மக்களைப் போராடத் தூண்டுவது
அறிவுசார் நக்சல்களா? அரசின் கொள்கைகளா?

மோடி, சூரிய காந்த் போன்ற ஆளும் வர்க்க அடிவருடிகளும், பல முதலாளித்துவ அறிவுஜீவிகளும் இதற்கு என்ன விளக்கம் அளிக்கிறார்கள்? போராட்டங்கள் என்பவை “ஆந்தோலன்ஜீவிகள்”, “நகர்ப்புற நக்சல்கள்”, “அறிவுஜீவி நக்சல்கள்” ஆகியோர் தூண்டுவதால் மட்டுமே நடக்கின்றன; இவர்களை ஒழித்துவிட்டால் சமூகம் அமைதியாகவும் செழிப்பாகவும் இருக்கும் என்பதுதான் அவர்களின் வாதம். நடைபெறும் போராட்டங்களை யாரோ தூண்டிவிட்டதாகவோ, சமூக வலைத்தள யுகத்தால் நிகழ்ந்துவிட்ட அதிசியமென்றோ பார்க்காமல், அதன் சமூக, பொருளாதார அடிப்படைகளைக் காண வேண்டும்.

கடந்த ஜூலை மாதம், டெல்லி ஜந்தர் மந்தரில் ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி தொடங்கிய போராட்டமானது, ஜார்க்கண்ட், பாட்னா, மும்பை, புனே, பெங்களூரு என்று பரவி, சென்னை வரை காட்டுத்தீயைப் போல பரவியது. நாட்டின் சமீபத்திய சில பத்தாண்டுகள் காணாத இப்போராட்டத்தைக் கண்டு ஆளும் வர்க்கங்களும் பாசிச மோடி கும்பலும் அஞ்சி நடுங்கிப் போனது.

இப்போராட்டத்தில் கலந்துகொண்ட பலர், பொதுத்தேர்வுகள் எழுதிய மாணவர்களாகவோ, அதற்காக தயாராகிக் கொண்டிருப்பவர்களாகவோ, கல்லூரியில் படிக்கும் மாணவர்களாகவோ, கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தும் வேலை கிடைக்காதவர்களாகவோ, அல்லது ஸ்விக்கி, ஜோமாட்டோ போன்ற கம்பெனிகளில் தங்களின் உழைப்பை விற்று வாழ்க்கையை வாழும் இளைஞர்களாகவோ தான் இருந்தனர். இவர்களில் ஆகப்பெரும்பாலானோர் அரசியல்மயப்படாதவர்களே.

பொதுத்தேர்வுகளில் சிலகாலமாக நடந்துவரும் முறைகேடுகளுக்கு எதிராகத் தொடங்கிய இப்போராட்டம், பா.ஜ.க. எதிர்ப்பு, மோடி எதிர்ப்புப் போராட்டமாகப் பரிணமித்தது. போராட்டக் களங்களில் வேலையின்மை, கல்வி தனியார்மயம் போன்ற பிரச்சினைகளுக்கு எதிரான முழக்கங்களும் தன்னியல்பாகவே எழுந்தன. மாணவர்களையும் மக்களையும் கடலலையைப் போல களத்திற்கு இழுத்துவந்த காரணங்கள் பொதுத்தேர்வு முறைகேடுகளை மட்டும் தாண்டியவை என்பதையே இவை காட்டுகின்றன.

ஜந்தர் மந்தர் போராட்டத்திற்குப் பிறகும், ஜார்க்கண்ட், உத்திரப் பிரதேசம் என்று பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. உத்திரப் பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான இளம் பள்ளி மாணவர்கள் கூட தங்களின் பள்ளிகளை சீரமைக்கக் கோரி போராட்டங்களை நடத்தினர்.

இதேபோன்றதொரு போராட்டம் சமீபத்தில் உத்திரப் பிரதேச மாநிலத்தின் நொய்டா நகரத்திலும் வெடித்தது. கடந்த ஏப்ரல் மாதம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக ஊதிய உயர்வு கோரி போராடினர். டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தின் அளவிற்கு இப்போராட்டம் வளரவில்லை என்றாலும், சமீபகாலத் தொழிலாளர் போராட்ட வரலாற்றில் முக்கியமான ஒன்றாக அது விளங்குகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியா முழுக்க இவ்வாறான சிறு போராட்டங்கள், கிளர்ச்சிகள் ஆங்காங்கே வெடித்துக்கொண்டே இருக்கின்றன.

ஆனால், மோடி, சூரிய காந்த் போன்ற ஆளும் வர்க்க அடிவருடிகளும், பல முதலாளித்துவ அறிவுஜீவிகளும் இதற்கு என்ன விளக்கம் அளிக்கிறார்கள்? போராட்டங்கள் என்பவை “ஆந்தோலன்ஜீவிகள்”, “நகர்ப்புற நக்சல்கள்”, “அறிவுஜீவி நக்சல்கள்” ஆகியோர் தூண்டுவதால் மட்டுமே நடக்கின்றன; இவர்களை ஒழித்துவிட்டால் சமூகம் அமைதியாகவும் செழிப்பாகவும் இருக்கும் என்பதுதான் அவர்களின் வாதம்.

ஆனால், நாடு முழுக்க பலதரப்பட்ட உழைக்கும் மக்கள், மாணவர்கள், இளைஞர்கள் தன்னெழுச்சியாக நடத்தும் இப்போராட்டங்கள், அத்தகைய வாதங்கள் அனைத்தும் கடைந்தெடுத்த பொய் என்பதை அம்பலப்படுத்துகின்றன. டெல்லியில் போராடிய மாணவர்களும் சரி, நொய்டாவில் ஊதிய உயர்வு கோரி போராடிய தொழிலாளர்களும் சரி, தங்களின் பள்ளிகளை சீரமைக்கக் கோரி வீதிக்கு வந்த பள்ளி மாணவர்களும் சரி — இவர்களை எல்லாம் எந்த “நகர்ப்புற நக்சலும்” தூண்டிவிடவில்லை! மாறாக, அவர்களை களத்திற்குத் தள்ளியது அவர்கள் வாழும் சமூகத்தின் நெருக்கடிதான்.

அதேபோல சிலர், “சமூக வலைதளங்களின் காரணமாகவே இப்போராட்டம் இந்தியா முழுக்க பரவியது; ஜென்-Z இளைஞர்கள் இயல்பாகவே போராட்டக் குணமுடையவர்கள்” என்று இந்தப் போராட்டம் வெடித்ததற்கான காரணிகளைச் சுருக்கிப் பார்க்கின்றனர். சமூக வலைதளங்கள் இளைஞர்களை ஒன்றிணைக்கவும், தகவல்களைப் பரப்பவும் முக்கிய பங்காற்றியது உண்மைதான். ஆனால், இளைஞர்களின் மனதில் போராட்டகுணத்தை விதைத்தது காணொளிகளும் புகைப்படங்களும் மட்டுமல்ல.

போலீசு தடியான லத்திகளை வைத்து அடித்தும், புகை குண்டுகளை வீசியும் கூட, ஒருவரை அசையாமல் நிற்க வைத்து, “மேலும் அடி! என்னை மேலும் அடி!” என்று சொல்ல வைப்பது எது? துப்பாக்கியில் போலீசு சுட்டும் மீண்டும் போராட்டக்களத்திற்கு அச்சமில்லாமல் இளைஞர்களை வரவைப்பது எது? அனுதினமும் சமூகத்திலும் குடும்பத்திலும் எதிர்கொள்ளும் இன்னல்களுடன் ஒப்பிடும்போது, இத்தடியடிகளும் குண்டுகளும் தரக்கூடிய வலி எவ்வளவோ பரவாயில்லை என்ற உணர்வுதான்! போராட்டக்களமே இறுதித் தீர்வு என்ற நிலைக்குத் தள்ளப்படும்போதுதான் ஒரு இளைஞன் தடியின் முன்பும் துப்பாக்கியின் முன்பும் நிற்கிறான்.

எனவே, நடைபெறும் போராட்டங்களை யாரோ தூண்டிவிட்டதாகவோ, சமூக வலைத்தள யுகத்தால் நிகழ்ந்துவிட்ட அதிசியமென்றோ பார்க்காமல், அதன் சமூக, பொருளாதார அடிப்படைகளைக் காண வேண்டும்.

000

இந்தியாவின் இளைஞர்கள் இன்று மூன்று மிகப்பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்: 1) கல்வித்துறையின் தனியார்மயமும் அதனால் குடும்பங்களுக்கு ஏற்படும் கடன்சுமையும் 2) தலைவிரித்தாடும் வேலையின்மையும் 3) வேலை கிடைத்த பின்பும் வேலையில் நிச்சயமின்மையும் கிடைக்கும் சொற்ப ஊதியம் – இவையெல்லாம்தான் இன்று பல இளைஞர்களை விளிம்புநிலைக்குத் தள்ளியுள்ளது.

கோத்தாரி கமிஷனின் பரிந்துரைப்படி, ஒன்றிய அரசானது தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்விக்குப் பயன்படுத்த வேண்டும். ஆனால், ஒன்றிய–மாநில அரசுகளின் செலவுகளைச் சேர்த்துமே இன்று 2.7 சதவீதம் மட்டும்தான் அரசாங்கத்தால் கல்விக்கென்று செலவுசெய்யப்படுகிறது.

இதற்கு காரணம் வெறும் ஊழலோ அல்லது அரசின் அலட்சியமோ அல்ல. ‘கல்வி கொடுப்பதில் இருந்து அரசு கைகழுவிக் கொண்டு, அதை தனியாருக்குத் தாரை வார்க்க வேண்டும்’ என்ற தனியார்மயக் (மறுகாலனியாக்கக்) கொள்கைதான் அதன் அடிப்படை. தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும் அரசைவிட சிறப்பாக “சேவையை” வழங்குவார்கள் என்று அடித்துப் பேசி, பொதுக் கல்வியிலிருந்து அரசு பின்வாங்கியதன் விளைவாகவே தனியார் கல்விக்கான தேவையும் அதன் சந்தையும் விரிவடைந்துக்கொண்டே வருகிறது.

அரசுப் பள்ளிகளும் கல்லூரிகளும் பராமரிக்கப்படாமல் இருப்பது, கட்டுமானங்கள் புதுப்பிக்கப்படாமல் இருப்பது, போதிய அளவில் ஆசிரியர்களையும் ஊழியர்களையும் பணியமர்த்தாமல் வைத்திருப்பது — இவையனைத்தும் தரமான கல்வியை வேண்டி பெற்றோர்களைத் தனியார் கல்வி நிறுவனங்களை நோக்கித் தள்ளுகின்றன. பின்னர், இந்தச் சீரழிவுக்கான தீர்வாகவே தனியார் கல்வி நிறுவனங்கள் தங்களை முன்வைக்கின்றன. “தரமான” கல்வியை வழங்குவது என்ற பெயரில், தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை அரசுப் பள்ளிகளை விடப் பலமடங்கு கூடுதலான கட்டணங்களை வசூலிக்கின்றன.

அரசு கல்வித் துறையிலிருந்து கைகழுவுவதால், நாடு முழுவதும் ஒவ்வொரு குடும்பத்தின் கல்விச் செலவினமும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் “State of Working India” ஆய்வின்படி, கல்விக்கான அரசு செலவிடும் தொகையைவிட, குடும்பங்களின் கல்விச் செலவினம் வேகமாக அதிகரித்து வருகிறது. கல்விக்கான மொத்தச் செலவில் குடும்பங்களின் செலவினப் பங்கு தொடர்ந்து  உயர்ந்து வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பங்காகக் கல்விக்கான குடும்பங்களின் செலவினம் 1990–91 மற்றும் 2017–18க்கு இடையில் ஏறக்குறைய இருமடங்காகியுள்ளது; மொத்தக் குடும்பச் செலவினத்திற்குள் கல்விக்கான செலவினப் பங்கு இருமடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.

அரசின் கல்வி குறித்த ஒருங்கிணைந்த மாதிரி (Comprehensive Modular Survey on Education) கணக்கெடுப்பின்படி, அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவருக்காகக் குடும்பங்கள் ஒரு வருடத்திற்கு சராசரியாக ரூ.2,863 செலவிடுகின்றன; அதேசமயம், அரசு சாராப் பள்ளிகளில், (பெரும்பாலும் தனியார் பள்ளிகளில்) இந்தச் செலவு ரூ.25,002 ஆக உயர்கிறது. ஆனால், நடைமுறையில் இதைவிடப் பலமடங்கு தொகையைப் பெற்றோர் செலவிடுகின்றனர். எல்.கே.ஜி., யூ.கே.ஜி.க்கே ஆண்டுக்கு ஒரு இலட்சம் வரை கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் இருப்பது ஊரறிந்த கதை.

இதுமட்டுமல்லாது, நீட், ஜே.இ.இ. போன்ற பொதுத்தேர்வுகளால் தனியார் பயிற்சி மையங்களின் கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளிக்கான கட்டணங்கள் போக, பயிற்சி மையங்களுக்கும் கணிசமான தொகையை குடும்பங்கள் செலவுசெய்ய வேண்டியிருக்கிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் பெற்றோர்கள் ரூ.70,000 கோடி ரூபாயை பயிற்சி மையங்களுக்கு மட்டும் செலவிடுகின்றன. இது கிட்டத்தட்ட ஒன்றிய அரசு கல்விக்கு ஒதுக்கும் நிதியில் (ரூ.1,40,000 கோடி) சரிபாதியாகும்.

நிலம், தங்கம் என சேமிப்புகளைக் கரைத்து மட்டுமல்ல, கடன் வாங்கியும் இலட்சக்கணக்கில் கல்விக்காகச் செலவு செய்து பொதுத்தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களும் பெற்றோரும், அந்தத் தேர்வுகளின் முடிவுகளையே மலைபோல நம்பியுள்ளனர். இவ்வளவு செலவு செய்வது வெறும் பட்டத்திற்காக அல்ல. தரமான கல்வி கிடைத்தால் வருங்காலத்தில் தங்களது குழந்தைகளும் குடும்பமும் பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்பதால்தான். பெரும்பாலான பெற்றோர் கல்வியை ஒரு முதலீடாகவே பார்க்கின்றனர்; அந்த முதலீட்டின் பலன் “ஒரு கண்ணியமான வேலை” என்ற நம்பிக்கையில்தான் இந்த முழுச் சுமையும் தாங்கப்படுகிறது.

ஆனால், நம் நாட்டில் “பட்டப்படிப்பு முடித்தாலே வேலை கிடைக்கும்” என்ற நிலைமை முற்றாக இல்லாது ஒழிந்து வருகிறது. கல்விக்காகக் கடன் வாங்கி, ஆண்டுக்கணக்கில் செலவு செய்து, இறுதியில் வேலை கிடைக்காமல் நிற்கும்போது பெற்றோரின் நம்பிக்கையும் இளைஞர்களின் எதிர்காலமும் ஒருசேர சிதைகின்றன. செல்லும் திசையறியாது இளைஞர்கள் திகைத்து நிற்கின்றனர்.

அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் “State of Working India” ஆய்வின்படி, கடந்த 20 ஆண்டுகளில் நாடுமுழுவதும் உருவான 10 கோடி பட்டதாரிகளில் வெறும் 5.6 கோடி பட்டதாரிகளுக்கு மட்டுமே வேலையுள்ளது. அதிலுமே 2.2 கோடி பட்டதாரிகள் சுயதொழில் அல்லது தற்காலிகப் பணிகளையே செய்துவருகின்றனர். 40 சதவீத பட்டதாரிகள் இன்று வேலையில்லாமல் உள்ளனர். இந்தியா முழுக்க 15 முதல் 29 வயதுக்குட்பட்ட 8.7 கோடி இளைஞர்கள் முறையான கல்வி, வேலைவாய்ப்பு அல்லது எந்தவித தொழில் பயிற்சியும் இன்றி முடங்கியுள்ளதாக சமீபத்தில் நிதி ஆயோக் வெளியிட்ட ஆய்வறிக்கையே தெரிவித்துள்ளது.

இதற்கெல்லாம் ஆளும் வர்க்கத்தின் பதில் என்ன? “இளைஞர்களிடம் திறன் இல்லை; அவர்கள் வேலைக்கு ஏற்றவர்களாக இல்லை; வளர்ந்துவரும் ஏ.ஐ. போன்ற தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொண்டு, தன்திறனை வளர்த்துக்கொள்ள (up skill) வேண்டும்” என்பதுதான். ஆனால், கோடிக்கணக்கான பட்டதாரிகள் சில இலட்ச வேலைகளுக்குப் போட்டிபோடும்போது, பிரச்சினை தனிநபரின் திறன் குறைபாடா, அல்லது போதுமான வேலைகளை உருவாக்காத பொருளாதார அமைப்பா?! இந்த எளிய கேள்விக்கு அவர்கள் எப்போதும் பதிலளிப்பதில்லை.

ஓரளவு வேலைப் பாதுகாப்பையும் கண்ணியமான ஊதியத்தையும் வழங்கும் நேரடியாகப் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்களை உள்ளடக்கிய முறையான பொதுத்துறை வேலைவாய்ப்பு மறுகாலனியாக்கத்திற்குப் (1990) பிறகு முற்றிலுமாக வீழ்ச்சியடைந்துள்ளது. மொத்த வேலைவாய்ப்பில் பொதுத்துறையின் பங்கு 1993–94ல் 5.2 சதவீதத்திலிருந்து 2011–12ல் 3.7 சதவீதமாகச் சரிந்துபோனது.

இந்தியாவில் போதுமான வேலைவாய்ப்புகள் உருவாகாததற்கு முக்கிய காரணம் நாட்டின் வளர்ச்சி முறையே (module of growth) ஆகும். 1947க்குப் பிறகு வேளாண்மையில் அடிப்படை மாற்றங்கள் ஏற்படாததால் மக்களிடம் பரவலான வாங்கும் திறனும், அதிகளவில் தொழிலாளர்களை உள்வாங்கும் தொழில்துறையும் வளரவில்லை. 2000-களில் வளர்ச்சி ஏற்பட்டபோதும், அது பெரும்பாலும் மேல்தட்டு மக்களின் நுகர்வைச் சார்ந்ததாகவும், அதிக மூலதனம் தேவைப்படும் தொழில்களைச் சார்ந்ததாகவும் இருந்ததால் போதுமான வேலைகளை உருவாக்கவில்லை.

நொய்டா தொழிலாளர் போராட்டம்

இதனுடன் பொதுத்துறை வேலைகள் குறைந்ததும், வேளாண் நெருக்கடி அதிகரித்ததும், இளைஞர்கள் குறைந்த ஊதியமுள்ள தற்காலிக வேலைகளுக்குத் தள்ளப்பட்டனர். தற்போது ஐடி போன்ற துறைகளிலும் வேலைவாய்ப்பு வளர்ச்சி மந்தமாகி, செயற்கை நுண்ணறிவின் காரணமாக மேலும் குறையக்கூடிய நிலை உருவாகியுள்ளது. எனவே, இன்றைய இளைஞர்களின் வேலையின்மை தனிப்பட்ட திறன் குறைபாட்டின் விளைவு அல்ல; நாட்டின் வளர்ச்சி முறையிலேயே இருக்கும் அடிப்படைப் பிரச்சினையின் விளைவு.

கோடிக்கணக்கான பட்டதாரிகள் சில இலட்ச வேலைகளுக்குப் போட்டிபோட்டால் என்னவாகும்? முதலாளிகளுக்குச் சாதகமான நிலையே உருவாகும். அதாவது குறைந்த கூலிக்கு பல தொழிலாளிகளைச் சுலபமாகப் பணியமர்த்தக்கூடிய சூழல் உருவாகும். இதனாலேயே 2011-ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை வேலையிலிருக்கும் பட்டதாரிகளின் சம்பளம் தேக்கமடைந்துள்ளது.

ஸ்விக்கி, ஜொமாட்டோ போன்ற டெலிவரி கம்பெனிகளில் கிக் தொழிலாளிகளாக வேலைபார்ப்போரில் மூன்றில் ஒரு பங்கினருக்குக் குறைந்தபட்சம் இளங்கலைப் பட்டமாவது இருக்கிறது என்று 2022-ஆம் ஆண்டு தேசிய செயல்முறைப் பொருளியல் ஆய்வுக் குழு நடத்திய ஆய்வு கூறுகிறது. பன்னிரண்டில் ஒரு பட்டதாரி மட்டுமே படித்த படிப்பிற்குச் சம்பந்தமான வேலையைச் செய்துவருகிறார்.

அப்படியானால், மக்களைப் போராட்டக்களத்திற்கு இழுத்துவந்தது மோடி கூறுவது போல “அறிவுசார் (திமாகி) நக்சல்கள்” அல்ல. மாறாக, அரசின் பொருளாதாரக் கொள்கைகளே மக்களை வீதியில் திரளச் செய்கின்றன. எந்த இளைஞர்களைப் பார்த்து சூரிய காந்த் “கரப்பான்கள், ஒட்டுண்ணிகள்” என்று கூறினாரோ, அந்த இளைஞர்கள் சமூகத்தைச் சீரழிக்கவில்லை; மாறாக, சீரழிவுப் பாதையை நோக்கிச் செல்லும் சமூகம்தான் அவர்களைப் போராட்டத்திற்குத் தள்ளுகிறது.

இன்று பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகளைத் தரமான பள்ளிகளில் படிக்க வைப்பதற்குக் கூட கடன் வாங்குகின்றன. பல கல்லூரி மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்தும் வேலையில்லாமல் திண்டாடுகின்றனர். பல இளைஞர்கள் பகுதிநேரமாகவும் முழுநேரமாகவும் பைக் டாக்சி ஓட்டுகின்றனர்; உணவு டெலிவரி செய்கின்றனர். தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்திற்குச் சுரண்டப்படுகின்றனர். ஐடி ஊழியர்களைப் பன்னாட்டு கம்பெனிகள் பயன்படுத்திவிட்டு குப்பையில் வீசுவது போலப் பணிநீக்கம் செய்கின்றன. இவை தனித்தனி விபத்துகள் அல்ல; மறுகாலனியாக்கக் கொள்கைகளால் உருவாகி, இன்று தலைவிரித்தாடும் ஒரே சமூகச் சீரழிவின் பல்வேறு முகங்கள்தான்.

“ஒவ்வொரு வினைக்கும், அதற்கு சமமான ஓர் எதிர்வினை உண்டு” என்ற நியூட்டனின் விதி இயந்திரவியலுக்கு மட்டுமல்ல சமூக அறிவியலுக்கும் பொருந்தும். அரசின் மறுகாலனியாக்க மற்றும் பாசிசக் கொள்கைகளால் ஏற்படும் வேலையின்மை, பொருளாதார நெருக்கடி, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சினைகள்தான் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் போராட்டங்களைத் தூண்டிவிடுகின்றன / தூண்டிவிட்டே தீரும்.

“சீப்பை ஒளித்துவைத்தால் கல்யாணத்தை நிறுத்திவிடலாம்” என்ற கதையாக, மாணவர்களைக் கண்காணிப்பது, ஒடுக்குவது, கல்வி வளாகங்களை அரசியல்நீக்கம் செய்வது, மாணவர் சங்கங்களையும் தேர்தல்களையும் தடை செய்வது, மாணவர்களைப் போதை மற்றும் ஆபாசச் சீரழிவில் மூழ்கடிப்பது என எவ்வளவுதான் அரசு செய்தாலும், இந்த எதிர்வினையைத் தற்காலிகமாகத் தடுக்கலாம், தள்ளிப்போடலாம்; ஆனால் இல்லாமல் செய்துவிட முடியாது. ஜந்தர் மந்தர் போராட்டம் இதைத்தான் நிரூபித்துள்ளது.

ஆனால், இந்தப் பிரச்சினைகளுக்கான காரணங்களைச் சரிசெய்வதற்குப் பதிலாக, போராடுபவர்களை ஒடுக்குவதிலேயே அரசுகள் மும்முரம் காட்டுகின்றன. ஏனென்றால், அவர்களால் மறுகாலனியாக்கச் சுரண்டல் என்ற வினையை நிறுத்த முடியாது; எனவே, மக்கள் போரட்டம் என்ற எதிர்வினையையும் ஒழித்துவிட முடியாது. சலுகைகளும் அடக்குமுறையும் அந்த எதிர்வினையை தடுக்கும், தள்ளிப்போடும் தற்காலிகமான ஆயுதங்களே! மாணவர்களையும் தொழிலாளர்களையும் கைது செய்வதாலும், மாணவர் இயக்கங்களை ஒடுக்குவதாலும், போராட்டங்களைத் தற்காலிகமாக முடக்கலாம். ஆனால் போராட்டத்திற்கான காரணங்கள் மறைந்துவிடாது. சுரண்டல் தொடரும் வரை தொழிலாளர்களின் போராட்டமும் தொடரும்; வேலையின்மை தொடரும் வரை இளைஞர்களின் எதிர்ப்பும் தொடரும்.

எனவே, வினை தொடரும் வரை எதிர்வினையும் தொடரும். இந்தியா முழுவதும் மீண்டும் மீண்டும் வெடிக்கும் இளைஞர், மாணவர் மற்றும் தொழிலாளர் போராட்டங்கள் இதைத்தான் இன்று நிரூபித்து வருகின்றன.

  • திருமாறன்

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன