப் என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு இந்திய சந்தையையும் திறந்துவிட்டுள்ளனர். இதுதான் மோடி அறிவித்துள்ள “அத்மநிர்பாரத்” (சுயசார்பு இந்தியா) திட்டத்தின் லட்சணம்.

மக்களின் வாங்கும் திறன் குறைந்திருப்பதைப் பல புள்ளிவிவரங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. சமூகநலத் திட்டங்களுக்கான நிதியையும் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்புக்கான நிதி ஒதுக்கீட்டையும், விவசாயம்-சிறு/குறு தொழில்களுக்கான வரிச்சலுகைகளையும் அதிகரிக்ககோரி பல்வேறு தரப்பினரும் போராடி வருகின்றனர். இதனை கிஞ்சித்தும் கண்டுகொள்ளாத மோடி கும்பல் சோலார் மின்சாரம் தயாரிப்பு, குறைக்கடத்தி சிப் தயாரிப்பு, டெஸ்லா கார் ஆப்பிள் ஐ-போன் தயாரிப்பு எனப் பல லட்சம் கோடிகளை அதானி, அம்பானி, டாடா போன்ற தரகுமுதலாளிகளுக்கும் அவர்களின் வழியாக இந்திய சந்தை-தொழிற்கட்டமைப்பை கட்டுப்படுத்தும் அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களுக்கும் வாரி வழங்குகிறது. எனவே தான் முதலாளித்துவ ஜனநாயகத்தில், தேர்தல் கட்சிகள் என்பவை ஆளும்வர்க்கத்தின் நலனுக்கானவை என்றார் லெனின்.

  • செல்வம்

செய்தி ஆதாரம்

https://thewire.in/politics/in-2024-25-bjp-got-rs-959-crore-from-electoral-trusts-tata-group-alone-contributed-rs-757-crore

https://www.thenewsminute.com/news/tata-group-donated-rs-758-cr-to-bjp-weeks-after-approval-for-semiconductor-units-report

https://madhyamamonline.com/india/tata-gets-rs-44203-cr-govt-subsidy-for-semiconductor-units-weeks-later-donates-rs-758-cr-to-bjp-1471761

https://www.thehindu.com/business/Industry/tata-electronics-taiwans-psmc-complete-technology-transfer-pact-for-indias-first-semiconductor-fab/article68685671.ece

https://www.youtube.com/watch?v=Itfoap5pkyk

https://economictimes.indiatimes.com/industry/cons-products/electronics/pm-modi-semicon-india-2025-vikram-chip-fab-plan-india-atmanirbhar-bharat-semiconductors/articleshow/123651998.cms?from=mdr

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன