பிரான்ஸ்: கல்வி உரிமைக்காகப் போராடும் மாணவர்கள்

அக்டோபர் 19, 2026
கல்விக்கான நிதியைப் புறக்கணித்து, இராணுவ வலிமைக்கு முன்னுரிமை அளிக்கும் பிரான்ஸ் அரசு, கல்வி உரிமைக்காகப் போராடும் மாணவர்களை அடக்குமுறையால் ஒடுக்குகிறது.

கல்வி என்பது ஒரு தனிமனிதனின் வாழ்க்கையை உயர்த்துவதற்கான வழிமுறை மட்டுமல்ல; ஒரு சமூகத்தின் அறிவியல் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், சமத்துவம், ஜனநாயக உணர்வு ஆகியவற்றுக்கான அடித்தளமாகும். ஆனால், அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கிறதா, கல்வி நிறுவனங்களுக்குப் போதிய நிதி ஒதுக்கப்படுகிறதா, ஆசிரியர் பற்றாக்குறை தீர்க்கப்படுகிறதா என்றால், பல நாடுகளில் இன்றும் இவை கேள்விக்குறியாகவே உள்ளன.

இதற்குச் சமீபத்திய உதாரணம் பிரான்ஸ் மாணவர்களின் போராட்டமாகும். 2026 செப்டம்பர் 21 அன்று தொடங்கிய இப்போராட்டம், ஆசிரியர் பற்றாக்குறை, நெரிசலான வகுப்பறைகள், போதிய கல்வி வசதிகள் இல்லாமை, உயர்கல்விக்கான வாய்ப்புகள் குறித்த பிரச்சினைகள் ஆகியவற்றை முன்வைத்து நாடு முழுவதும் பரவியது. மாணவர்களுடன் பெற்றோர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இணைந்து போராடி வருகின்றனர்.

இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், “பெற்றோர்கள் பணம் கட்டிப் படிக்க வைக்கும்போது, படிப்பில் கவனம் செலுத்தாமல் போராட்டம் எதற்கு? ஒழுங்காகப் படித்து, வேலைக்குச் சேர்ந்து, சம்பாதிப்பதுதானே எதிர்காலத்திற்கு நல்லது?” என்று குறை கூறுபவர்கள் அதிகம்.

மாணவர்களின் போராட்டத்தை அவர்களுடைய எதிர்காலத்திற்கு இடையூறாகப் பார்க்கும் இந்த மனப்பான்மை மாற வேண்டும். ஏனெனில், கல்விக்கான நிதி ஒதுக்கீடு, ஆசிரியர் நியமனம், கல்வி வசதிகள், உயர்கல்வி வாய்ப்புகள் போன்றவை தனிப்பட்ட மாணவர்களின் பிரச்சினைகள் மட்டுமல்ல; ஒட்டுமொத்த சமூகத்தின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் அடிப்படைப் பிரச்சினைகளாகும். இவற்றுக்காகக் குரல் கொடுப்பது படிப்பைப் புறக்கணிப்பதற்காக அல்ல; மாறாக தரமான, சமத்துவமான கல்வியை உறுதிப்படுத்துவதற்கானதாகும்.

எனவே பிரான்ஸ் மாணவர்களின் போராட்டம் எழுப்பும் கேள்விகள், பிரான்ஸின் எல்லைகளுக்குள் மட்டுமே அடங்கிவிடுபவை அல்ல. உலகின் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள், ஜனநாயக சக்திகள் என அனைவருக்கும் அவை பல முக்கியமான படிப்பினைகளை கொடுத்துள்ளன.

கல்வி கொடுப்பது அரசின் கடமை:

ஒரு சமூகத்தின் அரசியல், சட்டம், கல்வி, பண்பாடு உள்ளிட்ட அமைப்புகள் அதன் பொருளாதார அடித்தளத்துடன் இணைந்திருப்பதை கார்ல் மார்க்சும், ஃபிரெட்ரிக் எங்கெல்சும் விளக்குகின்றனர். அதாவது முதலாளித்துவச் சமூகத்தில் உற்பத்திச் சாதனங்களின் உடைமை, செல்வத்தின் பகிர்வு, தொழிலாளர்களின் உழைப்பு, அரசின் பொருளாதாரக் கொள்கைகள் ஆகியவற்றின் காரணமாக சமூக வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. எனவே இந்தப் பின்னணியில் தான் கல்வியையும் ஆராய வேண்டும்.

கல்வி என்பது அறிவைப் பெறுவதற்கான வாய்ப்பாக மட்டுமல்லாமல், சமூகத்தில் தனிமனிதர்கள் எந்த வகையான வேலைகளை செய்ய முடியும், அவர்களுடைய வாழ்க்கைத் தரம் எவ்வாறு இருக்கும், அடுத்த தலைமுறைக்கு என்ன வாய்ப்புகள் கிடைக்கும் என்பதையும் சேர்த்து தீர்மானிக்கும் முக்கியக் காரணியாகும்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தரமான கல்வியைப் பெறுவதற்காகப் போராட வேண்டிய நிலை உருவாகும்போது, கல்வியில் சமத்துவம் இருக்கிறதா என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. வசதியான குடும்பங்களின் குழந்தைகளுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளுக்கும், குறைந்த வருமானமுள்ள குடும்பங்களின் குழந்தைகளுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளுக்கும் இடையே வேறுபாடுகள் காணப்படும்போது, அந்த வேறுபாடுகளுக்கான சமூகக் காரணங்களை ஆராய வேண்டியது அவசியமாகிறது.

அனைத்து சமூகப் பிரச்சினைகளும் தானாகத் தீர்ந்துவிடுவதில்லை. பாதிக்கப்படும் மக்கள் தங்கள் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, ஒன்றிணைந்து குரல் கொடுத்து, பரந்த சமூக ஆதரவைப் பெறும்போதுதான் அரசியல் மாற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகின்றன. எனவே, பிரான்ஸ் மாணவர்களின் போராட்டத்தையும் இந்த அடிப்படையிலேயே பார்க்க வேண்டும்.

பிரான்ஸில் பல ஆண்டுகளாகப் பொதுக் கல்வி வழங்கப்பட்டு வந்தாலும், இன்று ஆசிரியர் பற்றாக்குறை, வகுப்பறை வசதியின்மை, கல்விக்குப் போதிய நிதி ஒதுக்கப்படாமை போன்ற பிரச்சினைகளை மாணவர்கள் தங்களின் பொதுவான தேவைகளாக உணர்ந்து ஒன்றிணையும்போது, அது கூட்டுப் போராட்டமாக மாறுகிறது. அந்தப் போராட்டத்தில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், தொழிலாளர்கள், சமூக அமைப்புகள் எனப் பலரும் இணையும்போது, அதன் சமூக ஆதரவும் வலிமையும் அதிகரிக்கின்றன.

எனவே, ஒரு போராட்டத்தின் முக்கியத்துவம் அதன் அளவில் மட்டுமல்ல; அரசியல் புரிதல், அமைப்புத் திறன், ஜனநாயகப் பங்கேற்பு, தெளிவான கோரிக்கைகள், மக்கள் ஆதரவு ஆகியவற்றிலும் அடங்கியுள்ளது. மாணவர்களின் உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதோடு, கல்வி அனைவருக்கும் சமமாகக் கிடைப்பதும் இத்தகைய போராட்டங்களின் நோக்கமாக இருக்க வேண்டும்.

அதேபோல் ஒரு நாட்டின் வரவு செலவுத் திட்டம், அரசு எந்தத் துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. ஆசிரியர் நியமனம், கல்வி நிறுவனங்களின் பராமரிப்பு, நூலகங்கள், ஆய்வகங்கள், மாணவர் உதவித்தொகைகள் எனக் கல்விக்குத் தேவையான நிதியை ஒதுக்குவது அரசின் முக்கியக் கடமையாகும்.

கடன் சுமை, பாதுகாப்புச் செலவுகள் உள்ளிட்ட பிற தேவைகளுக்கு நிதி ஒதுக்கும்போது, கல்விக்கு எந்த அளவு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்பதும் முக்கியமானது. சமூகத்தின் செல்வத்தை உருவாக்கும் உழைக்கும் மக்களுக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் தரமான கல்வி சமமாகக் கிடைக்கிறதா என்பதன் அடிப்படையிலேயே அரசின் நிதிக் கொள்கைகளை மதிப்பிட முடியும். இது பிரான்ஸுக்கு மட்டுமல்ல; இந்தியா உள்ளிட்ட உலகின் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்.

இராணுவ செலவுகளுக்கு முன்னுரிமை:

பிரான்ஸ் அரசு 2024-இல் கல்விக்காக €197.1 பில்லியன் செலவிட்ட நிலையில், 2024–2030 காலகட்டத்தில் இராணுவத்தை வலுப்படுத்த €413.3 பில்லியன் ஒதுக்கத் திட்டமிட்டுள்ளது. மேலும், 2017 முதல் 2025 வரை இராணுவ வரவுசெலவுத் திட்டம் 56% அதிகரித்துள்ளது. பிரான்ஸ் அரசின் அதிகாரபூர்வத் தகவலின்படி, 2022-இல் உக்ரைனுக்கு €1.7 பில்லியன் மதிப்பிலான இராணுவ உதவியும், 2023-இல் €2.1 பில்லியன் உதவியும் வழங்கியது. இதுவே 2024-இல் மேலும் €3 பில்லியன் வரை உதவியுள்ளது.

ஆசிரியர் பற்றாக்குறை, விடுப்பில் செல்லும் ஆசிரியர்களுக்குப் பதிலாக மாற்று ஆசிரியர்கள் நியமிக்கப்படாமை, ஒரு வகுப்பில் 35 மாணவர்கள் வரை படிக்கும் அவலநிலை, பழைய பள்ளிக் கட்டிடங்கள் போன்றவை கல்வியின் தரத்தைப் பாதிக்கின்றன.

பிரான்ஸில் உயர்நிலைப் பள்ளிக் கட்டடங்களின் சராசரி வயது 61 ஆண்டுகளாகவும், தொழிற்கல்வி உயர்நிலைப் பள்ளிக் கட்டடங்களின் சராசரி வயது 71 ஆண்டுகளாகவும் உள்ளது. மேலும், 2015-க்குப் பிறகு மொத்தப் பள்ளிக் கட்டடங்களில் 15% மட்டுமே புதிதாகக் கட்டப்பட்டுள்ளன அல்லது புதுப்பிக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஆசிரியர் பற்றாக்குறையைச் சரிசெய்வதற்காக அறிவிக்கப்பட்ட 3,000 மாற்று ஆசிரியர்களை நியமிக்கும் திட்டத்திலும், அக்டோபர் 13 நிலவரப்படி இலக்கில் 35% மட்டுமே நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இந்தத் தரவுகள், பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்ப்பதிலும் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

OECD அமைப்பின் Education at a Glance 2026 அறிக்கையின்படி, தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரையிலான கல்வி நிறுவனங்களுக்கான அரசுச் செலவினம், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) விகிதத்தில், பிரான்ஸில் 2015-இல் 4.8% ஆக இருந்தது. அதுவே 2023-இல் 4.6% ஆகக் குறைக்கப்பட்டது. இது கல்விக்கான அரசுச் செலவினத்தின் ஒப்பீட்டு விகிதம் குறைந்திருப்பதைக் காட்டுகிறது.

இராணுவத்திற்காக ஒதுக்கப்படும் நிதியில் ஒரு பகுதியைக் கல்விக்குத் திருப்பிவிட்டால், ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்கவும், பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை உருவாக்கவும் முடியும். நாட்டின் பாதுகாப்பு அவசியமானதுதான்; அதேவேளையில், மக்களின் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு ஆகிய அடிப்படைத் தேவைகளுக்கும் அரசு சமமான முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இராணுவ வலிமையைப் பெருக்குவதற்கு முன்னுரிமை அளித்து, மக்களின் அறிவையும் திறனையும் வளர்ப்பதற்குப் போதிய நிதி ஒதுக்காமல் இருப்பது நாட்டின் நீண்டகால வளர்ச்சியைப் பாதிக்கும் என்பது திண்ணம்.

அரசின் அடக்குமுறை:

பிரான்ஸில் மாணவர் போராட்டங்களை ஒடுக்க அரசு காவல்துறையின் மூலம் கடுமையான அடக்குமுறையை ஏவிவிட்டுள்ளது. இதன் காரணமாக பல நூறு இளம் போராட்டக்காரர்கள் காயமடைந்ததுடன், சிலர் கண்களை இழந்துள்ளனர்; மற்றவர்கள் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். பாரிஸ் பகுதியில் 14 வயது சிறுவனின் முகத்தில் மிக அருகில் கண்ணீர்ப் புகைக் குண்டு சுடப்பட்டதில் அவரது தாடை நொறுங்கி, பற்கள் உடைந்துள்ளன, டூர்ஸில் 16 வயது சிறுவன் இரப்பர் குண்டால் ஒரு கண்ணை இழந்திருக்கிறான். மேலும், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் சுமார் 1,800 பேர் மீது மட்டுமே குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து விமர்சனங்கள் எழுந்தபோதும், அரசு அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, இளைஞர்களுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை மேலும் கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

இதற்கிடையில், அரசு சில உயர்கல்விக் கட்டண உயர்வு முன்மொழிவுகளைக் கைவிட்டதுடன், மாணவர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், குறைகளைப் பதிவு செய்ய இணையதளம் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களை ஏற்பாடு செய்யவும் முன்வந்தது. இவையெல்லாம் மாணவர்களின் அடிப்படைக் கோரிக்கைகளுக்குத் தீர்வளிக்காமல் ஒரு சில சலுகைகளை வழங்குவதன் மூலம் மாணவர்களின் போராட்டத்தை பின்வாங்க செய்வது என்ற தந்திரத்தைப் பயன்படுத்தியுள்ளது. மேலும், போராட்டங்களைத் தீவிர இடதுசாரிக் கட்சியான லா பிரான்ஸ் இன்சௌமிஸ் (La France Insoumise) தூண்டிவிடுவதாகக் குற்றம்சாட்டி, போராட்டத்தின் பின்னணியைத் திசைதிருப்பும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் ஜீன்-லூக் மெலென்சோன் உள்ளிட்டோர் போராட்டக்காரர்களைப் பாதுகாக்கவும், காவல்துறையின் வன்முறையைக் கண்டிக்கவும் செய்தனர். ஆனால், பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு நாடாளுமன்றத்தில் காவல்துறை வன்முறை என்ற குற்றச்சாட்டை மறுத்ததுடன், காவல்துறையை இனவெறி கொண்டதாகச் சித்தரிப்பதாக அக்கட்சியைக் குற்றம்சாட்டினார். இவ்வாறு, மாணவர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பதைவிட, போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதிலும் அவற்றின் பின்னணியை அரசியல் நோக்கில் சித்தரிப்பதிலும் பிரான்ஸ் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரம்:

ஆதிக்க சக்திகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள், மாணவர் இயக்கத்தின் உண்மையான கோரிக்கைகளை எடுத்துரைக்காமல், அதன் மீது அவதூறு பரப்புவதிலும் நிகழ்வுகளைத் திரித்துக் காட்டுவதிலும் அதிக கவனம் செலுத்தியது. உதாரணமாக, ஊடகங்களைக் கண்காணிக்கும் அமைப்பான அக்ரிமெட் (Acrimed), பிரான்ஸின் முக்கிய அரசு தொலைக்காட்சியான பிரான்ஸ் 2 (France 2) வெளியிட்ட இரவு நேரச் செய்திகளை ஆய்வு செய்தது. அதில், செய்தி ஒளிபரப்பில் 75% நேரம் போராட்டக்காரர்களால் ஏற்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சேதங்களைப் பற்றிப் பேசுவதற்கும், வெறும் 8% நேரம் மட்டுமே போராட்ட இயக்கத்தின் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கும் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நேர ஒதுக்கீடு, மாணவர்களின் கோரிக்கைகள், போராட்டத்திற்கான அடிப்படைக் காரணங்கள் ஆகியவற்றைவிட, போராட்டத்தால் ஏற்பட்டதாகக் கூறப்படும் பாதிப்புகளுக்கு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளன.

போராட்டத்தை ஒடுக்குவது தீர்வல்ல:

கல்வி வழங்குவதும், அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதும் அரசின் அடிப்படைக் கடமையாகும். ஐ.நா. மனித உரிமைகள் பிரகடனத்தின்படி, அடிப்படைக் கல்வி இலவசமாகவும் கட்டாயமாகவும் இருக்க வேண்டும்; உயர்கல்வியிலும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி, இலவசக் கல்வியைப் படிப்படியாக விரிவுபடுத்த வேண்டும். ஆனால், கல்வி, சுகாதாரம் போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளைப் புறக்கணித்து, இராணுவச் செலவுகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், கல்வி உரிமைக்காகப் போராடும் மாணவர்களை அடக்குமுறையால் ஒடுக்குவதும், அவர்களின் கோரிக்கைகளை ஊடகங்கள் மூலம் திரித்துக் காட்டுவதும் பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் தொடர்கின்றன. மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அவர்களின் குரலை ஒடுக்குவது பிரச்சினைகளைத் தீர்க்காது.

வளர்ந்த நாடுகளில் மாணவர்களின் பிரச்சினைகளைத் தங்களுடைய பிரச்சினைகளாகக் கருதி, பெற்றோர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் எனப் பலரும் ஒன்றிணைந்து போராடுவதில் இருந்து நாமும் கற்றுக்கொள்ள வேண்டும். மாணவர்கள் ஏன் போராடுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளாமல் அவர்களைக் குறை கூறுவதற்குப் பதிலாக, அவர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். கல்வி என்பது தனிமனிதனின் முன்னேற்றத்திற்கான ஏணி மட்டுமல்ல; சமத்துவமான, அறிவார்ந்த ஜனநாயகச் சமூகத்தை உருவாக்குவதற்கான அடித்தளமும் ஆகும். அந்தக் கல்வியைப் பாதுகாக்க மாணவர்கள் குரல் கொடுக்கும்போது, அவர்களுடன் இணைந்து குரல் கொடுப்பதே பொறுப்புள்ள சமூகத்தின் அடையாளம். இதுவே பிரான்ஸ் மாணவர்களின் போராட்டம் நமக்கு உணர்த்தும் முக்கியமான பாடமாகும்.

  • மகேஷ்

செய்தி ஆதாரம்:
https://www.newindianexpress.com/world/2026/Oct/13/what-to-know-about-frances-high-school-student-protests
https://theekkathir.in/news/france-student-protests-education-infrastructure-reforms
https://tamil.newsbytesapp.com/news/world/france-faces-fury-over-police-brutality-on-student-protesters-teenagers-suffer-severe-injuries/story
https://minnambalam.com/france-student-protests-police-repression-media-lies/

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன