வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து என்.ஜி.ஓ.-கள் நிதி வாங்கினால் தேசவிரோதம்! பாஜக வாங்கினால் தேசப்பற்றா?
வெளிநாட்டு பங்களிப்பு முறைப்படுத்தல் சட்டத்திருத்த மசோதா 2026 [FCRA-2026] தற்போது கூட்டு நாடாளுமன்றக் குழுவின் பரிசீலனையில் உள்ளது. FCRA-2010 சட்டத்தின் சரத்துக்களோடு கூடுதலாக தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் [என்.ஜி.ஓ.] பதிவை [registration] அரசு நிராகரிக்கும் பட்சத்தில், அதன் சொத்துக்களை அரசு எடுத்துக் கொள்வதற்கான அதிகாரத்தை இச்சட்டத்திருத்தம் அரசுக்கு வழங்குகிறது.
”மதமாற்றம் செய்வதற்கும் நாட்டின் வளர்ச்சி திட்டங்களை முடக்குவதற்கும் வெளிநாடுகளிலிருந்து என்.ஜி.ஓ.-கள் மூலமாக இந்தியாவிற்குள் பணம் வருகிறது. எனவே இந்நியப் பண்பாட்டைப் பாதுகாப்பதற்கும், நாட்டின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கும், தேசப்பாதுகாப்பை உத்திரவாதப்படுத்துவதற்கும் தன்னார்வ அமைப்புகளின் மீதான கண்காணிப்பைத் தீவிரமாக்க வேண்டும். அதற்கு FCRA சட்டத்தினைக் கடுமையாக்குவது அவசியம்” என்கிறது பாஜக.
மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து 22,496 என்.ஜி.ஓ.-களின் பதிவை இரத்து செய்துள்ளது. இதில் எத்தனை என்.ஜி.ஓ.-கள் மதமாற்றத்தில் ஈடுபட்டன? அரசின் திட்டத்தை முடக்குவதற்காக வெளிநாட்டிலிருந்து பணம் வாங்கிய என்.ஜி.ஓ.-கள் எவை? அதற்கான ஆதாரங்கள் என்ன? என்ற எந்த விவரங்களையும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் இன்றுவரை வெளியிடவில்லை. அவ்வாறு மதமாற்றத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால் அக்குறிப்பிட்ட என்.ஜி.ஓ. மீது நடவடிக்கை எடுப்பதற்கானப் போதிய வழிக்காட்டுதல்கள் FCRA-2010 சட்டத்திலேயே சொல்லப்பட்டுள்ளன. அதனை அமல்படுத்தாமல் மதமாற்றத்தில் ஈடுபடும் என்.ஜி.ஓ.-களின் சொத்துக்களை அரசு எடுத்துக்கொள்ளும் என்று சொல்லுவது ஏன்?
இதற்குப் பின்னால், கிருஸ்துவ அமைப்புகளையும் அவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், முதியோர்-குழந்தைகள் காப்பகங்கள் அனைத்தையும் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ் – பாஜக வின் காவி பாசிசத்திட்டமே ஒளிந்துள்ளதை யாரும் மறுக்க முடியாது. இதனை அம்பலப்படுத்தி பலரும் எழுதியுள்ளனர்.
இச்சட்டத்திருத்தத்தின் மற்றொரு நோக்கம் சிவில் சமூக அமைப்புகளை கட்டுப்படுத்துவது. மோடி ஆட்சியின் அலங்கோலங்களை அம்பலப்படுத்தும், மோடி ஆதரிக்கும் பெரும் முதலாளிகளின் தொழில் நடவடிக்கைகளினால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாகவும் செயல்படும் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் சார்ந்துள்ள என்.ஜி.ஓ.-கள் மீது நாட்டின் வளர்சிக்கு எதிராக உள்ளதாக பொய் குற்றச்சாட்டுகளைச் சொல்லி அதன் பதிவை இரத்து செய்கிறது.
தான் சொல்லுவதற்கு நேரெதிராக, இதே ஆர்.எஸ்.எஸ். கும்பல்தான் தனது இந்துத்துவா பிரச்சாரத்திற்காக பலநூறு கோடிகளை வெளிநாடுகளிலிருந்து நன்கொடையாகப் பெறுகிறது. பாஜக-வோ கட்சி நிதியாக பல ஆயிரம் கோடிகளை வேதாந்தா உள்ளிட்ட பல வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொண்டு அவர்களின் தொழில் நலனுக்காகச் சொந்த நாட்டு மக்களையே சுட்டுக்கொள்வதை தேசபக்தி என்கிறது.
உதாரணமாக, லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்து கோரி 2025 செப்டம்பரில் நடந்த போராட்டத்தில் நான்கு பேர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த வன்முறைக்கு கல்வியாளர் மற்றும் காலநிலைச் செயற்பாட்டாளர் சோனம்வங்சுக்கின் பேச்சுதான் காரணம் என்று கூறி அவரைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையிலடைத்தது பாஜக. உடனே, அப்பகுதியிலுள்ள ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்றுத்தர அவர் நடத்தி வந்த கல்வி தொடர்பான என்.ஜி.ஓ. பணமுறைகேடுகளில் ஈடுப்பட்டுள்ளதாகப் பொய் குற்றஞ்சாட்டி அதன் பதிவை உள்துறை அமைச்சகம் இரத்து செய்தது. இது போலவே அம்னெஸ்டி இன்டர்நேஷனல், கிரீன் பீஸ், சென்டர் பார் பாலிசி ரிசர்ச், தீஸ்தா சேதல்வாத்தின் சப்ரங்க் இந்தியா, நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பு போன்ற பல என்.ஜி.ஓ.-களின் பதிவை அமித்ஷா-மோடி கும்பல இரத்து செய்துள்ளது.
இப்படி “நாட்டின் வளர்ச்சி” என்ற போர்வையில் தங்களை எதிர்ப்பவர்களை ஒடுக்கும் அதே பாஜக கும்பல்தான், வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து ஏராளமான நன்கொடையை சட்டவிரோதமாகக் கட்சி நிதியாகப் பெற்றது அம்பலமானவுடன் தண்டனையிலிருந்து தப்பிக்க FCRA சட்டத்தையே திருத்திய வரலாறும் உண்டு.
அரசியல் கட்சிகள், அரசு அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் வெளிநாட்டு நிறுவனங்களிடருந்து நன்கொடைகள் பெறுவதைத் தடுப்பதற்காக 1974-இல் FCRA சட்டம் கொண்டுவரப்பட்டது. பிறகு என்.ஜி.ஓ.-களின் பணப்பரிமாற்றத்தினை கண்காணிப்பது, அப்பணம் மதமாற்றத்திற்குப் பயன்படுத்தப்படுகிறதா? அல்லது அரசின் திட்டங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறதா? என்று கண்காணிப்பது, அந்நடவடிக்கைகளில் ஈடுபடும் என்.ஜி.ஓ.-களின் பதிவை இரத்து செய்வது போன்ற திருத்தங்களை அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் FCRA சட்டத்தில் சேர்த்துக்கொண்டன.
தற்போது மேற்சொன்ன காரணங்களுக்காகப் பதிவை இழக்கும் என்.ஜி.ஓ.-களின் சொத்துக்களை அரசே எடுத்துக்கொள்ளலாம் என்ற சட்டத்திருத்தத்தை பாஜக சேர்த்துள்ளது. அடிப்படையில், இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள், அரசு அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள், வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து நிதி பெறுவது சட்டப்படிக் குற்றமாகும்.
2003-இல் இருந்து 2013 வரையிலான காலத்தில் பாஜக மற்றும் காங்கிரசு கட்சிகள் வேதாந்தா, டவ் கெமிக்கல்ஸ் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து ஏராளமான நன்கொடையை கட்சி நிதியாக சட்டவிரோதமாகப் பெற்றுள்ளது. இந்த முறைகேட்டை அம்பலப்படுத்திய ஜனநாயக சீர்திருத்தத்திற்கானக் கூட்டமைப்பு [ADR] தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இம்முறைகேடுகள் நிரூபிக்கப்படவே, இவ்விரு கட்சிகளின் மீது நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இத்தீர்ப்பு கொடுக்கப்பட்டு [2014] பன்னிரெண்டு வருடங்களாகியும் இவ்விரு கட்சிகள் மீது இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையில் FCRA சட்டத்தில் “வெளிநாட்டு நிறுவனங்கள்” என்பதற்கான வரையறையைத் திருத்துவதன் மூலம் இம்முறைகேட்டில் இருந்து தப்பித்துக் கொள்ளவதற்கான குறுக்கு வழியை பாஜக முன்மொழிய, அதை காங்கிரசும் ஏற்றுக் கொண்டது.
அதனடிப்படையில், வெளிநாட்டு நன்கொடை முறைப்படுத்துதல் சட்டத்தில் “வெளிநாடு நிறுவனம்” என்ற வரையறையில் திருத்தம் செய்வதற்கான சட்டத் திருத்தத்தை அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி 2016-இல் கொண்டு வந்தார். பழைய வரையறையின் படி, வெளிநாட்டு நிறுவனங்கள் என்பது, இந்தியாவிற்கு வெளியே வேரொரு நாட்டில் பதியப்பட்ட ஒரு தனியார் நிறுவனமோ அல்லது வெளிநாட்டு அரசின் நிறுவனமோ தனது தொழில் நடவடிக்கைகளை இந்தியாவில் தொடங்கும் பட்சத்தில், அந்நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 50 சதவிகிதத்திற்கு மேல் வெளிநாட்டு நிறுவனம் வைத்திருந்தால் இந்தியாவில் இருந்தாலும் அந்நிறுவனம் வெளிநாட்டு நிறுவனமாகக் கருதப்படும். இதைத் திருத்தி, அக்காலத்தில் எவ்வளவு அந்நிய முதலீட்டை இந்நிய அரசு அனுமதித்துள்ளதோ அதற்கு மேல் அந்நிறுவனம் பங்குகளை வைத்திருந்தால் மட்டுமே அது வெளிநாட்டு நிறுவனமாகக் கருதப்படும் என்று திருத்தியது.
மேலும் இத்திருத்தம், 2010-லிருந்து நடைமுறைக்கு வருவதாக பின்தேதியிட்டு சட்டமாக நிறைவேற்றியது பாஜக. பிறகு 2018-இல் நிதி மசோதாவின் மூலமாக, இத்திருத்தம் 1974-இல் இருந்தே சொல்லும்படியாகும் என பின்தேதியிட்டு சட்டமாக்கினர். ஆகமொத்தம் 2005-இல் செய்த குற்றத்திலிருந்து தப்பிக்க 1974 இலிருந்து அக்குறிப்பிட்ட நடவடிக்கை குற்றமல்ல என்று சட்டத்தைத் திருத்திய திருட்டு கும்பல் தான் தேசபக்தி நாடகமாடும் இந்த பாஜக.
உதாரணமாக, ஸ்டெர்லைட் நிறுவனத்தை வேதாந்தா குழுமம் இந்தியாவில் தொடங்கி தொழில் செய்து வந்தது. ஸ்டெர்லைட்டின் பெரும்பான்மை பங்குகளை வேதாந்தா குழுமம் வைத்திருந்தது. வேதாந்தா குழுமம் இங்கிலாந்தில் பதியப்பட்டுள்ள ஒரு நிறுவனம். எனவே இத்திருத்தம் செய்வதற்கு முன், அந்நிய நன்கொடை முறைப்படுத்துதல் சட்டம்-2010 இன் படி, ஸ்டெர்லைட் ஒரு வெளிநாட்டு நிறுவனம். அதனிடமிருந்து பாஜக-வோ, காங்கிரஸோ அல்லது வேறு கட்சிகளோ நன்கொடை பெற்றால் அது சட்டப்படி குற்றமாகும்.
தற்போது கனிமவளங்கள் வெட்டி எடுப்பது மற்றும் சுத்திகரிப்பு சார்ந்த துறைகளில் 100 சதவிகித அந்நிய முதலீட்டை ஒன்றிய அரசு 2010-இல் அனுமதித்திருப்பதாகக் கொள்வோம். அருண் ஜெட்லி கொண்டுவந்த திருத்தத்தின்படி, 2010-இல் ஸ்டெர்லைட் ஒரு அந்நிய நிறுவனம் கிடையாது. அவ்வருடத்திலிருந்து ஸ்டெர்லைட் நிறுவனத்திடமிருந்து கட்சிநிதி பெறுவது சட்டப்படிக் குற்றமாகது. FCRA சட்டம் கொண்டுவரப்பட்ட 1974-ஆம் ஆண்டிலிருந்தே இப்புதிய வரையறை பொருந்தும் என்பதால் 2003-2013 வரையிலான காலத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் வேதாந்தா, டவ் கெமிக்கல்ஸ் நிறுவனங்களிடமிருந்து கட்சிநிதி பெற்றது குற்றமாகது. எனவே தண்டனையும் கிடையாது. தற்போது தில்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும் செல்லுபடியாகாது.
இந்திய ஆட்சியாளர்களுக்கும் வேதாந்தாவுக்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பைப் புதிதாக விளக்க வேண்டியதில்லை. குறிப்பாக பாஜக-வோ 2018-இல், தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் விரிவாக்கத்தை எதிர்த்துப் போராடிய தூத்துக்குடி மக்களை போலீசைக் கொண்டு சுட்டுக் கொன்று விசுவாசத்தைக் காட்டியது. இப்படி முதலாளிகளுக்கு சேவகம் செய்வதையே நாட்டின் வளர்ச்சி என்று சொல்லும் இந்திய ஓட்டுக்கட்சிகள், குறிப்பாக பாஜக, உண்மையை மறைப்பதற்காக மதமாற்றம் செய்கிறார்கள், வளர்ச்சியைத் தடுக்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்வதற்காகவே FCRA-வை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்கிறது.
மாணிக்கம்
https://thewire.in/government/the-chronology-of-subterfuge-on-amending-fcra-and-the-omerta-code
