இந்து மதவெறி பாசிசத்தின் பிடியில் சிக்கியிருக்கும் சத்தீஸ்கர்.
தமிழ்நாட்டில் வேலாங்கண்ணி மாதா பேராலயத்திற்குச் செல்பவர்களில் கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, இந்துக்களும் கணிசமான அளவில் உள்ளனர். நாகூர் தர்காவுக்குச் செல்பவர்களில் முஸ்லிம்கள் மட்டுமல்ல, இந்துக்களும் இருக்கிறார்கள். மதம் வேறாக இருந்தாலும், தங்களுடைய துயரங்களுக்கான காரணம் என்ன என்று அறியாத மக்கள், ஆறுதலையும், வேண்டுதல்களுக்கான நம்பிக்கையையும் தேடி இத்தகைய வழிபாட்டுத் தலங்களை நாடுகிறார்கள். அங்கு ஒருவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதைவிட, அவருடைய நம்பிக்கையும் வேண்டுதலுமே முக்கியத்துவம் பெறுகின்றன. இது தமிழ்நாட்டின் சமூக வாழ்வில் வேரூன்றியுள்ள மத நல்லிணக்க மரபின் முக்கியமான வெளிப்பாடு.
வேலாங்கண்ணிக்குச் செல்லும் இந்து தனது மத அடையாளத்தை இழப்பதில்லை. நாகூர் தர்காவில் வழிபடும் இந்து முஸ்லிமாக மாறிவிடுவதில்லை. அதேபோல, பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் கிறிஸ்தவரோ முஸ்லிமோ தங்களது நம்பிக்கையைத் துறந்துவிடுவதில்லை. பிறருடைய நம்பிக்கையை மதிப்பதும், தங்களது நம்பிக்கையைப் பிறர் மீது திணிக்காமல் இருப்பதும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. மத வேறுபாடுகளுடன் இணைந்து வாழ்வதற்கான அடிப்படைப் பண்பே இதுதான்.
ஆனால், இதற்கு நேர்மாறான ஒரு சமூகச் சூழல் பாஜக ஆளும் சத்தீஸ்கரில் ஏற்பட்டுள்ளது. அங்கு கிறிஸ்தவர்களின் வழிபாட்டுக் கூட்டங்களில் இந்துக்கள் பங்கேற்பதற்குத் தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. தேவாலயங்களுக்கு வருபவர்கள் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறார்கள். கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர்களின் இறுதிச்சடங்குகளுக்குக்கூட எதிர்ப்புகள் எழுகின்றன.
சத்தீஸ்கரின் காங்கேர் மாவட்டத்திலுள்ள ஜம்கான் கிராமத்தில், கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றிய சோம்லால் ரத்தோரின் உடலை அவரது விருப்பப்படி அடக்கம் செய்வதில் ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறியது. பொது மயானத்தில் அவரது உடலை அடக்கம் செய்ததை எதிர்த்த காவிக் கும்பல் வன்முறையில் இறங்கியது. அந்தக் கிராமத்தின் தேவாலயத்திற்குச் சொந்தமான சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. இறுதியாக அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு வேறோர் இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பிறகே வன்முறை நின்றது. ஒரு மனிதன் எந்த மதத்தைப் பின்பற்றுகிறார் என்பது மட்டுமல்ல, அவர் இறந்த பிறகு எவ்வாறு அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதுகூட அங்கே மோதலுக்கான காரணமாக மாற்றப்படுகிறது.
இது இரண்டு மாநிலங்களுக்கிடையிலான கலாசார வேறுபாடு மட்டுமல்ல. மத நம்பிக்கையைத் தனிமனித உரிமையாகப் பார்க்கும் மனநிலைக்கும், மத அடையாளத்தைச் சமூகக் கட்டுப்பாட்டுக்கான கருவியாகப் பயன்படுத்தும் மனநிலைக்கும் இடையிலான முரண்பாடு. தமிழ்நாட்டில் பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வது பலரது இயல்பான ஆன்மிக அனுபவமாக இருக்கும்போது, சத்தீஸ்கரில் ஒருவர் எங்கே வழிபட வேண்டும், எந்த மதத்தைப் பின்பற்ற வேண்டும், இறந்த தனது உறவினரை எவ்வாறு அடக்கம் செய்ய வேண்டும் என்பதைக்கூட சுற்றியுள்ளவர்கள் தீர்மானிக்கின்றனர். அந்த அளவிற்கு அங்கே மத முனைவாக்கம் – மதத்தின் பெயரால் மக்களைப் பிரிப்பது – முழு வீச்சில் நடைபெற்றிருக்கிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தை ஆண்டு வரும் பாஜக அரசு திட்டமிட்டு இந்த மத முனைவாக்கத்தை உருவாக்கி வருகிறது. அந்த வகையில் சிறுபான்மையினரின் மீது அடக்குமுறையை ஏவுவதற்காகவும், மக்களிடையே மத ரீதியிலான பகைமை உணர்வை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு புதிய மதச் சுதந்திரச் சட்டத்தை அம்மாநில அரசு கொண்டுவந்திருக்கிறது.
மதமாற்றத் தடையா, மதச் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடா?
சத்தீஸ்கர் தர்ம ஸ்வதந்த்ரிய அதிநியம், 2026 எனப்படும் புதிய மதச் சுதந்திரச் சட்டம், சட்டவிரோத மதமாற்றத்தைத் தடுப்பதாகக் கூறி கொண்டுவரப்பட்டுள்ளது. கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வது, மோசடியான, தவறான தகவல்கள் மூலமாகவோ அல்லது முறையற்ற வாக்குறுதிகள் கொடுத்தோ மதமாற்றம் செய்வதைத் தடுப்பதே தங்களது நோக்கம் என்று பாஜக அரசு வாதிடுகிறது. இந்தச் சட்டத்தில் கட்டாய மத மாற்றத்திற்கு ஆயுள் சிறை உட்பட கடுமையான தண்டனைகளும், ரூ.25 இலட்சம் வரை அபராதமும் விதிக்கும் சரத்துகள் இடம்பெற்றுள்ளன.
மதம் மாற விரும்புவோரும் மதமாற்றத்தை நடத்தும் மதச் செயல்பாட்டாளர்களும், அது குறித்த அறிவிப்புகளை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டிய நடைமுறைகளும் இந்தச் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தனது மதத்தைப் பின்பற்றுவதற்கு ஒருவருக்கு உரிமை இருக்கிறது. அதே சமயம் மதம் என்பது அரசு வழங்கும் அனுமதி சீட்டின் அடிப்படையில் ஒருவர் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றல்ல. ஒருவர் தனது நம்பிக்கையை மாற்றிக்கொள்வது அவரது மனச்சாட்சியுடன் தொடர்புடைய தனிப்பட்ட முடிவு. ஆனால் மதமாற்றம் நிகழக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மதச் செயல்பாடுகள் அனைத்தையும் சந்தேகத்திற்குரியவையாக மாற்றுவது என்பதை அரசே இங்கு செய்கிறது.
புதிய சட்டத்தின் சில பிரிவுகள் தன்னிச்சையான மதமாற்றத்தைக்கூடப் பொதுவெளியில் அறிவிக்க வேண்டும் என்று கட்டாயமாக்குகின்றன. கிறிஸ்தவ தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்குச் சென்றாலே பிரச்சினை செய்யும் காவிக் கும்பல் இவ்வாறு பகீரங்கமாக மதம் மாறப்போவதாக அறிவிக்கும் ஒருவரைச் சும்மா விடுமா என்ன? இது தெரிந்தும் அரசு இதனைக் கட்டாயமாக்கியிருக்கிறது.
வழிபாட்டுக்கே அச்சுறுத்தல்: காவிக் கும்பலின் திட்டமிட்ட தாக்குதல்கள்
தம்தாரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு வரும் காவி வானரப் படையைச் சேர்ந்தவர்கள், ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டுக் கூட்டங்களைக் கலைப்பதாகவும், புதிய சட்டத்தின் நகல்களை எடுத்துக்கொண்டு தேவாலயங்களுக்கு வருபவர்களைக் கேள்வி கேட்பதாகவும் அங்குள்ள கிறிஸ்தவ அமைப்பின் பொதுச் செயலாளர் டைமண்ட் பிலஸ் கூறுகிறார்.
மேலும், தேவாலயங்களுக்கு வரும் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாற வேண்டும் அல்லது அங்கு வருவதை நிறுத்த வேண்டும் என்று அவர்கள் மிரட்டுவதாக உள்ளூர் போதகர் அலோக் மஜும்தார் கூறியுள்ளார். சிலர் அச்சத்தின் காரணமாக வழிபாட்டுக் கூட்டங்களுக்குச் செல்வதையே நிறுத்தியிருக்கிறார்கள்.
தேவாலயங்களில் வழிபாடு நடத்த வருபவர்கள் மட்டுமன்றி திருமண நிகழ்வில் கூட மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க முடியாதபடிக்கு காவிக் கும்பலால் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.
இறந்த பிறகும் மதத்தின் பெயரில் விலக்கி வைக்கப்படும் கொடூரம்
சத்தீஸ்கரில் எழுந்துள்ள கிறிஸ்தவ அடக்கஸ்தலப் பிரச்சினைகள், மதச் சுதந்திரத்தின் ஆழமான பரிமாணத்தை வெளிப்படுத்துகின்றன. நாம் முன்னர் பார்த்த காங்கேர் மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கான தனி அடக்கஸ்தலங்கள் இன்னும் ஒதுக்கப்படவில்லை. இதனை அம்மாவட்ட ஆட்சியர் குந்தன் குமாரே ஒப்புக்கொண்டுள்ளார். இடம் ஒதுக்குவதற்கு முயற்சிக்கும்போது கிராம மக்களின் எதிர்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு குடும்பம் தனது உறவினரை அடக்கம் செய்வதற்கான இடத்தைக்கூட மத அடையாளத்தின் காரணமாகப் பெற முடியாத நிலை உருவானால், குடிமக்களின் சம உரிமை எங்கே இருக்கிறது?
கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் இந்துக்கள் அடக்கம் செய்வதற்கான இடம் கிடைக்காமல் போனால் அதை ஏற்றுக்கொள்வார்களா? ஒரு மதத்தின் பெரும்பான்மை மற்றொரு மதத்தைச் சேர்ந்த குடும்பத்தின் துயரத்தையும் இறுதிச் சடங்குகளையும் கட்டுப்படுத்த அனுமதிக்க முடியுமா? இதற்கான பதில் மதத்தைப் பொறுத்து மாறக்கூடாது.
இங்கு இதனை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பு. உள்ளூர் மக்களிடையே எதிர்ப்பு இருப்பதாகக் கூறி நிர்வாகம் தனது கடமையிலிருந்து விலகிவிட முடியாது. சட்டப்படி தீர்வு காண்பதும், வன்முறையைத் தடுப்பதும், மத அடிப்படையில் எந்தக் குடும்பமும் அவமானப்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்வதும் அரசின் கடமை. ஆனால் சத்தீஸ்கர் அரசு கிறிஸ்தவர்களைக் கைகழுவியிருக்கிறது. கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றினால் இறந்த பிறகு புதைப்பதற்கு நிலம் கூடக் கிடைக்காது என்பதை நடைமுறையில் காட்டியிருக்கிறது.
பழங்குடியினரின் மரபைப் பாதுகாப்பதா, மத அடிப்படையில் விலக்கி வைப்பதா?
சத்தீஸ்கரின் பழங்குடிப் பகுதிகளில் நிலவும் பிரச்சினைகளுக்கு இன்னொரு பரிமாணமும் இருக்கிறது. சில கிராம சபைகள், பழங்குடியினரின் மரபுகளையும் பண்பாட்டையும் பாதுகாப்பதாகக் கூறி, கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கான அடக்கஸ்தலங்கள், தேவாலயங்கள் மற்றும் பிரார்த்தனைக் கூட்டங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதற்காக அரசியலமைப்பின் ஐந்தாவது அட்டவணை மற்றும் பஞ்சாயத்துகள் (பட்டியலிடப்பட்ட பகுதிகளுக்கு விரிவாக்கம்) சட்டம், 1996 எனப்படும் PESA சட்டம் ஆகியவற்றை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
பழங்குடியினரின் பண்பாடு, மரபுகள், நில உரிமைகள் மற்றும் உள்ளூர் சுயாட்சியைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. அதற்காகவே அரசியலமைப்புச் சட்டத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், அந்த உரிமைகள் மற்றொரு மதத்தைப் பின்பற்றும் பழங்குடியினரின் உரிமைகளை மறுப்பதற்கான கருவியாக இங்கே மாற்றப்படுகிறது.

அங்கே ஒரு பழங்குடியினர் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்டுவிட்டால், அவர் தனது கிராமத்தைச் சேர்ந்தவர் என்ற உரிமையை இழந்துவிடுகிறார். தனது குடும்பத்தின் நிலத்தில் உறவினரை அடக்கம் செய்யக்கூட அவருக்கு உரிமை இல்லை. கிராமத்தின் பொதுவாழ்வில் பங்கேற்கவும், வழிபாட்டுக் கூட்டங்களை நடத்தவும், தனது மத நம்பிக்கையின்படி வாழவும் அவருக்கு உரிமை இல்லை.
மரபுகளைப் பாதுகாப்பதற்கும் மத அடிப்படையில் மக்களை விலக்கி வைப்பதற்கும் இடையே தெளிவான வேறுபாடு இருக்கிறது. பழங்குடியினரின் பண்பாட்டைப் பாதுகாப்பது அவசியம் என்றால் இயற்கையை வனங்கும் பழங்குடியினரை இந்து மதத்திற்குள் விழுங்க வரும், பழங்குடியின இளைஞர்களைத் தனது காலாட்படையாக மாற்ற வேலை செய்யும் சங்கப் பரிவார அமைப்புகளுக்கு அங்கே தடையேதும் இல்லை. மாநிலம் முழுவதும் பழங்குடியினர் மத்தியில் கலவரத்தைத் தூண்டி விடும் பஜ்ரங் தளத்திற்கும், வனவாசிக் கேந்திரத்திற்கும் இந்தக் கிராம பஞ்சாயத்துகள் தடை விதிப்பதில்லை. ஏனென்றால் இவை சங்கப் பரிவாரக் கும்பலின் அமைப்புகள். அதே சமயம், அந்தக் கிராமத்தில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் தாங்கள் வழிபட தேவாலயங்கள் கட்டிக் கொள்ள அனுமதி மறுக்கப்படுகிறது.
சமூகப் புறக்கணிப்பு: மத அடையாளத்திற்கு கொடுக்கும் விலை
சத்தீஸ்கர் மாநிலத்தில் தற்போது இந்தப் பிரச்சினை வழிபாட்டுத் தலங்களுடன் நிற்காமல் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. இந்து மதத்தை விட்டு வேறு மதத்திற்கு மதம் மாறுபவர்களுக்கு வேலை கொடுப்பதில்லை என்ற நிலை அங்கே ஏற்பட்டுள்ளது. ஜம்கான் கிராமத்தைச் சேர்ந்த சாண்டீப் சௌஹான், தனது மத நம்பிக்கையின் காரணமாக சமூகப் புறக்கணிப்பை எதிர்கொள்வதாகக் கூறியுள்ளார். முன்பு நண்பரின் கோழிக்கடையில் பணியாற்றிய அவர், தற்போது கிராமத்தில் எல்லோரும் வேலை தர முடியாது என மறுப்பதால், கூலி வேலை தேடி தினமும் 17 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டியிருப்பதாகக் கூறுகிறார்.
மேலும், சில கிராமங்களில் கிறிஸ்தவர்களுக்கு ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை தர மறுக்கிறார்கள் எனவும், வனப் பொருட்களைச் சேகரிப்பதில் தடை செய்கிறார்கள் எனவும் ஜகதல்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கூறுகிறார். அந்தப் பகுதியில் இருக்கும் கிறிஸ்தவர்களுக்காக வாதாடும் அவர், அங்கே ஒரு குடும்பம் தனது சொந்தப் பயிர்களைக்கூட அறுவடை செய்ய அனுமதிக்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மக்கள் தாங்கள் பின்பற்றும் மதம் என்ன என்று, தங்களது மதநம்பிக்கையை அரசிடம் பதிவு செய்து வைப்பதும், மதத்தின் அடிப்படையில் வேலை உட்பட அனைத்து சமூக உறவுகளும் தீர்மானிக்கப்படுவதும், இறந்த பிறகு அடக்கம் செய்யப்படுவதற்கான உரிமை கூட மதத்தின் அடிப்படையில் மறுக்கப்படுவதும் நாம் இந்தியாவில் இருக்கிறோமா அல்லது ஹிட்லரின் பாசிச ஜெர்மனியில் வசிக்கிறோமா என்ற கேள்வியை எழுப்புகிறது. மதத்தின் பெயரால் இவ்வளவு அடக்குமுறைகளையும் அங்கே ஒரு சிறு காவிக் கும்பல் மட்டும் தனித்து நின்று செய்யவில்லை. சிறுபான்மையினர் மீதான சமூகப் புறக்கணிப்பு என்பது பெரும்பான்மை இந்துக்களின் சம்மதத்துடன்தான் அங்கே நிறைவேற்றப்பட்டுள்ளது. காவி பாசிஸ்டுகளின் இந்து மதவெறிப் பிரச்சாரம் சத்தீஸ்கர் மாநிலம் முழுவதும் புற்றுநோயைப் போலப் பரவிக் கொண்டிருக்கிறது. அது மற்ற மாநிலங்களுக்கும் பரவுவதற்கு முன்னர் அதனை வேரோடு பிடுங்கியெறிய வேண்டியது மிக முக்கியமான கடமையாக நம் முன் நிற்கிறது.
- சந்திரன்
தகவல் உதவி

