எஸ்.ஐ.ஆர் எதிர்ப்பு : தி.மு.கவின் கள்ள மௌனம்!
இந்தியா ஜனநாயக நாடு என்று காட்டிக் கொள்வதற்கு மக்களின் வாக்குரிமை மட்டுமே எஞ்சியிருந்தது. அதையும் காவிப் பாசிஸ்டுகளின் தேர்தல் ஆணையம் ஒழித்துக் கட்டிவிட்டது. நாடு முழுவதும் எஸ்.ஐ.ஆர் மூலம் காவிப் பாசிஸ்டுகளின் எடுபிடியான தேர்தல் ஆணையம் 13 கோடி வாக்காளர்களை நீக்கியதை எதிர்த்து எதிர்க்கட்சிகளும், மாணவர்களும் தில்லியில் போராடி வருகின்றனர்.
காவிப் பாசிஸ்டுகளின் ஏவலாளியான ஓட்டுத் திருடன் ஞானேஷ் குமார் அறிமுகப்படுத்திய எஸ்.ஐ.ஆர் எனும் மோசடி, தேர்தல் ஆணையத்தின் அதிகாரம், அதன் சுயேச்சைத் தன்மை, நடுநிலைத் தன்மை போன்ற பிம்பங்களை நாட்டு மக்களிடையே சுக்கு நூறாக நொறுக்கியுள்ளது.
எஸ்.ஐ.ஆர் எனும் காவிப் பாசிஸ்டுகளின் பாசிசத் திட்டத்தின் தன்மை அம்பலமாகி, அம்மணமாகி நிற்பதை நாடே காண்கிறது.
ஓட்டுத் திருடன் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரியும், தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்யக் கோரியும் தில்லியில் மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
தமிழ்நாட்டில் மட்டும் எஸ்.ஐ.ஆர் மூலம் சுமார் 74 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளும் மாணவர்களும் எஸ்.ஐ.ஆர்-க்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் போது, பாசிச எதிர்ப்பில் சூரப்புலியென தன்னை மார்தட்டிக் கொள்ளும் தி.மு.க.வோ தற்போது வரை கள்ள மௌனம் சாதித்து வருகிறது.
தமிழகத்தில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, திராவிடம் செழித்து வளர்ந்த மண்ணில் மதவாத பாசிச சக்தியான பா.ஜ.கவை காலூன்ற அனுமதிக்க மாட்டோம் என திமுகவும் அதன் தலைவரான மு.க.ஸ்டாலினும் பிரச்சாரம் செய்தனர்.
சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் பா.ஜ.க. கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதாவை தி.மு.க. தீயிட்டுக் கொளுத்தி தனது எதிர்ப்பை பதிவு செய்தது. இதன் மூலம் பாசிச சக்திகளின் எதிர்ப்பில் திமுகவினரே உறுதியான நிலையெடுப்பவர்கள் என்று உரிமை கொண்டாடினர். பாசிச எதிர்ப்பு என்கிற இலட்சியத்தை திமுக நிச்சயம் சாதிக்கும் என்று வாய்ச்சவடால்கள் அடித்தனர்.
கடந்த 2024 ஆம் ஆண்டில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டில் பேசிய உதயநிதி, பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்த திமுக இளைஞர் படை தயார் என்றார்.
திமுகவின் தலைவரான மு.க.ஸ்டாலினோ, நான் பா.ஜ.கவின் பாசிசத்திற்கு எதிராகப் போராடும் தமிழ்நாட்டின் சிப்பாய் என்றார்.
இதுமட்டுமில்லாமல் புரட்சியாளர்கள், அறிஞர்கள் என்று தம்மைக் கருதிக் கொள்பவர்களும் தி.மு.கவையும் அதன் தலைவரான மு.க.ஸ்டாலினையும் பாசிச சக்திகளை வீழ்த்த வல்ல சூரப்புலி என ஏற்றிப் போற்றினர். தி.மு.க. தலைமையிலான கூட்டணியே பாசிச சக்திகளை வீழ்த்தவல்லது என வேடங்கட்டி, ஒளிவட்டம் போட்டு, துதிபாடிய முன்னாள் புரட்சியாளர்கள் கூட்டம், தற்போது எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக தி.மு.க. அமைதி காப்பதை விமர்சிக்க திராணியில்லாமல், தங்களுக்கு இதில் சம்பந்தமே இல்லாதது போல அமைதி காக்கின்றனர்.
எஸ்.ஐ.ஆர் மீதான தி.மு.கவின் கள்ள மௌனத்தை எதிர்த்து வினா எழுப்பினால் தாங்கள் இன்னும் பாசிச எதிர்ப்பில் சூரப்புலியே என்று திமுக தலைமைக் கழகம் முரசொலி (13-10-26) வாயிலாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
“தமிழ்நாட்டில் SIR–ஆல் மக்களின் வாக்குரிமை பறிபோகாமல் இருக்கத் தங்களால் இயன்றவரை தி.மு.க.வினர் பாடுபட்டனர். படிவங்களை நிரப்பிச் சமர்ப்பிக்க மக்களுக்கு உதவினர். எனினும், வரைவு வாக்காளர் பட்டியலிலும் பின்னர் இறுதி வாக்காளர் பட்டியலிலும் பலரது பெயர்கள் இடம்பெறாமல் போனது அனைவரும் அறிந்த உண்மை.”
…”ஞானேஷ் குமார் அவர்களைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் இருந்து முதல் ஆளாக அறிக்கை விட்டவர் எங்கள் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள். தொடர்ந்து இடைத்தேர்தல் பரப்புரைகளிலும் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசினார். அதுமட்டுமின்றி, கடந்த ஏப்ரல் மாதமே, ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் சார்பில் அளிக்கப்பட்ட நோட்டீஸிலும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.”
திமுகவின் கள்ள மௌனத்தை எதிர்த்து கேள்வி கேட்பவர்களுக்கு இப்படி ஒரு அருளுரையை வழங்கியிருக்கிறது முரசொலி. ஆஹா என்ன ஒரு பாசிச எதிர்ப்பு!
மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆர் நடைமுறையில் இருந்த போதே மம்தா மக்களை திரட்டி வீதியில் இறங்கிப் போராடினார். எஸ்.ஐ.ஆருக்கு எதிராக நீதிமன்றத்தில் அவரே வாதாடினார். எஸ்.ஐ.ஆர் நடைமுறையால் பாதிக்கப்பட்ட மக்களையும், மன உளைச்சல் மற்றும் தற்கொலை செய்து கொண்ட பி.எல்.ஓ.க்களின் குடும்பங்களையும் தில்லிக்கே கூட்டி வந்து போராட்டம் நடத்தினார்.
ஆனால் திமுகவோ படிவங்களை நிரப்பி மக்களுக்கு உதவியதையும், அறிக்கை விட்டதையும், கையெழுத்து போட்டதையும் பாசிச எதிர்ப்பு என காட்டிக் கொள்கிறது.
திமுகவை பொறுத்த வரை மாநில அரசியலுக்கு ஏற்ப இந்தி எதிர்ப்பு, தமிழ் மொழி, திராவிடம், மாநிலத்தில் சுயாட்சி என வாய்ச்சவடால் அடிப்பது வேறு; காவிப் பாசிஸ்டுகளின் எஸ்.ஐ.ஆரை எதிர்ப்பது வேறு போலும்!
திமுகவில் உள்ள 20 மக்களைவை மற்றும் 8 மாநிலங்களவை உறுப்பினர்களை கொண்டு தில்லி போராட்டத்தில் கலந்து கொள்ள வக்கற்ற இப்பாசிச எதிர்ப்பு சூரப்புலிகளோ, இண்டியா கூட்டணியிலிருந்து தி.மு.க. தற்போது வெளியேறி இருப்பதால் தில்லி போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என சாக்குப் போக்கு சொல்லி தப்பிக்க முயல்கின்றனர்.
இண்டியா கூட்டணிக்கு தலைமை வகிக்கும் காங்கிரசு கட்சி, மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் திரிணாமுல் காங்கிரசு மற்றும் சி.பி.ஐ.(எம்)யை எதிர்த்தே சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டது. ஆனாலும் மம்தாவும், பினராயி விஜயனும் தில்லி எஸ்.ஐ.ஆர் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை பதிவு செய்கிறார்கள்.
தமிழக சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு, காவிகளால் அமல்படுத்தப்பட்ட FCRA போன்ற கொடிய சட்டங்கள், த.வெ.க. அரசின் இந்துத்துவ நிலைப்பாடுகளுக்கு எதிராக திமுக மக்களை அணிதிரட்டி வீதியில் இறங்கி முடியாமல் வெறுமனே அறிக்கைகளோடு நின்று கொள்கிறது. இதையே தனது பாசிச எதிர்ப்பின் கடமையாக காட்டிக் கொள்கிறது.
தமிழ்நாட்டில் மூலை முடுக்கெல்லாம் கட்டமைப்பை பலப்படுத்தியிருக்கும் திமுக, காவிப் பாசிஸ்டுகளின் எஸ்.ஐ.ஆரின் மோசடிகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி ஒரு மாபெரும் போராட்டத்தை தமிழகத்தில் நடத்தியிருக்கலாம். ஆனால் இதுவரை இதற்கான முன்முயற்சிகள் கூட திமுகவால் எடுக்கப்படவில்லை.
த.வெ.க.வின் மனிதவள மேம்பாட்டு அமைச்சரான கில்லி சரத்தின் காணொலி வெளிவந்ததையொட்டி, அதற்கு எதிராக மாவட்டந்தோறும் போலீஸின் முன் அனுமதியின்றி, திமுகவின் மாணவர் அமைப்பு போராட்டம் நடத்தி நூற்றுக்கணக்கோர் கைது செய்யப்பட்டனர். தனது கட்டமைப்பின் பலத்தை ஒரு அமைச்சருக்கு எதிராக இறக்கிய திமுகவின் தலைமை, காவிப் பாசிஸ்டுகளின் எஸ்.ஐ.ஆரின் மோசடிக்கு எதிராக மக்களை அணி திரட்டி ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்த முடியாமல் இன்னும் அமைதி காத்து வருகிறது.
திமுகவின் தலைமையின் கீழ் தான் பாசிச சக்திகளை வீழ்த்த முடியும் என்ற மாயை வெறும் முற்போக்கு சவடால்களால் மூடி மறைக்கப்பட்டது என்பதையே எஸ்.ஐ.ஆர் எதிர்ப்பு மீதான திமுகவின் கள்ள மௌனம் தற்போது வெளிக் கொண்டு வந்திருக்கிறது. பாசிச எதிர்ப்பில் இது போன்ற முற்போக்கு சவடால்கள் மிகவும் அபாயகரமானது.
• தாமிரபரணி
