ஐஐடிகளில் சாதியப் பாகுபாடு தொடர்வது ஏன்?
கடந்த மாதம் (21 செப்டம்பர் 2026) 18-ஆம் தேதி ஐஐடி பம்பாயில் ஆற்றல் அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் (Department of Energy Science and Engineering), இரண்டாம் ஆண்டு பிடெக் மாணவரான சாஹில் வக்கோடே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதற்குக் காரணம் ஐஐடிகளில் நிலவும் சாதியப் பாகுபாடுதான் என சாஹிலின் பெற்றோரும், மாணவர்களும், சமூகச் செயல்பாட்டாளர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
சாதியப் பாகுபாடு எதுவும் நடைபெறவில்லை என்று ஐஐடி பம்பாய் நிர்வாகம் மறுத்திருக்கிறது. நிர்வாகத்தைக் குற்றம் சுமத்தும்போது அவ்வாறு மறுப்பதில் தவறொன்றுமில்லை. கூடுதலாக, ஜனநாயக முறைப்படி அவ்வாறு கூறுவதற்கு அவர்களுக்கு உரிமையுண்டு. ஆனால் அந்த உரிமையைக் கேடாகப் பயன்படுத்தும் போது அதற்கு எதிராகப் போராட்டம் நடைபெறுவதும் ஜனநாயகம்தான் என்பதை நிர்வாகம் தங்களுக்கு வசதியாக மறந்துவிடுகிறது.
சாஹில் வக்கோடேவுக்கு நீதி கேட்டுப் போராடிய மாணவர்கள் மீது ஐஐடி பம்பாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசு கொடூரமாகத் தாக்குதல் நடத்தியது. மேலும், ஐஐடி பம்பாயின் பிரதான வாயிலுக்கு வெளியே அவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சாஹிலின் பெற்றோர், வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர்களையும் போலீசு கடுமையாகத் தாக்கி, கைது செய்தது.
இந்த நிகழ்வைக் கருத்தில் கொண்டு, ஐஐடி பம்பாய் இயக்குநரை ராஜினாமா செய்யக் கோரி, அவருக்கு ஒரு திறந்த மடலை (கடிதம்) மக்கள் ஜனநாயகத்திற்கான மாணவர்கள் (Students for People’s Democracy) கூட்டறிக்கையாக வெளியிட்டுள்ளனர். அதில் ஐஐடி பம்பாய் நிர்வாகம் சாதிப் பாகுபாடு குறித்த புகார்களைக் கையாள்வதில் மிகவும் அலட்சியமாகவோ அல்லது தீய நோக்கத்துடன் ஒடுக்கும் போக்கைக் கொண்டோ செயல்படுவதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகக் கூறியுள்ளனர். மேலும், இதனை நிரூபிக்கும் விதமாகப் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளனர்.
-
சாஹில் வக்கோடேவின் மறைவை அறிவித்த அதே நேரத்தில், அவர் தேர்வில் முறைகேடு செய்ததாகக் குற்றம் சாட்டி, அவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ஐஐடி பம்பாய் நிர்வாகம் ஊடகங்களுக்கு ஓர் அறிக்கையை வெளியிட்டது. அவர் மறைந்து சில மணிநேரங்களிலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. அதாவது, அவரது மரணத்திற்குக் காரணமான சூழல்கள் குறித்து எந்தவித விசாரணையும் நடத்தப்படுவதற்கு முன்பே இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
-
இதற்கு முன்பு, வேறு எந்த மாணவரும் தேர்வில் முறைகேடு செய்ததாகக் கூறி ஐஐடி பம்பாய் நிர்வாகம் ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டதாக எங்களுக்குத் தெரியவில்லை. மேலும், ஒரு மாணவரின் மரணம் தொடர்பான சூழல்கள் குறித்து ஐஐடி பம்பாய் நிர்வாகம் ஊடகங்கள் வாயிலாகக் கருத்துத் தெரிவிப்பது வழக்கமான நடைமுறையும் அல்ல.
-
அப்படியிருக்க, இவ்வளவு தீவிரமான, வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளை எடுக்க நிர்வாகத்தைத் தூண்டியது எது? இந்த முதல் அறிக்கை வெளியிடப்பட்டபோது, சாஹிலின் குடும்பத்தினர் மும்பை காவல்துறையிடம் புகார்கூட அளித்திருக்கவில்லை.
இந்த மூன்று கேள்விகளுக்கும் தர்க்கரீதியாகப் பதிலளித்துப் பார்த்தாலே, சாஹிலின் மரணத்திற்குக் காரணமானவர் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட டீன் சூர்யநாராயண துல்லாவைக் (Suryanarayana Doolla) காப்பாற்றும் கெட்ட நோக்கத்துடன் ஐஐடி பம்பாய் நிர்வாகம் செயல்பட்டுள்ளது. மேலும், சாதிப் பாகுபாடு புகாரில் சிக்கியுள்ள டீனுக்கு ஆதரவாக நிர்வாகமே பிரச்சாரத்தைத் தொடங்கி, விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே பொதுமக்களின் கருத்தைத் திசைதிருப்ப முயன்றதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சாஹிலின் பெற்றோர், டீன் சூர்யநாராயண துல்லா (Suryanarayana Doolla) மீது புகார் அளித்த பிறகு, ஐஐடி பம்பாய் நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ஆசிரியர் அமைப்பின் (faculty body) மூலம், குற்றஞ்சாட்டப்பட்ட பேராசிரியருக்கு ஆதரவாக நிற்பதாகப் பகிரங்கமாக அறிவித்தது. ஐஐடி பம்பாய் ஆசிரியர் மன்றத்தின் தலைவர், தனது அதிகாரப்பூர்வப் பொறுப்பில் இருந்து ஊடகங்களிடம் பேசினார். நிறுவனத்தின் விதிகளின்படி, நிர்வாகத்தின் அனுமதியின்றி அவர் இவ்வாறு பேசியிருக்க முடியாது.
அதாவது, ஐஐடி பம்பாய் ஆசிரியர் மன்றமும், நிர்வாகமும் கூட்டுச் சேர்ந்துகொண்டு சாதிப் பாகுபாட்டிற்கு ஆதரவாகச் செயல்பட்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் சாதிப் பாகுபாட்டை எதிர்கொள்ளும் ஒரு மாணவர், இத்தகைய விளைவுகளுக்கு அஞ்சாமல் எப்படிப் புகார் அளிக்க முடியும்? என்ற கேள்வியும் இயல்பாக எழுகிறது.
-
விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே, ஐஐடி பம்பாய் தேர்வு அறையில் பதிவான சிசிடிவி (CCTV) காட்சிகள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டன. நிர்வாகத்தின் முதல் அறிக்கையின் மூலம் ஊடகங்களில் ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருந்த ஒருதலைப்பட்சமான கருத்தை உறுதிப்படுத்தும் வகையில், இந்தக் காட்சிகள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
அதாவது தேர்வு அறையில் மாணவர்கள் இருப்பது போன்ற 52 விநாடிகள் கண்காணிப்புக் கேமரா காட்சியை நிர்வாகத்தில் இருந்த சிலர் கசியவிட்டுள்ளனர். அதில், ஒரு மாணவர் தனது மேசையிலிருந்த கருவியைப் பார்த்துவிட்டு, அடுத்த நொடியே விடைத்தாளைக் கண்காணிப்பாளரிடம் (துல்லா) ஒப்படைத்துவிட்டு இருக்கையை விட்டு வெளியேறுவது தெரிந்தது. ஆனால், அந்த மாணவர் சாஹில்தானா, அவர் பார்த்தது கைப்பேசியா (Cellphone) அல்லது கணிப்பானா (Calculator) என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், பல முன்னணி ஊடகங்கள் அந்தக் காட்சியை ஒளிபரப்பி, சாஹில் தேர்வில் முறைகேடு செய்து பிடிபட்டதாக வாந்தியெடுத்தன. இது செப்டம்பர் 19 அன்று சாஹில் தேர்வின்போது முறைகேட்டில் ஈடுபட்டதாக ஐஐடி பம்பாய் வெளியிட்ட கூற்றுக்கு வலுசேர்ப்பதற்காகவே இந்தக் காட்சி திட்டமிட்டுக் கசியவிடப்பட்டுள்ளது.
சாஹிலின் மரணத்திற்குப் பிறகும் அவருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் இந்தக் காணொளி தீவிரமாகப் பரப்பப்பட்டது. ஆனால், சாஹிலுக்கும் டீன் துல்லாவுக்கும் இடையே நடந்த உரையாடல் மட்டும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் காணொளி கசிந்ததற்காக நிர்வாகத்தில் உள்ள எவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் மூலம், மாணவர் இறந்த பிறகும் அவருக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரத்தில் ஐஐடி பம்பாய் இயக்குநர் ஷிரிஷ் கேதரேவும் உடந்தையாக இருப்பது தெளிவாகிறது.
எனவே, நிர்வாகத்தில் ஷிரிஷ் கேதரேவின் தலைமை தொடர்வது ஐஐடி பம்பாயின் அனைத்து மாணவர்களுக்கும் ஒரு கேடான செய்தியைச் சொல்கிறது. அதாவது, சாதியப் பாகுபாடு, மன உளைச்சல், நிர்வாகத்தின் வரம்பு மீறல்கள் போன்ற பிரச்சினைகளை முன்வைத்தால், கடுமையான அடக்குமுறையையும் இழிவான அவதூறுப் பிரச்சாரத்தையுமே எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதே அந்தச் செய்தி. இதற்குத் தார்மீகப் பொறுப்பேற்று இயக்குநர் பொறுப்பில் இருந்து பதவி விலக வேண்டும் என அம்மடலில் கோரப்பட்டுள்ளது.
யாருங்க இப்பெல்லாம் சாதி பாக்குறாங்க? என்று அங்கலாய்பவர்களும், சாதி எல்லாம் ஒழிந்துவிட்டது எனக் கற்பனையில் மிதப்பவர்களின் கண்களைத் திறப்பதற்கும் இந்த மடல் ஒரு திறவுகோலாக அமையும் என்பதில் எள்முனை அளவும் சந்தேகமில்லை. ஆனால் பிரச்சினை இத்துடன் முடிந்துவிடவில்லை.
இந்த ஆண்டு ஐஐடி பம்பாயில் தற்கொலை செய்துகொண்ட மூன்றாவது மாணவர் சாஹில் ஆவார். அனைத்து ஐஐடிகளையும் சேர்த்துப் பார்க்கும்போது, தற்கொலை செய்துகொண்ட பத்தாவது மாணவர் இவராவார்.
இரண்டாம் ஆண்டு சிவில் இன்ஜினியரிங் மாணவரான நமன் அகர்வால், பிப்ரவரி 4 அன்று தற்கொலை செய்துகொண்டார். மெட்டீரியல்ஸ் இன்ஜினியரிங் மாணவரான சோஹில் ராஜ்குமார் சங்வான், ஜூலை 28 அன்று தற்கொலை செய்துகொண்டார்.
2023-ஆம் ஆண்டு, முதலாம் ஆண்டு பி.டெக் மாணவரான தர்ஷன் சோலங்கி, தனது விடுதிக் கட்டிடத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். 2014-ஆம் ஆண்டு, நான்காம் ஆண்டு எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பி.டெக் மாணவரான அனிகேத் அம்போர், விடுதியின் ஆறாவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
இந்தத் தற்கொலைகளுக்கு அடிப்படைக் காரணம் ஐஐடிகளில் நிலவும் சாதிப் பாகுபாட்டின் அடிப்படையில் ஏற்பட்ட அவமானமே இவர்கள் அனைவரையும் மரணத்திற்குத் தள்ளியதாக அவரது குடும்பத்தினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
அனிகேத் அம்போர், தர்ஷன் சோலங்கி, சாஹில் வக்கோடே ஆகிய மூவரும் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் மரணங்களைச் சுற்றி எழுந்துள்ள கேள்விகளும், அவர்களது குடும்பத்தினர் முன்வைத்த குற்றச்சாட்டுகளும் ஐஐடி நிர்வாகத்தாலோ, அரசாங்கத்தாலோ இன்றுவரை பொய்யென நிரூபிக்கப்படவில்லை. மேலும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கிறது என்றால் அதற்குக் காரணம் நிர்வாகம் கூறுவதுபோல் மாணவர்களின் திறனின்மை மட்டுமே எப்படிக் காரணமாக இருக்கமுடியும்?
பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களைப் பார்த்துக் கேள்வியெழுப்பும் இந்த யோக்கிய சிகாமணிகள், “தங்கள் தகுதியை நிரூபிப்பதற்காகப் போலி கல்விச் சான்றிதழ்களைப் பெற்ற பிரதமர் நரேந்திர மோடியையும், ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானியையும்” பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்பார்களா?
2014 முதல் 2021 வரை, ஐஐடிகள், ஐஐஎம்கள் மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் மொத்தம் 122 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. இவர்களில் 58 சதவீதம் பேர் பட்டியலின (SC), பழங்குடியின (ST), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) மற்றும் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள்.
இந்தப் புள்ளிவிவரம், இந்தியாவின் மிகக் கடுமையான தேர்வு முறைகளைக் கொண்ட உயர்கல்வி நிறுவனங்களில்கூட தொடர்ந்து நிலவும் சாதியப் பாகுபாட்டையே சுட்டிக்காட்டுகிறது. எனவே சாதிப் பாகுபாட்டில் ஊறித்திளைக்கும் மெத்தப் படித்த மேதாவிகளிடமிருந்து திறந்த மடல் முன்வைக்கும் எந்தக் கேள்விகளுக்கும் பதிலை எதிர்பார்க்க முடியாது.
வரலாற்று ரீதியாகக் கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, ஐஐடி போன்ற நிறுவனங்களில் இடம்பிடிப்பது ஒரு தனிப்பட்ட வெற்றியைத் தாண்டி, சமூக நீதியின் அடையாளமாகவும் இருக்கிறது. அத்தகைய மாணவர்கள் கல்வி நிறுவனங்களுக்குள் நுழைந்த பின்னரும் சாதிய அவமதிப்பு, பாகுபாடு, தனிமைப்படுத்துதல் அல்லது மனரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக நேர்வது, தனிப்பட்ட மாணவரின் பிரச்சினை மட்டுமல்ல; சமூகப் பிரச்சினையுமாகும்.
சாதியப் பாகுபாடு என்பது எப்போதும் வெளிப்படையான அவமதிப்புச் சொற்களிலோ நேரடியான தாக்குதல்களிலோ மட்டுமே வெளிப்படுவதில்லை. மாணவர்களின் திறமையைச் சந்தேகிப்பது, அவர்களின் கல்விசார் சாதனைகளை இடஒதுக்கீட்டுடன் மட்டும் தொடர்புபடுத்திப் பார்ப்பது, புகார்களை அலட்சியப்படுத்துவது, அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை மௌனமாக்குவது, அவர்களின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் தகவல்களைப் பொதுவெளியில் வெளியிடுவது எனப் பல வடிவங்களில் அது வெளிப்படும் என்பதையே சாஹிலின் மரணம் நமக்கு உணர்த்துகிறது.
-
மகேஷ்
செய்தி ஆதாரம்:
https://frontline.thehindu.com/social-issues/social-justice/sahil-wakode-death-caste-discrimination-iit-bombay/article71549982.ece
https://frontline.thehindu.com/the-nation/remembering-rohith-vemula/article10055803.ece
https://frontline.thehindu.com/social-issues/social-justice/sahil-wakode-death-caste-discrimination-iit-bombay/article71549982.ece
