மெட்டா நிறுவனத்தின் மூலம் நீட் எதிர்ப்புப் போராட்டக் காணொளிகளை நீக்கும் மோடி அரசு!

போராட்டத் தளங்களை மூடுவதன் மூலமும், போராட்டக் காணொளிகளை நீக்குவதன் மூலமும் மக்கள் போராட்டங்களை ஒடுக்க முடியும் என்று மனப்பால் குடிக்கிறார்கள் காவிப் பாசிஸ்டுகள். ஆனால் காவிப் பாசிஸ்டுகளை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை மக்களின் போராட்டங்கள் வெவ்வேறு வடிவங்களில் நடந்தேறும்.

தில்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம், முன்னாள் கல்வி ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது. மாணவர்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்ட அரை மணி நேரத்திலேயே ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள சுவர்கள் அவசர அவசரமாக வெள்ளையடிக்கப்பட்டன.

சமீபத்தில் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், போராட்டக் களமாக ஜந்தர் மந்தர் இருப்பதை மறுபரிசீலனை செய்யுமாறு அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிற்கு உத்தரவிட்டிருக்கிறது.

இதேபோல், அகில இந்திய தலித் கிறிஸ்தவர் உரிமைகள் பாதுகாப்புக் குழு என்ற அமைப்பு, ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரிய மனுவை விசாரித்த தில்லி உயர்நீதி மன்றம், “ஜந்தர் மந்தர் போராட்டத் தளத்தை ஏன் மூடக்கூடாது? ஜனநாயக ரீதியிலான அமைதி வழிப் போராட்டமோ அல்லது வேறு போராட்டங்களாக இருந்தாலும், அதற்காக ஒரு நகரமே ஸ்தம்பித்து நிற்க வேண்டுமா? மக்கள் அவதிக்குள்ளாக வேண்டுமா? எந்த வகையான போராட்டங்களாக இருந்தாலும், அவற்றுக்காக ஒரு நகரத்தையே பணயம் வைக்கக் கூடாது” என்று கேள்வி எழுப்பியிருக்கிறது.

இதற்கு முன்பும் தில்லி நகரில் ஜந்தர் மந்தர், ராம் லீலா போன்ற பகுதிகளில் பல போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. கடந்த 2011 ஆம் ஆண்டு தில்லி ராம் லீலா மைதானத்தில் அண்ணா ஹசாரே தலைமையில் ஊழல் எதிர்ப்பு என்ற பெயரில் ஒரு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது என்பது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

புதிய தாராளமயக் கொள்கையின் விளைவாக, அன்று இருந்த பொதுத்துறை நிறுவனங்களை விற்பதில் நடந்து வந்த ஊழல்களான 2ஜி அலைக்கற்றை ஊழல், ஆதர்ஷ் வீட்டுவசதி ஊழல், இஸ்ரோவில் நடந்த எஸ்-பேண்ட் ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் போன்றவையும், அவற்றின் ஊற்றுக்கண்ணான கார்ப்பரேட் பகற்கொள்ளையும் அம்பலமாகி, பொதுமக்களிடம் அரசியல் அமைப்பின் மீதான நம்பிக்கையைக் குலைத்தன.

ஆளும் வர்க்கமும், ஓட்டுக் கட்சிகளும் அரசியல் அமைப்பின் மீதான நம்பிக்கையை மக்களிடம் தக்க வைப்பதற்காக அண்ணா ஹஸாரேவின் ஊழல் ஒழிப்பு என்ற நாடகத்தை அரங்கேற்றின. ஆளும் வர்க்கத்திற்கு எதிரான மக்களின் கோபத்தைத் திசைதிருப்பும் பொருட்டு, இது போன்ற அரசு சாரா தன்னார்வ அமைப்புகளை ஆளும் கும்பலே திட்டமிட்டு உருவாக்கி வருகிறது. மேலும், அவற்றை மக்கள் மத்தியில் ஊடகங்கள், தொலைக்காட்சிகள் போன்றவற்றின் மூலம் வீச்சாகக் கொண்டு சென்றன.

தில்லியில் ராம் லீலா மைதானத்தில் அண்ணா ஹஸாரே, தனது ஆதரவாளர்களுடன் நடத்திய உண்ணாவிரதத்தைப் பத்திரிக்கைகளும், தனியார் தொலைக்காட்சிகளும், ஊடகங்களும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி ஆகியவற்றுக்கு இணையாக முக்கியத்துவம் அளித்து நாடு முழுவதும் விளம்பரப்படுத்தின.

ஹஸாரேவையும், அவரது ஆதரவாளர்களையும் முதலாளித்துவ ஊடகங்கள் ஹீரோக்களைப் போலக் கொண்டாடின; அரசு அவர்களை அரச மரியாதையுடன் நடத்தியதோடு, அவர்களது கோரிக்கைகள் குறித்துப் பேச்சுவார்த்தையும் நடத்தியது.

ஆனால், தற்போது கல்வித்துறையில் திணிக்கப்படும் தனியார்மயத்தின் விளைவான நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தைக் கண்டு அஞ்சிய மோடி அரசு, இது போன்ற போராட்டங்கள் ஜந்தர் மந்தரில் தொடர அனுமதிக்கக் கூடாது என்று காய் நகர்த்தி வருகிறது. மாணவர்கள் தமது போராட்டத்தை முடித்துக் கொண்ட அரை மணி நேரத்திலேயே ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள சுவர்களை வெள்ளையடித்த மோடி அரசு, போராட்டம் பரவக் காரணமாக இருந்த சமூக ஊடகக் காணொளிகளை விட்டு வைக்குமா என்ன?

இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம், தற்போது மாணவர்கள் வெளியிட்ட நீட் எதிர்ப்புப் போராட்டம் பற்றிய காணொளிகளை நீக்கி வருகிறது. மாணவர்கள் வெளியிட்ட பதிவுகளும், இலட்சக்கணக்கான நபர்கள் பார்த்த போராட்டம் பற்றிய காணொளிகளும் இன்ஸ்டாகிராமிலிருந்து வேகமாக நீக்கப்பட்டு வருகின்றன. இந்திய இளைஞர் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், சி.ஜே.பியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் மற்றும் ஸ்க்ரோல் இணையதளத்தின் பதிவுகள் முடக்கப்பட்டுள்ளன. தற்போது போராட்டம் தொடர்பான உள்ளடக்கம் கொண்ட வீடியோக்கள் எக்ஸ் தளத்தில் குறைவாகவே காணக்கிடைக்கின்றன.

இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-இன் (IT Act) 69A பிரிவின் படி, இணையத்தில் ஒரு உள்ளடக்கத்தை நீக்கவோ அல்லது தடுக்கவோ வேண்டுமானால், அதற்குத் தகுந்த காரணங்கள் இருக்க வேண்டும். மேலும், இந்தக் காரணங்கள் நீதித்துறையின் மறுஆய்வுக்கு உட்படும் வகையில் எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால், இந்தப் பிரிவின் கீழ் வழங்கப்படும் ஜனநாயக உரிமைகள் எல்லாம் பாசிஸ்டுகளின் ஆட்சியில் குதிரைக்கொம்பாகவே இருக்கிறது.

இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-இன் இன்னொரு பிரிவான 79(3)(b) இன் கீழ், இந்திய உள்துறை அமைச்சகத்தின் ‘சஹயோக் போர்டல்’ (Sahyog Portal) என்ற தளம், சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தில் உள்ள உள்ளடக்கத்தை நீக்குவதற்கான ஒரு மாற்று அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் இந்தத் தளம் மூலம், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் போன்ற தளங்களுக்கு, எந்த சமூக ஊடக உள்ளடக்கத்தை நீக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல், மோடி அரசு கொண்டு வந்த தகவல் தொழில்நுட்பத் திருத்த விதிகள் 2023-ன் படி, எந்த ஒரு இணைய உள்ளடக்கத்தை தவறானதாகவோ அல்லது தவறாக வழிநடத்துவதாகவோ ஒன்றிய அரசு கருதினால், அதை நீக்க முடியும். இந்த விதிகளின் கீழ், சமூக ஊடகங்கள் அரசின் உத்தரவுகளுக்கு இணங்க மறுத்தால், அதன் உரிமத்தை மோடி அரசால் பறிமுதல் செய்ய முடியும்; அந்த நிறுவனத்தைத் தண்டனைக்குள்ளாக்கவும் முடியும்.

மோடி அரசின் ஆட்சியின் கீழ், சமூக ஊடக நிறுவனங்களுக்கு இடைத்தரகர் (intermediary) என்ற பாதுகாப்பு அம்சம் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதனால், பயனர்களால் பதிவிடப்படும் சமூக ஊடக உள்ளடக்கத்திற்கான சட்டப் பொறுப்பிலிருந்து இந்த நிறுவனங்கள் பாதுகாக்கப்படுகின்றன (safe harbour protection). ஒரு பயனரின் சட்டவிரோத உள்ளடக்கம் இடைத்தரகர்களின் தளங்களில் தோன்றுவதால் மட்டுமே அந்த நிறுவனத்தைப் பொறுப்பாக்க முடியாது. சட்டவிரோத உள்ளடக்கம் அல்லது பதிப்புரிமை மீறல்கள் குறித்து மெட்டா போன்ற நிறுவனங்களுக்குத் தெரிந்தவுடனோ, அல்லது நீதிமன்றம் மற்றும் அரசின் உத்தரவுக்கு இணங்கியோ அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயனர்களிடம் கட்டணத்தை வசூலித்துக் கொண்டு, அந்த நிறுவனம் விரும்பும் உள்ளடக்கத்தைக் காட்டினால், அது இடைத்தரகர் என்ற உரிமையை இழக்க நேரிடும். பயனர்களுக்கு எந்த உள்ளடக்கம் காட்டப்பட வேண்டும் என்பதை ஒரு தளம் தீர்மானித்தால், அது ‘பதிவிடுவதற்கு’ (publishing) சமம் என்றும், அத்தகைய நிலையில், அந்தத் தளங்கள் தங்கள் செயல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்றும் மோடி அரசின் தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவு 79(3)(b) கூறுகிறது. இந்தப் பிரிவின் கீழ், இடைத்தரகர்கள் பதிவர்களாகச் செயல்பட்டால், அந்தச் சமூக ஊடக நிறுவனங்களின் மீது பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita) சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.

தில்லியின் மாணவர்கள் போராட்டம் உக்கிரமடைந்ததை ஒட்டி, பிரதமர் மோடி சமூக ஊடகங்களில் ஒரு காணொளியை வெளியிட்டார். மோடியின் இந்தக் காணொளி சில நாட்களுக்குப் பிறகு பேஸ்புக்கில் சில மணி நேரம் நீக்கப்பட்டது. சில மணி நேரங்களுக்குப் பிறகு, இந்தக் காணொளி ஒரு செயல்பாட்டுக் குறைபாடு என மீட்டெடுக்கப்பட்டது. இதையொட்டி, ஒன்றிய அரசுக்கும் மெட்டா நிறுவனத்தின் தலைமைக் குழுவிற்கும் இடையே நடைபெற்ற கூட்டத்தில், மேற்கூறிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் மெட்டா நிறுவனம் செயல்படுகிறதா என்பது பற்றியும், மோடியின் இன்ஸ்டாகிராம் காணொளி நீக்கப்பட்டதற்கான காரணம் பற்றியும் இந்திய அரசு கேள்வி எழுப்பியதாக இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

இந்தியாவிற்கு வந்த மெட்டா தலைமைக் குழுவோ, மோடியின் காணொளி தொழில்நுட்பக் கோளாறால் நீக்கப்பட்டது என மன்னிப்புக் கோரியுள்ளது. இந்தியத் திருநாட்டில் மோடிக்கு மட்டும் தான் ஜனநாயக உரிமை இருக்கிறது போலும்! மெட்டா நிறுவனம் நீக்கிய போராட்டக்காரர்களின் காணொளிகள் பற்றி அவர்களுக்கு எந்தக் காரணமும் பகிரப்படுவதில்லை.

மோடி அரசிடமும், அதன் உத்தரவுக்கு அடிபணிந்து செயல்படும் மெட்டா நிறுவனத்திடமும், அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளைக் கூட நாம் எதிர்பார்க்கக் கூடாது என்பதை மெட்டா நிறுவனத்தின் காணொளி நீக்கத்தின் மூலமே நாம் புரிந்துகொள்ள முடியும்.

போராடும் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை ஒருபோதும் காவிப் பாசிஸ்டுகள் தேடுவதில்லை. போராட்டங்களை எப்படி ஒடுக்குவது, அவற்றைப் பரந்துபட்ட மக்களின் பார்வையிலிருந்து எப்படித் தனிமைப்படுத்துவது என்பதையே முன்னிலைப்படுத்திச் சிந்திக்கிறார்கள். இதனால்தான் மெட்டா நிறுவனத்தை வைத்துப் போராட்டக் காணொளிகளை நீக்குகிறார்கள்; ஜந்தர் மந்தர் மைதானத்தை நீதிமன்றம் மூலம் மூட முயற்சிக்கிறார்கள்.

போராட்டத் தளங்களை மூடுவதன் மூலமும், போராட்டக் காணொளிகளை நீக்குவதன் மூலமும் மக்கள் போராட்டங்களை ஒடுக்க முடியும் என்று மனப்பால் குடிக்கிறார்கள் காவிப் பாசிஸ்டுகள். ஆனால், நாட்டில் காவிப் பாசிஸ்டுகளை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை மக்களின் போராட்டங்கள் வெவ்வேறு வடிவங்களில் நடந்தேறும். வரும் காலங்களில் மாணவர்களைப் போலத் தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்து உழைக்கும் மக்களும் வீறுகொண்டு இந்தப் பாசிஸ்டுகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவார்கள் என்பது திண்ணம்.

  • தாமிரபரணி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன