ஷாக் அடிக்கும் மின்கட்டணம்: பற்றாக்குறையைச் சமாளிக்கவா, முதலாளியின் இலாபத்திற்கா?

அக்டோபர் 19, 2026
பொதுவாக மின்சாரம் தான் ஷாக் அடிக்கும்; தமிழ்நாட்டு மக்களுக்கோ, மின்சாரக் கட்டண உயர்வும், மின்சாரக் கொள்முதல் விலையும் மின்சாரத்தைவிடப் பெரிய ஷாக்காக மாறியிருக்கின்றன.

சில தினங்களுக்கு முன்பு, மின்பற்றாக்குறையை ஈடுகட்ட யூனிட்டுக்கு ரூ.35 வரை கொடுத்து, தனியார் மின்சார உற்பத்தியாளர்களிடமிருந்து 1,500 மெகாவாட் மின்சாரம் வாங்கப்போவதாக மின்சார வாரியம் அறிவித்தது. அதன் அறிக்கையில், அக்டோபர் 12 முதல் 31 ஆம் தேதி வரை 1,500 மெகாவாட் மின்சாரத்தைத் தொடர்ந்து வாங்குவதற்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.31.99 முதல் ரூ.34.49 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலான உச்சநேரத் தேவைக்காக 2,000 மெகாவாட் மின்சாரம் வாங்குவதற்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.33.37 முதல் ரூ.37 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

இதுவரையில்லாத அளவிற்கு அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்படுவதால், அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மின்சாரத் தேவை அதிகரித்துள்ளதாகவும், அதேவேளையில், மத்திய மின் தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய மின்சாரத்தில் பற்றாக்குறை ஏற்பட்டதுடன், காற்றாலை மின் உற்பத்தியும் எதிர்பார்த்த அளவில் இல்லாததால், மின்சாரத் தேவையைச் சமாளிப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனால், குறுகிய காலத் தேவையைப் பூர்த்தி செய்ய, எரிவாயு மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருப்பதாக மேலோட்டமான விளக்கத்தையும் அவர் அளித்துள்ளார்.

இந்தக் கொள்முதலினால் நாளொன்றுக்கு ஐந்து கோடி ரூபாய் என, மொத்தமாக 100 கோடி ரூபாய் வரை கூடுதல் செலவாகும். ஏற்கெனவே 2.7 இலட்சம் கோடி ரூபாய் கடனில் இருக்கும் மின்சார வாரியத்திற்கு இது கூடுதல் சுமையே. இச்சுமையை, ஏற்கெனவே பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணங்களால் செய்வதறியாது தவிக்கும் மக்களின் தலையில்தான் மேலும் இறக்கப்போகிறார்கள் என்பது உறுதி.

மழை தொடங்கிவிட்டதால் மின்சாரத் தேவை 1,000 மெகாவாட் குறைந்துள்ளது. எனவே, 300 மெகாவாட் மின்சாரம் மட்டுமே வாங்கப்போகிறோம் என்று டெண்டர் அறிவித்த பத்து நாட்களுக்குள்ளேயே மின்சாரத் தேவை குறைந்துவிட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் கூறுகிறார். ஏப்ரலில் இருந்ததைவிடச் செப்டம்பரில் மின்சாரத் தேவை குறைவாகவே இருந்தும், தமிழகமெங்கும் பரவலான மின்சாரத் துண்டிப்பும், அதையொட்டிய மக்கள் போராட்டங்களும் நடந்து கொண்டுதான் இருந்தன. ஏற்கெனவே, மாலை நேர மின்சாரத் தேவையைச் சமாளிக்க, செப்டம்பர் 15 முதல் கூடுதலாக 2,500 மெகாவாட் மின்சாரம் வாங்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வருகின்றன. இவை அனைத்துமே மின்சாரப் பற்றாக்குறை குறித்த முன்னுக்குப் பின் முரணான செய்திகளாகவே உள்ளன. உண்மையிலேயே தமிழகத்தில் மின்சாரப் பற்றாக்குறை உள்ளதா? இல்லை என்கிறார் மின்பொறியாளர் சா. காந்தி.

மின்சாரத் தட்டுபாடு உண்மையா அல்லது செயற்கையானதா?

தமிழகத்தில் கோடைகாலத்தில் (ஏப்ரல்) மிக அதிகமாக 21,300 மெகாவாட் மின்சாரப் பயன்பாடு இருந்ததாகவும், அது அக்டோபரில் 19,500 மெகாவாட்டாக உள்ளதாகவும் மின்வாரியம் கூறுகிறது. இந்த மின்தேவைகள் தமிழக அரசின் சுய உற்பத்தி, தனியாரிடமிருந்து நீண்டகால ஒப்பந்தங்கள் (15 வருடங்கள்) மற்றும் குறுகியகால ஒப்பந்தங்கள் (5 வருடங்கள்) ஆகியவற்றின் மூலம் ஈடுகட்டப்படுகின்றன.

தமிழக அரசிற்குச் சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து 5,780 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஆனால், தற்போது 3,530 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள 2,250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவில்லை.

நீண்டகால ஒப்பந்தத்தின் மூலம் கொள்முதல் செய்வதற்காகப் போடப்பட்டுள்ள 2,830 மெகாவாட்டில், 2,000 மெகாவாட்டை மட்டுமே மின்சார வாரியம் வாங்குகிறது. மீதமுள்ள 830 மெகாவாட்டை வாங்குவதில்லை.

அதேபோல, இடைக்கால ஒப்பந்தத்தின் மூலம் 2,814 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்குப் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில், 1,500 மெகாவாட்டை மட்டுமே வாங்குகிறது. மீதமுள்ள 1,314 மெகாவாட்டை வாங்கவில்லை.

தனியாரிடமிருந்து வாங்காமல் இருக்கும் மின்சாரத்திற்கும் மின்சார வாரியம் நிலைக்கட்டணத்தைச் செலுத்தியாக வேண்டும். அந்த வகையில், மொத்தம் 2,144 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்தம் போட்டும், அதை வாங்காமல் 5,617 கோடி ரூபாயை நிலைக்கட்டணமாக மின்சார வாரியம் செலுத்தி வருகிறது.

மேலும், சொந்த மின் உற்பத்தியில் உற்பத்தி செய்யப்படாமல் இருக்கும் 2,250 மெகாவாட் மற்றும் தனியாரிடமிருந்து வரவேண்டிய 2,144 மெகாவாட் என மொத்தம் 4,394 மெகாவாட் மின்சாரத்தை முறையாகப் பெற்றாலே, மின்சாரப் பற்றாக்குறையைச் சரிசெய்வதோடு மட்டுமல்லாமல், உபரி மின்சாரத்தை விற்று வருவாயும் ஈட்டியிருக்க முடியும்.

எனவே, மின்சாரப் பற்றாக்குறை என்பதே செயற்கையானதுதான்.

மின்சாரம் தனியார்மயமே அடிப்படைக் காரணம்

சொந்த மின் உற்பத்தியை ஏன் அதிகரிக்கவில்லை? பல ஆயிரம் கோடி ரூபாயை நிலைக்கட்டணமாகத் தண்டமாக ஏன் தனியாருக்குச் செலுத்த வேண்டும்? கையிருப்பைச் சரியாகப் பயன்படுத்தாமல், கொள்ளை விலைக்கு ஏன் தனியாரிடம் கூடுதல் மின்சாரம் வாங்க வேண்டும்? என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல், “ஜப்பானில் ஜாக்கிஜான் கூப்பிட்டாங்க, அமெரிக்காவுல மைக்கேல் ஜாக்சன் கூப்பிட்டாங்க” என்ற பாணியில், காற்று ஏமாற்றிவிட்டது, எல்-நினோவால் வெப்பம் அதிகமாகிவிட்டது என்று காதில் பூ சுற்றுகிறார் அமைச்சர் நிர்மல் குமார்.

தற்போது தவெக-வை விமர்சிக்கும் திமுகவின் ஆட்சியிலும், சொந்த மின் உற்பத்தியை முழுமையாகப் பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டிருந்தனர். தனியாரிடமிருந்து வாங்காத மின்சாரத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாயை நிலைக்கட்டணமாகச் செலுத்தியுள்ளனர். அவசரத் தேவைக்காக ஒரு யூனிட் மின்சாரத்தை 20 ரூபாய் கொடுத்தும் வாங்கியுள்ளனர்.

முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியோ, “தேவையறிந்து முன்கூட்டியே திட்டமிட்டிருந்தால் குறைந்த விலைக்கு மின்சாரம் வாங்கியிருக்கலாம். சந்தையில் மிகக் குறுகிய கால மின்சாரத் தேவைக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். இது தவெக-வின் நிர்வாகத் திறமையின்மையைக் காட்டுகிறது” என்று விமர்சித்திருக்கிறார்.

தவெக-வின் நிர்வாகத் திறமையின்மை ஒருபுறம் இருக்கட்டும். திருவிழாக் காலங்களில் தனியார் பேருந்துகள் மற்றும் விமானக் கட்டணங்கள் கட்டுப்பாடுகளின்றிப் பல மடங்கு உயர்வதைப் போல, மின்சாரத்தின் விலையும் ஏறுகிறது. இதற்குக் காரணமான மின்சாரத் தனியார்மயம் குறித்து இரண்டு கட்சிகளும் ஏன் வாய்திறப்பதில்லை?   

காங்கிரசோ மின்சார உற்பத்தியையும், அதற்கான நிலக்கரிச் சுரங்கங்களையும் தனியாருக்குத் தாரைவார்த்தது. மோடியோ மின்சாரத் தனியார்மயத்தை மேலும் தீவிரமாக்கியதோடு மட்டுமல்லாமல், அதில் அதானி நிறுவனத்திற்கே முன்னுரிமை என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்.

இதற்கு இணையாகவே மின்சார விநியோகம், மின்சாரப் பரிமாற்றம், கட்டமைப்பு முறைகள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான விதிமுறைகளும் மாற்றப்பட்டுவிட்டன. ஒரு யூனிட் மின்சாரத்தை 3 ரூபாய்க்கு அரசே உற்பத்தி செய்யக்கூடிய நிலையில், வெளிச்சந்தையில் தனியாரிடமிருந்து 6 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை அதிக விலைக்கு வாங்குகின்றனர்.

முதலாளிகள் நிர்ணயிக்கின்ற இந்தக் கூடுதல் விலையே மின்கட்டண உயர்வுக்கும், மின்சார வாரியத்தின் கடனுக்கும், அதற்கான வட்டிக்கும் பிரதானக் காரணமாக உள்ளது. இது அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாமல் இல்லை. இருவரும் கூட்டுச் சேர்ந்துகொண்டுதான் இத்திட்டத்தை அமல்படுத்துகிறார்கள்.

இதில் தவெக தற்போது ஒருபடி மேலே சென்றிருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

தீவிர தயார்மயத்தை அமல்படுத்தும் தவெக

  1. எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கம், 1,600 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட தூத்துக்குடி அனல்மின் நிலையத் திட்டம், உடன்குடி அனல்மின் நிலையத்தின் நிலை II மற்றும் நிலை III ஆகியவற்றின் விரிவாக்கம் அனைத்தும் அரசு–தனியார் கூட்டின் (PPP Model) அடிப்படையில் செய்யப்படும் என தவெக அரசு அறிவித்திருக்கிறது.
  2. ரூ.4,000 கோடி மதிப்பில், கோவையிலிருந்து அரியலூர் வரை 765 கிலோவோல்ட் திறன் கொண்ட மின்சாரம் கடத்தும் கட்டமைப்பை PPP Model-இல் செயல்படுத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
  3. சென்னை மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளனர். இனி மின்சாரக் கட்டணம் தேவையைப் பொறுத்தும், பயன்படுத்தும் நேரத்தைப் பொறுத்துமே நிர்ணயிக்கப்படும். இதனால் மின்சாரக் கட்டணம் பல மடங்கு அதிகரிக்கவே செய்யும்.
  4. மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 5,000 மின்சாரக் கணக்கீட்டாளர்கள் பணியிடங்களை நிரப்பாமல், ஒப்பந்த அடிப்படையில் மின்சாரக் கணக்கீட்டாளர்களை நியமிக்கப்போவதாக நிர்மல் குமார் அறிவித்துள்ளார்.

மேற்கூறிய அனைத்துமே கடந்த ஐந்து மாதங்களில் தவெக அரசு அறிவித்தவை. அமைச்சர் நிர்மல் குமார் கூறும் மின்சாரப் பற்றாக்குறைக்கு அடிப்படைக் காரணமே மின்சாரத் தனியார்மயம்தான். பற்றாக்குறையைச் சமாளிப்பதாகக் கூறி அரசு அறிவிக்கும் தீவிரமான மின்சாரத் தனியார்மய நடவடிக்கைகளால் பிரச்சினை தீரப்போவதில்லை. மாறாக, தனியார்மயத்தின் விளைவாக மின்சாரக் கட்டணமும் மின்சார வாரியத்தின் கடனும் அதிகரிக்கும்; அந்தச் சுமை மக்கள் தலையில் சுமத்தப்படும். இறுதியில், ஒட்டுமொத்த மின்சார வாரியத்தையும் தனியாரிடம் ஒப்படைக்கும் நிலையே உருவாகும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

  • மாணிக்கம்

செய்தி ஆதாரம்:

https://www.bbc.com/tamil/articles/c6y438z2008ro?fbclid=IwY2xjawU9MGtleHRuA2FlbQIxMABwZG9mAWJyaWQRMVh4c0RFbTRPNnZvM0dibVFzcnRjBmFwcF9pZBAyMjIwMzkxNzg4MjAwODkyAAEeO08BVaSSRejmQT2vW4CColTj_CxYOtTMzfC0Jt5bveBPdDDVuQAuq15MmME_aem_KcSm3yIr6Q3JQ-JvPO2HBw

https://may17kural.com/wp/why-are-there-power-cuts-in-tamilnadu-power-shortage-or-administrative-lapses/

https://industrialeconomist.com/tns-peak-power-demand-to-surpass-37000-mw-fy-2036/

https://www.hindutamil.in/news/tamilnadu/appointment-of-electricity-meter-reader-on-a-contract-basis       

https://senkanal.com/index.php/2026/08/18/tvks-budget-accelerates-privatization-2-allowing-private-sector-entry-into-electricity-transmission-infrastructure/

 

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன